ஞாயிறு, ஆகஸ்ட் 13

காமிய தேசத்தில் ஒருநாள் - ஆதவன் தீட்சண்யா

அதிகாலை 2.31 மணி.
அதிகாரப்பூர்வமாக கண்விழிப்பதற்கான அலாரம் ஒலிப்பதற்கு இன்னும் 29 நிமிடங்களிருந்தன. அதற்குள்ளாகவே அவனுக்கு விழிப்பு வந்துவிட்டது. விழித்ததுமே அவனுக்கு எழுந்த முதல் சந்தேகம், தூங்கினோமா என்பதுதான். இமைகளின் உட்புறத்தில் கங்கு மூட்டி தீய்ப்பதுபோல கண்களில் அப்படியொரு எரிவு. தூக்கத்தின் போதாமை, உடலெங்கும் அணுவணுவாய் நகரும் நோவாகி தன்னை பெரிதும் வதங்கச் செய்திருப்பதாக உணர்ந்தான்.

நள்ளிரவு 12 மணிக்கு வேலை முடிந்ததும் விர்ரென வண்டியை முறுக்கிக்கொண்டு வந்தும்கூட வீடு சேரும்போது இன்றைக்கும் 12.32மணி ஆகிவிட்டிருந்தது. நாடு முழுவதும் வேலை முடிவது அந்நேரம்தான் என்பதால் சாலைகளில் மிதமிஞ்சிய போக்குவரத்து நெரிசல். திருத்தியமைக்கப் பட்ட புதிய வேலைநேரம் அமலுக்கு வந்த கடந்த 18ஆம் தேதியிலிருந்து இதே அக்கப்போர் தான். வேலைக்கு வரும்போதும் திரும்பும் போதும் சாலையின் ஒவ்வொரு அங்குலத்திலும் மல்லுக்கட்ட வேண்டியிருந்தது. புகையும் அழுக்கும் படிந்த உடம்பை நசநசப்பு தீர கழுவிக்கொள்ளவும் முடியாத அசதி. தூளியில் உறங்கும் குழந்தையின் முகத்தைக்கூட பார்க்கத் தோன்றவில்லை. சாப்பிட்டு முடித்தக் கையோடு படுக்கையில் விழுகையில் மணி ஒன்றை தொட்டிருந்தது. உடலும் மனமும் இயல்புக்குத் திரும்பினால்தானே ஆழ்ந்த உறக்கத்திற்குள் செல்லமுடியும்? ஆனால் அதற்குள்ளாகவே நேரம் தீர்ந்து பதறியடித்துக் கொண்டு விழிக்க வேண்டியதாகிவிட்டது.

படுக்கைக்கு நேர்மேலே கூரையின் உட்புறத்தில் பதிக்கப்பட்டிருந்த டிஜிடல் கடியாரம் 2.31 மணி எனக் காட்டியது. மல்லாந்து படுத்திருந்தால் பார்க்கத் தோதானது அது. எந்தப்பக்கம் திரும்பினாலும் பார்ப்பதற்காக நாற்புறச் சுவர்களிலும் பதிக்கப்பட்டிருந்த கடியாரங்களும் அதே நேரத்தைத்தான் காட்டினஅடுத்த 29வது நிமிடத்தில் அவை எழுப்பப்போகும் ஒலிக்காக அவன் காத்திருக்கத்தான் வேண்டும். அதிகப்படியான நேரம் தூங்குவதைப் போலவே அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் முன்பாக கண்விழிப்பதும் அரச நிந்தனை என்பதை அறியாதவனல்ல அவன். அந்தக் குற்றத்திற்குரிய அபராதத்திலிருந்தும் தண்டனையிலிருந்தும் தப்பிக்கும் உபாயமாக, தான் இன்னமும் தூங்கிக்கொண்டிருப்பதாகவே நினைத்துக் கொண்டான். மட்டுமன்றி, அவன் தானே தன்னை நம்புவதற்காக வேண்டுமேன்றே செயற்கையாக குறட்டைவிடவும் பழகியிருந்தான். ஆனால் தூங்கிவிடக்கூடாது என்பதில் கவனம் தோய்த்து அலாரத்திற்காக காத்திருந்தான்.  

கோமிய தேசியத்தின் முதல்வர் ஒருவர் அன்றாடம் 18-20 மணிநேரம் வேலை செய்ய முடியாத அரசு ஊழியர்கள் தாங்களாகவே பணியிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று உளறியதற்கு ஊடகங்களில் கிடைத்த பரவலான வரவேற்பை பார்த்து காமிய தேசத்தின் பிரதமர் உலகளந்தான் பரவசமாகிப் போனார். தேசத்தில் நிலவுகிற பொறுப்பற்ற பணிக்கலாச்சாரத்தின் மீது துல்லியத் தாக்குதல் ஒன்றை இங்கு நடத்த இதுவே உகந்த தருணம் என்று முதலாளிகள் சங்கமும் நச்சரிக்கத் தொடங்கியது. அதன்பேரில் அவர் அமைத்த தேசிய வேலைநேர சீரமைப்புக்குழுவின் பரிந்துரைப்படியே அதிகாலை 4மணி முதல் நள்ளிரவு 12 வரை நாடு முழுவதும் வேலை நேரமாகியது.

வேலைக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள 4 மணி நேரத்தை நொடிவாரியாக பிரித்து திறமையாக பயன்படுத்தும் திட்டமொன்றை தேசிய ஓய்வுநேர மேலாண்மை வாரியம் வகுத்தளித்திருந்தது. அதன்படி அவன் இந்நேரம் தூங்கிக்கொண்டுதான் இருந்திருக்க வேண்டும். ஆனால் குறித்த நேரத்தில் விழித்துவிட வேண்டும் என்கிற நினைப்பின் அழுத்தம் அவனை தூங்கவொட்டாமல் செய்துவிடுகிறது. எவ்வாளவு நேரத்திற்கு தூங்கப்போனாலும் அதிகாலை 3 மணிக்கு எழுந்தேயாக வேண்டும். அப்படியானால்தான் தயாராகி 3.59 மணிக்கு அலுவலகத்தில் நுழைய முடியும். ஒரு நிமிட தாமதத்திற்கும் பாய்கிற ஒழுங்கு நடவடிக்கையை தவிர்ப்பதற்காகவே தூங்காமலே தூங்கியதான கற்பனையை அவன் நம்பிக் கொண்டிருந்தான். அன்றிலிருந்து உறங்கவே உறங்காத அவன் உறக்கத்திலிருந்து எழுந்துகொண்டதாக நம்பிக் கொண்டிருக்கிறான். வெளியில் சொன்னால் நல்ல கதை என்று கேலிதான் பேசுவார்கள். ஆனால் உண்மை அதுதான். தொடர்ந்து இருபது மணி நேரம் அலுவலகத்தில் உட்கார்ந்தே கிடப்பதால், இப்போதெல்லாம் அவன் படுத்திருக்கும் போதும்கூட, தான் உட்கார்ந்தே இருப்பதாக நினைத்துக்கொள்கிறான்.

முன்பாக இருந்தால் ஒலிக்கும் அலாரத்தை நிறுத்திவிட்டு மீண்டும் இழுத்துப் போர்த்தி தூங்கி விடுவான். இப்போதோ அலாரம் அடிக்கத்தொடங்கிய முப்பதாவது நொடிக்குள் எழுந்தாக வேண்டும். இல்லாவிடில், கட்டிலோடு இணைக்கப்பட்டிருக்கும் மின்னதிர்க் கருவி தானாகவே இயங்க ஆரம்பித்துவிடும். சுரீலென அதிலிருந்து பாய்ந்த மின்சாரம் உடலின் ஒவ்வொரு அணுவையும் வெடுக்கென தாக்கும் வாதையை அவன் முதல்நாளே அனுபவித்திருக்கிறான். மறுபடி மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் எச்சரிக்கையோடு இருந்தான்.

அருகில் படுத்திருந்த அவனது மனைவி 1111 2222 3333 4444.1 கூட முன்பே விழித்து விட்டாள். ஆனால் இஷ்டப்பட்ட நேரத்திற்கு எழுந்துவிட முடியாதல்லவா. கடந்த ஞாயிறன்று நள்ளிரவு படுக்கைக்குச் செல்லும்முன் வெளியாகியிருந்த அரசாணையின் படி அவள் எழுவதற்கு அதிகாரப்பூர்வமாக இன்னும் 14 நிமிடங்கள் இருந்தன. பின்தூங்கி முன்னெழும் வழக்கத்தை பெண்கள்  கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்கிற அவ்வுத்தரவுப்படி அவள் தன் கணவன் 1111 2222 3333 4444 எழுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே எழுந்து சிசிடிவியில் முகம் காட்டவேண்டும். அந்த 15 நிமிடங்களுக்குள் செய்து முடித்தேயாக வேண்டிய வேலைகளை மனதுக்குள் ஒத்திகை பார்த்தபடி எழுவதற்கு தயாராக படுத்திருந்தாள். வேட்டுச்சத்தம் கேட்டதும் பாய்ந்தோடுவதற்கு மைதானத்தில் ஆயத்தமாயிருக்கும் ஒரு வீராங்கனையைப் போல அவள் தன்னை நினைத்துக்கொண்டாள்.

அதிகாலை 2.46 மணி.
அவளுக்கான அலாரம் பிங்க் நிற ஒளியுடன் ஒலிக்கத் தொடங்கியது. அவ்வளவுதான், அவள் விசை முடுக்கப்பட்ட ஓர் இயந்திரம்போல் பரபரவென தனது வேலைகளைத் தொடங்கினாள். துள்ளியெழுந்து கட்டிலை விட்டிறங்கிய அவள், கணவனது காலைத்தொட்டு வணங்குவதையும் தாலியைக் கண்ணில் ஒற்றிக்கொள்வதையும் செல்ஃபி எடுத்தாள். அந்த புகைப்படங்களை தேசிய பண்பாட்டு மீட்டெடுப்பு ஆணையத்திற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவிட்டு அவள் தேநீர் தயாரிக்க அடுக்களைக்குள் நுழைந்தாள்.

அதிகாலை 2.48 மணி.
பழக்கதோஷத்தில் அடுக்களைக்குள் போய்விட்ட அவளுக்கு சட்டென்று சுதேசி அமலாக்கம் மற்றும் கண்காணிப்புச் சங் வெளியிட்ட 64வது புதிய சட்டம்  நினைவுக்கு வந்தது. நல்ல வேளையாக அடுப்பை மூட்டாமல் இருந்ததால் தப்பித்தாள். ஒருவேளை அடுப்பை மூட்டியிருப்பாளேயானால்  சிசிடிவி அவளை சங் அதிகாரிகளிடம் கையும்களவுமாக காட்டிக் கொடுத்திருக்கும். அன்னிய பானமான தேநீரை தயாரித்தது, அருந்தத் தூண்டியது, அருந்தியது என அடுக்கடுக்கான தேசவிரோதக் குற்றங்களை இழைத்திருப்பாள். அவள் மட்டுமல்லாமல் குடித்த குற்றத்திற்காக அவளது கணவனும் தண்டனைக்கு ஆளாக நேரிட்டிருக்கும். சீனப் பொருட்களை சந்தையிலிருந்தும் சனங்களின் மனங்களிலிருந்தும் முற்றாக ஒழித்துக் கட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ள அரசாங்கம்  சீன பானமான தேநீரை தயாரிப்பதோ அருந்துவதோ அருந்துவதற்கு தூண்டுவதோ ஏழ்பிறப்பிலும் மரணதண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருக்கிறது. (மறுபிறவியில் அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருப்பதால் அனைத்துச் சட்டங்களும் ஏழ்பிறப்புக்கும் சேர்த்தே நிறைவேற்றப்படுகின்றன). சட்டத்திற்கு புறம்பாக தேநீர் குடிப்பவர்களைக் கண்டறிந்து களையெடுப்பதற்காக ஒவ்வொரு நாளும் குடிமக்கள் தமது மலஜலத்தை ஆய்வகத்திற்கு அனுப்பி நிரூபித்துக்கொள்வது அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்தை ஏமாற்றிவிடுகிறவர்கள்கூட ஆளுங்கட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 'மோப்ப சங்கிடம் தப்பித்துவிட முடியாது. அவர்கள் நடத்தும் அதிரடி சோதனைகளின்போது சந்தேகத்திற்குரியவர்கள் என கடந்த ஒருவாரத்தில் மட்டும் 27 பேரை கல்லால் அடித்தே கொன்றிருக்கிறார்கள். இவ்வாறு கொல்லப்படுகிறவர்களின் எண்ணிக்கை கூடக்கூட சம்பந்தப்பட்ட சங்கிகளுக்கு அரசில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும் என்பதால் அவர்கள் மிகத் தீவிரமாக மோப்பம் பிடித்தார்கள்.

பெரும் இக்கட்டிலிருந்து தன்னையும் தனது குடும்பத்தையும் தப்பிக்கவைத்த தனது சமயோசிதப் புத்தியை மெச்சிக்கொண்டபடியே பழைய பால்குண்டாவை எடுத்துக்கொண்டு பின்கட்டிலிருந்த தொழுவத்திற்கு ஓடியவள் 0085 6219 3941 4316 முதல் 0085 6219 3941 4320 வரை எண்ணுள்ள காளைகளை வணங்கி அவை பெய்யும் காமியத்திற்காக காத்திருந்தாள் (கோமியமல்ல, காமியம்). அந்தக் காளைகள் இவளது வீட்டிற்கு வந்து ஒருவாரம் ஆகிவிட்டிருந்த போதிலும் இன்னும் அவை இவளை இணக்கமற்றே பார்த்தன. காளைக்கறி உண்பதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதுமே இரவோடிரவாக விவசாயிகள் தமது காளைகளை ஆளுங்கட்சியினரின் வீடுகளுக்குள் விரட்டியடித்து விட்டார்கள். அப்படியான காளைகளில் ஐந்தை வளர்க்கும் பொறுப்பை அரசாங்கம் இவர்களது குடும்பத்திடம் ஒப்படைத்திருக்கிறது. காமியம் பெய்யும்வரை காத்திருந்து பிடித்துக்கொண்டு வந்து கணவனை எழுப்பினாள். வெறும் வயிற்றில் குடிக்கவேண்டிய ஆகாரமென அரசால் அறிவிக்கப்பட்டிருந்த காமியத்தை கணவனுக்கு பெரிய தம்ளரில் கொடுத்தது போக மீதியில் தான் கொஞ்சம் குடித்துவிட்டு மிச்சத்தை குழந்தைக்கு சங்கடையில் எடுத்துவைத்தாள். குழந்தைக்கு சட்டம் தெரியாதல்லவா, அதனால் அது புகட்டுகிற காமியத்தை குமட்டிகுமட்டி வெளியே துப்பியது. சிசிடிவியில் சிக்கிவிட்டால் குழந்தைக்கும் தங்களுக்கும் கடும் தண்டனை கிடைக்கும் என்பதால் அவள் குழந்தைக்குப் புகுட்டும்போது வீட்டுக்குள்ளேயே மறைவிடம் ஒன்றை உண்டாக்கியிருந்தாள். இவளுமே கூட காமியத்தில் உலைவைத்து காய்ச்சும் கஞ்சியை குடிக்க ஒம்பாமல் திணறிக்கொண்டுதானிருந்தாள்.

கணவனைப் போலவே இவளும் ஓர் அரசாங்க ஊழியர்தான். இவளுக்கு இது தலைச்சன் பிள்ளைபச்சையுடம்பு தேறி முன்புபோல வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கியிருந்தாள். 26 வாரங்கள் கொடுக்கப்பட்டிருந்த மகப்பேறு விடுப்பு முடிய நேற்றிரவு 11.59மணியோடு முடிந்தவிட்டது. உலகிலேயே கனடாவுக்கும் நார்வேவுக்கும் அடுத்தபடியாக அதிகமான நாட்களை மகப்பேறு விடுமுறையாக தருவது இந்த நாடுதான் என்பதில் இவளுக்கு சற்றே பெருமிதமிருந்தது. குழந்தையைப் பார்ப்பதற்கென்று வீட்டுக்கு வரும் சக ஊழியர்கள், நீ இல்லாமல் ஆபிஸ் ஆபிஸாகவே இல்லை சீக்கிரம்  வந்து சேர்... என்று அவளை கிளப்பிவிட்டுப் போனார்கள். இதோ முடியப்போகுது, வந்துவிடுகிறேன் என்று ஆசையோடு சொல்லி இவளும் அவர்களை அனுப்பி வைப்பாள். அலுவலகம் போகத் தொடங்குவதற்கு முன்பு குழந்தையை கவனித்துக்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் பலவற்றையும் செய்து கொண்டிருக்கும் போதே நாட்கள் கரைந்துவிட்டன. அவ்வளவுதான், விடிந்தால் காலையில் மீண்டும் வேலையில் சேரப்போகிறோம் என்கிற பரவசத்திலும் திரும்பி வரும்வரை குழந்தை எப்படி தாங்குமோ என்கிற கவலையிலுமாக தூக்கம் வராமல் புரண்டு கொண்டேயிருந்தாள். கணவனைப்போலவே அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் முன்பாகவே விழித்துவிட்டிருந்தாள். தனக்கான அலாரம் அடித்ததுமே எழுந்தவளுக்கு நிமிரக்கூட நேரமின்றி அடுத்தடுத்த வேலைகள் காத்திருந்தன. கணவனை தயார்படுத்தி அனுப்பிவிட்டு தானும் தயாராகி அலுவலகம் செல்ல வேண்டுமே என்கிற நினைப்பு அவளை அவ்வளவு வேகமாக இயக்கியது.

அதிகாலை 3.31 மணி.
மூன்று மணிக்கு எழுந்து மனைவி தந்த இளஞ்சூடான காமியத்தை மிடறுமிடறாக குடித்துவிட்டு கழிப்பறைக்குள் ஓடியவன் வெகுநேரமாக வெளியில் வரவேயில்லை. தூக்கமின்மை, நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், தொடர்ந்து உட்கார்ந்தே இருப்பதால் வரும் முதுகுவலி, அடுத்தடுத்து வெளியாகும் அரசாங்க உத்தரவுகளால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றால் அலைக்கழிந்துக் கொண்டிருந்தவனை புதிதாக மூலநோய் வந்து மேலும் படுத்தியெடுத்தது. அலுவலகத்தில் இருந்தாக வேண்டிய இருபது மணி நேரம் போக எஞ்சியுள்ள நான்கே மணி நேரத்தில் பெரும்பகுதியும் இப்படி கழிப்பறையிலேயே கழிகிறதே என்கிற கவலையும் அவனை வாட்டத் தொடங்கியது.

குளியல் என்கிற பெயரில் தண்ணீரில் முங்கியெழுந்து வந்த கணவன் 1111 2222 3333 4444 அவதியவதியாக வாயில் எதையோ பிட்டு போட்டுக்கொண்டு மத்தியானத்துக்கும் அந்திக்குமான சோத்துக் கூடையைத் தூக்கிக்கொண்டு ஓடும்போது மணி 3.31 ஆகிவிட்டிருந்தது. வீட்டிலிருந்து குறித்த நேரத்தில் அலுவலகம் கிளம்பிவிட்டதற்கு அடையாளமாய் வீட்டின் நுழைவாயிலில் பொருத்தப்பட்டிருக்கும் பயோமெட்ரிக் இயந்திரத்தில் ரேகை பதித்துவிட்டு அவன் கிளம்பினான்.

அவனைத் தொடர்ந்து அவளும் பரபரவென அலுவலகத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் போதுதான் அவளுக்கு அந்த வாட்ஸ்அப் செய்தி வந்தது. ராஜதுறவியர் தேசிய சபை பரிந்துரையின் பேரில் அரசாங்கம் அன்றைக்கு ஊரடங்கிய பின் நிறைவேற்றிய அவசரச் சட்டம் பற்றிய அச்செய்தி அவளை நிலைகுலையச் செய்தது. கணவனுக்கு பணிவிடை செய்வதையும் குடும்பம் மற்றும் குடும்பத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள காளைகளைப் பராமரிப்பதையும் மட்டுமே பெண்கள் தமது கடமையாகக் கொள்ளவேண்டும் என்கிற அந்த புதிய சட்டத்தின்படி இனி தன்னால் வேலைக்குப் போகவேமுடியாது என்கிற உண்மையை ஏற்கவியலாமல் அவள் தத்தளித்தாள். குழந்தை அழுவதும் கூட உறைக்காமல் பேதிலித்துக் கிடந்தாள்.

விற்கிற விலைவாசிக்கு ஈடுகொடுத்து பிழைப்பு நடத்த வேண்டுமானால் இருவரும் சம்பாதித்து தானாக வேண்டும் என்பதற்காக வேலையில் சேர்ந்தவளில்லை அவள். நினைவுக்கு எட்டியவரை அவளது சொந்தபந்தங்களில் அவள்தான் முதலில் படிக்கப்போனாள். அவளைப் பார்த்துதான் வேறுசிலரும் பெண்குழந்தைகளை படிக்க அனுப்பினார்கள். படித்தாலும் வீட்டோடு தான் கிடக்க வேண்டும் என்றாகிவிட்டால் பிறகு யார் பிள்ளைகளை படிக்க அனுப்புவார்கள் என்று யோசித்து தான் அவள் வேலையில் சேர்ந்தாள். கூலிநாழிக்குப் போய் பெற்றோர்கள் தமக்கு கொடுக்கும் கல்வியை பெண்கள் வீணடித்துவிடக் கூடாது என்பதில் பிடிவாதமாய் இருந்தாள்ஆண்களால் நிறைக்கப்பட்டிருக்கும் பொதுவெளிகளில் பெண்ணின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த நமக்கு படிப்பும் வேலையும் அவசியம் என்று தன் நட்புவட்டத்து பெண்களிடம் ஓயாமல் சொல்லிவந்தாள்.

சம்பளம் கிடைக்கிறது என்பதற்கும் அப்பால் வீட்டைவிட்டு வெளியே வேலைக்குப் போய் வருவது அவளுக்கு பலவிதமான அனுகூலங்களைக் கொடுப்பதாக இருந்தது. குடும்பத்திற்கு வெளியேயும் நம்மை மதிக்கிற விரும்புகிற அன்பு செலுத்துகிற மனிதர்கள் இருப்பதை படிக்கிற காலத்திலிருந்தே அவள் கண்கூடாக பார்த்தவள்தானே? எனவே அவள் அலுவலகத்திலும் அப்படியானவர்களைக் கண்டறிந்தாள். அவர்களோடு எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள முடிந்தது. சொந்தப் பிரச்னையொன்றை பேசிக்கொள்வதைப் போல நாட்டு நடப்புகளை விவாதிக்க முடிந்தது. வீடும் குடும்பமும் ஒரு பெண்ணுக்கு ஏற்படுத்தாத எந்தவொரு அவமானத்தையும் கண்ணியக்குறைவையும் பொதுவெளி ஏற்படுத்திவிடப் போவதில்லை என்று  அவளுக்குள் ஆழப்பட்டிருந்த கருத்தை இவனும் ஏற்றுக்கொண்டிருந்தான். தன்மதிப்போடு வாழ விரும்பும் பெண் திருமணத்துக்குப் பிறகும் வேலைக்குப் போவது அவசியம் என்பதில் இருவருக்கும் ஒருமித்திருந்தனர். ஆனால் இப்படியொரு அவசரச் சட்டம் வந்து தனது வேலையைப் பறித்து வீட்டோடு முடக்கிப்போடும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

அதிகாலை மணி 4.
அலாரம் அடித்தபோது அய்யய்யோ இது நான் அலுவலகத்தில் இருந்திருக்க வேண்டிய நேரமாச்சே என்றெண்ணி அவளது வேதனை பன்மடங்காகியது. வேலை பறிபோன விசயத்தை கணவனிடம் சொல்லலாமென்றால் அவன் இப்போதுதான் அலுவலகத்திற்குள் நுழைந்திருப்பான், காலையிலேயே அவனுக்கு மேலும் பதற்றம் எதற்கு என்று தனது அலுவலகத்தோழிகளை தொலைபேசியில் கூப்பிட்டாள். இவளைப்போலவே வேலையை இழந்துவிட்ட அங்கலாய்ப்பில் தான்  அவர்களுமிருந்தார்கள்.

சரி, இனி வீட்டிலிருந்து குழந்தையை வளர்க்கிற வேலையையாவது உருப்படியாய் செய்வோம் என்று தன்னைத்தானே அவள் தேற்றிக்கொண்டிருந்த வேளையில்தான் அடுத்தும் ஓர் அதிர்ச்சி உத்தரவு வெளியானது. உள்நாட்டு தேசிய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் அவளது மதத்தைச் சேர்ந்த பெண்கள் குறைந்தபட்சம் 10 குழந்தைகளை பெற்றெடுத்தாக வேண்டும் என்றுமுற்றும் துறந்தோர் முன்னேற்றச் சங்நிறைவேற்றிய தீர்மானத்தின் படியானது அவ்வுத்தரவு. இன்னமும் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டியிருக்கிறது என்கிற நினைப்பே அவளுக்கு கடும் அச்சத்தையும் ஆயாசத்தையும் தந்தது. இந்தத் தீராத வாதையிலிருந்து விடுபடுவதற்காகவேனும் வேறு மதத்திற்கு தப்பியோடி விடலாமா என்று தோழியொருத்தி போனில் யோசனை கேட்டாள். இப்பவாவது பிள்ளை பெத்துக்க சொல்றாங்க, வேற மதத்துக்குப் போனா ஏதாச்சும் சாக்குப்போக்கு சொல்லி இவனுங்க அடிச்சே கொன்னுருவாங்க, இப்போதைக்கு பேசாம இரு, பிறகு யோசிப்போம் என்று இவள் வாயை அடக்கினாள். அது அவள் தனக்குத்தானே சொல்லிக்கொண்ட பதிலாகவும் இருந்தது.

இரவு 12.14  மணி.
அலுவலகம் முடிந்து கணவன் 1111 2222 3333 4444 வரக்கூடிய நேரம். அவனுக்குரிய இரவுச் சாப்பாட்டை தயார் செய்தாள். தேசிய குடும்ப ஒழுங்காற்று ஆணையத்தின் விதி 311/34ன் படி வேலையிலிருந்து வீடு திரும்பும் கணவனுக்கு அருந்தக் கொடுக்கவேண்டிய புஷ்டிபானம் என்பதால் தொழுவத்திற்குப் போய் குவளை நிறைய சூடாக காமியம் பிடித்துவந்தாள். இன்னும் சில மணித்துளிகளில் வந்துவிடுவான். வெளி லைட்டை எரியவிட்டுக்கொண்டு கதவைத் திறந்து வாசற்படியில் தான் அமர்ந்திருந்த காட்சி ஐம்பதறுபது ஆண்டுகளுக்கு முன்பு கருப்புவெள்ளை சினிமாவில் கணவனை வரவேற்க காத்திருந்த மனைவியின் சாயலை ஒத்திருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அந்தக் குடியிருப்பிலிருந்த அனேக வீடுகளிலும்  பெண்கள் அவளைப் போலவே அலங்காரம் செய்து கொண்டு வாசற்படியில் காத்திருந்தார்கள். நூற்றாண்டுகளாக முயன்று ஈட்டிய முன்னேற்றங்கள் அனைத்தையும் ஒரேயொரு உத்தரவில் பறித்தெடுத்துவிட்ட இந்த அரசாங்கம் பெண்களை வெறும் மனைவியராக முடக்கிப் போட்டுவிட்டதே என்று அவளுக்கு பொறுமலாயிருந்தது

12.29 மணி.
அவளது கணவனின் வண்டி வரும் சத்தம் அவளுக்கு துல்லியமாகக் கேட்டது. ஆனால் அவனுக்கு பதிலாக வேறு யாரோ ஓராள் வந்திறங்கினான். இன்று பிற்பகல் 5.46 மணி 32 வினாடிக்கு தேசிய நடத்தைவிதிகள் அமலாக்கத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி அன்னிய ஆடவன் முன்னால் பெண்கள் நடமாடுவது சட்டரோதம் என்பதால் அவள் பதைபதைப்போடு வீட்டுக்குள் ஓடினாள். அந்த ஆடவனோ ஓடாதே நில் என்றான். அது அவளது கணவனின் குரல்தான். மிகவும் குழம்பிப் போனவளாய் அவசரமாக தலைக்கு முக்காடிட்டு முகத்தை மூடியபடி கதவுக்குப் பின்னே மறைந்து நின்று அவனை விளக்கொளியில் கவனித்தாள். அடக்கொடுமையே, அவளது கணவன் 1111 2222 3333 4444 தான். ஆனால் அவனது தோற்றத்தில் ஏன் இத்தனை மாறுபாடு? வீட்டுக்குள் வந்த அவன் ஏன் என்னை அடையாளம் தெரியலியா என்று நடுங்கும் குரலில் கேட்டான். எப்படி தெரியும்? காலையில் போன மாதிரியா வந்திருக்கே? உன் தலையை யார் இப்படி அலங்கோலம் பண்ணினது? என்று அவள் திரும்பத்திரும்ப கேட்டுக் கொண்டேயிருந்தாள். அவனோ சொற்களை தொலைத்தவன் போல் பதிலேதும் சொல்லாமல் மனமும் முகமும் இறுகிப்போய் சுவற்றோடு சாய்ந்து உட்கார்ந்துகொண்டான். ஒயிலான சிகையலங்காரம் கொண்டிருந்த அவனது தலை கரண்டியெடுக்கப்பட்டு மொட்டையடித்து மூன்று நாட்களானாற்போல காட்சியளித்தது இப்போது. முதல்வர் தலையில் இருப்பதைவிடவும் நீளமாக முடிவளர்த்திருக்கும் ஆண்களை மடக்கிப் பிடித்து இப்படி சிரைத்து அனுப்புவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளதேசிய சிகை சீர்திருத்தச் சங்கிடம் மாட்டிக்கொண்டதனால் ஏற்பட்ட பதற்றம் இன்னும் தணியவில்லை அவனுக்கு.

தனக்கு வேலை பறிபோன துக்கத்தை கணவனிடம் பகிர்வதற்காக காலையிலிருந்து காத்துக் கிடந்தவளுக்கு அவனிருந்த நிலைமையைப் பார்த்து வாயடைந்துப் போனது. அவனை ஆசுவாசப்படுத்தும் இரக்கம் பெருகியவளாகி தலையைக் கோதி தோள் தொட்டு எழுப்பி சாப்பிட அழைத்துப்போனாள். சினிமாவில் வருவதுபோல, அவன் முதல் கவளத்தை வாயிலிடப் போகும் போதுதான் பெரும் சத்தத்தோடு அந்த அரசாங்க வாகனம் வீட்டு வாசலில் வந்து நின்றது. காவல்துறையின் இலச்சினை பொறிக்கப்பட்ட அந்த வாகனத்திலிருந்து இறங்கிய ஒருவரும் போலிஸ் இல்லை. நெற்றியிலும் புஜத்திலும் ஆளுங்கட்சியின் கொடியை பட்டையாக கட்டியிருந்த அவர்கள்கல்வி, கலைஇலக்கியம் மற்றும் கலாச்சார போலிஸ் - ...’ என்கிற உலோக வில்லையை சட்டைப்பையின் மேற்புறம் பதக்கம் போல குத்தியிருந்தார்கள். முறைப்படியான அனுமதியைக்கூட கோராமல் அழுக்கும் புழுதியும் படிந்த காலணிகளோடு வீட்டின் நடுக்கூடத்திற்குள் நுழைந்தவர்கள் தாறுமாறாக நாற்காலிகளை இழுத்துப்போட்டு அமர்ந்தார்கள். வந்தவர்களது தலைவனைப் போலிருந்தவன் உரத்தக் குரலில் வீட்டாள்களுக்கு கட்டளைகளை பிறப்பிக்கத் தொடங்கினான். உறக்கத்திலிருந்த குழந்தை 1111 2222 3333 4444.2, வழக்கத்திற்கு மாறான திடீர் சந்தடியால் விழித்துக் கொண்டு அழத் தொடங்கியது. அதுபற்றி சற்றும் துணுக்குறாத அவர்கள் அடுத்தடுத்த வீடுகளுக்குள் வரிசையாக நுழைந்து இதேவிதமாக கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டு போனார்கள்.

இரவு 12.43 மணி.
1111 2222 3333 4444 உள்ளிட்ட அந்தப் பகுதியின் குடிமக்கள் அனைவரும் தமக்கு விதித்திருந்த கெடுவுக்கும் முன்னதாகவே வீட்டிலிருந்த புத்தகங்களையும் துணிமணிகளையும் மூட்டையாக கட்டி சுமந்துகொண்டு மணிக்கூண்டு சதுக்கத்திற்கு வந்து சேர்ந்திருந்தார்கள். ...போலிஸாரால் கவனமாக சோதனையிடப்பட்ட அம்மூட்டைகள் அனைத்தும் அங்கிருந்த தகனமேடை மீது மலை போல் குவிக்கப்பட்டன. குடிமக்கள் அணிந்திருந்த ஜீன்ஸ், டீசர்ட், பேண்ட், சட்டை, சார்ட்ஸ், ஜட்டி, பனியன் ஆகிய உடைகளையும் கழற்றி வாங்கிய ...போலிஸார் அவற்றையும் அந்த தகன மேடையில் எறிந்தார்கள். வெட்டவெளியில் இப்படி எங்களை நிர்வாணமாக நிறுத்தி அவமதிப்பதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று கேட்ட முதியவர் ஒருவரை ...போலிசார் நையப்புடைத்ததைப் பார்த்த மற்றவர்கள் தமக்குள்ளேயே ஒடுங்கி நின்றார்கள்உங்கள் உடம்பும் அரசாங்கத்திற்குரியது தான். அது அம்மணமாக இருக்கணுமா ஆடையோடு இருக்கணுமா என்பதை அரசாங்கம்தான் முடிவு செய்யும். எதிர்த்து கேள்வி கேட்டு இப்படி அடிவாங்கிச் சாகத் துணியாதீர்கள் என்று எச்சரித்தபடியே தாக்கினார்கள். எல்லோரது உடுப்பும் கழற்றியாகிவிட்டதை உறுதிபடுத்திக் கொண்ட  ... போலிஸின் தலைவர் தமது படையினரின் பெரும் ஆரவாரத்துக்கிடையே அந்த மூட்டைகளுக்கு தீவைத்தார்.

தாங்கள் ஆசையாசையாய் வாங்கிச் சேர்த்த துணிமணிகளும் புத்தகங்களும் சடசடத்து எரிவதை காணச்சாகியாத குடிமக்கள் தளுதளுக்கும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் தத்தளித்தார்கள். ‘நமது தொன்மையான கலாச்சாரத்திற்குப் புறம்பான ஆடைகளை நானோ எனது குடும்பத்தவரோ இனி வாங்கவோ உடுத்தவோ மாட்டோம். இஸ்லாமியரிடமிருந்து பரவிய - துணியை மூட்டி உடுத்தும் (அங்குராக்) வழக்கத்தையும் கைவிடுகிறோம். நமது நம்பிக்கைகளை சந்தேகிக்கவும் கேள்வி கேட்கவும் தூண்டுகிற எந்தவொரு புத்தகத்தையும் வாங்குவதும் வாசிப்பதுமாகிய தேசவிரோதச் செயலில் ஒருபோதும் ஈடுபடமாட்டோம்என்று எரியும் தீ மீது சத்தியம் செய்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளுமாறு அவர்கள் கூட்டாக பணிக்கப்பட்டார்கள். உறுதிமொழி ஏற்புக்குப் பிறகு குடிமக்கள் எல்லோருக்கும் இரண்டு ஜதை மாற்றுடுப்பு கொடுக்கப்பட்டது. அதுவரையிலும் அம்மணமாய் கூனிக்குறுகி நின்றிருந்த அவர்கள், உடனடியாய் உடுத்துக் கொண்டார்கள். அரையில் கோவணம் தலையில் உருமால் என்று அவர்களும் இப்போது அவர்களது முதல்வருக்கு இணையான தேசிய உடைக்கு மாறியிருந்தார்கள்.

இரவு மணி 1.01.
தகன மேடையிலிருந்த வீடு திரும்பிய 1111 2222 3333 4444, அந்த நெருப்பில் தனது தசையே பொசுங்கிவிட்டது போலிருக்கிறது என்றான். அதே மனநிலையால் பீடிக்கப்பட்டு இறுகிப் போயிருந்த அவனது மனைவி 1111 2222 3333 4444.1 பதிலேதும் சொல்லாமல் அவனருகில் அமர்ந்துகொண்டாள். துக்கத்தோடு துக்கமாய் இதுவும் சேர்ந்துகொள்ளட்டும் என்று நினைத்து, தனக்கு வேலை பறிபோய்விட்ட விசயத்தையும், பெண்கள் பத்துக்குழந்தை  பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற புதிய உத்தரவு வெளியாகியிருப்பதையும் அவனுக்கு தெரிவித்தாள். இது காலையில் அலுவலகத்தில் நுழைந்ததுமே தனக்கு தெரிந்துவிட்ட தகவல்தான் என்று கூறிய அவன், அது தொடர்பான அரசாணையின் நகல் ஒன்றை வாட்ஸ் அப்பிலிருந்து எடுத்து அவளுக்கு படிக்கக் கொடுத்தான். பெண்களின் வேலை பறிக்கப்பட்டதற்கும் ஆண்களின் வேலைநேரம் இருபது மணி நேரமாக மாற்றப்பட்டதற்கும் உள்ள தொடர்பை அந்த அரசாணை வெளிப்படையாக தெரிவித்தது. ஏதோவொரு பெருந்திட்டத்தை நோக்கி மக்களை விரட்டிக்கொண்டு போவதற்காகத்தான் அரசாங்கம் இப்படியான ஆணைகளை அடுத்தடுத்து வெளியிடுகிறதா எனக் கேட்டாள். ஆமாம், அதற்காக தான் நமது ஒவ்வொரு நொடியையும் நகர்வையும் அரசாங்கம் கட்டுப்படுத்தி கண்காணிக்கிறது என்றான் அவன். மேற்கொண்டும் உரையாட அநேகமிருந்தாலும்  அதற்கான மனநிலையை இருவருமே இழந்திருந்தார்கள். உணவருந்தாமலே துக்கத்தில் சொடுங்கி தூக்கத்திற்குள் அவர்கள் விழத்தொடங்கிய வேளையில்தான்  கதவை யாரோ தட்டினார்கள்.

வந்திருந்தவர், இரவு ரோந்துப்பணியிலிருந்த போலிஸ்காரர். மனிதவள அபிவிருத்தியில் தேசிய இலக்கை எட்டுவதற்காக கலவியில் ஈடுபட்டிருக்க வேண்டிய இந்த நேரத்தில் இவர்களது வீட்டில் ஏன் எல்லா விளக்குகளும் எரிந்தபடியே இருக்கின்றன என விசாரிப்பதற்காக வந்திருந்தார். உடலும் மனமும் சோர்ந்துபோய் விட்டதால் தூங்கிவிட்டோம் என்றான் 1111 2222 3333 4444. எந்தவொரு நல்ல தேசபக்த குடிமகனும் இப்படியான பொறுப்பற்ற பதிலை கூறமாட்டான் என்று அந்த போலிஸ்காரர் சலித்துக்கொண்டார். சால்ஜாப்புகளை சொல்லி நேரத்தைக் கடத்தாதீர்கள். இதில் உங்கள் விருப்பு வெறுப்பு என்று ஒன்றும் கிடையாது. அரசாங்கத்திற்கு சொந்தமான உங்களின் உடல்கள் ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து நழுவி தண்டனைக்கு ஆளாகிவிடாதீர்கள் என்று எச்சரித்துவிட்டுப் போனார்

நேரம் இரவு மணி 1.33.
காவலர் வெளியேறியதுமே வீட்டுக்குள் நுழைந்தவர், தன்னைதேசிய பள்ளியறை பரிபாலன சேவா சமிதியைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். திடகாத்திரமும் ஆரோக்கியமும் வனப்பும் நிறமும் அறிவுக்கூர்மையும் உள்ளவர்களாக குழந்தைகளை பெற்றெடுக்க வைக்கும்உத்தம சந்ததிதிட்டத்தினை நிறைவேற்றுவதற்காக அவர் வந்திருந்தார். இத்திட்டத்தில் முன்னோடியென அறியப்பட்டிருந்த இந்தியாவின்ஆரோக்கிய பாரதிஅமைப்பிடம் பயிற்சி பெற்று திரும்பியிருந்த அவர் இதற்கென இங்கு அரசின் அங்கீகாரம் பெற்றவர். பஞ்சாங்கத்தின்படி இன்றைக்கு 1.41 மணிக்கு 1111 2222 3333 4444 தன் மனைவி 1111 2222 3333 4444.1உடன் கூடுவதற்கு உகந்த நேரம் என்று கூறிய அவர் அதற்கான முன்னேற்பாடுகளை உடனே தொடங்கும்படி ஆணையிட்டார். கலவி செய்வதற்கான கால அட்டவணையைக்கூட ஓர் அரசாங்கம் பிறப்பிக்குமா என்ற நினைப்பின்  அச்சத்தால் அவளது உடல் பலமுறை அதிர்ந்தடங்கியது. நட்டுநடு வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டும்... நான் பயிற்சி செய்து காட்டுவதைப்போல என் மேற்பார்வையில் கலவி செய்யுங்கள்என்று ஆணையிடுகிற ஒருவனை எதுவும் செய்ய முடியாமல் அவமானத்தில் குன்றிப்போகவா பிறந்தோம் என்கிற கேள்வியால் அந்தத் தம்பதியர் நிலைகுலைந்து கொண்டிருந்தார்கள்.

நேரம் அதிகாலை 3.31.
வீட்டை விட்டு கிளம்பியிருக்க வேண்டிய 1111 2222 3333 4444 அதற்கு அத்தாட்சியாய் வாசலில் உள்ள பயோ மெட்ரிக்கில் இன்னமும் ரேகை பதிக்கவில்லை.
நேரம் அதிகாலை 3மணி 41 நிமிடங்கள் 01 நொடிகள்.
அலுவலகத்திற்கு பாதிவழியில் வந்துகொண்டிருக்க வேண்டிய 1111 2222 3333 4444 அதற்கு அத்தாட்சியாய் ஏழாம் எண் சிசிடிவிக்கு இன்னமும் முகம் காட்டவில்லை.  
நேரம் அதிகாலை 3.59மணி.
அலுவலகத்தில் இந்நேரம் நுழைந்திருக்க வேண்டிய 1111 2222 3333 4444 அதற்கு அத்தாட்சியாய் பயோ மெட்ரிக்கில் இன்னமும் ரேகை பதிக்கவில்லை.
நேரம் அதிகாலை 4.05 மணி.
அலுவலகத்தின் முதல் வேலையை இந்நேரம் தொடங்கியதற்கு அத்தாட்சியாக நடுக்கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் காமியக்குடுவையை 1111 2222 3333 இன்னமும் காலி செய்யாமல் இருக்கிறார். தேசபக்தியை வெளிப்படுத்துவதில் 5 நிமிடங்கள் தாமதம்.
நேரம் அதிகாலை 4மணி 10நிமிடங்கள் 7 நொடிகள்.
1111 2222 3333 4444 இன்னமும் வேலைக்கு வராமலிருப்பது உறுதிசெய்யப்படுகிறது. தேசத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை முன்னிட்டு அவரைத் தேடுவதற்கு உளவுப்படை முடுக்கிவிடப்படுகிறது.

நேரம் 5 மணி.
1111 2222 3333 4444 மற்றும் அவரது மனைவி 1111 2222 3333 4444.1 ஆகியோரது வீட்டுக்குள் அதிரடியாய் நுழைந்திருக்கிறது போலிஸ்.

* உத்தம சந்தானத்திட்டத்தை பயிற்றுவிப்பதற்காக வந்திருந்ததேசிய பள்ளியறை பரிபாலன சேவா சமிதியைச் சார்ந்த சந்நியாசி டிரிபிள்ஸ்ரீ குருஜியின் குறியை ஒட்ட அறுத்து காக்காவுக்கு வீசியது

* ‘அறிவியலுக்குப் புறம்பான, உலகத் தொழிலாளர் அமைப்பின் உடன்படிக்கைக்கு எதிரான புதிய வேலைநாளை ஒழித்துக்கட்டுவோம். அளப்பரிய தியாகத்தால் ஈட்டிய எட்டுமணி நேர வேலை எட்டுமணி நேர ஓய்வு எட்டுமணி நேர உறக்கம் ஆகிய உரிமைகளை மீட்டெடுப்போம், பெண்களை பிள்ளை பெறும் இயந்திரங்களாக, சம்பளமில்லா கூலிகளாக மாற்றும் பழமைவாதத்தை முறியடிப்போம்- என்கிற சுவரொட்டிகளையும் துண்டுப் பிரசுரங்களையும் சட்டவிரோதமாக தயாரித்து நாட்டில் கலவரத்தைத் தூண்ட முயற்சித்தது.

* புதிய ஆட்சியின் மோசடித்திட்டங்களை விமர்சித்து டைரி எழுதியது
 - ஆகிய தேசவிரோதக் குற்றங்களுக்காக அவர்களிருவரும்என்கவுண்டரில்சுட்டுக் கொல்லப்படுவது தான் இந்தக் கதைக்கு இயல்பான முடிவாக இருக்கமுடியும். ஆனால் தடதடவென நெருங்கிவரும் பூட்ஸ் சத்தம் கேட்டு வீறிட்டழும் இந்தக் குழந்தையை என்ன செய்யலாம்?


***

நன்றி : விகடன் தடம் , ஆகஸ்ட் 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...