சூரியனின் கடைசி கிரணம் முதல் சூரியனின் முதல் கிரணம் வரை
நான் சமீபத்தில் வாசித்தவற்றில் மிகவும் பிடித்த புத்தகம் சூரியனின் கடைசி கிரணம் முதல் சூரியனின் முதல் கிரணம் வரை என்கிற நாடகப் பனுவல். சுரேந்திர வர்மா என்பவரால் 1978 ஆம் ஆண்டு எழுதப்பட்ட அந்த நாடகத்தை சரோஜாவும் வெ.சாமிநாதனும் தமிழில் மொழிபெயர்த்து க்ரியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இரண்டு பதிப்புகளை கண்டுள்ளது. ( நான் இப்போதுதான் படித்திருக்கிறேன்)

மல்ல நாட்டின் அரசன் ஒக்காக். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்ட அவன் குருகுலத்தில் தங்கி பயின்றவன். கூச்ச சுபாவமும் உள்ளொடுங்கும் தன்மையும் ஒதுங்கும் மனநிலையும் கொண்டவன். அரசனாக முடிசூட்டப்பட்டதற்குப் பிறகு அவனுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. பெண்ணைப் பற்றிய நினைப்பு தனக்கு உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ எத்தகைய கிளர்ச்சியையும் உருவாக்கவில்லை என்று அரண்மனை வைத்தியரிடம் தெரிவிக்கும் ஒக்காக் தனக்கு திருமணத்தில் நாட்டமில்லை என்கிறான். ஆனாலும் சீலவதி என்கிற ஏழைப்பெண் அவனுக்கு மணமுடிக்கப்படுகிறாள். முதலிரவில் தன் பிரச்னையை அவளிடம் முறையிடுகிறான். அவனை அவனது குறைபாட்டுடன் ஏற்றுக்கொள்கிறாள் சீலவதி. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு புதிய பிரச்னை உருவாகிறது. ராஜகுரு, முதன்மந்திரி, படைத்தளபதி ஆகியோர் மன்னனையும் அரசியையும் சந்தித்து அரண்மணையின் அடுத்த வாரீசை அறிவித்தாக வேண்டிய கட்டம் இது. அரசமரபை காப்பாற்ற வேண்டியது உங்களது கடமை என்கின்றனர். தனது இயலாமையை பரிகாசம் பண்ணுவதற்காகவே அவர்கள் இவ்வாறு வற்புறுத்துவதாக எண்ணி அரசன் குமைகிறான். ஒரு வாரீசை உருவாக்குவதற்கு அரசனுக்கு முடியாத பட்சத்தில் அரசியானவள் மாற்றுக்கணவன் ஒருவனை தேர்ந்தெடுத்து வாரீசை பெற்றுத்தருவதுதானே வழக்கம் என்கிறார்கள். ஏற்க மறுக்கும் தம்பதிகளிடம் புராணங்களிலும் இதிகாசங்களிலும் அண்டை நாடுகள் பலவற்றிலும் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்ட ஓர் ஏற்பாடுதான் இது  என்று கூறி இணங்கவைக்கிறார்கள். முரண்டு பிடிக்கும் அரசியிடம், இப்போது நீ அரசி அல்ல, கடமைப்பாவை. அர்ச்சுனனின் கண்ணுக்கு மீனின் கண் என்ற இலக்கு மட்டுமே தெரிந்தது போல, அரண்மனைக்கு ஒரு வாரீசைப் பெற்றுத்தர வேண்டும் என்கிற இலக்கை மட்டுமே மனதில் இருத்திய கடமைப்பாவை என்கின்றனர்.  

நாடு முழுவதற்கும் அறிவிப்பு செய்து மல்ல நாட்டு ஆண்கள் அனைவரும் அரண்மனைக்கு வெளியே இருக்கும் திடலில் குவிக்கப்படுகிறார்கள். அந்த நாளில் சூரியனின் கடைசிக்கிரணம் மறையும்போது அரண்மனையை விட்டு அரசி வெளியேறுவதிலிருந்து நாடகம் தொடங்குகிறது. அவர்களில் ஒருவரையும் அரசிக்குப் பிடிக்கவில்லை. இறுதியில் தாமதமாக வந்துச் சேர்கிற பிரசாதன் என்பவனுக்கு வெற்றிமாலை சூட்டி அவள்  மாற்றுக்கணவனாக தெரிவு செய்கிறாள். அரசனுக்கு வாழ்க்கைப்பட நேர்ந்ததால் அவளால் துறக்கப்பட்ட காதலன்தான் அவன். அரண்மனைக்கு எதிரில் பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்ட மாளிகையில் அவனுடன் தங்கி  மறுநாளின் அதிகாலையில் சூரியனின் முதல்கிரணம் உதிக்கும்போது அரண்மனைக்குத் திரும்புகிறாள். சென்ற காரியம் ஜெயம் தானே என்று கேட்கிறார்கள் அரண்மனைவாசிகள். எனக்கு நீங்கள் தருவதாகச் சொன்ன மூன்று வாய்ப்புகளையும் நான் பயன்படுத்திக்கொள்ளப் போகிறேன் என்கிறாள். அரண்மனை அலறுகிறது. அவள் சற்றும் பதற்றமின்றி தன்னை, தன் உடலை, இதுகாறும் அடக்கிவைத்திருந்த இயல்பான உணர்ச்சிகளை இந்த இரவில் தான் மீட்டுக் கொண்டதாக கூறுகிறாள். பாலினச் சமத்துவம், உடலரசியல் என்றெல்லாம் இன்று பேசப்படும் அரசியலின் உச்சநிலையை அவள் பேசுகிறாள். அரசனும் அவனது அணியினரும் அவளது கேள்விகளுக்கு பதிலற்று   நிற்பதோடு நாடகம் முடிகிறது. 

எழுத்தாளர்களும் கலைஞர்களும் யாரையும் இழிவுபடுத்துவதற்காக தங்களது ஆக்கங்களை உருவாக்குவதில்லை. ஏற்கனவே இருந்த நிலைமைகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் சமூகம் கடந்துவந்த மாற்றங்களை கவனப்படுத்துகிறார்கள். வரலாற்றை அது எவ்வாறு இருந்ததோ அவ்வாறே ஏற்றுக்கொண்டு கடக்கத் துணிகிறவர்கள் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்தரத்தையும் கடந்தகாலத்தையும் கண்டு அஞ்சமாட்டார்கள்.  அவ்வாறான உயர்ந்த ஜனநாயகப்பண்பை நாம் வெளிப்படுத்த வேண்டிய காலமிது. 

- ஆதவன் தீட்சண்யா 
நன்றி: விகடன், இன்று ஒன்று நன்று


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக