புதன், செப்டம்பர் 6

கெளரி லங்கேஷ் கொலையும் காவி பயங்கரர்களின் கதையும் - ஆதவன் தீட்சண்யா

படுகொலைகளையும் பஞ்சமாபாதகங்களையும் செய்துவிட்டு அந்தப் பழியை பாதிக்கப்பட்டவர்கள் மீதோ அவர்களை சார்ந்தவர்கள் மீதோ சுமத்துவிட்டு தப்புவதில் காவி பயங்கரவாதிகள் கைதேர்ந்தவர்கள். இப்படியும் இருக்குமோ என்று சட்டென ஒரு சந்தேகத்தை சமூக ஊடகங்களில் கிளப்பி அப்படியே அதை பரவலாக்கி தங்கள் மீதான கொலைப்பழியை திசைமாற்றிவிடுவது அவர்களது வழக்கம்.  டிவிட்டரில் ஆயிரக்கணக்கான போலிக்கணக்குளில் இதற்காகவே இயங்கும் அவர்கள், போராளியும் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் படுகொலையிலும் அந்த கேடுகெட்ட உத்தியையே கையாளத் தொடங்கிவிட்டார்கள். இட்டுக்கட்டிப் புளுகுவதில் தேர்ந்தவர்களான அவர்கள் ‘இந்துத்துவவாதிகள் மீது கொலைப்பழி விழவேண்டும் என்பதற்காக கௌரி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு செத்துப்போனார்என்று இன்னும் சொல்லாமலிருப்பதேகூட ஆச்சர்யம்தான்.

காவி பயங்கரவாதக் கும்பலின் மாணவர் அமைப்பில் செயல்படுபவராக காட்டிக்கொள்ளும் ஒருவர், கௌரி லங்கேஷ் படுகொலை பற்றிய எனது முகநூல் பதிவில் பின்னூட்டமொன்றை பதிந்துள்ளார்.  ‘‘கொலை செய்தது Communists. ஆனால் பழி இந்து இயக்கங்கள் மீது. இதுபோன்ற எச்சங்களை கொலை செய்யும் போக்கை இந்து இயக்கங்கள் கடைபிடித்தால் பல பேர் இருந்த அடையாளம் இருக்காது.’ வக்கரமும் மிரட்டலும் கொலைவெறியும் அதை நியாயப்படுத்திக்கொள்ளும் போக்கும் நொதித்து வழியும் இந்தப் பின்னூட்டத்திற்கு சான்றாக அவர் கௌரி தனது டிவிட்டரில் எழுதியிருந்த கீழ்காணும் இரண்டு பதிவுகளை இணைத்திருக்கிறார்.

"why do i feel that some of `us' are fighting between ourselves? we all know our ``biggest enemy''. can we all please concentrate on that?" 

"Ok some of us commit mistakes like sharing fake posts. let us warn each other then. and not try to expose each other. peace... comrades"  இந்தப் பதிவுகளை கௌரி வெளியிட்டுள்ள பின்புலம் காவி பயங்கரர்களுக்கு தெரிந்திருந்தும்கூட திட்டமிட்டே திரித்திருக்கிறார்கள்.

மியான்மரைச் சேர்ந்த ஷிங் பன்யவர் தீப் (Shing Panyuar Dhiph) என்பவர், தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தியையும் 4 புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவை இந்தியாவில் வழக்கறிஞராக உள்ள சாய் தீபக் ஜெ (Sai Deepak J)என்பவர் தனது பக்கத்தில் மறுபதிவு செய்ய, அவரது பக்கத்திலிருந்து 197 பேர் பரபரப்பாக பகிர்ந்திருக்கிறார்கள். இதற்கிடையில், பரவலாக பகிரப்பட்டுவரும் இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ள செய்தி மற்றும் படங்களின் உண்மைத்தன்மையை சூர்போரி புர்கயஸ்தா (Shorbori Purkayastha)  என்பவர் பரிசோதித்திருக்கிறார்.

படம் 1- வங்கதேசத்தின் தென்மேற்குப்பகுதி மாவட்டங்களில் ஒன்று ஜலோகதி. பங்களா தேஷி சுவாமி ஜூபோ லீக் என்ற பெயரில் அங்கு செயல்பட்டுவரும் அமைப்பானது ஒரு வீட்டைத் தாக்கி அங்கிருந்த சாமி சிலைகளையும் படங்களையும் சேதப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் பற்றிய புகைப்படம் ஒன்றை வங்க தேசத்திலிருந்து செயல்பட்டுவரும் ஹிந்து சமிதி குளோபல் மீடியா என்கிற அமைப்பு  முதன்முதலாக 2014ஆம் ஆண்டு தன் வலைத்தளத்தில் http://hindusamhati.blogspot.in/2014/03/no-respite-for-hindus-in-bangladesh.html  வெளியிட்டிருந்தது.

படம் 2- ரோஹிங்ய முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டது குறித்த செய்தியையும் படத்தையும் Ekhon என்ற வங்கதேச இணைய இதழ் நவம்பர் 2016ல் வெளியிட்டிருந்தது. http://ekhon.net/exclusive/12836

படம் 3- Eibela  என்ற வங்கதேச இணைய இதழ், அந்நாட்டின் சிட்டகாங் பகுதியைச் சேர்ந்த ஃபதிக்சாரி என்கிற இடத்தில் 2016ல் கொல்லப்பட்ட இந்து இளைஞர் ஒருவரின் படத்தையும் செய்தியையும் வெளியிட்டிருந்தது. (இந்த கொலைக்களத்திலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கிறது ரோஹிங்ய முஸ்லிம்கள் வசிக்கும் ரக்கைய்ன் பகுதி) 

படம் 4- வங்கதேசத்தின் நில்ஃபாமரி என்கிற இடத்தில் 2014ல் ஓர் இந்துப்பெண்ணின் வீடு சூறையாடப்பட்டது. இதன்பேரில் மூவர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து kalerkantho  என்ற வங்கதேச இணைய இதழில் வெளியான செய்தியுடன் இடம் பெற்ற படம் இது. http://www.kalerkantho.com/online/priyo-desh/2014/02/24/55491

படங்களின் உண்மைத்தன்மை இவ்வாறிருக்க, மியான்மரைச் சேர்ந்த ஷிங் பன்யவர் தீப் இந்த நான்கு படங்களையும் ஒன்றாக அடுக்கி ‘ரோஹிங்ய முஸ்லிம் பயங்கரவாதிகள் ரக்கைய்ன் பகுதியில் இந்துக்கள் பலரை கொன்றுவிட்டனர், இந்துக் கோயில்களை சேதப்படுத்தியுள்ளனர்என்கிற பொய்யான செய்தியுடன் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். 

படங்களை ஆய்வு செய்த சூர்போரி புர்கயஸ்தா, இந்தியாவில் ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது வெறுப்பைத் தூண்டிவிடுவதற்காகவே இந்தப்படங்கள் திரித்து வெளியிடப்பட்டு பரவலாக்கப்படுகிறது என்பதை அம்பலப்படுத்தி Fake News Being Used to Incite Anger Against Rohingyas in India (https://www.thequint.com/news/world/fake-news-alert-rohingyas-are-not-killing-hindus-in-rakhine) என்கிற கட்டுரையை The Quint இதழில் 05.09.17 அன்று பிற்பகல் வெளியிட்டுள்ளார்.

மியான்மரில் சிறுபான்மையினரான ரோஹிங்யா முஸ்லிம்களை அழித்தொழிக்கும் விதமாக நடந்துவரும் வன்முறைத் தாக்குதல்களுக்கு எதிராக உலகளாவிய கண்டனம் எழும்பிவரும் நிலையில் ‘ரோஹிங்யா முஸ்லிம்கள் வன்முறையாளர்கள், அவர்கள் மீதான இப்போதைய வன்முறையானது ஏற்கனவே அவர்களது வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் பதிலடியே. அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களே  என்பது போன்று பரப்பப்படும் பொய்களில் ஒன்றே ஷிங் பன்யவர் தீப் என்பவரின் போலியான இந்த டிவிட்டர் பதிவு. சிறுபான்மையினரையும் மாறுபட்ட கருத்தாளர்களையும் கொன்றுவிட்டு அதை நியாயப்படுத்துகிற  இந்திய காவி பயங்கரவாதிகள் இந்தப் பதிவை ஆர்வத்துடன் பகிர்ந்ததற்கு இஸ்லாமிய வெறுப்பைத் தவிர வேறொரு காரணமும் இல்லை.

இப்படியான போலிப்பதிவுகளுக்கு கிடைக்கும் பிரபலமும் பரபரப்பும் பற்றிய ஒரு விவாதத் தொடரில் தான்  கௌரி "why do i feel that some of `us' are fighting between ourselves? we all know our ``biggest enemy''. can we all please concentrate on that?" ,  "Ok some of us commit mistakes like sharing fake posts. let us warn each other then. and not try to expose each other. peace... comrades"  என்பதான பதிவுகளை டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். ஆனால் காவி பயங்கரவாதிகள் இந்தப் பதிவுகளை வெட்டியெடுத்து திசைதிருப்பி அதில் காம்ரேட்ஸ் என்கிற விளிச்சொல் இருப்பதால் கொலைப்பழியை கம்யூனிஸ்ட்டுகள் மீது சுமத்தும் கேவலத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒருவர் கொல்லப்பட்டதற்கு அரசியல் அல்லாத வேறு காரணங்களை கற்பிப்பது அல்லது அடுத்தவர் மீது பழிபோட்டு தப்பிப்பது என்கிற காவி பயங்கரர்களின் குயுக்தியான தந்திரங்களை இதற்கும் முன்பே இந்த நாடு அறிந்திருக்கிறது. காந்தி கொல்லப்பட வேண்டியவர்தான்- கோட்சே கொண்டாடப்பட வேண்டியவர் என்கிற அவர்களின் அருவருப்பான வாதங்கள் இந்த நாட்டின் ஒவ்வொரு அரசியல் படுகொலையிலும் திரும்பத்திரும்ப ஒலிக்கிறது. கொல்லப்பட்டவர் மீதான மக்களின் அனுதாபத்தையும் கொலையாளிகளின் மீதான கோபத்தையும் திசைதிருப்ப கொல்லப்பட்டவர்கள் பற்றி பல்வேறு கட்டுக்கதைகளை கிளப்பி சிறுமைப்படுத்துவதும்  கூட காவி பயங்கரர்களின் தந்திரமே. நிறுவன பயங்கரவாதத்தால் மாண்டுபோன மாணவி அனிதாவை- அவர் செத்தொழிய வேண்டியவர்தான் என்று பரிகாசம் பேசுகிற அனைவருமே காவிபயங்கரர்களாக இருப்பது தற்செயலானதல்ல. இதோ இப்போது கௌரி சுட்டுக்கொல்லப்பட வேண்டியவர்தான் என்று அவர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள வெறுப்புப் பிரச்சாரமும், அவர் கொல்லப்பட்டதை கொண்டாடிக் களிக்கும் அவர்களது ஏளனப்பேச்சுகளும் பதிவுகளும், கௌரியின் இருப்பைக் கண்டு அவர்கள் இதுகாறும் கொண்டிருந்த அச்சத்தையும் இப்போது அடைந்துள்ள நிம்மதியையும் வெளிப்படுத்துகின்றன. ஆனால், ரத்தவெள்ளத்தில் சடலமாய் மிதக்கும் கெளரி லங்கேஷ், இப்போதும் காவி பயங்கரர்களை அம்பலப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். தன் சடலத்தைக் கொன்றிட அவர்கள் புனையும் கதைகளில் கௌரி  லங்கேஷ்  உயிர்த்திருக்கிறார்.

வில்லியம் ப்ளேக் கடிதமும் கவிதையும் - வ. கீதா

எனக்குப் பிடித்த ஆங்கிலக் கவிஞர்களில் வில்லியம் ப்ளேக்கும் (William Blake)  ஒருவர். 18ஆம் நூற்றாண்டு. அவர் ஓவியர், டிசைனர், அச்சாளர். அ...