சொல்லில்
அஹிம்சையும் நேரெதிர் குணக்கேடுகள் நித்யகர்மமாயும் கொண்டியங்கி,
ஊழிப்பசிக்கு உணவாக அணுகுண்டைத் தின்று, செரிமானமற்று தற்கொலையுண்டது
இந்தியா என்ற பண்டையநாடு. தன்னைக் குறித்து மற்றோரறிய தடயமொன்றையும்
மீத்தாது தணலிடையழிந்து அவலத்தின் கோரநர்த்தன மேடையென ஆய்வாளர்களால்
குறிக்கப்படுகிற பூமியிது.
பொசுங்கியழிந்த
பரப்பும் வெளியும் இதுகாறும் அனல் தணியாது புனல் குளிராது தகித்திருப்பது
குறித்து தமக்கேயுரிய முன்னுணர்வால் எச்சரிக்கை பெற்ற பறவையினங்கள்
இந்நாட்டின் வானெல்லைக்குள் பறப்பதை கவனமாகவே தவிர்த்து வருகின்றன. காலபருவ
மாற்றங்களின் உன்னதங்களை களித்தாட கடலும் மலையுங் கடந்து வான்நிரப்பி
வந்திறங்கும் பறவைகளுக்கான சரணாலயங்களுக்கு ஒருகாலத்தில் புகழ் பெற்றிருந்த
இந்நாடு இப்போது மரணத்தை மட்டுமே பரிசாகத் தர காத்திருப்பதையும் அவை
அறிந்தேயிருக்கின்றன. அடர்பனிப் பொழிவில் பாதை பிசகிய பயணியர் விமானமொன்று
உள் நுழைந்த கணத்திலேயே அணுக்குளிரில் விறைத்து பனிமூடிக் கிடக்கிறது.
மிச்சமீதி
ஏதுமிருப்பின் கொள்ளையிட்டு அள்ளிப்போக வந்த வாஸ்கோடகாமாவின் வம்சாவளி
லூஸ்கோடகாமாவின் கலம், இந்தியக் கடற்பரப்பை எட்டிய மாத்திரத்திலேயே
செத்தழுகிய நீர்ராசிகளின் துர்மணத்தில் வெடித்துச் சிதறியது. தெறித்து
விழுந்த அவனும் அவனது சகபாடிகளும் கொப்பரையாய் கொதித்திருந்த கடல்நீரில்
வெந்து மாண்டனர். இதன்பின் உலக அரசாங்கங்கள் ஒன்றுகூடி தம் குடிமக்கள்
யாரும் எல்லை கடந்துவிடாதபடி மின்சார தடுப்புவேலி அமைத்துவிட்டன.
இருப்பினும் அவை தத்தமது தண்டனைச் சட்டங்களை திருத்தி மரண தண்டனைக்குப்
பதிலாக இந்திய எல்லைக்குள் விரட்டி குற்றவாளிகள் தாமே செத்தொழியும் புதிய
அருள்நெறியை கடைபிடிக்கின்றன.
இத்தனைக்குப்
பிறகும் தவிப்பும் தாகமும் சாகச உணர்வும் பொருந்திய இளைஞர்கள்
இந்தியாவுக்குள் எப்படியேனும் காலடி வைப்பதை வாழ்வின் சங்கற்பமாய்
கொண்டுள்ளனர். அழகும் அகங்காரமும் கொண்டு ஆடித் திரிந்த வேசியொருத்தியின்
பிணத்தையோ கல்லறையையோ பார்ப்பதான குறுகுறுப்பு உலகெங்கும் ரகசியமாய் பரவி
வழிந்தது.
இந்நிலையில்,
தென்கோடி இந்தியாவின் தமிழ்நாடு என்ற மாகாணத்திற்கு இருபதாம் நூற்றாண்டின்
கடைசி பத்தாண்டுகளிலும் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் முதல்
பத்தாண்டுகளிலும், இந்தியாவில் வேறொரு பேரழிவை நிகழ்த்திய WTO
ஒப்பந்தத்தின்கீழ்- ஆணுறை, ஸ்டிக்கர் பொட்டு, கோழித்தொடை, மினரல் வாட்டர்,
பிளாஸ்டிக் சீட்டுக்கட்டு, செண்ட் பாட்டில், உருளைக்கிழங்கு சிப்ஸ்
இத்யாதிகளை விற்பதற்கு சென்று திரும்பிய வணிகனொருவனின் வம்சாவளியினர்,
அவனது புத்தகங்கள் கடிதங்கள் குறிப்புகள் ஆவணங்கள் உள்ளிட்ட சேகரங்களை
நேற்று பொதுஏலத்திற்கு கொண்டுவந்தனர். அழிந்த வசீகரம்
என்னும் பெயரில் இந்தியாவைத் தேடும் சர்வதேச நண்பர்கள் சங்கத்தார் மேற்படி
ஏலத்தில் இந்தியாவிலிருந்து அவ்வணிகன் களவாண்டு வந்திருந்த ஒரு ஓவியம்,
இருகடிதங்களின் நகல்கள் மற்றும் மிகப்பழைய கேமரா ஒன்று ஆகியவற்றை
கடும்போட்டிக்கிடையில் பெருந்தொகை கொடுத்து வாங்கியுள்ளனர். இந்தியாவை அறிய
விரும்புவோருக்கு உற்சாகமூட்டும் பொதுநலநோக்கில் அவைகுறித்து உலகின்
மொழியாவிலும் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட பிரதியே உங்கள்
முன்வைக்கப்படுகிறது.
இத்துடன்
இணைக்கப்பட்டுள்ள ஓவியத்தை கண்ணுறும் மாத்திரத்தில் எங்களைப்போலவே யாவரும்
அதிர்ச்சியடையக்கூடும். இதுகுறித்த மேல்விபரங்கள் ஏதுமற்ற நிலையில் அதை
விளங்கிக் கொள்ளவே முடியாதோ என்ற தவிப்பு பிடித்தாட்டியது. உலகெங்கும்
ஊடாடி அலைந்ததில், பதினேழு தலைமுறைகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த இலங்கைத்
தமிழர் ஒருவர், இவ்வோவியத்தின் இன்னொரு பிரதி முற்காலத்தில் (01.06.1981)
கொளுத்தப்பட்ட யாழ் நூலகத்தில் இருந்ததாயும் அபூர்வமாக சாம்பல்படுகையின்
அடியில் சேதாரமின்றி தப்பியிருந்த அது மீட்டெடுக்கப்பட்டு இப்போதும் வண்ணம்
மாறாமல் இலங்கை தேசிய ஆவணக் காப்பகத்தில் இருப்பதாயும் அங்கே இதுபற்றிய
கூடுதல் சங்கதியறியும் சாத்தியமுண்டென்றும் தெரிவித்து உதவினார்.
ஒட்டியிருக்கிறதா
வெட்டிக்கொண்டதா என்று அறுதியிட முடியாத ஸ்திதியில் தொட்டும்
தொடாமலிருந்து, இந்தியா அழிந்த பிறகு யாருமற்ற கடலில் அனாதையாய்
தத்தளித்துக் கிடப்பதைப்போன்ற தீவே இலங்கையாகும். இந்தியாவுக்கு முன்பே
அழிந்து போவதற்கான அபாயக்கூறுகள் திரிகோணமலையில் இருந்தும் எப்படித்
தப்பியது என்பது மர்மமாகவே நீடிக்கிறது. ஒருவேளை அழிவதற்கு அங்கே மிச்சமாய்
எதுவுமில்லை என்று இயற்கையே காட்டிய பரிவாகவும் இருக்கலாம். இனக்குழு
மோதலில் ஓயாது செத்தொழிந்தோரில் எஞ்சிய ஓரிருவர், மூதாதையர் லட்சியத்தை
முன்னெடுக்க பதுங்குகுழியிலிருந்து தற்போதும் சண்டையிட்டு வருகின்றனர்.
காலங்காலமாய் மாறிமாறி புதைத்துவைத்து இன்னும் வெடிக்காத கண்ணிவெடிகள்
நிரம்பிய அந்நாட்டுக்குள் உயிரை பணயமாக்கி எமது குழுவினர் நேரில் சென்று
திரட்டிய தகவல்களின் சுருக்க விவரம்: பச்சிலைச் சாறெடுத்து பாறையில் இழுத்த
முதல்கோட்டிலேயே யுகயுகமாய் உலவிவந்த ஓவிய சாஸ்திரக் கோட்பாடுகளுக்கு
மடங்காத நுட்ப நுணுக்கங்களும் கலையாளுமை பீறி வழிகிற மனப்பதிவுகளும்
ஒருங்கே பொருந்திய அதியற்புத ஓவியனாக வெளிப்பட்டவன் ஞானாகரன்.
காலகாலத்திற்கும் சித்திரக்கலையின் சிம்மாசனத்தில் அவனே வீற்றிருக்கப்
போகிறானென விற்பன்னர்கள் வியந்து பொறித்தனர் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும்
அப்போதே.
இரவும்
பகலும் தன்னையே உருக்கி தருவித்துக்கொண்ட பயிற்சியில் கலாதேவியின் பரிபூரண
கடாட்சம் விரல்நுனியில் தங்கி ஜாலம் புரிவதாய் தேசாதிதேசங்களில்
பரவியிருந்தது அவனது கீர்த்தி. உண்மையில் அவன் ஓவியனே அல்லவென்றும் அவனின்
ஒருபாகமே ஓவியமாய் உருகிப் படிகிறதென்றும் அதனாலேயே அவை அத்தனையொரு
தத்ரூபமாயிருப்பதாயும் நிலவும் நம்பிக்கையை அதீதமென்று மறுக்க இன்னும்
துணியவில்லை யாரும். வண்ணங்களை தன்னுயிரில் குழைத்து வரைவதே அவனது
பாணியென்பதால் அவன் எந்நேரமும் திரைச்சீலைகளில் மெழுகுபோல் இசைந்து
வழிகிறானென்பது சிலரது அபிப்ராயம்.
கருவூலங்களில்
ததும்பும் அணிமணியாபரண அலங்காரம் பூண்டு மன்னாதி மன்னர்களும் அவர்தம்
மனங்கவர் அரசிகளும் சித்திரக்கூடத்தின் வாயிலில் தவங்கிடந்தனர். நாடாளும்
அதிகாரம் படைத்த தாங்கள் ஒரு ஓவியனின் தீண்டலுக்குக் காத்திருப்பது
குறித்து அவர்களுக்குள் எந்த விகல்பமும் எழவேயில்லை. மந்திரத்தில் அசையும்
தூரிகையில் உயிர் பெற்றெழப்போகும் தம்முருவை கண்டுவிட ஆயுள் பரியந்தம்
காத்திருக்கவும் சித்தம். வளப்பமேறிய செல்வந்தர்கள் சிலரும் ஐஸ்வர்யம்
முழுதோடும் அங்கேயிருந்ததற்கான குறிப்புகளுண்டு. அழிவின் கிரணங்கள் தீண்டாத
உன்னத உலகுக்கான கனவை மாத்திரமே வரைபவனாக தன்னையறிந்த அவனது கையைப்
பற்றியிழுத்து முன்னும் பின்னுமான யுகங்களை நேர்நிறுத்தி வரையும் அதிசயத்
திறமையை அருளி நின்றது காலம்.
அவனோ
இனி எதனிமித்தமாயும் தூரிகையைத் தொடுவதில்லை என்று திடமாயிருந்தான்.
நால்வழியிலுமான நிர்ப்பந்தங்களை ஒன்றெனப் பாவித்து மறுத்துவந்தான்.
அதனிமித்தம் உடல் மன பொருள்ரீதியான இழப்புகளை முகச்சுளிப்பின்றி ஏற்கவும்
தயாராகிவிட்டான். உத்தரவுக்குக் கீழ்பணிந்து வரைய முடியுமானால் ஓவியராக
எவரும் மாறிவிடமுடியுமே...? அவ்வாறில்லையே சங்கதி. காத்திருப்பவர்களுக்காக
மனங்கலங்கி ஒருநிலையில் வண்ணக்குழம்புத் தட்டத்தை நெருங்கியதும் விரல்கள்
வெட்டுண்டவையாக நடுங்கித் துடித்தது கண்டு பின்வாங்க நேர்ந்தது. ஆசையும்
கலையும் வெவ்வேறு தடங்களில் போய்க்கொண்டிருப்பதை மறுபடி உணர்ந்தபோது
இனியொரு ஒற்றைப்புள்ளியையும் தன்னால் வரையமுடியாதென்ற தீர்மானத்திற்கு அவன்
வரவேண்டியிருந்தது. நாதாங்கியின் ஓசை எழாதவாறு உள்தாளிட்டுக்கொண்டு
கூடத்தை சுற்றிவந்தான்.
கனவைப்போல்
கண்ணிலாடுகின்றன தீட்டிய சித்திரங்கள். குளுங்காற்று வீசிய நாளொன்றில்,
வேட்டைக்கு வந்த மன்னன் இவனது விரல்நுனியில் விளையும் அற்புதங்களில்
சொக்கிப்போய் அரண்மனைக்கு தாங்கிவந்த காட்சியும் மின்னியோடுகிறது. சித்திர
சாஸ்திரத்தின் நுட்ப நுணுக்கங்களை பயிற்றிட பாண்டித்தியமானவர்கள்
வரவழைக்கப்பட்டனர். எந்தப் பயிற்சியும் அவனுக்கு அவசியமில்லை என்று
வந்தவர்கள் பவ்யமாய் சொல்லிப் போயினர். எதுவொன்றைக் குறித்துமான
சிறுவிபரங்களையும் அடையாளங்களையும் வைத்து அதன் தத்ரூபத்தை தீட்டுபவனாக
அவனது நுட்பம் வெளிப்பட்டது. இதுவரையிலும் அவன் பார்த்தேயிராதவர்களின் அங்க
அடையாளத்தையோ மச்சபாகத்தையோ சொன்னாலும் அல்லது கேசத்தையோ நகத்துண்டையோ
கொடுத்தாலும் அட்சரம் பிசகாது அச்சு நேர்த்தியில் அவர்களை வண்ணத்தில்
உயிர்ப்பிக்கும் அவனது மாயமறியாது திகைத்திருந்தனர் யாவரும். சாமுத்ரிகா
லட்சணம் வழியே உயிரை நிறுவும் அவனை விளங்கிக் கொள்வது குறித்த குழப்பம்
அரசவையை பீடித்தது.
வரைகையில்
தன்வசமில்லாது இயங்குவான். முன்கூட்டியே வரைந்துவைத்த ஒன்றின்மேல் வர்ணம்
பூசுதற்போல் தூரிகை அசைந்தோடும். பூர்த்தியானதும் கனவிலிருந்து மீண்டவனாகி
எட்டத் தள்ளி நின்று காண்கையில் எல்லாமே வாய்த்திருக்கும் சரியாய்.
திரைச்சீலையிலிருந்து கையெடுத்த பிறகெப்போதும் எதற்காகவும் மறுபடி
தீண்டுமாறு நேர்ந்ததேயில்லை.
சித்ரா
பௌர்ணமி. நிலவில் விளையாடிச் சுகித்து அப்படியே துயின்றுப் போனான்.
விழித்த பின்னும் கண்மேல் படிந்திருக்கிறது கனவொன்று: அவனது தாய் ஆற்று
மீனை அரிந்து கழுவிக் கொண்டிருக்கிறாள். மீனொன்றின் வயிற்றிலிருந்து
கறுப்புமின்னல் போன்று நுனிவெடித்த நீண்ட கேசம் வெளிவந்து அவனைச் சுற்றி
தழுவுகிறது.
கனவேயாயினும்
உண்மையாயிருக்குமோவெனத் தன்னைத்தானே தடவிப் பார்த்துக்கொண்டான். தன்மேல்
அந்த கேசம் படிந்திருப்பதான நினைப்பு சதாவும் ஓடிக்கொண்டேயிருந்தது.
நீராடுகையில் ஆற்றிலிருந்த அத்தனை மீன்களின் வயிற்றிலிருந்தும் அந்த கேசம்
கிளம்பி அவனில் பின்னியிழைவதான பிரமை தட்டி சிலிர்ப்பூட்டியது. இதற்கு முன்
எதுவொன்றினாலும் தான் இந்தளவிற்கு அலைக்கழிக்கப்பட்டதில்லை. இது மட்டும்
ஏனிப்படி என்று குழம்பவும் வேண்டியிருந்தது. மீள்வதற்கான மார்க்கம் அந்த
கேசத்திற்குரிய உருவை வரைந்து விடுவதுதான். கரையேறி கூடம் புகுந்தான்.
சொப்பனத்தில்
கிளைத்து நினைவில் அளையும் கேசத்தைப் பிடித்து அதற்குரிய உருவை வரைந்து
முடித்து தன்நினைவார்ந்து திரைச்சீலையைக் கண்டவன் சிரசில் இடியிறங்கினாற்
போன்று அதிர்ந்தலறினான். வர்ணத்தட்டத்தையும் தூரிகையையும் உதறியெறிந்தான்
பீதியில். குழைந்திருந்த வண்ணங்கள் குருதியாகி கொப்பளிப்பதாகத் தோன்றியது.
கூடத்தை நிறைத்து கமழ்ந்த தூபக்கிண்ணத்திலிருந்து பிணவாடை பொங்கி
திணறடிப்பதாய் மிரண்டான். நடுநிசியில் கண்ணோரம் அசையுமொரு விகாரத்தை
திகிலோடு பார்க்கும் சிசுவைப்போல பார்த்தான் ஓவியத்தை .
ஓவியத்தில்
பெண்ணொருவளின் உடல் மாத்திரமே வடிவிறங்கியிருந்தது. அதனிலும் மீனரித்த
காயங்களும் லாடமடித்த பாதக்குறடுகள் மிதித்துக் கன்றிய வடுக்களும்... ஐயகோ
இதென்ன முகம் இப்படி சிதைந்து... ஒருகண்ணையே காணவில்லை. பெயர்த்தெடுத்தாற்
போன்றிருக்கிறதே... ஹோ.. உலோகத்தால் துளைக்கப்பட்ட மண்டை பிளந்து
குருதிக்குள் முக்கியெடுத்தது போல்.... ஒருபக்க மார்பு அறுத்தெடுக்கப்பட்ட
ரணத்தைச் சுற்றிய பற்குறிகள் எவருடையவை? இன்னொன்றின் காம்பில் சுரந்த
பால்துளி ஈரம் காயாமல் மகவைத் தேடுகிறது. நிலைகொள்ளமாட்டாத தவிப்பில்
பிதற்றுகிறான். தனக்குத்தானே சமாதானம் கொள்பவனாகி, இப்படியான பிசகின் வேர்
தனது கவனக்குறைவுக்குள் தான் மறைந்திருக்கக்கூடுமெனக் கருதி மீண்டும்
மீண்டும் வரைந்தாலும் அதேபோல் முகம் சிதைந்து.... கடவுளே, என்ன நேர்ந்தது
இந்தப் பெண்ணுக்கு....?
தூரிகை
எடுக்கும் தைரியமற்று பீதியோடு தளர்ந்து கிடக்கிறான் கூடத்திற்குள்ளேயே.
ஒருபுள்ளியும் பிசகாத தனது ஓவியத்தில் இத்தனை பின்னங்கள் வந்தது
எவ்விதமென்று சித்தம் கலங்கிற்று. உயிரை பிடித்திழுக்கும் வாதையானது
உளைச்சல்.
சித்திரக்கூடத்து
மேல் உத்திரத்திலிருந்து வண்ண அருவியாய் நெகிழ்ந்து புரளும் திரைச்சீலைகள்
இப்போது கட்டை விரலசைத்து சவாலுக்கழைப்பது போலிருந்தது. பீடத்தின்
மீதிருக்கும் வண்ணக்குழம்புத் தட்டங்களும் தூரிகைகளும் அயர்ச்சியில்
வெளிறிக் கிடக்கின்றன. எல்லாத் திரைச்சீலைகளிலும் அப்பெண் அதேரூபத்தில்
நிறைந்திருக்கும் அவமானத்தில் அரற்றினான். ஆசீர்வதித்து அருள்பாவிய
கலாதேவியைக் கொன்றுவிட்டு துஷ்டதேவதை தன்னை ஆட்கொண்டுவிட்டாளோ என்ற சஞ்சலம்
விரட்டியடித்தது காரணத்தை கண்டறியுமாறு.
சாமுத்ரிகா
லட்சணத்தின் சொப்பன பிரதிமை கொண்டு வரைகையில் பூரணமடையாது விகார
ரூபங்கொள்ளும் சித்திரமானது பின்வரும் யுகமொன்றில் நிகழ்ந்தேறும்
உற்பாதத்தின் முன்னனுமானப் பதிவேயென்றும், கரையில் சிசு கதறித்
துடிக்கையில் தாயை நீருக்குள் வீழ்த்திக் கொல்லும் கொடூரமாக அந்நிகழ்வு
இருக்குமென்றும், மார்க்காம்பில் ஈரம் காயாமல் துளிர்த்திருக்கும் பால்
வழியாகவே தாம் இதை முன்னுணர்வதாகவும் நாலந்தா பல்கலைக்கழகத்தில் தங்கிப்
பயின்று வந்த சீன யாத்திரீகர் ஒருவர் கொடுத்த விளக்கத்தில் திருப்தியுற்று
நிலைதிரும்பிய ஞானாகரன், தான் கொண்டுவந்திருந்த அவ்வோவியத்தின் பிரதியொன்றை
அவருக்கே காணிக்கையாக்கிவிட்டு நாடு திரும்பினான். பின்னாளில் அந்த
யாத்திரீகர் தீட்சை பெற இலங்கை வந்தபோது அங்கே தந்து சென்றதே யாழ்
நூலகத்தில் இருந்ததும் தற்போது தேசிய ஆவணக்காப்பகத்தில் இருப்பதுமாகிய
இப்பிரதி என்றும் அறியமுடிந்தது. ஏனைய பிரதிகளும் உலகின் வேறுபகுதிகளில்
ஒளி மங்காதிருக்கக்கூடுமென குழு கருதுகிறது.
இரு கடிதங்களில் முதலாவது:
ஐயா,
பொருள்: தரமற்ற நீர் விற்பனை- புகார் பதிவு- தொடர்பாக.
வாய்
கொப்பளிக்கவும் இன்னோரன்ன தினப்படி காரியங்களுக்கும் தங்களின் மினரல்
வாட்டரையே பயன்படுத்த வேண்டுமென்ற வலிமையான விளம்பரத்திற்கு பலியானவர்களில்
நானுமொருவன். உலகின் நெ.1 மினரல் வாட்டர் என்று பீற்றிக் கொள்ளும் தங்களது
சரக்கு முறுக்காயில்லை என்று சொந்த அனுபவத்தின் பேரில்
குற்றஞ்சாட்டுகிறேன்.
கடந்த
15.08.1999 அன்று மணியாச்சி ரயில்நிலையத்தில் தங்களது மினரல் வாட்டர் 2
லிட்டர் பாட்டில் வாங்கினேன். வாங்கும்போதே, அது சாதாரணமாக இருக்கவேண்டியதை
விடவும் கனமாக (பொண கனம்...?) இருந்ததை உணர்ந்தாலும் அவசரத்தில்
வண்டியேறிவிட்டேன். உறங்கும் முன்பாக நீரருந்தும் பழக்கம் உள்ளவனாகையால்
பாட்டிலைத் திறந்த கணத்தில் மரண ஓலமும் அடிபட்ட முனகலும் ஆற்றமுடியாத
கேவலுமாக பெருங்கூச்சல் கிளம்பியது. ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொள்ளும்
ரயில் விபத்துக்கள் வாடிக்கையாகிவிட்ட இக்காலத்தில் பயணம் கொள்ள
வேண்டியிருக்கிறதே என்ற அச்சத்தோடு உறக்கத்தில் அரற்றிக்கொண்டிருந்த
சகபயணிகள், இக்கூப்பாட்டால் அலறிப்புடைத்து எழுந்தனர். தமது அச்சம்
உண்மையாகிவிட்டதோ என்று பதறி அபாயச்சங்கிலியை பிடித்திழுத்ததில் ரயில்
நின்றுவிட்டது. பக்கத்துப் பெட்டியிலிருந்து காவலர்கள் திமுதிமுவென்று
எங்கள் பெட்டிக்குள் ஏறியதும் கூப்பாடு அடங்கிவிட்டது.
நாயடிக்கிறவர்களைப்போல காவலர்கள் கையில், செருப்பாணி பதித்து முருட்டேற்றிய
ஆளுயுர குண்டாந்தடியிருந்தது.
பச்சைநரம்புகள்
தெரிய மழுங்கச் சிரைத்த முகத்தில் அச்சமூட்டும் வகையில் அடர்ந்த மீசையுடன்
பல்லை நறநறத்தபடி அதிகாரி போன்றிருந்தவர் காற்றைப் பார்த்து மிரட்ட
ஆரம்பித்தார். அடிச்சாலும் ஒதைச்சாலும் ஆத்துலத் தள்ளிக் கொன்னாலும்
உங்களுக்கு புத்தியே வராதா... மறுபடி ரகளைன்னா மனுசனாவே இருக்கமாட்டேன்...
என்றார். எப்பத்தான் மனுசனா இருந்திருக்கே... என்றது பாட்டிலுக்குள்ளிருந்த
குரல் . யார்ரா அவன்... தைரியமிருந்தா எதிர்ல வாடா... என்று லத்தியை
வீசினார் காற்றில். அது எதிரிலிருந்தவரின் மண்டையுடைத்து ரத்தம் குடித்து
சாந்தியடைந்தது. ஆவிகள் தாக்கியே மண்டையுடைந்ததாக புகாரொன்றை மிரட்டியெழுதி
வாங்கிக்கொண்டு காவலர்கள் கிளம்பும்போது, யூனிபாரம் போட்டிருக்கிற
ஆங்காரம், லத்தியும் துப்பாக்கியும் இருக்குற தெம்பு... உங்க ஆட்டம்
எத்தினி நாளைக்குன்னு பாக்குறோம்... என்று கறுவும் சத்தம் வந்ததும் அதிகாரி
பயரிங் ஆர்டர் கொடுத்தர். பதினாறு ரவுண்ட் சுட்டார்கள். என்கவுண்டரில்
எல்லா ஆவிகளையும் சுட்டுத்தள்ள நேர்ந்துவிட்டதாக அறிக்கை வெளியிடச்
சென்றுவிட்டனர் அதிகாரிகளும் காவலர்களும்.
வாட்டர்
பாட்டிலிலிருந்துதான் இத்தனைக் களேபரமும் தொடங்கியது என்பது பிறருக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை. உண்மை தெரிந்திருக்குமானால் என்பாடு
திண்டாட்டமாகியிருக்கும். ஆவிகளுக்கு அடைக்கலம் தந்த குற்றத்திற்காக தடா
கைதியாக்கி உள்ளே தள்ளியிருப்பார்கள். தானுன்டு தன் வேலையுண்டு என்பதை
தீவிரமாக நம்பி வாழும் ஒரு அரசாங்க உத்யோகஸ்தனின் எதிர்காலமே இருண்டு
பென்ஷன் பறிபோயிருக்கும்.
அன்றிரவு
முழுக்க உறக்கமேயில்லை. ஆவிகளை அணைத்துக்கொண்டு தூங்க யாராலாகும்?
வினோதமான சிற்றொலியும் வெகுவாக கலவரப்படுத்திவிட்டது. விவரிக்கமுடியாத
பதற்றத்தோடும் அச்சத்தோடும் வீடு திரும்பிய நான் சொன்னதை குடும்பத்தார்
யாரும் நம்பவேயில்லை. தெற்கே கொளுத்தும் வெயிலில் மறை கழன்றுவிட்டதாக
பரிகசித்தனர். வேறுவழியின்றி பாட்டிலை காட்ட வேண்டியதாகிவிட்டது.
தண்ணீரைவிடவும் அடர்த்தியான செந்நிற நீர்மத்தால் நிறைந்திருந்தது பாட்டில்.
மூடியைத் திறந்த மாத்திரத்தில் குபீரென்று கிளம்பிய ரத்தவாடையில்
எல்லோருக்குமே குமட்டலெடுத்துவிட்டது. கலங்கலான பாட்டில் முழுக்க நைந்த
சதையிணுக்குகள்... வளையல் துண்டு... பாட்டிலுக்கு வெளியிலும் நீண்டு
அசையும் கேசம்... காய்ந்த ரத்தப் பொருக்குகள்... ச்சே.. ஒருநாளிலும் இத்தனை
அருவருப்பைக் கொண்டதில்லை நாங்கள். எங்கள் ப்ராடக்ட் அப்படியானதில்லை
என்று எடுத்தயெடுப்பில் மறுத்துவிடுவீர்கள் என்பதால் பாட்டிலை இப்போதும்
வீட்டின் புழக்கடையில் புதைத்து வைத்திருக்கிறோம். ஆனாலும் அது வீட்டின்
நடுவில் அமைந்து எங்களை வதைப்பதாகவே அஞ்சுகிறோம். நடுநிசியில் நாய்கள்
திரண்டு ஊளையிடுகின்றன வீட்டின் முன். அன்றிலிருந்து ஒரு மடக்கு தண்ணீர்
குடிக்கவும் ஒம்பாமல் தாகமான தாகத்தில் தவித்திருக்கிறோம் குடும்பமே.
என்னையும்
எனது குடும்பத்தாரையும் இத்தனை அவதிக்கும் உளைச்சலுக்கும் ஆளாக்கியுள்ள
மினரல் வாட்டர் பாட்டிலின் உற்பத்தியாளர் என்ற பொறுப்பில் ஏழுநாட்களுக்குள்
தக்க சமாதானம் சொல்லாதபட்சத்தில், தங்கள்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை
எடுக்கப்படும் என்றறிக.
கடிதம் 2
ஐயா,
பொருள்: 17.08.1999 தேதியிட்ட தங்களது புகாருக்கு விளக்கமளித்தல் - தொடர்பாக.
சுத்தத்திற்கும்
சுகாதாரத்திற்கும் செலவழிக்கத் தயங்காத தங்களையொத்த நுகர்வாளர்களை நம்பியே
நாடுவிட்டு நாடுவந்து இங்கே தொழில் செய்கிறோம். தங்களது புகார் கிடைத்த
மறுகணமே தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் விற்கக் கொடுத்திருந்த
பாட்டில்கள் அனைத்தையும் திரும்ப எடுத்து கொட்டியழித்துவிட்டோம்.
தங்களைப்போன்ற மதிப்புமிக்க நுகர்வோரை திருப்திபடுத்த எத்தனை கோடி
நஷ்டத்தையும் ஏற்றுக்கொள்ள எமது நிறுவனம் சித்தமாயிருப்பதை செயல்பூர்வமாக
நிரூபிக்கவே இந்நடவடிக்கை என்பதை அங்கீகரிப்பீர்களென நம்புகிறோம்.
முன்னெப்போதும்
இல்லாத அளவிற்கு 23.07.1999 அன்று ரத்தமும் நிணமும் கலந்து மாசடைந்துவிட்ட
நிலையில் திருநெல்வேலி ப்ளாண்டை மூடுவது என்று அப்போதே முடிவெடுக்காத
கவனக்குறைவிற்காக உளப்பூர்வமாக வருந்துகிறோம். தங்களுக்கு அருவருப்பும்
அச்சமும் உருவாகுமளவுக்கு இனி தவறேதும் நிகழாதென்று உறுதியளிக்கிறோம்.
எனவே, தாங்களும் தங்களது சந்ததியும் தொடர்ந்து எங்களது மினரல் வாட்டரையே
வாங்கி ஆதரவளிக்க வேண்டுகிறோம்.
கேமராவைப் பற்றிய குறிப்புகள்:
தொழில்நுட்பத்
தரவுகள் கொண்டு இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சார்ந்த ரகமென
கருதப்படும் இக்கேமிராவும் அதன் புகைப்படச்சுருளும் இன்றளவும்
பயன்படத்தக்கதான அபூர்வ மகிமை கொண்டுள்ளன. இந்தியாவிலிருந்து கொண்டு
வரத்தக்க அனைத்தையும் தம்நாட்டிற்கு கொண்டுவந்த பிறகு, அந்நாட்டிலிருந்து
மணலையும் மூட்டைக் கட்டி கப்பலேற்றும் முயற்சியில் மேற்சொன்ன வணிகன்
ஈடுபட்டிருந்ததாக அவனது நாட்குறிப்பு தெரிவிக்கிறது. தண்ணீரை பாட்டிலில்
அடைத்து காசாக்குவதற்காக ஆறுகளை மடக்கி ஒட்டச் சுரண்டி முதலில் பாழாக்கி,
பின் ஆறுகள் வறண்டுவிட்டதாக மணலை கொள்ளையடிக்கும் தனது உத்திகளையும்
குறிப்பிட்டுள்ளான். தரணி காய்ந்தாலும் பரணி காயாது என்ற புகழுரையை
பொய்யாக்கிவிட்டு வெறும் மணற்காடாய் இழிந்துப்போன தாமிரபரணியை இதேரீதியில்
கொள்ளையிடுகையில் மண்டையோடுகளும் மனித எலும்புகளும் மணலோடு சரிவிகிதமாய்
நிரவிக் கிடைத்ததாகவும் நீர்த்தாரை காய்ந்து மின்னும் பாறையொன்றின்
இடுக்கில் இக்கேமராவை கண்டெடுத்ததாகவும் எழுதியுள்ளான்.
கழுத்தில்
மாட்டிக்கொள்ளும் வார்ப்பட்டை அறுந்து கிடப்பதை வைத்து, கேமராவை பலவந்தமாக
பிடுங்கியெடுத்து ஆற்றில் எறிந்திருக்கலாமென அனுமானிக்க முடிகிறது.
ஆனாலும் மேற்படிந்திருக்கும் ரத்தக்கறை, கேமராவை கையாண்டவருடையதா அல்லது
வேற்றாளுடையதா என்று பிரித்தறிய முடியவில்லை.
சாவை
நெருங்கும் வேகத்தோடு மக்கள் கொதியாக கிளம்பி வருவதும், இப்போது இங்குள்ளது
போலவே அப்போதும் வன்மம் கொப்பளிக்கும் கண்களுடைய போலிஸ்படை- முனையில்
செருப்பாணி பதித்து முருட்டேற்றிய ஆளுயர குண்டாந்தடிகளால் மறித்து
விரட்டியடிப்பதும், நிராயுதபாணியான மக்கள் போலிஸ் தாக்குதலுக்கு அஞ்சி
ஆற்றுக்குள் பாய்ந்து தப்பிக்கப் பார்ப்பதும் முதல் ஐந்து படங்களாக
பதிவாகியுள்ளன. கைக்குழந்தையோடு ஆற்றில் இறங்கி மறுகரை ஏற முயலும்
பெண்ணொருத்தியின் தலையைப் பிளக்கிறது போலிஸ் லத்தி. குழந்தையாவது
பிழைத்திருக்கட்டும் என்றெண்ணி கரைக்கு வீசுகிறாள். கருணையற்ற போலிஸ்காரன்
குழந்தையின் கதறலுக்கும் மனமிரங்காது அப்பெண்ணை லாடம் பதித்த தனது பூட்ஸ்
காலால் உதைத்து ஆற்றுக்குள் வீழ்த்துகிறான். கரையில் கதறும் தன் செல்லத்தை
காணப் பொறுக்காதவளைப்போல ரத்தம் பெருகிவழியும் தலையிலடித்துக் கொண்டு
அப்பெண் ஆற்றுக்குள் முழுகுகிறாள். ஆத்திரம் அடங்காத போலிஸ்காரன்
துப்பாக்கியால் சுடுகிறான். கன்னச்சதையோடு பெயர்ந்த அப்பெண்ணின் கண்ணொன்று
கரையில் விழுகிறது குழந்தைக்கருகில்.
அடுத்தடுத்து
எடுக்கப்பட்ட இப்படங்களுக்கு பிறகானவற்றில் சூரியவெளிச்சம் இல்லை. ஒருவேளை
இந்தக்கட்டத்தில் தான் கேமரா ஆற்றுக்குள் பிடுங்கி
வீசப்பட்டிருக்கக்கூடும். ஆற்றுக்குள் வீசப்பட்ட பின்னும் கேமரா தொடர்ந்து
படமெடுத்துக்கொண்டே இருந்திருக்கிறது. இதேபோன்று வீசியெறியப்பட்ட
நூற்றுக்கணக்கான கேமராக்கள் ஆற்றுக்குள் முழுகுவதையும் அடித்து வீழ்த்த
ஆற்றுக்குள் ஆள் துழாவும் கழிகளையும் இக்கேமரா படமெடுத்துள்ளது.
மேலெழும்பித் தப்பிக்க வழியற்று நீராழத்தில் பதுங்கியிருக்கவும் ஏலாமல்
மூச்சுமுட்டி மடிந்தவர்கள், காயங்களோடும் உடல் சிதைந்தும் பிணங்களாகவே
வந்து விழுந்தவர்கள் என்று கொலையின் பதிவாக இருக்கின்றன புகைப்படங்கள்.
ஆற்றுக்குள் மூழ்கி கைக்கு கிடைத்த கணக்கற்றவற்றிலிருந்து ஒரு குழந்தை
இரண்டு பெண்கள் பதினான்கு ஆண்களின் பிணங்களை மேலுக்கு தூக்கிக் கொடுக்கும்
காக்கி உடுப்பணிந்தவன் ஒரு பெண்ணின் மார்பை வெறியோடு கடித்தபின் குறுவாளால்
அறுத்தெறிந்துவிட்டு கரையேறுகிறான். எஞ்சியழுகும் பிணங்களை அரித்துத்
தின்ன பரபரக்கின்றன மீன்கள். அரவம்போல் உள்ளிறங்கும் ஒரு பெரிய பைப்,
நொதித்து நைந்த சதையிணுக்குகளையும் அப்பெண்ணின் ஊறியழுகிய
மண்டையோட்டிலிருந்து உதிரும் கேசத்தையும் நீரோடு சேர்த்து
உறிஞ்சியிழுக்கும் படங்களால் பதற்றம் கூடுகிறது.
யுகங்கள்
பலவாகிவிட்டதில் புகைப்படச்சுருளைக் கழுவி படியெடுப்பது
பெரும்பாடாகிவிட்டது. காலாவதியாகிப்போன தொழில்நுட்பத்தை இதற்காகவே மீண்டும்
புனர்ப்பித்தாக வேண்டியிருந்தது. ரத்தத்தில் கொதிக்கவைக்கப்பட்ட தேயிலைக்
கொழுந்தின் வீச்சமடிக்கும் இப்புகைப்படங்களின் வழியே தெரியவரும்
கொடூரத்தின் காலம் சற்றேறக்குறைய குஜராத்திற்கு முன்பானதென்றும்
வெண்மணிக்குப் பிந்தையது என்றும் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
ஒரு
நாட்டையே அடித்து உருமாற்றுமளவுக்கு வலுகொண்ட ஆயிரமான செருப்புகளும் ரத்தம்
தோய்ந்த கொடிகளும் கரையிலும் சாலையிலும் நிலைபிறழ்ந்துக்
கிடந்ததற்கப்புறம் என்னவாயின என்பதிலிருந்துதான் அழிவை துல்லியமாய்
அறியமுடியும் என்று கருதும் இந்தியாவைத் தேடும் சர்வதேச நண்பர்கள் சங்கம்,
இதன்பொருட்டு அவ்வாற்றுப்படுகைக்குள் புதையுண்டிருக்கும் மற்ற
கேமராக்களையும் அகழ்ந்தெடுப்பது எவ்வாறென்று ஆய்ந்துவருவதாக
அறிவித்துள்ளது. ஆய்வின் முழுவிபரமறிய www.azhinthavaseegaram.com
அதனை காண
பதிலளிநீக்குhttp://www.youtube.com/watch?v=TIWw49WMero&feature=results_video&playnext=1&list=PL8944B35A0E49A662
இதன் ஆறு பாகங்களையும் காணுங்கள்.