மனுநீதியை வீழ்த்திட சமூகநீதி – ஆதவன் தீட்சண்யா


சமூகநீதி என்பது வரலாற்றுப் பின்புலத்துடன் ஆழ்ந்தகன்ற பொருள் கொண்டது. மக்களாட்சி முறையை இந்தியா தேர்ந்துகொள்ளும் பட்சத்தில் சமத்துவம்தான் அதன் ஆணிவேர்க் கருத்தாக இருக்கவேண்டும் என்று மிகத் தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வந்தவர் அண்ணல் அம்பேத்கர் (தொகுதி 37, ப.36). எங்கே சமத்துவம் மறுக்கப்படுகிறதோ அங்கே பிற யாவும் மறுக்கப்படுவதாகவே கொள்ளவேண்டும் என அவர் பிறிதோர் இடத்தில் (தொகுதி 6, ப.89) குறிப்பிடுவார். அவ்வாறு இங்கு மறுக்கப்பட்டவற்றின் பட்டியல் மிக நீண்டது.  நாட்டின் இயற்கைவளங்கள், சொத்துகள், முடிவெடுக்கும் அதிகார அமைப்புகள், முடிவுகளை செயல் படுத்தும் நிர்வாக இயந்திரம், பண்பாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் உரிமையும் பங்கும் அவற்றை அனுபவிப்பதற்கான வாய்ப்புகளும் சுதந்திரமும் சமமாக பகிர்ந்து கொள்ளப் படுவதற்கு இங்கு சாதியம் தடையாக இருந்து வருகிறது. 

1980ல் ஆந்த்ரபாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா ஒரு கணக்கெடுப்பு நடத்தி இந்தியாவில் 7331 சாதித்தொகுப்புகளும் அவற்றுக்குள் 65,000 பிரிவுகளும் இருப்பதாக தெரிவித்தது. அதே 1980ல் மண்டல் கமிஷன்  இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் மட்டும் 3743 சாதிகள் இருப்பதாக தெரிவித்தது. 2011ல் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை நிதி ஆயோக் துணைத்தலைவர் அர்விந்த் பனகரியா ஆய்வு செய்திருக்கிறார். சாதிகள், உட்சாதிகள், குடும்பப்பெயர்கள் என்று 4.6 மில்லியன்  பெயர்கள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கிறார். தினம் 12 மணிநேரம் ஒதுக்கினாலும்  கூட இப்பெயர்கள் முழுவதையும் வாசித்து முடிக்கவே 355 நாட்கள் தேவைப்படும் என்கிறார் அவர்.  இதெல்லாம் ஓர் உத்தேசக் கணக்குதான். இந்தியாவில் எத்தனை சாதிகள் இருக்கின்றன என்கிற விவரத்தை முறையாக திரட்டுவதற்கான முயற்சி முழுமைப்பெறவேயில்லை.

பார்ப்பனர்களை உச்சியில் தாங்கி கீழ்நோக்கி செங்குத்தாக ஒன்றின் கீழ் ஒன்றெனும் பன்மப்படிவரிசையில் சரிந்து விரியும் இந்தச் சாதியடுக்கில் உள்ள எந்தவொரு சாதியும் இன்னொரு சாதிக்கு சமமானதல்ல. இந்தச் சாதிகளுக்குள் உள்ள உட்சாதிகளும்கூட ஒன்றையொன்று சமமாக ஏற்பதில்லை. இந்தச் சமமின்மை தீட்டு/ புனிதம் என்கிற கற்பிதத்தின் பெயரால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சாதியடுக்கில் ஒரு சாதி எந்த இடத்தில் இருந்தாலும் அது சில சாதிகளுக்கு மேலாகவும் சில சாதிகளுக்கு கீழாகவும் ஒருசேர இருக்கிறது. இவ்விதமாக அந்தச் சாதிக்கு கிடைக்கும் சமூக அந்தஸ்தையே அச்சாதியின் உறுப்பினர்களாகிய தனிமனிதர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சாதிக்குரிய அந்தஸ்தின் அடிப்படையில் தான் அவர்களது மொத்த வாழ்வும் சாவும் சாவுக்குப் பிறகான நிலையும் தீர்மானிக்கப்படுகிறது. சாதியின் பெயரிலான இந்தப் பாரபட்சத்தை விளங்கிக் கொள்ளாமல், அந்த பாரபட்சத்தினால் பாதிக்கப்பட்டு பின்தங்கிப்போன குடிமக்களை அந்தப் பாதிப்பிலிருந்து மீட்டு பிறருக்கு இணையான நிலைக்கு உயர்த்தும் ஓர் எதிர் பாரபட்ச நடவடிக்கையாக முன்வைக்கப்படும் சமூகநீதி என்பதை விளங்கிக் கொள்வது கடினம்.

பட்டியல் சாதியினர் & பட்டியல் பழங்குடியினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஆட்சி மன்றங்களிலும், பிற்பட்ட வகுப்பினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சில இடங்களை ஒதுக்கீடு செய்து தருவதுதான் சமூகநீதி என்கிற தவறான கருத்து தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. சரி, ஒரு வாதத்திற்காக அதுதான் சமூகநீதி என்று ஒத்துக்கொண்டால், அதுவாவது ஒழுங்காக நடக்கிறதா என்றால் அதுவும் இல்லை என்பதே உண்மை. போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வரை இந்த இடஒதுக்கீடு தொடரவேண்டும் என்கிற அரசியல் சாசன நிலைப்பாட்டை அழித்தொழிக்கும் கெடுமுயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள்தொகை விகிதாச்சாரப்படி எஸ்.சி. 15%, எஸ்.டி. 7.5% என 22.5% இடங்கள் அரசியல் சாசனத்தின் மூலம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. (மாநிலங்களில் இந்த அளவு மாறுபடும்). இப்போதைய மக்கள்தொகை கணக்கீட்டிற்கேற்ப இந்த அளவு உயர்த்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை ஏற்கப்படாமலே உள்ளது. மண்டல் குழுவின் பல்வேறு பரிந்துரைகளில் ஒன்றின்படி இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீதம் வழங்கப்படுகிறது. மக்கள்தொகையில் 54% அளவுக்குள்ள பிற்படுத்தப் பட்டவர்களுக்கு அதில் பாதியளவில்- 27% மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு காரணம், இடஒதுக்கீட்டின் மொத்த அளவு 50 சதவீதத்திற்குள் இருக்கவேண்டும் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்புதான். மீதமுள்ள 50% இடங்கள் பொதுப்பட்டியல் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு கூறியபோதிலும் உண்மையில் அந்த 50% இடங்களில் அதற்குரிய மதிப்பெண்களைப் பெற்றிருக்கும் பட்சத்திலும்கூட எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை. ஒருபக்கம் இடஒதுக்கீடு என்பதை எதிர்த்துக்கொண்டே பொதுப்பட்டியல் என்பதன் பெயரால் 50% இடங்களை, மக்கள்தொகையில் 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள  மேலடுக்குச் சாதியினர் இத்தீர்ப்பின் துணையோடு தொடர்ந்து அபகரித்து தமக்கென ஒதுக்கீடு செய்துவருகின்றனர்.  

ஆட்சியாளர்கள் எவ்வளவு உயரிய நோக்கங்களைக் கொண்டிருந்தாலும் அவற்றை செயல்படுத்துவது நிர்வாகத்துறை தான் என்பதால் அது அனைத்து மக்கள் குழுக்களின் பிரதிநிதித்துவத்தையும் கொண்டதாக இருக்கவேண்டும். ஆனால், இதில் துறைச் செயலாளர்கள், உச்ச/உயர் நீதிமன்ற நீதிபதிகள், பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள், ராணுவம் மற்றும் காவல்துறை உயர் பொறுப்புகள் போன்றவை கிட்டத்தட்ட மேலடுக்குச் சாதியினருக்கு மட்டுமே என்பது எழுதாவிதியாக உள்ளது. கடைநிலை ஊழியம் தவிர்த்த எஞ்சிய பணியிடங்களில் பெரும்பான்மையும் கூட இவர்களாலேயே கைப்பற்றப் பட்டுள்ளன. குறிப்பிட்ட சதவீத அளவு இடங்கள் எஸ்.சி/ எஸ்.டி/ ஓ.பி.சி வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் தகுதிவாய்ந்த போதுமான ஆட்கள் பற்றாக்குறை, க்ரீமிலேயர் போன்ற சாரமற்ற காரணங்களைக் காட்டி அவற்றை நிரப்பாமல் காலியாக வைப்பது அல்லது மேலடுக்கினருக்கு ஒதுக்கிக்கொள்வது என்கிற தந்திரம் கையாளப்படுகிறது. “நிர்வாகப் பதவிகளில் தாழ்த்தப்பட்ட சாதியினர் இடம் பெற்றால் மட்டுமே, அவர்களின் அந்தஸ்தும் வாழ்க்கை நிலையும் அபிவிருத்தியடையும். நிர்வாகப் பதவிகள் கேந்திரமான பதவிகள். அவற்றிலிருந்து கொண்டு அரசு விவகாரங்களுக்கு வழிகாட்ட முடியும்” என்கிற அம்பேத்கரின் நிலைப்பாடு ( தொ: 19 ப.34) இவ்வாறாக மறுக்கப்படுகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் 93% விவசாயம் உள்ளிட்ட முறைசாரா துறைகளில் உள்ளது. மிச்சமுள்ள 7% வேலைவாய்ப்பு, முறைப்படுத்தப்பட்ட தனியார் மற்றும் அரசுத் துறைகளில் உள்ளது. தனியார் துறையில் இன்றளவும் இடஒதுக்கீடு கிடையாது. ஆக, ஒப்பீட்டளவில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் 3.5% மட்டுமே அரசுத்துறையில் உள்ளது. நிர்வாகம் மற்றும் உற்பத்தி என இரண்டாக கிளை பிரியும் இந்த அரசுத்துறையில் மட்டுமே இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இதிலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சி, பாதுகாப்பு சார்ந்த இடங்களில் இட ஒதுக்கீடு கிடையாது.

***
மனித வாழ்விற்கு மிக அடிப்படை ஆதாரமான நிலம் இங்கு எவ்வாறு பகிர்ந்தளிக்கப் பட்டிருக்கிறது?  இந்தியாவின் மொத்த விளைநிலம் 394.6 மில்லியன் ஏக்கர்.  இதில் மக்கள்தொகையில் 56.4 சதம் குடும்பங்களுக்கு சொந்தமாக ஒரு துண்டு நிலம்கூட இல்லை. இவர்கள், சொத்து வைத்துக்கொள்ள உரிமையற்றவர்கள் என்று சாதியத்தால் மறுக்கப்பட்ட சாதியினர். மறுபுறத்திலோ மொத்த விளைநிலத்தில் 32% வெறும் 5% பேரிடம் இருப்பதாக அரசின் சமீபத்திய புள்ளவிவரமே தெரிவிக்கிறது. இந்த 5% பேரும் சாதியடுக்கின் மேலே இருத்திக்கொண்டவர்கள் தான் என்று தனியாக சொல்ல வேண்டியதில்லை. இவர்களுக்கு மன்னராட்சிக் காலங்களில் பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்ட இனாம்கள் மூலமாக இந்நிலக்குவிப்பு நடந்துள்ளது. செட்டில்மென்ட் ஆப் இனாம்ஸ் என்னும் பிரிட்டிஷ் ஆட்சியின் ஆரம்பகால ஆவணம் அக்ரஹாரம், பிரம்மதேயம், சதுர்வேதிமங்கலம், திரிஷ்வாகம், தர்மாசனம், பட்டம், பொறுப்பு, அத்யாயனம், புராணம், பஞ்சாங்கம், தோப்பு, தொரப்பாடி, கர்ணம், மணியகாரர் போன்ற பெயர்களில் வளமான பெரும் நிலப்பரப்புகள்  மேலடுக்குச் சாதிகளுக்கு கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கிறது. (1963ல் நிறைவேற்றப்பட்ட இனாம் ஒழிப்புச்சட்டம் இதை உறுதி செய்கிறது.)  இவ்வாறு இனாம் கொடுப்பதற்காக வேளாண் சாதிகளிடமிருந்து நிலம் பறிக்கப்பட்டதோடு, அந்த நிலங்களில் அவர்கள் கூலிகளாக உழைத்துக் கொடுக்கும்படியும் தாழ்த்தப்பட்டனர்.

கைவினைஞர்களாகவும், பல்வேறு குடிமைச் சேவர்களாகவும் நீர்க்கட்டி போன்ற வேளாண் சேவகர்களாகவும் இருந்த அடியடுக்குச் சாதியினருக்கு துண்டுத்துக்காணி நிலம் மட்டுமே இனாமாக கொடுக்கப்பட்டுள்ளது. நிலப்பகிர்வில் ஒரு பெரும் மாற்றம் என்றால், அது 1892ல் DC லேண்ட் என்கிற வகைப்பாட்டின் கீழ் அன்றைய சென்னை மாகாணத்தின் தீண்டப்படாத சாதியினருக்கு 12 லட்சம் ஏக்கர் நிலத்தை அரசு வழங்கியதையே குறிப்பிட வேண்டும். (1891ல் திராவிட மகாஜன சபையின் மாநாட்டுத் தீர்மானம் தரிசு நிலங்களை தீண்டப்படாதாருக்கு வழங்கவேண்டும் என்று கோரியிருந்தது.) ஆனால் இன்றைக்கு அந்த 12 லட்சம் ஏக்கர் நிலத்தில் சில ஆயிரம் ஏக்கர் நிலமே அவர்களது அனுபோகத்தில் உள்ளது. எஞ்சிய நிலம் அவ்வளவும் அரசுத்துறை அதிகாரிகளின் துணையோடு சாதி இந்துக்களால் அபகரிக்கப் பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சிக்காலத்தில் நிலச்சீர்த்திருத்தம் மூலம் கையகப்படுத்தி நிலமற்றோருக்கு அரசால் வினியோகிக்கப்பட்ட நிலங்களிலிருந்து அவர்களை வெளியேற்றும் முயற்சிகளில் நிலக்கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகின்றனர். போபால் பிரகடனத்தின் வழிகாட்டுதலால் மத்திய பிரதேசத்தில் பட்டியல் சாதியினருக்கு நிலம் வழங்கும் திட்டம் பின்னர் வந்த பா.ஜ.க அரசால் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. குஜராத்தில் நில உச்சவரம்புச் சட்டத்தின் மூலம் கையகப்படுத்தி நிலமற்றோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் கூறப்பட்ட 1,63,880 ஏக்கரில் தலித்துகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 56,873 ஏக்கர் நிலம் நடைமுறையில் அவர்களது கைக்குப் போய்ச்சேரவேயில்லை. தமிழகத்தில் நிலமற்றோருக்கு 2 ஏக்கர் திட்டம் எந்தளவுக்கு செயல்படுத்தப்பட்டது என்கிற விவரங்கள் கிடைக்கவில்லை.

அரசின் பல்வேறு கொள்கைகளினால் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்றத் தன்மையினால் நிலத்தை விட்டு தாங்களாகவே வெளியேறும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கார்ப்பரேட் விவசாயம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களின் பெயரால் நடக்கும் நிலத்தை அபகரிப்பதும், இதேபோல கனிமக் கொள்ளையர்களுக்கு இசைவாக வனங்களிலிருந்தும் கடற்புறங்களிலிருந்தும் பழங்குடிகளையும் மீனவக்குடிகளையும் வெளியேற்றுவதுமாக நிலமற்றோர் பட்டாளத்தை பெருகச் செய்கிறது அரசாங்கம்.

நாட்டின் மொத்தநிலமும் நீதியாக அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை பல்வேறு இயக்கங்களின் ஆரவாரமான வெற்று முழக்கமாக இருக்கிறதேயன்றி செயல் முழக்கமாக மாற்றப்படவில்லை. நிலப்பகிர்வு குறித்த இந்த அக்கறையற்ற போக்கின் விளைவால் உபரிநிலங்களை கையகப்படுத்துவதில் அரசும் அக்கறையற்றுள்ளது. நிலமற்றோருக்கு 2002ல் அரசால் வழங்கப்பட்ட நிலத்தின் சராசரி அளவு 0.95 ஏக்கர் என்றிருந்த நிலை 2015ல் 0.88 ஏக்கர் எனக் குறைந்துள்ளது.

நிலப்பகிர்வில் ஒரு மாற்றம் வராமல் பேசப்படும் எந்தவொரு நீதியும் சமூகநீதி ஆகாது. இதுபோலவே தொழில், வர்த்தகம், ஒப்பந்தங்கள், வழிபாட்டுத்தலங்கள், அரசின் பொது நிறுவனங்கள் போன்றவற்றிலும் சாதியின் பெயரால் வாய்ப்பு மறுக்கப்பட்டோரின் பிரதிநிதித்துவம் அருகிக்கொண்டு தானுள்ளது. சமத்துவத்தை வலியுறுத்தும் அரசியல் சாசனத்தை விடவும் ஏற்றத்தாழ்வினை மீட்டமைக்கும் மனுஸ்மிருதிக்கும் கார்ப்பரேட் நலன்களுக்கும் கூடுதல் விசுவாசத்தைக் வெளிப்படுத்தும் சங்பரிவாரத்தின் ஆட்சி, இந்த வீழ்ச்சியை துரிதப்படுத்துகிறது. சமூகநீதியை நோக்கிய ஒரு நூற்றாண்டின் சாதனைகளை ஒழித்துக்கட்டுவதில் பலமுனைகளிலும் வெறித்தனமாக இறங்கியுள்ள இந்த மனுவாதிகளை, சமூகநீதியை அதன் ஆழ்ந்தகன்ற பொருளில் அடைவதற்கான போராட்டக்களத்தில் தான் வீழ்த்த முடியும்.

- உயிர் எழுத்து, மே 2018


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக