காமன்வெல்த் மாநாடு: பொருத்தமான இடத்தில், மிகப்பொருத்தமான நபரால்.... -ஆதவன் தீட்சண்யா

இலங்கையில் நடத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள காமன்வெல்த் மாநாடு பற்றி கருத்துரைக்குமாறு ஊடக நண்பர் ஒருவர் கேட்டதன் பேரில் என்னால் சொல்லப்பட்டவை:

1. அடிமைப்படுத்திய நாடுகளின் இயற்கை வளங்களையும் மனித உழைப்பையும் சுரண்டி கோடிக்கணக்கான மக்களை கொன்றொழித்த பிரிட்டனால் உருவாக்கப்பட்ட காமன்வெல்த் அமைப்புக்கென்று ஏதோ மதிக்கத்தக்க மாண்புகள் இருப்பதாகவும் இலங்கையில் அதன் மாநாடு நடப்பதால் அந்த மாண்புகள் கெட்டழுகிப்போகுமென்றும் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. சொல்லப்போனால், ராஜபக்சே போன்ற கொடுங்கோலர்களால் நடத்தப்படக்கூடிய அளவுக்கானதுதான் அதன் மாண்புகள். ஆகவே இப்போதாவது பொருத்தமான இடத்தில் மிகப்பொருத்தமான நபரால் அந்த மாநாடு நடத்தப்படவிருக்கிறது என்பதறிக.

ஒருவேளை இலங்கையில் ரத்தாகி வேறொரு நாட்டில் அந்த மாநாடு நடத்தப்பட்டால் அங்கு ராஜபக்சேவுடன் மன்மோகன் சிங்கோ மற்றவர்களோ கைகுலுக்குவது பற்றிய கவலைகளும் கண்டனங்களும் வெளிப்படாதிருப்பதையும் சேர்த்தேயறிக.

2. இலங்கை ஆட்சியாளர்களின் பேரினவாதத்தையும் அதன் பேரால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்களையும் அறியாத வேற்றுலகவாசிகளல்ல காமன்வெல்த் அமைப்பின் பொறுப்பாளர்கள். இலங்கை அரசு எப்படிப்பட்டது என்பதை நன்கறிந்தே காமன்வெல்த் மாநாட்டை அங்கு நடத்துவது என்கிற முடிவினை எடுத்துள்ளனர். ஆகவே அவர்களை அப்பாவிகளாக கருதிக்கொண்டு இப்போதாவது சுதாரித்து இலங்கையில் நடத்துவதை ரத்து செய்யுங்கள் என்று கோருவது அர்த்தமற்றது. காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவது என்கிற முடிவினை எடுத்த காலத்தில் அது என்னவோ அகிம்சையின் தாயகமாக அமைதி தவழ இருந்தது போலவும் திடுமென அது பேரினவாத பித்தேறி தமிழர்களை கொன்றொழித்துவிட்டது போலவுமான ஒரு தோற்றத்தை காட்டவே இப்படியான கோரிக்கை உதவும்.

3. காமன்வெல்த் அமைப்பிலிருந்தே இந்தியா வெளியேற வேண்டும் என்று கோருவதற்கு பதிலாக போர்க்குற்றவாளியான ராஜபக்சே இலங்கையில் நடத்தும் காமன்வெல்த் மாநாட்டில் மட்டும் இந்தியா பங்கேற்கக்கூடாது என்கிற கோரிக்கை வேறு பரிமாணங்களையும் கொண்டிருக்கிறது. இந்தியாவின் துணையோடு தான் ஈழத்தமிழர்கள் மீதான இறுதிக்கட்ட அழித்தொழிப்பை நடத்தினோம் என்று இலங்கையின் ஆட்சியாளர்களே பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், இந்தக் கோரிக்கை தன்னையறியாமலே இந்தியாவை நிரபாரதியாக்கும் வேலையைச் செய்கிறது. அதாவது, போர்க்குற்றத்தில் இந்தியாவுக்கும் பங்கிருக்கிறது என்று இதுவரை பலராலும் கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டுகளிலிருந்து இந்தியாவை விடுவிக்கிறது.

4. காமன்வெல்த் அமைப்பு அப்படியொன்றும் பெருமைக்குரிய அமைப்பல்ல. மக்களாட்சி கோட்பாடுகளை ஏற்காமல் இன்னமும் ராஜா ராணி இளவரசர் கிழவரசர் என்று மன்னர் கால மான்மியத்தில் உழன்று கிடக்கிற பிரிட்டன், தனது முன்னாள் அடிமை நாடுகளின் விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நடத்திக்கொண்டிருக்கும் அந்த அமைப்பு உடனடியாக கலைக்கப்பட்டாக வேண்டும்.1 கருத்து: