சாத்தான் மட்டுமே வேதம் ஓதும் - ஆதவன் தீட்சண்யாகூரையில் வைக்கப்பட்ட தீ
திகுதிகுவெனப் பரவி எரித்துக்கொண்டிருக்கிறது
என்வீட்டை

தசை கருகும் நெடியில் வெளி திணறுகிறது
தணலில் வெந்து கொண்டிருப்பது
படுக்கையாய்க் கிடந்த என்தாயாகவோ
நிறைசூலியான எனது மனைவியாகவோ இருக்கலாம்

நாங்கள் சேமித்துவைத்திருந்த விதைதானியஙகள்
வெடித்துத் தெறிக்கின்றன சோளப்பொரியைப்போல

என் அண்டைவீட்டார்
நீரையிறைத்துக் கொண்டிருக்கின்றனர் முன்ஜாக்கிரதையோடு
தத்தமது கூரைமீது

எவர்மீதும் சேதாரத்தை விசிறாமல்
தனக்குத்தானே குமைந்திறங்குகிறது சாம்பலாய் என்வீடு

யார்மனதும் தொந்தரவுக்காளாகாத வண்ணம்
இதுகுறித்த புகாரினை வெளிப்படுத்துவது எங்ஙனமென
ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருக்கிறான்
கூரைக்கு தீ மூட்டியவன்.

1 கருத்து: