வெள்ளி, ஏப்ரல் 10

பொய்களின் மீது கட்டப்பட்டுள்ள பாசிசத்துக்கு எதிராக...எஸ்.வி.ராஜதுரை

திருப்பூரில்  நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் 13ஆவது மாநில மாநாட்டின் பிரதிநிதிகள் அவையில் 20.03.2015 அன்று தோழர் எஸ்.வி.ஆர் ஆற்றிய இவ்வுரையை அவரது 76வது பிறந்த நாளான இன்று வெளியிடுவதில் தந்துகி மகிழ்ச்சியடைகிறது.
                                                                                                                                                            
 தோழர்களே!
இந்தியாவில் ஏற்பட்டுள்ள மிக  நெருக்கடியான சூழலில்  இந்த மாநாடு நடைபெறுகின்றது. காலனிய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ முறையின் காரணமாக மக்களின் வாக்குகளில் வெறும் 31 விழுக்காட்டை மட்டுமே பெற்று நாடாளுமன்றத்தில் அசுர பலத்துடன் பாசிச சக்திகள் ஆட்சிக்கு வந்துள்ள சூழல் இது. இந்த 31 விழுக்காடு வாக்குகளிலும்கூட, ‘மதச்சார்பற்றவர்கள்’ என்று சொல்லிக்கொள்ளும் சந்திரபாபு நாயுடு, ராம் விலாஸ் பாஸ்வான் போன்றவர்களின் சந்தர்ப்பவாதக் கட்சிகளின் வாக்குகளும் உள்ளன. எப்படி இருந்தாலும் இந்துத்துவ பாசிஸ்டுகள் இந்திய வாக்காளர்களில் 69 விழுக்காட்டினரால் ஆதரிக்கப் படாதவர்களாக அல்லது எதிர்க்கப்படுகிறவர்களாக இருப்பதால்தான்  நிலம் கையகப்படுத்துதல் சட்டவரைவு நாடு முழுவதிலும் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து வருகின்றது. 1991இல் நரசிம்ம ராவின் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் தொடங்கி வைக்கப்பட்ட நவ-தாராளவாதப் பொருளாதாரக் கொள்கை பெரும் பாய்ச்சலுடன் முன்னேறிச் செல்வதற்கான பாதையை மன்மோகன் சிங் அரசாங்கம் அமைத்துக் கொடுத்தது. அந்தப் பாதையைப் பயன்படுத்தித்தான் இன்றைய பாசிச மோடி அரசாங்கம், பார்ப்பன-பனியா இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கான பெரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக விவசாயிகளின் வாழ்வாரத்தைப் பறிக்கும் நிலம் கையகப்படுத்துவது மட்டுமல்ல; நிலக்கரிச் சுரங்கங்களும் இதர கனிமவளச் சுரங்கங்களும் வணிகமயமாக்கப் படுகின்றன. இது மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது மட்டுமின்றி மிக பாரதூரமான சூழல்கேடுகளை ஏற்படுத்தப் போகின்றது. இந்தியப் பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையும் கார்ப்பரேட்மயமாக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் காப்பீட்டுத் துறையில் வெளிநாட்டு மூலதனத்துக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன் ஒபாமா இந்தியா வந்த போது, இந்தியாவிற்கு அணு உலைகளை விற்கும் அமெரிக்க நிறுவனங்கள், இங்கு விபத்துகள் நேரிட்டால் எந்தவிதப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை, எந்த இழப்பீட்டையும் தர வேண்டியதில்லை, எந்தச் சட்டத்தையும் எந்த நீதிமன்ற விசாரணையையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை என்று இந்திய மக்களைக் கொல்வதற்கான முழு அனுமதியையும் வழங்கினார் மோடி. அமெரிக்க மருந்ததுக் கம்பெனிகளின் கொள்ளை இலாபப் பேராசையைத் தீர்ப்பதற்காக, இந்தியாவின் வடிவுரிமைக் கொள்கையில் (patent policy) பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி, உயிர் காக்கும் மருத்துகள் பலவற்றை இந்தியாவில் உற்பத்தி செய்வதைத் தடுத்து, இந்தியாவிலும் பிற நாடுகளிலும்  உள்ள சாமானிய மக்கள்  அவற்றை மிக அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்பந்தந்தை உருவாக்கியுள்ளார் மோடி.

திட்டக் குழுவைக் கலைத்து மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிதியை ஒட்டுமொத்தமாக இல்லாமல் செய்வதற்கான வழிவகைகளைச் செய்துள்ளது மோடி அரசாங்கம். அண்மையில் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த வரவு-செலவுத் திட்டத்தில் மக்கள் நல, பொது நல சேவைகளுக்கான நிதியைப் பெருமளவுக்கு வெட்டிக் குறைத்து பெண்கள் நலம், குழந்தைகள் நலம், கல்வி ஆகியவற்றுக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தினால் பயனடைந்து வரும் மக்களின் எண்ணிக்கையை 75 விழுக்காட்டிலிருந்து 45 விழுக்காடாகக் குறைப்பதற்கான முயற்சிகளை இந்த பாசிச அரசாங்கம் மிக வேகமாகச் செய்து வருகின்றது. ஏற்கெனவே அது சந்தடி இல்லாமல் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிட்டது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்னும் முழக்கத்தின் கீழ், மோடி அரசாங்கம் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின்போது தொழிலாளர்களுக்கு இருந்த பாதுகாப்புகளையும்கூட  முற்றிலும் துடைத்தெறிந்து, மிக மோசமான வேலை நிலைமைகளில் வியர்வைகூடங்களில் பண்டைக் கால அடிமைகளைப் போல அவர்களைக் கசக்கிக் பிழிய வழிவகுக்கும் சட்டங்களை இயற்றி வருகின்றது.

மறுபுறம், சமுதாய, பண்பாட்டுத் தளத்தில் இந்துத்துவ பாசிசத் தாக்குதல்கள் மிக மும்முரமாக, மிக தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. வாஜ்பாயி அரசாங்கக் காலத்திலேயே பாடப்புத்தகங்களில் இந்துத்துவ பாசிசப் பிற்போக்குக் கருத்துகளையும் மூடநம்க்கைக்ளை வலுப்படுத்தும் கருத்துகளையும் கொண்ட பாடப் புத்தகங்கள் வெளியிடப்பட்டன; பாடத் திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. வரலாற்றறிஞர்களின் நூல்களைத் தடைசெய்வதில் மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ்-தேசியவாதக் காங்கிரஸ் ஒருபுறமும் பாஜக-சிவசேனைக் கூட்டணி மறுபுறமும் போட்டிபோட்டுக் கொண்டன.  எவ்வித உயர்கல்வியுமில்லாத ஓய்வுபெற்ற பள்ளியாசிரியர் பத்ராவால் எழுதப்பட்டுள்ள முட்டாள்தனமான புத்தகங்கள் குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான பள்ளிக்கூடங்களில் கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களில் மதமாற்றத் தடைச்சட்டமும் பசுவதைத் தடை சட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் பாசிச இந்துததுவ அரசாங்கம்  மாடுகளை வெட்டுவதற்கும் மாட்டிறைச்சியை விற்பதற்கும் தடைவிதித்துள்ளது; முஸ்லிம்களுக்கு நீதிமன்றம் ஒப்புதல் தந்த 5 விழுக்காடு ஒதுக்கீட்டு முறையை இரத்து செய்துள்ளது. மாட்டிறைச்சி உண்பது இந்து மதத்தை இழிவு செய்வதாகும் என்றும் இந்துக்கள் ஒருபோதும் மாட்டிறைச்சியை உண்டதில்லை என்றும் சங் பரிவாரம் பிரசாரம் செய்கிறது. முஸ்லிம்கள், தலித்துகள், இந்துக்களில் உள்ள ஏழை மக்கள் ஆகியோருக்கு புரதச்சத்து தரும் மாட்டிறைச்சி விற்பனையைத் தடை செய்வதன் மூலம் விருப்பமான, தேவையான உணவை உண்ணும் உரிமையை அவர்களுக்கு மறுக்கின்ற கொடிய மனித உரிமை மீறலை சங் பரிவாரம் செய்வதுடன், மாட்டிறைச்சி உண்பவர்களை இழிவுக்கும் உட்படுத்துகின்றது. இந்துமதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறியவர்களில் மிகவும் ஏழ்மைப்பட்ட ஒரு சிலரை அச்சுறுத்தியோ, கையூட்டுக் கொடுத்தோ மீண்டும் இந்து மதத்திற்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளின் மூலம் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் இந்தியர்கள் அல்லர் என்று அறிவிக்கின்றது. டெல்லியிலும் பிற இடங்களிலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டு, அவற்றிலுள்ள பொருள்கள் சூறையாடப்படுகின்றன. அனைத்து சமூகத்தினராலும் மதிக்கப்பட்டு வந்த அன்னை தெரஸாவைப் பற்றிய அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தில் 71 வயது மூதாட்டியான கிறிஸ்தவ கன்னிகாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டனம் செய்யாத ஒரே அரசியல் சமூக சக்தி சங் பரிவாரம் மட்டுமே. நாளந்தா பல்கலைக்கழகத்தின் சட்டதிட்டங்கள் திருத்தப்பட்டு, உலகப் புகழ்பெற்ற அறிஞர் அமர்த்யா சென், அந்தப் பல்கலைக்கழகத் துணைவேந்தர பொறுப்பிலிருந்து விலகும்படி நிர்பந்திக்கப்பட்டுள்ளார். NCERTயின் பாடத்திட்டங்கள் மாற்றப்படுகின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் பகவத் கீதை பள்ளிக்கூடங்களில் கட்டாயப் பாடமாக்கப்படுகின்றது. இந்தியா முழுவதிலும் சமஸ்கிருதத்தைத் திணிக்க மிக நாசூக்கான வழிமுறைகள் வகுக்கப்படுகின்றன. அறிவுக் களஞ்சியத்திற்கு உலகிலுள்ள பல்வேறு நாட்டு மக்களும் பங்களிப்புச் செய்துள்ளனர் என்பதை மறுத்து, அனைத்து அறிவும் இந்துக்களாலேயே உருவாக்கப்பட்டது என்று அறிவிப்பதற்கும் மோடி தலைமை தாங்குகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, பாஜகவின் இரட்டை வேடத்தின் மற்றொரு வெளிப்பாடாக காந்திக்கு நியூயார்க்கிலும் இலண்டனிலும் சிலை வைக்க உதவி செய்யும் அதேவேளை பாஜக, கோட்ஸெவுக்குக் கோவில் கட்டும் முயற்சிக்கு எதிராகப் பகிரங்கக் கண்டனத்தை இதுவரை தெரிவிக்கவில்லை.

பாசிச சங் பரிவாரத்தின் பிற்போக்கு, மானுடவிரோத, மூடநம்பிக்கைக் கருத்துப் பரப்புரைகளை மறுத்து, ஜனநாயக, முற்போக்கு, மதச்சார்பற்ற கருத்துகளை மக்களிடையே கொண்டு செல்பவர்களைக் கருத்துரீதியாக எதிர்கொள்ளும் அறிவுவலிமையோ, மன உரமோ இல்லாத சங் பரிவாரத்தினர் கொலைக்கருவிகளை ஏந்தி கோழைத்தனமான கொலைச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்தக் கொலைச்செயல்களுக்குக் காங்கிரஸ் பலசமயம் மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவி செய்துள்ளது. ஸஃப்தர் ஹாஸ்மியைக் கொலை செய்தவர்கள் யார்? காங்கிரஸ் குண்டர்களல்லவா? பகுத்தறிவாளரும் மனிதநேயருமான நரேந்திர தபோல்கர் கொலை செய்யப்பட்டது காங்கிரஸ்- தேசியவாதக் காங்கிரஸ் ஆட்சியின் போதல்லவா? அவர் கொலை செய்யப்பட்டு ஏறத்தாழ இரண்டாண்டுகளாகின்றன. குற்றவாளிகளில் ஒருவர்கூட இதுவரை கைது செய்யப்படாதது ஏன்? காங்கிரஸ், அதிலிருந்து பிரிந்த தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரண்டுக்கும் சிவசேனையுடன் தொடக்கம் முதலே நேரடியான, மறைமுகமான உறவு இருந்து வந்துள்ளது. போர்க்குணமிக்க தொழிற்சங்கத் தலைவர்களைக் கொன்று ஆலை முதலாளிகளுக்குப் பாதுகாப்புத் தருவதற்கு சிவசேனையின் கொலைப்படை தேவை என்பதை காங்கிரஸ் நன்றாகவே உணர்ந்திருந்தது.

தபோல்கரின் ‘மூடநம்பிக்கை ஒழிப்புச் சங்க’த்தில் உறுப்பினராக இருந்தவரும், சங் பரிவாரத்தின் வெறுப்புப் பேச்சுகளை எதிர்த்து வந்தவரும், சிவாஜியை இந்துத்துவத்தின் குறியீடாக மாற்றும் சங் பரிவாரத்தின் வரலாற்றுத் திரிபுகளை மறுத்து, சிவாஜி சாமானிய மக்களின் நலன் காத்ததை, முஸ்லிம்களை அவர் பெருந்தன்மையோடு நடத்தியதை, தனது இராணுவ, நிர்வாக அலகுகளில் முஸ்லிம்களை நியமித்திருந்ததை எடுத்துக் காட்டியவருமான கம்யூனிஸ்ட் தோழர் கோவிந்த் பன்ஸரேவை, அவர் முதியவர் என்றுகூடப் பார்க்காமல் கோழைத்தனமாக சுட்டுக்கொன்ற சங் பரிவார சமூகவிரோதக் கொலையாளிகளை மகாராஷ்டிர முதல்வர் ஆர்எஸ்எஸ் சித்பவன் பார்ப்பனர் ஃபட்னாவிஸ் கைது செய்ய முயற்சி எடுப்பார் என்று நினைப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.

 இந்திய அரசியல் சட்டப்படியோ, இதர சட்டங்களின்படியோ குற்றங்களை இழைத்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறையும் நிர்வாகத் துறையும் இந்துத்துவ சக்திகளுக்குச் சாதகமாகவே நடந்து கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, சிறுபான்மை மதத்தினரை இழிவுபடுத்தவும் அவர்கள் மீது வெறுப்பை வளர்க்கவும் சுப்பிரமணியன் சுவாமி DNA என்னும் ஏட்டில் 2011இல் எழுதிய கட்டுரை தொடர்பாக  சமூக ஆர்வலர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுப்பிரமணியன் சுவாமி பற்றிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. சமூகத்தின் ஒரு பிரிவினர் மீது வெறுப்பையும் பகைமையையும் வளர்ப்பது சட்டப்படி குற்றமாதலால், சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தை அணுகி, அந்த வழக்கு தொடர்பாக காவல் துறையுடனும் நிர்வாகத் துறையுடனும் முழு ஒத்துழைப்புத் தருவதாக உறுதிமொழி கொடுத்து பிணையில் வெளிவந்தார். ஆனால், காவல் துறையோ, நீதித்துறையோ அந்த வழக்கை நடத்தாமல் காலம் கடத்துவது ஒருபுறமிருக்க, சுப்பிரமணியன் சுவாமியோ அந்த முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள அதே குற்றத்தைத் தொடர்ந்து இழைத்து வருகிறார். 

‘நேர்மை’ என்ற சொல்லை மற்றவர்களைவிட மிக அதிகம் பேசுபவர்கள் பாசிஸ்டுகள். ஆனால், மற்றவர்களைவிட அதைத் துச்சமாகக் கருதுபவர்களும் அவர்கள்தாம். அதனால்தான் அருண் ஜெய்ட்லி ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியவுடன், பதினெட்டு ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு வந்த வருமான வரி ஏய்ப்பு வழக்கு முடிவுக்கு வந்தது. அதனால்தான்  நிலம் கையகப்படுத்தும் சட்டவரைவுக்கு அழையா விருந்தாளி போல, அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விழுந்தடித்துக் கொண்டு ஆதரவளித்தனர்.

தமிழகத்திலோ அஇஅதிமுகவோ அதனால் ஆளப்படும் தமிழ்நாடு அரசாங்கமோ தன்னை இந்துத்துவ சக்தி என்றோ, பாசிசச் சக்தி என்றோ அழைத்துக் கொள்வதில்லை. அந்தக் கட்சியின் பதாகைகளில் இன்னும் பெரியார், அண்ணா ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், மத பாசிசம், சாதி பாசிசம், பண பாசிசம் ஆகிய மூன்று வடிவங்களைக் கொண்ட பாசிசச் சக்தியாக அஇஅதிமுகவும் அதன் ஆட்சியின் கீழுள்ள அரசாங்கமும் தம்மை புலப்படுத்திக் கொண்டு வருகின்றன. பெரியார், அண்ணா ஆகியோரை மிகக் கேவலப்படுத்தும் வகையில் அமைச்சர்களே பால் குடமும் காவடியும் ஏந்தித் திரிகின்றார்கள்; கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டுப் பணியாற்ற வேண்டிய, அரசியல் சட்டத்தை மதித்து ஒழுகவேண்டிய  ஐஏஎஸ் அதிகாரிகளும் வேறு உயர் அதிகாரிகளும் அஇஅதிமுக நடத்தும் யாகங்களிலும் அன்னதான நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்கள். காவல் நிலையங்களும் அரசாங்க அலுவலகங்களும் யாக சாலைகளாக, பூஜை அறைகளாக, பஜனை மடங்களாளக மாற்றப்படுகின்றன.  மாநில அரசாங்கங்களின் காவல் துறையிலும் மத்திய அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகளிலும்  நீண்டகாலமாகவே சங் பரிவார சக்திகளின் ஊடுருவல் நடந்து கொண்டிருக்கிறது. 

தர்மபுரி, சேலம், நெல்லை முதலிய மாவட்டங்களில் நடக்கும் சாதி மோதல்களையும், கொலைகளையும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடக்கும் ‘கெளரவக் கொலைகளையும்’ தடுத்து நிறுத்துவதிலோ, அந்தக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவோ சிறிதும் விருப்பமில்லாத அஇஅதிமுகஅரசாங்கம், பெருமாள் முருகனும் புலியூர் முருகேசனும் சாதி வெறியர்களால் தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஆதிக்க சாதிகளைப் பகைத்துக் கொள்ளாமல் அடுத்த தேர்தலில் தனது வாக்கு வங்கியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற ஒரே அக்கறைதான் அந்த கட்சிக்கு உள்ளது. சாமானிய மக்களின் வாழ்வாதரங்களைப் பாதுகாக்கவும் அவற்றை வளப்படுத்தவும் நீண்டகாலத் திட்டங்கள் எதனையும் வகுப்பதில் ஆர்வமோ அக்கறையோ அற்ற இந்தக் கட்சியும் அதன் அரசாங்கமும் மடிக்கணினி, மிக்ஸி போன்ற இலவசங்களை (இவை மக்களில் 15, 20 விழுக்காட்டினரைக்கூடச் சென்றடையவில்லை) வழங்குவதன் மூலமும், மக்களைச் சோற்றால் அடித்த பிண்டங்களாகக் கருதி அவர்களது வாக்குகளை இலஞ்சம் கொடுத்து வாங்குவதன் மூலமும் தமது அதிகாரத்தை நிலை நிறுத்த முயல்கின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகளான தரமான கல்வி, மருத்துவம், போக்குவரத்து, குடிநீர் முதலியன தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் மிகவும் பின்தங்கிய, ஏன் இந்துத்துவ சக்திகள் ஆட்சி புரியும் மாநிலங்களின் சட்டமன்றங்களில்கூட காணப்படாத ஜனநாயக விரோத நடைமுறைகளையும் நடவடிக்கைகளையும் தமிழக சட்டமன்றத்தில் மட்டுமே பார்க்க முடிகின்றது. ஆனால், இது பற்றி தமிழகத்திலும் இந்திய அளவிலும் செயல்படும் எந்த அச்சு ஊடகமும் மின்னூடகமும் விமர்சனமோ கண்டனமோ தெரிவித்ததில்லை. காவிரி, முல்லைப் பெரியார் பிரச்சினைகளில் தமிழகத்தின் நலனை உயர்த்திப் பிடிப்பதாகத் தம்பட்டமடித்துக் கொள்ளும்,  இந்த சந்தர்ப்பங்களில் தமிழ் தேசியம் பேசும்  அஇஅதிமுகவும் திமுகவும்தான் தமிழகத்தில் அமராவதி, வைகை, நொய்யல் முதலிய ஆறுகளும், நூற்றுக்கணக்கான குளங்கள், கண்மாய்கள், ஏரிகள், ஓடைகள்  ஆகியனவும் செத்துப் போய் சாக்கடைகளாக மாறியதற்கும், விவசாயம் நலிந்து ரியல் எஸ்டேட் அரக்கர்கள் வளர்ச்சியடைந்ததற்கும்  பொறுபேற்க வேண்டும். மத்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் கூடங்குளம் அணுமின் நிலையமோ,  நியூட்ரினோ ஆராய்ச்சித் திட்டமோ, மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கல் குவாரிகள், தாது மணல் குவாரிகள், தனியார்-அரசாங்கக் கூட்டு நிறுவனங்கள் நடத்தும் அனல் மின் நிலையங்கள் முதலியனவோ யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என்ற இறுமாப்புடன்தான் செயல்படுகின்றன. 

ஈழப் பிரச்சினையைத் தமது தேர்தல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல் கட்சிகளில் ஒன்றுகூட, தமிழகத்தில் பல்லாண்டுகளாக அகதி முகாம்களிலோ, அவற்றுக்கு வெளியிலோ வசித்துவரும் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் அகதிகள் கண்ணியமான வாழ்வைப் பெறுவதற்கு, புகலிடம் தேடுவோர் குறித்த ஐ.நா. சாசனத்தை இந்திய அரசாங்கம் அங்கீகரித்து அதற்கு ஏற்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடியதில்லை. 

மகாத்மா ஃபுலெவும் அண்ணல் அம்பேத்கரும் பிறநது, இந்திய மக்களுக்கு, குறிப்பாக தலித்துகளுக்கும் பெண்களுக்கும் விடுதலைச் செய்தியை அறிவித்த, தன்மான உணர்ச்சியை ஊட்டிய மகாராஷ்டிரம் எப்படி இன்று இந்துத்துவ பாசிசத்தின் கோட்டையாக மாறியுள்ளதோ, அதே போல தந்தை பெரியார் பிறந்து சுயமரியாதை உணர்வை, பெண் விடுதலை உணர்வை, சாதி ஒழிப்பு மனப்பான்மையைப் பரப்பிய தமிழகத்தையும் பாசிச மண்ணாக மாற்றுவதற்கான முயற்சியை சங் பரிவாரம், அஇஅதிமுகவின் மறைமுக ஒத்துழைப்போடு மேற்கொண்டு வருகிறது என்றால், பாசிசத்தை எதிர்ப்பதற்காகச் சொல்லிக் கொள்கிற, பெரியாரின் கொள்கையை நீர்த்துப் போகாமல் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொள்கிறவர்களின் செல்வாக்குக்கு உட்பட்ட மின்னூடகங்கள், சங் பரிவாரத்தை மிஞ்சும் வகையிலான மூடக்கருத்துகளைப் பரப்பி பார்வையாளர்களின் மனதில் இந்துத்துவ மனப்பான்மையை வளர்க்கும் வேலையைச் செவ்வனே செய்து வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டை ‘சன் தொலைக்காட்சி’ மீது நேரடியாகவே சுமத்த விரும்புகிறேன். மறுபுறம், சமூக வலைத்தளங்கள் கட்டமைத்துள்ள ‘மதசார்பற்ற’, ‘ஜனநாயக’ வெளி என்பது அறிவுரீதியான விவாதங்கள் என்ற பெயரில் ஜனநாயகக் கருத்துகளுக்கும் பாசிசக் கருத்துகளுக்கும் சமத்துவத்தையும் சம உரிமையையும் வழங்குவதையும், காட்சி ஊடகங்களுக்கு ஏற்ற வகையில் பலர் தமது பேச்சுகளைத் தகவமைத்துக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதையும் பார்க்கிறோம். இந்த ஊடகங்கள் கிட்டத்தட்ட எல்லாமே கல்வி, மருத்துவம் முதலியவற்றைத் தனியார்மயமாக்குதலால் விளைந்த கொழுத்த விளைச்சலை அறுவடை செய்து உருவாக்கப்பட்டவை. இத்தகைய ஊடகங்கள்தாம் அறிவு நேர்மையோ, சகிப்புணர்வோ இல்லாதவர்களும், சிறுபான்மை சமூகத்தினர் மீது காரணமற்ற வெறுப்பைப் பரப்புகின்றவர்களுமான  சமூகவிரோத நபர்களுக்கு மிகை மதிப்பும் விளம்பரமும் ஏற்படுத்தித் தருகின்றன.

பெரியார் பிறந்த மண் என்று பேசுகையில், இங்கு கடந்த ஐம்பது ஆண்டுகளாக இடைநிலை சாதிகள் அரசியல், பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சியை அடைந்துள்ளதையும் தலித்துகள் மீதான வன்முறை அவர்களாலேயே கட்டவிழ்த்துவிடப்படுவதையும் பார்க்கிறோம். தமிழக மக்கள் தொகையில் தலித்துகள் ஏறத்தாழ இருபது விழுக்காடாக இருந்தபோதிலும், இலக்கியம், நாடகம், இசை, நடனம், இதழியல் ஆகியவற்றைத் தவிர, மிகப் பெரும் வெகு மக்கள் ஊடகமான சினிமாவில் இன்றுவரை ‘தலித்’ என்று நேரடியாக அடையாளப் படுத்தப்படுகின்ற, அடையாளம் காட்டுகின்ற கதாநாயகனையோ நாயகியையோ  நாம் இதுவரை பார்த்ததில்லை (முற்போக்கு இயக்குநர் ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ திரைப்படத்திலும்கூட, கதாநாயகன் ஒரு தலித் என்பதை நேரடியாகச் சொல்ல முடியவில்லை; அது குறிப்பாலேயெ உணர்த்தப்படுகின்றது). .அதேபோலவே பெண்களும், அவர்கள் எத்தகைய நவீன மோஸ்தர்களைக் கொண்டவர்களாகக் காட்டப்பட்டாலும், ‘வாடி போடி’யாகவே காட்சிப்படுத்தப்படுகின்றனர்.   

தோழர்களே!
மேற்கூறியவை யாவும் இந்தியா பற்றிய, தமிழகம் பற்றிய மிக மேலோட்டமான சித்திரம்தான். உங்களுக்கும் தெரிந்த சித்திரம்தான்.  இந்தச் சித்திரத்தைக் கருத்தில் கொண்டு பண்பாட்டுத் துறையில், கலை இலக்கியத் துறையில் நாம் எதிர்வினையாற்றுகிறோம். உண்மையான, ஜனநாயக, முற்போக்குப் பண்பாடு என்பது அறிவுரீதியாக எதிர் வினையாற்றக் கூடியதுதான். இராமாயணம் ஒரு புனித நூல் என்று இந்துத்துவவாதிகள் பிரசாரம் செய்கையில் இராமாயணம் என்பது ஒன்றல்ல; பல இராமாயணங்கள் உள்ளன என்று நாம் ஆதாரபூர்வமாகப் பதில் சொல்கிறோம்; இந்து தர்மத்தைப் பற்றி பாசிசவாதிகள் பேசும் போது, மனுதர்மத்தை அவர்களுக்கு நினைவூட்டுகிறோம். மாட்டிறைச்சி உண்பவர்கள் இந்துக்கள் அல்லர் என்று அவர்கள் கூறும்போது, இந்துக்கள், அதிலும் குறிப்பாகப் பார்ப்பனர்கள் மாட்டிறைச்சியை, பசு இறைச்சியை உண்டு வந்ததைப் பற்றி அண்ணல் அம்பேத்கர் ஆழ்ந்த புலமையோடு எடுத்துக்காட்டியுள்ள ஆதாரங்களை முன்வைக்கிறோம். பெண்களின் கற்பைப் பற்றிப் பிற்போக்குவாதிகள் பேசும் போது, அது எப்படி ஆணாதிக்கத்தோடு சம்பந்தப்பட்டது என்பதை விளக்குகிறோம்.

 எனினும், பண்பாட்டின் இருத்தலுக்கு அறிவார்ந்த சிந்தனை மட்டும் போதுமானதல்ல; பண்பாடு என்பது மக்களின், சமுதாயத்தின் பொருளாயத வாழ்வுடன் தொடர்புடையது. மக்களின் ஜனநாயக உரிமைகள் என்பன வெறும் மனம் சார்ந்தவையல்ல; மாறாக, அவர்களது அன்றாட வாழ்க்கையை உத்தரவாதம் செய்யும் பொருண்மைக் கூறுகள். ஜனநாயக உரிமைகள் என்பன கூட்டம் கூடும் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பன மட்டுமல்ல; அவை பரந்துபட்ட மக்களின் வாழ்வாதரத்தை, கண்ணியமான வாழ்க்கை முறையை, உயரிய வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்யக்கூடியவை; மேற்சொன்னவற்றை உறுதி செய்கிறவற்றையும் அவற்றை மறுக்கின்றவற்றையும் வாயால், எழுத்தால், ஓவியத்தால், இசையால், நாடகத்தால் வெளிப்படுத்துவதையே நாம் கருத்துச் சுதந்திரம் என்று பொதுவாகப் புரிந்து கொள்கிறோம். ஜனநாயக நெறியோ, ஜனநாயக உணர்வோ நமது சாதிய சமுதாயத்தில் இல்லை; அரசியல் வாழ்க்கையிலும் இல்லை; கல்வி முதலிய பண்பாட்டுத் துறையிலும் இல்லை. இவற்றை ஜனநாயகப்படுத்துவதோடு தொடர்புடையதுதான் பண்பாடு.

ஆதிக்க சாதிகளிடையே ஜனநாயக சக்திகளை வளர்த்தெடுப்பது; மத நம்பிக்கை உள்ளவர்களிடையே மனிதநேய உணர்வை வளர்ப்பது;  மத நம்பிக்கை வேறு, இந்துத்துவம் வேறு என்பதை அவர்களிடம் விளக்குவது; பாசிசத்தை எதிர்க்க முன்வருவோர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் தேவையற்ற கருத்துப் போர் நடத்துவதற்கு முன்னுரிமை தராமல், அவர்களை பாசிச எதிர்ப்புப் பொது மேடையொன்றுக்குக் கொண்டு வருவது; அறிவுசார்ந்த, பொறுமையும் சகிப்புணர்வும் கொண்ட விவாதங்களுக்குள்ள பலத்தை சார்ந்து நிற்பது; பாசிசம் என்பது வெறும் கருத்துநிலை சார்ந்தது அல்ல, அது முதலாளித்துவ, கார்ப்பரேட் நலன்களோடும், இழந்துபோன சமூக மேலாண்மையை மீட்டெடுக்க விரும்பும் வருணாசிரம தர்மவாதிகளின் நலன்களோடும் சம்பந்தப்பட்ட பொருளாயத சக்தி என்பதை மக்களுக்கு எடுத்துரைப்பது; தொழிலாளர், விவசாயிகள் அமைப்புகளிலும்கூட நிலவும் சாதிய மனப்பான்மையையும் ஆணாதிக்க மனப்பாங்கையும் போக்க முயல்வது; தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகப் போராடுவது;  எல்லா சாதிகளிலுமுள்ள சுரண்டப்படும் மக்கள் பிரிவுகள் அனைத்துக்குமான பொது எதிரியே பாசிசம் என்பதை விளக்குவது; நமது நாட்டின் பண்பாடு என்பது  -  உண்ணும் உணவு, உடுக்கும் உடை, கேட்கும் இசை, நடத்தை முறை முதலியன அனைத்தும் -  பல்வேறு பண்பாடுகளின் கலவை என்பதை எடுத்துக் கூறுவது; எல்லாவற்றுக்கும் மேலாக,  பொருளாதாரத் தளத்தில் பாசிச-கார்ப்பரேட்-பார்ப்பன நலன்களுக்கு எதிராகப் போராடும் சக்திகளுடன் ஒன்றிணைந்து அவர்களது கருத்தாயுதமாக விளங்குவது  -  இவை  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கடமைகளிற் சில என்று கூற விரும்புகிறேன். இந்தக் கடமைகளை ஆற்றுவதற்கு மார்க்ஸியமும் அம்பேத்கர் சிந்தனையும் பெரியார் கருத்துகளும் வழிகாட்டட்டும்.

தோழர்களே!
மிகச் சிறந்த எழுத்தாளர்கள், புனைவிலக்கியவாதிகள், கட்புல, இசைக் கலைஞர்கள் உங்கள் அணிகளில் இருக்கின்றார்கள். நமது எழுத்துகள் உழைக்கும் மக்களை, குடும்பப் பெண்களைச் சென்றடைகின்றனவா? அவற்றின் வாசகர்கள் கிட்டத்தட்ட எல்லோருமே படித்த மத்திய வர்க்கத்தினர்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மத்தியதர வர்க்கத்தினரிடமிருந்து நமக்கான முற்போக்கு அறிவாளிகள், கலைஞர்கள் கிடைக்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. எனினும்  எழுத்தைவிட இசையும் நாடகமுமே பரந்துபட்ட மக்களைச் சென்றடையக்கூடியவை என்பது எனது கருத்து. மாணவர்கள், இளைஞர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துங்கள். அறிவியல் இயக்கத்தைப் புதுப்பித்து அதனைப் பரவலாக்குங்கள். ஏனெனில் இந்துத்துவ பாசிசமும் இந்துத்துவம் என்று சொல்லிக்கொள்ளாத தமிழக பாசிசமும் இளம் உள்ளங்களின் மீது மிகுந்த கவனம் குவிக்கின்றன. முற்போக்கான, ஜனநாயக, புரட்சிகர இசையை  -  தேவைப்பட்டால் இளம் தலைமுறையினர் விரும்புகின்ற நவீன இசைக்கருவிகளின் துணையையும் கொண்டு  -  வளர்த்தெடுங்கள். முக நூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளத்தை சுய-மோகத்துக்கான, சுய-விளம்பரத்துக்கான, வம்பளப்புகளுக்கும் அவதூறுகள் பரப்புவதற்கும், வெற்று அரட்டை அடிப்பதற்கும் பயன்படுத்தாமல், அறிவியல், முற்போக்கு அரசியல், பொருளியல், சமூகவியல் கருத்துகளைப் பரப்புவதற்கும் ஜனநாயக, முற்போக்குச் சக்திகளை அணிதிரட்டுவதற்குமான சாதனமாகப் பயன்படுத்துமாறு மாணவர்களையும் இளைஞர்களையும் ஊக்குவியுங்கள்.

பாசிசத்துக்கு எதிராகப் போராடித் தம் இன்னுயிரை இழந்த எத்தனையோ கம்யூனிஸ்ட், புரட்சிகரக் கலைஞர்களை நினைவுகூர்வோம். அவர்களது சர்வதேச உணர்வு நமக்கு உத்வேகத்தைத் தரட்டும். அத்தகைய கலைஞர்களில் ஒருவரின்  -  1973இல் சிலியில் ஸால்வடோர் அயெண்டேவின் ஆட்சியை சிஐஏவின் எதிர்ப்புரட்சி கவிழ்த்த பிறகு கொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களில் ஒருவரான புரட்சிப் பாடகர் விக்டர் ஹாராவின் பாடலை -  சாண்டியாகோ விளையாட்டு மைதானத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த அவர் கைகால் எலும்புகள் முறிக்கப்பட்டு, மின்சாரம் பாய்ச்சப்பட்டு, சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்   அவர் பாடிய கடைசிப் பாடல்களிலொன்றைக் -  கேட்குமாறு வேண்டுகிறேன். ‘அறிக்கை’  (பிரகடனம்) எனப் பெயரிடப்பட்ட இந்தப் பாடலின் தமிழாக்கத்தையும் தருகிறேன்: 

பாடுவது எனக்குப் பிரியமானது என்பதால்
நான் பாடுவதில்லை.
என் குரலழகை வெளிக்காட்டுவதற்காகவும்
பாடுவதில்லை.
நான் பாடுவதோ என் கிதார் இசைக்கின்ற உண்மைகளுக்காக.
ஏனெனில் எனது கிதாரின் இதயம் என் மண்ணின் இதயம்தான்.
வீரர்களையும் மடிந்துகொண்டிருப்பவர்களையும்
ஆசீர்வதிக்கும் புனித நீர் போல
மென்மையாகப் பறந்து செல்லும் எனது கிதார் புறா போன்றது.
ஆம், வயெலெட்டா· கூறுவது போல எனது பாடலுக்கு ஒரு குறிக்கோள் உண்டு
ஆம், எனது கிதார் ஒரு பாட்டாளிதான்
ஒளிமிக்க்தாய் வசந்தகால நறுமணம் கமழ்வதாய்.
எனது கிதார் கொலையாளிக்கு அல்ல
பேராசையும் அதிகார வெறியும் கொண்டவருக்கல்ல.
எனது கிதார் உழைக்கும் மக்களுக்கே
நாளைய உலகுக்காக உழைக்கும் மக்களுக்கே.
ஏனெனில், ஒரு பாடல் பொருள் கொள்வது
அதன் இதயத் துடிப்பு வலுவானதாக இருக்கும்போதுதான்;
அந்தப் பாடலைப் பாடிக் கொண்டே
மடிகின்ற ஒருவனால் அது பாடப்படும்போதுதான்.
நான் புகழுக்காகப் பாடுவதில்லை,
அந்நியர்கள் என் இசை கேட்டு அழுவதற்காகப் பாடுவதில்லை
நான் பாடுவதோ இந்தவொரு சின்ன நாட்டிற்காக
குறுகலான, ஆனால் மிகவும் ஆழமான இந்த நாட்டிற்காக.
இந்தப் பாடல் எப்போதுமே புதிய பாட்டு இயக்கம்தான்.

தோழர்களே!
பாசிசத்துக்கு எதிரான போராட்டம் மிகக் கடுமையானது. இந்தப் போராட்டத்தில் எத்தனையோ இழப்புகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். எனினும், ஒன்றை மறவாதீர்கள். பாசிசம் என்பது எப்போதுமே பொய்களின் மீது கட்டப்பட்டதுதான். வெள்ளை இனவெறிக்கும் அமெரிக்காவின் போர்வெறிக்கும் எதிராகப் போராடித் தமது இன்னுயிரை ஈந்த மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கூறியது போல    ‘NO LIE CAN LIVE FOREVER; WE SHALL OVERCOME!’. எந்தப் பொய்யும் என்றென்றும் நிலைத்திருக்க முடியாது. நாம் வென்று வருவோம்.
வெற்றி அல்லது வீர மரணம்!
இன்குலாப் ஜிந்தாபாத்!!
புரட்சி ஓங்குக!!!



· வயெலெட்டா பார்ரா (Violetta Parra :1917-1967) : சிலி நாட்டைச் சேர்ந்த இசைக் கலைஞர்; நாட்டார் இசை மரபை வளர்த்தவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...