ஞாபகமாய் மறத்தல் - ஆதவன் தீட்சண்யா


சூரியோதயத்திற்கு பின்னும் முன்னும்
சந்திராஸ்தமனத்துக்கு முன்னும் பின்னுமான நேரத்தில் மட்டும்  
வெளியே யாரும் தலைகாட்ட வேண்டாமெனும்
ஊரடங்கு உத்தரவு காலவரையின்றி அமலுக்கு வருகிறது
சட்டப்புத்தகத்தின் எல்லாப்பிரிவுகளுக்கும்   
144 என்றே எண்ணிடப்பட்டு வருவதால் 
எவரொருவரும்
தத்தமது நிழலை உடனழத்துப்போவதும் சட்டவிரோதம்

உளவுத்துறை முடுக்கிவிடப்படுகிறது
சாலையோர மரங்களின் உச்சியில்
ரகசிய காமிராக்கள் பொருத்தப்படுகின்றன பகிரங்கமாய்
உற்றார் உறவாரின் காலடிப்புழுதியில் ஒளிந்து
ஒற்றர்கள் பின்தொடர்கிறார்கள்

அதிகரித்துள்ள கெடுபிடிகளும் வாகனச்சோதனையும்
புதியவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துகிறது
சந்தேகத்திற்குரியவர்கள்
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு
விதிவிலக்கின்றி ஒன்றேபோல்
‘தற்கொலை’ செய்துகொண்டதாக அறிவிக்கப்படவிருக்கிறார்கள்

உறங்கிக்கொண்டிருப்பவர்களில்
கலகம் விளைவிப்பவர்களையும்
சதிச்செயலில் ஈடுபடுகிறவர்களையும்
இன்னபிற அ.கொ.தீ.க. படையினரையும்
கனகச்சிதமாக கண்டறிந்துவிடும் போலிஸ்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
அவர்களை கைதுசெய்யவிருக்கிறது நள்ளிரவில்
தீர்ப்பதிகாரிகளின் ஒப்புதலோடு
நிரம்பப்போகின்றன சிறைச்சாலைகள்

கண்காணிப்பு இறுகுகிறது
அச்சகங்களையும்
கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்துவிட்ட காவல்துறை
வெறுங்காகிதத்தையுமே தணிக்கை செய்வதால் 
அச்சாகாமலே முடங்கப்போகின்றன
துண்டறிக்கைகளும் சுவரொட்டிகளும்

செத்துப்போனவனின் நினைவை மறக்கடிக்க
இவ்வளவையும் மறக்காமல் செய்துமுடிக்கிறது அரசுத்தரப்பு
கொலைகாரர்கள்
அடுத்தப்பிணத்தை வீசிப்போக
ரயில்ரோட்டோரம் இடம் பார்த்தலைகின்றனர்
நானோ
வெற்று முழக்கங்கள் கொப்பளிக்கும் 
வீராவேசக் கவிதையொன்றை எழுதிவிடாதபடி
கைகளை பின்புறமாய் கட்டிக்கொள்கிறேன்.

நெருங்குகிறது ஜூலை 4.


-26.06.20141 கருத்து:

  1. //கொலைகாரர்கள் அடுத்தப்பிணத்தை வீசிப்போக
    ரயில்ரோட்டோரம் இடம் பார்த்தலைகின்றனர்//
    சென்னை - மதுரை இடையே அமைக்கப்பட்டு வரும் இருவழி ரயில்பாதை பணி, 2016-ம் ஆண்டுக்குள் முடிவடைந்துவிடும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

    பதிலளிநீக்கு