புதன், நவம்பர் 30

விரகமல்ல தனிமை -ஆதவன் தீட்சண்யா

ன்பில் ஊறும் மகாவுக்கு,

ரொம்பவும் சிரமப்பட்டு வந்து சேர்ந்தேன். டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டு கிளம்புங்கன்னு நீ சொன்னது வழி முழுக்க ஞாபகத்தில். காலம் கடந்து நினைத்தால் எது நடக்கும். பங்குனி உத்திர கூட்டம் வேறு. ஈரோடு வரைக்கும் ஸ்டாண்டிங். நெரிசல்ல சிக்கி முழி பிதுங்கிருச்சு.

அன்னிக்கு ராத்திரி பஸ் ஸ்டாண்டுக்கு கொஞ்சம் தள்ளின லாட்ஜ்ல ரூம் கிடைச்சது. பக்கத்து ரூம்ல, உடம்பு முழுக்க மாட்டிக்கிட்டு ஆட்டுற மாதிரி வளையல் கிணுகிணுப்பு. ஓயாத சிணுங்கல். விரசமான பேச்சு. கெக்கக்கேன்னு சிரிப்பு. இம்சை தாங்கலை. அருவருப்பு. இந்த ஊர்ல பொண்ணுங்களும் சிலதுகள் தண்ணி, தம்மெல்லாம் அடிக்கும் போல. நிதானம் தப்பின பேச்சு, பாட்டு, கூத்து கும்மாளம். இடையில, பாத்ரூம் போனவ, "இன்னும் தூங்கலையா சார்...லைட் எரியுதே"ன்னு விசாரிக்கிற அளவுக்கு தைரியம்.

அடுத்த வீட்டு ஆம்பளையை இவளோ, அவன் இவளையோ பாத்துடக் கூடாதுன்னு, விடிகாலைல வாசல் தெளிச்சு கோலம் போட்டுட்டு வீட்டுக்குள்ள அடைஞ்சிடறபடி பொண்ணுங்களை வளர்த்த இந்த மண்ணுல, இப்ப பொண்ணுங்க எப்படி ஆயிடுச்சு பாத்தியா மகா... ஒருவேளை இப்படி வளர்த்தினது தான் அவங்கள இப்படி ஆக்கிடுச்சோ... என்ன இழவோ, விடிஞ்சாப் போதும்னு ஆயிருச்சு.

நான் டிவிசனல் ஆபீஸ்ல இருந்தப்ப, கூட தேவராஜ்னு ஒருத்தன் வேலை பார்த்தானே ஞாபகமிருக்கா... நம்ம கல்யாணத்துக்கு கூட வந்திருக்காம்மா. ஆல்பத்துல பாரு, வெளுத்த ஜீன்சும் முரட்டு ஜிப்பாவும், சொறிஞ்சு விட்டாப்ல தாடியுமாயிருப்பான். அவன் இப்ப இங்கதானிருக்கான். வந்து ஆறுவருசமாயிருச்சாம். இன்னமும் கட்டை பிரம்மச்சாரி. ரெண்டாம் நாள்லேயிருந்து அவன் ரூம்ல தான் என் வாசம்.

அவன் உன்னை ரொம்பவும் விசாரிச்சான். "அதென்னடா பையனுக்கு நல்ல தமிழ்ப் பேரா வைக்காம அரவிந்துன்னு பேர் வச்சிருக்கே... அடுத்ததும் பையனா பொறந்துட்டா, முழுவிந்துன்னோ கால்விந்துன்னோ வச்சுத் தொலைக்காதே"ன்னு சத்தம் போட்டான். அவன் எப்பவும் இப்படித்தான். ஏடாகூடாமா ஏதாச்சும் சொல்லுவான். மெட்ராஸ் ஆபிஸ்ல வினோத்குமார்னு ஒரு லிப்ட் ஆபரேட்டர். எப்பவும் நிரோத்குமார்னு தான் இவன் கூப்பிடுவான். அவனவன் மொழி, கலாச்சாரத்துக்கு தக்கன பேரை வைக்கணும்கிறது அவன் வாதம். நமக்கெங்கே அந்த யோசனையெல்லாம்... கூப்பிட ஒரு பேரிருந்தா போதும்னு நினைக்கிறோம்.

நேத்தைக்கு பீர்குடிக்கக் கூப்பிட்டான். வேண்டாம்னேன். "என்னடா, கல்யாணத்துக்கப்புறம் எல்லாத்தையும் விட்டுட்டியா...பரவால்ல, தங்கச்சி கெட்டிக்காரிதான். கரெக்டா லகான் மாட்டியிருக்கா"ன்னு உன்னை பாராட்டினான். எந்தப் பெண்ணும் தம்புருசன் குடிக்கிறதை விரும்பமாட்டாள்னு, நானாத்தான் நிப்பாட்டினேன். ஆனா, பாராட்டு உனக்கு... நம்ம ஜனங்களே இப்படித்தான். திட்டறதாயிருந்தாலும், பாராட்டறதாயிருந்தாலும் காரணம் யாரோ அவங்களை திட்டறதுமில்லை பாராட்டுறதுமில்லை. விரல் சப்பறது ஒருத்தன் வெல்லம் திங்கறது வேறொருத்தன்.

இங்க எல்லாமே காஸ்ட்லி மகா. முந்தா நாள் சலூன்ல ஷேவிங் பண்ணிக்கிட்டு பத்துரூபா கொடுத்தா, மிச்சம் மூணு ரூபா தந்தான். ஷேவிங் மட்டும்தான்னேன். அதுக்கு மட்டும்தாங்க எடுத்திருக்கேன்னான். வெறுத்துப் போச்சு. பேசாம, தேவராஜாட்டம் நானும் தாடி விட்டுட்டா என்னன்னு யோசனை.

பக்கத்து சந்துல ஒரு மெஸ். மூணுவேளையும் அங்கதான். தினமும் அங்கயே சாப்பிட்டாலும் எக்ஸ்ட்ராவா கறியோ மீனோ வாங்கிக்கிட்டா தனி உபசாரம். என்னவோ ஒவ்வொருத்தனுக்காகவும் ஒவ்வொருவாட்டி ஆத்துக்கோ கடலுக்கோ போய் மீன் பிடிச்சாந்து வறுத்து தர்றமாதிரி ஒரு துண்டு 12 ரூபா. நமக்கெங்கே கட்டுபடியாவும்... எக்ஸ்ட்ரா எதுவும் வாங்கிக்கிறதில்லை. மிஞ்சிப்போனா ஒரு ஆம்லெட்டோ ஆப்பாயிலோ. கடனுக்கு போடறாப்ல நெனப்போ என்னமோ டொப்பு டொப்புன்னு தலையில இடிக்கிற மாதிரிதான் ஒவ்வொன்னையும் வைப்பானுங்க. எப்படிப் பார்த்தாலும் ஒரு நாளைக்கு அம்பது ரூபாயைத் தாண்டிடுது. அது இல்லாம மேல்செலவு வேற. பிஸ்ல தர்ற படியெல்லாம் தாங்காது. இன்னும் மூணுவாரம் பல்லைக் கடிச்சிட்டு இருந்துட்டு வரவேண்டியதுதான்.

இந்த ட்ரெயினிங்கால ஒரு பிரயோஜனமுமில்லை. என்ன பண்ணித் தொலைக்கிறது, ஒரு இன்க்ரிமென்டுக்காக இந்த கூத்துல நானும் ஆடித்தானாகணும். தமாஷா, இல்லே கொடுமையான்னு தெரியலை. எங்க செக்ஷனை குளோஸ் பண்ணி சேலம் ஆபிஸோட சேர்க்க உத்தரவு வந்திருக்கு. நான் கம்ப்யூட்டர் ட்ரெயினிங் முடிச்சிட்டு வந்து மோட்டுவளைய பாத்துக்கிட்டு இருக்கணும். வேலைவெட்டி இல்லாம கிடக்க எதுக்கு கம்ப்யூட்டர் ட்ரெயினிங்... தலையில கிரீடம் அடியில அம்மணம்னு நம்மூர்ல சொல்ற கதைதான் இது.

அங்க நல்ல மழைன்னு பேப்பர்ல பார்த்தேன். உங்கப்பா பொன்னேர் கட்டிட்டாரா... இந்த மழைய நம்பி எதையாவது விதைச்சிட்டு அப்புறம் காயுதே கருகுதேன்னு பொலம்பப் போறாரு. எதுக்கும் இன்னொரு மழைய பார்க்கச்சொல்லு. இல்லேன்னா போனவருச கதைதான் இப்பவும்னு ஆயிடும்.

இங்கயும் ரெண்டுநாளா மழை. தெருவுல கால்வைக்க முடியலை. நசநசன்னு சேறும் சகதியும். சாக்கடைன்னு ஒண்ணு தனியா எதுக்கு இருக்குன்னே விளங்கலை. எல்லாமே ரோட்டுலதான். "தெருக்கள் நேர்நேராகவும், அகலமாகவும், வடிகால் வசதியோடும் இருந்தன"ன்னு புதையுண்ட மொகஞ்சதாரோ ஹரப்பாவுக்கு பிறகு எந்த நகரத்திலயும் இருக்கிறதை பார்க்கவும் முடியலே. படிக்கவும் முடியலே. த்தூத்தேறி...

நம்ம வால் எப்படியிருக்கான்? மாமனுங்க ரெண்டுபேருக்கும் செமத்தியா செலவு வச்சிருப்பானே... விளையாடப் போகாதே வெளியப் போகாதேன்னு அவனை கட்டுதிட்டமா அடக்காதே. இப்ப லீவ்தானே. விடு, விளையாடட்டும். அஞ்சுல வளையலேன்னா அம்பதுல வளையாதுங்கன்னு இதைப் படிக்கிறப்பவே எனக்கு பதில் சொல்லணும்னு உன் வாய் துடிக்கும். ஒரேயடியா வளைச்சு கடைசியில நிமிரத் தெரியாம போயிடக் கூடாதில்லையா? அதுவுமில்லாம அம்பதுல எதுக்கு வளையணும்னு கூட நாம யோசிக்க வேண்டியிருக்கு.

நமக்காச்சும் மடியில கிடத்தி கதை சொல்ல தாத்தா பாட்டி இருந்தாங்க. இப்ப இருந்தாலும் எந்த பாட்டிக்கு கதை தெரியும்? அவங்கதான் இப்ப டி.வி முன்னாடி வாய் பொளந்து கிடக்காங்களே... குழந்தைக்கு என்ன தெரியும்? அவங்க உலகமே தனி. அதுக்குள்ள நாம நுழையாம இருக்கறவரைக்கும் அதுகளுக்கு சந்தோசம். நீயும் நானும் அனுபவிச்சு இழந்து மறந்த சந்தோசம். அது அவனுக்கு விளையாட்டுல கிடைக்கும்னா நாம ஏன் தடுக்கணும்...

சரி மகா நீ எப்படியிருக்கே... உனக்கென்னடியம்மா... காலையில வந்தா சாயங்காலம் பஸ்ஸேறி பறக்கிற மகள், ஒரு மாசம் முழுசா தங்கறதுக்கு வந்திருக்காள்னு சந்தோசத்துல உங்கம்மாவுக்கு தலைகால் புரியாது. உன் தங்கச்சி சிறுவாட்டுல வளர்ற கோழியெல்லாம் உன் தட்டுலதான் இருக்கும். நல்லா சாப்புடு. எப்ப தண்ணி லாரியோட ஹாரன் சத்தம் கேட்குமோங்குற நித்ய கவலைய விட்டுட்டு நல்லா சாப்பிட்டு தூங்கி இந்த ஒரு மாசத்துலயாவது உடம்பை கொஞ்சம் தேத்து.

ரொம்ப அனிமிக்கா இருக்கேன்னு டாக்டர் தந்த டானிக் முழுசையும் நீ குடிச்சிருக்கணும். மறுத்திட்டே. அலமாரியில பாதி பாட்டில் நிறம் மாறி கிடக்கு. கேட்டா, எண்ணைய பூசிக்கிட்டு உருண்டாலும் ஒட்டறதுதாங்க ஒட்டும்னு பாட்டியாட்டம் பழமை சொல்றே. ஒவ்வொண்ணுகளும் எப்படி திண்டுக்கட்டைங்களாட்டம் திமிர்த்துக்கிட்டு ஊறுதுங்க, நீ என்னடான்னா நாளிருக்க நாளிருக்க இளைச்சுக்கிட்டே போற. போனவாரம் தைச்ச ஜாக்கெட் இந்தவாரம் லூசாயிருக்குங்கறே.

வேளாவேளைக்கு ஏதாச்சும் சாப்பிட்டாத்தானே... பசின்னா பத்தும் பறக்கும்பாங்க. உனக்கு பத்தும் பறந்து வந்து பக்கத்துல நின்னாலும் பசி மட்டும் வரமாட்டேங்குது. மனசுல தீராத கவலை உள்ளவங்களுக்கு உடம்புல எதுவும் ஒட்டாதாம். ஏன் மகா, சொல்லி ஆத்திக்க முடியாத கவலை ஏதாச்சும் உனக்குள்ள இருக்கா... வெளிப்படுத்த முடியாம மனதுக்குள்ளயே நெனச்சு நெனச்சு மருகிக்கிட்டிருக்கியா.. சொல்லு மகா...

இந்த எட்டு வருசத்துல ஒரு நாளும் உன்னைக் கேட்டதில்லை. சொல்லியும் எதுவும் கப்போறதில்லேன்னு நெனச்சோ என்னவோ நீயும் எதையும் சொன்னதில்லை. அதுவுமில்லாம, நேருக்குநேரா கேட்டா இயல்பா இருக்காது. சினிமாவுல கேட்கிற மாதிரி செயற்கையா இருக்கும். பதிலும் வெளிப்படையா இல்லாமா போலியாத் தானிருக்கும். அதனால தான் இப்ப லட்டர்ல கேட்கிறேன். இவனை விடவும் வேற ஒரு எடத்துல நமக்கு நேர்ந்திருந்தா நல்லா பொழைச்சிருப்பேன்னு உனக்கு எப்பவாச்சும் தோணியிருக்கா... அப்படி தோணுற அளவுக்கு என்னோட நடவடிக்கையில எதெது இருக்கு...

"என்னங்க இது, கல்யாணமாகி இத்தனை வருசம் கழிச்சு இப்படியெல்லாம் கேட்டுட்டு..."ன்னு சம்பிரதாயமா பதில் சொல்லாதே. அட்லீஸ்ட், இதை படிக்கிறப்பவாச்சும், உன் மனசுல இருக்கிறதை ஒருவாட்டி வாய் விட்டு சொன்னினாக்கூட ஆறுதலாயிருக்கும்.

என்னோட, கடைசிவரைக்கும் கஷ்டநஷ்டங்கள்ல (சுக துக்கம்னு நமக்கு கிடையாது. நமக்கெல்லாம் கஷ்ட நஷ்டங்கள்தான்) பங்கெடுத்துக்கிறவ நீதான்ற முறையிலயோ, உனக்கும் உணர்வுகள் இருக்குங்கிற வகையிலயோ உன்னை மதிச்சு கலந்துபேசி முடிவெடுக்கிற பக்குவம் எனக்கு இன்னமும் வரலை. முரட்டடியா "எனக்குத்தான் தெரியும்''னு சொல்லாமலே அப்படியான மனநிலையிலதான் உன்னை நடத்தியிருக்கேன். ஆனா நீ முகஞ்சுளிச்சதில்லை.

யோசிச்சுப் பார்த்தா, உனக்குன்னு எதையும் செய்யலேங்கிறது நல்லாவே படுது. உடம்பை மறைக்கத் துணியும், வயித்தை நெறைக்க சோறும்கிறதை தாண்டி, ஊர் உலகத்துல மத்த பொம்பளைகளுக்கு வாய்ச்சிருக்கிற எதுவும் உனக்கு நேரலை. கல்யாணநாள்ல புடவை எடுக்கிறது கூட, முதல் வருசத்தோட நின்னுப் போச்சில்லையா...

எப்பவெல்லாம் கோவாப்டெக்ஸ்ல நிலுவை தீருதோ அப்பத்தான் நமக்கு தீபாவளியும் திருநாளும்னு மாறிடுச்சு. என்னவோ ஒரு கலர்ல சேலை, அதுக்கு சம்பந்தமேயில்லாத ஜாக்கெட்... முந்திய கழுத்து வரைக்கும் இழுத்து விட்டுகிட்டு நீ நடக்குறப்ப பலநாள்ல எனக்கு அழுகை முட்டிக்கிட்டு வந்திருக்கும். தாலிக்கயிறை தவிர பொட்டிலிருந்து மெட்டி வரைக்கும் மேட்சிங்கா போட்டுக்கணும்னு கிழவிங்ககூட ஆசைப்படற இந்த காலத்துல, உனக்கு அந்த ஆசையெல்லாம் வர்றதில்லையா? ஒரு குண்டுமணி செஞ்சுப்போடலேன்னாலும், இருந்ததையாவது விட்டுவச்சேனா... எல்லாத்தையும் தொலைச்சு முடிச்சாச்சு.

என்ன பண்றது... நம்ம நெனைப்புக்கும் திட்டத்துக்கும் மீறி வந்த செலவுங்க ஒண்ணா ரெண்டா... ஒப்புதலில்லேன்னாலும் செஞ்சாக வேண்டிய செலவுகள்... மூத்தப் பையன்கிற பொறுப்பால தட்டிக்கழிக்க முடியாத செலவுகள். ஒத்தை சம்பளத்துல அதுவும் சொத்தை சம்பளத்துல அத்தனைக்கும் ஈடு கொடுத்து தாக்குபிடிச்சு நின்னேன்னா அது உன்னோட பலத்துலதான் மகா. கூட நம்ம பிரண்ட்ஸ்ங்க சிலர்.

நேத்து சர்வீஸ்ல சேர்ந்தவன்கூட வீடுவாசல் தோட்டம் தொறவு வண்டி வாகனம்னு பொண்டாட்டி புள்ளைய சுகபோகமா வச்சிருக்கிறதை பாக்குறப்ப கண்ணுக்கு தெரியாத மாயவாள் மனசை அறுத்தறுத்து ரணமாக்குது. அவங்களுக்கு சம்பளத்துல மிச்சம் பிடிக்கிற அளவுக்கு பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்ப சூழ்நிலை. இல்லேன்னா ஏதாச்சும் சைடு பிஸினஸ். கொஞ்ச பேர்தான் அப்படி. பெரும்பாலானவங்க கிம்பளத்தைத்தான் நம்பியிருக்காங்க. என் சுபாவத்துக்கு அது பொருந்தலை. பத்துபேருகிட்ட கை நீட்டி உனக்கு பட்டுப்புடவை வாங்கித்தரலாம். கட்டிக்கிட்டு நீ தெருவுல நடக்குறப்ப, நாம கொடுத்த லஞ்சப்பணத்துல வாங்கினதுதான் இவ கட்டியிருக்கிற சேலைன்னு தந்தவன்ல எவனாச்சும் நெனைப்பான். அப்படி நெனைக்கிறது, நீ கட்டியிருக்கிற துணியை ஊடுருவி, உன்னோட நிர்வாணத்தை பாக்குறதுக்கு சமம்தானே... அதை எதிர்த்துக் கேட்கிற தார்மீக பலமும் உரிமையும் எனக்கும் உனக்கும் இல்லாம போயிடும்னு பயப்படறேன்.

உங்கப்பாவுக்கு கூட இதுல என்மேல ரொம்ப வருத்தம். "நீங்க மட்டும் கை நீட்டாம இருந்தா சிலையா வைக்கப்போறாங்க"ன்னார் ஒரு நாள். எல்லா காரியங்களையும் சிலையை குறிவச்சே நடத்தினா, அப்புறம் நாட்டுல மனுசங்க நடமாட இடமிருக்குமா... அவங்கவங்களுக்குன்னு மனசாட்சி எப்படி வழிகாட்டுதோ அப்படித்தான நடக்கமுடியும்..." ஊரு எப்படியிருக்கோ அப்படி நீங்களும் இருந்துட்டுப் போங்களேன்"னார் இன்னொருவாட்டி. ஊருங்கிறது எது மகா... நாமெல்லாம் இல்லாமயா... நாம போற போக்குல ஊரும் ஒரு நாளைக்கு வரும்னு நம்பி போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதான். அதை விட்டுட்டு, வாய் கொப்பளிக்க தண்ணியிருக்குன்னு, நரகலை அள்ளித் திங்க முடியாதில்லியா...

விடு மகா, இன்னம் ஒருவருசம். சொடக்குப் போட்டாப்ல ஓடிடும். சீட்டுக்கடனும் முடிஞ்சிட்டா, நம்மாலயும் கொஞ்சம் மூச்சுவிட முடியும்.

சரிப்பா, ரொம்ப புலம்பிட்டேன்னு நெனைக்கிறேன். ரொம்ப நாளா உங்கிட்ட சொல்லணும்னு மனசு முழுக்க நெறைய சேர்த்து வச்சிருந்ததாலத்தான். இதையெல்லாம் உனக்கு எழுதினதால, உன்னைப்பிரிஞ்சு இவ்வளவு தூரத்துல இருக்கேன்ற தனிமை தெரியலை. மத்தபடி இந்த லைப்பும் ஒருவகையில நல்லாத் தானிருக்கு.

சுவர் முழுக்க சினிமாக்காரங்களோட ப்ளோ அப், சிகரெட் புகை மண்டிக் கிடக்கிற ரூமுக்குள் எறைஞ்சிக் கிடக்கிற புஸ்தகங்க, காலநேரமில்லாத அரட்டை, தூக்கம், ஈரத்துணிங்களோட மக்கின வீச்சம் - இப்படியெல்லாம் வாழ்ந்த 'பேச்சிலர் லைப்' மறுபடியும் ஞாபகத்தில் வந்து வந்து போகுது. வாழ்ந்து நிறுத்திய வாழ்க்கையை மறுபடியும் தொட்டுத் தொடர ஒரு வாய்ப்புக் கிடைக்கிறதும் கூட சந்தோசம் தான் போல.

காலச்சக்கரத்தை திருப்பி சுழற்ற முடியாதுன்னு தெரிஞ்சிருந்தாலும் கூட, சுத்தற மாதிரி தெரியற கணம் - அந்த கணத்தில் வேறொரு தளத்துல இயங்குற வாழ்க்கை எல்லாமே மனசுக்கு தேவைதான். மேலேறுகிற போது போட்டுவிட்டுப் போன கைக்குட்டையை மறுசுற்றில் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளும் சந்தோசமும் சாகசமும் ரங்கராட்டினத்தில் மட்டுமில்லை, வாழ்க்கையிலும் தட்டுபடத்தான் செய்கிறது. உனக்கு அங்கும் எனக்கு இங்குமாக கழிகிற அந்த வாழ்க்கையை நினைப்பூட்ட இந்த கடிதம் சாட்சியாய் இருக்கட்டுமே.


அன்போடு அன்புக்கு,

செவ்வாய், நவம்பர் 29

சுழல்வு - ஆதவன் தீட்சண்யா

ரியும் பால்சட்டியும் ஒழிந்த வீடுகளின்
வெற்று உத்திரங்களில் தாவிக் களைத்திருந்த
பூனைகளுக்கு
கிலியூட்டும் அச்செய்தி வந்தது
பூனைக்கழுத்தில் மணி கட்ட பயந்து நடுங்கியிருந்த எலிகள்
மணியின் கழுத்தில் சுருக்கிட்டு சாகடித்திருந்தன பூனையொன்றை

பதற்றத்தில் கூடிய மாநாடு
மேலாண்மைச் சரிவு தடுக்க உத்திகள் வகுத்தது:
எலிகள் வளர்ந்து வளர்ந்து பூனைகளை விடவும் பெரிதாக இப்போது
தின்பதிலும் திருடுவதிலும் திறன்நுட்பம் கூட
வழக்கு தொடுத்தாலும் வாய்தாவில் தப்புகின்றன
வளையிலும் தங்குவதில்லை
பொறியிலும் சிக்குவதில்லை
கவ்விப்பிடிக்கக் காத்திருந்தாலும்
கண்ணறியாது வந்து போகின்றன
..................................................................
................................................................
எலிகளுக்கு எப்படியாவது
மணி கட்ட வேண்டும்.

திங்கள், நவம்பர் 28

ரியல் - எஸ்டேட் பிரச்னை - ஆதவன் தீட்சண்யா

ங்குனி சித்திரை
புளியடிக்கும் காலம்
சல்லிசு விலையில்
வருசத்துக்கே வாங்கிவிடுவார் அப்பா

அறுவடைக்காலத்தில் மலிவாய்
அவரை துவரை நெல் பிடிப்பார்
ஏழெட்டு மூட்டை

சேலம் பாசஞ்சர் பயணமென்றால்
கூடைக்காரியிடம்
நாலுதட்டம் காய் வாங்காமல்
வீடு திரும்பமாட்டார்
மார்க்கெட்டில்
ஒரு நாளுக்காகும் காசில்
ஒரு வாரத்துக்கே கிடைப்பதாய் ஒப்பீடு தவறாது

ஒரு மைல் நடந்தால்
ஒரு ரூபாய் மலிவென்றால்
அப்படியொரு பரிவர்த்தனைக்கே
பழகியிருந்த எங்கள் அப்பா
காந்திபுரம்
அண்ணாநகர்
காமராசர் காலனியைப் போலவே
ஊரிலிருந்து ஒன்பது காதத் தொலைவில்
உருவாகும் புதுநகரில்
ஒரு சென்ட் ஒரு லட்சமென வாங்கினார்

பஸ்ஸ்டாண்டுக்கு கூப்பிடு தூரத்தில்
அம்பேத்கர் காலனியில்
அடிமாட்டு விலைக்கு மலிந்திருக்கும் மனை வாங்க
நாதியில்லை யாருக்கும்

சாதியிருக்கிறது
மண்ணுக்கும்.




http://india.poetryinternational.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=21009













வெள்ளி, நவம்பர் 25

ஊத்தைப்பண்டத்திற்கான வீரமுழக்கம் - ஆதவன் தீட்சண்யா

குளிப்பறையின் தனிப்பில் உனக்குரியதைவிடவும்
கூடுதல் சுதந்திரமுடையதான பாவனை பூசி
வெறும் சந்தையாகத்தான் எப்போதுமிருக்கிறது உலகம்

வலிந்து நீ சூட்டிய மகுடங்கள் உதிர்த்து
நிறுத்தல் முகத்தல் மானிகள் தரித்து
யாவற்றுக்கும் தரகுமண்டியாகிவிட்ட உலகம்
சரக்கு பாரத்தோடு
எடைமேடையில் நிற்குமொரு லாரி போன்றுமிருக்கிறது

எல்லோரும் புசித்தது போக
எஞ்சிய ஒருதுண்டு வேட்டைக்கறி அல்லது நீர்க்கிழங்கிலிருந்து
ரூபமற்று கிளைத்த பரிவர்த்தனை விதிகளின் எந்த ஷரத்திலும்
பண்டமென்பதன்றி வேறு கியாதியில்லை உனக்கு

சுரோணிதம் திரண்டுச் சூலுறும்போதே
சிறைக்கம்பிகளையொத்த International Barcodeல்
உயிரின்மீது விலைப்பட்டியல் அச்சிடுவதை
வேடிக்கை பார்க்கத்தான் தடை; மற்றபடி
பருத்த தொடையும் சிறுத்த இடையும் கொண்ட
காதல் ததும்பும் / உலர்ந்த இருதயத்தை
தாய்மை சுரந்து கசியும் ஸ்தனங்களை
வாழ்வின் மர்மங்களை ரகசியமாய் அவிழ்த்துப் பிணைக்கும்
இலக்கியத்தை
யாருக்கும் அஞ்சா வீரத்தை
தேவையெனில்
உன்னையே நீ
விற்கலாம் வாங்கலாம்
வாங்கி விற்கலாம்
விற்றும் வாங்கலாம்
ஆனாலும்
விற்பனையாளன் அல்லது நுகர்வோன்
கெட்டிக்காரத் திருடன்
அல்லது
களவு கொடுக்கும் இளிச்சவாயன்
- இவர்களில் யாராயிருப்பதென்று முடிவெடுக்கும் சுதந்திரத்தை
எதற்காகவும் இழக்காதவனென்று கதைத்துத் திரி.










































வியாழன், நவம்பர் 24

எழுதவேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள் - ஆதவன் தீட்சண்யா

வர் கண்ணுமறியா நுண்ணிழையில் பூக்கும் அரூபச் சுரங்கம் மனசு. அரணும் மதிலுமென வாய் பிளந்து மேயும் முதலைகளின் அகழியுமாகிய தடை சூழ் காவற்கோட்டைகள் எப்புறமும் மாயத்தில். அண்டவொணாத கால வெளியற்று ஓயாப்பறவையின் சிறகுகளாகி சதாவும் இயக்கம். அணுவணுவாய் உள்பொதியும் அனந்தகோடி ரகசியம் படிக்க யாரால் கூடும்... முடிவற்ற ஆயுளே சித்தித்தாலும் முடியா இலக்கு. வாழ்நாளெல்லாம் முயன்று நனைந்தத் துணியாய் துவளும் இக்கணத்தில் ஏதுமற்ற வெறுங்கூடாய் என்னையே வீசிக்கொள்கிறேன் படுக்கையில். சதையிணுக்குகளில் சல்லடையிட்டு, சாரம் குடிக்க நாச்சுழற்றும் குரூரத்தின் ரூபமானது இப்படுக்கை. காலத்தின் குழந்தைகள் கடைசி சயனம் கொள்ள கதியிதுவேயென விரிந்த கபடம்- ஆஸ்பத்ரி வார்டின் அழுக்கு படுக்கைகள் போல.

பாயின் ஒரு கோரைபோல ஊடுபாவி மௌனத்தின் உரு பூண்டு படுத்திருந்தேன். பசிப்பும் புசிப்புமற்ற ஏகாந்தமேக, பறக்கும் கம்பளத்தில் படுத்திருப்பதான சிலிர்ப்பு. பாயும் தலையணையும் கெக்கலிக்கின்றன தாமும் படுத்திருப்பதாய். ஓய்விற்கோ உறக்கத்திற்கோ அல்லாது விழிப்பை முன்னிறுத்தியே நான் படுத்திருப்பதை அவற்றுக்கும் யாவற்றுக்கும் பதிலாய் சொன்னேன்.

ஒவ்வோர் கணம் தெளிவின் சோபை மின்னல் பிரகாசமாய் விகாசமடித்து தீட்சண்யத்தில் ஜ்வலிக்கிறது முகம். திடுமென இருளிட்டு கறுக்கிறது. இமையற்றுப் பிறந்தவன் போல் திறந்தே கிடக்கும் விழியில் வெறித்தப்பார்வை. பின்மூடி ஆழ்தியானம் பூணுவதாகிறது என்னிருப்பு.

முக மனவோட்டங்களின் மர்ம வெளிப்பாடுகளால் பெரிதும் கலவரப்பட்டவர் முதலில் என் அப்பாவே. அம்மாவும் வந்தாள். எப்போதோ அறுத்த தொப்புள்கொடி இப்போது கிளைத்து அசைவதாய் அரற்றினாள். தவமாய் தவமிருந்து பெற்றப் பிள்ளை இப்படி தவங்கிக் கிடக்கிறானே பிணம் போல் என்றழுதாள். ஆடு சினையாவது எஜமானன் பிழைக்க அல்ல என்று நான் நினைத்ததை எப்படியோ அறிந்து கொண்டார்கள். நெருப்புச்சாட்டையால் விளாறல் கண்டோராகி துடிப்பில் வெளியேறினர். சிருஷ்டிப்பின் தாத்பர்ய சரடை நான் உருவி எறிந்ததில் அவர்களது துன்பம் அளவிடற்கரியதானது.

என் மனைவியிடம் விசாரணை. இரவின் அந்தரங்கத்தில் ஆளுமையும் கொள்ளாது அடங்கியும் நில்லாது விசித்திரப் போக்காளியாக நானிருந்ததை வைத்து பல திட்டவட்டமான முடிவுகளுக்கு அவள் ஏற்கனவே வந்துவிட்டிருந்தாள். படுக்கையில் தாசி போலிருக்க வேண்டுமென்ற துர்போதனைக்கு வெகுவாய் பலியாயிருந்த அவளது சாகசங்கள் என்னை எவ்வகையிலும் கிளர்த்த முடியாததில் மிக்க அவமானம் தாக்கியவளாய் ஊமையழுகையில் ஊறி நைந்திருந்தாள். உனக்கு நான், எனக்கு நீ, நமக்காக குழந்தைகள் என்பாள் தூக்கத்திலும். யாரும் யாருக்காகவுமில்லையென விளங்கவைக்க மேற்கொண்ட முயற்சிகள் என்னையொரு துஷ்டப் பிண்டமென உறுதிபடுத்த போதுமானதாயிருந்தது அவளுக்கு. கட்டுதிட்டம் இல்லாதவனை கட்டிக்கொண்ட கவலையில் இரவையும் பகலையும் அலை அலையாய் எழும்பும் விசும்பல் வளையங்களால் கோர்த்தாள். உலுக்கி உலுக்கி கேட்ட அம்மாவிற்கு அனாயசமான தோள்பட்டை குலுக்கலும் உதாசீனமான உதட்டுப்பிதுக்கலுமே என் மனையாளின் பதில்.

எனக்கு நேர்ந்திருப்பது என்னவென்று நானே அறியாத நிலையில் குடும்பத்தார் வெகு பிரயத்தனம் கொண்டனர். எல்லாப் புரியாமைகளுக்கும் பரிகாரம் தேடும் பூர்வகுணம் தூண்ட வேலைகள் துவங்கிற்று. ஊரடங்கிய பின்னிரவில் வீட்டுவாசலில் ஒற்றைநாய் ஊளையிட்டுச் சென்றதுதான் பரிகார வேலையை துரிதமாக்கியிருக்க வேண்டும். இப்போதெல்லாம் அப்பா வெளித்திண்ணையில் சுருட்டு பிடித்தபடி நாய்விரட்டக் காத்திருக்கிறார்.


நடுக்கூட மூங்கில் வாரையில் மந்தரித்த மஞ்சள்துணி கட்டப்பட்டது. ஒண்ணேகால் ரூபாய் காணிக்கைத்தொகையும் அரிசி கருப்புக்கயிறு காதோலை கருவளையமும் அதனுள். காற்று பலமாய் வீசும்போதெல்லாம் மூக்குக்கு நேராய் ஆடிக்கொண்டேயிருக்கிறது மனிதர்களை கேலியிட்டபடி.

படுக்கை பற்றிக்கொள்ளாத தூரத்தில் குண்டம் மூட்டி யாகம் வளர்ந்தது. உள்ளூர் கங்காணியம்மன் கோயில் பூசாரியிலிருந்து மலையாள மாந்திரீகன் வரை தெய்வாம்சம் நிறுவிப்போயினர். இடுப்பிலும் புஜத்திலும் பிணிக்க ஏதுவான இன்னோரன்ன அவயங்களிலும் தாயத்துகள் நேர்ந்து கட்டப்படுவது வாடிக்கையாகிவிட்டது. தர்காவிற்கு தூக்கிப்போய் பாத்தியா ஓதியதையும் பாதிரியொருத்தர் வீட்டிற்கே வந்து ஜெபித்துப்போனதையும் யாருக்கோ நடக்கிறது இதுவெல்லாம் என்று பார்த்திருந்தேன் விழிமூடி. வெளியூர் உறவினர்கள் இஷ்டதெய்வ சன்னதிகளில் பிரார்த்தித்து கூரியரில் பிரசாதம் அனுப்பிய வண்ணமுள்ளனர். அம்மாவும் துணையாளும் மூவேளையும் என் நெற்றியை திருநீரால் துலக்கினர். புத்திர பாசத்திற்கும் பதிபக்திக்கும் நடந்தப் போட்டியில் என் நெற்றி ஓரங்குலம் மேடுதட்டியது.

தலைமாட்டில் உயிரென படபடத்துக் கொண்டிருக்கிறது என் வாக்குமூலம். எனக்குள் நானே திருடிச் சேர்த்த வார்த்தைகள் கொண்டு இழைத்து நிறைத்தது. எவர் படிக்கவும் தோதாக எல்லா மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கிறது. அடிக்குறிப்புகள், அருஞ் சொற்பொருள் விளக்கம் உள்ளிட்ட இலக்கண சாஸ்திர நியமங்கள் வழுவாது நெறியாளப்பட்டுள்ளது. கண்ணுக்கு உறுத்தாத வண்ணத்தில் ஒயிலான வடிவம் கொண்ட எழுத்துக்கள். ஜொலிக்கும் ப்ளோரசண்ட் எழுத்தையே கண்டவர்களுக்கு கொஞ்சம் சிரமம்தான். புரையும் பிரமையும் நீக்கி படிக்கலாம். எல்லோருக்கும் கிடைக்க எண்ணிலடங்கா பிரதிகளெடுத்து ஹெலிகாப்டர் வழியாகவும் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணக்கட்டுரை, சுயசரிதை, வாழ்க்கை வரலாறு போன்றே வாக்குமூலமும் கூட எழுத்தில் ஆகிருதி கொண்டதொரு வடிவமேயென இலக்கிய உலகம் ஒப்புக்கொள்ள சகுனம் பார்த்துக்கொண்டிருப்பதாய் சற்றுமுன் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கருவாய் தரித்த கணத்திலேயே எழுதத் தொடங்கியது பூர்த்தியாகிவிட்டது. முற்றுப்புள்ளி வைக்க மட்டும் ரத்தமில்லை மிச்சம்.

‘‘ பொருத்தமற்ற அலங்காரம். பொய் தளும்பும் வசனங்கள். மிகைப்பட்ட பாவனைகள். மோர்ப்பானையில் விழுந்தது போல் மொழி புளிக்கிறது. நெடுநாளாய் நடக்கும் இந்நாடகம் கண்டு மேடையே இற்றுக் கிடக்கிறது வெட்கிக் கூசி. நான் ஏற்று நடிக்கும் பாத்திரம் எதுவுமேயில்லை. ராஜபார்ட், வில்லன், பபூன், ஸ்திரீபார்ட், தாதி, பத்தினி, பரத்தை, உத்தமன், கள்ளபார்ட், கஞ்சன், வள்ளல், - ஹோ.. எல்லா வேடங்களும் நான் தோற்க உத்திரவாதமானவை. புழுங்கிச்சாகும் வெற்றுப் பார்வையாளனாய் இருக்கவொப்பது நடிக்க வந்தாலோ அட்டைக்கத்தியிலும் பாஷாணம் தடவி சொருகிவிடுவீர். ஆம் உங்களுக்கு புத்தம் புதியதாய் எதுவும் பிடிக்காது. பிடிக்காது என்பதை விடவும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் முயலமாட்டீர். பின் தெரியாதிருப்பதே திறமையென வாதித்துக் கிடப்பீர் வருசத்தில் பாதி நாள். அதற்கொரு மேடை தேவை. உண்மையில் கலைஞானம் எதுவுமறியாத நீங்கள் நாடகத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டிருப்பது மேடையை உங்கள் அனுபோகத்திலேயே வைத்திருக்கும் சூதின் ஒரு பகுதியே என்பதை நானறிவே.. "

சேனையே தோற்று மாயினும் களம்புகும் சுத்தவீரனுக்கு ஒற்றைக்குறுவாள் போதும். நானும் என் யுத்தத்தின் ஏகரூப ஆயுதமாய் நம்பிக்கொண்டிருப்பது இந்த சின்னஞ்சிறு வாக்குமூலத்தைத் தான். என்மீதான கேள்விகளுக்குரிய பதில்களாலும், பதிலறிவதற்கான கேள்விகளாலும் நிரம்பி தாள் விட்டுக் கீழிறங்கி திசையெல்லாம் வழியும் என்னுயிரொத்த குழந்தைபோல் அனாதையாய் துடிக்கிறது எழுத்து. வாரியணைத்து பால் புகட்ட வேண்டாம். ஒரு துளி விஷம் போதும். அடங்கிவிடும். காத்திருக்கிறேன் யார் தீண்ட வருவரென்று.

கருணை பொருந்திய காற்றும் ஒளியுமே முதலில் வந்தவை. இங்கேயே இவை இருந்திருக்கக் கூடும். தந்துகிகளை வெட்டிவிட்டு சொட்டுச் சொட்டாய் வடியும் ரத்த மசியெடுத்து உயிர்தாளா வாதையில் ஒவ்வொரு எழுத்தாய் எழுதுவதைக் கண்டு இரக்கம் கொண்டனவோ என்னவோ... ஆரத்தழுவி விம்மின. பாவம் தற்குறிகள் அவை. எழுத்துக் கூட்டி படிக்கவும் ஏலாதவை. உபாயமாய் குளுமையில் வீசின அறையெங்கும்.

மனித தேவ பாஷைகளறிந்த மகான்களுக்காக வழியும் விழியும் திறந்தேயிருந்தன. பார்க்க வந்த ஓரிருவரும் பார்வையை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்திருப்பதால் வாக்குமூலத்தை வாசிக்க முடியாதிருப்பதாய் சொன்னதை நம்பவேண்டியிருந்தது. வழியெல்லாம் தடுக்கி விழுந்து காயங்களோடு வந்து சேர்ந்திருப்பது அவர்களின் கூற்றை உறுதி செய்கிறது. பார்வையை பதனமிட்டு வைத்திருக்கும் ரசக்குடுவையின் சாவி, ஏழுகடல் ஏழுமலை தாண்டி ஒன்றுபோல் பறக்கும் ஒன்பது கிளிகளில் ஒன்றின் வயிற்றுள் இருப்பதாயும், அதன் காவல்பூதங்கள் காற்றணுக்களிலும் கலந்திருப்பதாயும் சொன்னபோது மலைப்பும் பயமும் தொற்றியது. சடுதியில் ஓடிப்போய் சாவி எடுத்து பார்வை தரித்து வந்து படிப்பதாய் பதைத்தார்கள். என்னருகில் நின்றிருக்கும்போதே அவர்களது கால்கள் கழன்றுபோய் செருப்பை மாட்டிப் கொண்டு வழியில் நின்றன வாகனங்களாகி.

அந்தி மசங்கலில் வந்து சேர்ந்தார்கள் அண்டை வீட்டார் வண்டி பூட்டிக்கொண்டு. முன்கூட்டியே வந்துபார்க்காத குற்றவுணர்வு மேலோங்க, காரணங்களை அடுக்கினர். ஓய்வு ஒழிச்சலற்ற தம் பணியால்தான் உலகமே சுழல்கிறதென்றும், நிற்க நேரமில்லை என்றும் சொன்னார்கள். காலம் பொன் போன்றதென்று உடலெங்கும் பச்சை குத்தியிருந்தார்கள். இருபத்தி நாலு முள் வைத்த கடியாரத்தை கண்ணிமையில் கட்டித் தொங்கவிட்டு காலத்தை அளந்தளந்து விரட்டிக் கொண்டிருக்கிறார்களாம். கழுத்தில் தொங்கிய காலண்டர் தாள்களை கைகள் அனிச்சையாய் கிழித்தபடியேயிருந்தன. வாக்குமூலத்தை வாசிக்க நேரமற்றிருப்பதாக வருத்தம் தெரிவித்தனர். வரும் வருஷத்து பஞ்சாங்கத்தோடோ, வார, மாத இதழ் ஏதோவொன்றின் இலவச இணைப்பாகவோ கொடுத்தால் ஒழிந்த நேரங்களில் படிக்க முயல்வதாய் உத்தரவாதம் தந்து போயினர். போகிற அவசரத்தில் விட்டுப்போன வண்டிமாட்டின் கழுத்துமணி மாதாக்கோயிலில் போல் அடித்துக்கொண்டேயிருந்து வாசலில்.

ஆராய்ச்சி மாணவர்கள் வந்திருந்தனர் பேரேடுகளோடு. சிறுமழலைப் பிராயம் தொட்டே பாடம் சுமந்ததில் கூன் கண்டிருந்தனர். கண்ணிருக்கும் இடத்தைகூட கண்ணாடி மாட்டிய பின்தான் அறிய நேர்ந்தது. விளம்பரப் பலகைகள் போல் விதவிதமான வாசகங்கள் பொருந்திய உடுப்புகளும் கால்ஜோடுகளும் தரித்திருந்தனர். நடையுடை பாவனைகளில் முன்னணி நட்சத்திரங்களின் சாயல் தெறித்தது. படுக்கையின் நீள அகலம், நிறம், படுத்திருந்த கோணம், பார்வையின் திசை, வாக்குமூலத்தின் தடிமன், எடை, நொடிக்கு எத்தனை முறை தாள்கள் படபடக்கின்றன என்ற அதிநுட்ப விபரங்களை குறிப்புகளாக்கினர். காற்றும் ஒளியும் கோபத்தில் மூர்க்கமாய் வீசின பொறுக்காது. எல்லாம் நிலை புரண்டன. கெட்ட ஆவிகள் கட்டிப்புரளும் இந்த அறையை இடித்து வாஸ்துபடி நிர்மாணிப்பது நலமென கட்டிடக்கலை நிபுணர் ஒருவர் சொன்ன கருத்து ஆமோதிக்கப்பட்டது.

படித்துக் கொண்டிருக்கும் நீங்களாவது வாக்குமூலத்தை படித்தாலென்ன என்றேன் தீனஸ்வரத்தில். எத்தனை மார்க் கிடைக்கும் என்றார்கள். எல்லாமே மதிப்பெண்களாக அளவிடப்படுகையில் மௌனமே சரியான எதிர்ப்பாயிருக்குமென பதிலற்றிருந்தேன். அவர்களுக்கு உறுத்தலாகி இருக்கும் போல. பாமரன் பொம்மை பார்க்க புரட்டுதல் போன்று ஒப்புக்கு விரல்நுனியில் அளைந்தனர். பின் ஒருவன் உரக்க படிக்க எல்லோரும் கேட்பதென தீர்மானமானது. கற்றலில் கேட்டலே நன்று என்றொருவன் முதுமொழி செப்ப அவனது சமயோசித புத்தியை ‘‘சபாஷ்’’ என்று கூட்டம் ஆரவாரித்தது.

‘‘....ஒன்றுக்கு அடுத்து இரண்டு என்கிறது உம்கல்வி. இல்லை. இரண்டுக்குமிடையே எத்தனை தசம பின்ன அலகுகள்... ஏன் மறைக்கிறீர்... குறை பின்னங்கள் ஊனங்களென குற்றம் சாட்டுகிறீர். உண்மையில் குறை பின்னங்களின் சேர்மானத்தில்தான் உமது முழுமையடங்கி இருக்கிறது என்பதை ஞாபகம் வையுங்கள். மட்டுமல்ல, யாதொரு பின்னமும் அதனளவில் பெருமைபடத்தக்க அளவுக்கு முழுமையானவை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளும் காலம் வரும். பிரச்னை என்னவெனில், உங்களின் ஒப்புதலுக்காக செல்லாப் பிண்டமும் கூட காத்திருக்கப் போவதில்லை என்பதுதான். அதனிமித்தம், என் தாத்தன் மண்ணை உழுதுழுது மலட்டித் தள்ளியது போல் கல்வியை தலைகுப்புற கவிழ்த்துப் போட்டு புதிதாய் எழுத...’’

‘‘....Match the following வகையாக அட்டவணைப் படுத்திவிட்டீர் மனிதரை.
(எ.டு) மாணவன்- கல்வி, கலாட்டா.
இளைஞர்- வேலை, காதல்.
பெண்- கல்யாணக் கனவு.
திருமணமானவள்- வரதட்சணை, மாமியார் நாத்தி நங்கை கொடுமை.
வயோதிகம் - பென்சன், ஈஸி சேர்.
விவசாயி- கடன், ஜப்தி

.... இன்னின்னாருக்கு இன்னின்ன பிரச்னைதான் இருக்க முடியுமென மருந்துச் சீட்டைப்போல பரிந்துரைக்கிறீர். உண்மையில், வகுக்கப்பட்ட எல்லா சூத்திரங்களுக்கும் அடங்காமல் தான் ஒவ்வொருவர் வாழ்க்கையும் தன்போக்கில் உள்ளது. ஒரே வார்த்தையில் விடையளிக்கும் ஒரு மார்க் கேள்வி போன்று மொன்னையும் தட்டையுமானதல்ல வாழ்க்கை. சிக்கலும் நுட்பமும் செறிந்த சுருள் வளைய பரிமாணம் கொண்டது. நீங்கள் முன்வைக்கும் நேர்க்கோட்டுத் தீர்வுகளை, ஒரு வண்டைப் போல் குடைந்து கொண்டு போய் தன்பாதையை நிறுவுதல் வழியாக உங்களை நிராகரிக்கிறது...’’

-வாசித்துக் கொண்டிருந்தவன் அஜீரணம் கண்டவனாகி ஓங்கரித்து வாந்தியெடுத்தான். ‘‘ஓவர்டோஸ்’’ என்றார் மேற்பார்வையாளர். வேண்டுமானால் வாக்குமூலத்திற்கு கோனார் நோட்ஸ் இருந்தால் வாங்கிப் போய் மனப்பாடம் செய்து கொள்வதாகவும், முடியாதபட்சம் பிட்டெழுதுவது அல்லது Choice ல் விட்டு விடுவதாகவும் சலிப்போடு கூறினர். நோட்ஸாக சுருக்கித்தர முடியாதவன் வாக்குமூலமே எழுதியிருக்கக் கூடாதென்று கால்மாட்டிலிருந்த புகார் புத்தகத்தில் பதிந்தனர். நவீனாபிமானி ஒருவன் Floppy/CD யாவது இருக்கிறதா என்றான். மிதமிஞ்சிய ஏமாற்றத்தில் கோரஸாக பயணமே வீணென்று தலையிலடித்துக் கொண்டு வெளியேறினர்.

வாக்குமூலம் எழுதிவிட்ட பின் உயிரோடிருப்பது வீணென்றும், சட்டென முடிந்தால் அடக்கவேலை பார்த்துவிட்டு விடிந்ததும் வேறு வேலை பார்க்கலாமே என்றும் அங்கலாய்த்தனர் நண்பர்கள். விடியவைக்கும் வேலையே தமக்கிருப்பதால் விரைவாக சாகுமாறு என்னை வேண்டினர். எழுதியவனே சவம்போல் கிடக்கையில் எழுத்து மட்டும் ஏன் ஆடவேண்டுமென்று கண்ணோரம் துடிக்கும் வாக்குமூலத்தை உயிருள்ளதொரு வில்லனென பாவித்து கொல்லக் கொதித்தனர். இரும்புக்கை மாயாவியராகி காற்றலைகளில் மிதந்து காகிதங்களின் கழுத்தை நெறித்தனர். பின் சாதுபோல் வெளியேகி கனவின் மரணத்திற்கு அஞ்சலிக்க பூங்கொத்தொன்றை புறாக்காலில் கட்டி அனுப்பியிருந்தனர். பூவின் இதழ்கள்தோறும் உபயம் இன்னின்னாரென கோயில் படிக்கட்டுகள், டியூப்லைட்டுகளில் போல் பெயர், பதவி மறவாது எழுதப்பட்டிருந்தது. பூக்கள் கன்றி வாடின என்போல்.

பொதுவில் வாக்குமூலங்கள் குறித்து திட்ட வட்டமான காரணங்களின் பேரில் அவர்கள் வெறுப்பு கொண்டிருந்தனர். வாக்குமூலம் தேவையற்றது என்பதை முடிந்த வகையிலெல்லாம் எல்லாக் காலத்திலும் தாம் வலியுறுத்தியே வருவதை நினைவூட்டினர். கையோடு கொண்டுவந்திருந்த அலமாரிகளை திறந்து காட்டினர். சங்க காலம் தொட்டு சமகாலம் வரையான இலக்கியச்சான்றுகள், செய்திக்கோப்புகள், தீர்மான நகல்களால் அலமாரி பிதுங்கியது.

எவர்மீதும் குற்றம்சாட்டாத வாக்குமூலம் எதுவுமே இருக்கமுடியாதென்றும் அப்படி வெளித் தெரியாதவைகளில் மாந்திரீக மசியால் சங்கேதக் குறிகளாக குற்றச்சாட்டுகள் எழுதப்பட்டிருக்குமென்றும் நம்பினர். என்றேனுமொரு நாள் எடுத்து வாசிக்கையில் கூண்டில் நிற்போர் பட்டியலில் தன்பெயரும் இருக்கக் கூடுமென ஒவ்வொருவரும் ரகசியமாக அச்சம் கொண்டிருக்கிறார்கள். உயிலைத் தவிர வேறொன்றும் எழுத உரிமையற்றவனாகவே சாகும் தருவாயில் ஒருவனிருக்க வேண்டுமென சட்டத்திருத்தம் கோரினர். கனவான்கள் சபை விசேஷ கூட்டத் தொடருக்காக காத்திருக்கிறது.

திடுமென சூறைக்கு ஊசல்கண்ட தூளியாய் அங்குமிங்கும் அலைகிறது நினைவு.

உலகமே அகண்டதொரு பெரும் படுக்கையாய் தோன்றுகிறது. பாத்யதை கோரும் பாகத்திற்கு பட்டா பத்திரம் சிட்டாடங்கலென பக்கா ஏற்பாடுகளோடு படுத்திருக்கிறார்கள் சிலர். சர்வே எண், விலைமதிப்பு, பதவி, பட்டம், பிறந்த நட்சத்திரம், இறக்கும் நாள் விபரங்கள் நெற்றியில் பொறிக்கப்பட்டுள்ளது. இசை நாற்காலி பந்தயம்போல் படுக்கையைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கிறது பெருங்கூட்டம். தாதன் சங்கொலி நின்றதும் இடம் கிடைத்துவிடுமென பரபரப்பில் தோய்ந்தோடுகிறார்கள் அவர்கள். நான் யாரோடும் சேராது எட்ட நின்றிருக்கிறேன். வேடிக்கை பார்ப்பதாய் சொல்ல முடியாது. விட்டேத்தி என்றும் அர்த்தமில்லை அதற்கு.

எல்லோரும் என்போன்றே வாக்குமூலம் எழுதிவைத்திருக்கிறார்கள். அது பறந்து விடாதபடிக்கு தம் தலையை தாமே கொய்து பேப்பர் வெயிட்டாக அமுக்கியுள்ளார்கள். பரஸ்பரம் குரோதம் வளர்ந்திருக்கிறது முகாந்திரமின்றியே நகம் போல. அடுத்தவரது வாக்குமூலம் - அது எவ்வளவு நியாயம் சூடியது என்றாலும் படிக்காது எப்படியும் நிராகரிப்பதென அந்தரங்கமாய் சங்கல்பம் கொண்டிருப்பது தும்மல் வழியாயும் துப்பிய எச்சில் ஊடேயும் எங்கும் பரவி பகிரங்கமாகிவிட்டது. என்ன செய்வது இவ்வளவு தாள்களையும் என்ற தவிப்பு எல்லோருக்கும். "பழைய பேப்பருக்கு பட்டாணி....’’ என்றொருவனின் கூப்பாட்டில் பதற்றமும் உளைச்சலும் பெருகியது இவர்களுக்கு.

யாரும் யாருடையதையும் படிப்பதில்லை என்றானது. இப்போது எல்லோருமே அவரவர் வாக்குமூலத்தை அவரவரே படித்து மகிழ்ந்தனர். சொல் பொருள் நயம், சொல்லியிருக்கும் விதம் இன்னும் பன்னூறு நுண்ணிய விவரிப்புப் பாங்கினை சிலாகித்து தம்மைத்தாமே பாராட்டி புகழ்ந்தார்கள். புகழுரையும் கைத்தட்டலும் ஒலிநாடாவில் பதியப்பட்டு சுய புளகிப்பு நிமித்தம் இரவும் பகலும் இடையறாது ஒலிக்கிறது. ஐங்கண்டங்களிலும் அண்டார்டிகாவிலும் அறிமுகக் கூட்டங்களை சொந்த செலவில் ஊர்கூடி நடத்துவது போல் நடத்தினர். சுய வாக்குமூலம் மீதான இவர்களின் விமர்சனக் கட்டுரைத்தொகுப்பு வாக்குமூலத்தை விடவும் பெரியதாயிருந்தது. முடிந்தவரை கை வளைத்து முதுகில் தட்டிக்கொடுத்தனர். தலையில் ‘ஷொட்டு’ வைத்து கன்னம் வழித்து நெட்டி முறித்து ‘‘என் கண்ணே பட்டிரும் போல’’ என்று திருஷ்டி கழித்தனர். இறுதியில் தமக்குத் தாமே பரிசளித்துக் கொள்ள தீர்மானித்து வெற்று மைதானத்தில் ஒற்றையாளாய் நின்று விழா எடுத்தனர். ஜோல்னாப்பையில் கொண்டு வந்திருந்த பதக்கத்தை ஓரங்க நாடகத்தின் நடிகன்போல் கொடுத்து வாங்கி பையிலேயே திணித்துக் கொண்டனர். சிலரோ கழுத்தில் கட்டித் தொங்கவிட்டு அலைந்தார்கள்.

பூனையாய் பம்மி ஒற்றறியப் போன என் புலன்களுக்கு சோர்வே மிஞ்சியது. அவர்களது வாழ்வு பற்றிய எத்தகவலுமற்று என் மீதான புகார் பட்டியலின் தொகுப்பாயிருந்தன அவை. ஒட்ட ஒழுகாது வெட்டிக்கொண்டு திரியும் துக்கிரி என்ற அடைமொழியால் விளித்திருந்தனர் என்னை.

ஓரிருவர் என்போலவே எழுதியிருந்தனர்:

‘‘...சித்ரகுப்தனின் பேரேடு நிகர்த்த உமது அகராதிகளும் குறிப்பேடுகளும் தூசுதட்டுப்பட்டு தயார் நிலையிலிருக்கும் இப்போதே. ஒரு பாவமும் அறியாத மகான்கள் யாராவதொருவரின் மேற்கோள்/குட்டிக்கதை வழியாக எனது மனப்போக்கிற்கு வலிந்து சாயல் ஏற்றிவிடுவீர். கோழைத்தனமென்றோ, தப்பியோடுதல் (Escapism) என்றோ அடைமொழியும் தரப்பட்டுவிடும். குற்றம் சுமத்தியவன் மீதே அதை பாயவைக்கும் பூமராங் வித்தையில் கை தேர்ந்தவராயிற்றே...

கண்ணுக்கு தெரியாத அளவுகோலும் தராசும் சட்டகங்களும் உங்கள் கையிலிருக்கும். யாருக்கோ தைத்த செருப்புக்கும் உடுப்புக்கும் நான் பொருந்தியாக வேண்டுமென சட்டாம்பிள்ளையாகி உத்திரவிடுவீர். ஏற்காவிடில், இவன் மனிதனே இல்லை என என்மீதான இறுதிப் பிரகடனம் வாசிக்கப்பட்டுவிடும்...’’


டாக்டர்களிடம் போகவும் தயக்கமே. வைத்யசாலைக்கு வெளியே அலங்காரமாய் தொங்கும் பெயர்ப்பலகையிலும் உள்ளிருக்கும் கருவிகளிலும் வழிகிற நுட்பமும் திறமையும் சிகிச்சைகளில் வெளிப்படுவதேயில்லை. ஓடிக்கொண்டே ஒன்னுக்கிருப்பது மாதிரி அவசர அவசரமாகவும், சிலநேரங்களில் நெடுநேரம் யோசிக்கிற பாவனை செய்தும் எனது மனநிலைக்கு ஏதாவதொரு ‘‘..மேனியா’’ என்றோ ‘‘...போபியா’’ என்றோ நாமகரணம் சூட்டுவர். பெயருக்குப் பின்னால் இன்னும் இரண்டு மூன்று எழுத்துக்களை கூட்டிக்கொண்டு தம் மேதாவிலாசத்தை புதுக்கிக் கொண்ட திருப்தியில் ஆழ்வர். ஆராய்ச்சிக்கூட வெள்ளெலி போல் நான் கிடக்க, டாக்டரின் கல்லாப்பெட்டி தள்ளாடும் பளுவில்.

வாக்குமூலங்களை வாசிக்க வாசிக்க, எனது வாக்குமூலத்தின் சில பகுதிகளை திருத்தியும் விரித்தும் எழுதவேண்டிய அவசியம் உணர்ந்தேன். ‘‘குற்றச்சாட்டுகளுக்கான பதில்’’ என்று புதிய அத்தியாயமே சேர்க்க வேண்டியதிருந்தது. பிடித்தக் கவிதை, ரசித்த இசை, முதல் முத்தத்தின் கிளர்ச்சி, வந்த - எழுதிய காதல் கடிதங்களின் உயிரோட்டமான விவரிப்புகள், என் சினேகிதிகளை சக்களத்திகளாய் வரித்துக்கொண்டு மனைவி ரகசியமாய் உகுக்கும் கண்ணீரின் வெதுமை, கனவுகளின் ஆளுமை... இப்படி தனித்துவம் செறிந்த பலவும் அமுங்கிப் போய்விடாதபடி கவனமாய் எழுத வேண்டியிருந்தது புது அத்தியாயத்தை.

‘‘பல்லிடுக்கில் துருத்திக் கொண்டிருக்கும் எனது சதை இணுக்குகளும் மேலன்னத்தில் படிந்திருக்கும் ரத்தகறையும் உங்களது குரூர வெற்றியின் அடையாளங்களாகி நிற்கும். உளைச்சல் தோய்ந்த என் சாவை முன்னிட்டு ஷெனாயின் பேரிரைச்சலோடு துவங்கும் உங்களின் நாடகம். பெருகி வழியும் கிளிசரின் கண்ணீர் துடைக்க திரைச் சீலைகளே கைக்குட்டைகளாகி நனையும். கொலைக் குற்றத்திலிருந்து விடுவித்துக் கொள்ளும் தவிப்பில் வசனங்கள் வந்துவிழும் அர்த்தப் பிழைகளோடு. துன்பியலாய் தொடங்கி அங்கதமாய் தானே மாறிப்போகும் அந்த நாடகத்தையும் நான் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கும் - பால்வெளி மண்டலத்தின் ஏதாவதொரு வீதியில் நட்சத்திர மீனாயிருந்து...’’

இதுகாறும் யாரும் எடுத்துப் படிக்காத என் வாக்குமூலத்தை, காலம் ஒரு நாள் தன் கண்ணில் ஒற்றிப் படிக்கும். சருகையும் ரசித்து வாழ்வைத் துய்த்தவொரு மனசை, வாள்கொண்டு கிழித்து நூல்கொண்டு தைக்க முயன்றோரை கூண்டிலேற்றும். என் வாக்குமூலத்தின் கடைசிவரிகளை காற்றும் ஒளியும் கடலடி பாசிகளும் காலகாலத்திற்குமாய் சொல்லிக் கொண்டேயிருக்கும். காரியசித்தமானதும் தம்மில் இப்படி பொறித்து என் வாழ்வுக்கு சாட்சியமாகும் :

‘‘ மேடை எங்களுடையது. எமக்கே எமக்கானதொரு மேடையை கட்டுவிக்க அடியும் சுதையுமாய் சமைந்திருப்பது எம்முன்னோரின் ரத்தமும் சதையும். அவர்களின் கனவைப் பாடவும் கதையைக் கூறவும் எங்களுக்கு எங்களின் மேடை தேவை.

வயல்வெளியில், ஆலைகளில், வானம் படுத்துறங்கும் மலைமுகட்டில் எமது நாடகமாந்தர் ஜனித்த வண்ணமிருக்கிறார்கள். ஆர்டீசியன் ஊற்றாய் பொங்கும் இவர்களது ஆசைகளே இனி நாடகங்கள்.

நேற்றிரவு நடத்தியதே உமது கடைசி காட்சியாயிருக்கட்டும். கள்ளமாய் கைப்பற்றிய மேடையிலிருந்து மலிவான உங்கள் பழஞ்சரக்குகளோடு கீழிறங்குவீராக. நாங்கள் மேலேறி வருகிறோம் சூரிய சந்திர ஒளி குளித்து ஆடவும் பாடவும்...’’

புதன், நவம்பர் 23

என் பெயர் ராணுவன் - ஆதவன் தீட்சண்யா

ம்மைத்தாமே கண்காணித்து வேவு சொல்லும்
ஒற்றர் நாட்டில்
நிழலும் சந்தேகத்திற்குரியதாகையால்
புழுதியும் அடங்கிக் கிடக்கிறது
நகரரீதியில் கிராமங்களிலும்

சைரன் பொருத்திய கவச வண்டிகளிலிருந்து
ஊரெங்கும் படையாட்கள் இறங்கிவரும் நேரமிது

எந்தக் கணத்திலும் எதிரியைத் தாக்க ஏதுவாக
பிறக்கும்போதே ராணுவ உடுப்போடு பிறக்குமாறு
கருவிலிருக்கும் சிசுவுக்கான உத்தரவு நகலை
தாயின் வயிறுமீது ஒட்டிவிட்டுப் போகவோ
தூளியில் துயிலும் குழந்தை இரவுக்குள் வளர்ந்து
விழித்ததும் வெடிகுண்டு வீசலாமென
முன்னெச்சரிக்கையாக கைது செய்யவோ
உத்திரத்தில் மஞ்சள்துணிக்குள் தொங்கும்
ஒண்ணேகால் ரூபாய் காணிக்கைப் பணத்தை
யுத்தகால நன்கொடையாக பறித்தெடுத்துப் போகவோ
எத்தனையோ காரணமுண்டு
எந்தவொரு குடிமகன் வீட்டிலும் அவர்கள் நுழைய

வேசித்தெருவுக்குள் நுழைந்த நினைப்பில்
இன்றிரவும் அவர்கள் யார் வீட்டுக்கதவையும் உடைத்து நுழையக்கூடும்
நேற்றின் வதையில் உதிரப்போக்கு நிற்காத இளம்பெண்
மறுபடியும் முகாமுக்கு இழுத்துச் செல்லப்பட்டால்
கண்ணெதிரே கதறும் மகளை கையறு நிலையில் காண்பதினும்
தேவலாம் இதுவென தேறுதலடைய
பெற்றோர்க்கு சுதந்திரமுண்டு இன்னமும்

பூட்ஸின் லாடக்குறடு அரக்கிய காயங்களுக்கு
களிம்பும் கண்ணீரும் தடவிய மகாகுற்றத்திற்காக
தாயின் ஸ்தனங்களிலும் மகனுக்குப் போலவே
அதே தேசதுரோக முத்திரை குத்தப்படலாம்
இன்னும் சிறுபொழுதில்

நரிகளுக்கும் கழுகுகளுக்கும் நல்லவேட்டையிருக்கிறது நாளையும்
நாட்டிற்குச் சுமையென
மிச்சமிருக்கும் வயோதிகர்களும் சீக்காளிகளும் சுட்டுத்தள்ளப்படலாம்
இறப்போர் எலும்பில் சூப் வைத்து எல்லை வீரர்களுக்கு அனுப்ப
தேசியக்கொடி கட்டிய டேங்கர்கள்
எப்போதும் தயார்நிலையில்

எல்லையில் மட்டுமல்ல
எங்கும் எப்போதும் எல்லா ரூபத்திலும்
எதிரிகள் ஊடுருவுவதால்
போருக்கான மனநிலையை வரித்துக்கொண்டு
சிவிலியன்களும் அவர்களைப் போலவே
சிப்பாய்களாக மாறியாக வேண்டுமாம்

தேசபக்தியை நிரூபிக்கத் தவறுவதே
தேசவிரோதத்திற்கு நிரூபணமென அஞ்சி
குழந்தையின் வட்டிலிலிருந்து பறித்தெடுத்த பருக்கைகளை விற்று
ஆயுதம் வாங்கி களமிறங்கிய குடிபடைகளுக்கு
எதிரிகள் யாரும் அகப்படாத வெறியில்
தாமே தம்மை மாய்த்துக்கொண்டு
சவக்காடாய் விடியும்
தம்மைத்தாமே கண்காணித்து வேவு சொல்லும்
ஒற்றர் நாடு.
























செவ்வாய், நவம்பர் 22

வேட்டை - ஆதவன் தீட்சண்யா

ந்தியில் கிளம்புது சேனை
பம்மி வருகிறது இருட்டு

நிலவு வருமோ
அமாவாசையாகத்தானிருக்கட்டுமே
கண்கள் ஜொலிக்கிறது
திமிர்க்கிறது கால்களும் தோள்களும்

எங்கோ விலகி நெளிந்துக்கிடந்த பாதை
அடங்கியசைகிறது பாதங்களுக்கடியில்
இலக்கை முன்னறிந்து

தாழங்குத்திலிருந்து
ஓசையற்று இறங்கிவரும் பூநாகங்கள்
தீண்டும் முன்பே மிதிபட்டுச் சுருள
காரை சூரைப் புதர் விலக்கி கடக்கிறோம்

வெந்துகொண்டிருக்கும் பிணத்தை
எட்டுக்கையாலும் பிய்த்துத் தின்னும் ஓங்காரி
எதிர் நேர்வோரை காவு கொண்டுவிடுமென்று
பயங்காட்டி மறித்தோரை உதைத்தோட்டிவிட்டு
சுடலைகள் வழியேயும் தொடர்கிறது பயணம்

சில்வண்டுகளும் காட்டுராசிகளும் சதங்கையென ஜதியூட்ட
மோகினியோவென அஞ்சிக் கிளர்ச்சியுற்று
மல்லியப்பூ வாசத்துக்கு அலைகிறது நாசி

கக்கிவைத்த மாணிக்கக்கல்லொளியில்
இரைதேடிய முதிர்நாகம்
அச்சத்தில் விழுங்கி மறைகிறது புற்றுக்குள்

உருவிய உடைவாளை
உறைக்குள் சொருகிக் கொள்ளவே நேரமில்லை

குழியிலும் சுழியிலும் இறங்கிய புனித அழுக்குகளை
சொந்த நதிகளில் கழுவிக்கொண்டு
கடல்மேல் நடந்து மலைகளைப் பிளக்கிறோம்

வெள்ளி முளைக்கையில்
சிறகுகள் பொசுங்கப் பொசுங்க
கிரணமண்டலத்துள் பாயும்
எங்களது முகமும் காலடியும்
தகித்து வரும் சூரியனில் தெரியும்

சூரியனாகவும் நாங்களிருப்போம்.

திங்கள், நவம்பர் 21

புது ஆட்டம் - ஆதவன் தீட்சண்யா

நான் உம்மைத் தீண்ட மறுக்கும் முடிவின் பின்னே
எந்த அரசியலும் இல்லை
தீண்டுவது வெறுமனே சரீரம் சம்பந்தப்பட்டதல்ல
உங்களை விலக்கிவைக்கும் இத்தருணம்
மிக முக்கியமானது
எனது குற்றச்சாட்டுகளைப்போலவே

குமிந்து ஊரையே நாறடிக்கும் இந்நரகலெல்லாம்
நேற்றிரவு நீங்கள் தின்றவைதான் தெரியுமா
நீங்கள் எத்தனை அழுக்கானவர்கள் என்பதை
பாழ்பட்டிருக்கும் நீர்நிலைகளைப் பார்த்தறியுங்கள்
சுத்தபத்தமாக இல்லாதாரோடு
சுமூகமாய் பழகமுடியாது என்னால்

புராண இதிகாச காலந்தொட்டு
அரசாங்கத்தின் தத்துப்பிள்ளைகளாகவே   வளர்ந்திருக்கிறீர்கள்
அடுத்தோரை அண்டிப்பிழைக்கும் கையாலாகாதவர்களோடு
உழைத்து வாழும் என்னால் ஒத்துப்போக முடியுமா

காலங்காலமாக
நீங்கள் இப்படியே கிடந்து பழகியதற்கு
யாரையும் குற்றம் சுமத்தாதீர்கள்
எல்லாக்காலத்திலும் உங்களைத் தூக்கிச் சுமக்க யாராலாகும்?
இறங்குங்கள் எல்லா பல்லக்குகளிலிருந்தும்
சலுகை இருக்குமிடத்தில் தகுதியும் திறமையுமிருக்காது
இந்த நொடியிலிருந்து யாருக்கும் எச்சலுகையுமில்லை
ஆட்டம் பூஜ்ஜியத்திலிருந்து துவங்குகிறது இப்போது

பெண்டுபிள்ளை ஒண்டிப்பிழைக்க ஒரு கொட்டாய் போடத் தெரியாது
வக்கணையாய் பொங்கித் திங்க ஒரு சொப்பு வனையத் தெரியாது
நாலு சுள்ளியொடித்து அடுப்பெரிக்கத் தெரியாது
மமுட்டி பிடித்து ஒருவயலுக்கு மடை திருப்பத் தெரியாது
லட்சணமாய் தோய்த்து உடுத்தத் தெரியாது
காடாய் வளர்ந்து காட்டுமிராண்டி போலானாலும்
மழித்துக்கொள்ள வராது
வீட்டிலே இழவென்றால் ஒருமுழக் குழி வெட்டி புதைக்கவும் தெரியாது
நாய்கூட தன் உணவைத்தானே தேடித் தின்கையில்
உங்களுக்கு ஒவ்வொன்றையும் நானே
ஊட்டித்தர வேண்டியுள்ளது
வாழத்தேவையான எதையுமே கற்றிராத நீங்கள்
அறிவிலும் அந்தஸ்திலும் தகுதியிலும் திறமையிலும்
பிறப்பிலேயே என்னைவிட ஒசத்தி எந்தவகையிலென்று
இப்போது நிரூபியுங்கள்
 -அதுவரை
எனக்கு சமதையற்ற உங்களைத் தீண்ட மறுக்கும் முடிவின் பின்னே
எந்த அரசியலும் இல்லை

தீண்டுவது வெறுமனே சரீரம் சம்பந்தப்பட்டதல்ல.
















































வெள்ளி, நவம்பர் 18

நுரையின் மைந்தர்கள் மற்றும் கூழாங்கற்களுக்கு - ஆதவன் தீட்சண்யா

கொலையாயுதம் ஏந்தாத ஒருவரும் காணக்கிடையாத துர்வெளியில்
யாருக்கும் நேரத்தகாத சொந்தத் துயரங்களில்
யாமே மருகிப் பொசுங்குமாறு தனித்துவிடப்பட்டுள்ளோம்

இழந்தவை உயிர்த்துவரும் வழி முடங்கிய சாம்பல்வனத்தில்
அனாதைகளாய் உழன்றலையுமாறு அனுமதிக்கப்பட்டுள்ளோம்

வம்சமே சூறையாடப்பட்ட பிறகு
இடிக்கப்பட்ட வீட்டின் சுவற்றில் தெறித்து
இன்னும் துடிக்கும் குழந்தையின் சதையிணுக்குகளை
கொத்தித் தின்கிறது வலியறியாத காகம்

குப்பைவண்டியில் அள்ளிப்போய் குமித்துப் புதைத்தது போக
தெருமருங்கில் வீசியெறியப்பட்ட எமது மீதிப் பிணங்களுக்காக
நரபட்சிணிகள் நகரம் முழுக்க வெறிகொண்டலைகின்றன

நேற்றுவரை நாங்களும் சுதந்திரமாய் இருந்த வரலாற்றை
என்றென்றைக்குமாய் மறக்கடிக்க
குரோத்தின் கூரேறிய வல்லாயுதங்கொண்டு
எதிராளி தனது குலக்குறியை
நினைவின் ஆழடுக்குகளில் பொறித்துப் போயிருக்கிறான்

வெற்றிகொண்ட அவனது சந்ததிகளை கர்ப்பம் சுமக்கும் எம் பெண்டிர்
அவமானத்தின் கொடுங்கங்கில் அக்கணமே மரித்தனர்
பிறக்கவிருக்கும் குழந்தைகளின் புனிதம்
இன்னொருமுறை ஆயுதங்களால் தீர்மானிக்கப்படும்வரை
எங்கள் மீதான வெற்றிக்கு
அவலமிக்க சாட்சியாயிருக்கும் நிபந்தனையின்பேரில்
கொல்லப்படாதிருக்க வாய்ப்புண்டு

நிராதரவின் பெருஞ்சுழிக்குள் நாங்கள் வீழ்த்தப்படுகையிலும்
பதுங்குகுழி விட்டு வெளிவரத் தயங்கியோரின்
கோழைகரமான ஆறுதல் வார்த்தைகள்
திராவகமாய் எரிக்கிறது

எமது உயிர்த்தலத்தில் செருகப்படும் கொலைவாளை
ஓடிவந்து தடுக்கத் துணியாதோரின் கண்டன அறிக்கைகள்
எதை மீட்டுத் தரப்போகிறது எங்களுக்கு?

இன்றிரவுக்குள் எங்களைப் பின்னுக்குத் தள்ளி
அதிகாலை வந்தெழுப்பும் புதிய பரபரப்பில் திளைத்து
ஏற்கனவே படியெடுத்து வைத்திருக்கும்
"பலத்த ஆட்சேப'' அல்லது "கடும் கண்டன'' அறிக்கை வெளியிடும்
வீரஞ்செறிந்த போராளிகள்
நேரத்தே தூங்கச் செல்லவும்
அல்லது
எதிலுமே தலையிட்டுத் தடுக்கமுடியாத
தங்களின் இருப்பு நீடிக்க என்ன நியாயமுண்டு என்பதை
இப்போதாவது முதல்முறையாக யோசிக்கவும்.

வியாழன், நவம்பர் 17

சுய விலக்கம் - ஆதவன் தீட்சண்யா

கரத்தின் மோஸ்தருக்குள் முற்றாய் பொருந்திவிட்ட என்னை
அத்தனை சுளுவாய் அடையாளம் கண்டுவிடமுடியாது

எனக்கே தெரியுமென்றாலும்
அறுந்த செருப்பை
தெருவோர காப்ளரிடம்தான் தைத்துக்கொள்கிறேன்

வீட்டுக்கே வந்து டோபி துணியெடுத்துப் போகிறான்
முன்னொரு காலத்து என் அம்மாபோல

நீயமரும் இருக்கையிலேயே எனக்கும் சவரம் சலூனில்

பரம்பரையின் அழுக்கு அண்டிவிடக்கூடாதென்று
நகங்களைக்கூட நறுவிசாக வெட்டிக்கொள்கிறேன்

அதீத கவனத்தோடு ஊரை மறக்கிறேன்
புறப்பட்டுவந்த சுவடு தெரியாதிருக்க

சண்டேக்களில் மட்டனோ சிக்கனோதான்
பீப் என்றால் என்னவென்றே தெரியாது
என் பிள்ளைகளுக்கு

ரிசர்வேசனுக்குகெதிரான
உங்களின் உரையாடலின்போதும்
"நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்...'' என்கிற போதும்
யாரையோ வைவதாய் பாவனை கொள்கிறேன் பதைக்கும் மனமடக்கி

"உங்கம்மாளப் போட்டு பறையன் சக்கிலிப் போக...'' என்ற வசவுகளின்போது அதுக்கும்கூட உங்களுக்கு நாங்கதான் வேணுமா   என்றும்     
சாவு வீடுகளில் வதக்வதக்கென்று யாராச்சும் ஜதிகெட்டு கொட்டடித்தால்
எங்கப்பனாட்டம் உன்னால
அடிச்சி ஆடமுடியுமா என்றும்
கேட்கத்துள்ளும் நாக்கை
எத்தனை சிரமப்பட்டு
அடக்கிக்கொள்கிறேன் தெரியுமா

இருப்பினும்,
தடயங்களை அழிக்காமல்
உள்நுழைந்த திருடனைப்போல்
என்றாவதொரு நாள் எப்படியேனும் பிடிபட்டு
அவமானப்படும் அச்சத்தில்
உங்களோடு ஒட்டாமல்
ஓட்டுக்குள் ஒடுங்கும் என் புத்தியிலிருந்து
நீங்கள் கண்டுபிடிக்கக்கூடும்
என்னை.

       

புதன், நவம்பர் 16

ரகசியத்தில் பாயும் நதி –ஆதவன் தீட்சண்யா

ருவங்கெட்டு பெய்து கொண்டிருந்தது மழை. முனிமலை மேலிருந்து பாறாங்கல் உருண்டு வருவதைப் போல, அடர்ந்தடர்ந்து கிடுகிடுக்கும் இடியோசைக்கு குலை நடுங்கியது. சாளைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாலும் ரோமக்கால் சிலிர்ப்பில் மண்டியிருந்தது குளிர். பழஞ்சீலையை மேலுக்குப் போர்த்தி சாக்குப் பைக்குள் கழுத்துவரைக்கும் நுழைத்துக் கொண்டாலும் வெடவெடப்பு குறையவில்லை. விளையாட்டுக்கு ஒரு மோதுமோதினாலும் இற்று விழுந்துவிடுமளவுக்கு சாளையின் சுவர்களில் ஓதமேறிவிட்டது. கூரையிலிருந்து விழும் மரவட்டைகள் காதுக்குள் நுழைந்துவிடுமோ என்கிற பயத்தில், அரைமயக்கத் தூக்கமும் அவ்வப்போது தடைபட்டது.
 
காடுகரையெல்லாம் ஊறி ஊற்றெழும்பித் தளும்பியது. கிணறுகளில் நீர்மட்டம் பிடுவைத் தாண்டி தொலைக்குழி வழியே கோடி போனது. புடையெடுக்கும் நெல்லங்காட்டில் தெப்பக்குளமாட்டம் முழங்காலமுட்டுத் தண்ணி நின்றது. மேட்டு அணப்புகளில் நட்டிருந்த குச்சிக்கிழங்கு அழுகி நொதிக்கும் நாற்றம் குமட்டியெடுத்தது காற்றை.

எம்மக்க பட்டப்பாடெல்லாம் இப்பிடி பதராப் போச்சே... ஒரு போகத்து வெள்ளாமையழிஞ்சா தாங்குமா குடும்பம்...' என்ற மழையிறக்கம் கண்ட நாளிலிருந்து சாக்குப் பைக்குள் முடங்கிக் கொண்டு அங்கலாய்த்துக் கிடக்கிறாள் பொன்னுருகிப் பாட்டி. ‘நான் கொமரியாவறதுக்கு முன்னாடி சின்னப்பிள்ளையா இருந்தப்ப ஒருதபா இப்படித்தான் பேஞ்சது. இப்ப என்னை அடிச்சினு போறதுக்குத்தான் திரும்ப வந்துனுக்கீதாட்டங்கீது.....' என்று ஊதக்காற்றுக்குத் தாங்காமல் நடுங்கும் குரலில் தனக்குத்தானே தன் பிராயத்தை சொல்லிக் கொள்வதைப் போல் முனகிக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு இப்போதும் எல்லாமே ஞாபகத்தில் இருக்கிறது. பேயாத மழை பேய்ந்து பெரியநத்தம் ஏரி உடைந்து ஊரும் காடும் வெள்ளத்தில் முழுகியது அப்போதுதான். ஏரிக்கு கீழ்க்கரையில் இருந்த பூங்கரடு, பவளனூத்து, வேட்டக்குடி, வெள்ளிமுறி நாலு ஊருக்கும் சென்மத்தில் காணாத சேதாரம். சுவர் இடிந்தும் கூரை அமுங்கியும் நாலைந்து பேர் செத்துப் போனார்கள். வெள்ளாமை முழுசுக்கும் அழிமானம். விவரந்தெரிந்த நாளிலிருந்து வெளேரென்ற மணல்தட்டிக் கிடந்த மணியாற்றில் கரையைத் திமுத்து ஓடியது தண்ணி. செங்காமூட்டுப் பனையில் பாதி தண்ணிக்குள்ளிருந்தது. அப்படியொரு கோலத்தில் ஆற்றைப் பார்க்கிற ஆசை யாருக்குத்தான் இருக்காது? ஊரே திரண்டு குமிந்தது கரையில். இவளும் சவ்வுக் காகிதத்தை தலையில் கொங்காடையாக மாட்டிக் கொண்டு, சித்தப்பனோடு பார்க்கப் போயிருந்தாள். காணியம்மன் தேருக்குக்கூட இப்படியொரு ஜனம் குமிந்து அவள் பார்த்ததில்லை. கரை முழுக்க ஜனமான ஜனம். பண்ணாடிகளும்கூட குடைபிடித்து வந்து வெப்பால மரத்தைத் தாண்டி கருங்கண்ணன் காட்டோரம் இருந்த பாறைகளில் ஏறி நின்று பார்த்தார்கள். இவள் உயரத்துக்கு தெரியாததால் சித்தப்பன் தோளேற்றிக் கொண்டான். ரண்டுப்பக்கமும் தாண்டுகால் போட்டு உட்கார்ந்து கொண்டு இவளும் பராக்கு பார்த்தாள்.

முனிமலை உச்சியிலிருந்து வகிடு மாதிரி தாழ இறங்குகிறது மணியாறு. எப்போதோ ஒரு காலத்தில் அது பொங்கிப் பெருகி பாய்ந்திருப்பதை இருமருங்கு கரையோரப் பாறைகளில் படிந்திருக்கும் நீர்த்தாரையைப் பார்த்தாலே தெரியும். ‘இப்படி அனாமத்தாய் ஓடி சமுத்திரத்தில் எதுக்கு கலக்கணும்...' என்று ஒரு வெள்ளைக்காரன் நடுவாந்தரத்தில் வளைத்து நொய்யங்குழி அணை கட்டின பிற்பாடு, நிலைமை தலைகீழாகி விட்டது. மழைக் காலத்தில் மட்டும் முடி உதிர்ந்தவள் சடையாட்டம் சன்னமாய் கொடிவாய்க்கால் அளவுக்கு மணலை நனைத்துக் கொண்டு ஈரம் தெரியும். அப்படி இருந்த ஆறா இது... என்று அரட்டிக் கொண்டு ஓடியது இப்போது.

பாறைகளில் வெள்ளம் மோதித் தெறிக்கும் திவலைகள், புகையாட்டம் ஆற்றுக்கு மேல் மிதந்து நகர்ந்தது. செங்கரட்டிலிருந்து வடியும் தண்ணீரும் பாலக்குட்டை கணவாயில் ஆற்றோடு சேர்ந்து புதுவெள்ளத்தின் நிறத்தை செம்மண் குழம்பு போலாக்கியிருந்தது. நேரமாக ஆக தண்ணி மட்டம் ஏறியது மேலுக்கு. அதுவரை பயமும் திகிலும் பரவசமுமாய் கரையிலிருந்தக் கூட்டம் தன்னையறியாது அடியடியாய் பின்வாங்கி நின்றது. மணல் மூட்டைகளை அடுக்கி முட்டுக் கொடுத்திருந்த வண்ணம் பாளையம் ஏரியும் உடைந்து விட்டிருக்கலாம் என்று பேசிக் கொண்டனர். அது உடைந்திருந்தால் பத்திருவது ஊர்கள் ஜலசமாதிரிதான் என்றும் ஒரு குஞ்சுகுளுவான்கூட மிஞ்சாது என்றம் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் சித்தப்பன். ஜவுரிக்கு முடி வாங்கிக் கொண்டு பட்டாணியும் பலூனும் தருகிற கப்பக்காலிக்கு வண்ணம்பாளையம்தான் ஊர். அவள் இனி வருவாளோ, மாட்டாளோ என்ற கவலை இவளுக்கு. தாவாரத் தண்டையில் சொருகி வைத்திருக்கும் முடிச்சுருணையை இனி யார் வாங்கிக் கொள்வார்கள் என்று யோசித்தாள்.

பாறைகளில் வெள்ளம் விளாறியடித்து ஓடும்போது ஏற்படும் சத்தம் ஓங்காரமாய்க் கேட்டது நெடுந்தூரத்துக்கு. பராக்குப் பார்க்கப்போன பிள்ளை இன்னும் திரும்பாத பதட்டத்தில் கூட்டிப்போன கொழுந்தனைக் கறுவிக் கொண்டே அவள் அம்மாவும் கரைக்கு வந்து விட்டிருந்தாள். மகளைத் தேடி வந்தவள் பெருக்கெடுத்துப் பாயும் செந்தண்ணியைக் கண்டதும் சின்னப்பிள்ளை மாதிரிரி மிரண்டு போனாள். அவளும் ஆயுசுக்கு இப்படிப் பார்த்தவளில்லையே...’ஆத்துக்குன்னு ஒரு வழியிருக்கு, அது நம்ம மேல வந்து ஏறாது'ன்னு கொழுந்தன் தைரியம் சொன்னான். ‘பயத்துல புள்ளைக்கு காய்ச்ச குளுரு வந்தா ஒங்கொண்ணனுக்கு ஜவாப்பு சொல்றது யாரு...' என்று நொடித்துக்கொண்டேவா யம்மா சாளைக்குப் போலாம்' என்று மகளை அழைத்தாள். மறுத்து தலையாட்டியபடி சித்தப்பனின் உச்சிமுடியை கோர்த்துப் பிடித்தாள் இவள். ‘சின்னப்பிள்ளையாட்டம் தோள்மேல ஒக்காந்துனு ரெம்பவும்தான் செல்லங் கொஞ்சறே... ஏய் இறங்கி வாடி' என்று அம்மா அதட்டியதும் இவள் அடம் பிடித்து அழுததும் எப்டியோ போய்த்தொலை என்று அவள் விட்டுவிட்டதும்கூட இவளுக்கு மறக்கவில்லை.

மரம் மட்டை செடி செத்தை இன்னதென்றில்லாமல் எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் மிதந்தோடிப் போய் மறைகிறதாயிருந்தது ஆறு. சாளையின் கூரைகள் பாதி மூழ்கியும் மூழ்காமலும் ரங்கவட்டம் சுற்றிக்கொண்டு ஓடுவதைப் பார்த்து கூட்டம் அரற்றியது. அடித்துக்கொண்டுபோன ஆடு மாடு உருப்படிகள் ஒண்ணா ரண்டா...? நாயொன்று கரையேற மாட்டாமல் தத்தளித்துக் கொண்டு அண்ணாந்து ஊளையிட்டபடி ஆற்றின் போக்கில் போய்க்கொண்டிருந்தது. தீத்தான்கொல்லை பக்கத்தில் கரையிலிருந்த வாகை மரமொன்று பெருஞ்சத்தத்தோடு ஆற்றின் குறுக்கே சாய்ந்தது. நல்லவேளையாய் அந்த மரத்துக்குக் கீழே நாய் நின்றிருக்கவில்லை. பெருங்கூட்டு மரம் என்பதால் வெள்ளத்தை கிடையாய் மறித்துக்கொண்டு நின்ற அவ்விடத்தில் சுழிபோல ஆறு பொங்கி எதுக்களித்து ஓடியது திசைதப்பி. மேங்காட்டிலிருந்து அடித்துக் கொண்டு வந்த ஒரு மாட்டின் கொம்பு, மரத்தின் கிளைகளில் சிக்கிக் கொண்டது. அது மேற்கொண்டு நகரமுடியாதபடி செருமிக் கொண்டு தீனமாய் கத்தியது.

சித்தப்பனும் அவனது சேக்காளிகளும் எதையோ குசுகுசுத்தார்கள். பின், உங்கம்மா கையைப் பிடிச்சுக்க கண்ணு என்று தோளிலிருந்த இவளை இறக்கி அவளிடம் விட்டுவிட்டு எங்கோ ஓடியவன், இரண்டு கயித்துச் சுருணைகளை தூக்கிவந்தான். பெத்தய்ய நாய்க்கர் காட்டோரமிருந்த விளாமரத்தில் ஒண்ணுங்கீழ் ஒண்ணாய் கயிறுகளைக் கட்டி மறுமுனையை இடுப்பில் கட்டிக் கொண்டான். இவளும் இவங்கம்மாளும் சனங்களும் போட்ட கூப்பாட்டை அவன் சீந்தவேயில்லை. கீழேரிப்பள்ளம் தெக்கத்தியான் காட்டில் பண்ணையத்தில் இருந்தபோது, பெண்ணையாற்றில் ஆற்றுநீச்சல் பழகிய தைரியம் அவனுக்குள் பொங்கிக் கொண்டிருந்தது. ஆனால், காட்டாற்றுக்கு கரையுமில்லை வரையுமில்லை என்பதால்தான் இந்தக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு இறங்குகிறான். எதற்கு இவன் ஆற்றுக்குள் இறங்குகிறான் என்று தெரியாத கூட்டம், அவனது சேக்காளிகளைத் திட்டிக்கொண்டே சேற்றுக்கட்டிகளை எடுத்து வீசி கரைக்கு அழைத்தது.

அவன் ஆற்றின் போக்கில் கைகளை நீளநீளமாய் விளாவிப்போட்டு, ஒரு தக்கையைப்போல மிதந்து மரத்தை நெருங்கினான். இப்போது ஆற்றின் போக்கை மறித்துக் கொண்டு குறுக்குவாட்டமாய் மரத்தை நோக்கி அவன் கடக்க வேண்டியிருந்தது. வெள்ளம் அவனை உந்தித்தள்ளி இழுத்தது. நீந்தவும் முடியாமல் கால்பாவவும் ஏலாமல் பிடிமானமற்றுத் தத்தளித்தவன் மரக்கிளையொன்றைப் பற்றிக் கொள்வதற்குள் போதும்போதுமென்றாகிவிட்டது. தவ்வித்தவ்வி நகர்ந்து மாட்டின் கழுத்தில் ஒரு கயிற்றால் படிமுடிச்சிட்டான். இன்னொரு கயிற்றை பின்னங்கால் பக்கம் போட்டு, முதுகுப்பக்கம் இழுத்துக்கட்டி விட்டால் மாட்டை இழுப்பது சுளுவாயிருக்கும். ஆனால், தண்ணிக்குள் முழுகினால்தான் உண்டு. கலக்கங்கண்ட புதுத்தண்ணியாயிருப்பதால் முழுகினாலும் எதுவும் நெப்பு நிதானம் தெரியவில்லை. ஆனது ஆகட்டுமென்று சீக்கையடித்தான். கரையிலிருந்த அவனது சேக்காளிகள் கயிற்றை இழுக்க, பின்னாலிருந்து இவன் உந்தித் தள்ளினான். மாட்டை கரை சேர்ப்பது பெரும்பாடாகிவிட்டது. அது உயிரோடிருந்தது.

கயிற்றோடு மீண்டும் ஆற்றில் இறங்கப் போனவனைமறுக்கா எதுக்குப் போறே காளீப்பா...' என்று இவளம்மா தடுத்தாள். ஒண்ணும் ஆகாது என்று சொல்லிக்கொண்டே அவன் போய் மரத்தின் ஒரு கிளையில் வாகாக உட்கார்ந்து கொண்டான் இப்போது. மிதந்துவந்த சீலையொன்றை இழுத்துச் சுருட்டி கரைக்கு வீசினான். அது பாதியிலேயே விழுந்து சாயத்தண்ணி மாதிரிரி ஓடியது. தலைகுப்புறக் கவிழ்ந்து தக்கையாட்டம் தேலிக்கொண்டு வந்து ஒரு பிணத்தைக் கண்டு திகீரென்றானவன் என்ன செய்ய என்ற யோசிப்பதற்குள் அது கடந்து போய்விட்டது. கரையிலிருந்து அதப்பிடிடா பிடிடா என்று கூப்பாடிட்டனர். பிணத்தை எடுத்து எதற்காகும்... ஆள் யார் ஊர் எது என்று இந்த மழையில் தேடிக் கண்டுபிடித்து கொடுக்கிற பாடும் தன் அண்ணனுக்குத்தான் சேர்ந்துத் தொலையும் என்று நினைத்துக் கொண்டதும்கூட, அவன் அந்தப் பிணத்தை போட்டுமென்று விட்டதற்கு காரணமாயிருக்கும்.

ஒரு பறப்பயனுக்கு இருக்கிற தகிரியம் நம்மள்ல ஒருத்தனுக்கும் கெடையாதா...' என்ற மீசை கடித்த வேங்கான் மகன் சொக்கனிடம்ஆத்தோட போற மாட்டை அறுத்துத் தின்னா எவன் கேக்கப் போறாங்கிற துணிச்சல்ல எறங்கிப் புடிச்சிட்டான். மாட்டுக்காரன் மாட்டுக்கு அழுதானாம் பறையன் கொழுப்புக்கு அழுதானம்கிற கதையா இருக்கு இவனுகங்க பண்றது... இதுல நீயும் நானும் போட்டிப் போடணுமா...' என்றான் வெள்ளை. நம்ம கண்ணு முன்னாடியே எத்தினி ஆடுங்க அடிச்சினு போச்சு... ஒண்ணையாவது மறிச்சு தூக்கணும்னு நமக்குத் தோணலியே... அவன் என்னடான்னா பராக்கு பாக்க வந்த எடத்துல வூட்டுக்கு ஒருகூறு கறிக்கு வழி பண்ணிட்டான் பாத்தியா...' என்று மறுபடி கொதித்தான் சொக்கன். ‘அதுக்கு ஏண்டா மருகா ஆத்ரப்படறே... அவங்களுக்கு ஒரு மாட்டைப் பிடிச்சவன் நமக்குன்னு ஒரு ஆட்டைப் பிடிக்காமலாப் போயிடுவான்... கரைக்கு வரட்டும் பாத்துக்கலாம்...' என்று சமாதானம் சொன்னான் வெள்ளை. அவன் வாய் முகூர்த்தம் பலித்த மாதிரிரியே அடுத்தடுத்து ஒரு செம்பிலியாட்டையும் மான் ஒன்றையும் மடக்கி கரைக்கு ஏற்றிவிட்டு தானும் கரை திரும்பினான் இவள் சித்தப்பன்.

கரைக்கு வந்தவன் தான் மீட்ட உருப்படிகளை ஒரு நோட்டம் விட்டான். அவை தண்ணியிலிருந்து மீண்டு தப்பித்த உணர்வின்றி இன்னும் நடுங்கிக் கொண்டே இருந்தன. மாட்டின் உடல் சிலிர்த்து சிலிர்த்து அடங்கியது. அதன் வயிறு உப்பசம் கண்டது போலிருந்தது. அடிக்கடி வாலைத் தூக்கி மூத்திரம் பெய்து கொண்டேயிருந்தது. சும்மாவே செருமிக்கிடக்கும் ஆடு நிலைகொள்ளாமல் துள்ளித்துள்ளி செருமி குடித்துவிட்டிருந்த ஆத்துத் தண்ணியை வெளித்தள்ள பாடாய் பட்டுக் கொண்டிருந்தது. பயத்தில் புழுக்கையிடுவதற்குப் பதில் கழிச்சலைப் பீய்ச்சியது. மனிதர்களைக் கண்ட மிரட்சியில் மானின் காதுகள் விடைத்துக் கிடந்தன.

குடை பிடித்து நின்றிருந்த பண்ணாடிகள், அவர்களுக்குள் குசுகுசுத்துவிட்டுநல்ல காரியம் பண்ணிட்டடா காளீப்பா... என்று பாராட்டினார்கள். பேச்சு இங்குமிங்குமாய் சுற்றியடித்து உருப்படிகளைப் பங்கு பிரிப்பதில் வந்து நின்றது. மாட்டை நீங்க எடுத்துக்குங்க... ஆடும் மானும் எங்களுக்கிருக்கட்டும்' என்பதாயிருந்தது பண்ணாடிகள் விருப்பம். ‘உசுரை தண்ணி மேல எழுதி வச்சிட்டு ஆத்துல இறங்கினது நான். கரையிலிருந்து இழுத்துப் போட்டது எங்காளுங்க. இதுல பங்கு பாகம்னு கேட்கிறது பண்ணாடிமாருக்குத் தகுமா சாமி...' என்றான் காளியப்பன். ‘அடே, உங்கிட்ட யாரும் பஞ்சாயத்து பேசல. நாங்க பிரிச்சியுடறோம். அவ்வளவுதான்...' என்றான் வெள்ளை. ‘பாத்தாலே தெரியலீங்களா பண்ணாடி அது செனைமாடுன்னு. வளக்க வேண்டிய சிசு அது வயித்துல இருக்கும்போதுஅறுத்துத் திம்பாங்களா யாராச்சும்... இந்த மாட்டை வேணும்னா பிடிச்சுக்கிட்டுப் போய் உங்க பட்டியிலியோ கட்டாந்தரையிலியோ கட்டிக்குங்க. எங்க பொண்டு புள்ளைங்க வயித்துல ஈரங்கண்டு ரண்டு நாளாச்சு. ஆடும் மானும் எங்களுக்கு வேணும்.....' என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே குடையை வீசியெறிந்துவிட்டு அவன் மீது பாய்ந்தான் சொக்கன். காளியப்பன் விலகிக் கொள்ளவும் நிலைகுலைந்து விழுந்த சொக்கன், அவமானம் தாங்காமல் எழும்பும் நினைப்பற்று சேற்றிலேயே கிடந்தான். கூட்டம் ரெண்டுத் தரப்பாய் கிழிந்து முறுக்கியது.

செத்தமாட்டைத் திங்கற நாய்ங்க செனமாட்டுக்கு கருணை காட்டுதுங்களேன்னு பொருமாதீங்க பண்ணாடி... பாவம் ரட்டைச் சீவன். இந்த மாட்டுக்கு ஒரு நாம்பு புல்லறுத்துப்போட எங்களுக்குன்னு கோமணத்தமுட்டு நெலம் நீச்சுகூட கிடையாது. அதனால அதை நீங்களே பிடிச்சுக்குங்க' என்ற சொல்லிவிட்டு, ஆட்டையும் கேளையையும் பிடித்துக் கொண்டு சேக்காளிகளோடு சேரிக்குத் திரும்பினான். இவளும் இவள் அம்மாவும் பின்னாலேயே ஓடினார்கள். பண்ணாடிங்கள பகைச்சிக்கிட்டா அவங்க நம்மள சும்மா விடுவாங்களா...? என்று வழிநெடுக புலம்பிக் கொண்டே வந்தாள் அம்மா.

கரையில் நடந்த சண்டையே மிச்சப்பொழுதின் பேச்சாயிருந்தது. கறியாக்கித் தின்னும் ஆசை யாருக்கும் தோன்றவேயில்லை. அடுப்பு மூட்ட காய்ந்த ஒரு சிமிறுகூட சேரிக்குள் யார் வீட்டிலும் இல்லாத நிலையில், இப்போதைக்கு கறியறுக்க வேண்டாம் என்று பெண்கள் சிலர் சொன்னதும் சரியென்றே பட்டது. விபரீதமான சூழலுக்குப் பொருந்த முடியாமலும் புரியாமலும் காளியாத்தா கோயில் நடையில் மேமே என்ற ஆடு கத்திக் கொண்டேயிருந்தது. இதுவரையிலும் பார்த்தேயிராத மானைச் சுற்றிக் குமிந்து பசியை மறக்கத் தொடங்கியிருந்தனர் குழந்தைகள். குளிரில் சிலிர்க்கும் மேனியில் புள்ளிவட்டங்கள் வினோதமாய் மாறும்போது மான் இன்னும் வேடிக்கைக்குரியதாயிருந்தது.

அந்தி சரியும்போது மீண்டும் மின்னல் வெட்டிக் கொண்டு மழையடிக்கத் தொடங்கியது. காலையிலிருந்து சிணுங்கிக் கொண்டிருந்த தூறல், இப்போது சடசடவென்று பெருமழையாகி இறங்கியது. ரெண்டுபக்கமும் திண்ணை வைத்து தரைக்கு காரை பூசியதாயும் மங்களூர் ஓடு போர்த்தியதாயும் இருந்த கோயில் மட்டுமே சேரியில் ஒழுகாததாய் இருந்ததால், மொத்தசனமும் அங்கேதான் அடைக்கலமென வந்து அண்டியிருந்தனர்.

அன்றிரவும் பிள்ளைகள் சோளப்பொறியைக் கொறித்து வயிறுமுட்ட தண்ணீரைக் குடித்துவிட்டு மானைச் சுற்றி சுருண்டு கிடந்தனர். பண்ணாடிமாருக்கும் இவங்களுக்கும் காலங்காலமாய் நடந்த சண்டைச் சச்சரவுகள், பஞ்சாயத்துகள், தீர்ப்புகள், தண்டனைகள் பற்றி தங்களது ஞாபகத்தைக் கிளறி கிளறி பெரியவர்கள் ஆளாளுக்கு ஒன்றாய் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பழையவை உண்டாக்கின பயமும் கோபமும் இருட்டில் வினோத உருவங்களாகி அலைந்து, அவர்களின் தூக்கத்தைப் பறித்து விழுங்கின. பொன்னுருகியும்கூட கண்ணை மூட பயந்து இருட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். இந்நேரம் இவ்விடத்தில் அப்பன் இருந்திருந்தால், அணைத்துக் கொண்டு தூங்கியிருக்க முடியு மெனத் தோன்றியது அவளுக்கு. ஆனால், சர்க்கார் தோட்டியான அவள் அப்பன், உடைந்து விட்ட ஏரியைப் பார்க்கப்போன முன்சீப்பையருடன் நேற்று சாயங்காலமே போக வேண்டியதாயிற்று. தண்ணிக்குள் முழுகிச் செத்தவர்களின் பிணங்களை போலிஸ் வந்து எடுத்துப் போகும்வரை, அங்கேயே இருந்து பிணங்களுக்கு பந்தோபஸ்து கொடுக்க வேண்டிய சர்க்கார் தோட்டி தன் மகளைத் தூங்க வைப்பதற்காக எப்படி வரமுடியும்?

தங்ளையும் மீறி சிலருக்கு கண் சொக்கும் நேரத்தில் மாட்டின் பெருஞ்சத்தம் கேட்டது. திண்ணையிலிருந்து இறங்கிவந்து தாவாரத்தில் நின்று உற்றுக் கேட்டான் கசாப்பு கோயிந்தன். வெள்ளத்தின் பேரிரைச்சலையும் மீறி ஆற்றங்கரைப் பக்கமிருந்து பேரோலமாய் எழுந்தது மாட்டின் கத்தல். நெடுநேரம் ஆற்றுக்குள் நின்றிருந்ததால் உடம்பில் ஏறிய சில்லிப்பில் வெடவெடத்து முடங்கியிருந்த காளியப்பனை உசுப்பி எழுப்பினான் கோயிந்தன். மாடு கத்தன சத்தம் கேட்டுச்சாடா உனக்கு...? என்றான். ‘அவனுங்க அங்கயே உட்டுட்டுப் போய்ட்டாங்களாட்டங்கீது. ஆத்தங்கரையிலயேத்தான் இருக்காட்டங்கீது' என்றான். ‘நாம காப்பாத்தின உசுரை அவங்களை நம்பி உட்டுட்டு வந்தது தப்பாப்போச்சே...' என்று கலங்கிய காளியப்பன்போய் பாத்துட்டு வரலாமா' என்றான். சித்தப்பனை கூப்பிட நினைத்தவள் அமைதியானாள்.

அடித்த கூதலில் ராந்தல் நெடுந்தூரம் தாங்கவில்லை. அப்படியும் இப்படியுமாய் அளைந்து கடைசியில் அந்த கைவிளக்கும் அணைந்துவிட்டது. கையிருப்பிலிருக்கும் தீக்குச்சிகள் விரயமாவதில் அவர்களுக்கு சம்மதமில்லை. ஜம்பமாய் கூத்தாடி முருகன் கொண்டுவந்திருந்த மூனுகட்டை பேட்டரி மின்னாம்பூச்சியாட்டம் மங்கியடித்தது. பந்தமாவது கொளுத்தி வந்திருக்கலாமென்றான் கணவதி. அந்த எண்ணையிருந்தா ஒரு நாள் சாளையில் வெளக்கெரிக்க ஆவும் என்று வாயடைத்தான் கொண பாலன். வேறுவழியில்லாமல் நடந்து பழகிய நெப்பிலும் கொடியோடப் படரும் மின்னல் வெளிச்சத்திலும் கரையை நோக்கி உத்தேசமாய் நடந்தார்கள். மழைக்காலிருட்டில் பாதை வழுக்கியது. நதானங்கெட்டு கால் வைத்தால் ஊறிக்கிடந்த பூமி உள்ளிழுத்தது. கவனம் கவனம் என்று கடக்க வேண்டியதாயிற்று ஒவ்வொரு அங்குலத்தையும்.

மாடு மறுபடி கத்தாமலிருப்பது கிறுத்து காளியப்பனுக்கு சற்றே ஆசுவாசம் வந்தது. கரையை நெருங்க நெருங்க மாட்டின் பெருமூச்சு சீரற்று இரைந்து கேட்டது. வெள்ளத்தில் சிக்கி இழுபட்டு வந்ததில் சினை தங்காமல் இறங்கியிருக்குமோ... பூச்சிப்பொட்டு எதாச்சும் கடித்திருக்குமோ... என்று பலவாறாய் தனக்குள் புலம்பி நடந்தான். வெள்ளத்தின் பேரிரைச்சல். இடி மின்னல். இருட்டு. தனியாக் கெடந்து என்ன தவுதாயம் பட்டதோ மாடு என்று நினைத்துக் கொண்டபோது, அவனுக்குத் தன் மீதே வெகாளம் பாய்ந்தது. ஆனது ஆகட்டுமென்று சாயங்காலமே அதையும் இழுத்து வந்து கோயிலடியில் கட்டியிருக்கணும் என்ற நினைப்பை அறுத்துக்கொண்டு யாரோ ஓடுவது கேட்டது.

யார்ரா அது என்ற கத்திக்கொண்டே காலடியோசையை விரட்டிப்ப பாய்ந்தார்கள் இருட்டுக்குள்ளேயே எல்லோரும். தாங்கள் விரட்டுவது மனிதனையா, விலங்கையா, எதுவுமற்ற நினைப்பையா என்று யோசிக்க அவகாசமில்லை அவர்களுக்கு. யாரோ விழுந்து அலறியதைப் பொருட்படுத்தாது ஓடிய உருவத்தின் மூச்சிரைப்பையே அவர்கள் துரத்த வேண்டியதாயிற்று. ஒரு மின்னல் வெட்டில் ஓடிக்கொண்டிருந்த சொக்கன் எல்லோருக்கும் பிடிபட்டுப் போனான்.

காளியப்பன் பிடி அவன் உடம்பில் ஈரக்கயிற்றைப் போல் இறுகிக் கொண்டிருந்தது. என்னைத் தொட்டுப் பிடிக்கிற தைரியம் வந்துருச்சாடா ஒங்களுக்கு என்று திமிறினான் சொக்கன். உன்னைத் தொட்டதால இப்ப நீ கருகிட்டியா இல்ல நாங்கதான் கருகிட்டமா... என்ற கணவதி, சொக்கன் கையிலிருந்த பேட்டரியை பிடுங்கிக் கொண்டு மாட்டை நோக்கிப் போனான். பிடியைத் தளர்த்தாமல் சொக்கனை இழுத்துக்கொண்டு காளியப்பனும் அவனுக்குப் பின்னே மற்றவர்களும் நடந்தனர். என்னை விடுடா தேவிடியா பெத்ததே என்று திமிறிக் கொண்டே இருந்தான் சொக்கன். ‘பறையன் தானம் பண்ணித்தான் எங்க பண்ணையத்துல மாடுகன்னு பெருகணுமாடா' என்று பொருமினான். ஒருவரும் மறுவார்த்தை பேசவில்லை.

மாடு சரிந்து கிடந்தது. அதன் வயிற்றில் கடப்பாறை மின்னியது. கடப்பாறை இறங்கிய இடத்திலிருந்து ரத்தம் கொப்பளித்து பெருகிக் கொண்டிருந்தது. எங்களுக்குன்னு கொடுத்த மாட்டை நாங்க எதுவுஞ் செய்வோம் என்றான் சொக்கன். யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை. ஆவேசம் வந்தவனாகி அவனை குண்டுக்கட்டாக தூக்கி ஆற்றின் திசையில் வீசினான் காளியப்பன்.

தெறித்து விழுந்தத் தண்ணீரை துடைத்துக் கொள்ளவும் நினைப்பில்லாமல் அங்கேயே கொஞ்சநேரம் நின்றிருந்தவர்கள் எதுவும் பேசிக் கொள்ளாமல் திரும்பினர்.

மாட்டைக் கொன்றுவிட்டு சொக்கன் எங்கோ ஓடிப் போய்விட்டான் என்றே இன்றும் பேச்சிருக்கிறது ஊருக்குள். இத்தனை வருஷங்கழித்து இப்படி பெருக்கெடுத்தோடும் மணியாற்றில் அவன் பிணம் மிதந்து வந்தால் எப்படியிருக்கும் என்று பொன்னுருகிக் கிழவி நினைத்துக் கொண்டபோது அவளுக்கு சிரிப்புதான் வந்தது. ஒழிஞ்சது பீடை என்று சொல்லிக்கொண்டே தூங்கடா பொண்ணு என்று மார் மீது கிடத்திக் கொண்ட சித்தப்பனின் நினைப்பு அவ்விடத்தில் கதகதவென்று பரவியது. மானின் புள்ளிவட்டங்களை கண்விரியப் பார்த்து வியந்த பொன்னுருகி என்னும் குட்டிப் பெண்ணாக தான் மாறிக் கொண்டிருப்பதாய் நினைத்துக் கொண்ட கிழவிக்கு இப்போது குளிரவில்லை.




இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...