நிரந்தர வாசகர்களும் நிரந்தர எழுத்தாளர்களும்... -புதுவிசை 40வது இதழின் காலங்கம்காலங்கம்

தமிழக வாசகப்பரப்பின் விரிவையும் விவாதக்களத்திற்கு இழுத்துவர வேண்டிய விசயங்களின் அளவையும் அடர்த்தியையும் ஒப்பிடும்போது இங்கு வெளியாகும் பத்திரிகைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவே. இன்னும் இன்னும் அனேகத்தளங்களில் இயங்குவதற்கான பத்திரிகைகள் நமக்குத் தேவையாகின்றன. வெகுசன இதழ்கள் பேசத் தயங்குகிற வெளியிட மறுக்கிற விசயங்களை எழுதுவதற்கும் வெளியிடுவதற்கும் ஆளும் வர்க்கம் தனது நலனை முன்னிட்டு கட்டமைக்கும் பொதுப்புத்தியில் குறுக்கீடு செய்வதற்கும் நூறுநூறு இதழ்கள் வரவேண்டுமென புதுவிசை விரும்புகிறது. அந்தந்த வட்டாரம் சார்ந்து, சமூக அடுக்குகள் சார்ந்து, குறிப்பான பேசுபொருள் சார்ந்து, பத்திரிகைகள் வரும்போதுதான் கருத்துலகம் ஜனநாயகப்படுத்தப்படும் என்பதில் புதுவிசை தீவிர நம்பிக்கை கொண்டுள்ளது.
 
வெகுசன இதழ்களின் மேம்போக்குத்தன்மையிலிருந்து விலகிய தீவிர/ அதிதீவிர/ வலது/ இடது / நடுவாந்திர / மாற்று/ உண்மையான கெட்டிச்சாய மாற்று என்கிற பிரகட னங்களோடு எத்தனை பத்திரிகைகள் வெளியானாலும் அவை யாவற்றுக்குமான வாசகர்கள் குறிப்பிட்ட சில ஆயிரம் பேருக்குள்தான் அடங்குவர். ஒருவகையில் இவர்கள் இந்த பத்திரிகைகளின் பொதுவாசகர்கள். இவர்கள்தான் வெளியாகிற அத்தனை இதழ்களையும் கைக்காசை செலவழித்து காப்பவர்கள். கருத்தியல்ரீதியாக உடன்பாடில்லாத இதழ்களையும்கூட வாங்கும் இவர்களது ஆதரவு மட்டும் இல்லை என்றால்  புதுவிசை உள்ளிட்ட பல இதழ்கள் காணாமல் போயிருக்கும். வாசிப்பதை ஒரு முழுநேரத் தொழிலாகச் செய்தால் மட்டுமே இப்படி தமது தலையில் கட்டப்படுகிற / கொட்டப்படுகிற இதழ்களை இவர்களால் வாசித்து முடிக்க முடியும். (அண்டை அயலாருடன் பகிர்ந்துகொள்ள விரும்பாத, மிகவும் அந்தரங்கமாக, வாசிப்பு இன்பத்திற்காக மட்டுமே வாசிக்கிற சிலர் வாசிப்பை ஒரு ரகசியத் தொழில் போல செய்துகொண்டிருக்கிறார்கள்.) நுட்பமும் செறிவும் புத்தாக்கப்பொலிவும் பொறி கலங்கடிக்கும் வாதங்களும் கொண்ட ஆக்கங்கள் எதுவாக இருந்தாலும் அத்தனையும் இந்த நிரந்தர வாசகர்களைஅறிவூட்டி அப்டேட் செய்துவிட்டு முடங்கிவிடுவது சரியாகுமா? வாசித்துக்கொண்டு மட்டுமே இருக்கிற இவர்களால் கருத்தியல்ரீதியாக என்ன பயன் விளையப்போகிறது? அச்சகத்திலிருந்து வந்த வேகத்தில் இவர்களுக்கு அஞ்சலில் அனுப்பிவிட்டு அடுத்த இதழ் தயாரிக்கத்தொடங்கும் செக்குமாட்டுத்தனத்திற்குள்ளிருந்து வெளிவர விரும்புகிறது புதுவிசை.
 
இந்த இதழ்களின் வாசகர்கள் சில ஆயிரவர் என்றால் இவற்றின் எழுத்தாளர்கள் மற்றும் ஓவியர்களின் எண்ணிக்கை நூறைத்தாண்டுமா என்பதும் ஐயமே. ஏழரைக்கோடி தமிழர்கள் என்கிற அளப்புகளுக்கு எதிர்விகிதத்தில் இவ்விதழ்கள் சின்னஞ்சிறு குழுவாக வாசகர்களையும் எழுத்தாளர்களையும் ஓவியர்களையும் (விளம்பரதாரர்களையும்) அடையாளப்படுத்தி பொதுவில் பகிர்ந்துகொள்கின்றன. இது ஒற்றுமையுணர்வினால் அல்ல, பரந்த இத்தமிழ்ச் சமூகத்தில் தமக்கான தனித்த வாசகர்களையும் எழுத்தாளர்களையும் ஆதரவாளர்களையும் கண்டடைய முடியாத பலவீனத்தினால்தான். கல்யாண மற்றும் கருமாதிப் பத்திரிகைகளை மட்டுமே வாசிக்கமுடிந்தவர்கள் என்று கோடானகோடி தமிழர்களை ஒதுக்கிவைத்துவிட்டு குழுஉக்குறியிலும் மருஉ மொழியிலும்பேசி தனிமைப்பட்டுக் கொள்கிற குறுங்குழுவாதங்களும் தம்மைத்தாமே உசுப்பேற்றிக்கொள்கிற மிகையான மதிப்பீடுகளும்கூட இந்த நிலைமையை உருவாக்கியிருக்கலாம்.
 
ஒத்த கருத்துள்ளவர்கள் ஒரு பத்திரிகையில் இணைந்து செயல்படுவது என்கிற நன்னோக்கு அவர்கள் மட்டுமே எழுதிக்கொள்வதற்கானதாக சுருங்கிவிடக்கூடாது. எனவே ஒவ்வொரு இதழிலும் புதிய ஆக்கவாதிகள் மற்றும் ஆய்வாளர்களின் பங்கெடுப்பை புதுவிசை வரவேற்கிறது.  சங்க இலக்கியத்தில் ஒன்பது இடங்களிலும் எண்பது இடங்களிலும் பயின்றுவருவதாக கண்டுசொல்லும் தொந்தரவில்லாத ஆய்வுகளின் பக்கம் போய்விடாமல் சமூகத்தின் அசைவியக்கத்தை ஊன்றி கவனிக்கிற, புதிய திறப்புகளை முன்வைக்கிற, செயலுக்கும் மாற்றத்துக்கும் தூண்டுகிற ஆய்வுகளை மேற்கொள்கிறவர்களின் தளமாக புதுவிசை வெளிவரும். தமது கட்டுரைகளை வெளியிடும் ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களின் கல்விப்புலம் சார்ந்த மதிப்பீடுகளுக்கும் தேவைப்படுவதால் இந்த 40வது இதழிலிருந்து புதுவிசை  ISSN பதிவெண்ணுடன் வெளியாகிறது.
 
கண்ணியமான வாழ்வுக்காக சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத்தளங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்திவரும் போராட்டங்களுக்கான கருத்தியல் நியாயத்தை பரப்புவது என்கிற சார்புநிலை கொண்ட புதுவிசை பொத்தாம்பொதுவான இதழ் அல்ல. ஏற்றத்தாழ்வான இச்சமூக அமைப்பு சாசுவதமானது என்று ஆளும் வர்க்கக் கருத்தியலின் பொய்மையை அம்பலப்படுத்தி சமூக மாற்றம் என்கிற தவிர்க்கவியலா நிகழ்வின்மீது நம்பிக்கை வைத்து அதை விரைவுபடுத்துவதற்காக கருத்தியல் தளத்திலும் களத்திலும் செயலாற்றுபவர்களுடன் இணைந்து நிற்கும்  புதுவிசையை புதியவர்களிடம் அறிமுகம் செய்யும் பொறுப்பை ஏற்குமாறு எமது வாசகர்களாகிய உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.  ஒரு பத்திரிகை என்பது வெறும் காகிதமல்ல என்பதை  உணர்ந்து கொண்டுள்ள நீங்கள் இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவீர்கள்தானே...?

நம்பிக்கையுடன்,
ஆசிரியர் குழு


கட்டுரை
பார்வை மாற்றுத்திறனாளிகள் சமூகச்சூழலும் சாதிய மனநிலையும் -மு.முருகேசன் / 3

இடதுசாரி இயக்கத்தின் பரிணாமமும் தலித் படுகொலையின் பரிமாணமும்-கோ.ரகுபதி / 9

வாசல்படியில் பாசிசம் - எஸ்.வி. ராஜதுரை / 19

இனக்குழு கூறுகளும், வர்க்கப்பிரிவினையும்: இனவரைவியல் நோக்கில்
பரதவர்களின் சமூக வரலாறு - வினோத் வின்சென்ட் ராஜேஷ் / 24

கல்விக்கடன் என்னும் சிலந்திவலை - சித்ரலேகா / 34

வளர்ச்சி மேம்பாடு விடுதலை - ப.கு.ராஜன் / 40

டிப்ரஸ்டு கிளாஸ் வகைமையின் பரிணாமம் - ரா. சுஜிதா குமாரி / 46

திருநெல்வேலி மாவட்டத்தில் குடியமர்ந்த செம்மான் மக்களின் இனவரைவியல் - மா.ஆனந்தகுமார் / 55

குறவர் பழங்குடி: போராட்டத்தில் அலைவுறும் வாழ்வு
-மணிகோ.பன்னீர்செல்வம் / 58

பிதாவே அவரை மன்னிக்காதீர்கள் - தஞ்சை சாம்பான் / 66

புயலின் மையத்தினுள் 120 மில்லியன் குழந்தைகள்
எடுவர்டோ கலியானோ தமிழில்: தேவா / 76

நூல் அறிமுகம்
கண்ணாமூச்சியாடும் மரணம் - ந.பெரியசாமி / 63

சிறுகதை
சலர்னோ அரசன் (இத்தாலி )
- ஜீவோன்னி பொக்காஷ்யோ, மலையாளம் வழி தமிழில்: எல்.பி.சாமி / 70

கவிதைகள்
திரு / 33  பா.ராஜா / 64  மா.காளிதாஸ் / 74

முகப்போவியம்
கார்த்தி


பிரதிகளுக்கும் சந்தாவுக்கும்:
ந.பெரியசாமி: 9487646819
சம்பு: 9443479818

தனி இதழ்: ரூ. 40
ஆண்டு சந்தா : ரூ.150 ( நான்கு இதழ்கள் )
மாணவர்களுக்கு ஆண்டு சந்தா : ரூ.120
பத்தாண்டு சந்தா : ரூ.1500கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக