‘தினமணி' ஒன்பதாம் பதிப்பும் வைத்தியநாதனும் -எஸ்.வி.ராஜதுரை

ருபுறம் வெளிநாட்டு, உள்நாட்டு மூலதனக் கார்ப்பரேட் கொள்ளைக் கம்பெனிகளின் ஆடிட்டராக இருந்துகொண்டு, மறுபுறம் இந்திய சுதேசிப் பொருளாதாரத்தைக் காப்பதற்கான கட்டுரைகளை எழுதுபவர் சங் பரிவாரத்தைச் சேர்ந்த  எஸ்.குருமூர்த்தி.  மார்க்ஸியத்தை இழிவுபடுத்தி எஸ்.குருமூர்த்தி ஆங்கிலத்தில் எழுதியுள்ள ஒரு நூலை சென்னையிலுள்ள ‘கிழக்குப் பதிப்பகம்' , ‘மறைந்துபோன மார்க்சியமும் மங்கி வரும் மார்க்கெட்டும்' என்று தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளது. இவர்களது நேர்மையீனத்தை நூலாசிரியர் பற்றிய அறிமுகக்குறிப்பே வெளிப்படுத்திவிடுகிறது. ஆங்கில நூலில், S.Gurumurthy, Corporate Advisor' எனக் குறிப்பிடப்படும் அந்த நூலாசிரியர் தமிழாக்கத்தில் ‘எஸ்.குருமூர்த்தி, அரசியல், பொருளாதார விமர்சகர்” என்னும்  புதிய அவதாரதமெடுக்கிறார். இவரைப் பொருத்தவரை இந்தியப் பொருளாதாரத்திற்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக இருப்பது சீனா மட்டுமே!  இவர்தான் ‘தினமணி' நாளேட்டின் இன்றைய ஆசிரியர் கே.வைத்தியநாதனின் ஞானாசிரியார்.

‘தினமணி' ஆசிரியர் பொறுப்பிலிருந்த காலஞ்சென்ற இராம திரு. சம்பந்தத்திற்குப் பிறகு, அந்த நாளேட்டில் ‘நியூஸ் எடிட்டராக' பணியாற்றி வந்த சந்திரசேகரன் என்பவரை ‘பொறுப்பாசிரியராக' வைத்துக்கொண்டு ஏறத்தாழ இரண்டாண்டுக்காலம் அந்த நாளேட்டை நடத்தி, விற்பனையில் சரிவைக் கண்ட பிறகு, நாளேடுகளில் பணியாற்றிய அனுபவம் ஏதும் இல்லாதிருந்தவரும் தமிழக இதழியல், ஊடக உலகில் அதுவரை பெரிதும் அறியப்படாமலிருந்தவருமான கே.வைத்தியநாதன் எங்கிருந்தோ  வரவழைக்கப்பட்டு, ஆசிரியராகப் பணியிலமர்த்தப்பட்டார். அவர் பொறுப்பேற்ற சில நாட்களுக்குள்ளேயே ‘தினமணி' காவி வண்ணம் பூணத் தொடங்கியது. ஆசிரியர் பொறுப்பேற்ற பின்னர் வாசகர் மனங்களை அறிந்துகொள்வதற்காக கே. வைத்தியநாதன் தமிழகமெங்கும் பயணம் மேற்கொண்டார். 2007 ஜூலை முதல் வாரத்தில் திருச்சியில் நடந்த வாசகர் கூட்டத்திற்கு அவர் வந்திருந்த போது, நமது நண்பர்களில் சிலர் ‘தினமணி'யின் காவிச்சார்பை வைத்தியநாதனிடம் நேரடியாகவே சுட்டிக்காட்டினார். பின்னர் எஸ்.குருமூர்த்தியின் கட்டுரைகள் குறையத் தொடங்கின; ‘பெரியவாள்களு'க்கும் ‘சிறியவாள்களு'க்கும் கொடுக்கப்பட்டு வந்த முக்கியத்துவமும் மங்கத் தொடங்கின.

எஸ்.குருமூர்த்தியின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு, சுதந்திரச் சிந்தனையுடன் ‘தினமணி'ஆசிரியர் தனது பணியைத் தொடர்வார் என்னும் எண்ணம் பலருக்கும் ஏற்பட்டது. ஆனால், இந்துத்துவத்தின் கருத்துநிலை மேலாண்மையை (ideological hegemony)   நிலைநாட்ட முந்தைய வழிமுறைகள் உதவா என்பதை நன்கு புரிந்துகொண்ட வைத்தியநாதன் இடதுசாரிகள், தமிழ் தேசியவாதிகள், மு.கருணாநிதி ஆட்சியிலிருந்தபோது அவர் புகழ்பாடி வந்த ‘ஆஸ்தான'க் கவிஞர்கள், சாதியச்சீழைப் போக்காமலேயே தங்கள் தமிழ் உடலையும் தமிழ் உணர்வையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ள விரும்புவர்கள் எனப் பலதரப்பட்டோரை அணைத்துக்கொண்டு செல்லத் தொடங்கினார். தங்கள் கருத்துகளை வெளியிடுவதற்கான பல ஊடகங்களில் ‘தினமணி'யும் ஒன்று என்று மனதார நம்பி எழுதிவந்தவர்கள், மு.கருணாநிதியை எதிர்ப்பதை மட்டுமே தங்கள் அரசியலாகக் கொள்பவர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் ‘தினமணி'யில் எழுதி வந்தனர். தங்களுக்கும் தங்கள் அமைப்புகளுக்கும் தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் வைத்தியநாதனை அழைத்தால் குறைந்தது அரைப்பக்க செய்தியாவது வரும் என்னும் எண்ணம் இடதுசாரித் தலைவர்கள் சிலருக்கும்கூட ஏற்பட்டது. இவற்றிலெல்லாம் முழு ஆதாயம் அடைந்து வருபவர் அவர் மட்டுமே. 1934இல் தொடங்கப்பட்ட ‘தினமணி'யில் ஆசிரியர்களாக இருந்தவர்கள் ஒருவர்கூட தங்கள் புகைப்படங்களைத் தாங்களே போட்டுக்கொண்டதோ, தாங்கள் கலந்துகொண்ட பொதுநிகழ்ச்சிகள் (நமக்குத் தெரிந்தவரை அவர்கள் ‘பொது நிகழ்ச்சிக'ளைக் கூடுமானவரை தவிர்த்தே வந்தனர். ‘நமக்குத் தொழில் பத்திரிகை' என்பதுதான் அவர்களது இலட்சியமாக இருந்தது) பற்றிய செய்திகளை வெளியிடுவதன் மூலம் சுய விளம்பரம் தேடிக் கொண்டதோ கிடையாது.

இந்துத்துவக் கருத்துநிலை மேலாண்மையை நிலைநிறுத்துவதற்காக அவர் மேற்கொள்ளும் இன்னொரு வழிமுறை  தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு ஆகியனவற்றின் காவலராகத் தன்னையும் தனது நாளேட்டையும் முன்னிறுத்திக் கொள்வதும், சாதிய ஒடுக்குமுறை பற்றியோ, உள்நாட்டு, வெளிநாட்டு மூலதனத்தின் சுரண்டலைப் பற்றியோ, இந்திய/தமிழக அரசியலிலும் பொதுவாழ்விலும் மண்டிக் கிடக்கும் ஊழல்கள் பற்றியோ எந்த அக்கறையும் இல்லாத தமிழ்ச் சங்கங்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள், ‘சாய்வு நாற்காலி சத்தியசீலர்க'ளான முன்னாள் அரசாங்க அதிகாரிகள் ஆகியோரின் ஆதரவைத் திரட்டிக்கொள்வதுதான். கலாரசனைக் கைவருடல்களின் மூலம் ஏற்கெனவே தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமானவர்களையும் பேனாவை (அல்லது விசைப்பலகையை) தொடத் தொடங்கியவர்களையும் அணைத்துச் செல்லும் சாதுரியமும் அவருக்கு இருக்கிறது. 

 காந்தியவாதி, தமிழ்ப்பற்றாளர், எந்தக் கட்சி தவறு செய்தாலும் கண்டிப்பவர் என்னும் பல்வேறு வேடங்கள் பூண்டாலும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல இந்துத்துவக் கருத்துகளை நுழைப்பதில் வல்லவர்.   இதற்கு மிக அண்மைய எடுத்துக்காட்டு,  கடந்த செப்டம்பர் 9ஆம் நாளன்று ‘தினமணி'யின் ஒன்பதாவது பதிப்பு விழுப்புரத்தில் தொடங்கப்படுவதையொட்டி ‘இதோ ஒன்பதாவது பதிப்பு' என்னும் தலைப்பில் அவர்  எழுதியுள்ள முன்பக்கக் கட்டுரை.

 ‘நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்' என்பனவற்றைத் தனது வழிகாட்டு நெறிகள் எனக் கொள்கிறதாம் ‘தினமணி'. “1934-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 11-ஆம் நாள், மகாகவி பாரதியாரின் 13-வது நினைவு நாளன்று  ‘தினமணி' தொடங்கப்பட்டதும் ஒரு விநாயக சதுர்த்தி நன்னாளில்தான். இப்போது அகவை எண்பதில் அடியெடுத்து வைக்க இருக்கும் தருணத்தில், அதேபோல விநாயக சதுர்த்தி நன்னாளில், செப்டம்பர் ஒன்பதாம் தேதி தனது ஒன்பதாவது பதிப்பை விழுப்புரத்திலிருந்து தொடங்குகிறது”
என்று வைத்தியநாதன் எழுதுகிறார்.
 
மேலும்,  “1934-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் நாள் ‘அறிமுகம்' என்கிற முதல் தலையங்கத்தில் நிறுவன ஆசிரியர் டி.என்.சொக்கலிங்கம் எதையெல்லாம் ‘தினமணி' நாளிதழின் குறிக்கோளாகக் குறிப்பிட்டிருந்தாரோ, அந்த லட்சிய வேட்கையும் அர்ப்பணிப்பு உணர்வும் இதுவரை தொடர்கிறது, அவ்வளவே” என்றும் கூறுகிறார். 

‘தினமணி'யின் நிறுவன ஆசிரியரான டி.எஸ்.சொக்கலிங்கத்தின் பெயரை டி.என்.சொக்கலிங்கம் என்று  ஒரு முறையல்ல, மூன்று இடங்களில் இதே கட்டுரையில் தவறாக எழுதியுள்ளார் வைத்தியநாதன். 

 டி.எஸ்.சொக்கலிங்கம் ‘தினமணி'யை ‘விநாயகர் பிறந்த   நாள'ன்று தொடங்கினார் என்னும் எண்ணத்தை உருவாக்க முயல்கிறார் வைத்தியநாதன். டி.எஸ்.சொக்கலிங்கம் எழுதிய ‘அறிமுகம்' என்னும் கட்டுரையை வைத்தியநாதன் மறுபிரசுரம் செய்திருந்தால், டி.எஸ்.எஸ்., அப்போது அந்த நாளேட்டின் குறிக்கோள்கள் எனக் குறிப்பிட்டிருந்தவற்றுக்கும்,  இன்று ‘தினமணி' சிலவேளை வெளிப்படையாகவும் பலவேளை மறைமுகமாகவும் வளர்க்க விரும்பும் இந்துத்துவக் கொள்கைகளுக்கும் ஒற்றுமை இருக்கின்றதா என்பதை வாசகர்களால் கண்டறிந்திருக்க முடியும்.

முதலில் விநாயகர் ‘பிறந்த நாளை'  (சதுர்த்தி) எடுத்துக் கொள்வோம். 1934இல் அந்தப் ‘பிறந்த நாள்' வந்தது செப்டம்பர் 12 ஆம் தேதியேயன்றி, வைத்தியநாதன் கூறுவது போல செபடம்பர் 11 அல்ல; பாரதியாரின் நினைவு நாள் செப்டம்பர் 11-இல்தான் எல்லா ஆண்டுகளிலும் வருகின்றது. ஆனால் விநாயகரின் ‘பிறந்த நாள்' அப்படியல்ல; 1934இல் செப்டம்பர் 12; 1933இல் ஆகஸ்ட் 24; 1935இல் செப்டம்பர் 2, இப்படி ஒவ்வோராண்டும் அதற்கு முந்தைய ஆண்டிலிருந்து சிலநாட்கள் முன்னதாகவோ, பின்னதாகவோ பிறக்கிறார் விநாயகர் ( http://www.drikpanchang.com/festivals/ganesh-chaturthi/ganesh-chaturthi-date-time.html?year=1934 ) முழுமுதல் கடவுளான அவரது பிறந்த நாளைத் தீர்மானிக்கும் அதிகாரம் சோதிடர்களுக்குத்தான் இருக்கின்றது!.

இரண்டாவதாக, ‘தினமணி' 1934 செப்டம்பர் 11அன்று தொடங்கப்பட்டபோது அதில் இருந்த முழக்கம் : “ஏழையின் துயர் துடைக்க எல்லோரும் களித்திருக்க எவருக்கும் அஞ்சாத தினமணி”.

மூன்றாவதாக, டி.எஸ்.சொக்கலிங்கம் எழுதிய முதல் தலயங்கம் கீழ்வருமாறு:
“பல மாதங்களுக்கு முன்னரே இப்பத்திரிகை வந்திருக்க வேண்டும். பல இடையூறுகளால் தாமதமாயிற்று. தமிழில் பல தினசரிப் பத்திரிகைகள் இருக்கின்றன. மற்றுமோர் பத்திரிகை தோன்றுவது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அறிகுறியென்று சிலர் நினைப்பர். பெரும்பாலானோர் தினமணியின் போக்கைப் பார்த்து முடிவு செய்யலாம் என்று நடுநிலை வகித்திருப்பர். 

போர்க்காலத்தில் யுத்தவீரர்களுக்குப் பக்கபலமாக சேவகர்கள் பலர் வேண்டும்.தொத்து நோய் பரவும் பொழுது நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்யும் ஊழியர்கள் வேண்டும். பஞ்ச காலத்தில் ஏழைகளுக்குக் கஞ்சி வார்க்கும் தொண்டர்கள் வேண்டும்.

தமிழ்நாட்டில் சென்ற பதினைந்து வருஷங்களாக ஓர் அபூர்வ சுதந்திரப் போர் நடந்து வருகின்றது. அதன் நடுவில் ஏற்படும் அற்ப வெற்றிகளால் மயங்காமலும் சிறிய தோல்விகளால் தளராமலும் பாரத தேசம் விடுதலை அடையும் வரையில் தமிழ் மக்களைப் போற்றியும் தேற்றியும் தினமணி துணை புரியும்.

எல்லா வியாதிகளிலும் மனோவியாதியே மிகக் கொடியது. நமது மக்களின் மனதில் அடிமைத்தனம் குடிகொண்டிருக்கிறது. காந்தி அடிகளின் பெரு முயற்சியால் சிறிது காலமாகப் பாரத மக்கள் மற்ற நாட்டினரைத் தலையெடுத்துப் பார்க்கவாரம்பித்திருக்கின்றனர். ஆயினும் நமது பெரியாரிடத்தும் சிறியாரிடத்தும் அடிமைப்புத்தி அகன்றபாடில்லை. அதை அடியோடு அழித்துத் தமிழ் மக்களை மானிகளாகச் செய்வதற்குத் தினமணி ஓயாது பாடுபடும்.

இந்திய ஜனங்களில் பெரும்பாலோர் அழியாப் பஞ்சத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். இதற்குப் பல காரணங்களுண்டு. அவற்றுள் முதன்மையானது முதலாளிகளும், ஜமீந்தாரார்களும், தமது உழைப்பினால் உண்டாகும் செல்வத்தை எல்லாம் பிடுங்கிக்கொண்டு தங்கள் ஆடம்பரங்களுக்காக அழிப்பதுதான். இம்முறை மாறி நாட்டின் செல்வத்தின் பெரும் பகுதி தொழிலாளர்களுக்குச் சேரக் கூடிய புதிய சமூகம் அமைக்கப்பட வேண்டும். அதற்கு வேண்டிய அறிவையும் ஆற்றலையும் தமிழ் மக்களுக்குத் தினந்தோறும் ஊட்டுவது தினமணியின் தனித் தொண்டாகும்.

இவ்வாறு மூன்றுவித சேவையும் தமிழ்நாட்டுக்கு இன்றியமையாதெனவென்று கருதியே தினமணி இன்று உதயமாகின்றது. மேற்கூறிய கொள்கைகளைச் சிறிதும் நழுவ விடாமல் பாதுகாப்பதற்குத் தேச சேவையில் ஓர் இளைஞர் கூட்டம் அதிக ஊதியத்தை எதிர்பார்க்காமல் இவ்வேலையை ஏற்றுக் கொண்டிருக்கின்றது. சுதந்திர சூரியனைக் காண விரும்பிய தெய்வீகப்பித்தரான சுப்பிரமணிய பாரதியாரின் வருஷாந்திர தினத்தன்று அவருடைய சுதந்திர தாகத்தையும் சமத்துவக் கொள்கைகளையும் தமிழ்நாட்டில் பரப்பும் நோக்கத்துடன் பிறந்திருக்கும் தினமணியைத் தமிழ் மக்கள் வரவேற்பார்கள் என்பது எமது பூரண நம்பிக்கை”.

ஆக, ‘தினமணி'யைத் தொடங்க டி.எஸ்.சொக்கலிங்கம் தேர்ந்தெடுத்த நாள் பாரதியாரின் 13ஆவது நினைவு நாளேயன்றி  விநாயகர் ‘பிறந்த நாள்' அல்ல (அவர் இறை நம்பிக்கை கொண்டிருந்தவர் என்னும் பொதிலும்) என்பது தெளிவு.
 
‘தினமணி' ராம்நாத்  கோயங்காவால் தொடங்கப்பட்டது அல்ல. ‘விவேக சிந்தாமணி; ஆசிரியரின் மகனும் தேசிய உணர்வு கொண்டவருமான சதானந்தத்தால் டி.எஸ்.சொக்கலிங்கத்தை ஆசிரியராகக் கொண்டு சுயமாகவும் சுதந்திரமாகவும் தொடங்கப்பட்ட நாளேடே அது. நிதி வசதியின்மையால் அவதிப்பட்டு வந்த அந்த  நாளேட்டுக்குக் கடனுதவி செய்த கோயங்கா சில ஆண்டுகளுக்குப் பின் அதனைத் தனது உடைமையாக்கிக் கொண்டார்.

 நான்காவதாக, “தமிழர் நன்மைக்கு தமிழரால் நடத்தப்படும் தமிழ் தினசரி ‘தினமணி'” என்று அந்த ஏட்டின் தன்மையை ‘தினமணி' செப்டம்பர் 26,1934 இதழில் எழுதினார் டி.எஸ்.சொக்கலிங்கம். அந்த மரபா இன்று பின்பற்றப்படுகிறது? ஓர் இந்துத்துவ மார்வாரியின் கையில்தானே இந்த நாளேடு இருக்கிறது?

சாதிய மனபான்மையையும் மத வெறியையும்  டி.எஸ்.சொக்கலிங்கம் எதிர்த்து வந்திருக்கிறார். அரசியலிலும் பொது வாழ்விலும் ‘செக்யூலரிசம்' எனச் சொல்லப்படும் ‘மதச்சார்பின்மை'யில் உறுதியாக நின்றிருக்கிறார். சாதி அமைப்பு பற்றி எழுதுகிறார்: “தமிழ்நாட்டில் பூர்வீகத்தில் ஜாதி கிடையாது. குறிஞ்சி, முல்லை,பாலை, மருதம், நெய்தல் ஆகிய ஐவகை பிரதேசங்களில் வசித்தவர்கள் அந்தந்த பிரதேசங்களின் தன்மையைக் காட்டும் ஜதி பெயர்களால் அழைக்கப்பட்டார்கள். ஆனால் ஒரு பிரதேசத்தில் உள்ளவர்கள் மற்றொரு பிரதேசத்தில் குடியேறினால், குடியேறிய பிறதேச ஜாதியாகவே அவர் மதிக்கப்படுவார். எனவே அந்த ஜாதியும் மாற்ற முடியாத ஜாதியாய் இல்லை.எனவே ஒருவருக்கொருவர் கலக்க முடியாதபடி ஜாதி எதுவுக் கிடையாது. ... ஜாதிப்பிரிவுகள் இல்லாத தமிழ்நாட்டில் இன்று நானூறு ஜாதிகள் இருக்கின்றன. இந்த ஜாதிகள் ...குறுகிய புத்தியாலும் மடத்தனத்தாலுமே ஏற்பட்டது... தமிழன் என்று நீங்கள் பெருமைகொள்ள விரும்பவில்லையா? அந்த விருப்பம் இருந்தால் ஜாதி வித்தியாசத்தை ஒழிப்பதற்கு என்ன செய்யலாமென்று யோசித்தீர்களா?

முன்னோர்கள் செய்த விஷயமாயிற்றே என மழுப்பவேண்டாம். மோட்டார் சவாரி, கிராப், காபி முதலிய எத்தனையோ காரியங்களில் முன்னோர் செய்யாததை இப்பொழுது செய்யவில்லையா? வாழ்க்கையில் நெருக்கடி ஏற்படும்போது முன்னோரையோ பின்னோரையோ கவனிப்பதில்லை. ஆனால் அர்த்தமில்லாத வழக்கங்களை கையாளுவதில் மட்டும் முன்னோரை ரொம்ப கெளரவிக்கிறோம்”.

இந்தக் கருத்தை வைத்தியநாதனால் தனது ஞானாசிரியர் எஸ்.குருமூர்த்திக்கு எடுத்துச் சொல்ல முடியாது. ஏனெனில் எஸ்.குருமூர்த்தி, மேலே குறிப்பிடப்பட்ட நூலில் சாதி அடிப்படையிலான முதலாளியத்தையே, மார்க்ஸியத்துக்கும் சந்தைப் பொருளாதாரத்துக்குமான மாற்றாக முன் வைக்கின்றார்.

கொள்கை வேறுபாடுடையவர்கள் நேர்மையானவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களைப் பாராட்ட டி.எஸ்.சொக்கலிங்கம் தயங்கியதில்லை. நீதிக்கட்சியையும் சுயமரியாதை இயக்கத்தையும் கடுமையாகத் தாக்கி எழுதிக்கொண்டிருந்தவர்தான் அவர். எனினும், தமிழிசை இயக்கத்தை ஆதரித்து வந்திருக்கிறார். காமராஜர் வாழ்க்கை வரலாறு பற்றிய தனது நூலில், நீதிக் கட்சியை நிறுவிய தலைவர்களைப் பற்றி அவர் எழுதுகிறார்: “ஜஸ்டிஸ் கட்சியைத் தோற்றுவித்த திரு.தியாகராய செட்டியாரும், டாக்டர் நாயரும் சுயநலக்காரர்கள் அல்ல. பெரிய தியாகிகள். தங்கள் நலனுக்காக ஜஸ்டிஸ் கட்சியை ஆரம்பிக்கவில்லை”.

அதேபோல, காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தவறு செய்தால் அதை விமர்சிக்கவும் தயங்கியதில்லை. வ.வே.சு.அய்யரின் விசாலமான அறிவையும் கொள்கைப் பற்றையும் போற்றிய அதேவேளை, குருகுல விவகாரத்தில் அவர் நடந்து கொண்ட முறையைக் கண்டனம் செய்தார். 

28.9.1935ஆம் நாளைய இதழில் என்.எஸ்.சிவசுப்ரமணியன் என்பவர் துப்புரவுத் தொழிலாளர்கள் பற்றி எழுதிய கட்டுரையின்றை வெளியிட்டார் டி.எஸ்.சொக்கலிங்கம். அந்தக் கட்டுரை, மனித மலத்தைத் தலையில் தூக்கிச் செல்வதைப் பற்றிக் கூறுகையில் “மனிதன் எவனும் அவ்வளவு அருவருப்பான வேலைகளைச் செய்வதே பெருங்குறைதான். பெரும் அலுவல்களை இயந்திரங்கள் செய்கின்றனவே. இத்தகைய வேலைக்கும் ஓர் இயந்திரம் நியமிக்கலாகாதோ?” எனக் கேட்கிறது.

‘இதோ ஒன்பதாவது பதிப்பு' கட்டுரையில் வைத்தியநாதன் எழுதுகிறார்: “ ‘தினமணி' நாளிதழின் நிறுவன ஆசிரியரான டி.என்.சொக்கலிங்கமும், நீண்டநாள் ஆசிரியராக இருந்த பெரியவர் ஏ.என்.சிவராமனும் இட்டுத் தந்திருக்கும் அடித்தளத்தில் தொடர்ந்து நடைபோடும் உங்கள் ‘தினமணி' தனது ஒன்பதாவது பதிப்புடன் வீறு நடை போடத் தயாராகிறது”. 

ஏ.என்.சிவராமனின் பெயருக்கு முன்னால் ‘பெரியவர்' என்னும் அடைமொழியைத் தேவையின்றிச் சேர்த்திருப்பது ஒருபுறமிருக்க, டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன் ஆகியோருக்குப் பிறகு ‘தினமணி'யின்  பத்திரிகை மரபுக்குரியவராக இருப்பவர் தன்னைத் தவிர வேறு யாருமில்லை என்று இங்கு மறைமுகமாகக் கூறுகிறார் வைத்தியநாதன்.

முதலில் ஏ.என்.சிவராமனின் மரபை எடுத்துக் கொள்வோம்.  இறை நம்பிக்கை கொண்டிருந்தவர் தான் அவர். ஆனால் எஸ்.குருமூர்த்தி போல, நவீன உடை தரித்த சனாதனியாக இருக்கவில்லை. சென்னை திருவல்லிக்கேணியில் ஹிந்து தியாலாஜிகல் பள்ளி ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர் பேசியிருக்கிறார்: “ஜாதி முறைதான் பிரிவினை உணர்ச்சிக்குக் காரணம். குழந்தைகளுக்குக் கல்வியளிக்கும் பொழுதே ஜாதி முறை பற்றிய புதிய மனப்பான்மையை ஊட்ட வேண்டும். ஜாதிய உணர்ச்சிகளை ஒழித்துவிடும்படி உங்களை வேண்டிக் கொள்கிறேன்.சமூக சேவை செய்ய வேண்டும் என்ற உணர்ச்சியையும் சமூகத் துறையிலோ அல்லது பொருளாதாரத் துறையிலோ தாழ்ந்த நிலையிலிருப்பவர்களிடத்தில் அக்கறை காட்டும் மனப்பான்மையை ஆசிரியர்கள் சிறுவர்களுக்கு ஊட்ட வேண்டும்” (தினமணி, 9.8.1947).

பெரியார் ஈ.வெ.ரா.வின் மறைவு பற்றி அவர் எழுதிய தலையங்கம் கூறியது:  “...பகுத்தறிவு இயக்கம் பெரியாரை கடவுள் மறுப்பு இயக்கத் தலைவராக்கியது. தமது பிரசார பாணியில் அவர் கையாண்ட சில நடைமுறைகள் சர்ச்சைக்கு உரியவை.மத நம்பிக்கையாளர்களது மனதைப் பெரிதும் புண்படுத்தும் ரீதியில் அவை அமைந்திருந்தன. எனினும் அவரது உண்மையுணர்வை எவரும் எப்போதும் சந்தேகித்ததில்லை.அவரது சீர்திருத்தப் பணிகள் மூலம் சமுதாயத்தில் ஒரு புதிய விழிப்பு ஏற்பட்டு பல நல்ல திருப்பங்களையும் தோற்றுவித்தது என்பதை எல்லோருமே ஒப்புக் கொள்வர்.பெரியார் என்றும் தந்தை என்றும் பலரால் மதிக்கப்பெற்ற திரு ஈ.வெ.ராமசாமி காலமானது தமிழ் நாட்டின் பொது வாழ்வுக்குப் பேரிழப்பாகும்” (தினமணி, 25.12.1973). பெரியாரைப் பற்றிய இத்தகைய கருத்துகளை வைத்தியநாதனிடமிருந்தோ, அவரது  குரு நாதரிடமிருந்தோ  (மூர்த்தி) கேட்க முடியுமா?
 
அடுத்ததாக, டி.எஸ்.சொக்கலிங்கத்தின் மரபை எடுத்துக்கொள்வோம். 1940இல் தனிநபர் சத்யாக்ரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குச் செல்வதற்கு முன், தகுதியுடைய ஒருவரையே தான் வளர்த்த நாளேட்டுக்குப் பொறுப்பாக அமர்த்த வேண்டும் என்பதற்காக தனக்குக் கீழ் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த ஏ.என்.சிவராமனைத் தேர்ந்தெடுத்து அவரை இவ்வாறு வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார் டி.எஸ்.சொக்கலிங்கம்:

“ இன்று முதல் ஸ்ரீ ஏ.என்.சிவராமன், ‘தினமணி'க்கு ஆசிரியராக இருப்பார்.தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் ஸ்ரீ சிவராமனை அறிவார்கள். புத்தகம் படிக்கும் பழக்கமுள்ளவர்களும் ஸ்ரீ சிவராமனை அறிவார்கள்... இராஜீய ஞானமும், பொருளாதார ஞானமும் அவருக்கு தளபாட விஷயங்கள். தேசபக்தியிலும் அவர் சிறந்தவர். தேசபக்தியோடு தன்னல மறுப்பையே பிரதானமாக அவர் கருதியபடியால்தான் அவருடைய பெயர் இதுவரை பிரபலமாகவில்லை. விளம்பரமில்லாமல் பின்னாலிருந்து உருப்படியாக வேலைகளைச் செய்யவேண்டுமென்ற ஒன்றே ஒன்றுதான், அதாவது தினமணியைத் திறமையாக நடத்துவதற்கு சகல குணங்களும் வாய்க்கப் பெற்றவர் என்பதுதான்... எனவே அவருடைய ஆசிரியத்திறமையில் நடைபெறும் தினமணி இதுவரை அதன் நண்பர்களிடம் எவ்வளவு அபிமானத்தைப் பெற்று வந்ததோ அதைப்போலவே இனியும் பெற்று வரும் என்பதில் சந்தேகமில்லை”

இதுதான் டி.எஸ்.சொக்கலிங்கத்தின் மனப்பாங்கு. ஆனால், வைத்தியநாதனோ, ஏ.என்.சிவராமனுக்குப் பிறகு ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஐராவதம் மகாதேவன், கஸ்தூரிரங்கன், மாலன், இராம. திரு. சம்பந்தம் ஆகியோர் பெயர்களைக் குறிப்ப்டுவதுகூட இல்லை. தமிழே தெரியாத பிரபு சாவ்லாவை எக்ஸ்பிரஸ் குரூப் ‘தினமணி'யின் ஆசிரியராக நியமித்தபோது, அதன் பொறுப்பாசிரியராக  இருந்து அந்தப் பத்திரிகையை நடத்தி வந்தவர் மாலன்தான். எனவேதான் பிரபு சாவ்லாவைக் கணக்கில் எடுத்துக் கொள்ள நம் மனம் தயங்குகிறது.

ஏ.என்.சிவராமனின் விசாலமான அறிவும் ‘தினமணி'யை தலைசிறந்த தமிழ் நாளேடாக மாற்றியதில் அவர் வகித்த பாத்திரமும் யாராலும் மறுக்கப்பட முடியாதவை. மூப்படைந்துவிட்ட அவருக்கு அடுத்தபடியாக  உலகப் புகழ்பெற்ற கல்வெட்டு, தொல்லியல் ஆராய்ச்சி அறிஞர் ஐராவதம் மகாதேவன் ‘தினமணி' ஆசிரியராக நியமிக்கப்பட்ட போது ஐராவதம் மகாதேவனுடன்  தினமணி' அலுவலகத்திற்கு  வந்து அவரைத் தனது இருக்கையில் அமர்த்தி வாழ்த்துச் சொல்லிச் சென்றவர் ஏ.என்.எஸ்.

 நேருவின் அழைப்பை ஏற்று இந்திய வெளிவிவகாரத் துறையில் சேராமல், மக்களுக்கு உழைப்பதற்காக  ஐ.ஏ.எஸ்.இல் சேர்ந்து மிகச் சிறந்த அரசு அதிகாரியாகப் பணியாற்றி, எம்ஜிஆர்.ஆட்சிக் காலத்தில் நடந்த நிர்வாகக் கேடுகள், ஊழல் ஆகியவற்றால் மனம் வெறுப்புற்று, காலஞ்சென்ற பொருளாதார அறிஞர் குகன், கே.எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற வேறு சில ஐஏஎஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து பணியிலிருந்து விலகியவர் ஐராவதம் மகாதேவன். இதழியலில் முன்னனுபவம் அவருக்கு இருக்கவில்லை என்றாலும், அவரது ஆழமான அறிவும் பன்மொழிப் புலமையும்  ‘தினமணி'யை நடத்துவதில் அவருக்குக் கைகொடுத்தன.

ஐராவதம் மகாதேவன், உலகத் தரம் மிக்க ஆங்கில நாளேடுகளுக்கு இணையாக ‘தினமணி' திகழ வேண்டும் என்பதற்காக அதன் வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும்  மிக முக்கிய மாற்றங்களைச் செய்தார். அதன் நடுப் பக்கங்களைப் பல்வேறு தரப்பினருக்குத் திறந்துவிட்டதும், மு. கருணாநிதியின் ‘முரசொலி'க்கு முன்பே எழுத்துச் சீர்திருத்தத்தை ‘தினமணி'யில் நடைமுறைப் படுத்தியதும் வரலாறு. அவரே மிகச் சிறந்த தமிழறிஞராக இருந்ததால், ‘சொல் வேட்டைக்கு' ஆள்கள் தேட வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை.  ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்', ‘தினமணி'ஆகிய இரண்டும் ராம்நாத் கோயங்காவின் உடைமையில் இருந்த நாள்கள் அவை. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்'ஏட்டின் அனைத்துப் பதிப்புகளுக்கும் முதன்மைப் பொறுப்பேற்றிருந்த அருண்ஷோரி,  மண்டல் குழு அறிக்கையைக் கடுமையாகத் தாக்கிக் கட்டுரைகள் எழுதி வந்த காலம். ஆனால், அவரது கட்டுரைகளின் தமிழாக்கத்தை ‘தினமணி'யில் வெளியிடாமல், மண்டல் குழு பரிந்துரைகளை ஆதரித்து ‘தி ஹிந்து'வில் வெளிவந்த கட்டுரையொன்றின் தமிழாக்கத்தை மட்டுமின்றி  இட ஒதுக்கீடுக் கொள்கையை ஆதரிக்கும் பல கட்டுரைகளையும்     வெளியிட்டதன் மூலம், தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்தவர் அவர்.  அணு உலைகளுக்கு, அணு சக்திக்கு  எதிராகப் பல கட்டுரைகளையும் தலையங்கங்களையும் ‘தினமணி'யில் எழுதியவர். எனவே ‘போக்ரானை'க் கொண்டாடும் குருமூர்த்தியின் சீடரும் கூடங்குளம் போராட்டத்தை எதிர்ப்பவருமான வைத்தியநாதனால் ஐராவதம் மகாதேவனின் மரபுக்கு உரிமை கொண்டாட முடியாததுதான்.

அவரது பணிக்காலம் முடிந்த பின், மிகச் சிறந்த பத்திரிகையாளரும் உலக விவகாரங்களை நன்கு கற்றவருமான கஸ்தூரிரங்கன் ஆசிரியர் பொறுபேற்றிருந்தார்.  டி.எஸ்.சொக்கலிங்கத்தை ‘தினமணி'யிலிருந்து வெளியேறச் செய்வதற்கு  ராம்நாத் கோயங்கா மேற்கொண்ட வழிமுறையை விடக் கேடுகெட்ட வழிமுறை கஸ்தூரிரங்கனை வெளியேற்றக் கடைப்பிடிக்கப்பட்டது. அதாவது, அவர் ஆசிரியராகப் பணியிலிருந்த போதே ஒரு நாளிரவு அவருக்கே தெரியாமல், அவரது பெயர் ‘தினமணி'யிலிருந்து  நீக்கப்பட்டது. ‘தினமணி கதிர்'ஆசிரியராக இருந்த சாவிக்கும் இதே போன்ற கதிதான் ஏற்பட்டது. அவர் சென்னையில் இல்லாத சமயம், அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக ஒரு அறிக்கை அவர் வேலை செய்து வந்த அறையின் கதவில் ஒட்டப்பட்டது. ‘தினமணி'யின் இந்த மரபை வைத்தியநாதனால் நிச்சயமாக எழுத முடியாது.
 
கஸ்தூரிரங்கனுக்குப் பின், புனைவிலக்கியப் படைப்பாளி மாலனும் அவருக்குப் பிறகு,  நீண்ட அனுபவம் மிக்க பத்திரிகையாளர் இராம. திரு .சம்பந்தமும் தாம் பொறுபேற்றிருந்த காலங்களில் ‘தினமணி'க்கும் ‘தினமணி கதிரு'க்கும் புதிய பொலிவூட்டினர். அது தனி வரலாறு.
 
 ‘தினமணி'யை  உருவாக்கி வளர்த்த டி.எஸ்.சொக்கலிங்கம், 1943இல் அதிலிருந்து வெளியேற வேண்டியவரானார். அதற்கான காரணத்தை ‘தீபம்” மாத ஏட்டிற்குக் (பிப்ரவரி 1966 கொடுத்த நேர்காணலில் கூறுகிறார்:  “நான் 1934 செப்டம்பர் 11-இல் தினமணி ஆசிரியரானேன். 1945 செப்டம்பர் 1-ஆம் தேதி ராஜிநாமா செய்தேன். அக்காலத்தில், உதவி ஆசிரியர்களுக்கு 50 முதல் 75 ரூபாய் வராஇதான் சம்பளம் கொடுக்கப்பட்டு வந்தது.யுத்த காலமாதலால், கிராக்கிப் படி வேண்டுமென்று அவர்கள் கேட்டார்கள்.அவர்களின் கோரிக்கை மிக நியாயமாக இருந்தது. ஆசிரியனாகிய நான் அதை ஆதரித்தேன். ஆனால் தினமணி நிர்வாகம் அதை எத்ர்த்தது.உதவி ஆசிரியர்கள் ராஜிநாமா செய்தனர். நிர்வாகம் அதனை ஏற்றது.எனவே உதவி ஆசிரியர்களுடன் ஒன்றுபட்டு நானும் ராஜிநாமா செய்தேன்”. அந்த அளவுக்கு அவர் தனது சக பத்திரிகையாளருக்குத் தோள் கொடுப்பவராக, அவர்களுடன் ஒருமைப்பாடு கொண்டவராக இருந்திருக்கிறார்.

‘தினமணி'யிலிருந்து விலகியது பற்றி ‘எனது ராஜிநாமா' என்னும் நூலில் டி.எஸ்.சொக்கலிங்கம் விரிவாக எழுதுகிறார்:  “ஆசிரியர் பதவியில் ஒருவரும், சொந்தக்காரர் வேறு நபர்களாகவும் இருக்கும் பட்சத்தில், ஒரு விஷயம்  முக்கியமானது. அதாவது ஆசிரியர் தனது உரிமையை நிலை நாட்டுவதற்காக வேலையை ராஜிநாமா செய்ய தயாராய் இருக்கவேண்டும். அப்படி இல்லாமல் வேலையும் சம்பளமும்தான் முக்கியமென்று ஆசிரியர் நினைப்பாரெனில் அந்த நொடியே அவர் தமது உரிமைகளை இழந்துவிடுகிறார். அப்புறம் முதலாளிகளின் லாபத்திற்கான கொள்கைதான் பத்திரிகைகளின் கொள்கையாய் இருக்க முடியும்.சுதந்திரக் கொள்கை என்பத் பறந்து விடும். கொள்கையை முன்னிட்டு ராஜிநாமா செய்தால் உடனே அவர் ஸ்தானத்திற்கு வேறு நபர்களைப் பிடிக்க முதலாளிகள் முயல்வார்கள்.

தமிழோ தெலுங்கோ தெரியாதவர்கள்கூட அந்த பாஷைகளில் தினசரிகளை நடத்த முன் வருவதென்றால், அது வெறும் வர்த்தகத்தைத் தவிர வேறேதுமில்லை. அம்மாதிரி வர்த்தக நோக்கமுள்ளவர்கள் தேசீய போர்வை போர்த்திக் கொண்டு வெளியே நடமாடுவது ரொம்ப ஆபத்தானது. பத்திரிகைகளை தங்கள் மனசாட்சியின்படி ஆசிரியர்கள் நடத்துவது சாத்தியமாக இருக்க வேண்டுமானால், ஒருவர் பல பத்திரிகைகளை நடத்தும் வர்த்தகம் தலை காட்டக் கூடாது. அல்லது  பத்திரிகைகள் பொதுஜன சேவையையே முதன்மையாகக் கருத்தி நடப்பதற்கு மற்றொரு ஏற்பாடு அவசியம். அதாவது பத்திரிகையின் ஆசிரியருக்கு நிர்வாகத்திலும் அதிகாரம் இருக்க வேண்டும். அல்லது ஆசிரியர்களே பத்திரிகைகளின் சொந்தக்காரர்களாக இருந்து நடத்த வேண்டும். அநேக ஆசிரியர்களுக்கு அம்மாதிரி செய்வதற்கு வசதி இருப்பதில்லை. ஆகவே முதலாளி வேறு, ஆசிரியர்கள் வேறு என்ற முறையிலேயே அந்தப் பத்திரிகைகள் நடக்கின்றன. இப்படி நடக்கும்போது ஆசிரியர்களை எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றக்கூடிய அதிகாரம் முதலாளிகளுக்கு ஏற்படுகிறது. ஒரு பத்திரிகை, வளர்ச்சியடைகிற வரையில் ஒரு ஆசிரியரை வைத்துக் கொண்டு அப்புறம் அவருக்குச் சீட்டுக் கொடுத்துவிட்டு, தன் இஷ்டப்படி நடக்க காத்துக் கிடக்கும் கருங்காலிகளை அமர்த்திக் கொள்ளத் துணிகிறார்கள்...”

 டி.எஸ்.சொக்கலிங்கம், கடைசி வரை தனது கொள்கையில் உறுதி பிறழாதவராகவே இருந்தார். ‘தினமணி'யை அவர் தொடங்கிய 1934ஆம் ஆண்டிலேயே, காங்கிரஸ் இந்தியப் பெரு முதலாளிகளின் கூடாரமாக அமைந்துவிட்டது என்பதையும் தேசியப் போர்வையில் ராம்நாத் கோயக்கா போன்றவர்கள் பத்திரிகை முதலாளிகளாக வந்தமைந்தது தற்செயலான, வெறும் தனிநபர் சார்ந்த  நிகழ்ச்சியல்ல என்பதையும் டி.எஸ்.சொக்கலிங்கம் எஸ். போன்ற உண்¨மாயான தேசிய விடுதலைப் போராளிகள் அறிந்துகொள்ளாமல் போனது பெரும் வரலாற்று அவலம் என்றால் அவரது பாரம்பரியத்தையே இருட்டடிப்பும் எதிரடிப்பும் செய்கிற வைத்தியநாதன் தினமணிக்கு ஆசிரியராக வந்திருப்பது நம்காலத்தின் அவலம்.

குறிப்பு:
 
டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன் ஆகியோர் தொடர்பான செய்திகளுக்கான ஆதாரங்கள்:
 
1.பொன்.தனசேகரன், டி.எஸ்.சொக்கலிங்கம் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை),சாகித்திய அகாதமி,டெல்லி, 2005.
 
2.பொன்.தனசேகரன், ஏ.என்.சிவராமனின் பத்திரிகை உலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2005
4 கருத்துகள்:

 1. உண்மை முகத்தை அறிய பழைய வரலாறு முக்கியம். அதைத் திருத்த முயற்சிப்பது தவறுதானே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எஸ். வி ராஜதுரையின் கட்டுரை தொடர்பாக எனக்குப் பட்ட சில கருத்துகள்.

   1) டி எஸ் சொக்கலிங்கம் பெயர் 3 முறை தவறாக எழுதப்பட்டதற்கு வைத்தியநாதனைக் குறை கூற முடியாது. அவருக்குப் பெயர் நன்கு தெரியும்.அனால், புரூப் பார்ப்பதில் பெரிய அக்கறை காட்டவில்லை என்பது சரியாக இருக்கலாம்.

   2) குருமூர்த்தியின் எல்லா கருத்துகளுடனும் வைத்தியநாதனுக்கு உடன்பாடு இருக்கவில்லை என்பது நிச்சயம். விடுதலைப் புலிகள் விஷயம்.. ஓர் உதாரணம்.. (சோ கூட வைத்தியானதனுக்கு எதிரானவர்).

   3) அவர் ஆசிரியராகப் பணியிலிருந்த போதே ஒரு நாளிரவு அவருக்கே தெரியாமல், அவரது பெயர் ‘தினமணி'யிலிருந்து நீக்கப்பட்டது என்பது முழுமையான தகவல் அல்ல. அவருக்கு குழுமத்தின் திடீர் முதலாளி எச்சரிப்பது போலத் தெரிவித்துவிட்டார். (நிர்வாகத்தின் சண்டை பின்னர் சமரசம் ஆனா பொது, கஸ்தூரி ரங்கன், ஆசிரியர் பொறுப்பில் ஒரு நாள் மட்டும் இருந்துவிட்டு ஓய்வு பெற நினைத்தார். ஆனால் அதைத் தடுத்தவர் யார் என்று எஸ்.வி.ஆர். விசாரித்து அறிந்து கொள்ளலாம் எனக் கருதுகிறேன்)

   4) வைத்தியநாதனை ஏற்பதற்காக சொல்லவில்லை.இந்துத்துவ, முதலாளித்துவ வைத்தியநாதன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் தொழிலாளர் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய உ.ர. வரதராஜன் பெயர் கூட வரக்கூடாது என்று உத்தரவிட்டவர் முதலாளியின் ஆதரவாளர் ஆர் எம் டி. வரதராஜன் கட்டுரைகள் பின்னர் எப்போது வெளியாயின என்பதை எஸ்.வி.ஆரே அறிவார். இரு காலங்களிலும் ஒரே முதலாளிதான் ஒரே ஆடிட்டர்தான்

   5) இத்தனை காரணங்களால் வைத்தியநாதனை முழுமையாக .மனத்தில் பட்டதையே கூற விரும்பினேன்.

   6) தினமணி வரலாற்றிலேயே சரியான நேர்மையான ஒரே ஆசிரியராக அனுபவத்தின் அடிப்படையில் அடித்துச் சொல்வேன். ஐராவதம் மகாதேவன் மட்டுமே என்று. இதற்கு முன் நீண்டகாலம் ஆசிரியராக இருந்து மறைந்தவர் தொழிலாளிகள், பெண்கள், சமூகத்தின் அடித்தள வகுப்பினர் ஆகியோரை கட்டோடு வெறுத்தவர். வணிகம் மட்டுமே கருத்தில் கொண்டு கருத்துகளை இடம்பெறச் செய்தவர். மகாதேவன் போல சிறிய அவமானம் நேர்ந்தபோது பதவியைத் துச்சமென வீசியவர் அல்ல.

   7) இருந்தாலும் எஸ்.வி.ஆர். மிகவும் மதிக்கத் தக்க மனிதர். ( மீண்டும் உறுதி செய்கிறேன்.மனத்தில் பட்டதைச் சொல்லத் தோன்றியது, அதிகப் பிரசங்கித் தனம் இருந்தால் பொறுத்தருள்க)

   நீக்கு
 2. "முதலில் விநாயகர் ‘பிறந்த நாளை' (சதுர்த்தி) எடுத்துக் கொள்வோம். 1934இல் அந்தப் ‘பிறந்த நாள்' வந்தது செப்டம்பர் 12 ஆம் தேதியேயன்றி, வைத்தியநாதன் கூறுவது போல செபடம்பர் 11 அல்ல; பாரதியாரின் நினைவு நாள் செப்டம்பர் 11-இல்தான் எல்லா ஆண்டுகளிலும் வருகின்றது. ஆனால் விநாயகரின் ‘பிறந்த நாள்' அப்படியல்ல; 1934இல் செப்டம்பர் 12; 1933இல் ஆகஸ்ட் 24; 1935இல் செப்டம்பர் 2, இப்படி ஒவ்வோராண்டும் அதற்கு முந்தைய ஆண்டிலிருந்து சிலநாட்கள் முன்னதாகவோ, பின்னதாகவோ பிறக்கிறார் விநாயகர் ( http://www.drikpanchang.com/festivals/ganesh-chaturthi/ganesh-chaturthi-date-time.html?year=1934 ) முழுமுதல் கடவுளான அவரது பிறந்த நாளைத் தீர்மானிக்கும் அதிகாரம் சோதிடர்களுக்குத்தான் இருக்கின்றது!."
  This is what Mr SVR wrote. There is an opinoon on this disputed date. that is :
  அறிவிப்பு:
  விநாயக சதுர்த்தியை முன்னிட்டு “தினமணி” காரியாலயத்திற்கு நாளைக்கு விடுமுறை. அடுத்த இதழ் 13-9-1934 வியாழக்கிழமை வெளிவரும்.
  - மானேஜர்
  -----------------------
  இந்தக் குறிப்புப் படி, 10ம் தேதி பணியாளர்கள் வேலை செய்து, 11ம் தேதி காலை இதழ் வந்திருக்கும். அன்றைய தினம் அதாவது 11ம் தேதி விடுமுறை விடப்பட்டிருந்தால், 12ம் தேதி இதழ் வெளிவந்திருக்காது, 13ம் தேதி தொடர்ந்து வெளியாகியிருக்கும்.
  அல்லது, இந்தக் குறிப்பில் கண்டபடி, 11ம் தேதி மாலை ஆசிரியர் குழுவில் உள்ள சிலர் குறிப்பிட்ட அளவில் பணிகளைச் செய்து முடித்துவைத்து, 12ம் தேதி விடுமுறை எடுத்துக் கொண்டு, சில பணியாளர்களை வைத்து அச்சகத்தை ஓட்டியிருக்கலாம்.
  அல்லது, விநாயக சதுர்த்தியை முன்னிட்டு காரியாலயத்துக்கு நாளை விடுமுறை என்று 11ம் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளதால், 12ம் தேதி காலை விநாயக சதுர்த்தியை முடித்து, அன்று மாலை பணியாளர்கள் வந்து பதிப்புப் பணியைத் தொடங்கியிருக்கலாம்.
  1934 செப்.11 அன்று பஞ்சாங்கப்படி, காலை 8 மணி வரை த்விதியை என்றும் பின்னர் திரிதியை என்றும் உள்ளது. எனவே அன்று மாலையே விநாயகர் சதுர்த்தி பூஜைக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, செப்.12 அன்று காலை சதுர்த்தி பூஜைகள் கொண்டாடப் பட்டிருக்கலாம்.

  நம்மை பொருத்தவரையில் அது எந்த இழவு நாளாக இருந்து தொலைக்கட்டும். ஒரு நாள் தொடர்பான பிழை வந்தால் கூட விமர்சிப்பது புரியவில்லை.
  உலகில் எல்லா பெரிய மனுஷனும் தான் ஏதாவது ஓரிடத்தில் உளறித் தொலைப்பான். அந்த கருத்தைப் பிடித்துக் கொள்வது எனக்குப் புரியவில்லை..வைத்தியநாதன் கையெழுத்து படிக்கவே முடியாது. தினமணியில் ஆள் பற்றாக் குறையால் நிதானமாக (முன்பு போல்) ப்ரூப் சரியாகப் படிப்பவர் இல்லை என்பதை எல்லோரும் அறிவர். (ப்ரூப் ரீடிங் செய்யும் இதழாளர்களை எள்ளி நகையாடிய முன்னாள் ஆசிரியரையும் எல்லோரும் அறிவர் - அவரே ஒரு காலத்தில் ஒரு தமிழ் நாளேட்டில் அந்த வேலை பார்த்தவர்) அதனால் சொல்கிறேன். டி என் சொக்கலிங்கம் என்று வெளியானதை வைத்து குற்றம் சொல்வது புரியவில்லை.
  இந்தா காரணங்களால் தினமணியின் காவிச் சாயம் மாறிவிட்டது என்றோ முதலாளித்துவப் போக்கு நீங்கிவிட்டதோ என்று சொல்லிவிடமாட்டேன். தோழர் சிவகுமார் (கதிர் ஆசிரியாராக இருந்தவர்) போன்றோரின் திறமைகளைப் பயன்படுத்தாதது பெரும் குற்றம் என்று அறுதியிட்டுச் சொல்வேன்.

  நம்மை பொருத்தவரையில் அது எந்த இழவு நாளாக இருந்து தொலைக்கட்டும். ஒரு நாள் தொடர்பான பிழை வந்தால் கூட விமர்சிப்பது புரியவில்லை.
  உலகில் எல்லா பெரிய மனுஷனும் தான் ஏதாவது ஓரிடத்தில் உளறித் தொலைப்பான். அந்த கருத்தைப் பிடித்துக் கொள்வது எனக்குப் புரியவில்லை..வைத்தியநாதன் கையெழுத்து படிக்கவே முடியாது. தினமணியில் ஆள் பற்றாக் குறையால் நிதானமாக (முன்பு போல்) ப்ரூப் சரியாகப் படிப்பவர் இல்லை என்பதை எல்லோரும் அறிவர். (ப்ரூப் ரீடிங் செய்யும் இதழாளர்களை எள்ளி நகையாடிய முன்னாள் ஆசிரியரையும் எல்லோரும் அறிவர் - அவரே ஒரு காலத்தில் ஒரு தமிழ் நாளேட்டில் அந்த வேலை பார்த்தவர்) அதனால் சொல்கிறேன். டி என் சொக்கலிங்கம் என்று வெளியானதை வைத்து குற்றம் சொல்வது புரியவில்லை.
  இந்தா காரணங்களால் தினமணியின் காவிச் சாயம் மாறிவிட்டது என்றோ முதலாளித்துவப் போக்கு நீங்கிவிட்டதோ என்று சொல்லிவிடமாட்டேன். தோழர் சிவகுமார் (கதிர் ஆசிரியாராக இருந்தவர்) போன்றோரின் திறமைகளைப் பயன்படுத்தாதது பெரும் குற்றம் என்று அறுதியிட்டுச் சொல்வேன்.

  அருள் கூர்ந்து என்னை மன்னிக்க வேண்டும். யாரும் முழக்க முழுக்க சரி என்றோ, இல்லை தவறு என்றோ கூறக் கூடாது என்றும், சில கருத்துக்களை மனத்தில் ஏற்றிக் கொண்டு விமர்சனம் செய்துவிடக்கூடாதே என்ற ஆதங்கம்தான் இது போல் கருத்தைச் சொல்லத் தூண்டியது. வேறொன்றும் இல்லை.

  பதிலளிநீக்கு