அகமணமுறை தடைச்சட்டமும் ஆண்டப்பரம்பரை அப்பாடக்கர்களும் - ஆதவன் தீட்சண்யா

குறுக்குசால் - 4

தமிழ்நாட்டில் மிகவும் அரிதாகவே வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் காதலிக்கிறார்கள். அதனிலும் அரிதாகவே சேர்ந்து வாழத் துணிகிறார்கள். சேர்ந்துவாழும் தமது முடிவை சாதி தடுக்கும் பட்சத்தில் அதை எதிர்த்து புறம்தள்ளிவிட்டு மணம் முடிக்கிறவர்களின் எண்ணிக்கை வெகுசொற்பம். இவர்களும் திருமணம் என்கிற ஓரம்சத்தில் மட்டும்தான் சாதியை எதிர்க்கிறார்கள். திருமணத்திற்கு முன்பிருந்ததைப் போலவே அதற்கு பின்பும் இவர்கள் தத்தமது சாதியின் உறுப்பினராகத்தான் எஞ்சிய வாழ்வை நடத்துகிறார்கள். எனவே இவர்களை சாதியத்திற்கு எதிரானவர்கள் என்று மிகைப்படுத்தி புரிந்துகொள்ளத் தேவையில்லை. இவர்களது திருமணம் சாதிக்கலப்புத் திருமணம்தானேயன்றி சாதிமறுப்புத் திருமணம் அல்ல. எனினும் தமது சாதியின் தூய்மையில் ஒரு கலப்பினை கொண்டுவந்து சேர்த்தமைக்காக இவர்களை இவர்களது சாதிகள் ஒருபோதும் மன்னிப்பதில்லை.

சாதிகளுக்குள் நடக்கின்ற இத்தகைய கலப்புகளுக்கு தொடக்கத்தில் ஏற்படுகிற எதிர்ப்பு காலப்போக்கில் தணிந்துவிடுவதாகவும் அது வன்முறையாக மாறுவதில்லை என்றும் பொத்தாம்பொதுவாக ஒரு கருத்து இருக்கிறது. இருதரப்பு குடும்பத்தாருக்குள் சிறுசிறு சச்சரவுகளும் கைகலப்புகளும் நடந்தாலும் அவை இரு சாதிகளுக்கிடையே மோதலாக உருவெடுக்காமல் தணிந்து போவதாகவும் கூறப்படுகிறது. தமது சாதியின் புனிதத்திற்கு களங்கம் விளைவித்தவரின் சாதிக்கெதிராக தெருவிலிறங்கி கலவரம் செய்யாத இவர்கள் தான், அத்தகைய களங்கத்திற்கு காரணமான தனது மகளையோ மகனையோகௌரவக் கொலைஎன்கிற இழிபெயரால் கொன்றொழிக்கிறார்கள். இதையும் மீறி மணம் முடிக்கிறவர்களால் சாதியத்திற்கு எவ்விதச் சேதாரமும் ஏற்பட்டுவிடுவதில்லை. ஏனென்றால் இவர்களும் திருமணத்திற்கு முன்பிருந்ததைப் போலவே பின்பும் தத்தமது சாதியின் உறுப்பினராகத்தான் எஞ்சிய வாழ்வை நடத்துகிறார்கள்.

பிறப்பின் அடிப்படையிலான சாதியத்தை ஒழித்துக்கட்டுவதற்கான முதல் நடவடிக்கை பிறப்பை சாதியற்றதாக்குவதுதான். அதற்காக சொந்தசாதியை மறுத்து வேறுசாதியில் அல்லது சாதியத்திற்கு வெளியே இருக்கிற தலித்துகளிலிருந்து வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பது என்கிற அரசியல் நிலைப்பாட்டிலிருந்து ஆண்டொன்றுக்கு விரலளவு எண்ணிக்கையில் திருமணங்கள் நடந்துவிட்டால் அதுவே பேரதிசயம்தான். சாதியொழிப்பை எவ்வகையிலேனும் தமது செயற்திட்டமாகக் கொண்டிருக்கிற இயக்கங்களின் ஊழியர்களில் ஓரிருவர் மட்டுமே இத்தகைய சரியான முடிவை மேற்கொள்கின்றனரேயன்றி இது சமூகத்தின் பொதுப்போக்காக மாறவில்லை. எனவே அரசியல் பரபரப்புக்காக இத்தகைய திருமணங்கள் நடப்பதாக முத்திரை குத்தி அதன்மீது வெகுஜன கவனம் பதியாமல் ஒதுக்கித்தள்ளுவதற்கு சாதியவாதிகளால் முடிகிறது.

சாதிகளுக்குள் நடக்கிற கலப்புகளே இப்படி அரிதென்றால் சாதியத்திற்கு வெளியே உள்ள தலித்துகளோடு கலப்பு என்பதோ அரிதினும் அரிதாகவே நடக்கிறது. உண்மையான அர்த்தத்தில் இந்தக்கலப்புதான் சாதியத்திற்கு எதிரானது, சாதியத்தை மறுக்கக்கூடியது. அதனால்தான் எந்தவொரு சாதியும் தலித்தோடு கலக்கும்போது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. சாதிகளுக்கள்ளான கலப்புகளை ஒருவாறு சகித்துக்கொள்கிற அல்லது குடும்பத்தோடு சேர்ந்து கொலைசெய்தாவது மூடிமறைத்துவிடுகிறவர்கள், தலித்துகளோடு ஏற்படும் கலப்பினை கிஞ்சித்தும் சகித்துக்கொள்வதில்லை. தங்கள் சாதிக்குள் ஏற்படும் தலித் கலப்பினை எவ்வளவு காலம் காத்திருந்தேனும் தீர்த்துக்கட்டுகிற கொடூரங்களையும் இதர வன்கொடுமைகளையும் வரலாற்றின் நெடுகிலும் காணமுடியும். தலித்துகள்மீது நிகழ்த்தப்படும் இத்தகைய வன்கொடுமைகள் தலித்துகளை மட்டுமல்லாது சாதிமாறி கலக்க நினைக்கிற மற்றமற்ற சாதியினருக்கும் அச்சத்தை உருவாக்கும் வகையில் நிகழ்த்தப்படுகின்றன.

சாதியானது, ஒருவர் யாரை திருமணம் செய்துகொள்ளலாம் அல்லது செய்துகொள்ளக்கூடாது என்பதற்கான எல்லையாக மட்டும் இருக்கவில்லை. சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் ஒருவருக்கான உரிமைகளையும் அதிகாரங்களையும் அந்தஸ்துகளையும் தீர்மானிப்பதாகவும் இருக்கிறது. எனவே சாதிக்கலப்புத் திருமணத்தின் மூலம் இவற்றையெல்லாம் இழக்கநேருமோ என்கிற அச்சத்தில் பெரும்பாலானவர்கள் சொந்த சாதிக்குள்ளேயே வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு பிராமணர் சங்கம், கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள் பேரவை, கொங்குநாடு முன்னேற்றக் கழகம், பாட்டாளி மர்டரர் கட்சி போன்ற சாதியமைப்புகள் கிளப்பிவிட்டுள்ள பீதியால் சொந்த சாதிக்குள் திருமணம் செய்துகொள்ளும் அகமண முறையே அழிவுகட்டத்தை எட்டிவிட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த அமைப்புகளின் அலறலையும் உளறலையும் கேட்கிற ஒருவர், ஏதோ நாடெங்கும் அகமண முறை அருகிப்போய் சாதிக்கலப்பு மணங்களே எங்கும் நடக்கிறதோவென நினைத்துவிடவும் கூடும். தத்தமது சாதியின் ஒவ்வொரு தனிநபரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தமது கருத்தியல் ஆதரவாளர்களாகவும் ஓட்டுவங்கியாகவும் கவ்வியிழுத்து வரும் நோக்கில் கிளப்பிவிடப்பட்ட இந்த பீதி இப்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளது. தங்கள் சாதியின்புனிதம்/ தூய்மையைபாதுகாப்பதற்காக அந்தந்த சாதிசார்ந்த தனிமனிதர்களுக்கும் குடும்பங்களுக்குமான வேலைப் பிரிவினைகளை இவ்வமைப்புகள் வகுத்துள்ளன

முதலாவதாக, சாதியைக் காப்பாற்றுவதில் தனிநபர்களுக்குரிய பொறுப்பு வலியுறுத்தப்படுகிறது. இதற்காகவேறுசாதி கலப்பினால் நமது சாதியின் பண்பாடு சிதைவதற்கு நான் காரணமாக இருக்கமாட்டேன், ஆகவே சொந்த சாதியில்தான் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பேன்என்று திருமணமாகாத இளைஞர்களை உறுதிமொழியேற்கச் செய்வதில் இவ்வமைப்புகள் ஈடுபட்டுள்ளன. வளர்ப்புமுறையின் காரணமாக பெரும்பாலான இளைஞர்களுக்குள் ஏற்கனவே ஒரு உணர்வாக ஓடிக்கொண்டிருந்த இந்த உறுதிமொழியின் வாசகங்களை ஒரு பொதுவெளியில் உற்றார் உறவினர் முன்னிலையில் ஊடகவெளிச்சத்தில் உச்சரித்து ஏற்கச் செய்வதன் நோக்கம் வெளிப்படையானது. அதாவது, என்னதான் படித்து வேலையிலிருந்தாலும் நவீனச் சிந்தனைகள் ஊடாடும் இடங்களுக்குச் சென்றுவந்தாலும் இன்னும் சாதியத்தின் அங்கத்தினராகவே நான் இருக்கிறேன் என்பதை  ஊரறிய உலகறிய ஒவ்வொருவரையும் மறுஉறுதிப்படுத்துமாறு இந்த உறுதிமொழி ஏற்பு வலியுறுத்துகிறது. புதிய வாழ்க்கைச்சூழல்களால் நவீனச் சிந்தனைகளுக்கு ஆட்பட்டிருப்பார்கள் என்று நம்பப் பட்டு வந்த நகர்ப்புற நடுத்தர/ மேட்டுக்குடியினர் இன்னும் அப்பட்டமான சாதியர்களாகவே பழமை வாதத்திற்குள் ஊறி நொதித்துக்கிடப்பதை இந்த உறுதிமொழியேற்பு காட்டிக் கொடுத்துள்ளதுசாதியின் கண்ணியில் ஒரு தனிநபருக்கு ஏற்படும் தளர்வுகளை முறுக்கி உளவியல்ரீதியாக விரைப்பேற்றிவிடும் ஏற்பாடாக நடந்தவரும் இந்த உறுதிமொழி ஏற்பை சம்பிரதாயமான ஒரு நிகழ்வாக கருதமுடியவில்லை

சாதிக்கலப்புத் திருமணங்களுக்கு எதிரான மனநிலை கிராமத்தவர்- நகரவாசி, படிப்பறிவில்லாதவர் - அறிவாளிகளின் படிப்பென பீற்றப்படும் பி., பி.டெக், எம்.பி. பட்டதாரிகள், ஆண்- பெண், ஏழை- பணக்காரர் என எல்லோரிடமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. நாளிதழ்களில் வரும் மணமக்கள் தேவை விளம்பரங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே இந்த உண்மை பிடிபட்டுவிடும். சாதியத்தை காலத்திற்கேற்ப தகவமைக்கும் சாதனங்களில் ஒன்றாக கல்வியை இழித்திறக்கும் ஆண் பட்டதாரிகளைக் கொண்ட குழுவொன்று கரூர், நாமக்கல் போன்ற பகுதிகளில் - குறிப்பாக பெண்களிடத்தில்- கலப்புத்திருமண எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதுஇவர்களைப்போலவே மெத்தப் படித்து வேறுவகை பண்பாட்டுச்சூழல் கொண்ட அயல்நாடுகளில் வசிக்கும் பல இந்திய/ தமிழ் இளைஞர்ளும்கூட இணைய வெளிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் சாதிக்கலப்புக்கு எதிராக கடும் வசைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதைக் காணமுடியும். இந்த சாதியர்கள் கலப்புத் திருமண எதிர்ப்பு இயக்கம், கலப்புத் திருமண எதிர்ப்பு பிரச்சார இயக்கம் என்பதான பெயர்களில் திரண்டு இணையவெளிகளிலும் ஊர்/சேரி போன்றதான பிரிவினையை உருவாக்கியுள்ளனர். இதுவரைகாலமும் தமிழ்/ தமிழர் என்று மொழி/இனப்பற்று பேசிவந்த பலரும் இன்று அப்பட்டமான சாதியர்களாக வெளிப்பட்டுள்ளனர். இவர்களையெல்லாம் ஒருங்கிணைக்கும் முயற்சியில் பல்வேறு ராமதாஸ்கள் வெறியோடு களமிறங்கியிருக்கிறார்கள். 2014ஆம் ஆண்டு திருப்பூரில் கலப்புத்திருமண எதிர்ப்பு மாநாடு ஒன்றை நடத்தப்போவதாக பொங்கலூர் மணிகண்டன் அறிவித்திருப்பதும் இதன் ஒருபகுதி தான். சாதிக்கலப்புக்கு எதிரான தனிமனிதர்களை ஒரு அமைப்பாக நிறுவனப்படுத்தும் இந்த இழிமுயற்சிக்கு வேறுபல சாதியமைப்புகளும் சாதியமைப்புகளைச் சாராதவர்களும் கருத்தியல்ரீதியான ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்.

சாதியின் சிற்றலகான ஒவ்வொரு இந்துக்குடும்பமும் தமது குழந்தைகளை பிறசாதிகாத்துக்கருப்புதீண்டிவிடாமல் வளர்த்து சாதியின் தூய்மையை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்பொருட்டு தனது அண்டை அயலாராக வேறு சாதியினரோ மதத்தவரோ வசிப்பதை எந்தவொரு இந்துக்குடும்பமும் விரும்புவதில்லை. சொந்தச்சாதியினர் சூழ்ந்திருக்கும் தெருவில்/ பகுதியில் தனது வசிப்பிடம் இருப்பதையே குடும்பம் பாதுகாப்பானதாக கருதுகிறது. ஊர்/ சேரி என்கிற முதன்மைப்பிளவும், சாதிவாரியான தெருக்கள் என்கிற துணைப்பிளவும் சாதியின் தூய்மையைக் காப்பாற்ற அவசியம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக நிலைபெற்றுள்ளது. எனவே, தாமல்லாத மற்றவர்களை தமது அண்டைஅயலாராக ஏற்று இணங்கிவாழ்வதில் உலகளவில் மிகக்குறைந்த சகிப்புத்தன்மை உள்ளவர்களின் பட்டியலில் இரண்டாமிடத்தை இந்தியர்கள் பெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் சாதிய மனநிலைதான்.

சாதிவாரியான வாழிடங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் மற்றெல்லா குடும்பங்களையும் கண்காணிப்பதைப்போலவே ஒவ்வொரு குடும்பத்தையும் மற்றெல்லா குடும்பங்களும் கண்காணிப்பது ஒரு மானசீக உடன்படிக்கையின் பேரில் நடக்கிறது. அதுபோலவே குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் குடும்பத்தின் மற்றவர்களை கண்காணித்து நெறிப்படுத்தி சாதிவளையத்திற்கு வெளியே வராத வண்ணம் பிடித்துக்கொள்ளும் கிடுக்கி பாசத்தினால் பூசப்பட்டுள்ளது. பிற சாதியினரோடு பழகுவதற்கான எல்லையை குழந்தைகளுக்கு உணரச் செய்வதும், உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் திருமணம் என்பது சொந்தசாதிக்குள்தான் நிகழவேண்டும் என்கிற மனப்பதிவுடன் குழந்தைகளை வளர்ப்பதும் குடும்பத்தின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. சாதியைக் காப்பாற்றுவதிலும் மறுவுற்பத்தி செய்வதிலும் குடும்பம் கொண்டுள்ள மனப்பாங்குதான் சாதிக்கலப்புக்கு எதிரான அமைப்புகளை உற்சாகமூட்டி இயங்கவைக்கிறது. இவ்வமைப்புகள்சமுதாய விழா/ குடும்ப விழாஎன்ற பெயரில் சாதியக்கூடுகைகளை ஒழுங்கு செய்து அதில் குடும்பவாரியாக பங்கேற்பவர்களிடம் தமக்கான மணவுறவுகளை சொந்த சாதிக்குள்ளேயே தேடிக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்குகின்றன. அதாவது, சொந்தசாதிக்காரரோடு மட்டுமே உடலுறவு கொண்டு சொந்தசாதிக் குழந்தையை மட்டுமே பெற்றெடுக்க வேண்டும் என்கிற விசயத்தை வெளிப்படையாகவன்றி பூசிமெழுகி போதிக்கின்றன. தங்களது சாதியின் தூய்மையை மேன்மையை காப்பாற்றுவதில் ஒவ்வொரு குடும்பத்திற்குமுள்ள பொறுப்புகளை வலியுறுத்துவதும் நினைவூட்டுவதுமே இவ்விழாக்களின் நோக்கமாக இருக்கிறது.

சாதியவாதிகள் இத்தோடும் நின்றுவிடாமல் சாதிக்கலப்புத்திருமணங்களுக்கு தடைவிதிக்கும் சட்டம் ஒன்றை நிறைவேற்றுமாறு அரசிடம் கோரிவருகின்றனர். இப்படியொரு சட்டத்திற்கான தேவையே ஏற்பட்டிருக்கவில்லை என்கிற உண்மையை மறைத்து பெருங்குரலெடுத்து இக்கோரிக்கை எழுப்பப்படுகிறது. தீண்டாமையை ஒரு குற்றம் என்று அறிவித்துள்ள, சாதிக்கலப்புத் திருமணங்களை ஆதரித்து ஊக்கத்தொகை வழங்கிவருகின்ற ஒரு அரசிடம்  இப்படியொரு எதிரிடைக் கோரிக்கையை வைக்குமளவுக்கு அவர்கள் இக்காலத்தில் வல்லூக்கம் பெற்றிருக்கிறார்கள்.

சாதிக்கலப்புத் திருமணங்களுக்கு எதிராக சாதியவாதிகள் இவ்வளவு தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில் அவர்களை அதேவேகத்தில் எதிர்கொள்கிற/ ஈடுகொடுக்கிற நிலையில் சாதிக்கலப்புத் திருமணங்களை ஆதரிப்பவர்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கவில்லை. பொத்தாம்பொதுவாக சாதியத்தை கடுமையாக விமர்சிக்கிற- ஆனால் தன்சாதியைப் பற்றிய எந்த விமர்சனத்தையும் தாங்கிக் கொள்ளமுடியாத வினோதமான சாதியெதிர்ப்புவாதிகளை கழித்துவிட்டால், சாதியொழிப்பை குறைந்தபட்சம் தமது செயல்திட்டமாக கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெரியாரிய/ அம்பேத்கரிய/ மார்க்சிய இயக்கங்களில்தான் சிதறிக் கிடக்கின்றனர். அகமணமுறை, குடும்பம், ரத்தக்கலப்பு பற்றிய அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ்-ஏங்கல்ஸ் கூற்றுகளிலிருந்து சில ஈர்ப்பான மேற்கோள்களை உணர்ச்சிகரமாக பயன்படுத்துவதை தாண்டி இவர்களிடம் வேறுவகையான செயற்திட்டம் இல்லை என்பது குற்றச்சாட்டல்ல, உண்மை. தீண்டாமையின் பெயரால் வன்கொடுமைகள் நிகழும்போது சட்டரீதியான தலையீடுகளைக் கோரி சில அடையாளப்பூர்வமான போராட்டங்களை நடத்திவிட்டு சாதியொழிப்புக்கான களப்பணியை ஆற்றிவிட்டதாக திருப்தி கொள்ளும் மனநிலையால் இவர்கள் பீடிக்கப்பட்டுள்ளனர். அதிலும்கூட உடல் மற்றும் பொருள் ரீதியான இழப்புகளை வெளிப்படையாக காட்டுகின்ற வன்கொடுமைகள் நிகழும்போது குறுக்கீடு செய்கிற இவர்கள் உளவியல்ரீதியான பாதிப்புகளை உருவாக்கும் வன்கொடுமைகளை மென்கொடுமைகளாகக்கூட கவனிக்கத் தவறுகின்றனர். விளைவுகளை உருவாக்காத சில மாநாடுகளையும் அரங்கக் கூட்டங்களையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்துவதோடு திருப்தி கொள்கிறவர்களாக இவர்கள் இருக்கின்றனர்.

சாதியவாதிகள் களத்திற்குச் சென்று நேருக்கு நேராக மக்களை சந்தித்து கருத்தியல்ரீதியாக அணிதிரட்டிக்கொண்டிருக்கும்போது சாதியொழிப்பாளர் எனப்படுவோர் மக்களைச் சந்திக்காமல் மேடைகளிலிருந்து தமது தொண்டர்களிடம் மட்டுமே உரையாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நேருக்குநேர் சாதியவாதிகளை சந்திப்பதற்கு திராணியற்று ஆளற்ற இணையவெளிகளில் அட்டைக்கத்தி சுழற்றுகிறவர்கள் என்கிற குற்றச்சாட்டுக்கும்கூட இவர்கள் ஆளாகியிருக்கிறார்கள். ஒத்தக் கருத்துடையவர்களோடு மட்டுமே உரையாடிக் கிடக்கும் இவர்கள் மாற்றுக் கருத்துள்ளவர்களோடு- அவர்களை வென்றெடுக்கும் நோக்கில்- இன்னும் உரையாடலைத் தொடங்கவேயில்லை. சாதி என்பது ஒவ்வொருவரையும் தனித்தனியாக பீடித்திருக்கும் ஒரு உணர்வு. குடும்பம், உறவினர்கள், பரம்பரை, சந்ததி, தலைக்கட்டு என்கிற உறவுமுறைகளால் இறுக்கமடைந்து கொண்டிருக்கும் இந்த உணர்விலிருந்து ஒருவர் தன்னை விடுவித்துக்கொள்ளும் முடிவை எடுப்பதற்கு பெரும் துணிச்சல் தேவை. அதற்காக அவர் தனக்குள்ளும் வெளியிலும் நடத்திக்கொள்ள வேண்டிய போராட்டங்களில் உடன் நிற்பதற்கும், சாதியிலிருந்து விலகி வாழமுடியும் என்கிற நம்பிக்கையை வழங்குவதற்குமான அமைப்புகளையோ முன்மாதிரிக் குழுக்களையோ இவர்கள் இன்னமும் உருவாக்கவில்லை. ஒருவகையில் பார்த்தால் சாதியத்தைப் பற்றி விதவிதமான வியாக்கியானங்களை செய்து கொண்டிருக்கிறார்களேயன்றி சாதியை ஒழிப்பதற்கான / ஒரு மாற்றத்தை நிகழ்த்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபடவில்லை.

சாதியொழிப்பு வெற்று முழக்கங்களுக்குப் பதிலாக திட்டவட்டமான நிகழ்ச்சிநிரலைக் கோருகிறது. வக்கணையான வியாக்கியானங்களுக்குப் பதிலாக மாற்றத்தை நிகழ்த்தக்கூடிய செயல்பாடுகளைக் கோருகிறது. சாதியொழிப்புக்கு குறைந்தபட்சத்தேவையே சொந்த சாதிக்குள் மணவுறவை ஏற்படுத்தும் அகமணமுறையை ஒழித்துக்கட்டுவதுதான். அகமண முறையை ஒழித்துக் கட்டுவதற்கும் குறைவான எந்தவொரு செயலிலிருந்தும் சாதியொழிப்பைத் தொடங்கமுடியாது. அதுமட்டுமல்ல, மரபணுக்கோளாறுகளுடன் உடல்/மனநலம் குன்றிய குழந்தைகள் பிறப்பதை தடுத்து ஆரோக்கியமான சந்ததிகளை பெற்றெடுப்பதற்கும்கூட இந்த அகமணமுறையை ஒழித்துக்கட்ட வேண்டியிருக்கிறது. மனிதர்களின் இயல்பூக்கங்களுக்கும் விருப்பார்வங்களுக்கும் தனிமனித உரிமைகளுக்கும் எதிரான அகமணமுறையை கைவிடுமாறு தீவிரமான தொடர் கருத்துப் பிரச்சாரத்தை மேற்கொள்வதோடு, அகமணமுறையில் நடக்கும் திருமணங்கள் அனைத்தையும் சட்ட விரோதமானவை என அறிவிக்குமாறு அரசை வற்புறுத்தி போராடுவதும் அவசியமாகிறது. சாதியொழிப்பில் நம்பிக்கையுள்ளவர்கள் அகமணமுறை தடைச்சட்டத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய காலமிது.

***

ஆண்டப்பரம்பரை என்பது அப்படியொன்றும் மரியாதைக்குரிய தகுதியல்ல. ஆனாலும் ஆண்டப் பரம்பரை என்று பீற்றாத சாதி எதுவுமே இல்லை என்றாகிவிட்டது. சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் வழித்தோன்றல்கள் என்று தம்மை அனேகமாக எல்லாச் சாதிகளுமே அறிவித்துக் கொண்டிருக்கின்றன. பேரரசர்களின் வழித்தோன்றல்களாக இடம் பிடிக்காமல் விடுபட்டவர்கள், நாலுத்தெருவுக்கு நாட்டாமையாக இருந்தவனையெல்லாம் ராஜா என்று முன்னிறுத்தி அப்பேர்ப்பட்டவன் பரம்பரையாக்கும் நாங்கள் என்று அலட்டுகிறார்கள். ஆண்டப் பரம்பரை யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போங்கள், ஆட்டுவித்த பரம்பரை நாங்கள் தான் என்கிற மமதையிலோ என்னவோ இந்த வழித்தோன்றல் போட்டியில் பொதுவாக பார்ப்பனர்கள் பங்கெடுப்பதில்லை.

சிற்றரசர்கள் முதல் பேரரசர்கள் வரையான பலரும் தத்தமது ஆளுமையின் கீழிருந்த மக்களை வில்லன்களாகத்தான் ஆண்டிருக்கிறார்கள். அதிகாரத்தின் பெயரால் மனிதப்பண்பு துளியுமற்ற வன்முறையாளர்களாக, போர்வெறியர்களாக, கொள்ளையர்களாக, மொடாக்குடியர்களாக, காமுகர்களாக, ஊதாரிகளாக இருந்தவர்களின் வாரீசுகள் என்று சொல்லிக்கொள்வதில் என்னதான் பெருமையிருக்கிறதோ? ஒருவேளை, ஊரையடித்து உலையில் போடுவதற்கு எங்கள் பரம்பரைக்கு ஏற்கனவே அனுபவம் இருக்கிறது என்று நிறுவப் பார்க்கிறார்களோ என்னவோ? அட, அப்படியே ஆண்ட பரம்பரையாகவே இருந்தாலும், அத்தனைப்பேருமா கீரிடம் கட்டிக் கொண்டு திரிந்தீர்கள்? யாரோ ஒருத்தன்தான் ஆண்டிருப்பான், அவனது மனைவிகள் உட்பட மற்ற எல்லாரும் அடிமைகளாகத்தானே இருந்திருப்பீர்கள் என்று கேட்டால் ஆண்டப் பரம்பரையையே அசிங்கப்படுத்தகிறாயா என முண்டா தட்டுகிறார்கள்.

ஆண்டப்பரம்பரை என்றாகிவிட்ட பிறகு அதற்கென ஒரு செருக்கும் திமிரும் தெனாவட்டும் தேவை என்றாகிவிடுகிறது. பிறகு, ஆண்டப்பரம்பரையினர் ஆதிக்கம் செய்யக்கூடிய சாதியில்தான் பிறந்திருக்கமுடியும் என்று நம்பவேண்டியிருக்கிறது. அத்தோடும் நில்லாமல் யாரையாவது அடக்கி ஒடுக்காமல் ஆண்டப்பரம்பரை என்று எப்படித்தான் வாரீசுரிமை கோருவது என்கிற குழப்பமும் சேர்ந்தாட்டுகிறது. எனவே இருக்கவே இருக்கிறார்கள் தலித்துகள், தாக்கு அவர்களை என்பதுதான் இன்றைக்கு பார்ப்பனரல்லாத சாதியினரின் மனப்பாங்கு.

நாங்கள் பெரியசாதி, மேல்சாதி, உயர்சாதி என்றெல்லாம் பீற்றுகிற இவர்கள், யாரைவிட பெரிய சாதி, யாரைவிட மேல்சாதி, யாரைவிட உயர்ந்த சாதி என்கிற கேள்விகளை எழுப்பிக் கொள்வதில்லையாதலால் யாருக்கெல்லாம் கீழ்ச்சாதியாக ஒடுங்கிக்கிடக்கிறோம் என்பதையும் யோசிப்பதில்லை. ஆண்டப்பரம்பரை/ மேல்சாதி என்கிற மிதப்பு தரும் கற்பித பெருமிதத்தை உண்மை என்று அவர்களே நம்பிக்கொள்வதற்காக தங்களுக்கும் கீழே இருப்பவர்களை ஒடுக்குகிறவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் இந்த ஆண்டப்பரம்பரை அப்பாடக்கர்களில் பெரும்பாலானவர்களுக்கு இன்று குந்த குடிசையில்லை, குண்டி மறைக்கத் துணியுமில்லை. நிலமில்லை, வீடில்லை, கல்வியில்லை, வேலையில்லை, கண்ணியமாக வாழ நிரந்தர வருமானமுமில்லை என்பதுதான் எதார்த்தம் என்றாகிவிட்ட பிறகு ஆண்டப்பரம்பரை மோண்டப் பரம்பரை என்கிற அலட்டல்கள் எதுக்கு? சரி, ஆண்டப்பரம்பரையா இருந்தவங்க ஏன்டாப்பா இப்படி அன்னாடங்காய்ச்சி ஆனீங்க என்று கேட்டால் ஆண்டுஆண்டு இப்படி ஆயிட்டோம் என்கிறார்கள். ஆண்டப்பரம்பரை/ மேல்சாதி என்கிற கற்பிதக் கொழுப்பில், சாதியடுக்கில் கீழே இருப்பவர்களை ஒடுக்குவது/ தீண்டாமைக்கொடுமைகளை இழைப்பது, தமக்கும் மேலே இருப்பவர்களைக் காட்டி பின்தங்கி/ தாழ்த்தப்பட்டுக் கிடப்பதாக இடஒதுக்கீடு கேட்பது என்கிற இரட்டைநிலைகளை கைக்கொண்டுள்ளனர்.

பார்ப்பனர் தவிர மற்றெல்லாருமே சாதியமைப்பினால் பாதிப்படைந்தவர்கள்தாம். வரலாற்று ரீதியாக ஏற்பட்ட இழப்புகளுக்கும் அவமானங்களுக்கும் பின்தங்கிய/ தாழ்த்தப்பட்ட நிலைமைக்கும் உரிய நிவாரணத்தின் ஒருபகுதியாக இடஒதுக்கீடு வழங்கப்பட்டாக வேண்டும். சமூக அரசியல் பொருளாதார மற்றும் பண்பாட்டுத்தளங்களில்  மக்கள்தொகை விகிதாச்சாரத்திற்கேற்ற பிரதிநிதித்துவம் என்கிற அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் சாதியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று காட்டி இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொண்டு, சாதிய ஒடுக்குமுறையாளர்களாகவும் வன்கொடுமை புரிபவர்களாகவும் நீடிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. எனவே உயர்சாதி என்று பீற்றிக்கொண்டு தீண்டாமைக் குற்றத்தில்சாதிய ஒடுக்குமுறையில் ஈடுபடுகிற எவரும் இடஒதுக்கீட்டின் பலன்களைப் பெறுவதை தடுக்கும்வகையில் ஒரு சட்டம்  தேவைப்படுகிறது. குற்றநடைமுறைச் சட்டங்கள்/ வன்கொடுமை தடுப்புச்சட்டங்கள் போன்றவற்றில் ஒட்டுப்போடாமல் இதை தனித்தச்சட்டமாக நிறைவேற்றுமாறு கோரவேண்டியுள்ளது.

***
தகவல் தொடர்பு சாதனங்களும் ஊடகங்களும் உச்சபட்ச வளர்ச்சியை எட்டியுள்ளதாக கூறப்படும் இந்நாட்களிலும் தலித்துகள் மீது இழைக்கப்படும் வன்கொடுமைகள் உடனடியாக வெளியுலகுக்கு தெரிவதில்லை. காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டாலும் உடனடியாக களத்துக்கு வருவதில்லை. தமிழ்சினிமாவில் வருவதுபோல எல்லாக்கொடுமைகளும் நிகழ்த்தப்பட்ட பிறகு கடைசியாகவும்கூட வந்து தொலைப்பதில்லை. முறையிடுவதற்காக காவல்நிலையத்துக்குச் செல்கிறவர்கள் அங்கு வன்கொடுமையின் அடுத்தக்கட்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. தலித்துகளின் புகார்களை வாங்க மறுப்பது மட்டுமல்ல, புகார் கொடுக்கத் துணிந்ததற்காக காவல் துறையினர் தாக்குதலிலும் ஈடுபடுகின்றனர். அதையும் மீறி புகார் பதிவு செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும்பட்சத்தில், வன்கொடுமையில் ஈடுபட்ட எதிர்த்தரப்பை வரவழைக்கிற காவல்துறையினர், அவர்களிடம் எதிர்ப்புகார் ஒன்றை பெற்று தலித்துகள்மீதும் வழக்கு பதிவு செய்கின்றனர். தலித்துகளின் புகார்களை செயலற்றதாக்குவது அல்லது அவர்களை பணியவைத்து புகாரை திரும்பப்பெறச் செய்து வன்கொடுமையாளர்களை காப்பாற்றுவது என்பது தான் காவல் துறையினரின் நோக்கமாக இருக்கிறது. அரசாங்க ஊழியர்களாகிய காவல்துறையினர் அந்தந்த வட்டாரத்திலுள்ள ஆதிக்கச் சாதியினரின் ஏவலை நிறைவேற்றுகிற அடியாட்களாக தம்மைத்தாமே கீழிறக்கிக் கொண்டுள்ளனர். இப்படியான காரணங்களினால்தான் நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளில் பெரும்பாலானவை கணக்கில்வராமலும் வெளியுலகுக்கு தெரியாமலும் போகின்றன.

எனவே, வன்கொடுமைத் தாக்குதல் எங்கு நடந்தாலும் அதுபற்றி அச்சமின்றி உடனுக்குடன் அரசின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் மாநிலம் முழுவதற்கும் பொதுவான தனித்த இலவச தொலைபேசி எண் சேவையினை (Toll Free Telephone Number) அரசு தொடங்கவேண்டும். முதல்வரின் தனிப்பிரிவு அல்லது சுயேச்சையான நிர்வாக அமைப்பொன்றுடன் நேரடியாக இச்சேவை இணைக்கப்பட்டு பதிவாகும் புகார்கள்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோருவது அப்படியொன்றும் அதீதமான கோரிக்கையல்ல

மேலதிக வாசிப்புக்கு: நன்றி: அணையா வெண்மணி

2 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. //மாநிலம் முழுவதற்கும் பொதுவான தனித்த இலவச தொலைபேசி எண் சேவையினை (Toll Free Telephone Number) அரசு தொடங்கவேண்டும். முதல்வரின் தனிப்பிரிவு அல்லது சுயேச்சையான நிர்வாக அமைப்பொன்றுடன் நேரடியாக இச்சேவை இணைக்கப்பட்டு பதிவாகும் புகார்கள்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோருவது அப்படியொன்றும் அதீதமான கோரிக்கையல்ல.//
    அதீதமான கோரிக்கை என்று பதிவாகும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டாலும்,தாக்குதல்கள் பற்றிய தெளிவான விபரங்கள் பதிவாகும்.அதற்காகவாவது இப்படி ஒரு சேவை தேவையே.

    பதிலளிநீக்கு