சனி, பிப்ரவரி 14

துக்கத்தின் நெடுவேலில் - ஆதவன் தீட்சண்யா



உன் பெயரை ஜெபித்தபடி
புலர்ந்திருக்கும் இவ்விரவை
நான் தன்னந்தனியே கடக்க வேண்டியிருக்கிறது
ஒரு நிலவைப்போல
கடைசி சந்திப்பின் வெதுவெதுப்பான ஞாபகங்களன்றி
வழித்துணைக்கு ஏதுமில்லை

இதோ இதோவென தளர்ந்து நகரும்
கிழட்டு நொடிகளைக் கோர்த்தபடி  
எண்திசையும் கண்சுழற்றிப் பார்க்கிறேன்
நீ வந்துவிடுவாயென

இருளின் அரூபங்களில் உன் முகங் கண்டு பித்தேறி
வெற்றுவெளி துழாவி கட்டித் தழுவியது மாயமென்றறிந்து
துக்கத்தின் நெடுவேலில் பாய்ந்து
துடித்தடங்குகிறேன் உயிரைப்போல

இதே வானத்தின் கீழ்
பெருமூச்சை உகுத்தபடி நீயும் கிடப்பதறியாது
என்பொருட்டு இரக்கமுற்ற ராப்பூச்சிகள் வினோத ஒலியெழுப்பி
உன்னையழைக்கும் இப்பகல் கவியும் வேளையில்
அயர்ந்து முளைக்கிறது சூரியன் வீடு திரும்பும் கூர்க்காபோல
கூசும் கண்களை மூடிக்கொள்கிறேன்
பின்வரும் இரவுகளிலும்
இவ்வாறே விழித்திருக்கத்தான் வாய்த்திருக்கிறதென்று.

3 கருத்துகள்:

  1. நல்லா எழுதி இருக்கீங்க...பகிர்வுக்கு நன்றி...
    மலர்

    பதிலளிநீக்கு
  2. வெலண்டயின் கவிதையா சார்.? காதல் கவிதையும் வருதே.. கல்லுக்குள் ஈரம். :P

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 200ல் எழுதியது. கல்லுக்குள் தான் ஈரம் காயாமல் இருக்கக்கூடும்.

      நீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...