ஆள்மாறாட்டம் -ஆதவன் தீட்சண்யா


இனியும் தள்ளிப்போடவேண்டாமென்று இரங்கி
பார்த்துவர போயிருந்த என்னை
அதீதப் பிரியங்களுடன் வரவேற்ற கடவுள்
ஐந்தாறு நாட்களாவது
விருந்தினனாக தங்கிப்போக வேண்டினார்
ஏழேழு லோகத்தையும் அண்டசராசரங்களையும்
இடையறாது பார்த்து இயக்கும் பொருட்டு
இமைக்கவே இமைக்காது
சிசிடிவி போன்று
ஓயாதொளிரும் அவரது கண்களின்
பொழிந்தணைக்கும் கருணையை தட்டிக்கழிக்க முடியாமல்
தங்கிப்போக சம்மதித்தேன
மேலோகமா பாதாளமாவென அறிந்துணராப் பாங்கில்
நட்சத்திர விடுதியின் வசதிகளோடிருந்த மாளிகையில்
எனக்கென்று அவர் நிர்மாணித்திருந்த அறை
பூமியைவிட விசாலமானது
ஒம்பாமல் போகக்கூடும் என்பதால்
பாற்கடலைத் தவிர்க்கச் சொன்ன கடவுள்
நீராடுவதற்கென வெதுவெதுப்பான நன்னீர்க்கடலையும்
உடுத்துவதற்கு நீராவியன்ன துகில்களையும்
ஏழுபுரவிகள் பூட்டிய ரதத்தை சவாரிக்காகவும் அருளினார்
தேவைப்பட்டதை
நினைத்தமாத்திரத்தில் வரவழைத்துக்கொள்வதற்காக
அங்கிருக்கும் நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் வகையில்
தனது சக்தியில் ஒரு பகுதியையும் கொடுத்து
என்னையும் தன்னைப்போல்
தற்காலிகமாய் ஆக்கியிருந்தார் கடவுள்
கடவுளைக் கொன்றுவிட்டு
அவரது இடத்தை நிரந்தரமாய் கைப்பற்றும் ஆசையை
இவ்விதமாக தூண்டிவிட்ட கடவுள்
நான் திரும்பவேண்டிய நாளின் இரவில்
காணாதொழிந்தார்
இமைக்கவே முடியாத என் கண்களால்
பூமியைப் பார்க்கிறேன்
நானாகச் சென்றுவிட்ட கடவுள்
உல்லாசமாய் சுற்றித்திரிகிறார் அங்கு.
***
 நன்றி: மலைகள்.காம்

4 கருத்துகள்: