வீட்டை மாற்றிக்கொண்டு வேறெங்கும்
போய்விடலாமா என்று மிகுந்த தயக்கத்தோடு தான் இவன் கேட்டான். அருங்கிளியும் அதே யோசனையில்தான் புழுங்கிக் கிடந்திருப்பாள்
போல. இவனது முன்மொழிவுக்காகவே காத்திருந்தவளைப்போல உடனடியாய் வழிமொழிந்து
ஒப்புதல் சொன்னாள். வீடு மாறிப்போவது அவர்களுக்கொன்றும் புது அனுபவமல்ல. மாறுவதற்கான
காரணம்தான் ஒவ்வொரு தடவையும் மாறும்.
வேறு ஊருக்கு மாற்றலாகிப் போகும்வரை
இதிலேயே இருந்துவிடலாம் என்னுமளவுக்கு
பிடித்துப் போய்தான் ஒவ்வொரு வீட்டிலும் குடியேறுவார்கள்.
அப்படியே மாற்றலில் செல்லும்
நிலை வந்தாலும் இந்த ஊரில்- இதேவீட்டிலேயே இருந்துகொண்டு
வேலைக்குப் போய்வர வேண்டியது தான் என்கிற அளவுக்கும்கூட சில வீடுகள் பிடித்துப்போவதுண்டு. ஆனால் குடியேறி மூன்றாம் வாரத்தில் முன்பணத்தைக்கூட
வாங்கிக்கொள்ளாமல் காலி பண்ணிக் கொண்டு தெறித்தோடும் அளவுக்கு ஒம்பாத ஏதோவொன்று அங்கு நடந்துவிடுகிறது. உப்புத்தண்ணி, காற்றோட்டமில்லை,
போதாவெளிச்சம், கொசுக்களின் பிரியம்,
அண்டை அயலார் பிணக்கு, வீட்டு உரிமையாளர் கெடுபிடி
என்று வீடு மாறுகிறவர்கள் சொல்லும்
வழக்கமான காரணங்களின் பேரில் இவர்கள் ஒருபோதும் வீடுகளை
மாற்றுவதில்லை. இவர்கள் சொல்லும் காரணங்களைக் கேட்கிற
யாருமே, இப்படியெல்லாம் தோண்டித்துருவி
கிண்டிக்கிளறி பார்த்துக்கிட்டிருந்தா உங்களால எங்கயும் ஒரு இடத்துல நிரந்தரமா வசிக்கவே
முடியாது. அனுசரிச்சு இருக்கப்
பழகுங்க என்று எரிச்சலோடு ஆலோசனை சொல்வார்கள். அனுசரித்துப் போ என்பதைவிடவும் அருவருப்பான ஆலோசனை உலகத்தில் எதுவுமில்லை என்பதே இவர்களது தீர்மானம்.
இதற்கு முன்பிருந்த வீட்டிலும்
இப்படித்தான் நடந்தது. அகன்று நீளும் சாலையின் மடக்கு மூலையில் தளத்திற்கு மூன்று என்கிற வீதத்தில் ஒன்பது வீடுகள். தரைத்தளத்தில் ரோட்டையும்
கிழக்கையும் பார்த்தவாறு ஒரு வீடும் வாகன நிறுத்துமிடமும். அவற்றுக்கு நேர் பின்னே பிணங்கிக்கொண்டு திரும்பி நிற்பதுபோல இரண்டு வீடுகள். தரைத்தளத்தில் காலியாக
இருந்த கிழக்குப் பக்கத்து
போர்ஷன் தரகர் ஒருவரின் தொடர்பினால் இவர்களுக்கு
கிடைத்தது. வாஸ்து, ராசி, மனையடி சாஸ்திரம், திசாபலன்
என்பவற்றில் நம்பிக்கையுள்ளவர்கள் வடக்கு அல்லது கிழக்கு பார்த்த வீடுகளைத்தான் உகந்ததாக
நினைப்பார்கள். அதனாலேயே இம்மாதிரியான வீடுகளுக்குரிய
முன்பணத்தையும் வாடகையையும் சற்றே கூடுதலாக கேட்பதும் கொடுப்பதும்
இயல்பாகிவிட்டிருந்தன. போட்டியும்கூட
கடுமையாகத்தான் இருக்கும். ஆனாலும்
ஏனோ இங்கு எல்லாமே வழக்கத்திற்கு மாறாக இருந்தது. கட்டி முடிக்கும் முன்பே மற்ற எட்டு வீடுகளுக்கும் பத்துமாத
வாடகையை முன்பணமாக கொடுத்து
காத்திருந்து குடியேறியிருக்கிறார்கள். ஆனால் இந்த வீடு மட்டும் காலியாகவே இருந்ததும்
மற்ற போர்ஷன்களோடு ஒப்பிடும்போது
வாடகையும் ஐநூறு ரூபாய் குறைவு என்பதும் இவர்களுக்கு ஆச்சர்யமாக
இருந்தது. வேறேதேனும் வசதிக்குறைவு
இருக்குமோ என்று பார்த்தால் அப்படியும்
இல்லை. வீடு ஒரு வில்லங்கமும் இல்லாதிருந்தது.
அடுக்குமாடி வீடுகளில் அடித்தளத்தில்
குடியிருப்பவர்களுக்கு சௌகர்யங்களை விடவும்
தொந்தரவே அதிகம் என்பதால் யாரும் குடிவர விரும்பவில்லையோ என்றும்
தோன்றியது. தரகரை நெருக்கிப்பிடித்து விசாரித்தபோது ‘காரணம் எதுவோ இருந்துவிட்டுப் போகட்டும்,
உங்களுக்கு உபகாரம்தானே... பைத்தியக்காரன்
கிழிச்சது கோவணத்துக்கு ஆச்சுன்னு
விட்டுட்டு குடிவர்ற வேலையப் பாருங்க’ என்றார். குடிவந்துவிட்டார்கள்.
புத்தம் புதிதான, தரைத்தளத்தில் இருக்கிற
ஒரு வீடு குறைந்த வாடகையில் கிடைத்ததற்கான
மகிழ்ச்சியை, ஏன் கிடைத்தது என்கிற கேள்வியினால் சிதறடித்துக்கொள்ள வேண்டியதில்லை என்று இயல்புக்கு திரும்பியிருந்தார்கள்.
புழங்கப்பழகி வீட்டின் பாகங்கள் அனிச்சைக்குள் பதிவதற்கு
இன்னும் சிலநாட்கள் தேவையாக
இருந்தது. மேல்வீடுகளின் குடித்தனத்தனக்காரர்கள்
நேருக்குநேர் எதிர்ப்பட்டால் சின்னதாய்
சிரித்து நகர்வார்கள். சிரித்தார்களா
சிரிப்பை மறைத்தார்களா என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்குள் கடந்து போய்விடுவார்கள்.
மற்றபடி அவர்களில் யாரும் இன்னும் நெருக்கமாகியிருக்கவில்லை. அவர்களது வீடுகளுக்குப் போய் பழகும் அளவுக்கு இவர்களுக்கும் நேரம் போதவில்லை. அலுவலகத்துக்கும் வீட்டுக்குமான அல்லாட்டம் அக்கம்பக்கத்தாரோடு
அளவளாவத் தடையாய் இருந்தது.
ஆனால் வாழ்வரசியும் நூதனாவும்
சாலையின் மறுபுறம் இருந்த வீடுகளின் பிள்ளைகளை
அதற்குள் சினேகம் பிடித்திருந்தார்கள். பொம்மைகளை வைத்துக்கொண்டும் போகோ சேனல் பார்த்துக் கொண்டும்
பிள்ளைகளின் விளையாட்டு பெருங்களிப்பாய்
வளர்ந்தது. ரோட்டின் நீளத்துக்கு இடித்து
தள்ளப்பட்டிருந்த சுவரொன்றின் இடுபாடுகளைக்
கடந்து இந்தப் பிள்ளைகள் இரண்டும்
அந்தப்பக்கம் போனால் சாப்பாட்டுவேளையிலும் திரும்பாமல் திளைத்திருந்தார்கள். வீட்டு வேலைகளுக்கென உடனிருக்கும்
பொன்னுருகி இதுபற்றிய புகார்களுடன்
இருந்தாள்.
எல்லாம் மூன்றாம் வாரத்தின் இறுதியில்
முடிவுக்கு வந்தது. அருங்கிளியும் இவனும் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் நேரத்தில்
வீட்டு உரிமையாளர் அங்கு வந்திருந்தார். அவர் தானாக வரவில்லை, குடித்தனக்காரர்கள்
யாரோதான் வரவழைத்திருக்கிறார்கள் என்பதை அவரது பேச்சிலிருந்து யூகிக்க
முடிந்தது. வசதியெல்லாம் பரவாயில்லையா
பிரச்னையேதும் இருக்கிறதா என்பது மாதிரியான சம்பிரதாய விசாரிப்புகள்
முடிந்ததும் அவர் நேரடியாகவே விசயத்துக்கு
வந்துவிட்டார்.
‘ரோட்டுக்கு
அந்தாண்ட இருக்குறவங்க யார் என்னன்னு முன்னாடியே உங்களுக்கு
சொல்லாமப் போனது என் தப்புதான். நான்தான்
சொல்லியிருக்கணும். அந்த புரோக்கரும் உங்களுக்கு
சொல்லல போல. சரி, அம்பேத்கர் நகர்னு அந்த ஏரியாவோட பேரைப் பார்த்து நீங்களாவே தெரிஞ்சிக்கிட்டு
ஒதுங்கியிருப்பீங்கன்னு பார்த்தா அதுவும் நடக்கல. அந்தப்பக்கத்து ஆளுங்களோட
வாடையே இந்தப்பக்கம் வரப்படாது,
விடிஞ்சா முடிஞ்சா அவங்க மூஞ்சிலயா முழிக்கிறதுன்னு
யாரும் சங்கடப்படக்கூடாதுன்னுதான் ரோடு நெடுக சுவர் எழுப்பியிருந்தோம். இன்னிக்கு நேத்தில்ல, அம்பதறுவது
வருசமா இருந்த சுவர். அந்தச்சுவர் மட்டும்
இருந்திருந்தா கிழக்குப் பார்த்த
இந்த வூட்டுக்கு நான் நீன்னு போட்டிப் போட்டுக்கிட்டு ஆள் வந்திருக்கும். ஆனா, இத்தனிக்காலமும் சும்மா கிடந்தவனுங்க அங்கே உத்தபுரம்கிற ஊர்ல சுவர் இடிச்சதைக் கேள்விப்பட்டதிலிருந்து
இதுவும் தீண்டாமைச்சுவர்தான்னு கூச்சல் போட்டு இடிக்க வச்சுட்டானுங்க.
சுவத்தை இடிச்சப்புறமும் இந்த பாரத் நகர் ஆளுங்க யாரும் அந்தண்டை ஆட்களோட ஒட்டுறவு இல்லாம தண்ணிவண்ணி புழங்காம
கட்டுத்திட்டமாகத்தான் இருக்கோம். கேபிள் டிவிக்காரன்கூட இந்தப்பக்கம் காசு வசூல் பண்ணிட்டுத்தான் அந்தண்டை
போகணுமேயொழிய அங்க போயிட்டு இந்தண்ட வரக்கூடாதுன்னு கன்டிசனா
சொல்லியிருக்கோம். போஸ்ட்மேன், சிலிண்டர்
போடுறவன், லாண்ட்ரி, தள்ளுவண்டி
கடைக்காரங்கன்னு எல்லாருக்கும் இந்த வழமை தெரியும். அப்படியெல்லாம்
கட்டுத்திட்டமா இருந்தும் இப்ப என்னாச்சு பாத்தீங்களா... உங்க பிள்ளைங்க அந்த பிள்ளைங்கள வூட்டுக்குள்ளயே
கூட்டியாந்துருச்சுங்க. யார் வூட்டுக்குப் போகணும்,
யாரை வூட்டுக்குள்ள கூட்டியாரணும்கிற
வழமையெல்லாம் கொழந்தைங்களுக்கு தெரியாது, பெரியவங்க தான் சொல்லித் தந்து வளர்க்கணும். இன்னிக்கு
ஒங்க வீட்டுக்குள்ள பூந்த அந்தச் சனியனுங்க நாளைக்கு
மத்த வூடுகளுக்கும் போச்சிங்கன்னா
அப்புறம் யாரு சார் குடிவருவாங்க...? பழக்கவழக்கத்துக்கு பங்கம் வந்துடுமோங்கிற பயத்தோட
ஒரு எடத்துல குடியிருக்க முடியுமா
சார்? இனிமேலயாச்சும் இந்தப் போக்குவரத்த நிறுத்தி சுத்தப்பத்தமா இருக்கப்
பாருங்க... நீங்க நாலெழுத்து படிச்சவங்க,
அக்கம்பக்கத்து குடித்தனக்காரங்க அசூயைப்படற மாதிரி நடந்துக்க கூடாதுங்கிறது
உங்களுக்கு தெரியாத விசயமில்லை. பார்த்து
அவங்களோட அனுசரிச்சுப் போங்க...’
அனுசரித்துப் போ என்கிற உபதேசத்தையோ உத்தரவையோ
கேள்விப்படாமல் ஒரு நாளையாவது கழிக்கமுடிகிறதா
என்கிற கேள்விதான் இவர்களுக்கு
எழுந்தது. ஏன் எதற்காக யாரோடு எப்படி என்றில்லாமல் அனுசரித்துப்போ
என்று சொல்கிறவர்களின் சகவாசத்தை
துறப்பதில் இருவருக்குமே ஒற்றுமை
இருந்தது. பிறகென்ன, வேறு வீடு பார்க்குமாறு அதே தரகரிடம் சொன்னார்கள். வீடு எப்படி இருக்கவேண்டும் என்று கேட்ட தரகரிடம் இவன் சொன்ன ஒரே நிபந்தனை, அக்கம்பக்கத்தில்
இருப்பவர்கள் தீட்டு தோஷம் என்று முகம் சுளிப்பவர்களாக இல்லாமலிருந்தால்
நல்லது என்பது மட்டும்தான். புலியும்
பசுவும் ஓர்துறையில் இறங்கி நீரருந்திய தன்மதேசம் மனிதனோடு
மனிதன் இறங்கி நீரருந்துவதற்கு இடமில்லா
அதன்ம தேசமாகிவிட்டது என்று அயோத்திதாசரால் குற்றச்சாட்டப்பட்ட இந்தநாட்டில் தீட்டு தோஷம் பார்க்காதவர்களை அக்கம்பக்கத்தவராக
கொண்ட வீட்டை எப்படித்தான் தேடுவது?
சொல்லிவைத்த ஒரேவாரத்தில்
ஏழெட்டு வீடுகளைக் காட்டினார்
தரகர். முன்பக்கத்தில் வேம்பும்
வெட்டவெளியுமாக காட்சியளித்த ஹெவன்லி
ஹோம் லேஅவுட்டில் அடுக்குமாடியோ
கூட்டுக் குடித்தனங்களோ இன்றி தனிவீடாக இருந்த இந்த வீடு அருங்கிளிக்கு ரொம்பவும்
பிடித்துப் போனது. காம்பவுண்டு சுவற்றோடும்
கனத்துயர்ந்த கதவோடும் அந்த வரிசையின் அடுத்தடுத்த
வீடுகள் இருந்ததால் குழந்தைகள்தான் வேண்டாவெறுப்பாக
இருந்தார்கள்.
புதுவீட்டில் பண்டபாத்திரங்களை
அடுக்கி ஒழுங்கு செய்யவே நாலைந்து நாட்களாகிவிட்டிருந்தன. அட்டைப்பெட்டிகளுக்குள் கட்டிவைக்கப்பட்டிருந்த புத்தகங்களையும் அடுக்கி முடித்தபோது எல்லாமே
ஒரு ஒழுங்குக்குள் வந்தது போலிருந்தது. குடிவந்த மறுவாரத்தில் பெரியவளின்
பிறந்த நாள் வருகிறது என்பதால் அதற்குள்ளாக மிச்ச வேலைகளையும் முடித்து வீட்டை சீர்படுத்திக் கொடுத்துவிடுமாறு
அருங்கிளி கேட்டுக் கொண்டதனால் பொன்னுருகி எல்லாவற்றையும் திருத்தமாக
ஒழுங்கு செய்திருந்தாள். அவமானப்பட்ட
உணர்வோடு அவதியவதியாக வெளியேறி
இங்கு குடியேறியிருக்கிறோம் என்பதை மறக்கவும் அக்கம்பக்கத்தாரை
அழைத்து உபசரித்து அவர்களோடு
கலக்கவும் வாழ்வரசியின் பிறந்தநாளை
நல்லதொரு வாய்ப்பென கருதியிருந்தாள்
அருங்கிளி.
காலையிலேயே குளித்து
புதுத்துணி உடுத்திக்கொண்ட வாழ்வரசியோடு
அக்கம்பக்கத்து வீடுகளுக்கு சாக்லெட்
கொடுக்கப்போனார்கள் பொன்னுருகியும் நூதனாவும்.
மாலையில் கேக் வெட்ட குழந்தைகளோடு வருமாறு
இவர்கள் விடுத்திருந்த அழைப்பினை
ஏற்று அநேகமாக எல்லா வீடுகளிலிருந்தும் வந்திருந்தார்கள்.
மறுநாள் மாலை அலுவலகத்திலிருந்து இவன் வெளியே வரும்போது, இவனுக்காகவே
மதிலோரத்து டீக்கடையில் காத்திருந்தார்
தரகர். இவரையும் நேற்று வீட்டுக்கு அழைத்திருக்க
வேண்டும், தவறிப்போச்சே என்கிற வருத்தத்துடன் வந்த இவனிடம்
“நேத்து வூட்டுல ரொம்ப தடபுடல் போல” என்றார் அவர். “அப்படியொண்ணும் ஆடம்பரமில்ல.
பொதுவா எங்க குடும்பத்துல மதரீதியான
பண்டிகை எதையும் கொண்டாடுறதில்ல. ஆனா பிறந்தநாளை கொஞ்சம் சிறப்பா கொண்டாடுவோம். புதுசா குடிவந்திருக்கிற நாங்க அக்கம்பக்கத்து ஆட்களை அழைச்சி உபசரிக்கிறதுக்கு இதை ஒரு வாய்ப்பா பயன்படுத்திக்கிட்டோம், அவ்வளவுதான்” என்றான். “அவ்வளவுதான்னு
நீங்க சொல்லிட்டா அவ்வளவுதானா?
அதுக்கப்புறம் என்ன நடந்திருக்குன்னு தெரியுமா உங்களுக்கு? நேத்து பங்க்ஷனுக்கு வந்த யார் உங்களைப்பத்தி என்னத்த
சொன்னாங்களோ தெரியல, உடனே அந்தாளை வூட்டை காலிபண்ணிக் கொடுக்கச்
சொல்லுன்னு வூட்டு ஓனர் ஒத்தக்கால்ல நிக்கிறான்...’’
வீட்டை காலிபண்ணி வெளியேறும்
முடிவை எப்பவும் இவர்கள் எடுப்பதுதான் வழக்கம்.
இந்த வீட்டைப் பொறுத்தவரை ஓனர் முந்திக்கொண்டார். இவ்வளவு பிடிவாதமாக விரட்டுகிற
அளவுக்கு தாங்கள் செய்த குற்றம்தான் என்ன என்கிற இவனது யோசனையை இடைமறித்த தரகர் “சார், நேத்து ராத்திரி எட்டு எட்டரை மணி இருக்கும், அந்தாள்
என்னை போன்ல கூப்பிட்டு நீ கூட்டியாந்து என்வூட்ல குடி வச்சியே அவங்க என்ன ஆளுங்கன்னு கேட்டான்.
அதைப்பத்தி நானொன்னும் அவங்கக்கிட்ட
கேட்கலியேன்னு சொன்னேன். கமிஷன் கிடைக்குதுன்னா யார் என்னன்னுகூட கேக்காம கண்டவனுங்கள கூட்டியாந்து
என்வூட்ல குடிவைப்பியான்னு ரொம்ப ஆவேசமா சத்தம் போட்டான். புழங்கற
சாதியா இல்லாதவங்கள கூட்டியாந்து
குடிவச்சு இப்படி அசிங்கம் பண்ணிட்டீங்களேன்னு அக்கம்பக்கத்து வீட்டாளுங்க போன்போட்டு
எத்துறாங்க. இந்த மாசத்து வாடகைகூட வேணாம் அவங்கள காலிபண்ணச் சொல்லுன்னு
கெஞ்சுறான். எனக்கும் ஒண்ணும் தோணல, அதான் உங்களையே பாத்துறலாம்னு வந்துட்டேன்”
என்று மூச்சுவிடாமல் பேசி நிறுத்தினார்.
“இன்ன சாதின்னு சூசகமா சொல்லுகிற மாதிரிகூட
வீட்டுக்குள்ள நாங்க எந்த அடையாளத்தையும் வச்சிக்கிறதில்ல.
இருந்தும் நாங்க புழங்குற சாதியில்லேன்னு எதைவச்சு
சொல்றாங்களாம்?” என்று கேட்கும்போது இவன் குரல் மிகவும் தளர்ந்துவிட்டிருந்தது. “என்ன சார் நீங்க விவரம் புரியாத ஆளா இருக்கீங்க... அலமாரியில
அடுக்கி வச்சிருக்கிறீங்களாமே அம்பேத்கார் புஸ்தகங்கள், அது போதாதா உங்களைக் காட்டிக்கொடுக்க?” என்று சொல்லும்போது புரோக்கரும்கூட
அவர்களோடு சேர்ந்துகொண்டதைப்போல தோன்றியது இவனுக்கு.
தானொரு புழங்கத்தக்க சாதிக்காரன்தான்,
வாங்கி அடுக்கியுள்ள புத்தகங்களைப்
பார்த்து அக்கம்பக்கத்தார் கொண்டுள்ள அசூயை அவசியமற்றது என்று சொல்லி இந்த இக்கட்டிலிருந்து தப்பித்துக்கொண்டாலென்ன என்று யோசித்த கணத்தில் தன்னையே அருவருப்பாக உணர்ந்தான்.
பிரச்னையில்லாதவரைக்கும் சாதிமறுப்பாளராக காட்டிக்கொண்டு,
ஏதாவதொரு நெருக்கடி வந்தால்
எதிர்கொள்ள பயந்து சாதியாளராக மாறிவிடுகிறவர்களை
வேஷதாரிகள் என்று முன்பொருமுறை தான் எழுதியது தனக்கே இப்படி பொருந்திப்போகுமளவுக்கு யோசிப்பதை கேவலமாக உணர்ந்தான். தனக்குள்ளான
இந்த தடுமாற்றத்தை தரகர் கண்டுபிடித்துவிடக்கூடாது என்று பதறினான்.
அம்பேத்கருடைய புத்தகங்களைப்
படிக்கிறவர்களெல்லாம் அவருடைய சாதிக்காரர்களாகத்தான் இருக்கணுமா? அவரால் எழுதப்பட்ட அரசியல்
சட்டத்தை ஆதாரமாகக் கொண்டியங்கும்
இந்த நாட்டில் அவருடைய சாதியல்லாத ஒருவரது
வீட்டில் அவர் புத்தக உருவில்கூட நுழைய முடியாதா? ஆழ்ந்தகன்ற மேதமையோடு
விரியும் அம்பேத்கரின் நூல்களைப்
பார்த்த மாத்திரத்திலியே அருவறுப்பும்
அசூயையும் அடைகிற இவர்கள் புத்தகங்கள் புனிதமானவை
என்று பூஜை போடுவதும் கால்பட்டுவிட்டால்
கண்ணில் ஒற்றிக்கொள்வதும் போலித்தனமில்லையா? இப்படி அடுக்கடுக்காக எழுந்த கேள்விகள் எதையும் கேட்காமலே தரகரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்
இவன். ஒட்டுமொத்த சமூகத்திடமும்
கேட்கவேண்டிய கேள்வியை ஒரு தனியாளிடம் கேட்டு என்ன ஆகப்போகிறது என்கிற விரக்தியினால் இவன் வாயடைத்துப் போய் நின்றான் என்பதே உண்மை.
கொஞ்சநேரம் இருவருமே
பேசாமலிருந்தார்கள். அந்த அமைதி இருவருக்குமே தேவையாக
இருந்தது அப்போது. திடுமென அந்த அமைதி பேச்சைவிடவும் பேரோசை எழுப்பி சலசலப்பதைப்போல உணர்ந்து
பதறிய தரகர் “சார், அவங்கெல்லாம் அப்படித்தான்
சார். சம்பாத்தியத்துக்காக புள்ளைங்கள அமெரிக்காவுக்கும் அண்டார்ட்டிக்காவுக்கும் அனுப்புவானுங்க. ஆனா அக்கம் பக்கத்துல வேற்றாட்கள
அண்டவிடமாட்டானுங்க. பல்லு வௌக்குற பிரஷ்சிலிருந்து படுக்குற
பாய் வரைக்கும் - போட்டுக்குற
துணிமணியிலிருந்து பொங்கித்திங்கிற சட்டிப்பானை
வரைக்கும் அடுத்த சாதி ரத்தமும் வேர்வையும் கலந்த அத்தனையவும் அனுபவிச்சுக்கிட்டே நின்னது நிமிந்ததுக்கெல்லாம் தீட்டு தோஷம்னு பேசுவாங்க. அப்படி பேசலேன்னாலும்தான் இவங்கள பெரியசாதின்னு யார் சொல்லப்போறாங்க.... த்தூத்தேறி...’’. எதிரில் இருக்கிறவர்கள் மீது உமிழ்வதைப்போல காறித்துப்பிய அவர் சட்டென இவனது கைகளைப் பற்றிக்கொண்டபோது ஆறுதலாக உணர்ந்தான்.
“சார், பொதுவா வூடு கேட்டு வர்றவங்க என்ன சாதின்னு சாடைமாடையா கண்டறிஞ்சு
ஓனர்கிட்ட சொல்லிருவம். முடியாட்டி
நேரடியாவேகூட கேட்டிருவம். நீங்க ஆளும் கொஞ்சம் வெளுப்பா பேரும் ஒரு தினுசா இருக்குறதால கேட்கவேணாம்னு
எனக்கே தோணிருச்சு போல. இந்தமாதிரி பிரச்னைகள்
வராத மாதிரியான ஒரு வூட்டை ரெண்டொரு நாள்ல பாத்துக்கொடுக்குறது என் பொறுப்பு. என்னை தப்பா நினைச்சுக்காம நீங்க இந்த வூட்டை காலி பண்ணிக் குடுத்திருங்க”
“சட்டுனு என்னால உங்களுக்கு எந்த பதிலையும் சொல்ல முடியல. எனக்கு ஒருவாரம் அவகாசம் கொடுங்க”
“நான் ரொம்ப வேண்டி கேட்டுக்கிட்டதா மேடத்துக்கிட்டயும்
சொல்லுங்க. தேவைன்னா நான் நேர்ல வந்துகூட அவங்கக்கிட்ட பேசறேன்”
“அவசியமிருக்காது, நானே பேசிக்கிறேன்”
தரகரைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பியவன் புத்தக அலமாரியையே வெகுநேரம்
பார்த்துக் கொண்டிருந்தான். அட்டைப்பெட்டிகளிலிருந்து
பிரித்தடுக்கிய சீர்குலையாமல் புத்தகங்கள்
வைத்தது வைத்தபடி அப்படியப்படியே இருந்தன.
நடுத்தட்டில் அருங்கிளியின் புத்தகங்கள்.
அவள் ரொம்பவும் செலக்டிவாகத்தான்
புத்தகங்களை வாங்குவாள். இவனென்றால்
கண்டதையும் வாங்குகிறவன். காலையில்
வெளியாகிற ஒரு புத்தகத்தை மாலைக்குள்
படித்துவிடுமளவுக்கு தீவிர வாசிப்புள்ளவன், இவனால் படிக்கப்படாத புத்தகம் என ஏதாவதொன்று இருக்குமானால்
அது இன்னும் அச்சடிக்கப்படாததாகத்தான் இருக்கும், சித்திரகுப்தனின் பேரேட்டைத்தவிர மற்றதையெல்லாம் படித்துமுடித்தவன்
என்று தன்னைப் பற்றி நட்பு வட்டத்தில் உலவும் கருத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவே
இவன் எப்போதும் புத்தகங்களை
வாங்கிக்கொண்டிருக்கிறானோ என்று அருங்கிளிக்கு அந்தரங்கமாக
ஒரு சந்தேகம் உண்டு. ஆனால் அம்பேத்கர் தொகுப்புநூல்களை
இவன் வாங்கியது இவ்விதங்களில்
சேர்த்தியில்லை. சொல்லப்போனால் அருங்கிளிதான்
இவனை வாங்கவைத்தாள்.
‘இலக்கியம்,
அரசியல், பொருளாதாரம், மானுடவியல்,
வரலாறுன்னு இத்தனைப் புத்தகங்களை வாங்கிக்
குவிக்கிற நமக்கு அம்பேத்கருடைய புத்தகங்களில்
ஒன்றைக்கூட வாங்கணும்னு இப்ப வரைக்கும் ஏன் தோணல? தீண்டத்தக்க இந்தியா
தீண்டப்படாத இந்தியான்னு இந்த நாடு ரெண்டா பிரிஞ்சிருக்குன்னு அம்பேத்கர் சொன்ன பிரிவினையை நாம புத்தகங்கள் வரைக்கும் நீட்டிச்சிட்டதா
தெரியுது. தீண்டப்படாதவர்கள் எவ்வளவு தகுதி பெற்றவர்களாக இருந்தாலும்
அவர்கள் தீண்டப்படாதவர்களிடையே தான் பெரியவர்கள் என்று கருதுகிற ஒரு சாதியவாதி நமக்குள்ளும்
இருப்பதால்தான் அம்பேத்கர் மாதிரியான
ஒரு சிந்தனையாளரை இவ்வளவு
காலமும் படிக்காமல் ஒதுக்கிவிட்டோமா...?
எனக்கென்னவோ இதுவும் ஒருவகையான தீண்டாமைன்னு
தோணுது...’ என்று புத்தகக் கண்காட்சி ஒன்றில்
வைத்து அவள் சொல்லப்போய்தான் இவன் அவற்றை வாங்கினான் முப்பத்தேழு தொகுதிகளையும் வரிசைக்கிரமம் வெளித்தெரியுமாறு அடுக்கி முடித்தபோது அந்த புத்தகங்களின் மேலட்டையிலிருந்த நீலவண்ணம் அலமாரி முழுவதிலும் பாய்ந்து
புது அழகைச் சேர்த்தது. சொந்தசாதியைத்
துறந்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் தமது செயலுக்கான நியாயத்தை
பின்னாட்களில் அம்பேத்கரது நூல்களில்தான்
கண்டடைந்தார்கள். ஆனால் அம்பேத்கருடைய நூல்களால்
இப்படியொரு இக்கட்டு ஏற்படும் என்று அப்போது இவன் நினைத்திருக்கவில்லை.
தரகர் சொன்ன விசயத்தை அருங்கிளியிடம் சொல்லலாமா
வேண்டாமா என்கிற குழப்பம் இறுக்கமாக்கியிருந்தது இவனை. அருங்கிளியும்கூட தன்னைப்போலவேதான் இருக்கிறாள் என்பதை தாமதமாகத்தான் இவன் கண்டுகொண்டான். அவளிடம்
சொல்லாமல் இதற்கொரு தீர்வு கிட்டாது என்பதால் தயங்கித்தயங்கி சொல்லிமுடித்தான்.
வாழ்வரசியின் பிறந்தநாள் விழாவுக்கு
இயல்பாக கிளம்பி வந்த அக்கம்பக்கத்து வீட்டுப்பெண்களில்
பலரும் வந்த பிறகு ஏன் இயல்புகுலைந்து சங்கடத்தோடு
அமர்ந்திருந்தார்கள்? வீட்டுக்குள் இருந்த எது அவர்களை மாற்றியது? பலகாரம்,
காபி, தண்ணி என்று எதுவொன்றையும் சாப்பிடாமல்
அவர்கள் தவிர்த்ததற்கான காரணம்தான்
என்ன? வற்புறுத்தலுக்காக கேக்கை மட்டுமே எடுத்துக்கொண்ட ஒருசிலரும்
கூட வேண்டா வெறுப்பாகவே தின்றது
ஏன்? அலமாரியில் இருந்த பொம்மைகளை எடுத்து விளையாட துறுதுறுத்த குழந்தைகளை
அவர்கள் இழுத்துப்பிடித்து நிறுத்திக்கொண்டது எதனால்? என்று அவளை குடைந்துகொண்டிருந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்துவிட்டது. இனி தாமதிக்க வேண்டியதில்லை, வீட்டை மாற்றலாம் என்றாள்.
வீட்டை மாற்றும் ஒவ்வொரு முறையும், இப்படி மூட்டை முடிச்சுகளோடு பிள்ளைகளை
இழுத்துக் கொண்டு திரிவதா என்கிற கேள்வி கடும் மனஉளைச்சலைத் தந்தது.
வெளிப்படையாய் பிரித்து நிற்கிற சுவர்களைக் காட்டிலும்
மனசுக்குள் ஒவ்வொருவரும் கட்டி வைத்திருக்கிற மாயச்சுவர்களின் திண்மையில்
முட்டி மோதி தோற்று விழுவது இவர்களுக்கு பெருத்த
அவமானமாகவும் இருந்தது. எந்த வீட்டுக்குப் போனாலும் இதேமாதிரியான பாகுபாடுகளையும்
புறக்கணிப்புகளையும் தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்
என்பது தெரிந்திருந்தது. ஆனால் அதற்காக அருங்கிளி சொல்லும்
தீர்வையும் இவனால் உடனடியாக ஏற்கமுடியாமல் திணறினான்.
இப்போதென்றில்லை, திருமணத்திற்கு முன்பிருந்தேகூட
அவள் இப்படியொரு யோசனையைத்தான்
சொல்லிக் கொண்டிருந்தாள். ஒவ்வொருமுறை
வீடு மாற்றும்போதும் அவள் இந்த யோசனையை வலியுறுத்தியும் வந்தாள்.
இவன்தான் யோசிக்க இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடு என்று கேட்டு தள்ளிப்போட்டு அருங்கிளியிடம்
தன்னை தாழ்த்திக்கொண்டிருந்தான். இன்னமும் உனக்குள் இருக்கும் ஆணோ அல்லது சாதியவாதியோ தான் எனது யோசனையை ஏற்கவிடாமல் உன்னைத்
தடுக்கிறான் என்பதைப்போல அருங்கிளி
பார்க்கும்போது இவன் தனது தடுமாற்றத்தையும் தத்தளிப்பையும் மறைத்துக்கொள்ள முடியாமல்
கூனிக்குறுகுவான். இந்தமுறை அவகாசம் கேட்பதற்கு பதிலாக தனக்கெதிராகவே சில முடிவுகளை எடுத்தாக
வேண்டிய நெருக்கடிக்கு இவன் ஆளானது இப்படித்தான்.
***
நம்மாளுங்களா இல்லாட்டி
இங்கே குடிவந்திருப்பாங்களா என்று இவர்களும், அவங்காளுங்களா
இல்லாட்டி அங்கே குடிபோயிருப்பாங்களா என்று அவர்களும் வாதிட்டுக்கொண்டிருப்பதை
பொருட்படுத்தாமல் அருங்கிளியும் இவனும் அம்பேத்கர் நகரிலிருந்து இப்போது
அலுவலகத்திற்குப் போய்வருகிறார்கள். வாழ்வரசியும் நூதனாவும் அம்பேத்கர்
நகர் குழந்தைகளோடு விளையாடிக்
கொண்டிருக்கிறார்கள். அம்பேத்கர் அல்லாத மற்றவர்களின் நூல்கள் அலமாரியில் அடுக்கி
வைக்கப்பட்டிருப்பது பற்றி இங்கு யாரொருவருக்கும் யாதொரு புகாருமில்லை.
***
நன்றி: தலித் முரசு
//பொம்மைகளை எடுத்து விளையாட துறுதுறுத்த குழந்தைகளை அவர்கள் இழுத்துப்பிடித்து நிறுத்திக்கொண்டது எதனால்?//
பதிலளிநீக்குஎன்ற வரிகளை வாசிக்கும் போது நான் என்ன நினைத்தேனோ அதையே முடிவாக வாசித்த போது "செகுவேரா" வின் வார்த்தைகள் வந்து சென்றது.
நீங்கள் தரகர் அல்லது உரிமையாளரிடம் வெளிப்படையாக உங்கள் தேவைகளை சொல்ல வேண்டும். எனக்கு சாதி, மதம் மற்றும் உணவு பழக்கம் பற்றி கேள்வி கேட்காத வீடு வேண்டும் என்று .
பதிலளிநீக்கு// எனக்கு சாதி, மதம் மற்றும் உணவு பழக்கம் பற்றி கேள்வி கேட்காத வீடு வேண்டும் என்று//
நீக்குஇங்கே வீடு முக்கிய பிரச்னையில்லை.வீட்டை சுற்றியிருப்பவையே பிரச்னை.