இலங்கையின் "சமகாலம்" இதழின்தோழர்.பெ.முத்துலிங்கம் எழுதியுள்ள அறிமுகம்
இவ்வருட
ஜனவரி மாதம் தமிழகத்தில் நடாத்தப்பட்ட புத்தகக் கண்காட்சியின் போது வைக்கப்பட்டிருந்த
நாவலொன்றின் பெயர் வாசகர் மத்தியில் பெரும்
சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நாவலின் பெயரைக் கேட்டவுடன் எனக்குள்ளும் அந்நாவலை
வாங்கிவிடவேண்டும் எனும் ஆவல் தோன்றியது. இந்நாவலின் படைப்பாளி யார் என அறிந்தவுடன்
அவ் ஆவால் வேட்கையாக மாறியது. “ மீசை என்பது
வெறும் மயிர்” என்பதே அந்நாவலின் பெயராகும். நாவலை எழுதியவர் தழிழகத்தின் சாதிஎதிர்ப்பு
வர்க்க எழுத்தாளரும் புதுவிசை சஞ்சிகையின் ஆசிரியருமான திரு. ஆதவன் தீட்சண்யா ஆவார்.
நாவலை வாசித்தபோது அது இலங்கை வாழ் அண்மைய
இந்திய வம்சாவழி மலையகத் தமிழரின் வரலாற்றை வெளிப்படுத்தும் நாவல் என்பதை அடையாளம்
காணமுடிந்தது. நாவலின் ஆசிரியர் ஆதவன் தீட்சண்யா அவர்கள் யுத்தம் நடைபெற்ற வேளை இலங்கைக்கு
இருமுறை (2008-2009)* வருகைத் தந்து மலையகம் மற்றும் வடக்கிற்கு விஜயம் செய்து இலங்கைவாழ்
படைப்பாளிகளையும் சாதாராண மக்களையும் சந்தித்து நாடு திரும்பியவராவார். இலங்கைக்கு
விஜயம் செய்யும் வரை மலையக மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் வரலாறு பற்றி பெரிதும் அறிந்திராத
ஆதவன் தீட்சண்யா கண்டியில் நடந்த இலக்கிய கலந்துரையாடலில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில்
மலையக மக்களைப் பற்றி தாம் அறிந்தராமையைப்பற்றி வருத்தப்படுவதாகக் கூறியதுடன் தமிழக
மக்கள் ஈழத்தழிழரைப் பற்றிதான் பெரிதும் அறிந்துள்ளனர் எனக் கூறினார். மேலும் தமக்கு முன் வந்த தழிழகப் படைப்பாளிகள் ஏன் இம்மக்களைப்பற்றிய
உண்மை நிலையை தமிழக மக்களுக்கு அறியத் தரவில்லை என்ற கேள்வியையும் கூடவே எழுப்பியதுடன்
தான் தமிழகம் சென்றப்பின் தொப்புள் கொடி உறவினரான மலையக மக்களைப்பற்றி எழுதுவதாகக்
வாக்குறுதியளித்தார்.
இலங்கை
வாழ் அண்மைய இந்திய வம்சாவழியினரான மலையக மக்களது வாழ்நிலைப்பற்றி தமிழக மக்கள் மத்தியில்
முதன்முதல் வெளிக்கொணர்ந்தவர் தமிழக சிறுகதை
முன்னோடியான புதுமைப்பித்தனாவார். இவரது துன்பக்கேணி என்ற நீண்ட சிறுகதையே இம்மக்களைப்
பற்றி தமிழகத்தில் வெளிவந்த முதல் படைப்பிலக்கியமாகும். இதன்பின் பல வருடங்களுக்குப்பின் நா. பார்த்தசாரதி , இராஜம் கிருஸ்ணன், கோதண்டன்
முதலிய தமிழக படைப்பாளிகள் நாவல்களை வெளியிட்டுள்ளனர். இப்படைப்புகள் அனைத்தும் எழுபதுகளுக்கு
முன்னர் வெளிவந்ததுடன் இவையனைத்தும் மலையக
மக்கள் படும் துயரங்களைப் பற்றியதாக அமைந்தன. இதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப்பின்னர்
2012 இல் தமிழ்மகன் என்ற படைப்பாளியினால் வனவாசம் என்ற நாவல் வெளிக்கொணரப்பட்டதுடன், அதே ஆண்டு பெங்களூரைச் சார்ந்த இளம் கவிஞரான இரா.வினோத்தினால் தோட்டக்காட்டீ என்ற கவிதைத் தொகுப்பு வெளிக்கொணரப்பட்டது.
ஏனைய படைப்புகளைப் போல் இவையும் இம்மக்களது துன்பியலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.
இவ்வரிசையில் திரு. ஆதவன் தீட்சண்யாவால் வெளிக்கொணரப்பட்டுள்ள மீசை என்பது வெறும் மயிர்
என்ற நாவல் அவ்வாறமையாது இம்மக்களது இந்திய
பின்புல வரலாற்றையும் அவர்களது இலங்கை வரலாற்றையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. மேலும்
இம்மக்களது இந்திய பின்புல வரலாற்றை எடுத்துக்கூறுகையில் அவர்களது குடியகல்வு எவ்வாறு வரலாறு சாதிய ஒடுக்குமுறையுடன்
பின்னிப் பிணைந்துள்ளது என்ற யதார்த்தத்தை படம்பிடித்து காட்டியுள்ளார்.
இந்தியா
என்றால் அது சாதியக்கட்டமைப்பினால் உருவாக்கப்பட்ட நாடு என அடையாளப்படுத்தப்படுகின்றது.
இந்திய சாதியமைப்பு இந்தியாவில் மட்டுமல்லாது இந்தியாவைச் சுற்றியுள்ள பௌத்த நாடுகளான
இலங்கை பூட்டான் மற்றும் இந்து நாடான நேபாளத்திலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்காகும்.
இது தவிர இந்தியர்கள் எவ்வெவ் நாடுகளிலெல்லாம் குடியேறினார்களோ அந்நாடுகளிலும் சாதியம்
அம்மக்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
முதலாளித்துவத்துவம் வளர்ச்சியடையும்போது சாதியக் கட்டமைப்பு கட்டவிழ்ந்து உதிர்ந்துவிடும்.
முன்னேறிய நாடுகளில் இந்தியர் குடியேறினால் சாதிக்கட்டமைப்பினை உதறித் தள்ளிவிடுவர்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் சாதியத்தை ஒழித்துவிட்டது அதனால் சாதி இனிமேல் ஈழத்தில்
இனி மேலெழாது என பரவலாக முற்போக்குவாதிகளாலும்
இடதுசாரிகளினாலும் கூறப்பட்டது. ஆனால் நடைமுறை அவ்வாறல்ல என்பதை யதார்த்தம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. பொருளாதார
ரிதியில் வளர்ச்சியடைந்த நாடாக இருந்தாலென்ன அல்லது வளர்ச்சி குன்றிய நாடாயிருந்தாலென்ன
எங்கெங்கு இந்துக்கள் வாழ்கின்றனரோ அங்கெங்கெல்லாம் சாதியம் வாழ்வதைக்காண முடிகின்றது.
இப்பின்புலத்திலேயே
திரு. ஆதவன் தீட்சண்யா மீசை என்பது வெறும் மயிர் எனும் நாவலை எழுதியுள்ளார். தாம் இலங்கை
வந்தபோது மலையக மக்களின் மக்களின் வாழ்நிலை நேரில் கண்டு அவ்வனுபவத்தை படைப்பிலக்கியமாக
கொண்டுவந்துள்ளார். தமது நேரடி அனுபவத்தை வழமையான படைப்பிலக்கியவாதிகள் போல் ஒரு கதாபாத்திரை
முன்வைத்து அதனுடன் சில கதாபாத்திரங்களை உள்ளிணைத்து படைப்பிலக்கியமாக வெளிக்கொணராது
புதிய வடித்தில் இந்நாவலை வெளிக்கொணர்ந்துள்ளார்.
ஒரு கதாபாத்திரத்தினூடக ஒரு சமூகத்தின் வரலாற்றை கூறியுள்ளார். இதற்காக உருவாக்கப்பட்ட
கதாப்பாத்திரம் ஒரு வித்தியாசமான கதாபாத்திரமாகும். இக்கதாபாத்திரம் நாடுகடந்த எழுத்தாளராகும்.
இக்கதாபாத்திரம் நாம் வாழும் காலக்கட்டத்தைச் சார்ந்த கதாபாத்திரமாவதுடன் அக்கதாபாத்திரம்
இலங்கையினதும் தமிகத்தினதும் அனுபவத்தைக் கொண்ட கதாபாத்திரமாகும்.
நாடு
கடந்த படைப்பாளியாக வாழும் ஒரு படைப்பாளியுடன் மேற்கொள்ளும் நேர்காணல் மூலம் மலையக
மக்களது கடந்த கால, மற்றும் நிகழ்கால வரலாற்றினை வெளிக்கொணர்ந்துள்ளார். அதேவேளை அக்கதாபாத்திரத்தின் தனிப்பட்ட வரலாற்றை
நேர்காணல் செய்வதுனூடாக தமிழகத்தில் நிலவும் சாதி ஒடுக்குமுறையை வெளிக்கொணர்ந்து அதனை இலங்கை மலையக மக்களது வாழ்கையுடன்
பிணைத்து சாதி கொடுமை இன்றைய மலையக மக்களது மூதாததையர் குடிபெயர்வதற்கான அழுத்தங்களில்
ஒன்றாக இருந்துள்ளது என்ற உண்மையை வெளிக்கொணர்ந்துள்ளார்.
நாவலின்
கதாநாயகனாக நாடுகடந்த படைப்பாளியான நந்தஜோதி பீம்தாஸ் அவர்களை ஜேர்மனி சென்றவேளை சந்தித்து
மேற்கொண்ட நேர்காணலையும், பிறிதொரு படைப்பாளி அவரை நேர்கண்டதை தமிழாக்கம் செய்ததையும் மற்றும் திரு. நந்தஜோதி
பீம்தாஸ் எழுதிய நாவலான மீசை என்பது வெறும் மயிர் என்ற நாவலின் சுறுக்கத்தை தமிழாக்கம்
செய்தல் ஏனும் மூன்று பகுதியை இணைத்து இந்நாவலை
முழுமையாக்கியுள்ளார். இந்நாவல் ஒன்றோடொன்று தொடர்பற்ற பகுதிகளாகத் தெரிகின்றபோதிலும்
மூன்று பகுதியும் ஒன்றோடொன்று தொடர்புற்று
வகையில் கதையை கொண்டு சென்றுள்ளார். வாசகர்கள் மலையக சமுதாயத்தின் முன்னைய, பின்னைய
வரலாற்றை மிக இலகுவாக புரிந்து கொள்ளும் வகையில் நேர்காணலை நகர்த்திச் சென்றுள்ளார். இந்திய மண்ணில் சாதியம் அன்றும் இன்றும் எவ்வாறான
வகிபாகத்தை சமூகத்தில் வகிக்கின்றது என்பதை மிக இலகுவாகவும் ஆழமாகவும் வாசகர் புரிந்துகொள்ள
நாவல் வாய்ப்பளித்துள்ளது. சாதியக்கொடுமைகள்
சமூகத்தில் ஒருபிரிவினரை எவ்வாறு தம் பிறந்தமண்ணைவிட்டு வேறு நாடுகளுக்கு குடிபெயர
நிர்ப்பந்தித்தது என்பதை ஒரு தனிமனிதனின் வரலாற்றை எடுத்துக் கூறுவதன் மூலம் ஒரு
சமூக பிரிவின் குடிபெயரலை எடுத்துக்கூறியுள்ளார். கதாபாத்திரமான நந்தஜோதி பீம்தாஸ்
சாதி ஒடுக்குமுறையினால் பாதிக்கப்பட்டு அதனை எதிர்த்தமையின் விளைவாக நாட்டை விட்டகன்றராவார்.
மேலும் சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக ஒடுக்கப்பட்டோரின் போராட்ட வடிவங்களையும் எதிர்ப்பு
குணவியல்களையும் பதிவு செய்துள்ளார். இந்திய சாதி அமைப்பு முறையை ஆங்கிலேயர் உடைத்தெறிந்தனர் என நிலவும் கருத்தை
உடைத்தெறிந்து தம் சுரண்டலை மேற்கொள்வதற்கு எவ்வாறு சாதியத்தை ஆங்கியலேயர்
பயன்படுத்திக் கொண்டனர் என்ற உண்மையையும் வெளிக்கொணர்ந்துள்ளதுடன் இந்திய சாதிய அமைப்பு முறைக்குள் உட்படாத மக்கள்
பிரிவினராகவுள்ள சேரிவாழ் மக்களை தாழ்த்தப்பட்டோர்
என பட்டம் சூட்டி சாதிமுறைக்குள் இம்மக்களை உள்ளடக்கியுள்ளடக்கிய வரலாற்றுண்மையையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.
நாவலின்
கதாநாயகனாக முன்நிறுத்தப்பட்டுள்ள நந்தஜோதி பீம்தாஸ் தம் கிராமத்தில் முகம்கொடுத்த
சாதியக் கொடூரத்தை எதிர்த்ததன் விளைவாக தமிழகத்தைக விட்டகழ்ந்து ஒரு இயற்கையனர்த்தத்தின்
பிரதிவிளைவால் இலங்கையை அறுபதுகளில் வந்தடைந்தவாரார். இவ்வாறு வந்தவர் அட்டனில் ஒரு
சிகையலங்கார கடையில் சேர்ந்து தம் குலத்தொழிலாக கருதப்படும் சிகையலங்காரத் தொழில் ஈடுபட்டு
பின்னர் நாட்டை விட்டகழ வேண்டிய சூழல் ஏற்பட்டமையினால் கப்பல் சிற்றூழியராக கொழும்புத்
துறை முகத்தில் நின்ற கப்பலில் ஏறி பல வருடங்கள் சேவையாற்றி இழைப்பாறும் காலத்தில்
ஜேர்மன் நாட்டிற்கு சொந்தமான தீவொன்றில் வாழ்ந்து வருகின்றார். அவர் இந்திய சாதியமைப்பு முறையினை வெளிப்படுத்தும்
வகையில் படைப்புகளை எழுதி வருகின்றார். இவரது படைப்பான “மீசை என்பது வெறும் மயிர்” என்ற நாவலின் சுருக்கத்தினை
தமிழாக்கம் செய்ததனூடக சாதி ஆதிக்க நிலைநிறுத்துவதில் மீசை எந்தளவு தூரம் ஆதிக்க சாதியின் குறியீடாக
விளங்குகின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளார். அதேவேளை ஆதிக்க சாதியினரின் மீசையை வலிக்கும் சிகையலங்கார சமூகப்பிரிவினர் மீசை வைத்துக்கொள்ளக் கூடாது
என்ற ஆதிக்க சாதியினரின் கட்டளையை எதிர்த்து
அச்சமூகத்தைச் சார்ந்தோர் அதனை அவமதிக்கும்
வகையில் தமது அந்தரங்கப் பகுதியில் மீசை வைத்துக் கொண்ட சம்பவத்தையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.
நாவலின் இப்பகுதி மூலம் இந்திய சாதி ஒடுக்குமுறைமைப் பற்றியும் அதன் தாக்கமே ஒடுக்கப்பட்டோர்
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு குடியகல்வதற்கான பிரதானக்காரணிகளில் ஒன்று என்பதை புலமையாளர்
முதல் படித்தோர் வரை மிக இலகுவாக புரிந்துகொள்ளும் வகையில் எழுதியுள்ளார்.
இந்தியாவில்
நிலவும் சாதிய ஒடுக்குமுறைப்பற்றி தத்துவார்த்த்ரீதியாக எடுத்துரைத்து அதற்கெதிராக
அகில இந்திய ஒடுக்கப்பட்ட மக்களை ஓரணித்திரட்டி போராடியவரும் இந்திய அரசியலமைப்பின் தந்தையுமான டாக்டர் அம்பேத்கரின்
125 நினைவு வருடத்திலேயே இந்நாவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆறு தசாப்தங்களில் இந்தியாவின்
முதலாளித்துவம் பாரிய வளர்ச்சி கண்டபோதிலும் அதனால் சாதியக்கட்டமைப்பை இல்லாதொழிக்க
முடியாது போய்விட்டது. எவ்வாறு மதம் முதலாளித்துவ வளர்ச்சிக்கேற்ப தம்மை தகவமைத்து
நிலைத்துக்கொண்டதோ அதேபோல் சாதியம் முதலாளித்துவ கட்டமைப்பினை வெற்றிகொண்டு தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.
இவ்வுண்மையை மீசை என்பது வெறும் மயிர் என்ற நாவல் மூலம் வெளிக்கொணர்ந்துள்ளார். மறுபுறம்
இலங்கை வாழ் மலையக மக்களின் முன்னைய மற்றும் இன்றைய வரலாற்றை நாவல் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்..
மலையக மக்களைப்பற்றிய தகவல் தமிழக மக்களையும் ஏனைய நாடுகளில் வாழும் தமிழ் மக்களை சென்றடையவில்லை. இந்நிலையில் ஆதவன் தீட்சண்யாவின் மீசை என்பது மயிர்
என்ற நாவல் இத்தேவையை பூர்த்தி செய்யும் முயற்சியில் பெரும்பங்கையாற்றியுள்ளது என்றால்
மிகையாகாது.
( * 2009 அக்டோபர் மற்றும் 2010 ஜூலை என்பதே சரி.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக