செவ்வாய், ஜனவரி 14

படைப்பு என்றாலே அது எல்லாவகையிலும் புத்தம் புதிது -ஆதவன் தீட்சண்யா



புதுஎழுத்து வெளியீடாக வரவிருக்கும்
நண்பர் பழ.பாலசுந்தரத்தின் கவிதைத்தொகுப்பான 
"மழைக்கனி"க்காக எழுதப்பட்ட குறிப்பு
 யற்கை இப்பிரபஞ்சத்தைப் படைத்திருக்கிறது. பிரபஞ்சத்தினுள் மனிதர் உள்ளிட்ட கோடானகோடி உயிர் ராசிகளையும் உயிரற்ற சடப்பொருட்களையும் படைத்திருக்கிறது இயற்கை. ஒவ்வொன்றையும் படைப்பதற்கான காலத்தையும் இடத்தையும் அது தன்வாக்கில் தேர்வு செய்கிறது. பிறப்பதைப்போலவே உயிர்கள் இறந்துகொண்டுமிருக்கின்றன. உயிர்தான் போய்விட்டதே என்று இறந்துபோன ஒன்றின் எலும்பையோ நரம்பையோ சதையையோ அல்லது உடலின் வேறெந்த பாகத்தையுமோ இரந்தெடுத்துப் பொருத்தி புதிய உயிரை இயற்கை படைத்தளிப்பதில்லை. ஒவ்வொன்றுக்குமான புத்தம்புதிய உறுப்புகளையும் ரத்தத்தையும் உயிரையும் கொடுத்து பிறப்பிக்கிறது இயற்கை. இன்றைய தேதியில் உலகத்தில் அறுநூறு கோடிப்பேர் இருக்கிறார்கள். மனிதர்கள் என்ற வகையில் ஒன்றுபோல காட்சியளித்தாலும் இவர்கள் ஒவ்வொருவரும் இன்னொருவரிலிருந்து உருவரீதியாகவும் உள்ளடக்கரீதியாகவும் வேறுபட்டவர்கள், தனித்தன்மையானவர்கள். தனிமனிதர் ஒருவரிலும்கூட ஒன்றேபோல காணப்படும் அவயவங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. அவரது முப்பத்திரண்டு பற்களும் லட்சக்கணக்கான மயிர்க்கால்களும்கூட ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை. ஆகவே படைப்பு என்றாலே அது எல்லாவகையிலும் புத்தம் புதிது என்றாகிறது. ஒருவேளை தன்னையொரு படைப்பாளி என்று பிரகடனப்படுத்திக் கொள்ளத் தெரியாததால் இயற்கைக்கு இது சாத்தியமாகியிருக்கிறது போலும். 

இயற்கையின் படைப்பென்று எதுவுமே இல்லை, கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று இந்த மனிதர்கள்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்களேயன்றி அந்த கடவுள் ஒருநாளும் தானொரு படைப்பாளி என்று கூறி நான் கேட்டதில்லை. நானென்ன நான், எவருமே கேட்டதுமில்லை பார்த்ததுமில்லை. ஆகவே கடவுளாக வந்து கோருகிறவரை பிரபஞ்சத்தையும் உயிர்களையும் படைப்பிப்பது இயற்கைதான் என்கிற முடிவிலிருந்து பேசுவோம்.

இயற்கைக்கும் கடவுளுக்கும் அடுத்தபடியாக படைப்பாளி என்கிற சொல் கலை இலக்கியவாதிகளை குறிக்கிறது.  அவருடைய ஆக்கங்கள் படைப்பு என விதந்தோதப்படுகின்றன. எனில், இயற்கையின் படைப்பைப்போல தன்னுடைய படைப்பும் உருவரீதியாகவும் உள்ளடக்கரீதியாகவும் புத்தம்புதிது தானா, இறந்துபோனவற்றின் மிச்சம் மீதி அழுகல் நரகல் ஏதாவது இதில் ஒட்டிக் கொண்டிருக்கிறதா, இதன் மொழி பிணத்தினுடையதா உயிர்ப்புள்ளதினுடையதா, தனித்துவமான தனது வாசமும் ரேகையும் பெயரும் இதில் வெளிப்பட்டிருக்கிறதா என்று கலைஇலக்கியவாதி ஒவ்வொருவரும் தற்சோதனைக்குள்ளாக நேர்கிறது. இப்படியாக மறிக்கும் கேள்விகளை தன்னளவில் எதிர்கொள்ளாமலே தன்னை ஒரு படைப்பாளியாக கற்பிதங்கொள்ளும் வெட்கங்கெட்டச் செயல் காலத்தையும் காகிதத்தையும் ஒருசேர வீணடிக்கிறது. மறுதலையாக, இந்தக் கேள்விகளை பொருட்படுத்துகிறவர்கள் தமது எழுத்தை புதிதாக்குகிறார்கள் அல்லது எழுதுவதை நிறுத்திக்கொள்கிறார்கள்.

நண்பர் பாலசுந்தரம் எழுதுவதை நிறுத்திக்கொண்டவராகவே எனக்குப் படுகிறார்- அவ்வப்போது அவர் எழுதிவந்தபோதும்கூட. வெகுசன இதழ்களில் வெளியாகும் கவிதைகளால் உந்தப்பட்டு அவற்றை முன்மாதிரியாக கொண்டு எழுதத்தொடங்கிய இவர், அவற்றின் செல்வாக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் முயற்சியாகவே எழுதுவதை நிறுத்திவிட்டார் என்று புரிந்து கொள்கிறேன். அந்த காலகட்டத்தில் தான் எழுதி பிரசுரமாகிய பலகவிதைகளை இன்றைய கண்கொண்டு பார்த்து அவற்றை அவரே நிராகரித்துவிட்டதை ஆதாரமாகக்கொண்டே இவ்வாறு கூறுகிறேன். பாடுபொருள், மொழி, வடிவம் ஆகியவற்றை சுயமாக தேர்ந்து கொள்வதற்குரிய பயிற்சியாக அவர் எழுதிப் பார்த்த கவிதைகளில் கொஞ்சம் இப்படியொரு குறுந்தொகுப்பாக வருகிறது. கவிதை என்பதற்குள் காலத்துக்குகாலம் நிகழ்ந்துவரும் மாற்றங்களை உள்வாங்கிக்கொள்வதற்கு அவர் சித்தமாய் இருந்தார் என்பதற்கு உதாரணமாய் காட்டும்படியான கவிதைகளும்  இதில் இருக்கின்றன. எனினும், தயங்கியபடியே கொடுக்கும் ஒரு புகாரைப்போலவோ குறுநகையை உதிர்த்தபடி தலைதிருப்பிக் கொள்கிற கூச்சத்தைப்போலவோ அல்லது இயலாமையின் குமைச்சலில் நகம் கடிப்பது போன்றோதான் இவரால் வெளிப்படுத்த முடிகிறது. அதிர்ந்து பேசாத மொழியில் கோபத்தை வெளிப்படுத்துவதில் உள்ள சிரமம் கவிதையை அப்படியப்படியே விட்டுவிடுமாறு நிர்ப்பந்திக்கும் போல. எனவே எழுத்தின் சாத்தியங்களைப் பின்தொடர்ந்து வளர்த்துச் சொல்லாமல், வலிந்து தடுத்து இந்த உலகத்துக்கு இப்படி / இவ்வளவு சொன்னால் போதும் என்று முன்தீர்மானித்தவரைப்போல எழுதி சடக்கென  முடித்துவிடுவார். அப்படி எழுதியவற்றிலும்கூட ஒரு பொத்தாம்பொதுவான குரலைத்தான் கேட்க முடிகிறது. இங்கே குறிப்பிட வேண்டியது என்னவென்றால் இவ்வாறாகத்தான் தனது கவிதைகள் இருக்கின்றன என்பதை அவரே உணர்ந்திருப்பதும் விவாதிப்பதும்தான்.

தனது வாழ்நிலை வடிவமைத்துக் கொடுத்திருக்கிற சட்டகத்துக்குள்ளிருந்து அவர் காணும் உலகத்தை நமக்கு காட்டுகின்ற எதையும் எழுதுவதை அவர் தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறார். தான் எழுதத் தொடங்கிய காலத்தின் உலகம் தனக்குள் ஆழப்பதித்துவிட்டுப் போயிருக்கிற விழுமியங்களும் மதிப்பீடுகளும் தற்காலத்துடன் முரண்படுவது குறித்து நேர்ப்பேச்சில் தான் பகிர்ந்துகொண்ட எதையும்கூட அவர் இன்னும் எழுதத் தொடங்கவில்லை என்கிற ஆதங்கத்திலிருந்து இவ்வாறு கூற நேர்கிறது. வெவ்வேறு நிலப்பரப்புகளையும் மனிதர்களையும் காலநிலை மாற்றங்களையும் கண்டுணர்வதற்காக நாட்டின் குறுக்கும்நெடுக்குமாக அவர் மேற்கொண்டுவரும் பயணங்கள் பற்றியும்கூட (ஹம்ப்பி பற்றிய கவிதை, ஒகேனக்கல் பற்றின கதை தவிர) அவர் ஏதும் எழுதாமல்தான் இருக்கிறார். உழுகுடி மரபின் விழுமியங்களில் ஒருகாலையும் நகர்க்குடி மரபின் நடுத்தரவர்க்க விழுமியங்களில் மறுகாலையும் வைத்துக் கொள்ளும் இரண்டாம் தலைமுறை படிப்பாளிகளுக்கு ஏற்படும் மனத்தடைதான் இவரையும் எழுதவொட்டாமல் தடுக்கிறது போலும். வேரிலிருந்தும் மண்ணிலிருந்தும் எழுதுவதா அல்லது வெளித்தெரிகிற கிளையிலிருந்தும் இலையிலிருந்தும் மண்ணை மறைத்து மெழுகப்பட்ட காரையிலிருந்தும் எழுதுவதா என்கிற குழப்பத்தோடே எழுதுவதைவிடவும் அந்தக்குழப்பத்தையே எழுதுவது சுயத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்.  எனவே இது இந்தத்தொகுப்பிலுள்ள கவிதைகளுக்கான பரிந்துரையல்ல, தானாக இருந்து அவர் எழுதவேண்டியவை பற்றிய நினைவூட்டல் மட்டுமே.

அந்தந்த வருடத்திற்கான கணக்குவழக்கை அந்தந்த வருடமே முடித்துவிடும் தொழில்ரீதியான பணியை செவ்வனே செய்து முடித்துவிடுகிற இந்த கணக்காயர், கவிஞர் என்ற முறையில் நீண்டகாலமாக தீர்க்காமல் வைத்திருந்த ஒரு கணக்கை முடித்துவைப்பது என்கிற ரீதியில் இப்படியாகத்தான் இதுஎன்று இந்த குறுந்தொகுதியை நம்முன் வைத்துவிட்டு அடுத்த வேலைக்கு நகர்கிறார்.

அன்புடன்,
ஆதவன் தீட்சண்யா,
09.01.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...