வெள்ளி, ஜூலை 15

அங்கீகாரம்... தீட்டு... பறையர்... -ஆதவன் தீட்சண்யா

2013 நவம்பர் 'தோர்ச்ச' மாத இதழில் வெளி்யான மலையாள எழுத்தாளர் தோமஸ் ஜோசப்புடைய நேர்காணலின் தமிழாக்கம் நியூ செஞ்சுரியின் 'உங்கள் நூலகம்' ஜூலை 2016 இதழில் வெளியாகியுள்ளது. கலை இலக்கியம் தொடர்பான முக்கிய உரையாடல். ஆனால் அது இப்படி முடிகிறது: 

" .... இங்கே இலக்கியத்தின் அதிகாரிகள், சற்று விலகி நின்று எழுதுகிறவர்களின் படைப்புகளை அபத்த இலக்கியம் என்று தீட்டு சொல்லி விலக்கி வைக்கிறார்கள். அதுமட்டுமல்ல, கவிதையோடு ஒப்பிடும்போது கதை இலக்கியத்தில் அதிகாரப்பூர்வமான ஒரு ஒளிவட்டம் இன்று மிக முக்கியம். தொலைக்காட்சிகளிலும் மற்ற ஊடகங்களிலும் வேலை செய்யும் எழுத்தாளர்கள் மீது ஊடகங்களின் பாசம் முடிந்தவரை பொழியும்போது, கதையை வழக்கமான பாணிகளிலிருந்து விடுவிக்கப் பாடுபடும் எழுத்தாளன் இலக்கியத்தின் பூந்தோட்டத்துக்கு வெளியே அகிறான். அவனுக்கு அங்கீகாரங்களின் இனிமை மறுக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் பிறகு கதையின் எதிர்காலம் எங்கே சென்று நிற்கும் என்று சொல்லமுடியாத நிலை வருகிறது. ஒருக்கால், இன்று கொண்டாடப்படும் கதாசிரியனை காலம் பின் தள்ளுமென்றும், இன்றைய கதை இலக்கியத்தின் பறையர்கள் நாளையக் கதையின் ராஜாக்களாக மாறுவார்கள் என்றும் நம்பலாம்." 

அங்கீகாரமின்றி விலக்கிவைக்கப்படுகிறவர்களைச் சுட்ட " பறையர்" என்கிற சொல்தான் ஒரு எழுத்தாளரிடமும் இருக்கிறதா? மொழிபெயர்த்தவருக்கும் இதழாசிரியருக்கும் கூட இது உறுத்தவில்லையா? ஒருவேளை நான் தான் சொற்களைப் பிடித்து தொங்குகிறேனா...

ஓர் எழுத்தாளரின் சொற்கிடங்கு எவ்வளவு அடர்ந்து செறிந்திருந்தாலும் அவரது கருத்தியலே அதிலிருந்து பொருத்தமான சொல்லை தெரிவு செய்கிறது போலும்.

சனி, ஜூலை 9

சாதி மறுப்பு இலக்கியத்திற்கான சாத்தியங்கள் - ஆதவன் தீட்சண்யாசாகித்ய அகாடமி 2015 பிப்ரவரி 21,22 தேதிகளில் சென்னையில் நடத்திய "இலக்கிய முழுமையை நோக்கி- தலித் இலக்கியம்" என்கிற கருத்தரங்கிற்காக எழுதப்பட்ட கட்டுரை.
1. தனிமனிதர்களின் அகநிலையையும் உலகு பற்றிய கண்ணோட்டத்தையும் வடிவமைப்பதில் இங்கு சாதியம் தீர்மானகரமான பங்கு வகிக்கிறது. மாற்றியமைக்கப்பட முடியாதபடி நெகிழ்ச்சியற்று இறுகக் கட்டப்பட்டுள்ள மேல்கீழ் படிவரிசையில் ஒவ்வொரு சாதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தைப் பொறுத்து அந்தச் சாதியினரின் அகநிலையும் கண்ணோட்டமும் உருவாகுகின்றன. அனிச்சை நிலையிலும் இயல்பிலும் சாதிசார்ந்தே யோசிப்பவராகவும் உள்வாங்குகிறவராகவும் அது சார்ந்தே வெளிப்படுகிறவராகவும் ஒருவர் இருப்பதற்கும் இதுவே காரணமாக அமைகிறது.

2. சாதியானது, அதன் உச்சத்தில் இருக்கும் பார்ப்பன ஆண்களைத் தவிர பார்ப்பனப் பெண்கள் உள்ளிட்ட அனைவருக்குமே எதிரானதுதான். அவர்களது சுயேச்சையான இருப்பைக் கட்டுப்படுத்தி பார்ப்பன ஆண்களுக்குக் கீழ்ப்படுத்துவதற்கு சாதியம் வழிவகுக்கிறது. எனவே அதை எதிர்ப்பதற்கான நியாயம் பார்ப்பன ஆண்களைத் தவிர்த்த அனைவருக்குமே இருக்கிறது. ஆனால் அப்படியொரு எதிர்ப்பு உருவாகாமலும், ஒருவேளை எதிர்ப்பு உருவானாலும் அது ஒன்று திரளாமலும் தடுப்பதற்கான உள்ளக ஏற்பாடாக சாதியடுக்கின் பன்மப் படிநிலை விளங்குகிறது. 

3. தலித்துகள் சாதியடுக்கின் அடிநிலையில் இருத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குக் கீழே யாரும் இல்லாதபடிக்கு அடிநிலையில் இருத்தப்பட்டிருப்பதால் சாதியமைப்பின் மொத்த பாரத்தையும் அழுத்தங்களையும் தாங்கிச் சுமப்பதன் வலியையும் வேதனையையும் கொண்டவர்கள். சாதியடுக்கிலிருந்து தம்மைத்தாமே உருவியெடுத்து விடுவித்துக் கொள்வதற்கு மதமாற்றம் உள்ளிட்ட எதுவும் எதிர்பார்த்த விளைவை உருவாக்காத நிலையில், தமது விடுதலைக்காக சாதியமைப்பை முற்றாக ஒழிப்பதற்கும் குறைவான எந்தவொரு நிலைப்பாட்டினை மேற்கொள்வதற்கும் வாழ்வியல் அவர்களை அனுமதிப்பதில்லை.

4. சாதியை ஒழிக்கவேண்டுமானால் சாதி இருக்கிறது என்பதை முதலில் ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அது எப்படி இயங்குகிறது, எவ்வாறாக சமூகத்தையும் தனிமனிதர்களையும் கட்டுப்படுத்தி இயக்குகிறது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. தனிமனித ஆளுமைக்கும் ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டிற்கும் சாதி எவ்வாறான கேடுகளை விளைவிக்கிறது என்பதை அம்பலப்படுத்தவும் அது ஏன் ஒழிக்கப்பட வேண்டும் என்கிற நியாயத்தை பரந்த மக்கள் திரளுக்கு கொண்டு சேர்ப்பதும் அவசியமாயிருக்கிறது. ஆனால் இந்த ரீதியிலான வியாக்கியானங்களும் விளக்கங்களும் தேவைக்கும் அதிகமான அளவில் நம்முன்னே குவிந்திருக்கின்றன. ஆகவே இப்போதைய தேவை, சாதி பற்றிய மேலும் ஒரு வியாக்கியானமல்ல, சாதியொழிப்பை நடைமுறைச் சாத்தியமுள்ள ஒரு நிகழ்ச்சிநிரலாக மாற்றுவதுதான்.

5. சாதியத்தைக் காப்பாற்றி நிலைநிறுத்துவது தலித்தல்லாத அனைவரின் இயல்புணர்வாகவும் நிகழ்ச்சிநிரலாகவும் இருக்கிறது. எனவே சாதியொழிப்பு என்பது இவர்கள் தாமாகவோ அல்லது வேறுவகையான நெருக்கடியினாலோ சாதியைக் கைவிடுவது என்பதையே குறிக்கிறது. ஆனால், சாதியின் பெயரால்  பல்வேறு ஆதாயங்களையும் பெருமித உணர்வையும் கொண்டிருக்கிற இவர்கள் தாமாக முன்வந்து சாதியைக் கைவிடப் போவதில்லை. ஒருவேளை, சாதியத்திற்கு எதிரான தலித்துகளின் போராட்டம் களத்திலும் கருத்தியல் தளத்திலும் தீவிரப்படுகையில் சாதியத்தைக் கைவிடும் நெருக்கடிக்கு இவர்கள் ஆட்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதிலும் பொருளில்லை. ஏனென்றால் அந்த நிலையிலும் கூட, தலித்துகளின் போராட்டத்தை ஒடுக்கி சாதியை நிலைநிறுத்திக் கொள்வதற்கான முன்னேற்பாடுகளுடனேயே அவர்கள் இயங்குகின்றனர். எனவே, சாதியொழிப்பு என்கிற தமது முதன்மை நிகழ்ச்சிநிரலை தாங்களாகவே நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்கிற புரிதல் கொண்ட தலித்துகள், சாதியொழிப்பை தலித்தல்லாதவர்களின் நிகழ்ச்சிநிரலாக மாற்றுவதற்குரிய உத்தியுடன் செயல் பட வேண்டியுள்ளது. இத்தகைய புரிதலினால்தான் அண்ணல் அம்பேத்கர் சாதியொழிப்பு என்கிற தமது புகழ்மிக்க உரைக்குறிப்பை தலித்தல்லாதவர்களிடையே பேசுவதற்கென தயாரித்தார். 

6. சாதியொழிப்பு என்று பொத்தாம்பொதுவாக பேசுவதற்கும் அப்பால் அதற்கென உண்மையில் நம்மிடம் உள்ள திட்டம்தான் என்ன என்பதை தெளிவுபட அறிவித்தாக வேண்டியுள்ளது. சாதியம் உருவாக்கிய அகமண முறையைக் கைவிட்டு ரத்தக்கலப்பு ஏற்படும்போது சாதி தானாகவே ஒழிந்துவிடும் என்று அம்பேத்கர் ஏற்கனவே ஆய்ந்தறிந்து முன்வைத்த தீர்வை ஏற்று அமல்படுத்தினாலே போதும், நாம் புதிதாக எந்தவொரு திட்டத்தையும் வகுக்க வேண்டியதில்லை என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. சாதியொழிப்பு பற்றி 78 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கரால் எழுதப்பட்ட அந்த ஆய்வுரையின் உயிர்ப்பான அம்சங்கள் இன்றளவும் அவரது சொந்த மக்களான தலித்துகளிடம்கூட முழுமையாக கொண்டு சேர்க்கப்படவில்லை. எனில், அம்பேத்கர் என்கிற பெயரைக்கூட சகிக்துக்கொள்ள முடியாத தலித்தல்லாதவர்களிடத்தில் அகமண முறையைக் கைவிடச் சொல்லும் அவரது யோசனையை கொண்டு சேர்ப்பதற்கு நம்மிடம் ஏதேனும் ஏற்பாடுள்ளதா?

7. ஒரு மனக்கணக்கு: மக்கள்தொகையில் கால்பங்காக உள்ள தலித்துகளோடு மணவுறவு கொள்வதற்கு சாதியச் சமூகத்தவர் முன்வருவார்களேயானால் இரண்டு பிரிவுகளும் சேர்ந்து மக்கள்தொகையில் 50 சதவீதத்தவர் சாதி கடந்தவர்களாக மாறிவிட முடியும். இப்படி சாதி கடந்த ஒரு தலைமுறையினருக்கும் எஞ்சியிருக்கும் சாதியச் சமூகத்தவருக்கும் இடையில் அடுத்து ஒரு கலப்பு ஏற்படுமானால் ஒட்டுமொத்தச் சமூகமுமே சாதிகடந்த சமூகமாகிவிடும். ஆனால் இந்தக் கணக்கைப் போல எளிதாக முடிந்துவிடக் கூடியதல்ல எதார்த்தம். இயல்பான மனித சுபாவத்திலிருந்து பிறக்கும் காதல் உணர்வில் சாதிகளுக்குள் நடக்கும் கலப்பே இன்னமும் அங்கீகரிக்கப்படாத நிலையில், சாதியச் சமூகத்தவருக்கும் தலித்துகளுக்கும் இடையில்  மணவுறவும் உணவுறவும் இயல்பாக நடந்தேறுவதற்கான சூழல் உருவாகும் என்று உண்மையிலேயே நாம் நம்புகிறோமா?

8. அகமண முறையை சட்டவிரோதமாக்கும் கடுமையான சட்டங்களின் மூலம் ரத்தக்கலப்புத் திருமணங்கள் நடப்பதற்கான சூழலை உருவாக்க முடியும் என்கிற ஆலோசனையும்கூட இங்கு அர்த்தமற்றதுதான். ஏனெனில் அப்படியான சட்டங்களை இயற்றும் அரசியல் விருப்புறுதி கொண்ட ஓர் அரசாங்கம் உருவாவதற்கான சாத்தியம் வெகுதூரத்திலும்கூட தெரியவில்லை. அல்லது அப்படியானதோர் அரசாங்கத்தை உருவாக்குவதற்கான செயல் தந்திரத்துடனும் வலுவுடனும் தலித்துகள் இன்னும் திரட்டப்படவில்லை. ஆனால், அகமண முறையை மேலும் கெட்டிப்படுத்துவதற்கான திட்டங்களைக் கொண்டவர்கள் அதிகாரத்தை நெருங்கிச் செல்வதற்கும் கைப்பற்றுவதற்கும் தீவிரமாகவும் தொடர்ந்தும் களத்திலிருக்கிறார்கள்.

9. ‘சாதி என்பது இந்துக்கள் கலந்துறவாடுவதற்குத் தடையாக உள்ள கற்சுவரோ கம்பி வேலியோ அல்ல. சாதி என்பது ஒரு எண்ணம், ஒரு மனநிலை. எனவே சாதியை ஒழிப்பது ஒரு பௌதீகத் தடையை அழிக்கும் செயல் அல்ல. மக்களின் எண்ணத்தில் மாற்றம் ஏற்படுத்தும் செயல்...’ என்பார் அம்பேத்கர். பிற சாதியினருடனும் தலித்துகளுடனும் கலந்துறவாடாமலே அவர்கள் மீது வெறுப்புமிழும் எதிர்மனநிலையும் இழிவெண்ணமும் கொண்டதாக சுருங்கிப் போயுள்ள சாதியவாதிகளின் எண்ணத்தில் மாற்றம் ஏற்படுத்த மேற்கொள்ள வேண்டிய பன்முகச் செயல்பாட்டுடன் பொருந்தும் இயல்பினைக் கொண்டவை கலையும் இலக்கியமும். ஆனால் ஒரு சாதியச்சமூகத்திற்கே உரிய கெடுபேறாக, இங்கு கலை இலக்கிய வெளிப்பாடுகளுக்கு ஆதாரமான கருப்பொருளும் உரிப்பொருளும் முதற்பொருளும் சாதியத்தில் தோய்க்கப்பட்டதாகவே இருக்கின்றன. தங்களது சாதி எவ்விதம் உருவானது என்று மூதாதைகள் புனைந்திறக்கிய கற்பிதங்களைத்தான் தொன்மக் கதைகளின் நீட்சியெனவும் பாரம்பரியம் மற்றும் மரபுச்சுருள் மடிப்பின் இழையெனவும் வெளிப்படுத்துகிறார்கள் பலரும்.  

10. தலித்துகளின் கலை இலக்கிய ஆக்கங்கள், அடிப்படையில் தனித்துவமான தமது சுயத்தைக் கொண்டாடுவதாகவும், சாதியமானது தமக்கு வரலாற்றுரீதியாக இழைத்துவரும் பாரபட்சங்கள், அவமதிப்புகள், சுரண்டல்கள், ஆக்கிரமிப்புகள், ஒடுக்குமுறைகள் ஆகியவற்றின் மீதாக புகார் அல்லது கண்டனத்தை தெரிவிப்பதாகவும், தமது மாண்புகளை மீட்டுக்கொள்ளும் போராட்டத்திற்கான அறைகூவலாகவும் வெளிப்படும் தேவையினைக் கொண்டவை. மக்களின் மனங்களை பாழ்படுத்தி மனிதத்தன்மையற்றவர்களாக மாற்றியுள்ள இந்துமத சாஸ்திரங்கள் உருவாக்கியுள்ள மதிப்பீடுகள் அனைத்தையும் தலைகுப்புற கவிழ்த்துக் கொட்டும் தலித் இலக்கியம், சாதியடுக்கில் மேலேறிப் போவதற்கான தந்திரங்களையோ ஏதாவதொரு சாதியை கீழிழுத்துப் போட்டுக்கொள்கிற ஆதிக்கத் தன்மையையோ உள்ளடக்கமாகக் கொண்டு வெளிப்படுவதற்கான சாத்தியங்களைத் துறந்தவை. இந்தியாவை ஒரு நாகரீகச் சமூகமாக கட்டமைக்கும் பேராவலில் அம்பேத்கர் எழுப்பிய ‘சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்’ என்கிற முழக்கமே தலித் இலக்கியத்தின் உள்ளுறையாகவும் கனவாகவும் இருக்க முடியும். இந்த முழக்கம் நடைமுறையில் சாத்தியப்படுவதற்குரியதாக மக்களின் மனங்களை தகவமைக்கும் ஓர் அரசியல் நோக்கத்தை உட்செரித்ததாகவும் அது இயல்பேற்றம் கொள்ளவேண்டியிருக்கிறது.

11. தலித் மற்றும் தலித்தல்லாத மக்களின் மனங்களுக்குள் ஊடுருவி சாதியொழிப்புக்கு ஆதரவாக மாற்றியமைக்கும் நோக்கத்தில் தலித் இலக்கியம் ஈட்டிய சாதனைப்புள்ளிகளை கணக்கிடுவதற்கான காலம் ஒருவேளை இன்னும் கனியாமலிருக்கலாம். ஆனால் வெளிப்படையாக அறிவித்துக்கொள்ளாவிடினும் நமக்குள் ஒரு மனக்கணக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. உத்திரவாதப்படுத்தப்பட்ட ‘வாசக வங்கி’யாக இருக்கும் தலித்துகளாகிய ஒத்தக் கருத்துள்ளவர்களுடன் மட்டுமே ஒதுங்கி உரையாடுவது பாதுகாப்பானதாக இருக்கலாமேயன்றி பலனளிக்கக்கூடியதாக இருக்காது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். அதனாலேயே, எலி வளையானாலும் தனிவளை என்கிற மனோபாவம் உண்மையில் தலித்துகளை ஒதுக்கிவைக்க வேண்டும் என்கிற சாதியவாதிகளின் இழிநோக்கத்தை நிறைவேற்றிக் கொடுப்பதாக மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறோம்.

12. தேவைக்கும் நமது எதிர்பார்ப்புக்கும் ஏற்ற வகையில் இல்லையென்றாலும்கூட சாதியத்திற்கு எதிரான உள்ளடக்கத்துடனான கலை இலக்கிய ஆக்கங்கள் தலித்தல்லாதவர்களிடமிருந்தும் அவ்வப்போது வெளிப்படத்தான் செய்கின்றன. பொத்தாம்பொதுவாக சாதியத்தை எதிர்க்கும் பாசாங்குகளையும், சொந்த சாதியை அம்பலப்படுத்தும் துணிவின்றி தலித்துகளின் வாழ்க்கையை எழுதியே தீருவேன் என்று அடம் பிடிக்கிற தந்திரங்களையும் இவ்விடத்தில் நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால் சுயசாதியின் கசடுகளையும் போலி பெருமிதங்களையும் இட்டுக் கட்டப்பட்ட பாரம்பரியத்திற்கு மாறான வரலாற்று உண்மைகளையும் நிகழ்கால நடப்பியலை மறைக்கப் பார்க்கும் மோசடிகளையும் சாதியின் பெயரால் நடக்கும் துரோகங்களையும் வன்முறைகளையும் பழமைவாத நம்பிக்கைகளையும் சகித்துக்கொள்ள முடியாமல் அதற்குள்ளிருந்தே வெளிப்படும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் கலகக் குரல்களையும் பொருட்படுத்தியாக வேண்டும். இதேவகைப்பட்ட விமர்சனங்களை அந்தச் சாதிகளுக்கு வெளியே இருக்கிற தலித்துகள் வைப்பதனால் ஏற்படும் தாக்கத்தை விடவும் அந்தந்தச் சாதிக்குள்ளிருந்தே எழும்பும் விமர்சனங்களால் உண்டாகும் தாக்கம் கூடுதலானது. சுயசாதியோடு முரண்படும் அவை நேரடியாக தலித்துகளுக்கு ஆதரவானவையல்ல, ஆனால் சாதியத்திற்கு எதிராக தலித்துகள் நடத்திக் கொண்டிருக்கும் கருத்தியல் போராட்டத்திற்கு வலு சேர்ப்பவை. எதிர் முகாமில் வெடிக்கும் பூசல் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதை தமக்கு ஆதரவாக பயன்படுத்திக்கொள்வதும் முடிந்தால் பெருகச் செய்வதுமாகிய தந்திரம் நமக்கு தேவைப்படுகிறது.

12. சுயசாதியுடனான முரண், தனிமனிதச் சுதந்திரத்திற்கும் படைப்பூக்கத்திற்கும் ஆளுமை வளர்ச்சிக்கும் கலந்துறவாடி வாழும் மனித சுபாவத்திற்கும் எதிரான சாதியை மறுத்து வெளியேறும் வளர்நிலையை எட்டும் சாத்தியம் கொண்டது. சாதி மறுப்பானது, சாதியொழிப்பு போராட்டத்தின் பாதையில் குறிப்பிடத்தகுந்ததொரு கட்டம். ஒட்டுமொத்தச் சமூகமும் சாதியை கைவிடும்போது தானும் சாதியைத் துறந்துவிடப் போவதாக குதர்க்கம் பேசிக்கொண்டிருக்காமல், தன்னளவில் சாதியை மறுத்து கடந்து வாழ்வது எந்தவொரு தனிமனிதருக்கும் சாத்தியமே. அப்படி கடப்பதற்கான விருப்பக்கூறுகளை வெளிப்படுத்தக் கூடிய, சுயசாதிப் பெருமிதங்களை துறக்க முன்வருகிற தனிமனிதர்களின் பெருக்கம் சமூகத்தின் கூட்டுமனநிலையில் ஓர் உடைவையும் நாம் விரும்பத்தக்க மாற்றத்தையும் ஏற்படுத்தவல்லது. 

13. சாதியத்திற்கு எதிரான உள்ளடக்கங்களைக் கொண்ட படைப்புகளை சாதி மறுப்பு கலை இலக்கியம் என்கிற பொது அடையாளத்தின் கீழ் வகைப்படுத்தும் பட்சத்தில் தலித்துகளும் தலித்தல்லாதவர்களும் குறிப்பிட்ட நோக்கத்தின் கீழ் அணிதிரண்டு செயலாற்றுவதற்கு வாய்ப்பு உருவாகும். சாதியொழிப்புக் கருத்தியலை ஏந்திச் சென்று பரந்த இச்சமூகத்தின் மீது வீசி வெடிக்கச் செய்கிற ஆற்றலும் நுட்பமும் தந்திரமும் இழைந்த ஆக்கங்களை உருவாக்குவதற்கு இப்படியானதோர் ஒருங்கிணைவு அவசியமாயிருக்கிறது.

14. உள்ளது உள்ளபடி அவ்வாறே எழுதிக்கொண்டிருப்பது ஒருவேளை தலித்தல்லாதவர்களுக்கு உவப்பாக இருக்கலாம். ஏனென்றால், இப்போதுள்ள நிலைமை அவர்களது நலன்களுக்கு உகந்ததாகவும், அவர்களது ஆதிக்கத்தை நியாயப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. நிலத்தில் காலூன்றி நிற்பதாக சொல்லிக்கொண்டு தலையையும் அதற்குள் புதைத்துக்கொள்கிற இவர்கள், இன்றைய நிலைமையே எப்போதும் இருந்து வருவதாகவும் அதுவே எதிர்காலத்தில் என்றென்றைக்குமாக நீடித்திருக்கப் போவதாகவும் நிறுவப் பார்க்கிறார்கள். ஆனால் நிலவுகின்ற எதார்த்தம் எவ்வாறாக மாறி இன்றைய நிலையை எட்டியிருக்கிறது என்றும், அந்த மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய கலகக்கூறுகளும் போர்க்குணமும் இன்றைய எதார்த்தத்தை மேலும் முற்போக்கானதாக மாற்றிச் செல்லும் சாத்தியத்துடன் இருப்பதைக் கண்டுணர்ந்தும் எழுதுவதற்கு தலித்துகள் உள்ளிட்ட சாதி மறுப்பாளர்களாலேயே முடியும்.

15. சாதியற்ற ஒரு சமூகம் என்பது இன்றைய எதார்த்தம் அல்ல. ஆனால் இன்னமும் கனவாகக் கூட காணப்படாத அந்தச் சமூகத்தை கலை இலக்கியவாதிகள் தங்களது ஆக்கங்களின் மூலம் படைத்துக் காட்ட முடியும். சகமனிதரை, மனிதர் என்ற ஒரு காரணத்திற்காகவே மதிக்கவும் அன்பு காட்டவும் கலந்துறவாடவும் பகிர்ந்துண்டு வாழவும் விரும்புகிற ஓர் உன்னத சமுதாயத்தை படைத்துக் காட்ட வேண்டுமானால் அதற்கான முதற்கனவை உலகெங்கும் கலைஇலக்கியவாதிகளே கண்டிருக்கிறார்கள். நிலவுகின்ற சூழலை மாற்றியமைக்கும் அரசியல் தெளிவும் கற்பனை வளமும் புதுமை நாட்டமும் கொண்ட கலை இலக்கியவாதிகளுக்காக இங்கும் அந்தக் கனவு காத்திருக்கிறது.
சனி, ஜூலை 2

ஐந்தாம் திசை தேடி அலையும் கதைகள் -ஆதவன் தீட்சண்யாஷோபாசக்தியின் கதைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டு அம்ருதா பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் "முத்துக்கள் பத்து" தொகுப்பிற்கு எழுதிய முன்னுரை
ருவரது ஆக்கப்பூர்வமான பங்களிப்புகள் என்னவாக இருந்தாலும் அவர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளரா இல்லையா என்பதைக் கொண்டே மதிப்பிடுகிற வினோத அளவுமானியொன்று நீண்ட காலமாக இங்கு புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த அளவுமானியினால் மதிப்புக் குறைக்கப்பட்ட சரியாகச் சொல்வதென்றால் அவமதிப்பு செய்யப்பட்ட ஆளுமைகளுடைய பட்டியலின் தலைவரிசையில் ஒரு பெயர் தொடர்ந்து இடம் பெற்றிருக்கிறதென்றால் அது ஷோபாசக்தியினுடையதாகத்தான் இருக்கும். பெரும்போக்கிற்கும் அதிகாரத்திற்கும் எதிராக உண்மையைப் பேசும் அவரது அரசியலை ஒம்பாத கருத்தியல் எதிரிகள், அவரது அரசியலை எதிர்கொள்ள முடியாதபோது எழுத்தையும் அவரது எழுத்தை எதிர்கொள்ளமுடியாதபோது அரசியலையும் அவதூறு செய்வதற்காக இடையறாது இயங்குகின்றனர். உண்மையைச் சொல்வதென்றால் அவரது அரசியல் தான் எழுத்து, எழுத்துதான் அரசியல். அவதூறுகளால் நிலைகுலையாத அந்த  அரசியலின் கலைவெடிப்பாக இத்தொகுப்பிலுள்ள கதைகளைச் சுட்டமுடியும்.

காலத்தைப் பிரதிபலிப்பதான பாசாங்கில் பொதுப்புத்திக்குள் தேங்கி அதையே நியாயப்படுத்தும் குப்பைகள் தமிழில் சிறுகதைகளாக மலிந்திருக்கின்றன. காலத்தைக் குறுக்கீடு செய்யும் கதைகள் வெகு சொற்பம். வாழ்வில் அரிதாகிப் போன மென்மையான தருணங்களை நெக்குருக எழுதி இந்தச் சமூகம் எவ்வெப்போதும் நல்லவிதமாகவே இருக்கிறது என்று பிரமைக்குள் ஆழ்த்தும் மோசடிகளுக்கும் பஞ்சமில்லை. இப்போது தேவைப்படுவதெல்லாம், வாழத்தகாததாய் இந்தச் சமூகம் ஒவ்வொரு நொடியிலும் பாழ்பட்டு வருவதை அப்பட்டமாகச் சொல்லி அதுகுறித்த உணர்வுகளைத் தூண்டச் செய்யும் எழுத்துகளே. லட்சக்கணக்கான வருடங்களின் பரிணாம வளர்ச்சியில் எட்டிய மனித நிலையை அதனிலும் கீழான நிலைக்கு தாழ்த்தி வரலாற்றைப் பின்னோக்கிச் சுழற்றும் குரூரங்களை அம்பலப்படுத்துவதன்றி எழுத்துக்கு வேறென்ன   இலக்கு இருக்க முடியும்? சமகாலப் பிரச்னைகளை கதைக்குள் பேசத்தொடங்கினால் கலையமைதி குலைந்துவிடும் என்கிற சால்ஜாப்பை சொல்லி வெகுகாலத்திற்கு தப்பித் திரிய முடியாது. சமகால வாழ்வினை அதன் சகல பரிமாணங்களோடு கதையாக மாற்றித் தருவதற்கான சவாலை எதிர்கொண்டு அதற்காக உழைப்பதன் வழியே கண்டறியும் நுட்பங்களுடன் எழுதக் கோருகிறது காலம். காலத்தின் அத்தகைய கோருதலை உணர்ந்த ஒரு குரல் ஷோபாசக்தியினுடையது. அவர் சொல்கிறார்-

‘நமது சூழலில் இலக்கியமும் தீவிர நேரடி அரசியலும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பகுத்துப் பார்க்க முடியாதவாறு ஒன்றில் ஒன்று கலந்திருக்கின்றன.  அதிகார சக்திகளின் எந்தவொரு மக்கள்விரோத செயலுக்கும் நாம் உடனுக்குடன் எதிர்வினைகள் செய்ய வேண்டும். அதிகாரச் சக்திகளின் நிழலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ நின்று நாம் எழுதுவதைவிட எழுதாமல் சும்மாயிருந்து மதுவருந்தி மாய்வதே மேலானது என்பது எனது உறுதியான கருத்து. ஒரு புனைவு எழுத்தாளன் அரசியல் எழுத்தில் ஈடுபடும்போது அவனுடைய படைப்பாற்றல் திசைதிருப்பப்படுகிறது என்றொரு கருத்தும் இலக்கிய எழுத்துலகில் காலம்காலமாய் ஒருசாராரால் பரப்பப்பட்டு வருகிறது. நமது சகமனிதன் கொல்லப்படும்போது, சமூக இழிவில் வாழும்போது, அடிமைத்தனத்தில் சிக்கியிருக்கும் போது அதைக் குறித்துப் பேசாமல் படைப்பாவது மயிராவது! நம் ஒவ்வொரு எழுத்தும் நமது சகமனிதருக்காகத் துயருறுவதே இன்றைக்கான புலம் பெயர்ந்தோர் இலக்கியமாக இருக்க வேண்டும். கொண்டாட்டத்தையும் காதலையும் நம் அடுத்த தலைமுறை எழுதட்டும். அதற்கான முன்நிபந்தனையாக நாம் உண்மையை எழுதவேண்டும். அதாவது துயரை எழுதவேண்டும். ஏனென்றால் நம் காலத்தில் உண்மை என்பது துயராய் இருக்கிறது...’

இவ்வளவு தீர்க்கமான அரசியல் பார்வை கொண்ட இவரது பெரும்பாலான கதைகள் தனி ஈழத்திற்கான போராட்டத்துடன் தொடர்புடையவை.  அதேவேளையில், தனி ஈழ ஆதரவு தனி ஈழ எதிர்ப்பு என்று தொடங்கி பின்னாளில் புலி ஆதரவு புலியெதிர்ப்பு என்பதாக குறுக்கப்பட்ட ஈரெதிர் தட்டை நிலைகளிலிருந்து விலகி நிற்பவை. தமிழர்கள் தனிஈழம் கோருவதற்கு இருபதாண்டுகளுக்கும் முன்பிருந்தே தமிழர்கள் மீது இலங்கை அரசப்படையாலும் சிங்கள இனவாதிகளாலும் நிகழ்த்தப்பட்டு வரும் கூட்டுப் படுகொலைகள், வன்முறைகள், பாலியல் சித்திரவதைகள், சொத்தழிப்பு, காணிபறிப்பு, கல்விமறுப்பு ஆகியவற்றை கண்டும் கேட்டும் கொதிக்கும் உள்ளம் அவருடையது. சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையும் அதற்கெதிராக தொடங்கப்பட்ட போராட்டமும் வடகிழக்கின் தமிழர்களை மட்டுமல்லாது, மலையகத் தமிழர்கள், தமிழ்பேசும் முஸ்லிம்கள், சிங்களவர்கள் என்று இலங்கையின் குடிமக்கள் ஒவ்வொருவரது தனிப்பட்ட வாழ்வையும் என்னவாக  சிதைத்திருக்கிறது என்பதை காட்டிச் செல்லும் இவரது கதைகள் நமது முன்முடிவுகளை பொலபொலவென உதிரச் செய்பவை. வீரம், மானம், ஆயுதம், போர், மனிதவுரிமை மீறல், பேச்சுவார்த்தை, சமாதானம், அதிகாரப்பகிர்வு, புலப்பெயர்வு  என்று வெறும் சொற்களாக நம்மை வந்தடைகிறவற்றுக்குப் பின்னே அழித்தொழிக்கப்பட்ட ஆயிரமாயிரம் உயிர்களின் வாதையை பெருங்குரலெடுத்துப் பேசுபவை.

காட்டுமிராண்டிகாலத்திலும்கூட கையாளப்படாத, மனிதமாண்புகளுக்குப் புறம்பான அவமதிப்புகளும் வன்முறைகளும் சித்திரவதைகளும் அதிகாரத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் கொடூரங்களின் பூமியாக இருக்கிறது இலங்கை.   ஊனமுற்ற தன் காலிலிருந்து வெட்டியெடுத்து திணிக்கப்பட்ட சதைத்துண்டை விழுங்க நேர்ந்தவர்களும், சற்றே அசைந்தாலும் சதைகளை குத்திக் கிழித்துவிடும்படியாக முட்கம்பிகளால் பின்னப்பட்ட முக்கோண வடிவ கரப்புக்குள் நாட்கணக்கில் ஆடாமல் அசையாமல் தூக்கமும் உணவுமின்றி அடைக்கப்பட்டவர்களும், உடம்பெல்லாம் பல் பதிந்த காயங்களோடு பிணமாக கண்டெடுக்கப்படும் பச்சிளம் பாலகிகளும் ஷோபாவின் கதைகளின் வழியே அதற்கு சாட்சியமாய் வந்து நம்மை பதகளிக்க வைக்கிறார்கள். அரச பயங்கரவாதத்தை எதிர்த்து உருவான இயக்கங்கள் சந்தேகத்தின் பேராலும் யூகங்களின் பேராலும் பயங்கரவாதத்தின் அஞ்சத்தக்க வடிவங்களை தமது சொந்த மக்கள்மீதே பிரயோகிப்பதைக் கண்டு விம்மி வெடிக்கும் நெஞ்சோடு பேசும் இக்கதைகள் தன்னியல்பாகவே பாதிக்கப்பட்டவர்களின் கண்ணோட்டத்தில் வெளிப்பட்டிருப்பவை.  நாலாப்புறமும் அடைபட்ட நிலையில் ஐந்தாம் திசை தேடியலைந்த அந்த மக்கள் மார்பிலே ராணுத்தின் குண்டுகளையும் முதுகிலே இயக்கத்தவர்களின் குண்டுகளையும் தாங்கிச் சாக நேரிட்டதற்காக நியாயம் கேட்பவை. அவரே ஓரிடத்தில் சொல்வது போல ‘இந்த யுத்தத்தில் நானுமொரு முன்னைய பங்காளி என்ற வகையிலும் இந்த யுத்தத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டவன் என்ற நிலையிலிருந்தும் என் கருத்துகளையும் யுத்த எதிர்ப்புக்குரலையும் ஒலித்துக் கொண்டுதானிருப்பேன். காதுள்ளவர் கேட்கட்டும்.’

***
இலங்கை பிரிட்டிஷாரின் காலனியாக இருந்த காலத்தில் அவர்களோடு நெருக்கமும் அரசதிகாரத்தில் செல்வாக்கும் பெற்றிருந்த யாழ்ப்பாணத்து மேட்டுக்குடிகள் 1875 முதலே பிரிட்டனுக்கும், மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற பிரிட்டிஷாரின் மற்ற காலனி நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்று பொருளீட்டி வருவதில் ஆர்வம் காட்டினர்.  இலங்கையின் பொருளாதாரத்தை மணியார்டர் பொருளாதாரம் என்கிற புதுவகைமையால் சுட்டுமளவுக்கு அவர்களது பணப்போக்குவரத்து பெருமளவினதாய் இருந்திருக்கிறது. தமது பெண்கள் மிலேச்சர்கள் நடத்தும் மிஷனரி கல்விக்கூடங்களுக்கு படிக்கப் போய் கலாச்சாரம் பாழ்படுவதை தடுப்பதற்காக இவர்கள் கொடுத்த நிதியாதாரத்திலிருந்துதான் யாழ்ப்பாணத்தில் சைவப்பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 1929 பிப்ரவரியில் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட மலாயன் பென்சனர் சங்கத்தில் 1962ஆம் ஆண்டு 2030 பேர் ஆயுட்கால உறுப்பினர்களாக பதிந்திருக்கிறார்கள் என்கிற விவரத்தைப் பார்க்கும் போது அதுவரைக்காலமும் அவர்கள் பிறநாடுகளுடன் வைத்திருந்த தொடர்பை அறிய முடிகிறது. இதேபோல 1960களில் பிரிட்டன் அரசு அறிவித்திருந்த சிறப்புத்திட்டம் ஒன்றின்கீழ் அநேக யாழ்ப்பாண மேட்டுக்குடியினர் தேசிய சுகாதாரத்துறையில் மருத்துவப் பணியாளர்களாகவும் வேறுபல வெள்ளைக்காலர் உத்தியோகஸ்தர்களாகவும் சேர்ந்துள்ளனர்.

இப்படி உலகின் பல நாடுகளிலும் பல்கிப் பெருகியிருந்த யாழ்ப்பாண மேட்டுக்குடிகளுடன் தொடர்பிலிருந்த சொந்தபந்தங்கள், இலங்கையில் இனமோதல்கள் அதிகரிக்கத் தொடங்கியதும் அந்தந்த நாடுகளுக்கு எளிதாக புலம் பெயர்ந்து போய்விட்டனர். ஆனால் அரசியல் காரணங்களுக்காகவும், உயிர்வாழும் எளிய ஆசையினாலும் சொந்த மண்ணைத் துறந்து அகதிகளாக வெளியேற நேர்ந்த பலர் அடைந்த துன்பதுயரங்கள் கொடூரமானவை.  யாழ்ப்பாணத்தின் தெருவில் நிறுத்தி நாலுசுற்று சுற்றிவிட்டால் வீட்டுக்குப் போகும் வழி தெரியாமல் முழித்து தடுமாறக் கூடியவர்கள் என்று ஷோபாசக்தியால் குறிப்பிடப்படும் அந்த வெள்ளந்திகள் எத்தனையோ காடுமலை கண்டங்கடல்களைத் தாண்டி ஏதேதோ நாடுகளின் எல்லைக்கம்பிகளில் முதுகுத்தோல் குத்தி ரத்தம் சொட்டச்சொட்ட கள்ளத்தனமாக புகும்படியாக அவர்களை வாழ்க்கை வெருட்டியிருக்கிறது. இந்திய வம்சாவளித் தமிழர்களை கள்ளத்தோணிகள் என்று பழித்து மகிழ்ந்த சமூகத்தில் பிறந்தவர்கள், உலகின் ஏதாவதொரு நாட்டின் எல்லையை பதுங்கிப்பதுங்கி கடக்க நேரிட்ட அவலம் ஒரு வரலாற்று முரண்தான்.

இலங்கைப்படையினர் வடக்கை விட கிழக்கிலேயே அதிகமான கூட்டுப் படுகொலைகளை செய்திருந்த போதும், வடக்கே நிகழ்த்திய தமிழர்விரோத அட்டூழியங்களுக்கு சற்றும் குறையாவண்ணம் கிழக்கிலும் நிகழ்த்திய போதும், கிழக்கின் மக்கள் பெருமளவில் புலம் பெயராமல் தாயகத்திலேயே இருக்க, வடக்கிலிருந்தோ புலப்பெயர்வு இன்றும் தொடர்கிறது.   புலம் பெயர்ந்து செல்வதற்கும் சென்ற பின் தங்குவதற்கு இடமும் வயிற்றுப்பாட்டுக்கு வேலையும் அகதிக்கார்டு பெறுவதற்கான அல்லாட்டமுமாகிய தொடர்முறையின் ஒவ்வொரு கட்டமும் தமிழர்களே தமிழர்களுக்கு எதிராய் நிகழ்த்தும் சுரண்டல் ஏமாற்று களவு வஞ்சகங்களால் நிரம்பியது. ஒரு சாண் வயிற்றை நிரப்பவும் தலை சாய்த்து தூங்க ஓர் இடத்துக்கும் மனிதகுலத்தைத் தவிர வேறெந்த சீவனும் இவ்வளவு அல்லலையும் இழிவையும் சந்திக்கிறதா என்கிற துயரம் மிக்க கேள்வியை அங்கதமாய் எழுப்புகிறார் ஷோபாசக்தி.

எல்லாவற்றையும் இழந்து பல்லாயிரம் மைல்கள் ஓடிவந்த அவர்கள் சுமந்துவந்த இரண்டில் ஒன்று உயிர், மற்றது சாதி. அவர்களைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட இரண்டும் ஒரே பெறுமதி கொண்டவை என்பது வருந்தத்தக்க உண்மை. தாழ்ந்த சாதிக்காரனைக் காதலிக்கும் மகளை எரித்துக் கொல்லும் பெற்றோர்களும், தந்தையின் இறுதிச்சடங்கை செய்யும் தருணத்தில்கூட  தங்களை கரையார் என்று பிறர் தாழ்வாக நினைத்துவிடக்கூடாதெனச்  சினக்கும் மகன்களும் நிரம்பியதாக இருக்கிறது புலம்பெயர் இலங்கைத் தமிழ்ச்சமூகம். சாதியாச்சாரம் அனுமதிக்காத வேலைகளைச் செய்துகொண்டும் சாதியாச்சாரத்துக்குப் புறம்பான உணவை உண்டபடியும் புழங்கத்தகாதவையென சாதி சொல்லும் இடங்களிலெல்லாம் புழங்கிக்கொண்டும் இருக்கிற அவர்கள் சாதிப்புனிதம், சைவத்தூய்மை காக்கப்போவதாக கூறிக்கொண்டு மெனக்கிடுவதில் உள்ள முரண்களைக் கண்டு ஷோபாவுக்கு ஏற்படும் பரிதாபமும் கோபமும் பகடியாக வெளிப்படாத கதைகளே இல்லையெனலாம்.

போர்ச்சூழலை காரணம் காட்டி தாயகத்திலும் புகலிடத்திலும் மறுக்கப்பட்டு வந்த கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை  விடாப்பிடியாக ஏந்திப் பிடிக்கும் போராட்டத்தில் இணைந்துநின்று  எழுதப்பட்டவை இக்கதைகள் என்பதை கவனத்தில் கொள்க. அந்தப் பாரம்பரியம் அணையவிடாமல் சுடர்ந்ததன் தொடர்ச்சியிலேயே இப்போது போருக்குப் பிந்தைய இலக்கியம் என்கிற புதுவகைமை உருவாகி வருகிறது. முப்பதாண்டுகாலம் மறுக்கப்பட்ட  கருத்துரிமையை மீட்டுக் கொண்ட வேகம் கொப்பளிக்க, தங்களது வாழ்வில் போர் ஏற்படுத்தியிருக்கும் இழப்புகள் குறித்த ஒப்பறிக்கை போல பெருக்கெடுத்துவரும் இப்படைப்புகள் ஷோபாசக்தியின் தலைமுறையினர் தமது படைப்புகள் வழியே இதுவரைகாலமும் முன்வைத்த நியாயங்களுக்கும் எழுப்பிய கேள்விகளுக்கும் வலுசேர்ப்பவை.

***

இலங்கையிலிருந்து வெளியேறி கனகாலம் கடந்துவிட்ட நிலையிலும் தாயகத்தின் மக்களோடும் அங்குள்ள அரசியல் சூழலோடும் உயிரோட்டமான தொடர்புகளைப் பேணி அவரளவுக்கு எழுதியவர் என்று அவரையேதான் சொல்லமுடியும். தாயகத்திற்கு திரும்பும் வாய்ப்பை இழந்திருக்கிற அவர் இலங்கையின் ஒவ்வொரு அங்குலத்தையும் அசைவையும் ஒவ்வொரு நொடியிலும் உன்னிப்பாக கண்டாற்போல அவதானித்து அவர்களது மொழியில் எழுதுவதைக் காணும் போது அவரது உடலும் உயிரும்தான் புலம்பெயர்ந்திருக்கிறதேயன்றி அவரது ஆன்மா இன்னமும் அந்த மண்ணில்தான் உளைந்து அலைகிறது என்று நினைத்துக் கொள்வேன். இத்தொகுப்பின் கதைகளை வாசிக்கும்போது நீங்களும் அவ்வாறே நினைப்பீர்கள் என நம்புகிறேன். 

தீபன் படத்தின் நாயகனென்று சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் அவர் ஆக்காட்டி இதழில் “இறைக்கிற கிணறுதான் சுரக்கும். இலக்கியம், சினிமா, இசை, நாடகம் இவையெல்லாம் ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்புள்ள கலைகள்.  இந்தக் கலைகளின் சங்கமம்தானே சினிமா. எனது இலக்கியப் பரிச்சயம் நான் பங்கெடுக்கும் சினிமாவுக்கும் எனது சினிமாப் பரிச்சயம் நான் எழுதும் இலக்கியத்திற்கும் உறுதுணைகளாகவே அமையும். தவிரவும் நான் சினிமாவில் பங்கெடுப்பது என்பது எப்போதாவது ஒருமுறைதான் நிகழும் செயல். இலக்கிய வாசிப்பும் எழுத்தும் இல்லாமல் எனக்கு ஒரு நாளில்லை…” என்று சொல்லியிருக்கிறார். இலக்கிய வாசிப்புக்காகவும் எழுத்துக்காகவுமே உதிக்கிற அவரது ஒவ்வொரு நாளிலிருந்தும் புதிய கதைகள் நமக்கு கிடைப்பதாகுக. 

23.10.15

மேற்கோள்கள்:
1.முப்பது நிறச் சொற்கள், ஷோபாசக்தியின் கட்டுரைகள், கருப்புப்பிரதிகள் வெளியீடு
2. ஆக்காட்டி – கலை இலக்கிய இருமாத இதழ், 2015 ஜூலை -ஆகஸ்ட்

வில்லியம் ப்ளேக் கடிதமும் கவிதையும் - வ. கீதா

எனக்குப் பிடித்த ஆங்கிலக் கவிஞர்களில் வில்லியம் ப்ளேக்கும் (William Blake)  ஒருவர். 18ஆம் நூற்றாண்டு. அவர் ஓவியர், டிசைனர், அச்சாளர். அ...