சினிமாவில் கதாநாயகன் அவதரிக்கும் தேவகணத்திலேயே புலிப்பல் டாலரும் சில்க் ஜிப்பாவும் அணிந்த வில்லனும் பிறந்து படாமிட்ட சிங்கத்தை தடவிக்கொண்டு அரண்மனையில் வளர்வதைப் போல நிஜவாழ்வில் நேர்வதில்லை யாருக்கும். ஆனால் நமது கதையின் நாயகனுக்கு நேர்ந்த வாழ்க்கை அப்படியொரு துர்லபமானதல்ல. அவரது வில்லன் தனித்த அரண்மனையில் வளர்கிறவனாய் இல்லாமல் அவருடனேயே பிறந்து அவருடனேயே வளர்கிறவனாய் இருந்தான். இருந்தும்கூட, தனக்குள் வளர்ந்துள்ள அந்த வில்லனை தோற்கடிக்க அவர் தன்னைத்தானே ரெண்டுத்துண்டாய் வெட்டிவைத்து சண்டையிட முடியாதல்லவா? எனவே அவர் எதிர்ப்படுகிற எவரொருவர் மீதாவது தனது வில்லனை அவதாரம் கொள்ளவைத்து பின் சண்டையிட்டு வெல்வதை வழக்கமாய் கொண்டிருந்தார். இதற்காக அவர் எப்போதும் மெனக்கெடுவதில்லை என்பதுதான் இதிலுள்ள விசேடம். தேளுக்கு புத்தி கொடுக்கில் என்பதுபோல அவர்போக்கில் அவரிருந்தாலே தானாக நேர்ந்துவிடும்.
அவர் எதிரியை தேர்வு செய்யும் விதமே அலாதியானது. அதைப் பொறுத்தவரை உறுமீன் வருமளவும் காத்திருக்கிற பொறுமையில் கொக்கையும் தோற்கடிக்கும் வல்லமை பெற்றவர். அல்லது வில்லியம் லீப்னெஹ்ட் நூலில் வரும் சிலந்தியை நிகர்த்தவர். எடுத்தயெடுப்பிலேயே ஒருவரை எதிரியென்று அறிவித்துக்கொள்வதோ தீர்மானித்துக்கொள்வதோ அவரது சுபாவத்திலில்லை. இப்படியானவரிடம் பழக என்ன தவம் செய்தேனோ இறைவா என்று நெக்குருக நினைத்து கன்னத்தில் போட்டுக்கொள்ளும் கணத்தில்தான் அவரது உடலெங்கும் மாயக்கொடுக்குகள் கிளம்பி எதிரிலிருப்பவரை விஷம்தோயக் கொட்டிவிட்டு முளைத்த சுவடே தெரியாமல் மறைந்தொழிந்து போகும்.
ஆளில்லாத அத்தாந்தரத்தில்கூட ஒரு ஆளை சிருஷ்டித்து அவரை எதிரியாய் மாற்றிக்கொள்கிற தனது சாமர்த்தியம் குறித்து அவர் எப்போதும் தற்பெருமை கொள்பவரில்லை. அப்படியொரு குணம் தன்னிடமிருப்பதேகூட அவருக்கு நாளது தேதிவரையிலும் தெரிந்திருக்க நியாயமில்லை என்பதே உண்மை. மற்றவருக்கு நாக்கிலே சனி என்றால் இவருக்கு சனியோடு ஞாயிறு, திங்கள், செவ்வாய் என்று ஏழும் குடியிருந்தால் இதெல்லாம் நடக்கும்தானே? நட்புரீதியான ஆலோசகரைப் போலவோ, புத்தி சொல்லி நல்வழிப்படுத்தும் ஒரு தந்தையைப் போலவோ கௌரவமான ஸ்தானத்திலிருந்துதான் தொடங்குவார் அறிமுகத்தை. ஆனால் சற்றுநேரத்திற்கெல்லாம் தான் பகைத்துக்கொள்ளுமளவுக்கு பாந்தமானவர் என்று தன் மனதில் வைத்திருக்கும் சித்திரத்திற்கு ஒத்துவரக்கூடிய அம்சங்களை அன்னாரிடமிருந்து கிரகித்துக் கொண்டதும் பேச்சின் தொனி மாறி பகையில் நிறுத்துமளவுக்கு சென்றுவிடுவார். வளரட்டுமென்று ஒரு செடியை நட்டக்கையோடு அதைக் கடிப்பதற்கென்று ஒரு ஆட்டுக்குட்டியையும் அவ்விடத்திலே கட்டிவைக்கிற சுபாவத்திற்கு என்ன பெயரென்று யாருக்குத் தெரியும்?
இப்போதும்கூட தானுன்டு தன் பயணமுண்டு என்று சன்னலோர சீட்டைப்பிடித்து தூக்கம் வராவிடினும் கண்ணை மூடிக்கொண்டு இருந்துவிட வேண்டுமென்பதுதான் அவரது பேராசை. ஆனாலும் உள்ளிருக்கும் ஜென்மகுணம் கண்ணை மூடவிட்டால்தானே... பார்ப்பதற்கும் பகைப்பதற்குமான இவ்வுலகத்தில் கண்ணை மூடிக்கொண்டு வாயையும் பொத்திக்கொண்டு நேரத்தை வீணடித்தபடி உட்கார்ந்திருக்க உனக்கு எப்படித்தான் மனசு வந்ததோ பாவி பாவி.. என்று அந்த குணம் அவரை நெட்டிக் கிளப்பியது. இதோ தயாராகிவிட்டார். பஸ்ஸைவிட்டு இறங்குவதற்குள் குறைந்தபட்சம் யாரேனுமொருவரின் பகையையாவது சம்பாதித்துவிட முடியும் என்ற அவரது தன்னம்பிக்கை எப்போதும்போல் இப்போதும் பொய்த்துவிடப்போவதில்லை.
ஆனால் நாயகன் இன்று கண்விழித்த நேரம் சரியில்லை போலும். தனது முதல் இலக்காக குறி வைத்திருந்த கண்டக்டர் மீதிச் சில்லரையை கண்ணியமாய் கொடுத்துவிட்டு நகர்ந்ததுமே பொசுக்கென்றாகிவிட்டது நம்மாளுக்கு. சில்லறையே தரமாட்டாரென்று நம்பி பெரிய கணக்கெல்லாம் மனசுக்குள்ளேயே போட்டு அஸ்திரங்களை தொடுக்கத் தயாராகிக் கொண்டிருந்த போது இப்படியாகியிருக்கக்கூடாதுதான். இப்படித்தான் ஒரு பயணியை ஏமாற்றுவதா என்று ஆரம்பித்து ஒருபிடி பிடித்துவிட வேண்டும். ஒருவருக்கு ஐம்பது பைசா என்றால் இருக்கிற ஐம்பத்தாறு பேருக்கு எவ்வளவாச்சு...? 56*50 = 28. அப்படின்னா ஐந்து சிங்கிளுக்கு 140 ரூபாய். ஹா எங்களையெல்லாம் இளிச்சவாயனுங்கன்னு நினைச்சிட்டீங்களா... வண்டியை டெப்போவுக்கு விடுய்யா... மேனேஜர்க்கிட்ட புகார் சொல்லிட்டுத்தான் இன்னிக்கு மறுவேலை... என்று மிரட்டியடிப்பதில் கண்டக்டர் அரண்டுபோய் மன்னிப்பு கேட்டவாறே எல்லோருக்கும் சில்லரை கொடுத்துவிட, பஸ்ஸிலிருக்கும் மொத்தபேரும் ஊருக்கொருத்தர் உங்களைப்போல இருந்தாத்தான் சார் உருப்படும் என்று புகழ்வதை காதுபடக் கேட்டு அடையவிருந்த புளகாங்கிதத்தை அநியாயத்திற்கும் கெடுத்துவிட்ட கண்டக்டர்- ர் - என்ன ர்- கண்டக்டன் மீது கட்டுக்கடங்காத கோபம் மூண்டு நெளிந்தபடி வலையை யாருக்கு வீசலாம் என்று பார்த்தார். இவரைப்பற்றி ஏற்கனவே தெரிந்துவைத்திருப்பவர்களைப் போல எல்லோரும் காதில் இயர்போனை செருகி வைத்திருந்தார்கள். அதெப்படி ஆணுபொண்ணு அத்தனைக்கும் இப்படியொரு நாட்டம் இசையில் திடுதிப்புனு வந்துடும்? எல்லாம் பம்மாத்து... அடுத்தவன் பேசறதை காதில் போட்டுக்கக் கூடாதுங்கிற ஆணவம்... த்தூத்தேறிக்க... என்று கறுவிக்கொண்டிருந்த போது அடுத்த இலக்கு தென்பட்டது. இம்முறை தவறவிட்டுவிடக்கூடாது என்று சுதாரிப்பு கூடியது.
ஜோடியாக ஏறிய இருவரது காதுகளையும் கருவி எதுவும் அடைத்துக்கொள்ளாமல் இருப்பதே தனக்கு சாதகமான விசயம்தான் என்று உற்சாகமேறிய இவருக்கு எப்படி தொடங்குவதென்று யோசிக்க சில நொடிகளே தேவைப்பட்டன. ஆண் சன்னலோரமாய் உட்கார்ந்துகொள்ள பெண் இந்தண்டை சீட்டில் உட்கார்ந்துகொண்டதைப் பார்த்ததுமே இவருக்கு பொறிதட்டிவிட்டது. வசமாய் மாட்டியது இரை. ‘ஏம்பா பொம்மனாட்டியை இந்தண்டை உட்கார வச்சிருக்கியே, ஏறுறவன் இறங்குறவனெல்லாம் உரசிட்டுப் போகமாட்டானா... அப்புறம் ஏண்டா என் பொண்டாட்டியை உரசினேன்னு நீ அவன் சட்டையைப் பிடிக்க, யார் மேலயும் படாம இருக்கணும்னா கௌரதையா கார்ல கூட்டிட்டுட்டுப் போக வேண்டியதுதானேன்னு அவன் பேச தேவையில்லாத கைகலப்பு வந்திடுமில்லையா... 63 ம் வருசம் 2வது மாசம் 7ம் நாள் ஜோகன்ஸ்பர்க்குல ஒரு கலவரம் இப்படி நடந்து ஏழெட்டுபேர் செத்தாங்களே ஞாபகம் இருக்கா? ‘சண்டே கிரானிக்கல்’ பேப்பர்ல அதைப்பத்தி முழுப்பக்கத்துக்கு எழுதியிருந்ததையாச்சும் வாசிச்சிருந்தா இப்படி பண்ணமாட்டீங்க...’ என்று பொறுப்பாக தான் சொல்லும்போது அந்தப் பெண்ணின் கண்ணில் பெருகும் நன்றியுணர்ச்சியை காணவேண்டுமென்று விரும்பினார். ‘அப்படி எவனாச்சும் வம்படியா உரசினால் இழுத்துவச்சி அறுத்துப்புடுவேன்’ என்றோ ‘உரசினா தேய்ந்தா போயிடுவேன்... நீங்க ஏன் சார் அலட்டிக்கிறீங்க?’ என்றோ அந்த பெண் சொல்லிவிடுவாளானால் ரொம்பவும் மானக்கேடாகிவிடும் என்று பயந்து அப்படியான சூழலை எதிர்கொள்வது எப்படியென்று யோசிக்கும்போதே, அவன் சன்னலுக்கு வெளியில் தலையை நீட்டி ஓங்கரித்து வாந்தியெடுத்தான். அவள் வாய் கொப்பளிக்கத் தண்ணீர் கொடுத்தாள். இப்போதும்கூட ஒன்றும் கை நழுவிப்போய்விடவில்லை, ‘தாதுவருஷப் பஞ்சத்தில் இப்படித்தான் மக்கள் கோரைக்கிழங்கையும் புல்லரிசியையும் தின்றுவிட்டு வயிற்றைப் பிடித்துக்கொண்டு ஓவ்ஓவ்னு வாந்தியெடுத்துக்கிட்டிருந்தாங்கன்னு சாடர்டே ரிவ்யூல வந்துச்சே படிக்கலயா? கோந்து மாதிரி பிசுபிசுன்னு ஒட்டிக்கிற பீட்ஸாவைத் தின்னுட்டு சிட்டிப்பிள்ளைகள் சீரழியறதை டிவியில காட்டுறதப் பார்த்ததில்லையா? கண்டதையும் சாப்பிட்டா இப்படித்தான் சீரணக்கோளாறாகி வாந்தியெடுக்க வேண்டியிருக்கும்’ என்றோ, ‘உடம்பு சரியில்லேன்னா வீட்டோடிருக்க வேண்டியது தானே’ என்றோ பேச்சைத் துவக்கிவிட முடியுமென்றுதான் நம்பினார் அவர். கொஞ்சம் சுதாரிச்சுக்குங்க, ஆஸ்பத்திரி அடுத்த ஸ்டாப்லதான் இருக்கு... என்று ஆசுவாசப்படுத்துபவளிடம் அதுவும் அடுத்த ஸ்டாப்பில் இறங்கப் போகிறவர்களிடம் என்னத்தப் பேசி வம்பு வளர்த்து சண்டை போட முடியும்...? எதிரியாகி சண்டைப்போட தகுதியற்ற ஜடங்கள் நிறைந்த ஒரு பேருந்தில் பிரயாணம் செய்வதைவிட அமரர் ஊர்தியில் வாயைக்கட்டிக்கொண்டு படுத்திருக்கலாம்.
அயர்ச்சியாகிவிட்டது. மனசும் உடம்பும் நிலை கொள்ளாமல் தவித்து நெளிந்த இவரைப் பார்த்து பக்கத்து இருக்கையாள் ‘உங்களுக்கு மூலம் இருக்கா’ என்று கேட்டபோது பெருத்த அவமானமாய் போய்விட்டது. தோளோடு தோளுரசி எதிரியாவதற்குரிய எல்லாத்தகுதிகளோடும் பக்கத்து இருக்கையிலேயே ஒருவர் உட்கார்ந்திருப்பதை இவ்வளவுநேரமும் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று பதைப்பு ஏற்பட்டது. உடனடியாய் பேச்சைத் தொடங்க மனதுக்குள்ளாகவே வார்த்தைகளைக் கோர்த்து ஒரு ஒத்திகையை நடத்திமுடித்துவிட்டுப் பார்த்தால், அந்த ஆள் பழையபடியே தூங்கத் தொடங்கிவிட்டார். ‘இப்படி பஸ்ஸில் ஏறினதும் குறட்டை விடவேண்டியது, பிறகு இறங்க வேண்டிய இடத்தில் இறங்காமல் எங்காவது ஒரு இடத்தில் பேந்த பேந்த முழித்துக்கொண்டு நிற்க வேண்டியது.... புருஷன் விடும் குறட்டையை சகிச்சுக்க முடியாமத்தான் 54 பர்சண்ட் பொண்டாட்டிகள் டைவர்ஸ் கேட்கிறதா ‘மிட் டே மிர்ரர்’ல வெளியான புள்ளிவிவரத்தைப் படிக்கலேன்னா இப்படித்தான்...’ என்று பேச்சு கொடுத்துப்பார்த்தார். அந்தாள் அசருவதாயில்லை. ச்சீச்சீ... இந்த பஸ்ஸே சரியில்லை... எக்கேடும் கெட்டு ஒழியட்டும் என்று முனகிக்கொண்டே இறங்கி நிழற்குடையின் கீழ் நின்றுகொண்டார். அவருக்கு இரைகள் மலிவாய்க் கிடைக்கும் இடங்களில் இதுவும் ஒன்று.
எப்போதிருந்து நம்மாள் இப்படியிருக்கிறார் என்பது குறித்த சரித்திரக் குறிப்புகள் எதுவுமில்லாததால் உத்தேசமாக ஒரு கால வரையறையை நிர்ணயம் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. ஒன்றிரண்டு விசயங்களில் எல்லோரும் எதைச் சொல்கிறார்களோ அதற்கு சற்றும் தொடர்பில்லாத கோணத்தில் தற்செயலாக இவர் வேறொன்றை சொல்லப்போக, எதற்கெடுத்தாலும் ஏறுமாறாக சொல்கிறவர் என்று சின்னவயதிலேயே பெயரெடுத்துவிட்டார். ஆயிரம்பேர் இருக்கிற ஊரில் தன்மீது மட்டுமே அந்த தனித்த அடையாளம் படிவதை எண்ணி பெருமிதம் கொண்ட அவர், அதற்குப் பிறகு எல்லாவற்றையும் மெனக்கெட்டு ஏறுமாறாகவே யோசித்து ஏறுமாறாகவே பேசி தன்மீதான பிம்பத்தை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்பாக இருந்தார். அவரது மொகரக்கட்டையும் முழியும் எப்போதும் தீவிரமாக யோசிக்கிறவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு உதவியாக இருந்தன.
படிப்பு முடித்து வேலையின்றி வீட்டிலிருந்த காலத்தில் குடும்பத்தாரும் சுற்றத்தாரும் தன்னை புறக்கணிப்பதிலிருந்து மீள்வதற்காக பல்வேறு கவன ஈர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதை தொடக்கமென்று கொள்ளலாமா என்றும் அறுதியிட முடியவில்லை. எனவே அவரையே அங்கத்தினராகவும் நிர்வாகியாகவும் நிறுவனராகவும் கொண்ட ஊர்நல மன்றம் ஒன்றைத் தொடங்கியதிலிருந்து ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளலாம். காளைமாட்டில் ஏன் பால் கறக்க முடிவதில்லை, கழுதைக்கு ஏன் இன்னும் கொம்பு முளைப்பதில்லை என்கிற ரீதியில் கடவுளின் மீது மொட்டைப் பெட்டிசன் எழுதி கலெக்டருக்கும் தாசில்தாருக்கும் அனுப்புவதோடு நாளிதழ்களுக்கு வாசகர் கடிதமாகவும் அனுப்பிக்கொண்டிருந்தார். ஆனால் யாரும் அவரை திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அப்போதுதான் அவருக்கிருந்த உற்ற நண்பரொருவர், இந்த மாதிரி துக்கடா விசயத்திற்கெல்லாம் உன்னை எவனும் சீண்டமாட்டான்.... பெரிய பிரச்னைகளை எழுது என்று உபதேசம் பகன்றார். இதுதான் அவரது வாழ்வில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அடுத்தது என்னவென்று தெரிந்துகொள்ளமுடியாத புதிர்ப்பாதையான தன் வாழ்வில் இப்படியான பல கொண்டைஊசி வளைவுகளும் திருப்பங்களும் சகஜம்தானே என்று சற்றே ஆன்மீகமாகவும் யோசிப்பதுண்டு.
மாநில சுயாட்சி குறித்த விவாதம் தீவிரமாய் நடைபெற்று வந்த காலம் அது. மத்திய அரசாங்கத்தில் இருக்கும் கட்சியோடு உறவு சமூகமாக இல்லாதபோதெல்லாம் மாநில அரசிலிருக்கும் கட்சியால் சும்மானாச்சும் எழுப்பப்படுவதைப் போலல்லாமல் அப்போது தீவிரமாகவே விவாதிக்கப்பட்ட விசயம் மாநில சுயாட்சி. நாடே விவாதித்துக் கொண்டிருக்கும் இப்பிரச்னையில் தலையிட்டு எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கவேண்டும் என்ற ஆசை அவருக்குள் முளைவிட்டது. எப்படி தலையிடலாம் என்று தண்டவாளத்தில் தலைவைத்து யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் அவருக்கு சட்டென்று ரயில் ஞாபகம் வந்தது. அதன்படி இவர் ஒரு நாளிதழின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் இப்படி முடிந்தது-
‘... ஆகவே எப்படிப் பார்த்தாலும் மாகாண சர்க்காருக்கு பாத்தியப்பட்ட மண்ணில் அமைந்திருப்பதால் இனி எல்லா ரயில்வே கேட்டுகளும் பஸ் கேட்டுகள் என்றே அழைக்கப்பட வேண்டும். மத்திய சர்க்காருக்குச் சொந்தமான ரயில் கடக்கும்வரை பூட்டப்பட்ட கேட்டுக்கு வெளியே மற்ற வாகனங்களெல்லாம் நாய்போல காத்திருக்கும் மானங்கெட்ட நிலையை இனியும் சகித்துக் கொள்ள வேண்டுமா? எங்களுக்கு தன்மானம் இல்லையா? மாநில வாகனங்களுக்கே முன்னுரிமை. அவை கடந்துபோகும் வரை ரயில்களை மறித்து நிறுத்தினால்தான் நாம் மானஸ்தர்கள் என்பது ருஜூவாகும்’.
பத்திரிகை ஆசிரியர் பதறித்தான் போனார். இப்படியொரு யோசனை மாநில சுயாட்சி கோரும் கட்சிகளுக்குகூட இல்லாத நிலையில் இதை வெளியிடுவதா வேண்டாமா என்ற குழப்பம் அவரை பீடித்துக் கொண்டது. நல்வாய்ப்பாய், அந்த பிரச்னையை எழுப்பியக் கட்சிகளே அதை அம்போவென விட்டுவிட்டு அடுத்தவேலையைப் பார்க்கப் போய்விட்டதால், இவரது கடிதத்தை வெளியிட வேண்டிய அவசியமில்லாது போய்விட்டது. நாட்டையே நல்வழிப்படுத்தும் தனது கலகக்குரல்கள் ஒரு பத்திரிகை ஆசிரியனின் அதிகாரத்தால் வெளித்தெரியாமல் போவதா என்று அன்னந்தண்ணி ஆகாரமின்றி இவர் சிந்திக்க வேண்டியதாயிற்று. சிந்தனையின் தீவிரத்தில் தனக்கான வழியை இவர் கண்டறிந்துவிடுவதைத் தவிர வேறேன்ன வழியிருக்கிறது? ஆனால் ‘யுரேகா, யுரேகா’ என்று ஆரவாரம் எதுவும் செய்யாமல் ஒரு மௌனப்புரட்சியாக, தனது கருத்துக்களை சுதந்திரமாய் வெளியிட தானே ஒரு பத்திரிகையைக் கொண்டுவரும் சுயதீர்மானம் இப்படியாகத்தான் எட்டப்பட்டது.
தனது கொள்கை கோட்பாடுகளை பளீரென வெளிப்படுத்தும் பெயர் ஒன்றுக்காக இவர் மறுபடியும் சிந்திக்க வேண்டியதாயிற்று. ஒரு பத்திரிகை முழுவதும் எழுதி வெளிப்படுத்தும் விசயத்தை பெயராக வரும் ஒரேயொரு ஒற்றைச்சொல் உணர்த்திவிட வேண்டும் என்ற தேடலில் இவருக்கு தோல்வியே மிஞ்சியது. கடைசியில், பெயரில் என்ன இருக்கிறது, செயலில் காட்டுவோம் என்று முடிவெடுத்து ‘தாளிப்பு’ என்ற பெயரோடு பத்திரிகையைத் தொடங்கினார். பெயரைக் கண்டெடுத்ததுமே, தன் தாளிப்புக்குள்ளாகி தத்தளிக்கப்போகிறது தமிழ்நாடே என்ற இறுமாப்பு இவரை தொற்றிக்கொண்டது.
பத்துலட்சம் பிரதியானாலும் பத்தே பிரதியானாலும் இரண்டையுமே பத்திரிகை என்றுதான் வரலாறு குறித்துக் கொள்ளப் போகிறது என்று சமாதானம் சொல்லிக் கொண்டவர், தலைப்புகளை செம்மையிலும் உள்ளடக்கத்தை கருமையிலும் ரெக்கார்டு நோட்டைத் தயாரிக்கும் ஒரு பள்ளிக்கூட மாணவரைப் போன்ற சிரத்தையுடன் ‘தாளிப்பு’ முதல் இதழின் ஒரேயொரு பிரதியை தயாரித்தார். ஓரணாவுக்கும் ஓட்டைக்காசுக்கும் கத்தைகத்தையாய் அச்சடித்தக் காகிதம் விற்கும்போது, தனது கையெழுத்துப் பத்திரிகையை காசு கொடுத்து வாங்குவார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்பது இவருக்குப் புரிந்திருந்தது. எனவே பிறர் கண்ணில் படும்படி கையில் பிடித்துக்கொண்டு அலைந்தார். என்னவென்று கேட்க யாருமற்ற ஊராயிருந்தது அது. இவர்களுக்கெல்லாம் எதற்கு இரண்டிரண்டு கண் என்று அடுத்த இதழில் எழுதி நாறடித்துவிடுவதென்ற சங்கல்பம் அப்போதே உருவாகிவிட்டது. தனது கருத்துகள் சமூகத்தில் நிகழ்த்தப்போகும் விளைவை சோதித்துப் பார்க்கும் பத்திரிகை முயற்சி இப்படி உதாசீனத்தால் தோற்கடிக்கப்படுவது குறித்து இவர் சற்றும் மனம் தளரவில்லை. நகரத்தின் நூலகத்திற்குப் போனவர் அங்கேயிருந்த வார, மாத இதழ்களுக்கிடையில் தாளிப்பை போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் ஊர் வந்து சேர்ந்த மூன்றாம் நாள், அது அஞ்சலில் திரும்பி வந்திருந்தது. கூடவே இருந்த நூலகரின் கடிதம் தெரிவித்ததாவது-
எப்படியாவது யாரையாவது படிக்கவைத்துவிட வேண்டும் என்பதற்காக மறந்து வைத்துவிட்டுப் போனது போல தந்திரமாக உங்களது தாளிப்பை இங்கே விட்டுச் சென்றிருக்கிறீர்கள். ‘படிப்பும் விழிப்புணர்வும் குறைவாக உள்ள கீழ்நிலைச் சிப்பந்திகள், பாசம் கடமை போன்ற இளிச்சவாய்த் தனங்களால் தமது பெற்றோரையும் உடன் பிறந்தாரையும் இன்னமும் கூடவே வைத்துக் கொண்டு கங்காருகளைப்போல அல்லாடுகின்றனர். குழந்தைகளையும் அளவில்லாமல் பெற்றுக் கொள்கிறார்கள். பெரிய குடும்பத்தைக் கொண்ட இவர்களுக்கு சர்க்கார் சிறிய ஜாகைகளையே ஒதுக்குகிறது. அதேநேரத்தில் பெரும்பாலும் கணவன், மனைவி, அதிகபட்சம் இரண்டே பிள்ளைகள் என்றிருக்கிற உயர் அதிகாரிகளுக்கு தேவையேயில்லாமல் பெரிய பங்களாக்கள் ஒதுக்கப்படுகிறது. இந்த நிலைமையை தலைகீழாய் மாற்றியமைக்க வேண்டும்’ என்று ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறீர்கள் தலையங்கத்தில். நீங்கள் சொல்லும் அத்தனையையும் வாஸ்தவத்தில் கொண்டு திண்டாடும் ஒரு கீழ்நிலைச் சிப்பந்தி என்ற முறையில் உங்கள் கருத்தில் எனக்கு முழு சம்மதம். ஆனால் இப்படி நீங்கள் எழுதியிருப்பது ஜனாதிபதிக்கு எப்படி தெரியும்? தெரிந்தால் மட்டும் செய்துவிடுவாரா அவர்? முன்னூறு அறைகள் கொண்ட மாளிகைக்குள் ஒற்றையாளாய் இருக்கிற ஒருத்தர் எப்படி மற்றவர்களுக்கு புத்தி சொல்ல முடியும்? ஊதாரியிடம் உபாயம் கேட்டு சிறுவாடு பிடிக்க நினைக்கிற கதையாக இருக்கிறது இது’ என்று எழுதியிருந்தார் நூலகர்.
தனது பத்திரிகைக்கு கிடைத்த ஒற்றை வாசகரான அந்த நூலகரோடு ஏற்பட்ட சகவாசம், அவரது வாழ்க்கையையே ஒரு தீட்டாகோணத்திற்கு திருப்பிப் போட்டுவிட்டது. உலக, நாட்டு நடப்புகளை தெரிந்துகொண்டு ஆதாரப்பூர்வமாக பலவற்றையும் எழுதிக் குவிக்கும் ஆர்வத்தில் செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கத்தை அந்த நூலகர்தான் தூண்டிவிட்டார். தமிழ், ஆங்கில நாளிதழ்களை காலையில் படிக்கத் தொடங்கி, மாலைப்பதிப்புகள் வந்ததும் அவற்றையும் வாசித்து முடித்துவிட்டு நிமிரும்போது நூலகத்தைப் பூட்ட சாவிக்கொத்தோடு நின்றிருப்பார் சிப்பந்தி. படிப்பு படிப்பு ஓயாத படிப்பு. பெரியபெரிய மேதைகளெல்லாம் இப்படித்தான் பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரியில் படித்துக்கொண்டே இருப்பார்களாம் என்று ஒருமுறை நூலகர் சொன்ன செய்தியால் இவர் தன்னையும் மேதைகளின் பட்டியலில் யாருடைய சிபாரிசுமின்றி சேர்த்துக்கொண்டார்.
உலகத்தில் என்னவெல்லாம் நடக்கிறது பார்த்தீங்களா என்று யாரிடமாவது தன் தகவலறிவை பகிர்ந்துகொள்ள அவர் ஒவ்வொரு நாளும் நினைப்பதுண்டு. ஆனால் நூலகம் சாத்திய பிறகு வெளியே வந்து பார்த்தால் ஊரார் அவரவர் வேலையில் முங்கிக்கிடப்பர். இவ்வளவு விசயம் தெரிந்தவன் வருகிறானே, அவனிடம் ரெண்டு வார்த்தைப் பேசுவோம் என்று வாயைக்கொடுக்க ஒருவரும் தயாராயில்லை. இவருக்கும் வாயைக் கொடுக்கிற ஆட்கள் தேவையில்லைதான். காது கொடுப்பவர்கள் யாராவது சிக்குவார்களா என்று தெருவெங்கும் தேடிக்கொண்டே வீட்டுக்கு வரும்போது எல்லோரும் உறக்கத்தின் ஆழ்நிலைக்கு சென்றிருப்பார்கள்.
நாளாக நாளாக அவர் நூலகத்தின் ஒரு பகுதியாக மாறிக்கொண்டிருந்தார். இரவானால் நூலகம் பூட்டப்படுவது குறித்த தனது அதிருப்தியை பலமட்டங்களுக்கு எழுதியனுப்பியும் யாரும் செவிமடுக்கவில்லை என்பது அவரை சோர்வடையச் செய்தது. விடிவதற்குள் உலகெங்கும் என்னவெல்லாம் நிகழப்போகிறதோ, நாளைக்கு தினத்தந்தியில் தலைப்புச் செய்தியாக எது இருக்கும்? தினமணியில் தலையங்கம் எதைப்பற்றியதாக இருக்கும் என்று பதற்றத்தோடு யோசித்துக்கொண்டு படுத்துக்கிடப்பார். விடிந்ததும் டீக்கடைகளிலும் சலூன்களிலும் நுழைந்து நாளிதழ்களை மேலோட்டமாகவாவது ஒரு பார்வை ஓட்டிவிட்டு வந்தால்தான் அன்றைக்கு அவரது காலைக்கடன்கள் இனிதே கழிவதாயிருந்தது.
மாலைப் பத்திரிகைகள் வெளியானதிலிருந்து மறுநாள் காலை இதழ்கள் வெளியாவது வரையான இடைப்பட்ட நேரத்தில் நடக்கும் விசயங்கள் குறித்த செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளாமல் இருப்பது தற்குறித்தனம் என்கிற எண்ணம் அவரை வலுவாக பிடித்தாட்டியது. தான் அறிந்துகொண்டிருக்கும் அனைத்தையும்விட அறியாதிருப்பதே அதிகம் என்ற கவலை உந்தித்தள்ள இதற்கொரு தீர்வைக் கண்டாக வேண்டிய இக்கட்டில் மாட்டிக்கொண்டார். உலகின் எந்த மூலையில் எதுநடந்தாலும் அது உடனுக்குடனே தனக்குத் தெரிவதற்குண்டான மார்க்கம் எதுவென்ற யோசனையின் உளைச்சலால் இப்போதெல்லாம் நூலகத்தில் மனமொன்றி எதையும் வாசிக்க முடியாமல் போனது அவருக்கு. உடனுக்குடன் உலகெங்கும் செய்திகளை வெளியிட, நாளிதழ்களுக்குப் பதிலாக நொடியிதழ்கள் வெளியிடப்பட வேண்டுமென்று அவர் விடுத்த வேண்டுகோளை அப்போதைக்கு எந்த பத்திராதிபதிரும் ஏற்காததால், அன்றன்றைய செய்தித்தாள்களும்கூட அவருக்கு பழைய பஞ்சாங்கத்தைப் புரட்டும் ஞாபகத்தையே தோற்றுவித்தன. எனவே இருபத்திநான்கு மணிநேரமும் திறந்தேயிருக்கும் நூலகங்களைக் கொண்டதொரு நகரத்தில் குடியேறுவது குறித்து அவர் யோசிக்கத் தொடங்கியது இந்த கட்டத்தில்தான். 24 மணிநேர மருத்துவமனைகள் மட்டும்தான் இருக்கிறதேயொழிய இன்னும் தானறிந்தவரையில் அத்தகைய லைப்ரரிகள் உலகின் எந்த நாட்டிலும் உருவாகவில்லை என்று அறிவுரை வழங்கிய நூலகர், உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துகொள்ள வானொலிப்பெட்டி உதவியாய் இருக்கும் என்று பரிந்துரைத்தார்.
இதுவரை வானொலி பெட்டியைப் பற்றி தான் யோசிக்காதிருந்தது ஏன் என்று தனது அறிவீனத்தின்மீது கோபப்பட்டுக் கொண்டவர், இனியும் தாமதிக்கக்கூடாது என்று உடனடியாக தன் தந்தையின் சைக்கிளை விற்று மர்பி ரேடியோ ஒன்றை வாங்கி வந்ததை முன்னிட்டு கொஞ்சகாலம் அவரை வீட்டுக்குள் சேர்க்க மறுத்துவிட்டார்கள். வசதியாகப் போயிற்று என்று இவரும் வீடண்டாமல், ரேடியோ முள்ளை முன்னும் பின்னும் உருட்டியுருட்டி நோண்டி நுங்கெடுத்து எந்தெந்த புள்ளியில் எந்தெந்த ஒலிபரப்பு நிலையங்கள் உள்ளன என்று கண்டறிவதற்குள் ஒருவாரம் ஓடிவிட்டது. பீகிங் ரேடியோ தொடங்கி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனம் வரை எல்லாவற்றையும் துல்லியமாக டியூன் செய்யக் கற்றிருந்தார் இந்த ஒருவார காலத்தில். எந்தெந்த அலைவரிசையில் போனால் எந்தெந்த நிலையங்கள் கிடைக்கும், அதில் எவ்வப்போது செய்தி வாசிப்பார்கள் என்பதெல்லாம்கூட அத்துபடியாகிவிட்டது. ஒரு வேட்டைநாய் மோப்பம் பிடித்து அலைவதைப்போல வீட்டுக்குள்ளும் வெளியிலும் பலவாக்காக ரேடியோவுடன் அலைந்து எந்தெந்த இடத்தில் வைத்துக் கேட்டால் கரகரப்பும் இரைச்சலும் குறைவாக இருக்கிறது என்பதை கண்டறிந்ததை தன் அறிவின் அதியுன்னதப் பகுதியாக கருதிப் பெருமிதம் கொண்டார். சற்றே கரகரப்பு கூடும்போது காற்றின் திசைப்போக்கை ஒரு மாலுமியின் நுட்பத்தோடு அறிந்து வேறுதிசைகளில் சற்றே உயர்த்தியும் தாழ்த்தியும் சாய்த்தும் கேட்கிற சாதுர்யமும்கூட அவருக்கு சித்தித்திருந்தது. ரேடியோவைப் பற்றி மார்க்கோணியை விடவும் அதிகம் தெரிந்தவர் இவராகத்தான் இருக்கமுடியும் என்றபடிக்கு மாறிவிட்டிருந்தார். ரேடியோச் செய்திகளின் உடனடித்தன்மையை ஒப்பிடும்போது நாளிதழ்களை ‘முந்தின நாளின் இதழ்’ என்று அழைப்பதே பொருத்தமென்ற இளக்காரமான கருத்து அதற்குள்ளாகவே இவருக்கு உருவாகிவிட்டிருந்தது.
இப்போதெல்லாம் அவருக்கு உலக நடப்புகள் உடனுக்குடன் தெரியத் தொடங்கியிருந்தது. தமிழில் அல்லது ஆங்கிலத்தில் செய்திகள் வாசிக்கப்படாத நேரங்களில் மொழி புரியாவிட்டாலும் செய்தி வாசிக்கும் தொனியில் ஒலிபரப்பாகும் ஏதோவொன்றை உன்னிப்பாக கேட்கத் தொடங்கியபோது, இவருக்கு பல பாஷைகளும் தெரிந்திருப்பதாய் ஊருக்குள் வதந்தி பரவியது. ரேடியோ கேட்டுக் கொண்டிருக்கும்போது யாராவது பேச்சுக்கொடுத்தால் ‘உஷ்’ஸென்று வாய்மீது விரலை வைத்து அமைதியாய் இருக்கும்படி சைகை செய்வார். அந்த நேரத்தில் தன் முகம் மர்பி ரேடியோப்பெட்டியின் மீதுள்ள குழந்தையின் படத்தைப் போலவே இருப்பதாக கற்பனை செய்துகொள்ளவும் அவர் பழகியிருந்தார் என்பது வேறுவிசயம்.
ஊரில் ஒவ்வொருத்தர் வீட்டு ரேடியோவிலும் கானாமிர்தமாய் பாட்டும் இசையும் பலவகை சொற்பொழிவுகளும் ஒலிபரப்பாகி உற்சாகத்தை நிரப்பிக் கொண்டிருக்கையில் இவர் வீட்டில் எப்போதும் யாராவது ஒருவர் கட்டைக்குரலில் செய்தி வாசித்துக்கொண்டிருந்தார். இதன்பொருட்டு வீட்டில் எழுந்த சர்ச்சைகளை இவர் செவிமடுப்பதாயில்லை. ரேடியோவுக்கு மடுக்கப்பட்ட செவியை மனிதர்களுக்குத் தருவதற்கு அவர் தயாராயில்லை. செய்திகளை தடையற்று உடனுக்குடன் அறிந்துகொள்ளும் ஆவல் மீதுற அவர் பிறரோடு பேசுவதை முற்றாக நிறுத்திவிட்டிருந்தார். முதல்நாள் செய்திகளை ஆறிநாறிப்போன நிலையில் மறுநாள் காலையில் செய்தித்தாள் பார்த்து தெரிந்துகொள்கிற- காலத்தால் பின்தங்கிய சராசரிகள் என்று மற்றவர்களைப் பற்றி அவருக்கு உருவாகியிருந்த அபிப்ராயமும்கூட அவர் பிறரோடு பேசுவதை நிறுத்தியதற்கு காரணமாய் இருந்தது. இவருக்கும் மற்றவர்களுக்கும் இடையே அரிதாக நிகழும் உரையாடல்கள்கூட சைகையிலேயே இடம்பெற்றன. கழிப்பறைக்குள்ளும் சாப்பிடும்போதும் படுக்கையிலும் அந்த ரேடியோப்பெட்டி ஓய்வுஒழிச்சலின்றி அவருக்காக இரைந்துகொண்டிருந்தது.
முக்கியமான செய்தி என்று நாளிதழ்களிலிருந்து கத்தரித்துக்கொண்டு வந்து சேகரித்திருந்த காகிதத்துண்டுகள் ஏற்கனவே வீட்டில் மலைபோல் குவிந்துகிடந்தன. போதாக்குறைக்கு இப்போது செய்தியைக் கேட்கும் போதே முக்கியச்செய்திகள் என்று இவருக்குப் படுவதை நோட்டுகளில் குறிப்பெடுத்து குவிக்கத் தொடங்கினார். ஸ்ரீவில்லிப்புத்தூர் மக்களவைத் தொகுதியில் விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவை படிக்காத மேதை காமராஜர் தோற்கடித்தது, ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து நடந்தப் போராட்டங்கள், இ.எம்.எஸ் தலைமையில் கேரளாவில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் அரசு, பி.எல்.480 திட்டத்தின் மூலம் கோதுமை இறக்குமதி, அம்பேத்கர் தலைமையில் 10 லட்சம்பேர் பௌத்தத்திற்கு மாறியது, சிம்லா முத்தரப்பு மாநாடு, இந்திய- சீன எல்லைப் போர்,நேருவின் மரணம், இந்தியா- பாகிஸ்தான் யுத்தம், அமெரிக்காவின் வியட்நாம் ஆக்ரமிப்பு யுத்தம், 1967 ஜனவரி 12 ம்தேதி எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர் சுடப்பட்டது, வெண்மணிப் படுகொலை, திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி, ஸ்கைலாப் வெடிப்பு, எமர்ஜென்சி, ஜெ.பி.இயக்கம் என்று எந்தத் தலைப்பில் கேட்டாலும் சொல்வதற்கும் காட்டுவதற்கும் அவரிடம் நூறுநூறாய் ஆதாரங்கள் இருந்தன. ஆனால் காட்டுவதற்கான நேரம்தான் அவருக்கு வாய்க்கவேயில்லை.
ஒவ்வொரு நாளும் அவரது தகவலறிவு தலைமிஞ்சி பெருத்துக் கொண்டிருந்தது. அரசியல் தொடங்கி விளையாட்டுச் செய்திகள்வரை தனித்தனியே திரண்டு நடமாடும் செய்தித் தொகுப்பாக அவர் மாறிவிட்டிருந்தார். இப்படியானதொரு நியூஸ் மனிதனோடு வாழ்வதை நினைத்துப் பார்க்கும் தைரியம் கொண்ட வீரமங்கை ஒருத்தி இன்னும் பிறக்காததால் அவருக்கு கல்யாணம் காட்சியென்று எதுவும் நடக்காமல் போனதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு பிதுரார்ஜிதமாய் இவரது சுவாதீனத்திற்கு வந்து சேர்ந்த வீட்டின் பெரும்பகுதியை வாடகைக்கு விட்டுவிட்டு ஒண்டிக்கட்டைக்கும் ஒரு ரேடியோப்பெட்டிக்கும் இதுவே போதும் என்று ஒரு சிறிய அறையில் தங்கிக் கொண்டார். வாடகைப் பணத்தில் மிச்சம் பிடித்து தொலைக்காட்சிப் பெட்டியை வாங்காமல் இருந்திருப்பாரானால் இந்தக்கதையை இங்கேயே முடித்திருக்கலாம். ஆனால் அவருக்கு விதி அப்படி அமையவில்லை என்பதை வாசகர்கள் அறிக.
அவர் வசித்த தெருவுக்குள் தொலைக்காட்சி அவரிடம் மட்டுமே இருந்தது. படித்தும் கேட்டும் செய்திகளை அறிந்து கொண்டிருந்த நிலைமை மாறி காட்சிரூபமாய் செய்திகளை அறியும் அனுபவத்தில் ஏற்பட்ட மனக்கிளர்ச்சியில் அவர் திக்குமுக்காடத் தொடங்கியிருந்தார். ஒலியும் ஒளியும், ஒரு வாராந்திர சினிமாவை விட்டால் எப்பப் பார்த்தாலும் நியூஸ்தானா என்று ஊரெல்லாம் தூர்தர்ஷனை போர்தர்ஷன் என்று இகழ்ந்துகொண்டிருந்த காலத்தில் இவர் மட்டுமே அதன் உபாசகராக இருந்தார். இவரது தொலைக்காட்சியில் என்றாவதொருநாள் ஒலியும் ஒளியும் பார்த்துவிடலாம் என்று வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களுக்கு எழுந்த ஆசை கடைசிவரை நிறைவேறவேயில்லை. அப்படியொரு வாய்ப்பை அவர் தனக்கேகூட வழங்கிக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
அவர் இப்போதெல்லாம் அரிதாகவே வெளியே வந்தார், மற்ற நேரங்களில் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னாலேயே கிடந்தார். தொலைக்காட்சியில் செய்திகள் இல்லாதபோது ரேடியோவை உருட்டிக் கொண்டிருந்தார். ஆனால் இப்படியே போய்க் கொண்டிருக்க முடியாதல்லவா? ஊடகத்தின் வளர்ச்சிக்கேற்ப அவரும் தன்னை மாற்றி தகவமைத்துக் கொள்ள வேண்டியிருந்ததால் கேபிள் டிவி வந்தபோது முதல் ஆளாய் இணைப்பு பெற்றவர் இவர்தான் என்பதை கூர்மதி வாய்த்த நீங்களே யூகித்திருக்கக்கூடும்.
இப்போது அவருக்கு பொறுப்புகள் கூடிப்போயிற்று. ஒன்றா இரண்டா? 64 சேனல்கள். எனவே அவருக்கு நேரம் போதவில்லை. குளிக்கப்போனால் கூட குளியலறையின் கதவை திறந்தே வைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. சளசளவென தண்ணீர் விழுந்து வழியும் சத்தத்தில் செய்தியை தெளிவாகக் கேட்கமுடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் சொட்டுசொட்டாக நீர்விட்டு குளிக்கப் பழகினார். அது நெடுநேரம் எடுத்ததால், ஈரத்துண்டினால் உடம்பைத் துடைத்துக்கொள்ளும் ‘டவல் பாத்’ முறைக்கு மாறினார். ஆனால் அவரது இந்த அர்ப்பணிப்பு உணர்வை மதிக்கும் பக்குவத்தை இந்த தொலைக்காட்சிகள் எட்டவில்லை என்ற முடிவுக்கு வர அனேக விசயங்கள் நடந்தன. எல்லாவற்றிலும் செய்திநேரம் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருப்பதால் எதைக் கேட்பது, எதை விடுவது என்று தீர்மானிக்க முடியாமல் திண்டாடினார். எனவே ரிமோட்டால் ஒவ்வொரு சேனலுக்கும் தாவித்தாவி எந்த செய்தியையும் முழுதாக பார்க்க முடியாத உளைச்சல் இவரை வாட்டியது. செய்திநேரத்தில் வரும் விளம்பர இடைவேளைகளின்போது இவர் எரிச்சலடைவதும் இருப்பு கொள்ளாமல் தவிப்பதும் இயல்பானதாகிவிட்டது. அம்மாதிரியான நேரங்களில் கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு இதுவரையான செய்திகளை ஒரு ஊமைப்படம்போல மனதுக்குள் ஓடவிட்டுப் பார்ப்பார்.
மற்ற நிகழ்ச்சிகளின் இடையூறு இல்லாமல் 24 மணிநேர செய்திச் சேனல் ஒன்றைத் தொடங்குமாறு இவர் எல்லா தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் மனு போட்டுக் காத்திருந்தது வீண் போகவில்லை. ஆனால் 24 மணிநேர செய்திச்சேனல்கள் பெருகிவிட்டாலும், இவற்றிலும் விளம்பரங்களுக்கு இடையே ஒரேவகைப்பட்ட செய்திகளே வந்தன. செய்திகளை முந்தித் தருவது பிந்தித் தருவது என்பதெல்லாம் பேச்சளவில் மட்டுமே இருந்தது. காலையில் சொல்லப்பட்டவையே பிற்பகல் வரை திரும்பத்திரும்ப ஒளிபரப்பானது. அநேகமாக ஒன்றிரண்டு செய்திகள் மட்டுமே பிற்பகல் செய்தியில் புதிதாக சேர்க்கப்பட்டன. இரவுச்செய்தியிலும் இதே நிலைதான். ஆகவே 24 மணிநேரமும் ஓடிக் கொண்டிருந்தாலும் அதை 24 மணிநேரமும் பார்த்துக்கொண்டேயிருக்க வேண்டியத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்து அவர் வெளிநாட்டுச் செய்திகளை பார்க்க ஆரம்பித்தது இப்படித்தான்.
ஆனாலும் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்ப்பதில் அவருக்கு அலுப்பு ஏற்பட்டு அது வெறுப்பாக மாறும் தருணத்தில் ‘முக்கியச் செய்திகள்’ என்றோ ‘ஃபிளாஷ் நியூஸ்’ என்றோ திடீர்த் தகவல்களை வெளியிடும் உத்தியைக் கையாண்டு அவரை நிரந்தரப் பார்வையாளராக தக்கவைத்துக் கொள்வதில் சேனல்கள் வெற்றிகொண்டன. எந்த சேனலிலாவது பரபரப்பான முக்கியச் செய்தி எதுவும் வருகிறதா என்று தேடும் புதிய பழக்கம்தான் அவருக்கு எல்லாத் தீங்குகளையும் கொண்டுவந்து சேர்த்தது.
வழக்கம்போல் அன்றும் அவரது ரிமோட் அங்கும் இங்குமாக மேய்ந்து கொண்டிருந்தது. ஒரு வெளிநாட்டுச் சேனலில் கண்ட காட்சி அவரை பரபரப்புக்குள்ளாக்கியது. நெடிதுயர்ந்த தென்னை மரங்களை முழுக்கடித்துக் கொண்டு மூர்க்கமாய் எழுந்து பாயும் கடல்அலை ஊருக்குள் பாய்கிறது. எங்கும் வெள்ளக்காடு. திரையின் ஒரு மூலையில் ‘ஆழிப்பேரலை என்னும் சுனாமி அபாயம் இந்தியாவை நெருங்கிக் கொண்டிருக்கிறது’ என்று ஃபிளாஷ் நியூஸ் மின்னுகிறது. இப்படியொரு ஆபத்து இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்ற தகவலை இந்தியாவில் அறிந்து கொண்ட முதல் மனிதர் தானாகத்தான் இருக்கக்கூடும் என்ற நினைப்பே அவருக்கு பரவசத்தை உருவாக்குகிறது. எங்கு எப்போது எப்படி இந்த ஆபத்து இந்தியாவை தாக்கப்போகிறது என்று நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு தனக்கு மட்டுமே கிட்டியிருப்பதாக கிளர்ச்சியுற்ற மனநிலையில் டிவியை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தார். இந்தோனேஷியா, தாய்லாந்து, இலங்கை என்று கடந்து இந்....
எல்லாம் முடிந்து போயிற்று. சென்னையில், கடலூரில், வேளாங்கண்ணியில், நாகப்பட்டணத்தில், அந்தமானில் திரும்பும் திசையெல்லாம் பிணங்கள். திரை முழுக்கத் தெரிந்த பிணங்கள் அத்தனையும் வெறும் புள்ளிவிவர எண்களாயும் எழுத்தாயும் மாறி செய்தியாக அவரது காதுக்குள் நுழைந்தபோது மண்டை வெடித்துவிடுவது போலாகிவிட்டது. தனக்கு செய்தி தெரிந்திருந்தும் வெளியே ஓடிவந்து யாரையும் எச்சரிக்காததால்தான் இப்படியாகிவிட்டது என்று நிகழ்ந்த அழிமானங்கள் அனைத்துக்கும் தார்மீகமாக தானே பொறுப்பேற்று தலையிலடித்துக் கொண்டு அழுதபடியே கிடந்தவர் அதற்குப் பிறகு ஒருநாளும் செய்தித்தாளையோ ரேடியோவையோ டிவியையோ நெருங்கவேயில்லை. ஆனாலும் கத்த புத்தி செத்தால்தான் போகுமாமே...
தனக்குள் திரண்டு கிடந்த செய்திகளின் வெளிச்சத்தில் இனி இந்த உலகத்தை எச்சரித்து வழிநடத்துவதே காலம் தனக்கிட்டிருக்கும் பணி என்று எஞ்சிய காலத்தைக் கழிப்பதென முடிவெடுத்தது அப்போதுதான். செய்திகளின் வழியான பிம்பங்களாக மட்டுமே பார்த்துப் பழகியதால் மனிதர்களோடு நேருக்கு நேராக பழகுவது அவருக்கு தொடர்ந்து சிக்கலாகவே அமைந்தன. பல்லாயிரம் பேர் சாகப் போகிறார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்துவைத்துக் கொண்டு அதை ரசிப்பதற்காக டிவியின் முன்பு காத்திருந்தவன் என்று தன்னை யாரும் கண்டுபிடித்துவிடக்கூடாது என்ற பதற்றத்தில் அவரது நடவடிக்கைகள் எல்லாமே அதீதமாய் வெளிப்பட்டன. கூடுதல் கரிசனத்தை வெளிப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் எல்லாமே பிறரை எரிச்சலூட்டவே பயன்பட்டன. தன்னை எல்லோரும் புறக்கணித்தாலும் அவர்களோடு எப்படியும் ஒரு உரையாடலைத் தொடங்கி தனது தகவல் களஞ்சியத்திலிருந்து ஒரு பிடியை அவர்களுக்கு புகட்டி, உங்களுக்கெல்லாம் சொல்வதற்காகவே நான் இவ்வளவு காலமும் தகவல்களை திரட்டிக் கொண்டிருந்தேன் என்று உணர்த்த விரும்பினார். அதற்காகவே அறிமுகமானவர் ஆகாதவர் என்ற பாகுபாடில்லாமல் யாரெவரோடும் உரையாட முயன்றார்.
நேரடியாக விசயங்களைப் பேசாமல் தனக்குத் தெரிந்திருந்த தகவல்களோடு இணைத்துப் பேச அவர் செய்த முயற்சிகளின் செயற்கைத்தன்மையால் எரிச்சலுற்ற பலரும் இவரைப் பார்த்தாலே பத்தடி தூரம் தள்ளி நடந்தனர். நேருக்குநேராய் சந்திக்க நேரிடும் தருணங்களில் எதன்மீதாவது மோதிச் செத்தாலும் பரவாயில்லை என்று வெளிப்படையாகவே கண்களை மூடிக்கொண்டு கடந்தனர். உனக்குத் தெரிந்திருக்கும் தகவல்களால் இந்த உலகத்துக்கு ஒருபைசா பயனில்லை என்று அறிவிப்பதே இந்தப் புறக்கணிப்பின் பின்னால் மறைந்துள்ள சதித்திட்டங்களும் தந்திரங்களும் எனபது அவர் அறியாததல்ல.
நாய்கள் ஜாக்கிரதை என்பதைப் போல நியூஸ் பைத்தியம் ஜாக்கிரதை என்று தன் கழுத்தில் ஒரு மாயப்பலகையை யாரோ தொங்கவிட்டிருப்பதைப் போல உணரத் தொடங்கிய அவர், அதை கழற்றி எறிவதைப்போல அவ்வப்போது பாவனைகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டார். செய்தியும் தகவலுமே அறிவு என்பதை புரிந்துகொள்ளாத உலகம் முழுவதையும் ஒருபக்கம் நிறுத்தி அதன் எதிர்பக்கத்தில் தன்னந்தனியாய் தன்னை நிறுத்திக் கொண்டு உரையாட விரும்பும் அந்த நியூஸ் தாத்தாவுக்கு இப்போது வயது எழுபது சொச்சம். அதோ அந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடையின் கீழ் காத்திருக்கிறார். இப்போது நீங்கள் தப்பிவிட்டாலும் அவர் உங்களை விரைவில் சந்திக்கக்கூடும்.
நன்றி: இந்திய காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின் தஞ்சைக் கோட்ட மாநாட்டு மலர். 24/07/2011
குறிப்பு: யாரங்கே.... " நம்ம தாத்தாவை இழிவுபடுத்தித்தான் இந்தக்கதை எழுதப்பட்டுள்ளது...? " என்கிற அடுத்தப்புரளி ரெடியா? இக்கதை மீதான பேரன்மார் சங்கத்தின் கண்டனம்/ ஆபாச வசவு/ கொலைமிரட்டல்/ கொக்கரிப்பு/ குமைச்சல்/ ஏழெட்டு ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் அவற்றுக்கான பின்னூட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இன்னுமென்ன.... ஸ்டார்ட் மியூஸிக்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக