புதன், செப்டம்பர் 14

லிபரல்பாளையத்துக் கதைகள் - ஆதவன் தீட்சண்யா

...ஆகவே இனிவரும் நூற்றாண்டுகளுக்கான கதைகளை நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்

- அகங்காரம், தலைக்கனம், வாய்க்கொழுப்பின் பெருக்கத்தில் நான் இவ்விதமாக தலைப்பிடவில்லை. தன்னடக்கம், நாவடக்கம், அவையடக்கம் என்றெல்லாம் விதந்துரைக்கப்படும் பிணாச்சாரங்களை பயின்றொழுகுவதில் எப்போதுமே ஆர்வமற்றிருக்கும் நான் இப்படியானதொரு தலைப்பின்கீழ்தான் எனது கதைகளைப் பற்றி பேசமுடியும்

ஐம்புலன்களாலும் அறியப்படுகிற எதுவொன்றுக்குள்ளும் ஓராயிரம் கதைகள் ஊறித்திமிறுவதை பிறரைப்போலவே கண்டுவிட முடிகிற எனக்கு அவற்றில் எதை எழுதுவது எவற்றைத் தவிர்ப்பது என்று தேர்ந்துகொள்வது பெரும் சவாலாகவே இருக்கிறது. இந்தச் சவாலை எதிர்கொள்வதற்கான முனைப்பில் கடந்த மூன்றாண்டுகளில் ஒன்பது கதைகளை எழுதியிருக்கிறேன். இதற்கு முன்பும்கூட அமோக விளைச்சல் தரக்கூடிய தாவரமாகவோ ஆண்டுக்கு பத்து குட்டி ஈனுகிற  வீரிய கலப்பின விலங்காகவோ அல்லது ஒவ்வொரு புத்தகக்கண்காட்சிக்கும் ஒன்பது தொகுப்புகளை வெளியிட்டேயாக வேண்டுமென்ற விரதத்தில் எழுதிக்குவிக்கும் வல்லாளனாகவோ இருந்ததில்லை நான். நல்ல கதை படிச்சு நாளாச்சே என்ற துக்கத்தில் இதுவரை ஒருத்தர்கூட தற்கொலை செய்து கொண்டதில்லை என்று பிரபஞ்சன் ஒருமுறை சொன்னதை நல்லதொரு வழிகாட்டுதலாகவே கருதிக் கொள்கிறேன். ஆதவன் தீட்சண்யா கதைகளைப் படித்து நாளாச்சே என்ற துக்கத்திலோ படிக்க நேர்ந்துவிட்ட எரிச்சலிலோ யாரும் இறந்துபோனதாக இதுவரை எந்தத்தகவலும் வந்து சேரவில்லை. அப்படியே ஏதேனும் அகால மரணங்கள் நிகழ்ந்திருந்தாலும்  அதற்காக கண்ணீர் வேண்டுமானால் விடமுடியுமே தவிர கதை எழுதவோ எழுதுவதை நிறுத்திவிடவோ முடியாது. எழுதியே ஆகவேண்டும் என்று மனவெழுச்சி உந்தித்தள்ளும்போது மட்டுமே எழுதுகிறேன். எனவே ஸ்விட்ச் போட்டால் முட்டையிடுகிற பண்ணைக்கோழிகளை வளர்க்கும் பதிப்பகத்தார்களுக்கோ தொட்டியில் இங்க் நிரப்பி வைத்திருப்பவர்கள் என்று புதுமைப்பித்தனால் வர்ணிக்கப்பட்ட பத்திரிகைக்காரர்களுக்கோ நான் உகந்தவனல்ல

எழுத்தை எண்ணிக்கையோடு தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டியதில்லைதான். ஆனால் எழுதுவதற்கான மனநிலையை தக்கவைத்துக்கொள்வதுதான் மிகவும் தலையாயது எனத்தோன்றுகிறது. சிதறடிக்கப்படுவதற்கான எல்லா சாத்தியங்களும் உள்ளதொரு சூழலில் ஒரு முழுநேர எழுத்தாளனாக என்னை நானே முதலில் நம்புவதும் அதற்கிசைவான செயல்பாடுகளுக்குள் பொருந்தி இயங்குவதுமன்றி இந்த மனநிலையைத் தக்கவைத்துக்கொள்ள வேறொரு குறுக்குவழியும் என்முன்னே இல்லை. புறத்தேயிருந்து வருகிற குரல்களுக்கெல்லாம் செவிமடுப்பதற்காக எனக்குள் இருக்கும் எழுத்தாளனின் குரலை இரண்டாம்பட்சமாக கீழிறக்க ஒருபோதும் துணிந்ததில்லை நான். அன்போடும் காதலோடும் அதிகாரத்தோடும் பகையோடும் யார் உள்நுழைந்தாலும் எப்போதும் அவனுக்குரிய முதன்மையான இடம் கேள்விக்கு அப்பாற்பட்டது. அவனது ஆணைகளை நிறைவேற்றுவதுதான் எனது நிகழ்ச்சி நிரலில் எப்போதும் முன்னுரிமை பெற்று வந்திருக்கிறது. வேறு எவருடனும்விட எனக்குள் இருக்கிற அந்த எழுத்தாளனுடனேயே ஆத்மார்த்தமாக ஐக்கியப்பட்டிருப்பதால் அவனது கழுத்தை முறித்து ஒரு மூலையில் கிடத்திவிட்டு நிம்மதியாக வேறுவேலை பார்க்கப்போய் தற்கொலை முயற்சியில் என்னால் ஈடுபட முடியாது. அல்லது வேண்டும்போது உசுப்பிக் கொள்ளலாம் என்று நீள்மயக்கத்தில் அவனை ஆழ்த்திவிடவும் முடியாது. ஓய்ந்த நேரங்களில் கொஞ்சுவதற்கு அவனொன்றும் செல்லப்பிராணியல்ல, என்னில் பாதியுமல்ல மீதியுமல்ல அவனே நான்.
 ***
காய் நறுக்கும் கத்தியிலும்கூட ஒருதுளி ரத்தம் படிந்திருக்கிறது என்கிற உண்மையை மறந்துவிட்டு கடந்தகாலத்திற்குள் தலைபுதைத்துக்கொண்டு அதன் கூப்பைக் கூலங்களையும் கொலைவெறித் தாண்டவங்களையும்  ஆயுதங்களின் மினுமினுப்பையும் துருவையும் வெற்றி என்றும் வீரமென்றும் மகிமைப்படுத்தி வரலாறென எழுதிசபாஷ்என்று கைத்தட்டல் வாங்கும் எழுத்தாளராகிவிட மனம் கூசுகிறது. யாருடைய வரலாற்றையோ எழுதுவதான பாவனையில் என்னையும் மேன்மையாக எழுதிக்கொள்வதற்கான மலிவான உத்தியை, அது மலிவானது என்பதாலேயே நிராகரித்துவிடவும் வேண்டியிருக்கிறது. பாழ்கிணற்றுக்குள் வீசப்படும் ஒரு பாதாளச்சோவி அந்தக்கிணற்றின் அடியாழத்தில் புதைந்துகிடக்கும் இதுவரையறியாத நல்லதுங்கெட்டதுமான எத்தனையோ பொருட்களை மேலிழுத்து வருவதற்கு பதிலாக புதைச்சேற்றிலோ பாறையிடுக்கிலோ மாட்டிக்கொண்டு விடுவதைப்போல கடந்தகாலத்திற்குள் போய் புதைந்துவிடுகிற கெடுவாய்ப்பை என் கதைகளுக்கு நான் ஒருபோதும் வழங்குவதில்லை. மீட்டுருவாக்கம் என்ற பெயரில் நடைபெற்றுவிடுகிற போதையேற்றங்களை தவிர்த்து நேரடியான விசயங்களைப் பேசிவிடுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்திக்கொள்கிறேன்.

கடந்தகாலத்தை விமர்சனமற்று கொண்டாடுவதானது நிகழ்காலத்திலும் அதை தூக்கிச் சுமப்பதற்கு தரப்படும் ஒப்புதலாகிவிடும் என்ற எச்சரிக்கையுணர்வால் என் கதைகளை வேறுகாலத்திற்கு வலுவந்தமாய் கடத்திவந்துவிடுகிறேன். இன்னொரு காலத்திற்குள் தாவிப்போய் தங்கிக்கொண்டு கடந்தகாலத்தைச் சுழற்றிவிட்டுப் பார்க்கும்போது தான் அதன் கசடும் கபடமும் வன்மமும் வாதையும் புலப்படத் தொடங்குகின்றன. பூமிப்பந்து சுழல்வதற்கான மசகெண்ணெய்யாய் எவரின் ரத்தம் சொரியப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. வெற்றி முழக்கத்தை மட்டுமே கேட்கப்பழகிய அல்லது கேட்க விரும்பிய செவிகளில் கேவல்களும் விம்மல்களும் விரக்தியின் பெருமூச்சுகளும் கேட்கத் தொடங்குகின்றன. போர்க்களத்தில் மாண்டு போனவனின் தலைக்கவசத்தை (ஹெல்மட்) அடுப்பிலேற்றி பதுங்குக்குழிக்குள் கஞ்சி காய்ச்சிக் கொண்டிருக்கும் ஒரு மூதாட்டி, புளகாங்கிதக் காட்சிகள் எழுப்பிய புகைமண்டலத்திற்கூடாக மங்கலான சித்திரம்போலத் தெரிகிறாள். இதுவரை சொல்லப்பட்டு வந்துள்ளதுபோல நீங்களும் நானுமான இந்த மனிதகுலம் ஒருபோதும் இருந்திருக்கவில்லை என்பது நாளாந்தத்தில் அம்பலமாகிப்போகிறது. ஆகவே அறியப்பட்ட வரலாறு என்பதன் எதிர்த்துருவத்துக்குப் பெயர்கிற நான் அறியக் கிடைப்பவை மட்டுமே வரலாறல்ல என்று மறுக்கவும் துணிகிறேன். வரலாற்றை மறித்து நிறுத்தி புதிய வரலாற்றை எழுதிவிடமுடியுமா என்ற குயுக்தியான கேள்விக்கு நொடிகூட தாமதியாமல், நான் மறித்து நிற்பதே ஒரு புதிய வரலாறுதான் என்று குறித்துக்கொள்ளுமாறு தெளிவுபடுத்துகிறேன். அதாவது கடந்தகாலத்துக்குள் உறைந்து/ இறந்து முற்றுப்பெற்றுவிட்டதாக சொல்லப்பட்டு வருகிற வரலாற்றின் நிகழ்வெல்லையை அகட்டி இந்தப்பொழுதின் செயல்பாடு வரைக்குமானதாக - சமகாலத்தன்மையுடையதாக நான் விரிவுபடுத்துகிறேன். ( இங்கு நான் என்ற சொல் ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது). 

நிகழ்காலத்தின்மீது வினையாற்றுவது எனக்கு எப்போதுமே உவப்பானதுதான். நான் செய்யவேண்டியதும்கூட அதுதான். நான் வாழும் இந்தக்காலத்தை என்னவாக எதிர்கொள்கிறேன் என்பதுதான் என் வாழ்க்கையாக மிஞ்சப்போகிறது. எனவே ஒரு கண்ணியமான வாழ்க்கையை மேற்கொள்வதற்கு உகந்ததாய் நடப்புலகத்தை தகவமைத்துக்கொள்வதற்கான எனது பாடுகளை கதைக¬ளாக முன்வைக்கும்போது அவை நிகழ்காலம் பற்றிய வெற்றுப்பதிவாக இல்லாமல் விமர்சனமாகவும் முன்மொழிவுகளாகவும் அமைந்துவிடுவது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. அதனாலேயே அவை கடந்தகாலத்திற்குள்ளும் எதிர்காலத்திற்குள்ளும் ஊடாடும் தன்மை கொண்டதாகி திட்டவட்டமான கால எல்லையைக் கரைத்து நீர்மநிலைக்குத் தள்ளிவிடத் துணிகின்றன. முடிந்த நிகழ்வா, நிகழ்ந்து கொண்டிருக்கிறதா, வரப்போகிற காலத்திற்கானதா என்று அறுதிப்படுத்திக் கொள்ள முடியாததாக, காலம் குறித்த தீர்மானங்களையும் வரையறைகளையும் சிதைப்பதன் வழியே பெருமிதங்களின் பதக்கத்தை வெறும் உலோகத்துண்டாக்கிவிட முடியும் என்பதற்காக கதைகளில் தெளிவற்றதானதொரு காலத்தையே வெளிப்படுத்துகிறேன். திட்டமிட்ட சூத்திரங்களின் வழியான செயல்பாடாக அல்லாமல் மனவமைப்பின் இயல்பிலிருந்து என் கதைகள் வெளிப்பட்டுள்ளனவா என்று மதிப்பிடும் வாசகரின் உரிமையை முழுதாக மதித்து ஒதுங்கி நிற்கிறேன்
காலத்தைப்போலவே இடமும்கூட எனது கதைகளில் தெளிவற்றே காணப்படுவதற்கு நியாயமான காரணங்கள் உண்டென்றே நம்புகிறேன். பரந்த இந்த உலகத்தில் எது என்னுடைய இடம் என்று முன்பொரு கவிதையில் எழுப்பிய கேள்விக்கு பொறுப்பான பதிலளிக்கும் திராணியையும் நேர்மையையும் இந்த உலகம் இன்னும் ஈட்டிக்கொள்ளாத நிலையில், இடம் என்பது குறித்து தீர்மானமாய் எதையும் சுட்டிக்காட்டி ஒரு வெங்காயமும் ஆகப்போவதில்லை என்கிற முடிவுக்கே என்கதைகள் வந்து சேர்கின்றன. நானும் என் கதைமாந்தர்களும் நடமாடித் திளைக்கும் இயல்புரிமை மறுக்கப்பட்ட உருவ அருவ வடிவிலான எல்லா இடங்களும் பாழ்மண்ணாய்ப் போகக்கடவது என்று மண்ணைவாரித் தூற்றி நான் சபிப்பதற்கான அவசியமின்றியே அவை நிலைதிரிந்து அழிகின்றன. ஒவ்வொருவரது காலடி மண்ணையும் அபகரித்து விற்பதான ரியல் எஸ்டேட் பண்டமாகிவிட்டது நிலம். நல்லத்தண்ணி மொண்டு குடிக்க அனுமதிக்கப்படாது நாவறண்டுச் செத்த எம்மக்களின் கண்ணீரால் நாட்டின் நீர்நிலையெங்கும் உப்பேறிக் கரிக்கிறது. மக்களுக்காக சாலைகள் உருவானது போய் சாலைகளுக்காக மக்கள் உருவாக்கப்படுவதை வளர்ச்சி என்கிறது உலகமயம். நாட்டை இணைப்பதாகச் சொல்லிக்கொண்டு மக்களைப் பிளந்துபோட்டபடி ஊரின் முகங்களை உருச்சிதைத்து, ஓடிக்காய்ந்த ரத்தம்போல நீண்டகலும் இந்த தங்க நாற்கரச் சாலைகளில் ஒரு பாதசாரிக்குண்டான இடம் எங்கே என்று கேட்கிற குறைந்தபட்ச சொரணையுள்ள மக்களுக்காக நான் லிபரல்பாளையம், கக்கா நாடு, டப்புஸ்தான் என்று கற்பனைத் தேசங்களை உருவாக்குகிறேன்

சேர்த்து சேர்த்து பிசைந்து மாவின் ஒரு துகளைக்கூட வீணடிக்காமல் திரட்டியெடுத்து பயன்படுத்துகிற சாத்திரிகத்தோடு நம்மூர் புரோட்டாக்கடை மாஸ்டர்கள் இருக்கும்போது, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கிழித்த நமது மேதாவிகள் இந்தநாட்டின் மனிதவளத்தை வீணடிக்கிற- உபரி, உதவாக்கரை என்று கழித்துக்கட்டுகிற திட்டங்களையே வகுக்கிறார்கள். முட்டாள்கள் எங்கிருந்தும் உருவாக முடியும் அல்லது எத்தகைய பெரும் பொறுப்புக்கும் முட்டாள்களால் வரமுடியும் என்று நிரூபிப்பதற்காக அவர்கள் இவ்வாறெல்லாம் நடந்துகொள்கின்றனர் என்பதல்ல இதன்பொருள். அமெரிக்காவின் மலத்தை ஒபாமா அனுப்பிய சந்தனம் என்று பூசிக்கொள்ளவோ சட்னி என்று நக்கிப் பார்க்கவோ தோதான மனநிலையை உருவாக்குவது, முடிந்தால் நாடு கடந்த அமெரிக்க மாகாணமாக இந்தியாவை இணைப்பது என்கிற தெளிவான வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே அவ்வாறு இயங்குகிறார்கள். சொந்தக்காலை உடைத்து சூப்வைத்துக் கொடுக்கிற இந்த அடிமைப்புத்தி புதிய முகடுகளுக்கு ஏற்றிச்செல்வதாயல்லாமல் எத்தகைய பாதாளத்திற்குள் வீழ்த்தும் என்று எச்சரிப்பதற்காகவே எனது லிபரல்பாளையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  

காலத்தையும் இடத்தையும்போலவே எனது கதைமாந்தர்களும்கூட திட்டவட்டமான முகமில்லாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறிருப்பது இன்றையச் சூழலினால்தானேயன்றி எனது விருப்பத்தினால் அல்ல. தனி செல்போன், தனி மின்னஞ்சல், தனி இணையதளம், தனி கேபின்களில் வேலை, வீட்டுக்குள் தனி அறை, முகப்புத்தகங்கள் வழியே தனியான நண்பர்/எதிரிகள் குழாம் என்று தனி மனித அடையாளம் மிகுந்த முனைப்படைந்துள்ளதைப்போல தோற்றம் காட்டினாலும் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள வகைமாதிரிகளுக்குள் ஒன்றை தேர்வு செய்து முகமழித்துக் கொள்கிறவர்களின் தொகுப்பாக சமூகம் இருக்கிறது

யாரோ வடிவமைத்துத் தருகிற வாழ்முறையை கேள்விகளற்று ஏற்றுக் கொள்கிறோம். நமக்கென்று தனியான சுவை இல்லை. எந்த வசம்பு வைத்து தேய்த்தாலும் சூடு திரும்பாத அளவுக்கு மறத்துப்போய் வாய்க்குள் கிடத்தப்பட்ட பிணத்தைப் போலிருக்கிறது நாக்கு. ஆடையலங்காரம், வாழ்வியற்சாதனங்கள் எல்லாவற்றிலும் ஏதோவொரு பன்னாட்டுக் கம்பனியின் உள்ளூர் முகவரைப்போல ஒவ்வொருவரும் மாற்றப்பட்டுள்ளோம்அட்டை என்றால் உறிஞ்சுவதுதான் என்பதன் முழுப் பொருளில் கடனட்டைகள் புழக்கத்திலுள்ளன. இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்தியாவில் ரூபாய் புழக்கத்திலிருக்கும் என்ற சந்தேகம் எனக்கு சமீபகாலத்தில் வலுத்துள்ளதுசாமிப்படம் பொறித்த டாலரைக்கூட பார்த்திராதவர்களின் இந்த நாட்டில் அமெரிக்க டாலர் பற்றியே இப்போதெல்லாம் அதிகமும் பேசப்படுகிறது

என்னவிதமான முழக்கங்களை எழுப்பினாலும் யார் யாருடைய உழைப்பை சட்டப்பூர்வமாகவும்/விரோதமாகவும் திருடுவது என்பதே இங்கு இப்போதும் அடிப்படையான மோதலாக இருக்கிறது. இந்த திருட்டை தீவிரப்படுத்திக் கொள்வதற்கான உத்தியாகத்தான் உலகமயம் தனியார்மயம் தாராளமயம் என்கிற பொருள்மயக்கம் தருகிற சொற்பயன்பாடுகள். இதில் மனிதமுகம் என்றொரு மண்ணாங்கட்டியும் கிடையாது. என் கதைமாந்தர்கள் இந்த ஆளும் வர்க்க கருத்தியலுக்கு தோதான மந்தை மனநிலையைக் கொண்டவர்களாகவும் அதை எதிர்க்கிற கூட்டுமனநிலையை வெளிப்படுத்துகிறவர்களாகவும் இரு பெருங்கூறுகளாகப் பிரிந்து வாதிட்டுக் கொள்கின்றனர். அந்த இருதரப்பாரும் ஒருவரையொருவர் பகடி செய்கின்றனர். பழிப்பு காட்டுகின்றனர். வெற்றி கொள்ளவும் வீழ்த்தியடிக்கவும் கமுக்கமாக பல திட்டங்களைத் தீட்டுகிறவர்களாகவும் இருக்கின்றனர். கழுத்தறுப்பும் கால்வாரலும் திறமையென்று கொண்டாடப்படுவதை மௌனமாய் ஏற்கிறார்கள்- எப்போதாவது எதிர்க்கவும் செய்கிறார்கள். உயிர் உட்பட எல்லாமே பண்டமாக மாற்றப்பட்டுவிட்ட இங்கு தேர்தலோ வாக்குரிமையோ அல்லது இன்னபிற  தார்மீக விழுமியங்களோ வேறொன்றாக இருப்பதற்கான வாய்ப்புதான் என்னவென்று மலைத்துப் போகிறார்கள். வாக்குவங்கி என்று யூகத்தில் பேசப்பட்டதெல்லாம் பின்னுக்குப்போய் ஒட்டுமொத்த சமூகமுமே வாக்குச்சந்தையாகிவிட்ட நிலையில் அவர்கள் தம்மிடமுள்ள கடைசிஆயுத்தையும் பாழடிக்கிறார்கள். மனிதர்களைத் தேர்ந்தெடுத்து ஏமாந்தது போதுமென்ற முடிவுக்கு வருகிற என் கதைமாந்தர்கள் ஒரு மாறுதலுக்காக நாயையும் கழுதையையும் தங்களது பிரதிநிதிகளாக பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைப்பதையோ, புஷ் படம் அச்சடிக்கப்பட்ட ஆணுறைகளை அரசாங்கம் புழக்கத்திற்கு விடுவதையோ மிகைப்படுத்தப்பட்ட விசயங்களாக யாரேனும் வாதிடக்கூடும்

எதுவும் மிகைப்படுத்தப்படவில்லை நண்பர்களே. இன்றைய நிகழ்வுகள் நம்மை எதுநோக்கி இழுத்துப்போகின்றன என்பதை லிபரலப்பன், கன்ஸ்யூமரேஸ்வரி, பரிதாபசுந்தரி, டாலராண்டி, வட்டியப்பன், காசுநாதன் உள்ளிட்ட எனது கதைமாந்தர்கள் எனக்காக சற்று முன்கூட்டியே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்- அவ்வளவுதான். இந்தக் கணிப்பு ஞானதிருஷ்டியினாலோ தீர்க்கதரிசனத்தினாலோ பெறப்பட்டதல்ல, மனிதனாயிருக்க முயற்சிப்பதில் கிடைத்தது

-ஆதவன் தீட்சண்யா 29.06.2011

 (பூபாளம் புத்தகப்பண்ணை தற்போது வெளியிட்டுள்ள எனது மூன்றாவது சிறுகதை தொகுப்புக்கான முன்னுரை )

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...