ரன்வீர் சேனாவின் அரசியல் புரவலர்கள் -எஸ்.வி. ராஜதுரை

13.10.2013 அன்று 'தந்துகி"யில் வெளியான ‘சாதிக்கொரு நீதி' கட்டுரையின் தொடர்ச்சியாக சில   செய்திகள்:
லஷ்மன்பூர் பாத்தே படுகொலை வழக்கில் பாட்னா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை  இதுவரை மூன்றே முன்று கட்சிகள்தான் வன்மையாகக் கண்டனம் செய்துள்ளன : சி.பி.எம். (அதன் பொலிட்பீரோவே இந்தக் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது);  சி.பி.எம்(எம்.எல்.) - (லிபரேஷன்), ஆம் ஆத்மி கட்சி.  (பிரதமராகத் தகுதியுடையவர் நான்கு மொழிகளைப் பேசத் தெரிந்தவரா, ஒன்பது மொழி பேசத் தெரிந்தவரா என்னும் கணக்குப் போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தத் தீர்ப்பு அவ்வளவு முக்கியமானதாக இருந்திருக்காது). ஆனால், தமிழக ஊடகங்கள் எதிலும் இந்தக் கண்டன அறிக்கைகள் ஏதும் இதுவரை கண்ணுக்குத் தென்படவில்லை. 

சச்சின் என்னும் கடவுள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதை செரிக்கவே முடியாமல்  வயிற்று நோய்களாலும் மனநோய்களாலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது இந்த தேசம்;  டெல்லி இளம் பெண்ணை (அவர் தலித்தோ கறுப்பு நிறம் கொண்டவரோ அல்லர்) பாலியல் வன்முறைக்கு உட்படுத்திக் கொலை செய்தவர்களை ‘கண்ணுக்கு கண்' , ‘பல்லுக்குப் பல்'  வஞ்சம் தீர்க்கவேண்டும் என்று கொதித்தெழுந்தது இந்த தேசத்தின் மனசாட்சி ( நல்ல வேளையாக, இந்த ‘அறவியல்' தர்க்கத்தின்படி அந்தக் குற்றவாளிகளை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என்று யாரும் கோரிக்கை விடவில்லை). இந்த தேசமும் அதன் மனசாட்சியும்  தலித்துகளின் நாளங்களிலோடுவது சாக்கடைத் தண்ணீர்தான்  என்று மனதார நம்புகின்றன. வேறுவிதமாக நினைப்பவர்கள்   இந்த ‘மனசாட்சி' இல்லாத மிகச் சிறுபான்மையினர்தான்.

‘சாதிக்கொரு நீதி' கட்டுரையில், லஷ்மன்பூர் பாத்தே படுகொலையை அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன், ‘தேசிய அவமானம்' என்று கண்டனம் செய்த பிறகே ராப்ரி தேவி தலைமையிலிருந்த ராஷ்ட்ரிய ஜனதா தள அரசாங்கம், ரன்வீர் சேனாவுக்கும் அரசியல் கட்சிகளுக்குமுள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்த நீதிபதி ஆமீர் தாஸின் தலைமையில் ஒரு ஆணையத்தை நியமித்தது என்பதைக் குறிப்பிட்டிருந்தோம். அந்த அறிக்கையை ஆணையம் சமர்ப்பிப்பதற்கு முன்பே அந்த அரசாங்கம் கலைக்கப்பட்டது என்றும், 2006இல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய ஜனதா தளம்-பாஜகக் கூட்டணி அரசாங்கம் அந்த ஆணையத்தைக் கலைத்துவிட்டது என்றும், பாஜக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஜார்ஜ பெர்னாண்டெஸின் சமதாக் கட்சி ஆகியவற்றுக்கும் ரன்வீர் சேனாவுக்கும் தொடர்பு இருந்தது என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

 இது பற்றிய மேலதிக செய்திகள் CNN-BNN ஊடகத்தைச் சேர்ந்த பியூஷ் புஷ்பக், பிரபாகர் குமார் ஆகியோரால் திரட்டப்பட்டு 29.6.2006 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது அவர்கள் கைக்கு ஆமீர் தாஸ் அறிக்கையின் நகலொன்று கிடைத்திருக்கிறது. இந்த செய்தி நமக்கு இப்போதுதான் தெரியவந்துள்ளது. அதிலுள்ள முக்கிய விஷயங்கள்:

1.    அந்த ஆணையம் நன்கு செயல்பட்டு விரைவாகத் தனது விசாரணையை முடித்து அறிக்கையை சமர்ப்பிப்பதற்குத் தேவையான அகக்கட்டுமான வசதிகளை ராப்ரி தேவி அரசாங்கம் செய்யவில்லை.

2.    2006இல் பதவியேற்ற நிதிஷ் குமார் (ஐக்கிய ஜனதாதளம் + பாஜக) அரசாங்கம் அந்த அறிக்கை வெளிவராமல் தடுப்பதற்காக அந்த ஆணையத்தையே கலைத்துவிட்டது.

3.    ரன்வீர் சேனாவின் குற்றச் செயல்களுக்கு அரசியல்ரீதியான உதவி செய்ததற்காகவும் அந்த சேனாவின் உதவியைப் பெற்றதற்காகவும் முக்கிய அரசியல் தலைவர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய அந்த ஆணையம் முடிவு செய்திருந்தது.

4.    ரன்வீர் சேனாவுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த பரஸ்பர உதவி பெற்றுக் கொண்டிருந்த முக்கிய அரசியல் தலைவர்களின் பெயர்களும் அவர்கள் இழைத்த குற்றங்கள் என நீதிபதி ஆமீர் தாஸ் ஆணையம் கண்டறிந்தவையும் கீழ்வருமாறு:
முரளி மனோகர் ஜோஷி, பா.ஜ.க. ( உத்தரப்பிரதேசத்திலிருந்து உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருந்தவர்).  ஹைபாஸ்பூரில் தலித்துகளையும் ஏழை மக்களையும் கொலை செய்த ரன்வீர் சேனா மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று பாலிகாஞ்ச் காவல் நிலையத்தை (இதன் அதிகார எல்லைக்குள்தான் ஹைபாஸ்பூர் வருகின்றது) மிரட்டிய குற்றம்.

சுஷில் குமார் மோடி,
பா.ஜ.க., பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், 2006-2011 நிதிஷ்குமார் அரசாங்கத்தில் துணை முதலமைச்சர். ரன்வீர் சேனாவுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்து தேர்தல்களின் போது தனது கட்சிக்கு ஆதரவு திரட்ட அந்த அமைப்பைப் பயன்படுத்தி வந்த குற்றம் ( குஜராத் மோடிக்கு இந்த பீகார் மோடி சற்றும் இளைத்தவரல்லர்).

காந்தி சிங், பீகார் பா.ஜ.க.வின் முக்கியத்தலைவர்; முன்பு லாலு பிரசாத் யாதவின் நெருக்கமான கூட்டாளி.1996ஆம் ஆண்டு தேர்தலின் போது  ரன்வீர் சேனாவின் முக்கிய தலைவர்களிலொருவரான சுனில் பாண்டேவிடமிருந்து உதவிகள் பெற்ற குற்றம்.

சி.பி.தாக்கூர், பீகாரின் இன்னொரு பாஜக பெருந்தலை. ஹைபாஸ்பூர் படுகொலை நடப்பதற்குச் சில நாட்களுக்கு முன் 1997இல் ரன்வீர் சேனா நடத்திய கூட்டங்களில் பங்கேற்றதுடன் அந்த சேனாவின் தலைவர் பிரமேஷ்வர் முக்கியாவுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்த குற்றம்.

அகிலேஷ் சிங், ராஷ்ட்ரிய ஜனதாதளக் கட்சியைச் சேர்ந்தவர்; மத்திய அரசாங்கத்தில் இணை அமைச்சராக இருப்பவர். தேர்தல்களின் போது ரன்வீர் சேனாவின் உதவியைப் பெற்றதுடன் அந்த சேனாவுக்கு நிதி உதவி செய்து வந்த குற்றம்.

ரன்வீர் சேனாவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக மேற்சொன்ன ஆணையத்தால் கண்டறியப்பட்ட பிறர்:

ஷிவானந்த் திவாரி, ராஷ்ட்ரிய ஜனதாதளத்தின் முக்கியத் தலைவர்களிலொருவர்.
ஸ்ரீராம் ஜத்தன் சின்ஹா, பீகார் முன்னாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவர்.

அருண் குமார், நிதிஷ் குமார் அரசாங்கத்தில் அமைச்சர்.

முந்த்ரிகா சிங் யாதவ், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.

 ரகுநாத் ஜா, முன்னாள் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்.

சுனில் பாண்டே என்கிற நரேந்திர பாண்டே, சமதாக் கட்சியின் முன்னாள் பீகார் மாநிலத் தலைவர்.

கிருஷ்ண சர்தார், நிதிஷ்குமாரின் விசுவாசி; ஐக்கிய ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர்.

அக்லாக், அகமது ஜகதீஷ் சர்மா, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள்

காலஞ்சென்ற ராம் லகன் சிங் யாதவ், சந்திரதேவ் பிரசாத் வர்மா,
 நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள்.
நீதிபதி ஆமீர் தாஸ் ஆணையத்தின் அறிக்கை வெளிவராமல் தடுப்பதில் ஆளும் வர்க்கக் கட்சிகள் -‘சமூக நீதிக் காவலர்கள்' உட்பட அனைத்தும்  தங்கள் கூட்டணியைத் தாண்டி ஓரணியாக இருந்தது ஏன் என்பதைப் புரிந்துகொள்வது கடினமா என்ன? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக