வெள்ளி, ஆகஸ்ட் 5

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - ஆதவன் தீட்சண்யா



லி
பரல்பாளையம் தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த அயல்நாட்டு அரசியல் ஆர்வலர்களுக்கு அந்த செய்தி நம்ப முடியாததாகத்தான் இருந்தது. மிகுந்த அதிர்ச்சியும் திகைப்புமுற்ற அவர்கள் தாம் பார்த்துக் கொண்டிருப்பது நிஜம்தானா என்று தம்மைத்தாமே உசுப்பிவிட்டுக் கொண்டனர். டிவியில் ஏதேனும் அம்புலிமாமா கதைகளைக் காட்டிக் கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகமும்கூட எழும்பியது.

இந்தத் தேர்தலில் கழுதைகளும் நாய்களும் போட்டியிடப் போவதாக முதலில் செய்தி வந்தபோது, அது சுயேட்சை வேட்பாளர்கள் சிலருக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் பற்றிய செய்தியாக இருக்கும் என்றுதான் பலரும் நினைத்தார்கள். அதற்கப்புறம் வேட்பாளர்களே கழுதைகளும் நாய்களும் தான் என்று தெரிந்தபோது தேர்தல் பரபரப்புக்காக யாரோ குசும்புக்காரர்கள் கிளப்பிவிட்டிருக்கும் வதந்தியாக இருக்கக்கூடும் என்று மறந்து போனார்கள். ஆனால், தேர்தல் ஆணையத்தால் இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலில் ஏழு நாய்களும் ஏழு கழுதைகளும் இடம் பெற்றிருந்ததைப் பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி எளிதில் மீளக்கூடியதாயில்லை. மனிதர்கள் போட்டியிடும் தேர்தலில் மிருகங்களா என்ற குழப்பமே இன்னும் நீங்காத நிலையில் அவை வெற்றியும் பெற்றுவிட்டன என்றால் யார்தான் இயல்பாக இருக்க முடியும்? அதுவும் எதிர்த்துப் போட்டியிட்ட எல்லா வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கவைத்துவிட்டு வெற்றி பெற்றுள்ளன என்றால்?

இதெல்லாமே, ஒரு உறைக்குள் இரண்டு மொன்னைக்கத்திகள்கூட ஒன்றாயிருக்க முடியாது என்பதற்கு கேடுகெட்ட உதாரணமாய் லிபரல் பாளையத்தில் இருக்கிற இரண்டு தலைவர்களின் தனிப்பட்ட அகந்தையாலும் வாய்க்கொழுப்பாலும் வந்த வினைதான். தனக்குள்ள செல்வாக்கை மிகைப்படுத்திக் காட்ட ‘நான் பார்த்து ஒரு கழுதையை நிறுத்தினாலும் இந்த மக்கள் அதற்குதான் ஓட்டுப் போடுவார்கள்’ என்று அ கட்சியின் தலைவர் சொன்னதை வெறும்பேச்சாய் கருதி விட்டுவிட்டிருக்கலாம். அல்லது ஏற்கனவே உன் கட்சியில் கழுதைகள் தானே இருக்கு என்று மட்டம் தட்டிவிட்டு ப்ளு கிராஸ் அமைப்பிடம் மன்னிப்புக் கேட்டு நகர்ந்திருக்கலாம். ஆனால் அப்படியெதுவும் நடக்காததே அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு மூலப்புள்ளியாக அமைந்துவிட்டிருந்தது. ஒரு கட்சித்தலைவர் எவ்வளவு அற்பமான விசயங்களைப் பேசினாலும் அதற்கு இன்னொரு தலைவர் கல்யாணவீட்டிலோ கருமாதிக்காட்டிலோ மறுப்பு தெரிவித்து பெரும் பிரசங்கம் செய்வது இந்த நாட்டில் வாடிக்கை தான் என்றாலும் கழுதை விசயம் அப்படியாக முடியவில்லை. ‘எனக்கு மட்டும் செல்வாக்கில்லையா... என்னை லேசுப்பட்டவனென்று நினைத்துக் கொண்டாயா நீசனே, நான் பார்த்து ஒரு நாயை கைகாட்டினாலும் மக்கள் அந்த நாயைத்தான் ஜெயிக்கவைப்பார்கள்’ என்று ஆ கட்சியின் தலைவரும் தன்பங்குக்கு எகிறி அங்கு ஒரு போட்டியை உருவாக்கிவிட்டார். கடைசியில் உன்னால் முடிந்தால் நிறுத்திப்பார்? என்று ஒருவருக்கொருவர் சவால்விட்டு நிலைமையை முறுக்கேற்றி இவ்வளவு சிக்கலாக்கிவிட்டிருந்தார்கள்.

பகிரங்கமாக சவால்விட்டுவிட்டாலும் அ கட்சித்தலைவருக்கு அவ்வளவு எளிதாக கழுதைகள் கிடைத்துவிடவில்லை. கழுதைகூட குட்டியில்  அழகாய்த்தான் இருக்கும் என்று சொல்லப்படுவதால் வாக்காளர்களை எளிதாக ஈர்க்க குட்டிக்கழுதைகளைத் தேடியலைந்தார். எங்கும் கிடைக்காத நிலையில், சினைப்பட்டிருந்த கழுதைகளுக்கு சிசேரியன் செய்து குட்டியை வெளியே எடுத்து வேட்பாளராக்கிவிடலாமா என்றும்கூட யோசிக்குமளவுக்குப் போய் விட்டார். பத்துப்பிள்ளைகளை பெற்றதற்கு பதில் சில கழுதைகளையாவது பெற்றிருக்கலாம் என்று அதிகாரப்பூர்வ மனைவி மீது எரிந்துவிழுந்தார். அதுக்கு நீ கழுதையா இருந்திருக்கணும்யா என்று அந்தம்மாவிடம் வசை வாங்க வேண்டிதாயிற்று. ச்சே, இப்படியாகுமென்று தெரிந்திருந்தால் முதலில் ஒரு கழுதைப்பண்ணையை சொந்தமாக உருவாக்கிவிட்டு அதற்கப்புறம் அறிவித்திருக்கலாம். அல்லது குதிரை எருமை ஆடு மாடு என்று எளிதில் கிடைக்கும் விலங்கு எதையாவது சொல்லித் தொலைத்திருக்கலாம். இளக்காரத்திலும் ஏளனத்திலும் அவசரப்பட்டு கழுதையை நிறுத்துவதாக சொல்லிவிட்டு இப்படி இம்சைப்பட வேண்டியிருக்கிறதே என்று தலைவர் தன்னையே நொந்து கொண்டார். ஒன்றிரண்டு கழுதைகளை வைத்திருந்த சலவைத் தொழிலாளர்கள் ‘எங்கப் பொழப்புல மண்ணள்ளிப் போட்டுராதீங்க...’ என்று மறுத்துவிட்டார்கள். கட்சி, அதிகாரம் என்ற அஜால் குஜால் ஜம்பமெல்லாம் அவர்களிடம் பலிக்கவில்லை. கடைசியில் ஒவ்வொரு குட்டிச்சுவராய்த் தேடி கேட்பாரற்று புரண்டு கொண்டிருந்த ஏழு கழுதைகளை இழுத்துவருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

ஆ கட்சித்தலைவருக்கோ வேறுமாதிரியான சிக்கல் இருந்தது. அவர் வீட்டிலேயே பத்து நாய்கள் வளர்ந்து வந்தாலும் அவற்றை தேர்தலில் நிறுத்துவதில் சங்கடமிருந்தது. வாரீசு அரசியல் நடத்திக் கொண்டிருப்பதாக அவர்மீது ஏற்கனவே உள்ள குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் எந்தக் காரியத்தையும் இந்தத் தேர்தலில் செய்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அவரது குடும்ப உறுப்பினர்கள் எல்லோருமே ஏதாவது சில பதவிகளை ஆக்கிரமித்திருந்த நிலையில், நாய்களென்றாலும் அவர் வீட்டு நாய்கள்தானா என்று கட்சிக்குள்ளேயும் அதிருப்தி உருவாகும் வாய்ப்பிருந்தது. அதற்காக கட்சியின் பிற தலைவர்களது வீட்டு நாய்களுக்கு சீட் கொடுக்கவும் அவருக்கு மனமில்லை. எனவே தெருவில் சுற்றிக் கொண்டிருந்த ஏழுநாய்களை தரதரவென இழுத்துவரச் செய்து விஷமுறிவு ஊசிகள் பலவற்றை அவற்றுக்கு ஏற்றி ஆபத்தானவையல்ல என்று உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு வேட்பாளர்களாக அறிவித்தார்.

கழுதையை எதிர்த்து நாய் என்று நிறுத்தப்பட்டிருந்தால்கூட அது இரண்டு விலங்குகளுக்கிடையிலான போட்டி என்ற அளவில் சமதையானதாக கருதப்பட்டிருக்கும். ஆனால் கழுதைகள் நிற்கிற தொகுதிகளை கவனமாக தவிர்த்துவிட்டு வேறு ஏழு தொகுதிகளில் நாய்களை நிப்பாட்டியிருந்தார் ஆ கட்சித்தலைவர். இந்த இரண்டு தலைவர்களும் தேர்தலையே கேலிக்கூத்தாக்கிவிட்டதாக பிற கட்சிகள் கண்டித்தாலும் தம் இருப்பை காட்டிக்கொள்வதற்காக வேறுவழியின்றி களமிறங்கத்தான் வேண்டியிருந்தது. ஒரு கேக்கை ஆளுக்கொரு துண்டாய் வெட்டி பங்கிட்டுக்கொள்வதைப்போல ஆளாளுக்கு சில தொகுதிகளை கைப்பற்றுவதே தேர்தல் என்று இதுவரை இருந்த நிலை இப்போது மாறிவிட்டதோ என்ற அச்சம் அவர்களைப் பீடித்தது.

இது மற்ற தொகுதிகளில் நடப்பதுபோல வெறுமனே எத்தனை வாக்குகள் என்கிற எண்ணிக்கை விளையாட்டல்ல, தலைவர்களின் தனிப்பட்ட செல்வாக்கை நிறுவிக் காட்டும் யுத்தம் என்று ஊடகங்கள் வர்ணித்து உசுப்பேற்றின. எனவே இரண்டு தலைவர்களும் தத்தமது மான அவமான கௌரவப்பிரச்னையாகக் கருதி இந்த 14 தொகுதிகளிலேயே தேர்தல் முடியும்வரை முகாமிட்டிருந்தார்கள். தலைவர்கள் என்றால் அவர்கள் தனிமனிதரல்லவே? எனவே அவர்களது மனைவி, துணைவி, உபமனைவி, துணைத்துணைவிகளும் அவர்தம் பிள்ளைச் செல்வங்களும், அடுத்த ஜென்மத்தில் உடன்பிறக்கக்கூடிய சகோதரிகளும் இந்தத் தொகுதிகளுக்குள் சூறாவளியென சுழன்றடித்து பிரச்சாரம் செய்தார்கள்.

இதனிடையே, நாய்க்கும் கழுதைக்கும் தலைவர்களிடம் ஏற்பட்டிருக்கும் மவுசைப் பார்த்து மிரண்டு போன தொண்டர்கள், பிற்காலத்தில் அவை அமைச்சர் உள்ளிட்ட பெரிய பொறுப்புகளுக்கு வரக்கூடும் என்று எதிர்பார்த்து இப்போதிருந்தே புதுமரியாதை காட்டத் தொடங்கினர். அது சிலவேளைகளில் தலைவர்களே பொறாமைப்படுமளவுக்கும் சென்றது. எப்படியாயினும் தான் கழுதையாகவோ நாயாகவோ மாறினால் மட்டுமே தலைவரின் கடைக்கண் பார்வை தன்மீது படும் என்ற எண்ணமும் தொண்டர்களிடையே வலுத்துவந்தது. ஒருவர் ஆணாகவோ பெண்ணாகவோ அரவாணியாகவோ மாறிவிட முடியும். ஆனால் இயற்கையாலோ அயற்கையாலோ இதுவரை ஒரு மனிதன் கழுதையாகவோ நாயாகவோ மாறியதாக வரலாறில்லை. எனவே விட்டலாச்சாரியா படத்தின் மந்திரவாதியால் சபிக்கப்பட்டவர்களைப் போல வேறுவழியின்றி அவர்கள் தம்மை கழுதையாகவோ நாயாகவோ பாவித்துக்கொண்டு நாலுகாலில் நடக்கத்தொடங்கினர். தலைவர்கள் காரில் போகும்போது சக்கரத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குவதில் அவர்களுக்கு பயிற்சியிருந்தாலும் இப்படி குனிந்து நடந்து பழக்கமில்லை. முதுகுத்தண்டில் வலி தெறித்தது. அப்போதுதான் தங்களுக்கும் அப்படியன்று இருப்பதே பலருக்கும் நினைவில் வந்தது. ஆனாலும் அதை வைத்துக்கொண்டு இனி செய்வதற்கு ஒன்றுமில்லையென பல்லைக்கடித்தும் பச்சைமரத்தைப் பார்த்தும் வலியைப் பொறுத்துக் கொண்டார்கள். உஸ்சென்று ஓய்வாக அவர்களால் இப்போது உட்காரக்கூட முடியவில்லை. பிராணிகளைப்போல வளைந்துவிட்ட உடம்பை ஒருக்களித்து கிடத்தத்தான் முடிந்தது.

எல்லாவற்றுக்கும் உச்சமாக அ கட்சி தொண்டர்கள் கனைத்தும் காகிதம் தின்றும் சாம்பலில் புரண்டும் தாங்களும் கழுதைகள்தான் என்று நிரூபிக்க முயன்றுகொண்டிருந்தனர். ஆ கட்சியினரும் சளைத்தவர்களில்லையே? அவர்கள் கம்பத்தைக் கண்டுவிட்டால் உடனே காலைத்தூக்கிக் கொண்டு... தாங்களும் நாய்தான் என்று நம்பவைக்க பாடாய் பட்டுக் கொண்டிருந்தார்கள். பவ்யமாய் வாலாட்டுவதாக கற்பிதம் செய்துகொண்டு அவர்கள் இடுப்பை ஆட்டி ஆட்டிக் காட்டியது மிகுந்த ஆபாசமாயும் மரியாதைக்குறைவாயும் இருந்ததால் சனங்களிடம் கல்லடியும் பட வேண்டியிருந்தது. இப்படி அ,ஆ கட்சியினர் அடித்த லூட்டியைப் பார்த்து கலக்கமுற்று தாங்களும் ஏதேனுமொரு விலங்கைப்போல நடந்து கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்று மற்ற கட்சியினரும்கூட நாலுகாலில் நடக்கத் தொடங்கினர். அவரவர் கற்பனைக்கேற்ற விலங்கை மக்களே உருவகித்துக் கொள்ளட்டும் என்று ஒத்திகைப் பழகாத கத்துக்குட்டி நடிகர்களைப்போல இந்த வேட்பாளர்களும் கட்சிக்காரர்களும் செய்த சேஷ்டைகளைக் கண்டு ஊர்உலகமே சிரித்தது.

கழுதைகளை வெற்றிபெறச் செய்வது மட்டுமல்லாது நாய்களைத் தோற்கடித்து மொக்கைப்பட்டம் கட்டினால்தான் தனது செல்வாக்கின் வீச்சை உலகுக்கு முழுமையாக உணர்த்தமுடியும் என்று கருதினார் அ கட்சித் தலைவர். தீவிரமாக களப்பணியாற்றும் நாய்களுக்கு சில எலும்புத் துண்டுகளை வீசி ‘ஒதுங்கிப்போகச்’ செய்வது, ஒவ்வொரு நாய்க்கும் ஒரு தெங்கம்பழத்தைக் கொடுத்து அதை என்ன செய்வதென்று தெரியாமல் உருட்டிக்கொண்டு அலைவதிலேயே கவனத்தை சிதறடிப்பது, வசப்படாத நாய்களை வெறிநாய் என்று முத்திரைக்குத்தி என்கவுண்டரில் போட்டுத் தள்ளுவது போன்ற சதித்திட்டங்களையும் தீட்டிக்கொண்டிருந்தார். இதேமாதிரி கழுதைகளைக் கவிழ்ப்பதற்கான சதித்திட்டங்களுடன் ஆ கட்சித் தலைவரும் தயாராகிக் கொண்டிருந்தார். சண்டைக்கு சிங்காரமில்லை. போட்டி என்றால் எல்லாவற்றிலும்தானே? லிபரல் பாளையம் மக்கள் யார் பக்கம் என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலில் கொள்கை கொத்தவரங்காய் என்றெல்லாம் பம்மாத்து செய்யாமல், ‘இந்தியாவின் திருமங்கலம் பாணியையும்’ அ, ஆ இரு கட்சிகளுமே கையாண்டன.

கழுதையை வேட்பாளராக நிறுத்தியதில் அ தலைவருக்கு கூடுதல் அனுகூலங்கள் இருந்தன. கழுதை முகத்தில் விழித்தால் காசு பணம் வரும் என்று ‘என்னைப் பார், யோகம் வரும்’ என்ற ஸ்டிக்கர் மூலம் ஏற்கனவே கழுதை பலவீடுகளிலும் கடைகளிலும் அறிமுகமாகி பிரபலமாகிவிட்டிருந்தது. எனவே வேட்பாளர் இன்னார்தானென்று தனியான அறிமுகம் தேவைப்படவில்லை. கழுதை ஜெயித்தால் காலை மாலை இருவேளையும் குடும்பத்துக்கு ஒரு லிட்டர் கழுதைப்பால் இலவசமாக தரப்படும். மருத்துவ குணம் நிறைந்த அதை நீங்கள் குடிக்கலாம் அல்லது உலகப்பேரழகி கிளியோபாட்ரா போல் அதில் குளிக்கலாம் என்ற வாக்குறுதி வாக்காளர்களிடம் வெகுவாக எடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆ கட்சி தலைவர் மனதில் வேறு கணக்குகள் ஓடின. எப்போதும் கும்பலாகவும் கோஷ்டியாகவும் புடைசூழ அலைகிற குணம் ஏற்கனவே நாய்களுக்கிருப்பதால் அவை அரசியலுக்கு வந்தது வெகு இயல்பானதுதான் என்பது அவர் கருத்து. யாரைக் குதற வேண்டும் யாரிடம் குழைய வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்கும் இந்நாய்கள் அரசியலுக்குள் லாவகமாகப் பொருந்திவிடும் என்பதும் அவரது யூகம். அதன்றி, அரசியலுக்குத் தேவையான தந்திரத்தையும் வேட்டையாடும் சாதுர்யத்தையும் தமது முன்னோர்களான ஓநாய்களிடமிருந்து நாய்கள் வழிவழியாகப் பெற்றிக்கக்கூடுமாதலால் நாய்களைக் கொண்டு நிறைய காரியம் சாதிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு துளிர்த்திருந்தது. கறியை நாம் தின்றுவிட்டு எலும்பை மட்டும் வீசினாலேயே வாலாட்டுகிற இந்த நாய்களை எம்.பியாகவும் ஆக்கிவிட்டால் அவை காலகாலத்துக்கும் விசுவாசமாய் இருக்கும் என்பதும் அவருக்கு உவப்பாயிருந்தது.

அ,ஆ தலைவர்கள் என்ன நோக்கத்திற்காக இப்படி கழுதைகளையும் நாய்களையும் நிறுத்தியிருந்தாலும் லிபரல்பாளையத்திலுள்ள கழுதைகளும் நாய்களும் இவ்விசயத்தை சீரியசாகவே எடுத்துக்கொண்டன. இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 4000 ஆண்டுகளுக்கு முன்பே கழுதையினம் தோன்றியிருந்தாலும் உலக வரலாற்றில் இப்போதுதான் முதன்முறையாக ஏழு கழுதைகள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள எந்தக் கழுதையும் தயாராயில்லை. உலகம் முழுவதுமிருக்கிற சற்றேறக்குறைய 44 மில்லியன் கழுதைகளின் சார்பாகவே தாங்கள் போட்டியிடுவதாக இக்கழுதைகள் கனைத்தன. அமெரிக்க ஜனநாயகக் கட்சிகூட கழுதையை சின்னமாகக் கொண்டிருக்கிறதேயொழிய ஒருமுறைகூட ஒரு கழுதையையும் வேட்பாளராக இதுவரை அறிவித்ததில்லை. உலகிலேயே கழுதைகளுக்கென்று மட்டுமே தனியாக ஒரு சரணாலயத்தை நடத்திவருகிற இங்கிலாந்திலும்கூட இவ்வாறான முயற்சி மேற்கொள்ளப்பட்டதில்லை. அந்தவகையில் லிபரல்பாளையத்தில் பெரும் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவே கழுதைகள் கருதின. ஒவ்வொரு தேர்தலின்போதும் மலைகிராமங்களுக்கு வாக்குப்பெட்டியை சுமந்துபோகவும் பிறர் சவாரி ஏறவுமே இதுவரை பயன்பட்டு வந்த கழுதையினம், நாட்டை ஆளவும் தகுதி படைத்தது என்பதை நிரூபிக்க இதுவே தக்க தருணம் என்று அறிவித்த லிபரல்பாளையம் கழுதைகள் நலப் பேரவை, எப்பாடுபட்டேனும் தம்மினத்தின் சார்பாக போட்டியிடும் ஏழு கழுதைகளையும் வெற்றிபெற வைப்பது என்று களமிறங்கியது. கொண்டான் கொடுத்தான் உறவில்லை என்றாலும் ஒருகாலத்தில் ஒரேயினமாக இருந்த பாசத்தில் குதிரைகளும்கூட கழுதைகளுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தன.

உண்மையில் கழுதைகளின் போட்டியை சமாளிக்க முடியாமல் பிற கட்சிகள் திணறித்தான் போயின. இரவானால் கிளம்பிவிடுகிற கழுதைப் படை, அ கட்சியின் சுவரொட்டிகளை மட்டும் கவனமாக தவிர்த்துவிட்டு பிறகட்சிகள் ஒட்டிவிட்டுப் போகிற விளம்பர சுவரொட்டிகள் அனைத்தையும் விடிவதற்குள் தின்று தீர்த்துவிடும் உத்தியைக் கையாண்டன. சுவற்றில் எழுதப்பட்டிருந்த விளம்பரங்கள் மீதும் கழுதைகள் உரசிஉரசி இருந்தே சுவடே தெரியாமல் அழித்துவிட்டதால் இந்த ஏழு தொகுதிகளிலும் பிற வேட்பாளர்களின் சின்னங்களே தென்படவில்லை. தோல்வி பயத்தில் விளம்பரம் செய்யக்கூட வலுவற்று மற்ற கட்சிகளெல்லாம் சோர்ந்துபோய்விட்டதாக வாக்காளர்கள் கருதிக்கொண்டதால் கழுதைகளின் வெற்றி தவிர்க்கமுடியாததாகியது.

நாய்களும் சளைக்கவில்லை. பல்வேறு நாடுகளின் புராணங்களிலும் இதிகாசங்களிலும் ஒரு பாத்திரமாக பயின்று வந்திருக்கும் நெடிய வரலாற்றுப் பாரம்பரியம் தமக்கிருப்பதாக அவை குரைத்துக்கொண்டன. தங்களது இனத்தைச் சேர்ந்த லைகா என்ற நாய்தான் ராக்கெட்டில் ஏறி பூமியையே முதன்முதலாக சுற்றிப் பார்த்த ஜீவராசி என்று பெருமைப்பட்டுக் கொண்ட நாய்கள், தமது மோப்பசக்தியின் மகிமைகளைப் பற்றியும் விரிவாக பட்டியலிட்டிருந்தன. எஜமானர்கள் எந்த மொழியில் பேசினாலும் அவற்றை எளிதில் புரிந்துகொண்டு சேவகம் செய்யக்கூடிய தங்களது திறமையை வெளிப்படுத்த காலந்தாழ்ந்தேனும் கிடைத்திருக்கும் இவ்வாய்ப்பை தவறவிடக்கூடாது என்பதில் குறியாயிருந்தன. ‘வீட்டைக் காப்பதும் நாய்களே- இனி நாட்டைக் காப்பதும் நாய்களே’ என்று வேட்பாள நாய்கள் ஏழும் விடுத்திருந்த கூட்டறிக்கை பிற வேட்பாளர்களை கலங்கடித்தது.

பிற வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வரும் தொண்டர்களை தெருமுக்கிலிருந்தே துரத்தி அடுத்தத்தெருவுக்கு விரட்டியடிப்பது, அடுத்தத்தெருவிலிருக்கும் இன்னொரு குழு அதற்கடுத்த தெருவுக்கு விரட்டுவது என்கிற மிக முக்கியப் பொறுப்பை தெருநாய்கள் ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்படுத்தின. சும்மாவே தெருத்தெருவாய் மூச்சிரைக்க நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஓடித் திரிந்த இந்தத் தெருநாய்களுக்கு, இப்போது ஒரு நோக்கத்தை முன்வைத்து ஓடுவதில் சற்றே பெருமிதமும் இருந்தது. தங்களையும் விலங்குகளாக காட்டிக் கொள்ள நாலுகாலில் நடக்கப் பழகிய பிற கட்சியின் தொண்டர்களால் இம்மாதிரியான நேரங்களில் வேகமாக ஓடமுடியாமல் கடிபட நேர்ந்தது. எனவே அவர்களில் பலரும் தெருவில் நடமாடுவதை தவிர்த்து தேர்தல் பணிமனைகளிலேயே அடிபட்ட நாய்போல சுருண்டு கிடந்தனர். இவ்வாறாக நாய்கள் போட்டியிடும் இந்த ஏழு தொகுதிகளிலும் பிற கட்சிகளே போட்டியிடவில்லை என்கிற தோற்றத்தை தெருநாய்கள் ஏற்படுத்தியிருந்தன.

தெருநாய்கள் மட்டுமே இப்படி தேர்தல் பணியாற்றியதாக யாரும் நினைத்துக் கொள்ளக்கூடாது. காலையிலும் மாலையிலும் ஒன் அண்ட் டூ பாத்ரூம் போவதற்காக தெருவுக்கு அழைத்துவரப்படுகிற நேரம் தவிர ஏனையப் பொழுதுகளில் சீமான் அல்லது சீமாட்டிகளின் மடிவிட்டிறங்காது வளர்கிற செல்ல நாய்களும்கூட தம் பங்குக்கு வாக்கு சேகரித்ததை யாரும் மறந்துவிடக்கூடாது. அவை எஜமானர்கள் எனப்படும் தம் வளர்ப்புப் பெற்றோர்களிடம் அளவுக்கதிமாக கொஞ்சியும் வாலாட்டியும் அவர்களை தம்மினத்தின் ஆதரவாளர்களாக மாற்றியிருந்தன. தானாடாவிட்டாலும், நாய்களுக்கும் சதையாடும்தானே? எனவே அ கட்சித் தலைவர் வீட்டில் செல்லமாய் வளர்ந்து கொண்டிருந்த நாய்களும்கூட இந்த முயற்சியில் ரகசியமாய் ஈடுபடக்கூடும் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவித்திருந்தால் அவற்றைக் கண்காணிக்க தனிப்படை ஒன்றை அமைத்திருந்தார் அ கட்சித்தலைவர். இதனிடையே டால்மேஷன், அல்சேஷன், பாமரேனியன் போன்ற மேல்தட்டு நாய்களும் ஆதரவு தெரிவித்து அறிக்கை விடுத்திருந்தன. அண்டைநாடான இந்தியாவிலிருந்து ராஜபாளையம் மற்றும் சிப்பிப்பாறை நாய்கள் அனுப்பியிருந்த வாழ்த்துத் தந்தி களத்திலிருந்த நாய்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தந்தது.

ஆனால் இவை மட்டுமே கழுதைகளும் நாய்களும் வெற்றிபெறும் சூழலை உருவாக்கிவிடவில்லை. அறுபதாண்டுகளாக ஓட்டுப்போட்டு சலித்துப் போயிருந்த மக்களின் மனநிலையே உண்மையில் இதில் பெரும் பங்கு வகித்தது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் தக்கப்பாடம் புகட்டிவிட வேண்டும் என்று காத்திருந்த மக்கள், கழுதைகளும் நாய்களும் போட்டியிடுவதை பயன்படுத்திக் கொண்டு ஒரு மௌனப்புரட்சியை நிகழ்த்தத் தயாராகிவிட்டிருந்தார்கள். ஒரு மாறுதல் வேண்டும் என்று மக்களுக்கு தோன்றிவிட்டால் அவர்கள் கழுதையா குதிரையா என்று பார்ப்பதில்லை என்பதுதான் லிபரல்பாளையம் தேர்தல் களம் தெரிவிக்கும் செய்தியாக இருந்தது.

சின்னம் ஒதுக்கப்பட முடியாதளவுக்கு நூற்றுக்கணக்கான மனிதர்கள் போட்டியிடும்போது ஒரு மிருகத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் உங்களுக்கு ஏற்பட்டது என்று பொய்ஸ் அண்ட் புருடாஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு பல உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டுவதாயிருந்தது-

‘‘அதாவது, வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து 14 நாட்களுக்குள் தொகுதி முழுவதையும் இரண்டு மூன்றுமுறை சுற்றி வந்துவிடுகிற வேட்பாளர்கள் தேர்தலுக்குப் பிறகான ஐந்து வருடங்களில் ஒருமுறைகூட தொகுதி பக்கம் எட்டியும் பார்ப்பதில்லை. ஆனால் கழுதை அப்படியில்லை. அது எங்கும் போய்விடாது. கழுதை கெட்டால் குட்டிச்சுவர். அதற்கென்று தனியாக அலுவலகமோ உல்லாச பங்களாக்களோ தேவையில்லை. நாயும்கூட அப்படிதானே? அதன் வேலையே தெருத்தெருவாக அலைவதுதான். அது இன்றைக்கு எந்த வீட்டில் இருக்கிறதென்று தேடி நாம் எங்கும் அலைய வேண்டியதில்லை. அப்படியிப்படி சுற்றினாலும் அதுவாகவே நம் கண்ணில் பட்டுவிடும்.

ஆனால் இந்த அருமையும் பெருமையும் தெரியாமல், கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று ஆ கட்சித்தலைவர் இளக்காரமாய் பேசிவருகிறார். கழுதைக்கு கடவுளிடம் எந்தப் பிரார்த்தனையுமில்லாத போது அது எதற்கு கற்பூர வாசனையைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும்? சரி ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், இவரைப் போன்ற ஒரு தலைவருக்கு மக்களோட பிரச்னைகள் எதுவுமே தெரியாதிருக்கிறபோது, ஒரு கழுதைக்கு கற்பூரவாசம் தெரியாமல் இருந்தால் என்ன குடி முழுகிவிடப் போகிறது? இவருக்கு சற்றும் குறைந்த முட்டாளல்ல அ கட்சித்தலைவர். அவர் நாயை ஜெயிக்கவைத்து நாடாளுமன்றம் அனுப்பினாலும் அது லொள்ளென்றுதான் குரைக்கும் என்று பதிலுக்கு ஏளனம் பேசுகிறார். அவர் நிறுத்தியிருக்கிற கழுதை மட்டும் ‘மாண்புமிகு சபாநாயகர் அவர்களே’ என்று பேசவா போகிறது? இது குரைக்குமென்றால் அது கனைக்கும். இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால் ஐந்து வருடத்தில் ஒரு கேள்வியும் கேட்காமல் நாற்காலியை தேய்த்துவிட்டு வருகிற இந்தக் கட்சிகளோட எம்பிக்களைவிடவும் இப்படி குரைத்துவிட்டும் கனைத்துவிட்டும் வருகிற நாயும் கழுதையும் மேல்தானே?. அதுவுமில்லாமல் ஒரு கழுதையோ அல்லது நாயோ அதனதன் சுபாவத்திலேயே சும்மா வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாதல்லவா? தொகுதி பிரச்னைகளுக்காக அவை கனைப்பதையும் குரைப்பதையும் கட்டுப்படுத்தும் வானளாவிய அதிகாரம் எந்த சபாநாயகருக்கும் கிடையாது.

இதைவிட முக்கிய விசயம், இவர்களைப்போல அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளைத்தான் தின்பேன் என்று ஒரு கழுதையும் அடம் பிடிப்பதில்லை. பசிநேரத்துக்கு ஏதேனும் நாலு காகிதம் போதுமானது. இதற்கென தனி ஏற்பாடுகூட தேவையில்லை. ஜனங்கள் கொடுக்கும் மனுக்களை வாசித்துப் பார்த்துவிட்டு அவற்றையே தின்று ஜீவித்துக்கொள்ளும். குப்பைத்தொட்டியில் எறிவதைவிடவும் இது உத்தமமானதுதான். தவிரவும், கத்தை கத்தையாக கவிழ்த்துக் கொட்டினாலும் எந்த ஒரு கழுதையும் கட்சி மாறாது. அந்தந்த வேளைக்கு தேவையானதைத் தவிர அடுத்தவேளைக்காகக்கூட எதையும் பதுக்கிவைக்காது. ஏழேழு தலைமுறையும் உட்கார்ந்து சாப்பிடுவதற்காக பினாமிப் பெயரில் அமுக்கி வைக்கவும் ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைக்கவும் ஒரு கழுதைக்கும் தெரியாது. தன் குடும்பத்து குஞ்சுகுளுவான்களுக்கெல்லாம் பதவி கொடுத்து கட்சியை கம்பனி மாதிரி நடத்தாது. காண்ட்ராக்ட் எடுப்பது கமிஷனடிப்பது என்பதெல்லாம் அறியாத இந்த அப்பாவிக் கழுதைகளைப் போலதான் நாய்களும். வாய் கொள்ளும் அளவே நாய் கொள்ளும். கவ்விக் கொண்டு போக முடியாத சைசில் நீங்கள் அமிழ்தத்தையே உருண்டை பிடித்துக் கொடுத்தாலும் அது சீண்டாது. ஆத்து நிறையத் தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும். இவர்களைப்போல குழாய் போட்டு உறிஞ்சியெடுக்காது அல்லது பாட்டிலில் அடைத்து விற்காது’’.

- இப்படி, தலைவர்கள் கொழுப்பெடுத்துப் போய் கழுதைகளையும் நாய்களையும் நிறுத்தினார்கள் என்றால் அதையே தமக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதென்ற மக்களின் தந்திரத்தால் ஏழு கழுதைகளும் ஏழு நாய்களும் எம்பிக்களாகி விட்டிருந்தன. முதன்முறையாக நாடாளுமன்றம் செல்லவிருக்கும் தம்மினத்தின் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தன தெருநாய்களும் கழுதைகளும். நாய்கள் ஒரு கட்சியிலும் கழுதைகள் வேறொரு கட்சியிலும் நின்று ஜெயித்திருந்தாலும் அது மனிதர்களுக்கெதிரான வெற்றி என்பதால் இரண்டுமே ஒன்றாகக் கொண்டாடுவதற்கு விலங்குகள் நலச்சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. தங்கள் மீது மக்கள் இவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பது முன்பே தெரிந்திருந்தால் எல்லாத்தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிட்டிருக்கலாமே என்ற விவாதம் அங்கு சூடு கிளப்பியது. ஒன்றும் கைமீறிப் போய்விடவில்லை, விரைவில் அடுத்தத் தேர்தல் வரவிருக்கிறது, பார்த்துக்கொள்வோம் என்று தீர்மானமாகியது.

விரைவில் அடுத்தத் தேர்தல் வருகிறது என்று சொல்லப்பட்டதற்கு காரணம் இல்லாமலில்லை. எந்தக்கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிட்டாமல் தொங்கு பாராளுமன்றம் உருவாகிவிட்டிருந்தது. அ, ஆ என்கிற இரண்டு பெரிய கட்சிகளுக்கும் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சீட் கிடைக்கவில்லை. இவற்றின் தலைவர்கள் 14 தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தியதை நல்வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு மற்ற கட்சிகள் கூடுதலாக சில இடங்களைப் பெற்றுவிட்டிருந்தன. இப்போது ஏதேனும் வித்தைகள் செய்து மந்திரிசபை அமைக்காவிட்டால் மீண்டும் தேர்தலை நடத்துவதைத் தவிர வேறுவழியில்லை. அப்படி தேர்தல் வந்தால் போட்டி கட்சிகளுக்கிடையிலானதாக அல்லாமல் மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமானதாக மாறிவிடும் ஆபத்திருப்பதை ஒரு கட்சியும் விரும்பவில்லை. விலங்குகளுக்கு ஆதரவான மனநிலையில் மக்கள் இருக்கும் இந்தநிலையில் இன்னொரு தேர்தலை சந்தித்து தோல்வியைத் தழுவுவதைவிட அரசியலில் தீண்டத்தகாத கட்சி எதுவுமில்லை என்ற புதிய / புளித்த வியாக்கியானத்தோடு எல்லாக் கட்சிகளும் சேர்ந்து ஒரு ஜம்போ உல்டா-புல்டா கூட்டணி மந்திரிசபை அமைப்பதென்று முடிவானது.

அவையின் மூத்த உறுப்பினர் தற்காலிக சபாநாயகராக இருந்து பதவி பிரமாணம் செய்து வைக்கும் வைபவம் நாடாளுமன்றத்தின் நட்டநடு மண்டபத்தில் நடைபெற்றது. நாடாளுமன்ற வரலாற்றில் நாய்களுக்கும் கழுதைகளுக்கும் பதவி பிரமாணம் செய்துவைக்கும் முதல் சபாநாயகர் என்பது தனக்கு பெருமையா சிறுமையா என்று யூகிக்க முடியாத குழப்பத்துடனேயே அந்த விழாவில் அவர் வீற்றிருந்தார். நடப்பிலிருந்த மும்மொழித் திட்டம் அவருக்கு கைகொடுக்கவில்லை. தவிரவும் அவருக்கு நாய்களின் பாஷையோ கழுதைகளின் பாஷையோ தெரிந்திருக்கவுமில்லை. ஆனாலும் நாய் என்றால் குரைக்கவேண்டும் கழுதை என்றால் கனைக்கவேண்டும் என்ற பொதுப்புத்தியிலிருந்து அவர் உறுதிமொழிப் (பிரமாண) பத்திரத்தை குரைத்தும் கனைத்தும் வாசித்துக் காட்டினார். நன்கு பேசத்தெரிந்த சபாநாயகர் ஏன் இப்படி தங்களைப்போல குரைக்கவும் கனைக்கவும் செய்கிறார் என்று திகைத்துப்போன நாய்களும் கழுதைகளும் அழுத்தம் திருத்தமாக நாடாளுமன்ற அலுவல்மொழியில் உறுதிமொழியை திருப்பிச் சொல்லின. கழுதைகளும் நாய்களும் தங்கள் மொழியில் பேசுவது கேட்டு ஒட்டுமொத்த சபையும் அதிர்ச்சியில் உறைந்தது. சற்றே சுதாரித்து சுயநிலைக்கு மீண்ட சபாநாயகர் உங்களுக்கும் பேசத் தெரியுமா என்றார். எம்.பி வேஷம் போட்ட பிறகு பேசித்தானே ஆகணும் என்றன கழுதைகளும் நாய்களும்.

எம்.பி. என்றால் பதவி, பொறுப்பு என்று இவ்வளவுகாலமும் கித்தாப்பு காட்டிக் கொண்டிருக்கையில், இந்த கழுதைகளும் நாய்களும் வந்த முதல் நாளிலேயே வேஷம் என்று கண்டுபிடித்து அம்பலப்படுத்தி விட்டனவே என்ற கடுப்பில் அதற்கப்புறம் அங்கு ஒருவரும் பேசவேயில்லை. ‘சைலன்ஸ் ப்ளீஸ்’ என்று சுத்தியைத் தட்டவேண்டிய சபாநாயகர் வழக்கத்திற்கு மாறாக ‘ப்ளீஸ் யாராச்சும் பேசுங்களேன்’ என்று கத்திக்கொண்டிருந்தார்.

நன்றி:தீராநதி


சாணிப்பத்தும் ஊதாங்குழல் ஒத்தடமும் - ஆதவன் தீட்சண்யா

     எங்கள் வீட்டிலிருந்து பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு நான்கு கிலோமீட்டர் தூரமிருக்கும்.  போகும் போதும் திரும்பும் ...