என் பெயர் ராணுவன் - ஆதவன் தீட்சண்யா

ம்மைத்தாமே கண்காணித்து வேவு சொல்லும்
ஒற்றர் நாட்டில்
நிழலும் சந்தேகத்திற்குரியதாகையால்
புழுதியும் அடங்கிக் கிடக்கிறது
நகரரீதியில் கிராமங்களிலும்

சைரன் பொருத்திய கவச வண்டிகளிலிருந்து
ஊரெங்கும் படையாட்கள் இறங்கிவரும் நேரமிது

எந்தக் கணத்திலும் எதிரியைத் தாக்க ஏதுவாக
பிறக்கும்போதே ராணுவ உடுப்போடு பிறக்குமாறு
கருவிலிருக்கும் சிசுவுக்கான உத்தரவு நகலை
தாயின் வயிறுமீது ஒட்டிவிட்டுப் போகவோ
தூளியில் துயிலும் குழந்தை இரவுக்குள் வளர்ந்து
விழித்ததும் வெடிகுண்டு வீசலாமென
முன்னெச்சரிக்கையாக கைது செய்யவோ
உத்திரத்தில் மஞ்சள்துணிக்குள் தொங்கும்
ஒண்ணேகால் ரூபாய் காணிக்கைப் பணத்தை
யுத்தகால நன்கொடையாக பறித்தெடுத்துப் போகவோ
எத்தனையோ காரணமுண்டு
எந்தவொரு குடிமகன் வீட்டிலும் அவர்கள் நுழைய

வேசித்தெருவுக்குள் நுழைந்த நினைப்பில்
இன்றிரவும் அவர்கள் யார் வீட்டுக்கதவையும் உடைத்து நுழையக்கூடும்
நேற்றின் வதையில் உதிரப்போக்கு நிற்காத இளம்பெண்
மறுபடியும் முகாமுக்கு இழுத்துச் செல்லப்பட்டால்
கண்ணெதிரே கதறும் மகளை கையறு நிலையில் காண்பதினும்
தேவலாம் இதுவென தேறுதலடைய
பெற்றோர்க்கு சுதந்திரமுண்டு இன்னமும்

பூட்ஸின் லாடக்குறடு அரக்கிய காயங்களுக்கு
களிம்பும் கண்ணீரும் தடவிய மகாகுற்றத்திற்காக
தாயின் ஸ்தனங்களிலும் மகனுக்குப் போலவே
அதே தேசதுரோக முத்திரை குத்தப்படலாம்
இன்னும் சிறுபொழுதில்

நரிகளுக்கும் கழுகுகளுக்கும் நல்லவேட்டையிருக்கிறது நாளையும்
நாட்டிற்குச் சுமையென
மிச்சமிருக்கும் வயோதிகர்களும் சீக்காளிகளும் சுட்டுத்தள்ளப்படலாம்
இறப்போர் எலும்பில் சூப் வைத்து எல்லை வீரர்களுக்கு அனுப்ப
தேசியக்கொடி கட்டிய டேங்கர்கள்
எப்போதும் தயார்நிலையில்

எல்லையில் மட்டுமல்ல
எங்கும் எப்போதும் எல்லா ரூபத்திலும்
எதிரிகள் ஊடுருவுவதால்
போருக்கான மனநிலையை வரித்துக்கொண்டு
சிவிலியன்களும் அவர்களைப் போலவே
சிப்பாய்களாக மாறியாக வேண்டுமாம்

தேசபக்தியை நிரூபிக்கத் தவறுவதே
தேசவிரோதத்திற்கு நிரூபணமென அஞ்சி
குழந்தையின் வட்டிலிலிருந்து பறித்தெடுத்த பருக்கைகளை விற்று
ஆயுதம் வாங்கி களமிறங்கிய குடிபடைகளுக்கு
எதிரிகள் யாரும் அகப்படாத வெறியில்
தாமே தம்மை மாய்த்துக்கொண்டு
சவக்காடாய் விடியும்
தம்மைத்தாமே கண்காணித்து வேவு சொல்லும்
ஒற்றர் நாடு.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக