ஆமாம், ஆதியிலே மௌனம் மட்டும்தான் இருந்தது. ஆதாம் ஏவாளுக்கும் முன்பாக, அவர்களைப் படைத்ததாக துதிக்கப்படும் கடவுளுக்கும் கெடுத்ததாக சபிக்கப்படும் சாத்தானுக்கும் முன்பாக தோன்றிவிட்ட எனக்குத்தான் தெரியும் - ஆதியிலே மௌனம் மட்டும்தான் இருந்தது என்று. பஞ்ச பூதங்களிலிருந்தும் அமீபாவிலிருந்து என்வரைக்குமான எல்லா ஜீவராசிகளிலிருந்தும் எழும்பிய சீற்றமும் சலசலப்பும் ரீங்காரமும் விசும்பலும் இன்னபிற ஓசைகளும் அந்த மௌனத்தின் வெளிர்/அடர் இழைகளாகவே இருந்ததை நானறிவேன். அந்த மௌனத்தின் வனப்பையும் நிறத்தையும் வடிவையும் குழைத்து நான் எழுப்பிய ஒலிகளைத்தான் ஆதியில் வார்த்தைகள் இருந்தன என்று பின்னாளில் கொண்டாடத் தொடங்கியது இவ்வுலகம். ஆகவே, ஆதியில் வார்த்தைகள் இருந்தன என்பதும் உண்மைதான். ஆனால் அது என்னிலிருந்துதான் உருவானது என்பது மட்டுமே இவ்வுலகம் அறிய வேண்டிய மற்றொரு உண்மையாக இருக்கிறது.
அப்போதிருந்தே நான் இயற்கையோடும் அதனோடு இயைந்த மனிதர்களோடும் மட்டுமே பேசிவருகிறேன். வித்தியாசங்களோடும் அதனதனுக்குரிய தனித்துவத்தோடும் அருகருகாக அணைத்தும் பிணைத்தும் வாழ்வது என்கிற இயற்கையின் நியதிக்கு புறம்பானவர்களோடு மௌனமாகவேனும் பொழுதைப் பகிரும் கொடும்பேறு எனக்கு வாய்த்ததில்லை. நான் மனிதர்கள் சூழ இருக்கிறேன். மனிதர்களுக்குள் இருக்கிறேன். ஆகவே அவர்களோடு உரையாடிக் கொள்வதற்காக உருவாக்கிக்கொண்ட மொழியைக் கையாளும்போது மேலும் மனிதனாக நீடிக்க முயற்சிக்கிறேன். எனது இந்த மனநிலையோடு இசைமை கொள்கிற யாவரையும் எனக்கான வாசகர்கள் எனப் பெரிதும் கொண்டாடி மதிக்கிறேன். வடிவங்களைக் கட்டிக்கொண்டு உருண்டு புரளும் வலுவோ வீம்போ எனக்கில்லாதபடியால் என் சகமனிதர்களோடு உரையாட விரும்புவதை எவ்வெவ்வாறு தோன்றியதோ அவ்வவ்வாறே எழுதிக் கொண்டியிருக்கிறேன். மதியாழத்தையும் நுண்மான் நுழைபுலத்தையும் கவசமாகக் கொண்டிராத எனது எளிய வாசகர்களே அவற்றிலிருந்து கவிதையெனவும் உரைநடையெனவும் கண்டெடுத்து வகைப்படுத்தி தேவையானதை தம்வயமாக்கிக்கொள்கின்றனர். இவ்வாறு வடிவம் குறித்த திட்டவட்டமான பிரக்ஞைப்பூர்வமான முடிவுகளற்று நான் எழுதிவருவதால் இலக்கியப் புனிதத்திற்கு ஏதேனும் பங்கம் ஏற்படுமானால் அதன்பொருட்டான மகிழ்ச்சியை சகலருடனும் பகிர்ந்துகொள்வேன்.
கலைகளின் அரசி கவிதைதான் என்ற ஆரவாரம் எழுகிறபோதெல்லாம் நான் அச்சத்தினால் பீடிக்கப்படுகிறேன். மகுடம் தாங்கிய தலையுடன் கூடிய ஒரு அரசியை பெற்றெடுப்பது குறித்த ‘பிரசவ பயம்’ என்னை நிம்மதியிழக்கச் செய்துவிடுகிறது. ஒவ்வொரு கவிதையும் ஒரு பிரசவம் என்று நான் சொல்லாமல் இருப்பதற்கு இந்தப் பயமே காரணமாய் அமைந்துவிட்டிருக்கிறது. இதுவல்லாமல் கதை நாடகம் ஓவியம் இசையென இன்னபிற வடிவங்களில் எது கலைகளின் சேடிப்பெண், எது தாதிப்பெண் என்பது போன்ற குழப்பங்களுக்கும்கூட ஆட்பட்டுவிடுகிறேன். இந்தக் குழப்பங்கள்/ அச்சங்களைக் கடந்து எழுதுகிறவர்களின் பெரும்பாட்டையில் பயணிக்க முடியாமல் மலங்கமலங்க விழித்துக்கொண்டு நான் ஒதுங்கிவிடுவதற்கோ அல்லது பின்தங்கிவிடுவதற்கோ வேறுபிற காரணங்களும் இருக்கக்கூடும். ஆனால் சிறுபாதங்கள் கொண்டு நெடுந்தூரம் கடக்க வேண்டியதெப்படி என்கிற மலைப்போ திகைப்போ என்னை குலைத்துப்போட்டுவிடாதவாறு நடந்தேன், நடக்கிறேன்.
***
எதை யார் எப்படி எப்போது வெளிப்படுத்த வேண்டும் அல்லது கூடாது என்று கலை இலக்கியவாதிகளுக்கு கட்டளையிடும் சட்டாம்பிள்ளைகள் காலம்தோறும் இருந்துவருகிறார்கள். எந்த யோக்கியதாம்சத்தை வைத்துக்கொண்டு இவர்கள் இப்படி உத்தரவிடுகிறார்கள் என்று பார்த்தால் ஒரு கும்பலாக திரண்டிருக்கிற அசட்டு தைரியத்தில்தான். தாம் நம்பும் புனிதங்களிலிருந்து வழியும் சீழினை நக்கி பிழைப்பையோட்டும் இவர்கள் பலநேரங்களில் தம்மை பண்பாட்டுக் காவலர்களாகவும் கருதிக்கொள்கிற அபத்தங்கள் இங்கே குறைந்தபாடில்லை. இவர்கள் விதந்தோதி காக்க நினைக்கும் பண்பாடும் புனிதங்களும் திருவுருக்களும் வெகுமக்களுக்கு எதிரான அதிகாரத்தின் பிரிக்க முடியாத பகுதிகளாக இருக்கின்றன. அதிகாரத்தின் வாலாகவோ தொங்குசதையாகவோ இருக்கும் தங்களது உண்மைமுகத்தை அம்பலப்படுத்திவிடும் எந்தவொரு குரலும் வெளிப்பட்டுவிடாமல் அமுக்குவதே இவர்களது நோக்கமாயிருக்கிறது. இவ்வகையில் ஆட்சியாளர்களும் மத அடிப்படைவாதிகளும் இனவாதிகளும் சாதிவெறியர்களும் ஒரே கும்பலாக அணிதிரண்டு ஒற்றைக்குரலில் பேசுவதை நம்மால் கேட்கமுடிகிறது. இங்கு பேசுதல் என்பது நுட்பமான மொழிவயமானதில் தொடங்கி நேரடி வன்முறை வரையாக பல்வேறு நிறங்களில் உருக்கொண்டுள்ளது. முட்டுச்சந்தில் மறித்து நின்று போவோர் வருவோரை மிரட்டிக் கொண்டிருக்கும் பொறுக்கிகளின் கும்பலுக்கும் இவர்களுக்கும் உருவமும் பெயரும் இடமும்தான் மாறுபடுகிறதேயல்லாமல் சாராம்சத்தில் ஒரேகுணத்தைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். தாம் வைத்துள்ள தராசில் தாங்களே ஏறி உட்கார்ந்துகொண்டு எதிர்த்தட்டினை எடையற்றதாக ஊசலாடவிடும் இவர்களது மோசடியை கள்ளத்தராசு வைத்திருக்கும் வணிகர்கூட செய்யத்துணிவதில்லை.
ஒடுக்குமுறையை, சுரண்டலை, ஆதிக்கத்தை எதிர்க்கிற அல்லது அம்பலப்படுத்துகிற எழுத்துகளை ஒடுக்குவதற்கும் அழிப்பதற்கும் திரிப்பதற்குமான முயற்சி இங்கொன்றும் புதிதல்ல. அனல்வாதம் புனல்வாதம் நடத்தி எமது இலக்கியங்கள் நீரிலும் நெருப்பிலும் அழிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பிரதிகளில் இடைச்செருகல் செய்து திரிபடையச் செய்ததும் இதிலொருவகை. திருக்குறளின் ஓலைப்பிரதி ஆதித்தமிழனும் பூர்வ பௌத்தனுமாகிய அயோத்திதாசரின் பாட்டன் கந்தப்பனிடம் இருக்க அதை இயற்றிய திருவள்ளுவருக்கு பூணூல் மாட்டி விழுங்கிவிடவும்கூட முயற்சிக்கப்பட்டதை நாடறியும். பிற்பாடு ஒருகாலத்தில் பள்ளி சென்ற எங்களது புத்தகப்பைகளை எரித்து எம்மை கல்வியற்றோராக்க நடந்த வன்முறைகளை யார் மறக்கக்கூடும்? எல்லாம் மீறி நாங்கள் எழுதிவிட்டாலோ தங்களது கடவுளையும் மதத்தையும் நம்பிக்கைகளையும் திருவுருக்களையும் மொழியையும் பண்பாட்டையும் அவமதித்துவிட்டதாக கும்பல் சேர்ப்பார்கள். ஹூசைனின் ஓவியங்கள் எரிக்கப்பட்டதும், சப்தர் ஹஷ்மியின் உயிர் பறிக்கப்பட்டதும், சென்னை கலைக்குழுவின் நாடகம் தடுக்கப்பட்டதும், கோடிக்கணக்கான பக்கங்களைக் கொண்ட முப்பதாண்டுகால ஈழப்போரின் அவலங்களிலிருந்து ஒற்றைவரியைக்கூட எழுதுவதோ வெளியிடுவதோ கூடாதென மிரட்டுவதுமான இந்த கும்பல் கலாச்சாரத்தை எதிர்கொண்டுதான் ஒருவர் எழுதவேண்டியுள்ளது.
கடவுளை கேளிக்கை விடுதிக்கு அழைத்துச்சென்று சூதாடுதல் அல்லது மதுவருந்துதுல், மட்டற்ற குடியையும் கட்டற்ற காமத்தையும் கொண்டாடுதல், அரசியலை கிண்டலடித்தல், சாதியைக் கண்டித்தல் என்று ‘எல்லாம் கலந்துகட்டி’ பொத்தாம் பொதுவாக ‘புரட்சி/கலக/ அதிர்ச்சி’ மதிப்பீட்டுக் கவிதைகள் எழுதுவதிலும் என்னொத்தவர்களுக்கு உவப்பில்லை. அல்லது உள்ளொளியைத் தேடுவதாகவோ உறைகாலத்திற்குள் பாய்வதாகவோ எழுதி ‘இலக்கிய ஆன்மீகத்தை’ வளர்க்கும் பஜனைத்திட்டமும் எனக்கில்லை. எனவே உங்களுக்கெல்லாம் புரிந்துவிட்டால் என் கவிதைக்கு என்ன மதிப்பிருக்கிறது என்று மொழியைத் திருகி முறுக்குவதற்கும் நான் துணிவதில்லை. ஒவ்வொருத்தர் சட்டையையும் கோர்த்துப்பிடித்து ‘இந்தா பார்... உனக்குள்ளிருக்கிற துவேஷங்களும் வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும்’ என்று முகத்துக்கு நேரே காட்டுவதாக ஒரேயொரு கவிதையையாவது எழுதிவிட வேண்டும் என்பதே விருப்பம். அல்லது, யாவருக்குள்ளும் இருக்கிற அன்பை, கருணையை, சகமனிதர் மீதான கரிசனத்தை, சுயமரியாதையுணர்வை வெளிக்காட்டிவிடும் ஒரு கவிதையாகவும் கூட அது இருந்துவிட்டால் நல்லது. எழுதப்பட வேண்டிய அந்தக் கவிதைக்காக நானே எனக்குள் காத்திருக்கிறேன்.
***
நான் இதுவரை எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது. மிகவும் தொடக்கநிலையான தன்மையுடன் முதல்தொகுப்பிலிருந்த சில கவிதைகள் நீக்கப்பட்டுள்ளன. எனது கவிதைகள் சிலவற்றில் பிற்போக்கான/மரபான பார்வைகளை வெளிப்படுத்தும் சொற்களிருப்பதை நண்பர்கள் பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர். அவற்றை இன்றைய புரிதல்களைக் கொண்டு திருத்தியோ திரித்தோ வெளியிடுவது நேர்மையாக இருக்காது. எனவே காலத்தினூடே எனக்குள்ளிருந்த பிற்போக்குத்தனங்கள், பிழையான கருத்தியல்கள், போதாமைகள், தேடல்கள், புரிதல்கள், மாற்றங்கள் எல்லாம் அப்படியப்படியே பதிவாகட்டும் என்பதால் எழுத்துப்பிழைகள் மட்டுமே சரிசெய்யப்பட்டுள்ளன.
எனது ஆக்கங்கள் தொகுப்புநூலாக வெளிவருவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள சந்தியா பதிப்பகத்தார் எப்போதும் என் நெஞ்சிலிருப்பார்கள்.
மிக்க அன்புடன்,
ஆதவன் தீட்சண்யா
தாமிரபரணி படுகொலை தினம், 2011
ஒசூர்.

(சந்தியா பதிப்பகம் தற்போது வெளியிட்டுள்ள "ஆதவன் தீட்சண்யா கவிதைகள்" என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள முன்னுரை)