சுய விலக்கம் - ஆதவன் தீட்சண்யா

கரத்தின் மோஸ்தருக்குள் முற்றாய் பொருந்திவிட்ட என்னை
அத்தனை சுளுவாய் அடையாளம் கண்டுவிடமுடியாது

எனக்கே தெரியுமென்றாலும்
அறுந்த செருப்பை
தெருவோர காப்ளரிடம்தான் தைத்துக்கொள்கிறேன்

வீட்டுக்கே வந்து டோபி துணியெடுத்துப் போகிறான்
முன்னொரு காலத்து என் அம்மாபோல

நீயமரும் இருக்கையிலேயே எனக்கும் சவரம் சலூனில்

பரம்பரையின் அழுக்கு அண்டிவிடக்கூடாதென்று
நகங்களைக்கூட நறுவிசாக வெட்டிக்கொள்கிறேன்

அதீத கவனத்தோடு ஊரை மறக்கிறேன்
புறப்பட்டுவந்த சுவடு தெரியாதிருக்க

சண்டேக்களில் மட்டனோ சிக்கனோதான்
பீப் என்றால் என்னவென்றே தெரியாது
என் பிள்ளைகளுக்கு

ரிசர்வேசனுக்குகெதிரான
உங்களின் உரையாடலின்போதும்
"நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்...'' என்கிற போதும்
யாரையோ வைவதாய் பாவனை கொள்கிறேன் பதைக்கும் மனமடக்கி

"உங்கம்மாளப் போட்டு பறையன் சக்கிலிப் போக...'' என்ற வசவுகளின்போது அதுக்கும்கூட உங்களுக்கு நாங்கதான் வேணுமா   என்றும்     
சாவு வீடுகளில் வதக்வதக்கென்று யாராச்சும் ஜதிகெட்டு கொட்டடித்தால்
எங்கப்பனாட்டம் உன்னால
அடிச்சி ஆடமுடியுமா என்றும்
கேட்கத்துள்ளும் நாக்கை
எத்தனை சிரமப்பட்டு
அடக்கிக்கொள்கிறேன் தெரியுமா

இருப்பினும்,
தடயங்களை அழிக்காமல்
உள்நுழைந்த திருடனைப்போல்
என்றாவதொரு நாள் எப்படியேனும் பிடிபட்டு
அவமானப்படும் அச்சத்தில்
உங்களோடு ஒட்டாமல்
ஓட்டுக்குள் ஒடுங்கும் என் புத்தியிலிருந்து
நீங்கள் கண்டுபிடிக்கக்கூடும்
என்னை.

       

3 கருத்துகள்:

 1. ஏற்கனேவே படித்த கவிதைதான். என்றாலும் இந்தக் கவிதை இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்குத் தேவைப்படுமோ தெரியவில்லை.
  ///ஆத்தாளைப் போட்டுக்கினுச் சக்கிலிப் பறையன் போவ///// இப்படி அமட்டனையும் வண்ணானையும் சேர்த்து அழைக்கிறச் சமூகம்தான் நம் சமூகம்.
  ஆத்தாளயும் இழிவுபடுத்தி சக மனிதனியும் இழிவுபடுத்துகிற ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை பதப் பிரயோகங்கள் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கோ?
  எத்தனை முறை வெள்ளாவியில் வைத்தாலும் இன்னும் மொழிச்சாயமே வெளுக்கவில்லை? நாக்கின் அழுக்கு எப்போது அகலுமோ?

  பதிலளிநீக்கு
 2. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு படித்தது. அதன் பின்பு அடிக்கடி மனதில் வந்து சென்றிருக்கிறது. இப்போது இன்னொரு முறை படித்து விட்டதால் இன்னும் கூடுதலாக அடிக்கடி வந்து செல்லும்.

  பதிலளிநீக்கு
 3. ஆக்கம் பகிர்வுக்கு மிக்க நன்றி ஆதவன் தீட்சண்யா. இந்த நவீன காலங்களிலும் தீண்டாமை சாதி வெறி பிடித்து அலையும் மனிதமற்ற கீழ்தர மக்களை நினைத்தால் வெட்கம்தான் மிஞ்சுகிறது.

  பதிலளிநீக்கு