ஊர்க்கொளுத்திகள் v2.0 - ஆதவன் தீட்சண்யா

                       
இது தருமபுரி புகைப்படமல்ல
2012 நவம்பரில் நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி. இந்த 2013 நவம்பரில் நிலக்கோட்டை நடுப்பட்டி. இடைப்பட்ட காலத்தில் தமிழகம் ஏதோ சமரசம் உலாவும் இடமாக சாந்தம் கொண்டிருந்ததென யாரும் நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. பாச்சாரப்பாளையம், மரக்காணம் என்று அடுத்தடுத்தும் பல வன்கொடுமைகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறவர்கள் தருமபுரி பாணியில் இப்போது கரியாம்பட்டி வன்னியர்கள் வன்கொடுமையை நிகழ்த்தியிருக்கிறார்கள். முற்றத்து வெளிச்சுவரை இடித்துவிட்டதற்கு மூலம் வரும்வரை முக்கிமுக்கி கத்திய "தமிழர்கள்" தலித்துகள் வாழும் வீடுகளை இடித்தும் எரித்தும் தகர்த்திருக்கிறார்கள் நடுப்பட்டியில்.

வெண்மணியில், பதானிதோலாவில், லஷ்மன்பூரில் கொத்துகொத்தாக தலித்துகளைக் கொன்றவர்கள் அனைவரையும் நிரபராதிகள் என்று விடுவிக்க இங்கு நீதிமன்றங்களே இருக்கும்போது, தலித்துகளின் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர துப்பாக்குச்சூடு நடத்தியதும் ஏழுபேர் கொல்லப்பட்டது சரிதான் என்று அறிக்கை எழுதிக்கொடுக்க விசாரணைக் கமிஷன்கள் இருக்கும்போது ஊர்க்கொளுத்திகளும் வூடுகொளுத்திகளும்  யாருக்குத்தான் அடங்கப் போகிறார்கள்? வேகமாக வந்த  ரயிலை உடம்பால் மோதி கவிழ்க்க முயன்றதாக இளவரசனது பிணத்தின்மீது மீது இன்னும் வழக்கு பதியாத பெருந்தன்மைக்காக நாம் தமிழக அரசுக்கு நன்றி சொல்லக்கூடியவர்களாக இருக்கிறோம்.

தனக்கு சவால்விடுகிறவர்களை சிறையில் அடைக்கிற முதல்வர், இந்த நாட்டின் சமூக அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் அரசியல் சட்டத்திற்கும் சவால்விடுகிற ஊர்க்கொளுத்திகளை சுதந்திரமாக அலையவிட்டிருக்கிறார். பிறகென்ன வெறியர்களே, ஒவ்வொரு காலனியாக கொளுத்துங்கள். கொளுத்துவதற்கு முன் எந்த ஊர் என்பதை சொல்லிவிட்டு கொளுத்துங்கள். உண்மையறியும் குழுக்கள், உண்மையறியும் குழுக்களின் உண்மையை அறியும் குழுக்கள், நிவாரண உதவிக்குழுக்கள், சாதிவெறி எதிர்ப்பு உரையாளர்கள், சமத்துவக் கவிதை ஒன்றுகூடல் ஏற்பாட்டாளர்கள்., கூட்டறிக்கை விடும் கூட்டமைப்பினர் என்றுள்ள நாங்களெல்லாம் வண்டிவாகனம் பிடித்து- அதற்கு ஸ்பான்சர் பிடித்து பின்னாலேயே வந்துசேர வேண்டுமல்லவா...  நீங்கள் கொளுத்திக்கொண்டே இருங்கள், நாங்கள் கண்டித்துக்கொண்டேயிருக்கிறோம்.... ஊர்பாட்டுக்கு ஊர் எரிந்து கொண்டிருக்கட்டும். வேறு என்னத்த சொல்ல....?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக