ஞாயிறு, அக்டோபர் 13

சாதிக்கொரு நீதி - எஸ்.வி. ராஜதுரை

 
இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியில்  ஓடும் பேருந்தில் ஒரு இளம் பெண் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டதற்காக  நாடும்  அதன் ‘மனசாட்சியாக' உள்ள ஊடகங்களும்  கொதித்தெழுந்தன. தமிழ் நாட்டிலும் கூட மாணவர்களும் இளைஞர்களும் பெண்கள் அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்கள்  நடத்தின.  அரசியல் கட்சிகளில்,  ஒரு ரூபா நாணய அளவுக்கு நெற்றியில் பொட்டு வைத்திருக்கும் பெண் தலைவர்களிடையே தார்மிக ஆவேசப் போட்டிகளும் நடந்தன. அந்த குற்றத்தை இழைத்தவர்கள் மிக விரைவில் விசாரணை செய்யப் பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசாங்கம் அளவற்ற ஆர்வம் காட்டி, பாலியல் வன்முறைக் குற்றத்துக்கான தண்டனையை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளைக் கூற ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகள் பலவறை ஏற்றுக்கொண்ட மத்திய அரசாங்கம், பாலியல் வன்புணர்ச்சிக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வகை செய்ய இந்தியத் தண்டனைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. வாக்கு வங்கியில் எப்போதும் ஒரு கண் வைத்திருக்கும் அரசியல் கட்சிகள் எல்லாவற்றுக்குமே பெண்களின் ‘மானத்தைக்' காப்பதில் மிகுந்த ஆர்வம் இருப்பதால், மரணதண்டனை வழங்குவதற்கான ஏற்பாடு எத்தகைய எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தும் எனபதைப் பற்றி யோசிக்க நேரமோ மனமோ இருக்கவில்லை.
 
பாலியல் வன்முறைக்கு நாள்தோறும் இலக்காகி வருகின்ற தலித் பெண்களுக்காகவோ, வன்முறைக்கு பலியாகும் தலித் ஆண்களுக்காகவோ இந்த நாடோ அதன் ‘மனசாட்சியோ' இப்படித் தார்மிக ஆவேசம் காட்டியதில்லை. 1968 டிசம்பர் 25இல் கீழ வெண்மணியில் 44 தலித் விவசாயத்தொழிலாளர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட போதும்கூட (அப்போது மின்னணு ஊடகங்கள் இருக்கவில்லை)  முதன்மையான அச்சு ஊடகங்களுக்கு அவற்றின் ‘மனசாட்சி' உறுத்தவில்லை. எனவே கடந்த 9.10.2013 அன்று பாட்னா உயர்நீதி மன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு பற்றி ‘தி ஹிந்து' ஆங்கில  நாளேட்டைத் தவிர (கோவை பதிப்பு 10,11.10.2013), தமிழகத்திலிருந்து வரும் எந்த ஏடும் எந்தச் செய்தியையும் வெளியிடாதது வியப்பளிக்கக்கூடியதல்ல.  எந்த தலித் இயக்கமோ, தலைவர்களோ இதுபற்றிக் கருத்துத் தெரிவித்துள்ளதாகவும் தெரியவில்லை.
 
 தற்போது பீகாரின் ஜெகனாபாத் மாவட்டத்திலுள்ளதும் முன்பு ஆர்வால் துணை மாவட்டத்தைச் சேர்ந்ததுமான மெஹாந்தியாக் காவல் நிலையத்தின் அதிகார எல்லைக்குட்பட்ட லக்ஷ்மண்பூர் பாத்தே என்னும் கிராமத்தில் பூமிஹார்கள் எனப்படும் பார்ப்பன நிலவுடைமைச் சக்திகளின் ஆயுதமேந்திய படையான ரண்வீர் சேனாவால்  1997 டிசம்பர் 1ஆம் தேதி இரவு ஐம்பத்தெட்டு தலித்துகள் (இவர்களில் 27 பெண்கள், 16 குழந்தைகள்) படுகொலை செய்யப்பட்டனர். அந்தப் படுகொலையை அன்றைய குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன் ‘தேசிய அவமானம்' என்று கூறினார். எனினும் அந்த வழக்கு எந்தவொரு ‘fast tract court'க்கும் செல்லவில்லை. பீகாரில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களின் குறுக்கீடுகள், அரசாங்கத்தின் மெத்தனம் ஆகியன மும்முரமாக இருந்தன. 13 ஆண்டுகளுக்குப் பிறகு பாட்னா உதவி மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி விஜய் பிரகாஷ்  மிஸ்ரா, 7.10.2010 அன்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் 16 பதினாறு பேருக்கு மரண தண்டனையும் பத்துபேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார். குற்றம் நிரூபிக்கப்படாததால் ஒன்பது பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
 
தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பாட்னா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அவர்களுக்கான பல பணம், சாதி பலம், அரசியல் பலம் அனைத்தும் இருந்தன. ஏற்கெனவே பதின்மூன்று ஆண்டுகள் அமர்வு நீதிமன்றத்தில் சாட்சி சொல்வதற்காக லக்ஷ்மன்பூர் பாத்தேவிலிருந்து பாட்னாவுக்கு எண்ணற்ற முறை வந்து போக வேண்டியிருந்த தலித்துகளுக்காக  மா-லெ லிபரேஷன் கட்சியைச் சேர்ந்தவர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் தவிர வேறு யாரும் உதவி செய்யவில்லை. அந்தப் படுகொலை நடந்து 16 ஆண்டுகளுக்குப் பின 9.10.2013 அன்று பாடனா உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.என்சின்ஹா, ஏ.கே.லால் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அரசாங்கத்தரப்பு சாட்சிகளில் (அதாவது கொல்லப் பட்டவர்களின் உற்றார் உறவினர்கள்) சாட்சியங்களின் நம்பகத்தனமை இல்லை என்று கூறி, அம்ர்வு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களுக்கு சந்தேகத்தின் பலனை வழங்கி அவர்கள் அனைவரையும் விடுதலை செய்துள்ளனர். பீகாரில் பத்தோனி தோலா, நக்ரி பஜார், மியான்பூர், நாராயண்பூர், காக்டி-பாகா ஆகிய இடங்களில் தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளிலும் உயர் நீதிமன்றம் அமர்வு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்திருக்கின்றது.
 
 மூன்றாவது அணிக்கு ‘சமூகநீதிக் காவலர்களின்' தயவும் ஒத்துழைப்பும் வேண்டியிருப்பதாலும்,  இந்த ‘சமூக நீதி' காவலர்களும் உயர் சாதி இந்துக்களைப் பகைத்துக்கொள்ள விரும்பாததாலும், நாடாளுமன்ற இடதுசாரிகளும் இந்த அப்பட்டமான நீதித்துறை அநீதியை ஒரு ‘தேசிய அவமான'மாகக் கருதுவதில்லை. லக்ஷ்மன்பூர் பாத்தேவில் கொலை செய்யப்பட்ட 27 பெண்களில் எட்டுப்பேர் கர்ப்பிணிகள்.  கொலை நடக்கும் நேரத்தில் தானிய மூட்டைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டதன் காரணமாக உயிர் தப்பிய ராஷ்மி தேவிக்கு அந்தக் கோர சம்பவத்தால் ஏற்பட்ட பீதியால் குறைப்பிரவசம் ஏற்பட்டது.  58 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கொலையுண்டவர்களும் கொலை செய்தவர்களும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.   ஒவ்வொரு நாளும் கிராமத்தின் ஏதோவொரு இடத்தில் ஒருவரையிருவர் பார்க்கிறவர்கள். கொலையுண்டவர்களின் உற்றார் உறவினர்கள்தான் அரசாங்கத் தரப்புச் சாட்சிகள். ஆனால், கொலை செய்தவர்களின் பெயர்களை அவர்களால் சரியாகச் சொல்ல முடியவில்லை என்று உயர் நீதிமன்றம் கூறுகிறது. கொலை செய்தவர்கள் யார் என்பது உலகிற்கே தெரியும், ஆனால் தனக்குத் தெரியவில்லை என்கிறது பாட்னா உயர் நீதிமன்றம். கொலை செய்யப்பட்ட தலித்துகள் சிலரின் உறவினரான பெளத் பாஸ்வான் அரசாங்கத் தரப்பு சாட்சிகளொருவர்.  உடலும் உள்ளமும் தளர்ந்துபோன அவர் கூறுகிறார்: “தொடர்ந்து போராட எனக்கு சக்தியில்லை. ஐம்பத்தெட்டு கொலைகளுக்குப் பிறகு யாரும் குற்றவாளிகள் இல்லையாம். நீதிமன்றங்கள் அவர்களுடையவை; அரசாங்கம் அவர்களுடையவை; லத்திகள் அவர்களுடையவை; ஏழைகளுக்கு ஏதும் இல்லை” 
 
 லக்ஷ்மன்பூர் பாத்தே பகுதியிலுள்ள பூமிஹார்களும் உயர்சாதி இந்துக்களும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உயர் நீதிமன்றத் தீர்ப்பைக் கொண்டாடியிருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் தலித்துகளின் வீட்டுக்குள் புகுந்து தாக்கப்போவதாகவும் அச்சுறுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள எல்லாக் கிராமங்களையும் போலவே லக்ஷண்பூர் பாத்தே கிராமத்திலும் ஊராகவும் சேரியாகவும் பிரிந்து கிடக்கின்றது. சேரியிலுள்ள தலித்துகள் நான்கு சாதிகளாப் பிரிந்துள்ளனர். அந்த சாதிகளிலொன்றை மகாதலித் என்னும் புதிய வகைக்குள் கொண்டுவந்து  பிரித்தாளும் சூழ்ச்சி செய்து அரசியல் ஆதாயம் அடைந்தவர் இன்றைய பீகார் முதல்வர் நிதீஷ் குமார். இவரும் ‘சமூக நீதிக் காவலர்தான்'.
 
 இந்த வழக்கின் தீர்ப்பின் விவரம் நமக்கு இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. பீகார் அரசாங்கம் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாகக் கூறியுள்ளது. கடந்த ஆண்டு பாட்னா உயர் நீதிமன்ற்ம் பத்தோனி தோலா வழக்கில் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசாங்கமும் தலித்துகளும் மேல்முறையீடு செய்துள்ளனர். நோம் சோம்ஸி உள்ளிட்ட அறிஞர்கள் பலர் இந்த வழக்கை விரைவாக விசாரணை செய்து நீதி வழங்கும்படி உச்ச நீதிமன்றத்துக்கு பகிரங்க வேண்டுகோளும் விடுத்தனர். அந்தப் பின்னணியில் எழுதப்பட்டு 2012இல் ‘உயிர் எழுத்தில்' வெளியிடப்பட்ட கட்டுரை லக்ஷ்மண்பூர் பாத்தே தீர்ப்புக்கும் பொருத்தமானது என்பதால் அது இங்கு மறு வெளியீடு செய்யப்படுகிறது -எஸ்.வி.ஆர்.)
ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கி ஆளும் கருவியான அரசு கம்யூனிசம் மலர்கையில் வாடி உதிர்ந்துவிடும் என்றார் ஏங்கெல்ஸ். ஆனால், பீகாரில் அது என்றோ வாடி உதிர்ந்துவிட்டது என்று  சில அரசியல் ஆய்வாளர்கள் வேடிக்கையாகக் குறிப்பிடுவது 1990களிலும்கூட வழக்கமாக இருந்தது. அதாவது, ஆளும் வர்க்கங்களின், ஆதிக்க சாதிகளின் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு நிர்வாக இயந்திரம் என்னும் வகையிலும்கூட, பீகார் மாநில அரசாங்கம் சரிவரச் செயல்படவில்லை, 'தடி எடுத்தவன் தண்டல்காரன்' என்பதுபோல,  எந்த ஆளும் வர்க்கங்களின்/சாதிகளின்  நலன்களைக் காக்க வேண்டியதாக உள்ளதோ, அந்த அரசாங்கத்தின் ‘சட்டம் ஒழுங்கை' பாதுகாக்கும் வேலையை அதனிடம் விட்டுவைக்காமல் அதைத் தாங்களே பார்த்துக்கொள்ளும் ஏராளமான தண்டல்காரர்கள் (தடி எடுத்தவர்கள்) தத்தம் சொந்த அமைப்புகளையும் நிறுவனங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருந்த சூழலை வர்ணிக்கவே ‘பீகாரில் அரசு என்றோ வாடி உதிர்ந்துவிட்டது' என்னும் வாசகத்தை காலஞ்சென்ற அரவிந்த் தாஸ் போன்ற ஆய்வாளர்கள் பயன்படுத்திவந்தனர். அதன் பிறகு பீகாரிலும் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. அந்த மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. வி.பி.சிங்கின் தலைமையிலிருந்த ஜனதா தளம் (சாதி அடிப்படையில்) பிளவுண்டது. லாலு பிரசாத யாதவின் தலைமையிலிருந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம், அவரையும் பின்னர் ஊழல் வழக்கின் காரணமாக பதவி விலகிதன் பிறகு அவரது துணைவியாரையும் முதலமைச்சராக்கி மகிழ்ந்தது. அவருடன் முதலில் இணைந்திருந்த ராம் விலாஸ் பாஸ்வான் பின்னர் தனிக்கட்சி கண்டார். 2003இல் ‘மதவாத' பாஜகவை முறியடிக்க ‘மதசார்ப்ற்ற' காங்கிரஸுடன் கூட்டுவைத்திருந்த லாலுவும் ராம் விலாஸ் பாஸ்வானும் பின்னர் தனித்தனிப் பதாகைகளை ஏந்திச் செல்ல, ராகுல் காந்தியின் பீகார் பரிசோதனை தோல்வியடைய, பெரிதும் பூமிஹார் சாதியினரின் செல்வாக்குக்கு உட்பட ஐக்கிய ஜனதா தளம், ‘இரு பிறப்பாளர்களால்' ஆசிர்வதிக்கப்பட்ட பாஜக ஆகியவற்றின் கூட்டணி ஆட்சி  நிதிஷ் குமாரின் தலைமையில் இருமுறை ஆட்சிக்கு வந்தது.

நிதிஷ் குமார் இந்திய ஊடகங்களின் செல்லப் பிள்ளைகளிலொருவர்; முதமைச்சரான பிறகும் தனது அலுவலகத்துக்கு இன்னும் சைக்கிளிலேயே சென்று வருகின்ற எளிமையான மனிதர்; பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்தாலும், முஸ்லிம்களின் இரத்தக்கறை படிந்த கைகளைக் கொண்ட நரேந்திர மோடியைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு அழைக்கக்கூடாது என்னும் நிபந்தனை விதித்த 'மதச்சார்பற்ற' கொள்கைக்காரர்; அது மட்டுமின்றி,  பீகாரில் கடந்த ஏழு ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை 13% உயர்த்தி,  ‘புதிய பீகாரை' ( நவ பீகாரை ) உருவாக்கி வருபவர், மாநிலங்களின் அதிகாரங்களில் மத்திய அரசு கை வைக்கக்கூடாது என்பதில் ஜெயலலிதா, மமதா பானர்ஜி, நரேந்திர மோடி போன்றவர்களுடன் ஒன்றிணைந்து மன்மோகன் சிங்கிற்கு எதிராகப் போராடுபவர். இத்தகைய பாராட்டுகள் ஊடகங்ளிடமிருந்தும் தொழிலதிபர்களிடமிருந்தும் தொடர்ந்து வந்து கொண்டெ இருக்கின்றன.

உண்மையில், பீகார் ‘வளர்ச்சிப்பாதையில்'தான் சென்று கொண்டிருக்கிறது.  இந்த ‘வளர்ச்சிப் பாதை'யின் தொடக்கத்தை பிரிட்டிஷ் காலனியாட்சிக் காலத்திலேயே பார்க்கலாம்.பிரிட்டிஷ் காலனியாட்சியாளர்கள் புகுத்திய ‘ஜமீந்தாரி முறை' பீகாரிலுள்ள பார்ப்பனர், பூமிஹார், காயஸ்தர்கள், ராஜபுத்திரர்கள் ஆகிய உயர்சாதியினரின் கட்டுப்பாட்டிற்கு விளைநிலங்களைக் கொண்டுவந்தன. தங்கள் உயிர்பிழைப்புக்கு நிலத்தைச் சார்ந்திருந்த பெரும்பான்மையான கிராமப்புற மக்கள் இந்த உயர்சாதியினரின் ‘தயவிலேயே' இருக்க வேண்டியிருந்தது. இந்த மக்களில் மிகப்பெரும்பான்மையினர் தலித்துகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் என்று இன்று சொல்லப்படுபவர்களுமாவர். இவர்கள் மேல்சாதி நிலவுடைமை சாதியினரின் கொடிய ஒடுக்குமுறைக்கும் ஈவிரக்கமற்ற சுரண்டலுக்கும் உள்ளாகி வந்தனர். காலனிய ஆட்சி முடிவடைந்து ‘சுதந்திரம்' வந்த பிறகும்கூட இவர்களது வாழ்க்கை நிலைமைகளில் எந்த மாற்றமும் ஏற்படாததால், மேல் சாதி /வர்க்க ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களுக்கான விதைகளும் விதைக்கப்படலாயின.

 சுதந்திரத்திற்குப் பிறகு மாநில அரசாங்கம் கொண்டுவந்த   ‘நிலச்சீர்திருத்தங்கள்'  சுரண்டும் சாதிகளின் / வர்க்கங்களின் சமூக அடித்தளத்தை விரிவாக்குவதில் போய் முடிந்தன. இதன் காரணமாக கிராமப்புற சமூக, பொருளாதார, அரசியல் முரண்பாடுகள் உக்கிரமடைந்தன. ஜமீந்தாரி முறை ஒழிக்கப்பட்டதும், குத்தகை முறையில் ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களும், காலனியாட்சிக்காலத்தில் குத்தகை விவசாயிகளாக இருந்த மேல் அடுக்கினருக்கு மட்டுமே பயனளித்தன. இப்படி பயனடைந்தவர்கள் மேல்சாதி குத்தகைதாரர்கள் மட்டுமல்ல; யாதவர்கள், குர்மிகள், கோத்ரிகள் ஆகிய இடைநிலை சாதிகளைச் சேர்ந்த குத்தகைதாரர்களுமாவர். இந்த இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்த குத்தகைதாரர்கள்தான் பீகாரிலுள்ள பிற்படுத்தப்பட்ட சாதிகளிடையே உள்ள 'வசதி படைத்த பிரிவினராவர்' (creamy layers). இவர்கள்தான்  இன்றைய பீகாரின் கிராமப்புறத்திலுள்ள புதிய  மேட்டுக் குடியினராவர். இவர்கள் தேர்தல் அரசியலில் நுழைந்து, லாலு பிரசாத் தலைமையின் கீழ் ஜனதா தளத்தின் மூலமாக, பீகாரில் மரபாக அரசியல் ஆதிக்கம் செலுத்தி வந்த மேல் சாதியினரின் அரசியல் செல்வாக்கை வெகுவாகக் குறைத்தனர்.

கிராமப்புறங்களில் தொடந்து நீடித்த சாதிய-வர்க்க ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றின் காரணமாக 1970களில் மார்க்ஸிய-லெனினியக் கருத்துநிலையைக் கொண்டிருந்த பல்வேறு இடதுசாரி அமைப்புகள் தென் பீகாரின் வளமான சமவெளிப் பிரதேசங்களில் தோன்றவும் வலுப்படவும் தொடங்கின. இவற்றில் முக்கியமானவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன், கட்சி ஒற்றுமை (Party Unity), மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் (MCC) ஆகியனவாகும் (கட்சி ஒற்றுமை, எம்.சி.சி, மக்கள் யுத்தக் குழு ஆகியன ஒன்றிணைந்த பின்னர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்னும் புதிய கட்சி தோன்றியது). அவை கையில் எடுத்துக்கொண்ட பிரச்சனைகளும் அவற்றுக்கு அவை கோரிய தீர்வுகளும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எவ்வகையிலும் எதிரானவை அல்ல; அதாவது, சாதிப்பாகுபாடு ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, குறைந்தபட்சக் கூலியை வழங்குதல், விவசாயக் கூலித்தொழிலாளர்களாக உள்ள பெண்களை ஆதிக்கச் சாதி/வர்க்க ஆண்கள் தங்கள் உடலின்பத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுத்தல் ஆகிய முற்றிலும் சட்டரீதியான கோரிக்கைகளே இந்த அமைப்புகளால் எழுப்பப்பட்டு அவற்றை நிறைவேற்றுவதற்கான போராட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனால், அரசாங்கமோ இந்த அமைப்புகள் சிலவற்றுக்கு சட்டரீதியான தடைகள் விதித்தது; சட்டத்துக்கு உட்பட்ட வகையிலும் சட்டத்துக்கு விரோதமாகவும் கொடிய அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது; அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீது பொய்வழக்குகள் சுமத்தி சிறையில் தள்ளியது.'போலி என்கவுண்டர்கள்'மூலம் அவர்களில் பலரை ஒழித்துக் கட்டியது. இந்த ‘நக்ஸல்', 'மாவோயிஸ்ட்' குழுக்களால் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் வன்முறை நிகழ்ச்சிகளில் மிகப் பெரும்பாலானவை, ஆதிக்கச் சாதிகளின் / வர்க்கங்கள் மற்றும் அவர்களுக்குத் துணைநின்ற அரசாங்க நிறுவனங்கள் ஆகிவற்றின் வன்முறைச் செயல்களுக்கான எதிர்வனைகளே.

இவை ஒருபுறமிருக்க, ஆதிக்கச்சாதிகளுக்கும் வர்க்கங்களுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்த கிராமப்புற உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்காக 1970களிலிருந்து பல்வேறு ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த குண்டர் படைகள் (சேனைகள்) அமைக்கப்படலாயின.1977இல் பீகாரிலுள்ள பெல்ச்சி கிராமத்தைச் சேர்ந்த எட்டு தலித்துகள் குர்மி சாதியைச் சேர்ந்த நிலவுடைமையாளர்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். அதிலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த சேனைகள் தலித்துகள்  மீதும் தலித் அல்லாத கீழ்சாதி உழைக்கும் மக்கள் மீதும் ஏராளமான படுகொலைகளைச் செய்துள்ளன. குர்மிகள் ‘பூமி சேனா'வையும், யாதவர்கள் 'லோரிக் சேனா'வையும், பூமிஹார்கள் ‘ரன்வீர் சேனா'வையும் ராஜபுத்திரர்கள் ‘சன்லைட் சேனா'வையும்  உருவாக்கினர். பிர்மஷிரி சேனா, குயெர் சேனா, கிஸான் மோர்ச்சா, கங்கா சேனா போன்ற வேறு சில சிறு அமைப்புகளும் தோன்றின. 'லோரிக் சேனா'வின் ‘தளபதி'யாக இருந்த பைய்ஜு யாதவ், 1990இல் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதள வேட்பாளராக பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்; பூமி சேனாவின் தளபதி லாட்டு சிங், அவர் இழைத்த படுகொலைகளுகாகப் பழிவாங்கப்பட்டார். இந்த சாதி சேனைகள் எல்லாவற்றிலும் ‘ரன்வீர் சேனா'தான் மிக வலுவானதும், மிகவும் ஒழுங்கமைக்கபட்டதும், மிகக் கொடூரமானதும் ஆகும். இது பூமிஹார்களின் குண்டர் படை. முதலில், பூமிஹார்கள் ‘டைமண்ட் சேனா' என்னும் அமைப்பை உருவாக்கி, அதைத் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான ஒடுக்குமுறைக்குப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், அடித்தட்டு மக்களின் போர்க்குணம் அதிகரித்து வந்ததால்  ‘ஸ்வர்ணா விடுதலை சேனா', ‘சன்லைட் சேனை' என்னும் இரண்டு அமைப்புகளும் இணைக்கப்பட்டு '‘ரன்வீர் சேனா' 1994இல் அமைக்கபட்டது. அந்த அமைப்பில் தனக்குப் போட்டியாக இருந்த மற்ற அனைவரையும் அடக்கி வைத்து, அதன் தனிப்பெரும் தலைவரானவர் பிரமேஷ்வர் சிங். அவரது ஆதரவாளர்களால் ‘காந்தி' என்றும் தலித்துகள் போன்ற ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரால் ‘கூனி' (இரத்த வெறி பிடித்தவன்) என்றும் அழைக்கப்பட்டு வந்த பிரமேஷ்வர் சிங்கின் தலைமையில் இயங்கி வந்த ‘ரன்வீர் சேனா', மிக விரைவில் பீகாரின் ஜெஹனாபாத், பாட்னா, ரோஹித்ஸ், அவுரங்காபாத், கயா, பபுவா, பக்ஸார் மாவட்டங்களுக்குப் பரவியது.

அந்த அமைப்பு, சாதி ஒடுக்குமுறை, வர்க்கச் சுரண்டல், பாலியல் வன்முறை ஆகியவற்றுக்கு எதிராகப் போராடித் தங்கள் மானுட கெளரவத்தைக் காத்துக் கொள்ள முயன்ற மக்களை-குறிப்பாக தலித்துகளை-ஒழித்துக்கட்டுவதற்காக ஏராளமான படுகொலைகளைச் செய்தது.  1995 ஏப்ரல் 14இல் கோபிரியா என்னுமிடத்தில் ‘கீழ் சாதி'யொன்றைச் சேர்ந்த மூவரைக் கொலை செய்தது. அதிலிருந்து தொடங்கி மொத்தம் எட்டு இடங்களில் படுகொலைகளை நடத்திய அந்த அமைப்பின் சீற்றமும் ஆத்திரமும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன் கட்சியைச் சேர்ந்த இருவர் முதன்முதலாக பீகார் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அதிகரித்தன. அதன் காரணமாக, பீகார் மாநிலத்தின் போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பதானி தோலா கிராமத்தைச் சேர்ந்தவர்களும் லிபரேஷன் கட்சி ஆதரவாளர்களுமான 21 பேரைக் கொலை செய்தனர். இவர்கள் தலித்துகள், முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்ட கீழ் சாதிகள் ஆகியோரைச் சேர்ந்தவர்கள். (இவர்களில் 11 பேர் பெண்கள், 6 பேர் குழந்தைகள், மூவர் கைக்குழந்தைகள்) 1996 ஜுலை 11இல்  பட்டப்பகலில் படுகொலை செய்தது ரன்வீர் சேனா. அத்துடன் 12 தலித் வீடுகளைத் தீ வைத்துக் கொளுத்தியது. அந்தக் கொடுங்குற்றங்களுக்குத் தலைமை தாங்கியவர் பிரமேஷ்வர் சிங். மூன்று மணி நேரத்துக்கு மேல் அந்தக் குற்றச் செயல்கள் நிகழ்ந்தன. 
 
அந்தப் படுகொலை நடந்தபோது முதலமைச்சராக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ். அண்ணல் அம்பேத்கரால் ‘ஊமை மக்கள்' என்று அழைக்கப்பட்ட தலித்துகளுக்குக் ‘குரலை' மட்டுமல்லாது சொர்க்கத்தையும் வழங்கப்போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தவரான லாலு பிரசாத் அரசாங்கமும் அதுவரை ரன்வீர் சேனாவுக்கு மறைமுக ஆதரவை வழங்கிக் கொண்டிருந்தது என்பதுதான் உண்மை. பத்தோனி தோலாவில் நடந்த படுகொலைகளும் பிற குற்றச்செயல்களும்  நன்கு திட்டமிடப்பட்டவை. அத்த்கைய வன்முறைத் தாக்குதல்கள் நடக்கும் என்பதை எதிர்பார்த்து அச்சத்துடன் வாழ்ந்து வந்த அந்த கிராம ஏழைமக்கள் தங்களுக்குப் பாதுகப்புத் தரவேண்டும் என்று மாவட்ட காவல்துறை அதிகாரிகள், மாவட்ட நீதிபதி ஆகியோருக்குப் பலமுறை வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால் அந்த அதிகாரிகளோ, நீதிபதியோ அவர்களது கோரிக்கைக்குச் சிறிதும் செவிசாய்க்கவில்லை. தலித்துகளுக்கு லாலுபிரசாத் கொடுத்த ‘குரலு'ம் ‘சொர்க்கமும்' இத்தகையதுதான்.

எனினும் அந்தப் படுகொலை நிகழ்ச்சிக்குப் பிறகு  ராஷ்ட்ரிய ஜனதா தள அரசாங்கம் ‘ரன்வீர் சேனா'வைத் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியது. ஆனால் அந்தத் தடை விதிக்கப்பட்ட பிறகும், 1996 நவம்பர் முதல் 2000 ஜூன் வரை ரன்வீர் சேனா இருபது இடங்களில் படுகொலைகளைச் செய்தது. அந்தப் படுகொலைச் செயல்களின் உச்சகட்டமாக இருந்தது 1997இல் ஜெஹானாபாத் மாவட்டத்திலுள்ள லக்ஷ்மன்பூர் பாத்தெ என்னுமிடத்தில் 58 பேர் படுகொலை செய்யப்பட்டதாகும் (அதை அன்றைய குடியரசுத் தலைவர் கேர்.ஆர்.நாராயணன் ‘தேசிய அவமானம்' என்று வர்ணித்தார்). அதேநாள் இரவில் பதின் வயதுடைய ஐந்து இளம் பெண்களின் உடல்களைச் சிதைத்துச் சுட்டுக்கொன்ற ரன்வீர் சேனை, அவர்களை ஆற்றின் மறுகரைக்குக் கொண்டு சென்ற எட்டு பேரையும் (அவர்கள் பிற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள்) சுட்டுக் கொன்றது. 1997ஆம் ஆண்டில், பாட்னா மாவட்டத்திலுள்ள ஹைபாஸ்பூரில் பத்து தலித்துகளையும், போஜ்பூர் மாவட்டத்திலுள்ள ஏக்வாரி என்னுமிடத்தில் பத்து தலித்துகளையும் ஹெஹானாபத் மாவட்டத்திலுள்ள கடாஸின் என்னுமிடத்தில் எட்டு தலித்துகளையும் ரன்வீர் சேனா படுகொலை செய்தது. அடுத்த ஆண்டு (1998), போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள நாக்ரி என்னுமிடத்தில் பத்து தலித்துகளைக் கொண்றது.1999 ஜனவரி 25இல், ஜெஹனாபாத் மாவட்டத்திலுள்ள ஷங்கர்பிகா என்னும் கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 22 தலித்துகளைப் படுகொலை செய்தது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அருகிலுள்ள நாரயண்பூர் கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த 12 பேரையும் கயா மாவட்டத்திலுள்ள சென் டானி என்னுமிடத்தில் 12 தலித்துகளையும் படுகொலை செய்தது. அவுரங்காபாத் மாவட்டத்திலுள்ள மியான்பூரில் ரன்வீர் சேனா பிற்படுத்தப்பட்ட சாதிகளையும் தாழித்தப்பட்ட சாதிகளையும் சேர்ந்த 35 பேரைக் கொன்றது. ரன்வீர் சேனா இன்னும் பல கொலைகளைச் செய்திருக்கக் கூடும்.ஆனால், பதிவு செய்யப்பட்ட விவரங்களின் படி 277 கொலைகளுக்கு ரன்வீர் சேனாவும் அதன் தலைவர் பிரமேஷ்வர் சிங்கும் பொறுப்பாகின்றனர்.

ரன்வீர் சேனாவின் குற்றச் செயல்களுக்கு பீகார் காவல் துறையினரும் ஆதிக்க சாதி/வர்க்க அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்திருக்கின்றனர். எடுத்துக்காட்டாக 1997 ஏப்ரலில் ரன்வீர் சேன ஏக்வாரி கிராமத்தில் தலித் குடியிருப்புகளில் திடீரென்று புகுந்து தாக்குதல் நடத்தி எட்டு தலித்துகளைக் கொன்றதற்கு போலீஸ்காரர்கள் உதவி  செய்துள்ளனர். 1996இலேயே ‘ரன்வீர் சேனா' தடை செய்யப்பட்டு, பிரமேஷ்வர்  சிங்கின் தலைக்கு ரூ 5 இலட்சம் விலையை பீகார் மாநில அரசாங்கம் விதித்தது. 1998, 1999ஆம் ஆண்டுகளில் அவர் இருமுறை போலீசாரிடம் பிடிபட்டார். ஆனால், அவர் சரியாக அடையாளம் காணப் படவில்லை என்று கூறி இருமுறையும் அவரை போலீஸார் அவரை விடுவித்துவிட்டனர். கடைசியில் 2002 ஆகஸ்ட் 29இல்தான் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். ஜனதா தளத்தின் முன்னாள் உறுப்பினரும் 1997இல் ஆரா நாடாளுமன்ற உறுப்பினருமாக இருந்த சந்திரதேவ் வர்மா,1998இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ரன்வீர் சேனா மீதான தடையை அகற்றி அது சட்டபூர்வமாகச் செயல்படுவதற்குப் பாடுபடப்போவதாகக் கூறினார். பிரமேஷ்வர்  சிங் கைது செய்யப் பட்டதற்கு பழிவாங்குவதற்காக அவருக்குப் பின் அந்த அமைப்பின் தலைவராகப் பொறுபேற்ற ஷம்ஷீர் சிங் ஆரா மாவட்டத்திலுள்ள பாரியாரி தோலா கிராமத்தைச் சேர்ந்த ஐந்து தலித்துகளைப் படுகொலை செய்தார்.

 பிரமேஷ்வர் சிங்கின் தலைமையிலிருந்த ரன்வீர் சேனாவின் முழக்கங்களிலொன்று:  “நாங்கள் குழந்தைகளைக் கொல்வதற்குக் காரணம், அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பிறகு நக்ஸலைட்டுகளாகிவிடுவர் என்பதுதான்; நாங்கள் பெண்களைக் கொல்வதற்குக் காரணம், அவர்கள் நக்ஸலைட்டுகளைப் பெற்றெடுத்துவிடுவார்கள் என்பதுதான்”

ரன்வீர் சேனா இப்படிப்பட்ட படுகொலைகளைத் தயக்கமோ தடையோ இன்றித் தொடர்ந்து நிகழ்த்தி வந்ததற்குக் காரணம், ஆதிக்கச்சாதிகளுக்கும் அரசாங்கத்தின் போலிஸ், நிர்வாகத் துறைக்கும் இருந்த நெருக்கமான உறவுதான். பாஜக, ஜார்ஜ் ஃபெர்னாண்டெஸின் சமதா கட்சி ஆகியவற்றுடன் ரன்வீர் சேனாவுக்கு நெருக்கமான தொடர்புகள் இருந்தன. இந்த இரு கட்சிகளைப்போல வெளிப்படையாக இல்லாவிட்ட்டாலும் லாலுபிரசாத் யாதவின் அரசாங்கமும் ரன்வீர் சேனாவுக்கு மறைமுக ஆதரவு தந்து வந்தது. இந்துத்துவ ஆதரவாளராகவும் வாஜ்பாயியின் உபாசகருமாக இருந்த பிரமேஷ்வர் சிங், ஆரா மாவட்ட  சிறையில் இருக்கும்போது, மேல்சாதிக்காரர்களுக்கு சிறையில் தனியாக சமையலறை இருக்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து சிறையில் இருந்த 74 ரன்வீர் சேனா உறுப்பினர்களுடன் சேர்ந்து ‘உண்ணாநோன்பு'ப் போராட்டம் நடத்தினார். 2004இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறையிலிருந்தபடியே போட்டியிட்ட அவர் மூன்றாவது இடத்தைத்தான் பிடித்தார் என்றாலும்,  அவருக்குக் கிடைத்த 1,48,957 வாக்குகள் அவருக்கு இருந்த செல்வாக்கை வெளிப்படுத்தின. இத்தகைய செல்வாக்குதான் பத்தானி தோலா படுகொலையைச் செய்த ரன்வீர் சேனா உறுப்பினர்கள் பீகார் உச்ச நீதிமன்றத்தால் கடந்த ஏபரல் 16இல் அளிக்கப்பட்ட தீர்ப்பில்  விடுதலை செய்யப்பட்டதற்குக் காரணமாக இருந்தது என்றால் அது மிகையாகாது. அந்தப் படுகொலை நடந்து பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின், 2011 மே 16ஆம் தேதியன்று, ஆரா மாவட்ட அமர்வு நீதிமன்றம்  குற்றம் சாட்டப்பட்ட 63 பேரில் 30 பேர் மீது போதுமான சாட்சியம் இல்லை என்று தீர்ப்பளித்து விடுதலை செய்தது. விசாரணை நடந்த காலத்தில் நால்வர் இறந்துவிட்டனர். ஐவர் ஏற்கனவே பீகார் உயர் நீதிமன்றத்தால் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர். ஒருவர் ‘தேடப்படும் குற்றவாளி'யாக (Declared / notified offender) அடையாளப்படுத்தப்பட்டிருந்தார். மீதமுள்ள 23 பேர் மீது குற்றத்தீர்ப்பு வழங்கிய ஆரா நீதிமன்றம், மூவருக்கு மரண தண்டனையும் இருபது பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கியது. இவர்கள் மீதான குற்றத்தீர்ப்புக்கு முதன்மையான அடிப்படையாக அமைந்தது பத்தோனி தோலா கிராமத்தைச் சேர்ந்தவர்களும் அந்தப் படுகொலைகளை நேரில் கண்டவர்களுமான ஆறு ஏழைகள் கூறிய சாட்சியங்கள் தான்.

 இந்த வழக்கில் போலிசாரால்  கைது செய்யப்பட முடியாமல் தலைமறைவாகிவிட்டார் என்றும் ‘தேடப்படும் குற்றவாளி' (notified offender) என்றும் போலிசார் கூறிய காலத்தில் பிரமேஷ்வர் சிங் ஆரா மாவட்ட சிறையில் இருந்தார் என்பதும் அவரது பெயர் முதல் தகவல் அறிக்கையில்கூட சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கன. 2002 ஆகஸ்டில் கைது செய்யப்பட்ட அவர் மீது 17 வழக்குகள் இருந்தன. ஆனால் ஒவ்வொரு வழக்கிலும் அவரால் எளிதில் பிணையில் (bail) வெளிவர முடிந்தது. நிதிஷ் குமார் ஆட்சிக்கு வந்த பிறகும்கூட பிரமேஷ்வர் சிங்கின் பெயர்  பீகாரில் ரன்வீர் சேனா நடத்திய படுகொலைகள் தொடர்பான எந்த முதல் தகவல் அறிக்கையிலும் சேர்க்கப்படவில்லை; அவர் பிணையில் வெளிவருவதற்கு மனு செய்தபோது அதை நிதிஷ் குமார் அரசாங்கம் எதிர்க்கவில்லை. கடைசியில் பிரமேஷ்வர் சிங் 2011 ஜூலை 8ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

பத்தோனி தோலா வழக்கில் ஆரா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களின்  மேல் முறையீட்டு மனு பீகார் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அமர்வு நீதி மன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்துவதற்கான போதுமான சட்டரீதியான நடவடிக்கைகளை நிதிஷ் குமார் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. நீதிபதிகள் நவ்நீதி சிங், அஷ்வனி கும்கார் சிங் ஆகிய நீதிபதிகளைக் கொண்ட பீகார் உயர் நீதிமன்ற ஆயம், அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தலைகீழாகப் புரட்டி, நீதியைக் கொலை செய்தது. அதாவது பத்தோனி தோலாவில் நடத்தப்பட்ட படுகொலைகளிலிருந்து தப்பிப் பிழைத்து உயிரோடு உள்ளவர்களும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகச் சாட்சியம் சொன்னவர்களுமான ஏழை மக்களை ‘பொய்யர்கள்' என்றும் ‘கதை புனைபவர்கள்' என்றும், 'முற்றிலும் நம்பத்தகாதவர்கள்' என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில்  அவதூறு செய்தது.

அந்தத் தீர்ப்பின் ஒருபகுதி கீழ்வருமாறு: “இந்த வழக்கைப் பொருத்தவரை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கிராமத்திலுள்ள ஒவ்வொருவரையும் ஒழித்துக்கட்ட வந்தார்கள், அப்படியே செய்தார்கள் என்னும் குற்றச்சாட்டில் முரண்பாடுகள் உள்ளன. கொலை செய்த பிறகு அவர்கள் வீடுகளுக்குத் தீவைத்தார்கள். அப்படியானால், அந்த கிராமத்துக்கு அருகிலேயே யாரேனும் ஒளிந்திருக்கிறார்களா என்பதைப் பார்க்க அவர்கள் ஏன் அக்கறைப்படவில்லை? சாட்சிகளும் குற்றம்சாட்டப்பட்டவர்களும் அண்டை வீட்டுக்காரர்களும் அடுத்தடுத்த கிராமத்தை சேர்ந்தவர்களுமாவர். பட்டப்பகலில அவர்கள் பரஸ்பரம் தாங்கள் யார் என்பதைக் காட்டிக்கொண்டு, தங்களை அடையாளம் கண்டு சொல்வதற்கு யாருக்கும் வாய்ப்பு அளித்திருக்கமாட்டார்கள். அரசாங்கத்தரப்பு சாட்சிகள் சிலர், தாங்கள் ஒரு குழியில் ஒளிந்துகொண்டிருந்ததாகக் கூறினார்கள். ஆனால் புலனாய்வு அதிகாரி (Investigating Officer), எந்தக் குழியும் தனக்குக் காட்டப்படவில்லை என்றும், ஒளிந்து கொள்வதற்கான இடமேதும் அங்கு இருக்கவில்லை என்றும் தனது அறிக்கையில் கூறியுள்ளார். பாசனக் கால்வாய்க்குள் தாங்கள் ஒளிந்திருந்ததாகவும், அவ்வப்போது வெளியே எட்டிப்பார்த்து நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் இந்த சாட்சிகள் கூறுகின்றனர். ஆனால், எல்லோரது பார்வைக்கும் படக்கூடிய பாசனக் கால்வாயில் தங்களது பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாமல் அவ்வப்போது வெளியே என்ன நடக்கிறது என்று எட்டிப்பார்த்துக் கொண்டிருப்பது இயற்கைக்கு மாறானது. காடுக:ள் போன்ற அடர்ந்த புதர்களுக்குள் தாங்கள் ஒளிந்துகொண்டிருந்ததாக சில சாட்சிகள் கூறுகின்றனர். ஆனால் அதுபோன்ற இடம் ஏதும் இல்லை என்று புலனாய்வு அதிகாரியின்  புறநிலையான ஆய்வு அறிக்கை கூறுகிறது. எல்லோரையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்னும் நோக்காத்துடன் வந்திருந்தவர்கள், அங்கு ஆண்கள் யாரும் இல்லை என்பதைப் உறுதி செய்துகொள்வதுதான் இயல்பு. மேலும், கிராமப்பகுதிக்கு அருகிலேயே ஒளிந்து கொண்டிருக்கக்கூடிய ஆண்களை அவர்கள் தேடிப் பார்த்திருப்பர். ஆனால், அரசாங்கத் தரப்பு சாட்சிகள் கூறுவதுபோல, அவர்கள் அங்கே ஒளிந்துகொண்டிருப்பது இயல்புக்கு மாறானது. இந்தக் காரணங்களால், அரசாங்கத்தரப்பு சாட்சிகளின் அடையாளப்படுத்துதலை மிக அதிகபட்ச தண்டணையான மரண தண்டனையோ, ஆயுள் தண்டனையோ விதிப்பதற்கான   நம்பக மதிப்புள்ளவை அல்ல என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்”.

தீர்ப்பின் இந்தப் பகுதி கூறுவது என்னவென்றால், அரசாங்கத் தரப்பு சாட்சிகள் தாங்கள் அங்கிருந்து தப்பி ஓடிப்போய் குழிகளிலும் புதர்களிலும் ஒளிந்துகொண்டிருந்ததாகக் கூறுகின்றனர்; ஆனால் அங்கு புதர்களோ குழிகளோ ஏதும் இல்லை என்று புலனாய்வு அதிகாரியின் அறிக்கை கூறுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள், எல்லோரையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்னும் நோக்கத்துடன் அங்கு வந்திருந்தால், இப்போது உயிரோடு உள்ள ஆண்களையும் தேடிக் கண்டுபிடித்து அவர்களையும் ஒழித்துக் கட்டியிருப்பார்கள் அல்லவா? அதாவது இந்தத் தீர்ப்பின் சாரம் இதுதான்: இந்த சாட்சிகள் உயிரோடு இருப்பதால்தான் , அவர்கள் சம்பவங்களை நேரில் கண்ட சாட்சிகளாகப் பொய் சொல்லியிருக்கிறார்கள் என்று நாம் அனுமானித்துக் கொள்ளவேண்டும்; எந்தவொரு படுகொலை சம்பவத்திலும், செத்துப் போனவர்கள்தான் உண்மையான சாட்சிகளாக இருக்க முடியும்!

அனத்திந்திய முற்போக்குப் பெண்கள் சங்கத்தின் (All India Progressive Women's Associan,AIPWA) தேசியச் செயலாளர் கவிதா கிருஷ்ணன் கூறுவதுபோல, செத்துப்போன ஆண்களாலோ பெண்களாலோ எந்தக் கதைகளையும் சொல்லவோ, நீதிமன்றத்தின் சாட்சியம் கூறவோ முடியாது.  (பீகார் உயர் நீதிமன்றத்தைப் பொருத்தவரை எத்தகைய அவப்பேறு! பீகார் உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, படுகொலைகள் நடக்கும் இடத்திலிருந்து யாரேனும் தப்பித்து உயிரோடு இருந்தால், கட்டாயம் அவர் மோசடித்தனமான, பொய் சாட்சியாகவே இருப்பார்; ஏனெனில், அவர் அந்தப் படுகொலை நடக்கும் இடத்தில் இருந்திருந்தால் எப்படி உயிர் தப்பி வந்து கதைகளைச் சொல்ல முடியும்? அவர்கள் கொல்லப்பட்டிருந்தால்தான் நம்பகத்தன்மை வாய்ந்த, உண்மையான சாட்சிகளாக இருக்க முடியும். பீகார் உயர் நீதிமன்றத்தின் இந்த மேதாவிலாசம் மிக்க ‘நீதி'யிலுள்ள தர்க்கத்தைப் பின்பற்றினால், படுகொலைக்குக் காரண்மான யாரையாவது குற்றவாளி என்று தீர்ப்பளிக்கவோ தண்டிக்கவோ முடியுமா?

“புலனாய்வுத்துறையும் அரசாங்க நிர்வாகமும் உண்மையான குற்றவாளிகள் தப்பித்து விட உதவியுள்ளன” என்றும் “தவறான புலன் விசாரணை, தவறான அரசாங்கத் தரப்பு வாதம் ஆகியவற்றின் காரணமாக தண்டிக்கப்பட்டவர்கள் துன்பத்துக்குள்ளானார்கள்; அவர்களது குடும்பங்கள் நாசமாக்கப்பட்டன” என்று கண்ணீர் சொரியும் இந்த ‘நீதிமான்கள்', உண்மையிலேயே கடுந்துன்பத்துக்குள்ளானவர்கள் அந்தப் படுகொலையைப் பார்த்த சாட்சிகள் என்பதை வேண்டுமென்றே மூடி மறைத்தனர். அரசாங்கத் தரப்பு வாதம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியம் சொன்னவர்கள் ஆகிய இருதரப்பினருமே மோசடிக்காரர்கள், பொய்யர்கள் என்றும் இருதரப்பினரும் சேர்ந்து அப்பாவிகளை இந்தக் கொலைவழக்கில் சிக்கவைக்க சதி செய்தனர் என்றும் கூறியது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியம் கூறியவர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல அந்தத் தீர்ப்பு குற்றம் சாட்டப்பட்டும் அமர்வு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டது! அதாவது சம்பவம் நடந்த போது அவர்கள் இளம் பருவத்தினர் (juveniles) என்றும், அப்படி இருந்தும் அவர்கள் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டு மரணதண்டனையும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் அவலத்தைச் சந்தித்தார்கள் என்றும் அந்தத் தீர்ப்பு கூறியது.

 அந்தப் படுகொலையை நேரில் கண்ணால் பார்த்தவர்களின் சாட்சியங்கள் குறைபாடு உடையவை (defective evidence) என்று கூறியது. குழந்தைகளும் பெண்களும் அடங்கிய அந்த இருபத்தியோரு பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவர்களது வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்ட  பீதி  நிறைந்த சூழலில் ஒவ்வொருவரும் உயிர் பிழைப்பதற்காகத் தப்பியோடியிருப்பார்களே தவிர அங்கு இருந்திருக்க மாட்டார்கள்  என்றும், குற்றம் சாட்டப் பட்டவர்களின் பெயர்களை அவர்கள் தெரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியது.

பத்தோனி தோலாவில் நடந்தது போன்ற பல்வேறு கொலைகள்,பாலியல் வன்முறை போன்ற குற்றங்களுக்குப் பொறுப்பானவராகக் கருதப்படும்  பிரமேஷ்வர் சிங், கடந்த ஜூன் 1 அன்று பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோப்பிரா கிராமத்தில் அவரது வீட்டுக்கு அருகே அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பீகார் உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 16 அன்று நீதியைப் படுகொலை செய்த ஆறு வாரங்களுக்குப் பிறகு, பிரமேஷ்வர் சிங் சுட்டுக் கொல்லப்பட்டதால், நீதியை நிலைநிறுத்துவதற்காகப் புரட்சிகர இடதுசாரி அமைப்புகளின் ஏதேனுமொன்று அவரைக் கொன்றிருக்கலாம் என்னும் எண்ணம் பரவலாக ஏற்பட்டதில் வியப்பில்லை. கீழ்வெண்மணிப் படுகொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.மகராஜன் தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட ஆயத்தின் தீர்ப்பையும், பின்னர் கோபாலகிருஷ்ண  நாயுடுவுக்கு  நக்ஸ்லைட் இயக்கம் வழங்கிய நீதியையும் மேற்சொன்ன சம்பவம் நினைவூட்டியது.  கீழ்வெண்மணியில் 44 தலித்துகளை (இதில் பெண்களும் குழந்தைகளும் அடக்கம்) உயிரோடு எரித்துக் கொன்ற வழக்கில் முதன்மைக் குற்றம் சாட்டப்பட்டவரான நிலப்பிரபு கோபாலகிருஷ்ண நாயுடுவை விடுதலை செய்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு, “சமுதாயத்தில் உயர் அந்தஸ்திலுள்ள கோபாலகிருஷ்ண நாயுடு போன்றவர்கள் நேரடியாகக்  குடிசைப்பகுதிகளுக்குச் சென்று தீ வைத்தல் போன்ற இழிவான காரியங்களைச் செய்வார்கள் என்பதை நம்ப முடியாது என்று கூறியது.
 
அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவதற்காக  மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசாங்கம், 1971இல் கொண்டு வந்த ‘இந்து அற நிலையப் பாதுகாப்புச் சட்டத்துக்கான திருத்தமொன்று அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று 1972இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறிய பின்னர், மீண்டும் அந்த பிரச்சனை எம்ஜிஆரின் அ இஅதிமுக அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதன் பொருட்டு அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக  (அப்போது பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த) நீதிபதி எஸ்.மகராஜன் நியமிக்கப்பட்டார். அவர் சாதி எதிர்ப்பாளரோ, ஆகம விதி எதிர்ப்பாளரோ அல்லர்; சாதி அமைப்புக்கோ, ஆகம விதிகளுக்கோ குந்தகம் விளைவிக்காத சில பரிந்துரைகள் அவரது குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டன.

எப்படியிருப்பினும் கீழவெண்மணித் தீர்ப்பு அவருக்கு ‘அழியாப் புகழை' ஏற்படுத்திவிட்டது! அண்மைக்காலமாக ‘தமிழ்ப் பண்பாடு', ‘தமிழ் தேசிய உணர்வு' ஆகியவற்றின் மிக தீவிரமான ஆதரவுச் சக்தியாகச் செயல்படும் ‘தினமணி'யில் ஞாயிற்றுக்கிழமை தோறும் எழுதிவரும் ‘கலாரசிகன்' கூறுகிறார்: “உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்கள் எல்லோரும் நீதிமான்களாகவும் இருந்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஜஸ்டிஸ் மகராஜன் நீதிமானாகவும் இருந்தவர் என்பதால்தான் இன்றைக்கும் திருநெல்வேலியில் அவர் பெயரில் ‘மகராஜ நகர்' என்று ஒரு பகுதி வழங்கப்படுகிறது” ( கலாரசிகன், தமிழ்மணி, தினமணி, 10.6.2012)

இது ஒருபுறமிருக்க பிரமேஷ்வர் சிங்கை சுட்டுக் கொன்றது மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட், மாவோயிஸ்ட் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் யாரும் அல்ல  என்பதை பீகார் அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ளது. ‘ரன்வீர் சேனா' அமைப்புக்குள் இருந்த  கோஷ்டிப்பூசல்களின் காரணமாக அந்த கொலை நடந்திருக்கும் என்னும் சந்தேகத்தின் அடிப்படையில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சுனில் பாண்டே என்பவரின் கூட்டாளி ஒருவரை பீகார் போலிஸ் கைது செய்துள்ளதையும் இந்தக் கொலை தொடர்பான சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதையும் சுட்டிக்காடும் சில  ஊடகங்கள், நிதிஷ் குமார் சட்டம் ஒழுங்கைக் காப்பவர், பாரபட்சமற்றவர், தலித்துகள்-பிற்பட்ட சாதிகள் ஆகியோரின் புரவலர் என்றெல்லாம் கூறி வருகின்றன. நிதிஷ் குமார் பதவியேற்ற பிறகு பீகாரில் சாதிப் படுகொலைகள் ஏதும் நடக்கவில்லை என்றும், பிரமேஷ்வர் சிங் கொலை செய்யப்பட்டதை அடுத்து பாட்னாவிலும் பீகாரின் வேறு  சில பகுதிகளிலும் அவரது சாதி ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைகளைப் போலிசார் தடுத்து நிறுத்தாததற்குக் காரணம், நிதிஷ் குமார் போலிஸ் நடவடிக்கைக்கு உத்தரவிட்டு வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த துப்பாக்கிப் பிரயோகம் ஏதேனும் நடத்தப்பட்டிருக்குமானால், நிலைமை இன்னும் மோசமானதாகி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைகுலைந்திருக்கும் என்றும் இந்த ஊடகங்கள் கூறுகின்றன.

ஆனால், உண்மை இதற்கு நேர்மாறானது. மேலே கூறியது போல நிதிஷ் குமார் அரசாங்கம் பிரமேஷ்வர் சிங் பிணையில் வெளிவருவதற்கும், ரன்வீர் சேனா நடத்திய படுகொலைச் சம்பவங்களில் அவரைத் தொடர்புபடுத்தாமல் இருக்கவும் உதவி செய்துள்ளது. அதுமட்டுமின்றி, அவரது  ஐக்கிய ஜனதா தளம் கட்சி பூமிஹார்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாகும். அவரது கூட்டாளிகளான பாஜகவின் நெருக்கமான ஆதரவாளராக இருந்தவர் பிரமேஷ்வர் சிங். லக்ஷ்மன்பூர் பாத்தே கிராமத்தில் ரன்வீர் சேனா 61பேரைப் படுகொலை செய்த நிகழ்ச்சி நாட்டையே உலுக்கி,அன்றைய குடியர்சுத் தலைவர் கே.ஆர். நாராயணனால் 'தேசிய அவமானம்'என்று வர்ணிக்கப்பட்ட பிறகு, ரப்ரி தேவி முதலமைச்சராக இருந்த பீகார் அரசங்கம், ரன்வீர் சேனாவுக்கும் அரசியல் கட்சிகளுக்குமுள்ள தொடர்புகள் பற்றி விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க  நீதிபதி அமீர்தாஸ் தலமையிலான விசாரணை ஆணையத்தை நியமிததது. அந்த ஆணையம் தனது அறிக்கியை சமர்ப்பிதற்கு முன்னதாகவே, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள- பாஜக கூட்டணி அரசாங்கம் 2006இல் அந்த ஆணையத்தைக் கலைத்துவிட்டது. ராம் மனோகர் லோகியா, ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்ற சோசலிசவாதிகளின் மரபுக்கு உரிமை கொண்டாடும் நிதிஷ் குமார் (இப்படி உரிமை கொண்டாடுபவர்களில் லாலுபிரசாத், முலாயம், ஷரத் யாதவ் முதலியோரும் அடங்குவர்), கிராமப்புறத்தில் நிலவிய கொந்தளிப்புகளின் காரணமாக 2006இல் பீகார் நிலச்சீர்திருத்த ஆணையத்தை (Bihar Land Reform Commission)   நியமித்தார். அந்த ஆணையம் தனது அறிக்கையை 2008 ஏப்ரல் மாதம் சமர்ப்பித்த்து. பீகாரிலுள்ள குத்தகை விவசாயிகளுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை.  நிலவுடைமையாளர்கள் வாய்மொழியாகத் தரும் ஒப்புதல் மூலமே குத்தகை உரிமையை அனுபவிக்க முடியும். அவர்களை எப்போது வேண்டுமானலும் நில உடைமையாளர்கள்  நிலத்தை விட்டு வெளியேற்றிவிட முடியும். 'பட்டய்தாரர்கள்' எனப்படும் இத்தகைய குத்தகை விவசாயிகளுக்குப் பாதுகாப்புத் தருவதற்கான ஏற்பாடுகள்,  நில உடைமைக்கு உச்ச வரம்பு விதித்தல், உபரி நிலங்களை நிலமற்றோருக்குப் பிரித்துக் கொடுப்பதற்கான பரிந்துரைகள் முதலியன அந்த ஆணையத்தின் அறிக்கையில் உள்ளன. ஆனால், இந்த அறிக்கையிலுள்ள பரிந்துரைகள் குறித்து நிதிஷ் குமார் அரசாங்கம் இதுவரை மெளனம் சாதித்து வருகிறது.

ஆகவேதான், பத்தோனி தோலா வழக்கில் பீகார் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பீகார் அரசாங்கம் மேல் முறையீடு செய்யும் என்று நிதிஷ் குமார் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை, ரன்வீர் சேனா போன்ற ஆதிக்க சாதி/வர்க்க அமைப்புகளின் ஒடுக்குமுறைக்கும் அரசாங்க நிறுவனங்களின் அலட்சியத்துக்கும் ஆளானவர்களுக்கு (அவர்களின் வெந்த  புண்களில்தான் பீகார் உயர் நீதிமன்றம் தனது வேலைப் பாய்ச்சியுள்ளது) எந்த நம்ப்பிகையையும் தராது. பத்தோனி தோலா வழக்கில் பீகார் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, ஏதோ விதிவிலக்கான ஒன்று எனக் கொள்ள முடியாது. நீதி நிர்வாகமும் ஏழைகளுக்கு நீதி வழங்குதலும் எதிரெதிரான துருவ முனைகளாகவே இந்த நாட்டில் இருக்கின்றன என்பதற்கான எடுத்துக்காட்டாகவே அமைகின்றது. இன்னும் சொல்லப்போனால் ‘சாதிக்கொரு நீதி' என்னும் மனுநீதிதான்  இன்றிய இந்திய நீதிமன்றங்களிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு பத்தோனி தோலா தீர்ப்பு இன்னொரு எடுத்துக்காட்டாக உள்ளது என்றால் வேறொரு தீர்ப்பு இந்த எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக உள்ளது.  

2
பீகாரில் ஆதிக்க சாதிகளின்/வர்க்கங்களின் ‘சேனைகள்' அரசாங்கத்திலுள்ளவர்களின் நேரடியான, மறைமுக ஒத்துழைப்புடன் ஒடுக்க்ப்படும், சுரண்டப்படும் மக்கள் மீது நடத்தும் வன்முறைத் தாக்குதல்களுக்கு எதிராக தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதிகளையும் சிறுபான்மை மதத்தினரையும் சார்ந்தவர்கள் பல்வேறு இடதுசாரி அமைப்புகளில் ஒழுங்மைக்கப்பட்டு தற்காப்பு நடவடிக்கைகளையோ எதிர்த்தாக்குதல்களையோ நடத்தும்போது, சட்ட நிர்வாகமும் நீதி வழங்கும் முறையும் எவ்வாறு சாதி/வர்க்க பாரபடசத்துடன் நடந்து கொள்கின்றன என்பதை பத்தோனி தோலா வழக்கைப் போலவே, கயா மாவட்டத்திலுள்ள பாரா என்னும் கிராமத்தில் நடந்த படுகொலை நிகழ்ச்சி மீதான வழக்கின் தீர்ப்பும் அமைந்துள்ளது. மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்படும் ஏறத்தாழ  ஐநூறு பேர் 1992 பிப்ரவரி 12 அன்று இரவு அந்தக் கிராமத்திற்குச் சென்று, தலித்துகள், முஸ்லிம்கள், ஒடுக்கப்படும் மிக பிற்பட்ட சாதியினர் ஆகியோரைச் சேர்ந்த கிராமப்புற உழைக்கும் மக்கள் மீது வன்கொடுமைகள் புரிந்து வந்த ஆதிக்க பூமிஹார் சாதியைச் சேர்ந்த  35 பேரை அருகிலுள்ள கால்வாய்க்குக் கொண்டு சென்று அவர்களது கழுத்தை அறுத்தும் கைகால்களை வெட்டியும் கொன்றபிறகு வைக்கோல் போர்கள், வீடுகள் முதலியவற்றைத் தீயீட்டுக் கொளுத்திய நிகழ்ச்சி அது. அதுவும் ஒரு படுகொலை நிகழ்ச்சிதான் என்றாலும், கொல்லப்பட்டவர்கள் உயர்சாதி பூமிஹார்கள் என்பதால், லாலு பிரசாத் அரசாங்கம், ‘தடா' சட்டத்தைப் பயன்படுத்தி,அந்தக் கொலைகள், தீவைப்பு ஆகியவற்றை ‘பயங்கரவாத மற்றும் சீர்குலைவு  நடவடிக்கைகளாக' வகைப்படுத்தி தடா சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணைக்குக் கொண்டு வந்தது. தலித்துகளுக்கு எதிராக ‘தடா' சட்டத்தை முதன்முதலில் பயன்படுத்திய பெருமை அவர்களுக்குக் ‘குரலை'யும் ‘சொர்க்கத்தையும்' தரப்போவதாக வாக்குறுதி தந்து வந்த லாலு பிரசாத்தின் அரசாங்கம்தான்.

சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட நெறிகளையும் இயற்கை நீதி என்னும் அடிப்படைக் கோட்பாட்டையும் அப்பட்டமாக மீறும் விதிகளைக் கொண்ட சட்டம் அது என்பதை காங்கிரஸ் ‘சட்ட ஆலோசனைக் குழு'வின் தலைவராக இருந்தவரும், பின்னர் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராகச் செயல்பட்டவருமான (உச்ச  நீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி) ரங்கநாத் மிஸ்ராவே கூறி, அதை இரத்து செய்ய வேண்டும் என்று உரத்த குரல் கொடுத்தார். அந்தச் சட்டத்தின் கொடிய பிரிவுகள் சில: கைது செய்யப்பட்டவரை 60 நாள்கள் வரை போலிஸ் காவலில் வைக்கலாம்;180 நாள்கள் வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலேயே சிறையில் வைக்கலாம்; தேவைப்பட்டால் மேலும் ஆறு மாதங்களுக்கு சிறையில் வைத்திருக்கலாம். போலிஸ் காவலில் வைக்கும்போது குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாகுமூலம் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய சாட்சியமாக  அமையும்; மூடிய கதவுகளுக்குள் விசாரணை நடத்தலாம்; ஊடகங்களோ பொதுமக்களோ விசாரணையைப் பார்வையிட முடியாதபடி தடுக்கலாம்; அரசாங்கத் தரப்பில் சாட்சியம் கூற வருபவர்களின் உண்மையான அடையாளங்களை குற்றம் சாட்டப் பட்டவருக்குத் தெரியாமல் மூடி மறைக்கலாம்; ‘தடா' சட்டத்தின்படி பிணையில் வருவதற்கும் கூட உயர் நீதிமனறத்தை அணுக முடியாது. உச்ச நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும்; சிறப்பு விசாரணை மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டுக்கும்கூட நேரடியாக உச்ச நீதிமன்றத்தைத்தான் அணுக முடியும்.

பாரா கிராமத்தைச் சேர்ந்த சத்யேந்திர சர்மா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறை  முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. அதில் 119பேர் குற்றம் சாட்டப் பட்டிருந்தனர். எனினும் காவல்துறையால் 13 பேரை மட்டுமே கைது செய்ய முடிந்ததால், அவர்கள் மட்டும் தனியே பிரிக்கப்பட்டு ‘தடா' சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் அந்த வழக்கு விசாரணையில்  இருந்தது. 2001 ஜூன் 8 அன்று அந்த சிறப்பு நீதிமன்றம்,  குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் வீர்குமார் பாஸ்வான், கிருஷ்ணா மோச்சி, தாரு சிங் என அழைக்கப்படும் தர்மேந்திர சிங், நந்தே மோச்சி ஆகிய நால்வருக்கு  மரண தண்டனை வழங்கியது ( இதில தர்மேந்திர சிங்கைத் தவிர மற்ற மூவரும் தலித்துகள்).பிஹாரி மஞ்சஹி, ராமவதார் துஸ்ஸாத், ராஜேந்திர பாஸ்வான், வகில் யாதவ்  ஆகியோருக்கு (இதில் முதல் மூவர் தலித்துகள்) ஆயுள் தண்டனை வழங்கியது; ரவீந்திர சிங் என்பாருக்குப் பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கியது; போதுமான சாட்சியங்கள் இல்லை என்று கூறி நால்வரையும் விடுதலை செய்தது.

ஒன்பது பேர் மீது குற்றத்தீர்ப்புக் கூறி அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு முதன்மையான அடிப்படையாக இருந்தது, கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போலிஸ் காவலின் போது பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள்தான். நால்வருக்கு இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 302,149 ஆகியவற்றின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டாலும், தடா சட்டம் பிரிவு 3(1)இன் கீழ் மரண தண்டனை வழங்கப்பட்டது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட  நால்வர், தங்கள் தண்டனையை இரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றதிடம் மேல் முறையீடு செய்தனர். நீதிபதி எம்.பி.ஷாவின் தலைமையில் இருந்த ஆயம் ( நீதிபதிகள் பி.என்.அக்ரவால், அஜித் பஸாயத் ஆகியோர் அந்த ஆயத்திலிருந்த மற்ற இரு நீதிபதிகள்), அவர்கள் நால்வரையும் விடுதலை செய்து தீர்ப்பளிததது. நீதிபதி எம்.பி.ஷாவால் வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்புக் கூறியது: அதற்கான காரணங்கள் என அந்த ஆயம் கூறியவை கீழ் வருமாறு:

1.    பிஹாரி மஞ்சியின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே  அவருக்கும் மற்ற மூவருக்கும்  தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. அந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் அவர், மற்ற மூவரும் பரா குற்ற சம்பவத்தில் பங்கேற்றனர் என்று கூறியிருந்தார். அந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் கயா மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரின் முன்னிலையில் காவல் துறை ஆய்வாளரால் பதிவு செய்யப்பட்டது என்றாலும், தடா பிரிவு 15இன் கீழ் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் காவல் துறைக் கண்காணிப்பாளரால் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும்.மேலும், அந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நள்ளிரவில் போலிஸ் ஜீப் விளக்கு வெளிச்சத்தில் பதிவு செய்யப்பட்டது.

2.அந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலம், தடா விதி 15இன் படி முதன்மைக் குற்றவியல் நடுவருக்கு அனுப்பப்படவில்ல. குற்றம் சாட்டப்பட்டவர்களைக் குற்றத்துடன் தொடர்பு படுத்துவதற்குத் தேவையான தடயங்களையும் சாட்சியங்களையும் திரட்டுவதற்குப் பதிலாக, புலனாய்வு மேற்கொண்ட காவல் துறை அதிகாரிகள்  நியாயப்படுத்த முடியாத வழிமுறையை மேற்கொண்டனர்.

3.  குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்த காவல் துறை ஆய்வாளரோ, பதிவு செய்யப் படுவதைப் பார்த்துக் கொண்டிருந்த காவல் துறைக் கண்காணிப்பாளரோ நீதிமன்றத்தில் பிஹாரி மஞ்சியை அடையாளம் காட்டவில்லை.

4.அந்த நால்வரும் ஒரே கிராமத்தில் வசிப்பவர்கள் என்பதைத் தவிர அவர்க்ள் குற்ற சம்பவம நடந்த இடத்தில் இருந்தனர் என்று அரசாங்கத் தரப்பு சாட்சியங்கள் யாரும் கூறவில்லை. 
 
 மரண தண்டனை விதிக்கப்பட்ட கிருஷ்னா மோச்சி மற்றும் மூவரின் மேல் முறையீட்டு மனுக்களும் இதே ஆயத்திடம்தான் விசாரணைக்கு வந்தன என்றாலும், அவர்களைப் பொருத்தவரை தீர்ப்பு முற்றிலும் வேறுவிதமாக இருந்தது. நீதிபதிகள் பி.என்.அக்ரவால், அஜித் பஸாயத் ஆகியோர் மரண தண்டனையை உறுதிப்படுத்தினர். சிறுபான்மைத் தீர்ப்பாக அமைந்த  நீதிபதி எம்.பி.ஷாவின் தீர்ப்பு கூறியது:

1.இந்த  நால்வர் மீதும் தடா நீதி மன்றம் குற்றத் தீர்ப்புக் கூறி அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு முதனமையான அடிப்படையாக இருந்தது அவர்களிடமிருந்து பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள்தான். இந்த ஆயத்திலுள்ள பெரும்பான்மையான நீதிபதிகளின் கருத்தை  நான் ஏற்றுக் கொண்டாலும், நீதியை நிலை நாட்ட இந்த நால்வருகு ஆயுள் தண்டனையே போதும் எனக் கருதுகிறேன்.

2.இந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளி எனக் குற்றம் சட்ட்டப்பட்டிருந்த பிஹாரி மஞ்சிக்கும் வேறு மூவருக்கும் தரப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்துச் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரணை செய்த நாம், குற்ற ஒப்புதல் வாக்குமூலம் எனச் சொல்லப்படுகின்ற ஒன்றைத் தவிர அவர்களுக்கு எதிராக எந்த சாட்சியமும் இல்லை என்னும் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்தோம். இதே அடிப்படையில் விதிக்கப்பட்ட நால்வரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம்.

 3.மூன்று நீதிபதிகள் அடங்கிய ஆயத்தில் ஒரே ஒரு நீதிபதி மட்டும்,   மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்று கருதினால், அந்தக் கருத்து மற்ற இரு நீதிபதிகளால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அரசமைப்புச் சட்ட விதி 21இன் படி உயிர் வாழும் உரிமை உத்திரவாதம் செய்யப்படுமானால், அது சிறந்த முன்னுதாரணமாக அமையும்.

 ஆனால், மற்ற இரு நீதிபதிகள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து கிருஷ்னா மோச்சிக்கும் மற்ற மூவருக்கும் மரண தண்டனையை உறுதிபடுத்தினர். அந்த ஆயத்தின் சார்பாகத் தீர்ப்பை வழங்கியவர் நீதிபதி பி. என்.அக்ரவால். பெரும் அறவியல் சொற்பொழிவு போலத் தொடங்குகிறது இந்தத் தீர்ப்பிலுள்ள சில கருத்துகள்: வளர்ச்சியடைந்த நாடுகளில் மட்டுமல்லாது, இந்தியா போன்ற வளர்முக நாடுகளிலும்கூட பொது வாழ்க்கையில் அறவியல் மதிப்பீடுகள் சரிந்து வருகின்றன; சாதாரண வழக்குகளிலும்கூட சாட்சிகள் நம்பத்தகுந்த சாட்சியங்களை நீதிமன்றத்தில் தருவதில்லை; அதாவது,  சாட்சிகளின் உயிருக்கு வரும் அச்சுறுத்தல்கள்; இவை குற்றம்புரிவதையே வழக்கமாகக் கொண்டவர்களிடமிருந்தோ, அரசியல் அதிகாரம், பண பலம், ஆள் பலம் படைத்தவர்களிடமிருந்தோ வரலாம்; சாட்சியம் கூற வருகிறவர் படிப்பறிவில்லாத, சாமானியராக இருந்தால் வாதத்திறமையுள்ள வழக்குரைஞர், தனக்கு சாதகமான பதில்களை அந்த சாட்சியிடமிருந்து மிகத் திறமையாகக் கறந்துவிடுகிறார்;.இந்த நாள்களில் பணத்தைக் கொடுத்தோ, அச்சுறுத்தியோ, வேறு ஆசை வார்த்தை காட்டியோ சாட்சிகளை விலைக்கு வாங்கிவிடலாம்; திறமைமிக்க சாட்சிகள், புலனாய்வு அதிகாரிகள் முதலியோரும்கூட சமுதாயத்தில் காணப்படும் அறவியல் சரிவுகளின் பாதிப்புக்கு உள்ளாகமல் இருப்பதில்லை; கிரிமினல் குற்ற வழக்கில் அரசாங்கத்தின் சார்பில் வழக்காடும் அரசாங்க வழக்குரைஞர் எத்தனையோ இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது; சாட்சியங்களில் உள்ள சிறுசிறு குறைபாடுகளைக் காரணம் காட்டி, குற்றம் சாட்டப்பட்டவர்களைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கும் போக்கு தற்போது நீதி மன்றங்களில் அதிகரித்து வருகிறது; இந்தக் காலத்தில் குற்றங்கள் தலைவிரித்தாடுகின்றன; அதனால் மனிதகுலம் துன்பப்படுகிறது; சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. “ ஒரு நிரபராதியைத் தண்டிப்பதை விட நூறு குற்றவாளிகளை விடுதலை செய்வது நல்லது” என்னும் நெறி இப்போது உலகம் முழுவதிலும் மாற்றப்பட்டு, ‘தவறாக தண்டிக்கப்படுவதால் மட்டுமல்லாமல் தவறாக விடுதலை செய்யப்படுவதாலும் சமுதாயம் அவதியுறுகிறது” என்பதே இப்போது ஏற்றுக்கொள்ளப்படும் அறவியல் உண்மையாகிவிட்டது; எனவே நீதிமன்றத்தில் சாட்சிகள் கூறும் சாட்சியங்களில் குறைபாடுகளும் முன்னுக்குப்பின் முரணான அம்சங்களும் இருந்தாலும், உமியை நீக்கிவிட்டு அரிசியை எடுத்துக் கொள்வது போல, சாட்சியத்தின் எந்த அம்சத்தை எடுத்துக்கொள்வது, எதைப் புறக்கணிப்பது என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு இப்போது நீதிமன்றங்களுக்கு அதிகமாக உள்ளது. நீதிபதிகள் தந்தக் கோபுரத்தில் இருந்து கொண்டு சமுதாயத்தில் நிலவும் யதார்த்த நிலைமைகளைக் கருத்தில் கொள்ளமால்  இருந்துவிடக்கூடாது,

நீதிபதி அக்ரவால் அந்த ஆயத்தின் சார்பில் வழங்கிய தீர்ப்பில் இருந்த  இத்தகைய ‘அறவியல் போதனைகளை'யும் ‘சமூகவியல் பார்வையையும்' உள்ளடக்கிய  பீடிகையின் நோக்கம்,   சமுதாயத்திலுள்ள ஆதிக்கச்சக்திகள், பணபலமும் ஆள்பலமுமுடையவர்கள், அரசாங்க  நிர்வாகத்துடன் தொடர்புடையவர்கள், காவல்துறைப் புலன் விசாரணை அதிகாரிகள் ஆகியோர் எவ்வாறு பொய்வழக்குகளைப் புனைகிறார்கள், குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை சித்திரவதைகள் மூலம் கறக்கிறார்கள் என்பனவற்றைச் சுட்டிக்காட்டுவது அல்ல;  மாறாக, மேற்சொன்ன பலம் ஏதுமில்லாத தாழ்த்தப்பட்ட, சுரண்டப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிப்படுத்தும் பொருட்டு, அவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்காடிய வழக்குரைஞரின் வாதங்களை மறுதலிப்பதற்குத்தான் என்னும் எண்ணம் இந்த தீர்ப்பைப் படிக்கையில் நமக்கு ஏற்படுவதில் வியப்பில்லை.

இந்த வழக்கின்  குற்றப் பத்திரிகையில் இருந்த முதல்  பெயர் (accused No.1) பிஹாரி மஞ்சி. அவரிடமிருந்து கறக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்திலிருந்த ஓட்டைகளின் அடிப்படையில்தான் அவர் உச்ச நீதிமன்றத்தால் (இதே மூன்று நீதிபதிகளைக் கொண்ட ஆயத்தால்) விடுதலை செய்யப்பட்டார் என்பதை நாம் பார்த்தோம். தடா சட்டத்தின்படி, குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தந்தவர், தன்னோடு சேர்ந்து குற்றம் இழைத்தவர்கள் என்று வேறு எவரது பெயரைக் குறிப்பிட்டிருந்தாலும், அவரும் குற்றம் சாட்டப்பட்டவராகிறார். சித்திரவதைகள் மூலம் பெறப்படும் இத்தகைய குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களில் இது தவிர்க்கப்பட முடியாதது. முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயரே இருக்கவில்லை என்பதுதான் இதிலுள்ள  முரண்.

மரணதண்டனை விதிக்கப்பட்ட நால்வர் சார்பில் வழக்காடிய வழக்குரைஞர், பிஹாரி மஞ்சியிடமிருந்த கறக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்திலும்கூட, தன்னுடன் சேர்ந்து குற்றத்தைச் செய்ததாக அவர் குறிப்பிட்டிருந்த பெயர்களில், மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரின் பெயர்கள் இடம் பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, எனவே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என முன்வைத்த வாதத்தை மறுதலித்து நீதிபதி அகர்வாலின் தீர்ப்பு கூறியது:  “பிஹாரி மஞ்சி தனது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் இந்த நால்வரது பெயர்களைச் சேர்க்காமல் இருந்ததற்குப்  பல காரணங்கள் இருந்திருக்கலாம்; குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தந்தவருக்கு அந்த நால்வர் முழுமையாகத் தெரியாதவர்களாக இருந்திருக்கலாம்; அல்லது அவருக்கு தெரிந்த காரணங்களினால், அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்னும் மறைமுகமான நோக்கத்துடன் அவர்களது பெயர்களை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம்”
 
பாரா கிராமத்தில் நடந்த கொலைகள், தீ வைப்பு முதலியவற்றைப் பற்றிப் போலிசாருக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த சதேந்திர குமார் ஷர்மா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் முதல் தகவல் அறிக்கை தயரிக்கப்பட்டது. ஆனால்,  அந்த வழக்கு ‘தடா' சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த காலம் முழுவதிலும் அவர் நீதிமன்றத்துகு வரவோ, விசாரணை செய்யப்படவோ இல்லை. இதை மரண தண்டனை பெற்றவர்களின் வழக்குரைஞர் சுட்டிக்காட்டினார். ஆனால், நீதிபதி அக்ரவால் வழங்கிய தீர்ப்பு, இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுதத்து. அது கூறியதாவது: ‘இந்த வாதம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. முதல் தகவல் அறிக்கையை திடமான சாட்சியமாக ( substantive piece of evidence) ஏற்றுக்கொள்ள் முடியாது. ஏனெனில் இந்த நால்வரும் குற்றவாளிகள் என முடிவு செய்வதற்கு அரசாங்கத் தரப்பில்  கொண்டு வரப்பட்ட சாட்சியங்கள் போதுமானவையாக உள்ளன. புகார் கொடுத்தவரை விசாரணை செய்யாமல் விட்டுவிட்டதால் அரசாங்கத் தரப்பு வாதம் எவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை'.

இந்த சதேந்திர குமார் ஷர்மா, ஏன் ‘தடா' நீதிமன்றத்துக்கு வராததற்கும், அவர் ஏன் விசாரணை செய்யப்படாததற்குமான உண்மையான காரணத்தை  காவல் துறையோ, தடா நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ  ஒரு இடத்தில்கூட குறிப்பிடவில்லை. அப்போது ‘ரன்வீர் சேனா'வின் குற்ற நடவடிக்கைகளில் சம்ப்ந்தப்படிருந்ததால்,' தேடப்படும் குற்றவாளி'யாக அறிவிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்தார் எனதுதான் அந்த உண்மை.

புலனாய்வு அதிகாரிகளிலொருவராக இருந்த காவல் துறை ஆய்வாளர் ராம் ஜபித் குமார் என்பவரும் தடா  நீதி மன்றத்தால் விசாரணை செய்யப்படவில்லை என்பதை மேற்சொன்ன வழக்குரைஞர் சுட்டிக்காட்டியிருந்தார். அந்த வாதத்தை நிராகரித்து நீதிபதி அக்ரவாலின் தீர்ப்பு கூறியது: சதேந்திர குமார் ஷர்மாவின் புகாரைப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையைத் தயாரித்தவர் காவல் துறை ஆய்வாளர் ராம் ஜனம் சிங் (அரசாங்கத் தரப்பு சாட்சி எண் (அதசா) 33);  பாரா கிராம குற்றச் சம்பவம் குறித்துப் புலனாய்வு செய்யும்படி மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரால் உத்திரவிடப்பட்டிருந்தவர் ஆய்வாளர் ராம் ஜபித் சிங். 12.2.1992 அன்று  நடந்த அந்த சம்பவம் குறித்து புலன் விசாரணை மேற்கொள்ளும் பொறுப்பை ராம் ஜபித் சிங் 17.2.1992 வரை மேற்கொள்ளாததால், மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் வேறொரு காவல் நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சுரேஷ் சந்திர ஷர்மாவை (அதசா 17) புலனாய்வுப் பொறுப்பை மேற்கொள்ளுமாறு வாய்மொழியாக உத்திரவிட்டார். அந்த வாய்மொழி உத்திரவின் பிரகாரம், முதல் தகவல் அறிக்கையைத் தயாரித்த ஆயவாளர்  ராம் ஜனம் சிங் (அதசா33), அந்த வழக்கு தொடர்பான புலனாய்வுப் பொறுப்புகளை சுரேஷ் சந்திர ஷர்மாவிடம் ஒப்படைத்தார். அதன்படி சுரேஷ் சந்திர சர்மா, மாவட்டக் கண்கணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் புலன் விசாரணையைச் செய்து முடித்தார். எனவே, புலனாய்வுப் பொறுப்பை மேற்கொள்ளாத ஆய்வாளர் ராம் ஜபித் சிங்கை தடா நீதிமன்றம் விசாரணை செய்யாமல் விட்டதில் தவறில்லை.

 12.2.1002 அன்று நடந்த மிகக் கொடூரமான நிகழ்வு என்று கருதப்படும் அந்த நிகழ்வு குறித்த புலன்விசாரணையை 17.2.1992 வரை ராம் ஜபித் சிங் ஏன் தொடங்கவில்லை என்பதற்கான காரணத்தையோ, அந்த புலன் விசாரணையை மற்றொரு ஆய்வாளர்  மேற்கொள்ளும்படி வாய் மொழியாக (எழுத்துபூர்வமாக அல்ல)  மாவட்டக் கண்காணிப்பாளர் உத்தரவிட்டது சட்டப்படி சரியானதுதானா என்பதையோ விசாரித்தறிவது முக்கியமானது அல்ல என்று ‘சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் ஏற்பட்டு வரும் தார்மீகச் சரிவுகள்' பற்றிக் கவலை தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதி  முடிவு செய்தார். மேலும், தடா நீதி மன்றத்தைப் போலவே, உச்ச நீதிமன்றமும்  மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வருக்கு எதிரான வலுவான சாட்சியமாக சுரேஷ் சந்திர ஷர்மாவின் சாட்சியத்தையே ஏற்றுக்கொண்டது. பெரும்பாலான அரசாங்கத் தரப்பு சாட்சிகளால்,  தடா நீதிமன்றத்தில் குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியவில்லை, அவர்களது பெயர்களைச் சரியாகச் சொல்ல முடியவில்லை, அவர்களது சாட்சியங்களில் முரண்பாடுகள் உள்ளன என்பனவற்றைச் சுட்டிக்காட்டிய  மேற்சொன்ன் வழக்குரைஞரின் வாதத்தை மறுதலித்து நீதிபதி அக்ரவால் வழங்கிய தீர்ப்பு கூறியது: ‘எத்தனை பேர் சாட்சியம் கூறினார்கள் என்பது முக்கியமல்ல; சாட்சியத்தின் தன்மைதான் முக்கியம் என்று உச்ச நீதிமன்றம் வேறொரு தீர்ப்பில் கூறியிருக்கிறது. எனவே அந்த அடிப்படையில் பார்த்தால் ஒரே ஒரு சாட்சியின் வலுவான சாட்சியம் மட்டுமே போதுமானது'.

 பாரா கிராமத்தில் 12.2.1992 அன்று இரவு கொலை, தீவைப்புக் குற்றங்களைச் செய்ய துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கத்திகள் முதலிய ஆயுதங்களுடன் ஏறத்தாழ ஐநூறு பேர் வந்திருந்தனர் என்று முதல் தகவல் அறிக்கையும் குற்றப்பத்திரிகையும் கூறின. குற்றம் சாட்டப்பட்ட 13 பேரை, அதிலும் குறிப்பாக மரண தண்டனை வழங்கப்பட்ட நால்வரை அரசாங்கத் தரப்பு சாட்சிகளால் சரியாகப் பார்த்திருக்கவோ, அடையாளம் காணவோ சாத்தியமிருந்திருக்காது என்று மேற்சொன்ன வழக்குரைஞர் கூறிய வாதத்தை மறுதலித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, வன்முறைக் கும்பல் பல வீடுகளுக்கும் வைக்கோல் போர்களுக்கும் தீ வைத்தது; அந்த நெருப்பு வெளிச்சத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நன்றாகப் பார்க்க முடிந்தது என்று அரசாங்கத் தரப்பு சாட்சிகள் கூறுவதை மறுப்பதற்கு நியாயம் இல்லை என்று கூறியது.

 வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டுக் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரும் அரசாங்கத்தரப்பு சாட்சியாக இருந்தவருமான யோகேந்திர சிங் என்பவரிடமிருந்து, சம்பவம் நடந்து 24 நாள்களுக்குப் பிறகுதான் போலிசார் வாக்குமூலம் பெற்றிருக்கின்றனர், எனவே இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என மேற்சொன்ன வழக்குரைஞர் முன்வைத்த வாதத்தை மறுதலித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, அந்த வாக்குமூலம் 24 நாள்களுக்குப் பிறகுதான் வாங்கப்பட்டது என்பதை இந்த சாட்சியோ, வேறு எவரோ எந்த இடத்திலும் கூறவில்லை என்றும் சாட்சி கூறியவற்றிலிருந்து, அவர் போலிசாரால் மருத்துவ மனையிலேயே விசாரணை செய்யப்பட்டார் என்று தெரியவருகிறது என்றும் கூறியது. ஆனால், மருத்துவமனையில் அவர் விசாரணை செய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட நாள் எது என்பதைக் குறித்து அந்தத் தீர்ப்பு மெளனம் சாதித்தது

குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்டியதாகச் சொல்லப்படும் அரசாங்கத் தரப்பு சாட்சிகளிலொருவரான லாவேஷ் சிங் என்பவரிடமிருந்தும் மருத்துவமனையிலிருந்து 22 நாள்களுக்குப் பிறகே வாக்குமூலம் வாங்கப்பட்டது என்னும் வாதத்தையும் மறுதலித்த உச்ச நீதிமன்றம்,  அவர் 22 நாள்களுக்குப் பிறகே விசாரணை செய்யப்பட்டார் என்பதற்கு எந்த சான்றும் இல்லை, அவரும் அப்படி எங்கும் சொல்லவில்லை என்று கூறியது. ஆனால், அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்ட நாள் எது என்பதைச் சொல்வதில் மெளனம் காத்தது அந்த தீர்ப்பு.

தடா நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்யப்பட்ட போது, இந்த லாவேஷ் சிங்,  குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனது வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்ததால்  பிரக்ஞை இல்லாமல் போய்விட்டதாகவும் மருத்துவமனையில்தான் தனக்கு பிரக்ஞை திரும்பியதாகவும் ஒப்புக்கொண்டதைச் சுட்டிக்காட்டிய மேற்சொன்ன வழக்குரைஞர், பிரக்ஞை தவறிப்போன ஒருவரால் எவ்வாறு சரியான தகவல்களைத் தந்திருக்க முடியும் என்னும் வாதத்தை முன்வைத்தார்.  இந்த வாதத்தையும் மறுதலித்து நீதிபதி அக்ரவால் கூறியது மிகவும் ஆச்சரியமளிக்கக்கூடியதாகும். அவர் இந்தத் தீர்ப்பில் கூறுகிறார்: "இந்த சாட்சியின் வக்குமூலத்திலுள்ள ஏழாம் பத்தியைப் படித்துப் பார்த்தேன். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனது வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தபோது தான் பீதியடைந்து முற்றிலும் திகைத்துப்போய் விட்டதாகவும், மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தபோது இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டதாகவும் கூறியுள்ளார். எனவே, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக அவர் கூறிய சாட்சியத்தை நிராகரிக்க எனக்கு முகாந்திரம் ஏதும் இல்லை”.

‘பிரக்ஞை இழத்தல்', ‘ நினைவு திரும்புதல்' என்பனவற்றுக்கு ‘பீதியால் திகைத்துப் போதல்', ‘இயல்பு நிலைக்குத் திரும்புதல்' என்று நீதிபதி  விளக்கம் கூறியபோதிலும் அவை இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பதையோ, ‘பீதியால் திகைத்துப் போய்' பின்னர் மருத்துவமனையில் மட்டுமே  ‘இயல்புநிலைக்கு' திரும்பிய ஒருவர் சரியான விவரங்களைக் கூறியிருக்க முடியாது என்பதையோ உச்ச நீதிமன்ற நீதிபதியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!

35பேர் கொலை செய்யப்பட்டு, வீடுகள் முதலானவற்றுக்குத் தீ வைத்தல், பிறருக்குக் காயங்களை ஏற்படுத்துதல் போன்ற குற்றங்களில் இந்த நால்வர் வகித்த திட்டவட்டமான பாத்திரம் என்ன, அவர்கள் புரிந்த குற்றங்கள் யாவை என்பனவற்றை அரசாங்கத் தரப்பு சாட்சிகள் கூறவில்லை என்று மேற்சொன்ன வழக்குரைஞர் கூறிய வாதத்தை மறுதலித்த நீதிபதி அக்ரவால் கூறியதாவது: அரசாங்கத் தரப்பு சாட்சிகள், இந்த நால்வரும் ஆயுதங்கள் ஏந்தியிருந்ததை நெருப்பு வெளிச்சத்தில்   ( சில சாட்சிகள் தங்கள் வீட்டுக் கூரைகளிலிருந்து) பார்த்திருக்கிறார்கள். மேலும், சட்டவிரோதமான கும்பலோடு சேர்ந்து வருபவர்கள், அந்தக் கும்பல் செய்யும் குற்றச் செயல்களில் வகித்த திட்டவட்டமான  பாத்திரம், பங்கு என்ன என்பதைச் சொல்ல  முடியாவிட்டாலும், அந்தக் கும்பல் செய்த அத்தனை குற்றங்களுக்கும் அவர்கள் பொறுப்பாவார்கள் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது. எனவே, இந்த நால்வர் அந்தக் கும்பலில் இருந்ததையும் அவர்கள் ஆயுதம் தரித்திருந்ததையும் நெருப்பு வெளிச்சத்தில் அரசாங்கச் சாட்சிகள் பார்த்திருப்பதால், இவர்களது மரண தண்டனையைக் குறைக்க முடியாது.

 சிறுபான்மைத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி எம்.பி.ஷா கூறிய நீதியான, நியாயமான கருத்துகள், இந்த ஆயத்திலிருந்த மற்ற இரு நீதிபதிகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அந்தக் கருத்துகள் கீழ்வருமாறு:  குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்பட்ட விதம், தடா சட்ட விதிகளுக்குக்கூட உட்படாதது; குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவில்லை; அரசாங்கத்தரப்பு சாட்சியங்கள் ஒவ்வொருவரும் குற்றம் புரிந்தவர்கள் என்று ஏராளமான பெயர்களைக் கூறினர், ஆனால் குறுக்கு விசாரணையின் போது அவர்களால் ஓரிரு பெயர்களை மட்டுமே சொல்ல முடிந்தது; எனவே, அவர்கள் போலிசாரே வேறு யாரோ சொல்லியபடியேதான் சாட்சி கூறியிருக்க வேண்டும்; முதல் தகவல் அறிக்கை எந்த நபரது புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டதோ அந்த நபர் விசாரணைக்கு உட்படுத்தபடவில்லை; புலனாய்வு அதிகாரியும்கூட விசாரணை செய்யப்படவில்லை; மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மேல் முறையீட்டை முழுமையாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அவர்களது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவாவது செய்யலாம்.

சட்ட நிர்வாகத்திலும் நீதி வழங்கப்படும் முறையிலும் அக்கறையும் ஆர்வமும் கொண்டுள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னும் எத்தனையோ ‘அற்புதமான அம்சங்கள்' நீதிபதி அக்ரவால் வழங்கிய  இந்தத் தீர்ப்பில் உள்ளன.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் நீதிபதி அக்ரவால் தனது தீர்ப்பில் கூறுகிறார்: “புத்தர் ஞானம் பெற்ற புனித பூமி பீகார் மாநிலத்தின் கயா மாவட்டப் பகுதி ஆகும். இந்தப் பகுதிக்குள்தான், அவப்பேறான  கொடூரமான படுகொலை சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இதில், இந்த மாநிலத்தில் ஒரு காலத்தில் மிக சக்தி வாய்ந்தவர்களாக இருந்தவர்களும் பல பத்தாண்டுகள் பீகாரை ஆண்டு வந்தவர்களுமான ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த 35 பேர், இன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் புனிதமற்ற கூட்டணியால் படுகொலை செய்யப்பட்டு, வசதி இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுமிடையிலான சாதிப்போர் வெடிப்பற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது”

சாதி ஒழிப்பு இயக்கத்தை இந்தியாவில் முதன்முதலில் தொடங்கிய புத்தரின் பெயரைக் குறிப்பிடும் இந்தப் பகுதியில் ஆதிக்க சாதி மனப்பான்மை தயக்கமின்றி வெளிப்படுவதைக் காணலாம்.

இனி, மரண தண்டனை விதிக்கப்பட்டு பதினோரு ஆண்டுகளாக தூக்குக்கயிறுக்காக சிறையில் காத்திருக்கும் இந்த நால்வரது கருணை மனுக்கள் இன்னும் குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் உள்ளன.  இந்த  நால்வரின் பிண்ணணி குறித்து ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏட்டில் வெளியான கட்டுரை கூறும் தகவல்களைப் பார்ப்போம்:

1. கிருஷ்ண மோச்சியின் தந்தை சாட்சி ரவிதாஸின் கூற்றுப்படி, அவரது மகனுக்கும் பாரா கிராமத்தில் நடந்த படுகொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; கிருஷ்ணா செய்த ஒரே குற்றம் தனது சுயமரியாதையை வெளிப்படுத்தியதுதான். கொத்தடிமையாக இருந்த அவர் தனது மகனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பியது அவரது ஆண்டையின் சினத்தைக் கிளப்பிவிட்டது. தனது தந்தையைப் போல வாழாமல், கிருஷ்ணா இடைநிலைப் பள்ளியில் சேர்ந்தார்.ஆனால் பள்ளிப்படிப்பை முடிக்க வசதியில்லாததால், திருமண வீடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தும் குழுவில் சேர்ந்தார். அவரது கிராம வழக்கப்படி பதின்மூன்றாம் வயதிலேயே சந்திரமணி தேவி என்னும் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். அவருக்கு இரு பெண் குழந்தைகளும் மூன்று ஆண்மக்களும் உள்ளனர். கூலி உயர்வு கேட்டுப் போராடியதாலும் சுயமரியாதையுடன் வாழ நினைத்ததாலுமே அவர் நிலப்பிரபுக்களின் சினத்துக்கு ஆளாகினார் என்றும் அவர் மீது பொய்யான கொலைக் குற்றம் சாட்டப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

2.வீர் குமார், இளம் வயதில் எண்ணற்ற தலித் சிறுவர்கள் செய்து வந்ததைப் போலவே, ஆடு மாடுகள் மேய்க்கும் வேளையில் ஈடுபடுத்தப்பட்டார். அதன் பிறகு சொந்தமாக கோழிகளையும் ஆடுகளையும் வளர்க்கத் தொடங்கினார். கொத்தடிமையாக இல்லாமல் ‘சுதந்திரமாகத் தொழில் செய்வது' நிலப்பிரபுக்களுக்குப் பிடிக்கவில்லை. அதை அவர்கள்  நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான நடவடிக்கையாகப் பார்த்தார்கள். அதன் காரணமாக வீர்குமார் பலமுறை அடி உதைகள் வாங்கிவந்தார்; அவரது கோழிகளும் ஆடுகளும் தொடர்ந்து களவாடப்பட்டு வந்தன. கடைசியில், அவரது கோழிகள் தங்கள் பயிர்களை நாசம் செய்துவிட்டதாகக் கூறி அதற்கு அவர் இழப்பீடு தரவேண்டும் என நிலவுடைமையாளர்கள் அவரைத் தொல்லைப்படுத்தி வந்தனர். அவர்கள் கோரிய இழப்பீட்டுத் தொகையத் தருவதற்காக அவர் கந்து வட்டிக்காரரிடம் கடுவட்டிக்குக் கடன் வாங்க வேண்டியதாயிற்று. வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் அவர் மீண்டும் கொத்தடிமையாக்கப்ப்ட்டார்.

3. நன்ஹேலால் மோச்சியும் ஒரு தலித்துதான். அவரும் கொத்தடிமையாகவே பிறந்தவர். சிறுவனாக இருக்கையில் மேல்சாதிக்கரர்களின் ஆடுமாடுகளை மேய்த்து வந்தார். அவர்கள் வீட்டுக் குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்றுக் கொண்டிருக்கையில் அவர் கொத்தடிமைத் தொழிலாளியாகவே இருந்தார். அவரோடு சேர்த்து அவரது சகோதரர் ஜுகல் தாஸும் பாரா கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தபட்டு  பல ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்.

4.தர்மேந்திர சிங் பிறப்பால் ராஜபுத்திரர்.அவருக்குக் கொஞ்சம் சொந்த நிலமுமுண்டு. கல்வி கற்பதிலும் கால்பந்து விளையாடுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர். பணக்கஷ்டம் காரணமாகப் படிப்பைத் தொடர முடியாது போன அவர், வேலை தேடி வெளியூர்களுக்குச் சென்றார். சிறிதுகாலம் கழித்துக் கிராமத்துக்குத் திரும்பி வருகையில், அவரது நிலம் பெரும் நிலவுடைமையாளர்களால் கைப்பற்றப்பட்டதைக் கண்டார். நீதிமன்றம் சென்றார்; வழக்குரைஞர்களுக்குப் பணம் தருவதற்காகக் கடன் வாங்கினார்; கடைசியில் வழக்கில் வெற்றியும் பெற்றார். அந்த வெற்றிக்கு அவர் பெரும் விலையைத் தர வேண்டியிருந்தது. அதாவது பாரா படுகொலையில் அவரும் குற்றம் சாட்டப்பட்டு ‘தடா'   நீதி மன்றத்தால் மரண தண்டனை வழங்கப்பட்டார்.

இந்த நால்வரும் பாரா கொலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அல்ல; மேல் சாதி நிலவுடைமையாளர்களும் அரசாங்க நிர்வாகிகளும் இணைந்து செய்த சதியின் காரணமாகவே அவர்கள் இந்தக் கொலைக்குற்றம் சாட்டப்பட்டார்கள் என்று கூறுவது அவர்கள் மீது அபிமானம் வைத்திருக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும், உற்றார் உறவினர்களும், இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்களும்தான் என்று ஒருவர் கூறலாம். எனினும், அவர்களது வாழ்க்கைப் பின்னணி, அவர்கள் அனுபவித்த ஒடுக்குமுறை ஆகியவற்றை யாராலும் மறுக்க முடியாது.

பத்தோனி தோலா படுகொலையைப் போலவே, பாரா படுகொலையும் நியாயப்படுத்தப் முடியாது என்றும் பீகாரில் ரன்வீர் சேனை போன்ற தனியார் கூலிப்படைகள், நக்ஸ்லைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆகியோர் நடத்தும் காட்டு தர்பாரை ஒழித்துக் கட்டிவிட்டு, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என தாராளவாத மனிதாபிமானிகள் கூறுகின்றனர். ஆனால்,  பத்தோனி தோலா, பாரா தோலா ஆகிய இரண்டிலும் சம்பந்தப்பட்டிருந்த சமூக சக்திகள், அவர்களது  பொருளாதாரப் பின்னணி, அரசாங்க நிர்வாகம், போலிஸ்,  நீதிமன்றங்கள் ஆகியன இந்த வழக்குகளைக் கையாண்ட விதம் ஆகியவற்றில் படிந்திருப்பது - ஆந்திராவில் கரம்சேடு, சுண்டூர் ஆகியவற்றிலும் மகாராஷ்டிரத்தில் கயர்லாஞ்சி என்னுமிடத்திலும் தலித்துகள் பாலியல் வன்முறைக்கு ஆளானது படுகொலை செய்யப்பட்டது  தொடர்பாக நடந்த வழக்குகளில் காணப்பட்டது போலவே - ‘மனு நீதிதான்' என்பதை  இந்த மனிதாபிமானிகளாலும் மறுக்க முடியாது

தரவுகள்:
1.    9 Convicted for Bara Massacre, The Hindu (online edition), June 9,2001
2.    Kavita Krishnan, A Good Witness Is A Dead Witness, Countercurrents.org, 23 April 2012
3.    Deeply Embedded Injustice, Editorial, Economic and Political Weekly, Mumbai, May 26,2012
4.    Ashwani Kumar, No gentlemen in this Army, The Hindu, Coimbatore edition, June 6, 2012
5. Supreme Court of India Judgements on the Appeal Petitions of Devendra Singh and others vs State,N.C.T. of Delhi & Another (Author Shah); Krishna Mochi & Ors vs State Of Bihar on 15 April, 2002 (Author: B.N.Agrawal); Krishna Mochi And Ors vs State Of Bihar on 15 April, 2002 (Author: A Pasayat), Indian Kanoon - <http://indiankanoon.org/doc/941564/> (accessed on 12.6.2012)
6.  Varghese K.George, Social Injustice,Part IV, The Indian Express, 2 December 2004
7.  Anand Teltumbde,The End of Murdrous Mukhiya,Economic and Political Weekly (forthcoming)




1 கருத்து:

  1. தீக்கதிர் நாளிதழ் உடனே செய்தி வெளியிட்டது ,, மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் செய்ததோடு ,, வழக்கை அப்பீல் செய்ய வலியுறுத்தியது மார்க்சிஸ்ட் கட்சின் அரசியல் தலைமைக்குழு ... தொடர் நடவடிகையில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபடும் ... இதனை தவிர்த்து பரிசீலித்தால் கட்டுரையில் சொல்லபட்டிருகும் விசயங்கள் அனைத்தும் உண்மையே , .. நிலபிரபுக்களின் ஆட்சியே மத்தியிலும் மாநிலத்திலும் நடக்கிறது . உழைக்கும் மக்களை திரட்டியே இந்த நீதிமன்ற பயங்கரத்தை முறியடிக்க முடியும் . நன்றி தோழர் ராஜதுரை

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...