ஞாயிறு, ஜூன் 28

நெருக்கடிநிலை, சங் பரிவாரம், சுப்பிரமணியன் சுவாமி - எஸ்.வி.ராஜதுரை

சுதந்திர இந்தியாவில் முதல் உள்நாட்டு நெருக்கடி நிலையை காங்கிரஸ் அரசாங்கத்தின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அறிவித்த நாற்பதாண்டு நிறைவையொட்டி 2015 ஜூன் 25,26,27ஆம் நாள்களில் ‘தி ஹிந்து’ தமிழ் நாளேட்டில் தொடர்ச்சியான கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஜூன் 25 இதழின் 9 ஆம் பக்கத்தில் ‘நெருக்கடி நிலையின் 40 ஆண்டுகள்- கருப்பு நினைவுகள்’ என்ற கட்டுரைக்குக் கீழே ‘நெருப்பாற்று நாயகர்கள்’ என்ற தலைப்பில் நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடியவர்கள் என்று சில அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அங்கு பத்திரிகையாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் ராம்நாத் கோயங்காவும் ‘சோ’ ராமசாமியும் ஆவர். அரசியல் தலைவர்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளவர்களில் மு.கருணாநிதி, ஜார்ஜ் ஃபெர்னாண்டெஸ் ஆகியோரை மட்டுமின்றி எல்.கே.அத்வானியையும்கூட ‘பத்திரிகையாளர்கள்’ என்று கூறமுடியும். அந்த மூவரும்கூட பத்திரிகைகளை நடத்தியவர்கள்தாம். அதிலும் குறிப்பாக, நெருக்கடி நிலைக்கால நெருக்கடிகளை சமாளித்து, ‘முரசொலி’ நாளேட்டை நடத்திச் சென்ற மு.கருணாநிதியின் சாதுரியத்தை விளக்கத் தனியொரு நூலே எழுதவேண்டும்.

தமிழகத்தில் நெருக்கடிநிலைக்கு எதிரான உறுதியான, முரணற்ற எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்தி வந்த காலஞ்சென்ற இரா.செழியனைப் பற்றிய குறிப்பு ஏதும் ‘தி ஹிந்து’ தமிழ் நாளேட்டில் வெளிவந்த கட்டுரைகள் எதிலும் காணப்படாத நிலையில், சென்னை சிறையில் அடைக்கப்பட்ட திமுகவினர் மீதும் திராவிடர் கழகத்தினர் மீதும் நடத்தப்பட்ட சித்திரவதைகளைக் கண்டனம் செய்து சென்னை மத்திய சிறையிலிருந்த கைதிகள் போராடும்படி செய்த நக்ஸலைட் தலைவர்களின் பெயர்களை ( ஏ.எம்.கோதண்டராமன் போன்றோர்)  யாரும் குறிப்பிடாததில் வியப்பொன்றுமில்லை. அதேபோல, நெருக்கடி நிலையை முழுமூச்சாக ஆதரித்ததுடன், எங்கே தமது கட்சியைப் பிரிவினைவாதக் கட்சி என்று இந்திரா காந்தி அரசாங்கம் சொல்லிவிடுமோ என்று அஞ்சி அதனை ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று மாற்றிய எம்ஜிஆரின் ‘துணிச்சலான’ செயலைப் பற்றியும் யாரும் குறிப்பிடவில்லை.

நெருக்கடிநிலைக்காலத் தணிக்கை முறைகளுக்குத் தாக்குப்பிடித்து, இந்திரா காந்தியின் சர்வாதிகார ஆட்சியை மறைமுகமாக எதிர்த்து நின்ற ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமப் பத்திரிகைகளின் அதிபர் ராம்நாத் கோயங்கா, இந்திரா காந்தி 1980இல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதும் அவருடன் சமரசம் செய்துகொள்ள வேண்டியவரானார். ஏனெனில், மும்பை (அப்போது பம்பாய்) நகரில் நாரிமன் பாயிண்ட் என்னுமிடத்திலுள்ள ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ அடுக்குமாடிக் கட்டடம் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டது என்று கூறி அப்போது மகாராஷ்டிராவில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அறிவித்ததுதான்.

இந்திரா காந்தி  நெருக்கடிநிலை காலத்தில் கொண்டு வந்த ‘மிசா’ சட்டத்தைவிடப் பன்மடங்கு கொடுமையான சட்டங்கள் -  குண்டர் சட்டம், தடா, பொடா, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம்  போன்றவை - எதனையும் எதிர்த்து ‘சோ’ ராமசாமி ஒரு சொல்கூடப் பேசியதில்லை என்பது ஒருபுறமிருக்க, அடிப்படையான ஜனநாயக மரபுகளைத் துச்சமாக மதிக்கும் ஜெயலலிதாவையும் நரேந்திர மோடியையும் உறுதியாக ஆதரித்து வந்திருக்கிறார். எம்ஜிஆர் ஆட்சியை விமர்சித்து ‘துக்ளக்’ இதழில் ஒரு சில கட்டுரைகள் எழுதியதன் காரணமாக, தமிழக சட்டமன்றத் தலைவராக இருந்த பி.எச்.பாண்டியன் மிரட்டிய போது, ராஜிவ் காந்தியை நாடினார். ஆக, அவரது காங்கிரஸ் எதிர்ப்பும்கூட உறுதியாக இருந்ததில்லை.

இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடிநிலையை எதிர்த்த  ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘துக்ளக்’ ஆகியவற்றின் தரத்திற்கும்கூட ‘ தி ஹிந்து’ குழுமத்தால் உரிமை கொண்டாட முடியாது.  நெருக்கடிநிலை காலத் தணிக்கையாளர்களின் விதிமுறைகளுக்கு முழு ஒத்துழைப்புத் தந்தது ‘தி ஹிந்து’.

நெருக்கடிநிலையைத் துணிச்சலுடனும் உறுதி தளராமலும் முரணற்ற வகையிலும் எதிர்த்த சக்திகளாகப் பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இப்போது உரிமை கொண்டாடி வருகின்றன. இந்திரா காங்கிரஸைத் தோற்கடிப்பதற்காக உருவாக்கப்பட்ட கதம்பக் கட்சியான ஜனதா கட்சியில் இருந்த சோசலிஸ்டுகளும், மதசார்பற்ற சக்திகளும்  அந்தக் கட்சி பிளவுண்ட பிறகு  வெவ்வேறு முகாம்களுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டதால், நெருக்கடி நிலையை எதிர்ப்பதில் உண்மையான உறுதியைக் காட்டிய அவர்களது வரலாற்றை எழுதுவதற்கு ஆள் இல்லாமல் போய்விட்டது.

குஜராத்திலும் பிஹாரிலும் இருந்த  காங்கிரஸ் அரசாங்கங்களின் ஊழல்களை எதிர்த்து ஜெயப்ரகாஷ் நாராயண்  தொடங்கிய போராட்டம் வெகுமக்கள் தன்மையைக் கொண்டிருந்ததால், அதில்  சங் பரிவாரத்தினர் எளிதாக   ஊடுருவினர். சுதந்திரப் போராட்டத்தில் ஜெயப்ரகாஷ் நாராயண் வகித்த முக்கியப் பாத்திரம், காங்கிரஸ் கட்சிக்குள் சோசலிசப் போக்கைப் பிரதிநிதித்துவம் செய்ததில் அவருக்கிருந்த பங்கு, சுதந்திரத்திற்குப் பின் எவ்வித அரசியல், அரசாங்கப் பதவியையும் நாடாமல் இருந்த அவரது  மனப்பாங்கு ஆகியன அவருக்கு இந்தியாவில்- குறிப்பாக வட மாநிலங்களில்- பெரும் செல்வாக்கை ஈட்டித் தந்திருந்தன. எனவே அவரது ஆளுமையைத் தமக்கான அரசியல் நிழலாகப் பயன்படுத்திக் கொண்ட சங் பரிவாரத்தின் உண்மையான முகத்தை அவர் காலங்கடந்தேனும் புரிந்து கொள்ளத் தவறவில்லை.

1974இல் ஜார்ஜ் ஃபெர்னாண்டெஸ் தலைமையில் நடந்த அனைத்திந்திய ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம், ஊழலுக்கு எதிராக ஜெயப்ரகாஷ் நாராயண் நடத்திய இயக்கம் ஆகியன இந்திரா காந்தி நெருக்கடிநிலையை அறிவிப்பதற்கான முக்கியக் காரணங்களாக இருந்தன.  ஜெயப்பிரகாஷ் நாராயண் தொடங்கிய நவ் நிர்மாண் இயக்கத்தில் ஊடுருவி, மக்கள் நலன் காப்பவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்ட சங் பரிவாரத்தினர்,  நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டவுடன் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது ‘வீரப் பட்டத்தை’ அவர்கள் பெறுவதற்கு வழிகோலியது. அதாவது இந்திய அரசியலின் முதன்மை நீரோட்டத்திற்கு சங் பரிவாரத்தினர் வந்து சேர்வதற்கு இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடிநிலைதான் உதவியது! எனவே அவர்கள் இந்திரா காந்திக்குத்தான் எப்போதும் நன்றி சொல்லக்கூடியவர்களாகவே இருக்க வேண்டும்.

இந்திரா காந்தியின் ‘நெருக்கடிநிலை’க்கு எதிர்ப்புக் காட்டியவர்கள் யாராக இருந்தாலும்,  அவர்களை ‘வீரர்களாக’ப் பார்க்கும் மனோபாவம், இந்திரா காந்தியின் சர்வாதிகாரத்தை எதிர்த்த மக்கள் பிரிவினரிடம்  இருந்து வந்தது.  அதனால்தான் எங்கள் தலைமுறையைச் சேர்ந்த பலர் சுப்பிரமணியன் சுவாமியை பெரும் வீரராகக் கருதினர்.  நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டிருந்த காலத்தில்,   சுப்பிரமணியன் சுவாமி என்னும் ஹார்வர்ட் பல்கலைக் கழகப் பட்டதாரி மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார் என்பதுதான் பலருக்கும்  தெரிந்திருந்ததேயன்றி அவர் அப்போது ஆர்எஸ்எஸ். அமைப்பின் செல்லப்பிள்ளைகளில் ஒருவராக இருந்தார் என்பது அல்ல. நெருக்கடிநிலை காலத்துக்  கெடுபிடிகளையும் பாதுகாப்பு விதிகளையும் மீறி அவர் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்று, அங்கு இந்திரா காந்தியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் பிரசாரம் செய்துவிட்டு, இந்தியாவுக்குத் திரும்பி வந்து, மாநிலங்களவைக் கூட்டமொன்றில் கலந்துகொண்டதும், அப்போது மாநிலங்கள் அவைத் தலைவராக இருந்த குடியரசுத் துணைத்தலைவர் பி.டி. ஜாட்டி, இறந்துபோன நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் சிலர் பற்றிய இரங்கலுரையை ஆற்றிக் கொண்டிருந்தபோது, குறுக்கிட்டு ‘இறந்தவர்கள் பட்டியலில்  ஜனநாயகத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு, அவையை விட்டு வெளியேறியதுடன் மட்டுமின்றி, அரசு அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு மீண்டும் அமெரிக்காவுக்குக் சென்றதும், அவர் பெரும் சாகசவாதி என்னும் எண்ணத்தைப் பலரது மனத்தில் ஏற்படுத்தியிருந்தன. அன்று சோவியத் யூனியனின் பக்கம் கூடுதலாக சாய்ந்திருந்த இந்திரா காந்திக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்களை அமெரிக்கா ஊக்குவித்து வந்தது என்றும், இந்திய அதிகாரிவர்க்கத்தின் உயர் பிரிவினர் சிலரின் தொடர்பும் ஒத்துழைப்பும் இல்லாதிருந்தால் சுப்பிரமணியன் சுவாமியால் அத்தகைய ‘சாகசங்களை’ நிகழ்த்தியிருக்க முடியாது என்றும் இடதுசாரி வட்டரங்களில் மட்டுமே பேசப்பட்டு வந்தது. தமது அமெரிக்கத் தொடர்புகளைப் பற்றி சுப்பிரமணியன் சுவாமியே பின்வரும் பத்திகளில் குறிப்பிடப்படும் கட்டுரையொன்றில் விரிவாகக் கூறியுள்ளார். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அதிகாரிவர்க்கத்தின் உயர்நிலைகளிலுள்ள, செல்வாக்குள்ள சிலரின் தொடர்புகள் சுவாமிக்குத் தொடர்ந்து கிடைத்து வரும் போலும்.
ஜனதா கட்சி உடைந்து அதிலிருந்த ஆர்எஸ்எஸ். சக்திகள் (ஜன் சங்) பின்னர் பாஜக என்னும் புதிய அவதாரத்தை எடுத்தபோது, அதில் சுப்பிரமணியன் சுவாமி சேரவில்லை. ஆட்களே இல்லாத ஜனதா கட்சியை நடத்திவந்த அவரால், வி.பி. சிங் ஆட்சியை பாஜக கவிழ்த்தப் பிறகு    56 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே கொண்டிருந்ததும் ராஜிவ் காந்தி காங்கிரஸால் ‘வெளியிலிருந்து’ ஆதரிக்கப்பட்டு வந்ததுமான  சந்திரசேகர் அரசாங்கத்தில் மிக முக்கியப் பொறுப்பு வகிக்க முடிந்தது. தமிழ்நாட்டில் ஒரு நகராட்சி மன்றத் தலைவர் பதவியைப் பிடிப்பதற்கான வலு கூட இல்லாத ஒரு கட்சியின் தலைவராக இருந்த அவரால் திமுக அரசாங்கத்தைக் கவிழ்க்கவும் ஜெயலலிதா மீது வழக்குத் தொடரவும் முடிந்திருக்கிறது.

மேலும், மதச்சார்பற்ற, இந்தியாவின் பன்முகத்தன்மையை ஆதரிக்கின்ற ஜனநாயக வாதியாகவும் தம்மைக் காட்டிக்கொள்ளும் முயற்சியையும் அவர் மேற்கொண்டிருக்கிறார். அது மட்டுமின்றி,  நெருக்கடிநிலையைத் தாங்கள்  சங் பரிவாரத்தினர்  உறுதியாக எதிர்த்ததாக உரிமை பாராட்டிக் கொள்வது நேர்மையற்ற செயல் என்றும்கூட அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுற்றபோது நெருக்கடிநிலையை உறுதியாக எதிர்த்த வீரர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ள பாஜக- ஆர்எஸ்எஸ். சக்திகள் பெரும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது சுப்பிரமணியன் சுவாமி எழுதிய ‘நெருக்கடி நிலையின் கற்றுக்கொள்ளப்படாத கொள்ளாத பாடங்கள்‘ (Unlearnt Lessons of the Emergency http://www.thehindu.com/2000/06/13/stories/05132524.htm ) என்னும் கட்டுரையை  அவருக்கு எப்போதும் மிகை முக்கியத்துவம் தந்து வரும் ‘தி ஹிந்து’ ஆங்கில நாளேடு 13. 06.2000 அன்று வெளியிட்டது. அந்தக் கட்டுரையில் அவர் கூறிய முக்கிய விஷயங்கள் பின்வருமாறு: 

1.ஆர்எஸ்எஸ்., பாஜக தலைவர்களில் பெரும்பாலோர் நெருக்கடிநிலைக்கு எதிரான போராட்டத்திற்குத் துரோகம் இழைத்தனர். புனெவிலுள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆர்எஸ்எஸ். தலைவர் பாலாசாஹெப் தேவ்ரஸ்,  தமது அமைப்பை ஜெயப்ரகாஷ் நாரயணின் இயக்கத்திலிருந்து விலக்கிக் கொள்வதாகவும், இந்திரா காந்தியின் 20 அம்சத் திட்டத்திற்கு ஆர்எஸ்எஸ். முழு ஒத்துழைப்புத் தருவதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறி பல மன்னிப்புக் கடிதங்களை இந்திரா காந்திக்கு அனுப்பினார். ஆனால் அவற்றில் ஒன்றுக்குக்கூட இந்திரா காந்தி பதிலளிக்கவில்லை.  இந்தத் தகவல்கள் மகாராஷ்டிரா சட்டமன்ற அவைக்குறிப்புகளில் உள்ளன. வேறோரு சிறையில் இருந்த வாஜ்பாயியும்  இந்திரா காந்திக்கு மன்னிப்புக் கடிதங்கள் எழுதினார். அவற்றுக்கு செவிமடுத்த இந்திரா காந்தி,  நெருக்கடி நிலை காலகட்டத்தின் பெரும்பகுதியை வாஜ்பாயி பரோலில் கழிப்பதற்கு ஏற்பாடு செய்தார்.  மன்னிப்புக் கடிதங்கள் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்த ஆர்எஸ்எஸ்., பாஜக தலைவர்களைப் பற்றிய விவரங்கள் அகாலிதளத் தலைவர் சுர்ஜித் சிங் பர்னாலா எழுதிய புத்தகத்தில் உள்ளன (1)

2. மாதவ்ராவ் முலெ, தத்தோபந்த் தெங்கடி, மோரோபந்த் பிங்ளெ ஆகிய மூன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்களைத் தவிர அந்த அமைப்பு முழுவதுமே இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலையை ஏற்றுக்கொண்டு அவரிடம் முழுமையாக சரணடைய முடிவு செய்திருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக, இந்திரா காந்தி 1977இல் நெருக்கடிநிலை அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடத்துவதாக அறிவித்ததால்தான், அவரிடம் முழு சரணாகதி அடையும் நிலையிலிருந்து ஆர்.எஸ்.எஸ். காப்பாற்றப்பட்டது.
இந்திரா காந்தியிடம் முழு சரணாகதி அடைய ஆர்.எஸ்.எஸ். தயாராக இருந்தது என்று சுப்பிரமணியன் சுவாமி கூறுவதை உறுதிப்படுத்தக்கூடிய தகவல்களை நம்பகத்தன்மை வாய்ந்த வரலாற்று அறிஞர் ஏ.ஜி. நூரானி வழங்குகிறார்:  இந்திரா காந்தி நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியவுடன் பதவி விலக மறுத்த இந்திரா காந்தி, பிரதமர் பதவியிலிருப்பவர்களுக்கு தேர்தல் விதிமுறைகளிலிருந்து விதிவிலக்குத் தரும் வகையில் அரசியலைப்புச் சட்டத்திற்குத் திருத்தம் கொண்டு வந்து அதை நாடாளுமன்றத்தில் தமக்கிருந்த பெரும்பான்மை பலத்தைக் கொண்டு நிறைவேற்றச் செய்தார். அந்தத் திருத்தச் சட்டம் செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றமும் தீர்ப்புக் கூறியது. அந்தத் தீர்ப்புக்குப் பாராட்டுத் தெரிவித்து இந்திரா காந்திக்குக் கடிதம் எழுதிய தேவ்ரஸ், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீதான தடையை நீக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.  ஜெயப்பிரகாஷ் நாராயண் நடத்திய இயக்கங்களுக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்புக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், நாட்டின் மேம்பாட்டிற்காக இலட்சக்கணக்கான ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் சேவையை பிரதமருக்குத் தருவதாக 1976ஜூலை 16இல் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதத்தில் கூறிய தேவ்ரஸ், பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் உறவுகளை மேம்படுத்த இந்திரா காந்தி மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்று எழுதினார்.  வினோபா பாவெவுக்கு எழுதிய கடிதமொன்றில், பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையின் கீழ் நாட்டில் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியன தொடர்பாகத் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளில் ஆர்எஸ்எஸ் பங்கேற்க விரும்புவதாகக் கூறினார். தமது கடிதங்கள் அனைத்திலும் ஆர்எஸ்எஸ் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே விடுத்தாரேயன்றி நெருக்கடி நிலையை நீக்க வேண்டும் என்றோ, கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்றோ கேட்கவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரபூர்வமான ஹிந்தி ஏடான ‘பஞ்சஜன்யா’ (1975 டிசம்பர் 21) இந்திரா காந்தியின் இரண்டாவது மகன் சஞ்சய் காந்தி அரசியலில் நுழைந்ததை வெகுவாகப் பாராட்டியது.

1977இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தியும் அவரது கட்சியும் படுதோல்வி அடைந்த பிறகு, அவரை மன்னிக்கும்படியும் நெருக்கடி நிலைக் காலத்தில் அவர் செய்த தவறுகளை மறக்கும்படியும் ஜனதாக் கட்சித் தலைவர்களுக்கு அறிவுரை கூறிய  தேவ்ரஸ், இந்திரா காந்தி 1980இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், காங்கிரஸுடன் ஆர்எஸ்எஸ் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இந்திரா காந்தியிடம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் அவருடைய கட்சியுடன் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குக் கருத்துநிலை வேறுபாடுகள் ஏதுமில்லை என்றும் கூறினார். அரசியல் போக்கிரியான சஞ்சய் காந்தி மரணமடைந்தபோது, ‘தேசிய அரசியலில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியவர்” என்றும் அதற்கு அவருடைய தனிப்பட்ட பண்புகளும் ஆளுமையும்தான் காரணம்’ என்றும் கூறினார். ஆர்எஸ்எஸ். இன் அதிகாரபூர்வமான ஆங்கில ஏடு  ‘ஆர்கனைஸர்’ (1983 ஜூலை 3) இந்திரா காந்தியை ‘ ஓர் அரசியல் ஹிந்து’ என்று பாராட்டியது. தேவ்ரஸ் மட்டுமல்ல, அவருக்கு முன்பிருந்த ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கரும்கூட இந்திரா புகழ் பாடத் தயங்கியதில்லை. பங்களாதேஷ் போர் முடிந்த பிறகு 1971 டிசம்பர் 22இல் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில் “ இந்த சாதனைக்கான பெருமை பெருமளவுக்குத் தங்களுக்கே உரியது” என்று கூறினார். இந்திராவும் தமது  பதில் கடிதத்தில் எழுதினார்: “ தேச நலன் பொருட்டு காங்கிரஸ்-ஆர்எஸ்எஸ் ஒற்றுமை காக்கப்பட வேண்டும்”.   ( A.G.Noorani, The RSS and the BJP: The Division of Labour, pp 320-41).

நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் ஆர்எஸ்எஸ் மேற்கொண்ட சரணாகதிப் போக்கு பற்றி சுப்பிரமணியன் சுவாமி கூறுவதை உறுதிப்படுத்த  நேர்மை தவறாத ஆராய்ச்சியாளர் ஏ.ஜி. நூரானியின்  ஆதாரபூர்வமான கூற்றுகள் ஒருபுறம் இருக்கின்றன. மறுபுறமோ, இந்திரா காந்தி, நெருக்கடி நிலையைத் திரும்பப் பெற்றுக் கொண்டு தமது தவறுகளுக்கு மனம் வருந்துவதற்குக் காரணமாக இருந்தவர்கள் காலஞ்சென்ற காஞ்சிப்  ‘பரமாச்சாரியார்’ சந்திரசேகர சரஸவதியும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் ஆவர் என்று சுப்பிரமணியன் சுவாமி மேற்சொன்ன கட்டுரையில் கூறுவதற்கு வேறு சான்றுகள் இதுவரை யாருக்கும் கிடைக்கவில்லை! ஆக, சுவாமியின் கூற்றுப்படி நெருக்கடிநிலை போன்றவற்றை எதிர்த்து முறியடிக்க மக்கள் போராட்டங்கள் ஏதும் தேவையில்லை; ‘துறவி’களும் தத்துவவாதிகளும் மட்டுமே போதும்!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் இருந்த 2000ஆம் ஆண்டில் எழுதப்பட்டதுதான் மேற்சொன்ன கட்டுரை. அதில் சுப்பிரமணியன் சுவாமி கூறுகிறார்: “ஜனநாயகத்தைக் காப்பதில் 1975-77இல் இருந்ததைவிட இன்று நாம் மேலும் பலகீனமான நிலையில் இருக்கிறோம்”. அதற்கு இரண்டு காரணங்களைக் கூறுகிறார்: சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்த சாதி-சார்பற்ற தலைவர்கள் யாரும் இப்போது இல்லை என்பது ஒரு காரணம். “ஊழியர்களை அடித்தளமாகக் கொண்ட ஒரு பாசிஸ்ட் அமைப்பு அதிகாரத்தின் நெம்புகோல்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இன்னொரு காரணம்… இந்த அமைப்பு, பாதுகாப்பாற்ற மதத்தொண்டர்களைக்கூடக் (missionaries) கொல்லத் தயங்காத லும்பன்களைக் கொண்ட முன்னணி அமைப்புகளைத் தோற்றுவித்துள்ளது”

இந்திய ஜனநாயகத்துக்குக் குழிபறிக்கும் நோக்கத்துடன்தான், இந்திய அரசமைப்புச் சட்டம் முழுவதையும் மாற்றியமைப்பதற்கு பாஜக முயற்சி செய்துவருகின்றது என்று இக்கட்டுரையில் எழுதும் சுவாமி, அந்தக் கட்சி வரலாற்றைத் திருத்தி எழுதத் தொடங்கிவிட்டது என்றும் அதனுடைய சகோதர அமைப்புகளான வி.எச்.பி., பஜ்ரங் தளம் ஆகியன சமுதாயத்தின் நுண் மட்டங்களில் அச்சந்தரக்கூடிய பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துள்ளன என்றும் கூறுகிறார். இப்படிப்பட்ட பாஜகவால் ஜனநாயகத்தைக் காப்பது பற்றி எப்படிப் பேச முடியும் என்ற கேள்வியையும் எழுப்புகிறார். 

இந்திய சமுதாயத்தை ஒரேபடித்தன்மையாக்குதல் என்பது மட்டுமீறிச் செல்கையில், அது ஜனநாயகத்துக்கு ஆபத்தானதாகிவிடும் என்று தமது கட்டுரையைத் தொடங்கும் அதே சுவாமிதான், அண்மைக்காலமாக முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறிக்கவேண்டும் என்பது போன்ற ‘ஜனநாயகக்’ கோரிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

நெருக்கடிகாலக் கொடுமைகளின் வரலாற்றைச் சொல்வதில் ‘தி ஹிந்து’ குழுமத்தினருக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், குறைந்தபட்சம், சுப்பிரமணியன் சுவாமி 2000த்தில் எழுதிய கட்டுரையைத் தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும். அல்லது அதன் ஆங்கில மூலத்தை மறுவெளியீடாவது செய்ய வேண்டும்.




[1] பர்லானா, பின்னாளில் தமிழ்நாடு ஆளுநராக இருந்தவர்; அகாலிதளம் கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாகவே பாஜகவின் அரசியல் கூட்டாளியாக இருந்துவருகின்றது. எனவே அகாலி தளத்தினராலும் நெருக்கடிநிலைக்காலத்தில் சங் பரிவாரத்தின் செயல்பாடுகளைப் பற்றி எழுத முடியாது.

1 கருத்து:

  1. நெருக்கடி நிலையை அன்று ஆதரித்துவிட்டு இன்று தாங்களும் எதிர்த்ததாக முகம் காட்டுவோரை அம்ப்லப்படித்தும் நல்ல பதிவு!

    பதிலளிநீக்கு

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...