ராட்டைச் சக்கரமும் அசோகச்சக்கரமும் - இங்கிலாந்து நாடகத்தை முன்வைத்து - ஆதவன் தீட்சண்யாரு நாடகத்தைக் காண்பதற்கு அதன் பனுவலை வாசித்திருக்க வேண்டும் என்பது முன்னிபந்தனையல்ல. ஆயினும் நான் ந.முத்துசாமி எழுதிய இங்கிலாந்து நாடகத்தைப் பார்ப்பதற்கு முன்பாக அதன் பனுவலை எனக்கு படிக்க வாய்த்தது. தமிழ் நாடக உலகிற்கு கடந்த நாற்பதாண்டு காலமாக கூத்துப்பட்டறையும் ந.முத்துச்சாமியும் ஆற்றிவரும் பங்கு குறித்த மதிப்பீடுகளை முன்வைத்து பிரளயன் எழுதியிருந்த கட்டுரையொன்றில் ‘அவரது முக்கியமான நாடகங்களிலொன்று’ என இங்கிலாந்தைக் குறிப்பிடுகிறார். 1989ல் ந.முத்துசாமியின் நெறியாளுகையிலும் பிறகு அன்மோல் வெலானியின் நெறியாளுகையிலும் இந்நாடகம் நிகழ்த்தப்பட்ட போது அதைக் கண்டிருந்தவர்  பிரளயன். எனவே, அந்தக் காணனுபவத்தை  இருபதாண்டுகாலம் தனக்குள் பொதித்து வைத்திருந்த பிரளயனின் நெறியாளுகையில் 2015ல் அதே பனுவல் நாடகமாக நிகழ்வதானது கூடுதல் முக்கியத்துவமுடையதாகிறது. 

ஒசூர் டி.வி.எஸ். பள்ளி மாணவர்களைக் கொண்டு பிரளயன் நிகழ்த்திய நாடகங்கள் பலவற்றை கருநிலையிலிருந்து முழுநிலையை எட்டும் வரையான வளர்போக்கினை உடனிருந்து பார்த்திருக்கிறேன். உணர்வை சொல்லாக்குவதும், ஒரு சொல்லை காட்சிப்படுத்துவதும், சடப்பொருளை உயிர்ப்பிப்பதும், உயிர்ப்பொருளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்திச் செலுத்துவதுமாக அவர் அரங்கை தன்மயப்படுத்திப்போவார். அதேவேளையில் அது ஒரு கூட்டுச் செயல்பாடாக, ஜனநாயகத்தன்மையோடு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். இவற்றோடு அவரது நெறியாளுகையினூடான சென்னை கலைக்குழுவின் நாடகங்கள், புதுவை பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு நடத்திய பாரி படுகளம் போன்றவற்றையும் பார்த்திருந்த முன்னனுபவங்களுடன் தான் 2015 செப்டம்பர் 5 அன்று மாலை இங்கிலாந்து பார்க்கப் போனேன்.

***

இங்கிலாந்து நாடகத்தின் பனுவலை வாசிக்கும் போது இதை எப்படி நாடகமாக நிகழ்த்தியிருக்க முடியும், அல்லது நிகழ்த்த முடியும் என்கிற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. அந்தளவுக்கு அருவமாகவும் திட்டவட்டப்படுத்த முடியாத சொற்கோலமாகவும் பல விசயங்களை எழுதியிருக்கிறார் ந.முத்துசாமி.  அவரது புஞ்சை கிராமம் பரந்த நாடாக விரித்து வைக்கப்படுகிறது. புஞ்சை எங்கெங்கும் இருப்பதாக சொல்வதன் மூலம் அதன் கதை எனச்  சொல்லப்படுவதை நாட்டின் கதையெனக்  கொள்ளமுடியும். மேற்கத்திய மாடுகள் பூட்டிய வண்டி அந்த ஊரின் எந்தப் பாதையில் செல்லவேண்டும் என்று விரும்பி எதிர்பார்க்கிறோமோ அந்தப் பாதையில் அது செல்லவில்லை. வண்டியோட்டியின் கவனமின்மை, சரியாக சொடுக்கப்படாத அல்லது தவறாக சொடுக்கப்படுகிற சாட்டைக்கழி, மாடுகளின் தடுமாற்றம், வண்டியை குடைநாட்டிக் கவிழ்க்கும்படியாக பாதையில் மறைந்திருக்கும் உளைகள் என்று இந்த திசைவிலகலை நியாயப்படுத்த எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும், வண்டி இலக்கை அடையவில்லை என்பதை பெரும் அங்கலாய்ப்போடு கவனப்படுத்துகிறது இந்த நாடகம். அதேவேளையில், தேர்ந்துகொண்டு இலக்கில் உள்ள கோளாறுகளால் தான் அது அடையப்பட முடியாததாக இருக்கிறதா என்கிற கேள்வியையும் எழுப்புகிறது. 


வரலாற்றின் உக்கிரமான பல நிகழ்வுகள் காலவோட்டத்தில் வெறும் எண்களாகவும் பெயர்களாகவும் மாறி நம் நினைவடுக்கின் ஆழத்திற்குள் புதைந்தும் போகின்றன. சில காட்சிகளோ கலங்கிப்போய் பழுப்படைந்த சித்திரம் போலாகி ஒற்றைச்சொல்லாக சிறுத்துப் போவதுமுண்டு. நிலை திரிந்த இந்த எண்களையும் சொற்களையும் பெயர்களையும் திரும்பத் திரும்ப வெவ்வேறு தொனியில் சூழலில் எழுப்புவதன் மூலம் நமது நினைவாழத்திலிருந்து அவற்றை மேலிழுத்து வந்து மீண்டும் உயிர்ப்பித்து அதனதன் காலத்திற்குரிய மூர்த்தத்தோடு உலவச் செய்கிறது இங்கிலாந்து நாடகம். எண்களை ஆண்டுகளாகவும் ஆண்டுகளை குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அல்லது நிகழ்வுகள் நடந்தேறிய காலமாகவும், பெயர்களை ஆளுமைகளாகவும் ஆளுமைகளை அரசியல் கண்ணோட்டங்களின் பிரதிநிதிகளாகவும் அரங்கிலும் நமக்குள்ளும் ஒரு சேர மாற்றுகிறது நாடகம். வரலாற்றின் ஒரு கண்ணியாக மாறிக்கொண்டிருக்கும் நிகழ்காலத்தில் நாடகம் இன்றைய நடப்பியல் உண்மையாகவும், நடப்பியல் உண்மைகள் பலவற்றின் நேற்றைய வகைமாதிரியாகவும் இயங்குகிறது.

பழங்கால இந்தியச் சமூகத்தை உன்னதமானதாக கற்பிதமேற்றிக் காண்கிற விநோதப் பூஞ்சையால் அரிக்கப்பட்ட கண்கள், நிகழ்காலத்தின் எல்லா பிரச்னைகளுக்குமான தீர்வினை கடந்த காலத்திற்குள் துழாவிச் சலிக்கின்றன. அப்படி கடந்தகாலத்திற்கு திரும்ப வேண்டுமென்ற ஏக்கத்திலும் திரும்பமுடியாத  ஆற்றாமையிலும் காந்தலேறிச் சிவந்த அக்கண்களினூடாக பிரிட்டன் காலனியாதிக்கத்தையும் சுதந்திரப்போராட்டத்தையும் கிராமச்சமூகத்தில் ஏற்பட்டுவந்த அழிமானத்தையும் நவீன பெருநகர் வாழ்வையும் ஒற்றை மனிதர் போல திரள்வதற்கு ஊறு செய்யும் சாதியத்தையும் கண்டால் கிடைக்கும் காட்சிகளை விவரிக்கிற ஒரு பனுவல்தான் இங்கு நாடகமாக்க எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

மனித உடல் எதிலிருந்து உருவாகிறதோ அதை மறுத்து தனியாவதிலிருந்துதான் அடுத்தக்கட்ட வளர்ச்சி சாத்தியம். தாயையும் சேயையும் இணைத்து வைத்திருப்பது தொப்புள்கொடிதான் என்றாலும், குறிப்பிட்ட காலத்தில் அதை அறுத்தெறியாவிட்டால் இரண்டு உயிர்களும் அழிவதற்கு அதுவே காரணமாகிவிடும். அறுத்துவிடப்பட்ட இந்த தொப்புள் கொடி காய்ந்து உலர்ந்து உதிராமல் கிளைத்து வளர்ந்து ஒவ்வொரு வீட்டின் உத்திரத்திலிருந்தும் தொங்கும் நூல்கண்டாக மாறுமானால் அது பழமையின் எச்சமாகவோ தொடர்ச்சியாகவோ ஆகிவிடுகிறது.

பாரம்பரியம் என்பதற்கும் பழமைவாதம் என்பதற்கும் இடையேயான வேறுபாட்டை துல்லியமாக பிரித்தறிகிற போதுதான் காலனியம் உருவாக்கியுள்ள விதேசியத்திற்கு எதிராக எதை முன்னிறுத்துவது என்கிற தெளிவைப் பெற முடியும். பாரம்பரியமானது, ஒரு சமூகத்தால் பொதுவில் பகிர்ந்துகொள்ளப்படும் ஜனநாயகத்தன்மை கொண்டது. பழமைவாதமோ சமூகத்தின் ஒரு பிரிவுக்கான நலனைப் பேணுவதற்கென மட்டுப்படுத்தப்பட்ட எல்லையைக் கொண்டது. அடிப்படையில் இரண்டுமே எதிரெதிரானவை. எனவே பழமை போல் திரிந்துள்ள பாரம்பரியத்தையும் பாரம்பரியம் போல் மினுக்குகிற பழமையையும் ஒன்றெனக் குழப்புவது, நவீனத்துவத்தை விதேசியத்தின் குழந்தையாக காண்கிற அபத்தத்திற்கு கொண்டு சேர்த்துவிடும். பழமைவாதத்தைப் போலவே நவீனத்துவமும் காலவயப்பட்டதோ கருவிமயப்பட்டதோ அல்ல, அது கருத்துவயமானது. 

ஏற்றத்தாழ்வின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள இந்தியச்சமூகத்திற்கு சமத்துவம் என்கிற கருத்துதான் நவீனமானது, மட்டுமல்ல கலகத்தன்மை கொண்டதும்கூட. ஏற்றத்தாழ்வு உருவான காலந்தொட்டே கருக்கொண்டுவிட்ட சமத்துவம் என்கிற கோரிக்கை வரலாறு நெடுகிலும் எழுந்தெழுந்து அமுங்கியிருக்கிறதேயன்றி அது ஒருபோதும் அடங்கிவிடவில்லை. ஒரு சமூகமாக சேர்ந்து வாழ்வதற்குரிய இந்த பெருவிருப்பத்தை பூர்த்தி செய்யாமலே சுற்றப்படுமானால் இராட்டையிலிருந்து நூலுக்கு பதிலாக நூலாம்படைதான் திரண்டுவரும் என்பதை நாடகம் சொல்லிப் போகிறது.

தொழிலை மட்டுமல்லாது தொழிலாளர்களையும் பிரித்துவைத்திருக்கிற சாதியம் ராட்டையையும் குறிப்பிட்ட சாதியினரின் கைகளில்தான் ஒப்படைத்திருந்தது. விதேசியத்திற்கு எதிரான சுதேசியத்தின் குறியீடாக இந்த ராட்டையை காந்தி முன்னிறுத்திய போதும் அது எல்லோரது கைகளுக்கும் சென்றடைந்து விடவில்லை. தீண்டாமையையும் பாகுபாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் ஆரக்கால்களாக கொண்டியங்கும் ராட்டையால் வரலாற்றை உந்திச் செலுத்துவதற்குரிய ஒரு சக்கரமாக மாறமுடியாது என்பதை நன்குணர்ந்ததால் தான் அம்பேத்கரை அசோகச்சக்கரம் ஈர்த்தது என்பது தற்செயலானதல்ல. ஆயினும்  சமகாலத்திற்கும் என்றென்றைக்கும் பொருத்தமானதாக ராட்டைச் சக்கரத்தையே  பரிந்துரைக்கும் இந்தப் பனுவலை அதன் நேரடி அர்த்தங்களுக்கு அப்பால் நகர்த்திப்போகும் சவாலை பிரளயன் எதிர்கொண்டு சாதித்திருக்கிறார்.

விதேசிய மோகத்தில் சுயமியழந்துத் திளைப்பவர்களுக்கும் அவர்களை சுயநிலைக்குத் திருப்ப மேற்கொள்ளப்படும் எத்தனங்களுக்கும் இடையிலான போராட்டம், கிராமிய வாழ்வுக்கும் பெருநகர் வாழ்வுக்கும் இடையேயான முரண், நகர வாழ்வில் தாழ்ந்துவரும் மனித நிலை, சூழல் மாசுபாடு, கிராம நகர பேதமின்றி நிலைகொண்டு வழிநடத்தும் சாதியம், சாதியத்தின் பேரால் நிகழ்த்தப்பட்டுவரும் படுகொலைகள் ஆகியவற்றால் நாடும் மனமும் ஒருசேர சிதறடிக்கப்படுகிறது. மூக்குக்குள் உலர்ந்துள்ள பொறுக்குகளை சுவாரஸ்மாக நோண்டுவதில் லயிப்பு காண்கிறவர்களைப் போல தங்களுக்குள் சேரும் கசடுகளைக்கூட பெருமிதமாக கருதிக்கொள்கிறவர்களாக மக்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள். தலையணைகளை மாற்றிப் பார்த்துவிட்டு தலைநோவு தீரவில்லை என்று சலித்துக் கொள்கிறவர்களைப் போல மக்கள் கட்சிகளை ஆட்சிகளை தலைவர்களை மாற்றிப்பார்த்தும் பாடுகள் தீராமல் வாய்விட்டு அரற்றுகிறார்கள். ஆனாலும் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது என்பதைச் சொல்லும் நாடகம் அதற்காக ஒவ்வொருவரும் அவரவர்க்கு உள்ளிருந்து சுழலும் ஆற்றல் கொண்ட ஒரு ராட்டையை கைக்கொள்ளச் சொல்கிறது. அது சாதியும் காந்தியும் கைக்கொண்ட ராட்டைச்சக்கரமாக அல்லாமல், முறுகச் காய்ச்சிய பறையாக நமக்குள் உருமாறி ஒலிக்கத்தொடங்குகிறது. சனாதன- சாஸ்திரிய ஓட்டைகளை பெரிதுபடுத்திக் காட்டுவதற்கு மட்டுமல்லாது, நவீன காலனியாதிக்கத்தால் சூழப்பட்ட இன்றைய வாழ்வை எதிர்கொள்வதற்கும் பறையை ஒரு போராயுதமாய் உயர்த்திப் பிடிக்கச் சொல்லும் அந்தக் குரல் பனுவலில் இருப்பதைவிடவும் உக்கிரமாக ஒலிக்கிறதென்றால் பிரளயனுடையது. 

சாதித்தூய்மை, தூயரத்தம் ஆகியவற்றின் பொறுப்பாளியாக்கப்பட்ட இந்திய / தமிழ்ப் பெண்ணை வீட்டுக்குள் இருக்கும் போது குடும்பத்தாரும், வீதியில் இறங்கியதும் ஊராரும் கண்காணிக்கின்றனர். படிப்பு, வேலை, சம்பாத்தியம், வயது என்று யாதொன்றும் இந்தக் கண்காணிப்பிலிருந்து பெண்ணை விடுவிக்கவில்லை. கண்காணிக்க வேண்டும் என்கிற முனைப்பின்றி தன்னியல்பில் அனிச்சையாகவே கண்காணிக்கத் தொடங்கிவிடுகிற கேவல மனநிலையை, பெரிய பெரிய கண்களும் காதுகளும் வாய்களுமாக  பெண்ணை பின்தொடரும் காட்சியாக  சித்தரிக்கிறார் பிரளயன். கூகியின் கருப்பின மந்திரவாதி நாவலில் வரும் ஒரு அமைச்சனுக்கு அரசனிடம் நயந்து பேசுவதற்காக நாக்கு நீண்டிருக்கும், இன்னொரு அமைச்சனுக்கோ ஒட்டுக் கேட்பதற்காக காது பெருத்திருக்கும். திவ்யா - இளவரசன், சுவாதி - கோகுல் ராஜ் என்கிற மனிதர்களை மட்டுமல்ல, கடவுளையும் கூட கண்காணித்துக் கொண்டிருக்கிற இந்தியர்களுக்கும் அப்படி கண்ணும் காதும் பெருத்து வாய் நீண்டுவிடும் சாத்தியங்களிருப்பதை நாடகத்திற்குள் தடதடத்தோடும் ரயிலும், நாடகத்தின் முடிவில் சண்டாள அபிஷேகத்திற்கு சொல்லப்படும் விளக்கக்குறிப்பும் எச்சரிக்கின்றன.

இந்தக் காலத்தில் இப்படியயொரு பனுவல் பிரளயனது நெறியாள்கையில் நாடகமாக நிகழ்த்தப்படுவதே கவனம் கொள்ளத்தக்க அரசியல் செயல்பாடுதான். பனுவல் என்கிற சட்டகத்தை நெகிழ்த்தி நெகிழ்த்தி அதை அதிகாரத்திற்கு எதிரான ஒரு கூட்டுக்குரலாக வளர்த்தெடுத்து தற்காலப்படுத்தியிருப்பதில் அவரது நெறியாளுகையின் தனித்துவமும் அரசியல் கடப்பாடுகளும் இழைந்திருக்கின்றன. குடிமக்களின் அன்றாட வாழ்வின் மீது நிகழ்த்தப்படுகிற வன்முறைகளையும்  அத்துமீறல்களையும் செயலற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிற அரசியல் சாசனத்தை குறிப்பால் உணர்த்துவதைப்போல அரசின் இலச்சினையில் உள்ள சிங்கத்தைலைகள் அரங்கின் ஓர் ஓரத்தில் பொம்மையாக நிறுத்தப்பட்டுள்ளது. பிரளயன் தன் விமர்சனத்தை இவ்வாறாக வெளிப்படுத்தும் பாங்கை உணரும் தருணங்களால் நிரம்பிய இந்நாடகம் பற்றி கூடுதலாகவும் விவரிப்பதிலிருந்து என்னை நானே தடுத்துக் கொள்கிறேன். ஏனெனில், நாடகமானது நிகழ்த்தப்பட வேண்டியது என்பதைப் போலவே காணப்படவும் வேண்டியது. ஆமாம், ஒளியும் இசையும் நடிப்பும் ஊடாடியிழைந்து உருவாக்கும் அனுபவத்தை படித்துணர முடியாது, பார்க்கக் கடவீர்.

நன்றி: செம்மலர், நவம்பர் 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக