மனவூற்று இச்செடிக்கு நீராகட்டும்... - ஆதவன் தீட்சண்யா
தோழர் அன்புசெல்வம் தொகுத்துபுலம் வெளியீடாக வரவிருக்கும் " டாக்டர் அம்பேத்கர் டைரி" என்ற நூலுக்கான முன்னுரை

 1.
‘‘அளவுமிகுந்த பாதுகாப்புணர்வை மேற்கொண்டு அழிந்துபோவதைவிட, அக்கறை மிகுந்த ஐயப்பாடுகளை எழுப்பிப் பிறர் பழிப்பதற்கு ஆளாவது மேலானது’’ - அறிஞர் எட்மண்ட் பர்க் அவர்களின் இவ்வரிகளை ஓரிடத்தில் மேற்கோளாக காட்டிய அண்ணல் அம்பேத்கர், உண்மையிலும் இவ்வரிகளின் உயிர்பெற்ற வடிவாக தன்னை உணர்ந்திருக்க வேண்டும். நிலவும் சூழலுக்குள் தன்னைப் பொருத்திக் கொள்வது அல்லது இணங்கிப்போய்விடுவது என்கிற சமரசப்பண்பு அறவே அண்டமுடியாத அளவுக்கு தகித்துக்கொண்டிருந்த அவரது போர்க்குணம் இந்த அக்கறைமிகுந்த ஐயங்களின் வழியாகவே வளர்ந்திருக்கக்கூடும். அறிவின் வலுவேறி ஆழ்ந்தகன்ற பார்வையால் முக்காலத்தையும் குறுக்குவெட்டாகவும் செங்குத்தாகவும் பகுத்தறிந்து அவர் எழுப்பிய ஐயங்கள் புறக்ணிக்க முடியாததாக, பதிலளித்தாக வேண்டிய நெருக்கடிகளைத் தரக்கூடியதாக அமைந்திருந்தன. பொத்தாம்பொதுவாக, இயல்பானதாக, தாயாப்புள்ளையாக தோற்றம் காட்டிய எல்லாவற்றையும் தோலுரித்துக்காட்டி அவற்றின் சார்புத்தன்மைகளை வெளிக்கொணர்வதால் ஒரு தனிமனிதர் என்கிற வகையில் தனக்கு நேரப்போகும் கெடுதிகள் எல்லாவற்றையும் அவர் அறிந்தே இருந்தார். பணிந்துபோய் தனிப்பட்ட முறையில் ஆதாயமடைகிற ஈனத்தனங்களை முற்றாக நிராகரித்து அதிகாரத்தை நோக்கி இடையறாது அக்கறை மிகுந்த சந்தேகங்களை எழுப்பி பழிச்சொற்களுக்கு ஆளாவதென்பதை அம்பேத்கர் விரும்பியே ஏற்றிருந்தார். எவ்வித தொந்தரவுமற்றுசௌஜன்யமாக(?)’ போய்க்கொண்டிருந்த ஆதிக்க கருத்தியல்கள் மீது அவர் இடையறாது எழுப்பிக்கொண்டே இருந்த இந்த அக்கறை மிகுந்த ஐயங்களின் வழியாகத்ததான் வரலாறு, பண்பாடு, மதம், அரசியல், தேசியம், அறிவியல், பொருளாதாரம் என்று எல்லாவற்றைப் பற்றியும் தனித்தறியும் ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணோட்டம் உருப்பெற்றது எனலாம்

2.  
தனது நலன்களுக்கான முழக்கங்களையும் நிகழ்ச்சிநிரல்களையும் ஒட்டுமொத்த தேசம்/ இனத்துக்கும் உரியது போன்ற தோற்றத்தோடு ஆதிக்கச்சக்திகள் முன்வைக்கும்போது அவற்றை அம்பலப்படுத்தும் துணிச்சலும் அரசியல் நேர்மையும் இன்றி பெரும்போக்குக்குள் கரைந்தும் முழுகியும் கும்பலில் கோவிந்தா போடும் சரணாகதிப்போக்கு பெருகிவரும் நாளில்அக்கறை மிகுந்த ஐயங்களை/ கேள்விகளை எழுப்பும் அம்பேத்கரின் பண்புமிகுந்த முக்கியத்துவமுடையதாகிறது. தனிமைப்பட்டுவிடக்கூடாது என்கிற சாரமற்றக் காரணத்தை சொல்லிக்கொண்டு ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள் ஆதிக்கச்சக்தியினர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்தும் நெளிந்தும் தமது சொந்த நிகழ்ச்சிநிரல்களை அமைத்துக்கொள்ளும் போக்கில் ஒரு பெரும் முறிப்பு தேவைப்படுகிறது. அம்பேத்கர் ஓரிடத்தில் குறிப்பிடுவதுபோலஉருகி மறையாமல் உயர்ந்து நின்று போக்கையே மாற்றுகிற ஆற்றின் பாறையாக சுயமான நிகழ்ச்சிநிரல்களை முன்வைத்து அதன்மீது காலச்சக்கரத்தை சுழலவிடுகிற வல்லமையை அடைந்தேயாக வேண்டியுள்ளது. சொல்பேச்சு கேளாதவர்கள், கீழ்ப்படியாதவர்கள், குதர்க்கவாதிகள், விதண்டாவாதிகள், குட்டையைக் குழப்புகிறவர்கள், நிம்மதியைக் கெடுப்பவர்கள், சீர்குலைவுவாதிகள், துரோகிகள், கோடாரிக்காம்புகள், சந்தேகப்பேர்வழிகள் என்கிற அவப்பெயர்களையும் பழிச்சொற்களையும் ஆதிக்கச் சக்திகளிடமிருந்து பெறுவதற்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒவ்வொருவரும் அவர்களது அமைப்புகளும் தயாராக வேண்டியிருக்கிறது.  

3.  
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பவற்றை ஆதாரமாக கொண்டு  கருத்தியல் தளத்திலும் களத்திலும் ஒரு முழுநேரப் போராளியாக இயங்கிய அம்பேத்கரது தனிப்பட்ட வாழ்வின் எல்லா நிகழ்வுகளும் இந்த நாட்டின் அரைநூற்றாண்டுகால நிகழ்ச்சிநிரலை தீர்மானிப்பதாயிருந்தன. எனவே அவரது வாழ்க்கை வரலாற்றை எந்தப்புள்ளியிலிருந்து வாசிக்கத் தொடங்கினாலும் அது இந்த நாட்டின் வரலாற்றின் ஒருபகுதியாக இருப்பதை கவனப்படுத்தும் தொடர்முயற்சியின் ஒரு கண்ணியாகஅம்பேத்கர் டைரிவெளிவருகிறது

4.  
இந்த சாதியச்சமூகம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைத்துவரும் அநீதிகள் புறக்கணிப்புகள் அவமானங்களின் ஒருபகுதியையே தனக்கும் இழைத்துவருகிறது என்பதை பரந்ததளத்தில் வைத்து ஏற்படுத்திக்கொண்ட புரிதலின் அடிப்படையில் - பாதிக்கப்பட்டவரின் செயற்பாட்டுணர்வை அவர் எட்டினார். அதாவது பாதிக்கப்பட்ட தன்னுணர்வை தன்னொத்தவர்களது கூட்டுணர்வின் பகுதியாக கண்டுணர்ந்து அதன்பேரில் தனது செயற்புலங்களை தீர்மானித்து தேர்ந்து கொண்டார். ஆகவே கல்வியாளராகவும் தத்துவவாதியாகவும் வரலாற்றாளராகவும் பொருளியல் அறிஞராகவும் சட்ட வல்லுனநராகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை அணிதிரட்டுகிறவராகவும் சமத்துவத்தை முன்வைத்த அரசியற் செயற்பாட்டாளராகவும் பௌத்த மீட்டுருவாக்கியாகவும் அம்பேத்கர் பன்முக ஆளுமை கொண்டவராக திரள்பெற்றது விதிவசத்தாலோ தற்செயலாகவோ அல்ல என்பதை விளங்கிக்கொள்ள இந்த டைரி துணைசெய்கிறது. அம்பேத்கர் என்கிற தனிமனிதரின் ஆளுமைப்பண்புகளை வடிவமைப்பதில் புறச்சூழலின் தாக்கங்களுக்கு நிகராக புறச்சூழலை வடிவமைப்பதில் தனிமனிதரின் ஆளுமைப்பண்புகள் செலுத்திய தாக்கங்களையும் குறுக்கீடுகளையும் உரியவகையில் மதிப்பீடு செய்வதற்கான தரவுகளைப்போல அவரது வாழ்வின் தெறிப்பான புள்ளிகளை அடிக்கோடிட்டு ஒளிரச்செய்யும் வகையில் அன்புச்செல்வம் தொகுத்திருக்கிறார். பொறுமையான உழைப்பு, அறிவாற்றல் ஆகியவற்றின் பயனாய் விளைந்த தனது திறத்தையும் சிறப்பியல்புகளையும் கொண்டு அம்பேத்கர் ஒவ்வொரு நாளையும் எத்தகைய விளைதிறனோடு (Productive?)  நிறைவடையச் செய்திருக்கிறார் என்பதை இவ்வாறு தொகுத்துப் பார்க்கும்போது நாளையும் பொழுதையும் பயனற்ற விசயங்களிலும் வேலைகளிலும் வீணழிப்பது குறித்த குற்றஉணர்ச்சி சட்டென பற்றிப்பரவுகிறது

5.  
தொந்தரவில்லாத ஒரு பொம்மையாக புகைப்படமாக சிலையாக சினிமா பிம்பமாக ஒடுக்கப்பட்ட மக்களிடையே அம்பேத்கரை திரித்துச் சொருகும் வேலை பலமுனையங்களில் மும்முரமாக நடக்கிறது. ஆனால் ஆதிக்கச்சாதியினர் அம்பேத்கர் என்கிற பெயரை அவரது சிலையை அல்லது வேறு எவ்வடிவிலான அவரது பிம்பத்தையும் தங்களுக்கு எதிரான ஒரு கருத்தியலாக மிகச்சரியாகவே கருதுகின்றனர். அதனாலேயே தங்களது சகிப்பின்மையையும் துவேஷத்தையும் ஓயாது வெளிப்படுத்திய வண்ணமுள்ளனர்.  கொக்கோகம் முதல் குவாண்டம் தியரி வரை, சரோஜாதேவி புத்தகம் முதல் சார்த்தர் வரை எது கிடைத்தாலும் உடனே படித்து தீர்த்துவிடுவதாக பம்மாத்து செய்யும் தீவிர வாசகர்களும், தனக்கு முன்பு ஒரு கோடி ரூபாய் கொட்டிக்கிடந்தாலும் சீந்தமாட்டார்- ஆனால் அரதப்பழசான ஒரு புத்தகம் கிடந்தாலும்கூடகாயிதத்தைக்கண்ட கழுதையைப்போலஉடனே லபக்கென எடுத்துக்கொள்வார் என்கிற புகழ்மொழிகளுக்குரிய புத்தகப்பிரியர்களும் அம்பேத்கர் எழுதிய ஒரு கட்டுரையைக்கூட வாசிக்காமல் இருப்பதோ அவரது தொகுப்பு நூல்களை வாங்காமலிருப்பதோ தற்செயலானதல்ல. எனது அலமாரியில் உள்ள அம்பேத்கரின் தொகுப்புநூல்களில் ஒரு தொகுதிகூட இன்னும் யாராலும் கடன் கேட்கப்படவுமில்லை, களவாடப்படவுமில்லை

இந்நிலையில் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அம்பேத்கர் வழங்கிய மேதமைமிக்க பங்களிப்புகளின் சுருக்கத்தையாவது உடனடியாக பரந்துபட்ட மக்கள்திரளுக்கு கொண்டுசென்றாக வேண்டியுள்ளது.  அதற்காக அம்பேத்கரின் பேச்சும் எழுத்துமாக பதிவாகியுள்ள ஆயிரக்கணக்கான பக்கங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட குறிப்புகளை கோர்வைப்படுத்தி வெளியாகும் அம்பேத்கர் டைரி, அவரை ஆழ்ந்து கற்பதற்கான ஆர்வத்தை தூண்டும் ஈர்ப்பினைக் கொண்டுள்ளன.

6.  
தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குரியதல்ல என்பதை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியவர் அம்பேத்கர். ஆனாலும் இந்த டைரி குறிப்பிடுவதுபோல 1933 ஏப்ரல் 14 அன்று மகாராஷ்ட்ராவில் பரவலான அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இன்று நாடு முழுவதும் நாடு கடந்தும் பல்வேறு வடிவங்களில் நடைபெறுகின்றன. ஆனால், இந்நூல் அவரது பிறந்தநாளில் வெளியாவது கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அல்ல எனவும் அம்பேத்கரை பரவலாக்கும் பேராவலில் விளைந்த எளிய முயற்சி எனவும் கருதுகிறேன். ‘‘நான் ஒரு மரம் நட்டுள்ளேன். அதற்கு நீங்கள் நீருற்றி வளர்த்தால் அதன் நிழலும் பழங்களும் உங்களுக்குக் கிடைக்கும். இல்லையேல் நீங்கள் வெயிலில் காயவேண்டியதுதான்...’’ என்று அம்பேத்கர் ஒரு சாபம்போல விடுத்துப்போன எச்சரிக்கையை உரியவகையில் உள்வாங்கிக்கொண்ட அன்புச்செல்வம் தன் பங்கிற்கு ஊற்றிய நீராக இந்நூலை ஏந்திக்கொள்கிறேன்.

மிக்க அன்புடன்
ஆதவன் தீட்சண்யா
9.4.13, ஒசூர் - 635109

4 கருத்துகள்:

 1. உங்கள் முன்னுரை நன்றாக வந்துள்ளது.”எனது அலமாரியில் உள்ள அம்பேத்கரின் தொகுப்புநூல்களில் ஒரு தொகுதிகூட இன்னும் யாராலும் கடன் கேட்கப்படவுமில்லை, களவாடப்படவுமில்லை. ” இது அனேகருக்கும் உள்ள அனுபவம். எந்தப்பதிப்பகம் என்று சொன்னால் எல்லோரும் வாங்கி படிக்கலாம். நானும் வாங்கி வாசிப்பேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. NEW CENTURY BOOK HOUSE இல் அண்ணல் அம்பேத்கரின் புத்தக தொகுதிகள் அனைத்தும் கிடைக்கும்.

   அவர்களது அலுவலக முகவரி :
   41 B Sidco Industrial Estate , Sidco Estate, AMBATTUR, Chennai - 600098.

   சென்னை அண்ணாநகரில் அவர்களின் தற்காலிக புத்தகடை உள்ளது. அங்கே சொல்லிவைத்தாலும் அவர்கள் ஏற்பாடு செய்துதருவார்கள்.

   மொத்த தொகுதிகளின் விலை ரூ.1800 வரும்....

   மேலும் விவரங்கள் வேண்டுமெனில்

   எங்களை தொடர்புகொள்ளுங்கள்

   நன்றி

   இவன்
   ஸ்ரீதர்
   www.ambedkar.in
   9841544115

   நீக்கு
 2. இதைப்படித்து முடித்தவுடன் ஏதோவொரு விழிப்பு எனக்குள்.........
  இன்னும் எவ்வளவு படிக்க வேண்டியிருக்கிறது. நன்றி தோழா.!


  நான் படித்த பல புத்தகங்கள் எனது தோழர்களின் வீட்டு அலமாரியில் இருந்ததுதான்.
  உங்களின் அலமாரி சென்னையில் இல்லாதது எனது துரதிர்ஷ்டம்.(ஒரு வேளை தங்களின் அதிர்ஷ்டமாக இருக்கலாம்).
  நன்றி.

  பதிலளிநீக்கு
 3. பல முறை உணர்ந்திருக்கிறேன், இதைப்படித்தப்பிறகு வெட்கப்படுகிறேன்., நான் இன்னும் அம்பேத்கரின் சிந்தனைகளை அதிகம் படிக்கவில்லையென நினைத்து.........

  நான் படித்த 80% புத்தகங்கள் எனது தோழர்களின் வீட்டு அலமாரிகளில் இருந்ததுதான்.(15% புத்தகங்கள் கிளை நூலக அலமாரிகளில் இருந்து).

  தங்களின் அலமாரி சென்னையில் இல்லாதது எனது துரதிர்ஷ்டமே (ஒரு வேளை உங்களின் அதிர்ஷ்டமாகக்கூட இருக்கலாம்).

  நன்றி தோழர்.

  பதிலளிநீக்கு