புதன், அக்டோபர் 19

மதச்சார்பின்மை என்னும் கெடுக்கப்பட்ட வார்த்தை- ஆதவன் தீட்சண்யா

த்திய அரசின் ஒரு அலுவலகத்திற்குள் நுழையும்போது ஒருவேளை பாதை தவறி ஏதேனும் பஜனைமடத்திற்குள் நுழைந்துவிட்டேனா என்ற சந்தேகம் எழுந்துவிட்டது. ஏதோவொரு சுலோகம் வெளியெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. தொடர்ந்து பக்திப்பாடல்கள்... பாசுரங்கள். படியிலிருந்து இறங்கிவந்து பெயர்ப்பலகையைப் படித்து அலுவலகம்தான் என்பதை உறுதி செய்துகொண்டு உள்நுழையும்போது காலணிகளை வாயிலிலேயே விடுமாறு ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைப் பார்த்ததும் எனக்கு கோவில் ஞாபகமும் சேர்ந்துகொண்டது.

குறுந்தகட்டிலிருந்து பெருகிவரும் அந்த இசையில் லயித்து கண்மூடி ரசித்துக் கிடக்காமல் நல்லவேளையாக ஊழியர்கள் விழித்திருந்தது எனக்கு ஆச்சர்யமளித்தது. ஆனாலும் அந்த இசையின் பின்னணியில் அவர்கள் கோவிலின் ஏதோவொரு பிரகாரத்தில் அமர்ந்து சாமிக்கு பூ கட்டிக்கொண்டிருப்பதைப் போலவும் பிரசாதம் வழங்கிக் கொண்டிருப்பதைப் போலவும் தட்சணைப் பெறுகிறவர்களாகவுமே தென்பட்டனர்.

எனக்கு வந்த வேலை மறந்துவிட்டது. அமைதியாக வேலை செய்யவேண்டிய இடத்தில் இதென்ன பஜனை என்றேன் ஒரு ஊழியரிடம். ‘நாங்கள் இப்போது கம்பனியாகிவிட்டோம். எனவே பிற தனியார் கம்பனிகளோடு போட்டிப்போட்டு வாடிக்கையாளர்களை ஈர்த்து தக்கவைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்திலிருக்றோம். அதனால் வருகிற வாடிக்கையாளர் ஆசுவாசங்கொள்ளவும், இறுக்கம் தளர்ந்து ஆனந்தமயமான மனநிலையை எய்தவும் இசைவெள்ளத்தில் அவரை மூழ்கடித்துக்கொண்டே அவருக்கான சேவையை நிறைவேற்ற வேண்டும் என்பது எங்களது கம்பனி நிர்வாகத்தின் முடிவு. அதற்காகத்தான் இந்த இசை ஏற்பாடு..’ என்றார். சரி, இசையென்றால் அது பஜனைதானா? உங்கள் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் எல்லோரும் இந்துக்கள் மட்டுந்தானா? எல்லோருக்கும் பொதுவான ஒரு அரசு அலுவலகத்தில் இப்படி ஒரு மதத்தின் நம்பிக்கைகள் பாடல்களாக ஒலித்துக் கொண்டிருப்பது சரியா என்றேன். சாரி சார், இதுபற்றி எங்கள் மேலதிகாரியிடம்தான் தாங்கள் கேட்க வேண்டும் என்று அந்த ஊழியர் தன் பதிலை சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
இசையின் பெயரால் இந்துமதப் பாடல், இந்துமதத்தின் பெயரால் ஆதிக்கசாதியினரான அதிகாரிக்கு உகந்தக் கடவுள்களின் மீதானப் பாடல் என்று இப்போது இசை மதத்திலிருந்து தாவி சாதிக்குள் மையம் கொண்டிருப்பதை உணர முடிந்தது. இப்படித்தான் அதிகாரத்திலிருந்தவர்கள் தங்களுக்கு உகந்ததை தங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் மீது எல்லாக்காலத்திலும் திணித்து வந்திருக்கின்றனர் என்பது அந்த கணத்தில் பிடிபட்டது.
அலுவலகத்தின் சுவர்களை பல்வேறு இந்துக்கடவுள்களைக் கொண்ட காலண்டர்கள் நிறைத்திருந்தன. அவற்றுக்கு கொஞ்சம்போல பூவும் குங்குமமும் வைக்கப்பட்டிருந்தன. ஊதுபத்தியின் எஞ்சிய அடிக்குச்சிகள் சீரற்று துருத்திக் கொண்டிருந்தன. கற்பூரம் கொளுத்தி வைக்கப்பட்டிருந்ததற்கான அடையாளம் சுவற்றில் கருங்கோடாய் படிந்திருந்தது. அலுவலகத்தின் கம்ப்யூட்டர் உள்ளிட்ட இயந்திரங்கள் மீது கடந்த ஆயுதபூஜைக்கு பூசப்பட்ட சந்தனமும் குங்குமமும் இன்னமும் கொஞ்சம்போல ஒட்டிக் கொண்டிருந்தது. உங்கள் அலுவலகத்திற்கென்று தனியே புரோகிதர் யாருமுண்டா என்றேன் ஊழியரிடம். அவர் பதிலொன்றும் கூறவில்லை.
அதிகாரியைச் சந்தித்து இதுகுறித்து கேட்டபோது அவர் பதட்டமேதும் அடையாமல் சாந்தசொரூபியாய் பேசத் தொடங்கினார். (இசைவெள்ளத்தை கொஞ்சம் கூடுதலாக குடித்ததன் விளைவாக இருக்கக்கூடும்.) ‘இதுவரை இதையெல்லாம் யாரும் ஒரு பிரச்னையாக பார்க்காதபோது நீங்கள் ஏன் விகற்பமாகப் பார்க்கிறீர்கள்?’ என்றார். ‘எல்லாமே விகற்பமாக இருப்பதைப் பார்த்து சகித்துக்கொள்ள முடியாமல் அவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக நான் கேட்கிறேன்என்றதும்வீணாக ஏன் சார் பிரச்னையை கிளப்பறீங்க.... வந்த வேலை எதுவோ அதைப் பார்த்துக்கொண்டு போங்களேன்...’ என்றார்.
அதாவது அவரைப் பொறுத்தமட்டில் அந்த அலுவலகம் அவரது விருப்புவெறுப்புகளுக்கு கட்டுப்பட்ட ஒரு ராஜாங்கம். அங்குள்ள எதுகுறித்தும் கருத்து தெரிவிக்க மற்றவர்களுக்கு உரிமை இல்லை. சிலநாட்கள் கழித்து மீண்டும் அங்கு சென்றபோது அத்தனை இந்துக் கடவுள்களின் காலண்டர்களுக்கு மத்தியில் அகதிகளைப்போல ஒட்டிக்கொண்டிருந்தன புதிதாக இரண்டு. ஒன்றில் மெக்கா, மற்றதில் மேய்ப்பர். எப்படி எங்கள் சர்வசமய ஏற்பாடு என்பதைப் போல இளக்காரமாக இருந்தது அந்த அதிகாரியின் பார்வை. வாழ்க மதநல்லிணக்கம் என்று சொல்லிக்கொண்டேன்.
அந்த அலுவலகம் மட்டுமே என்றில்லை. இந்தியாவின் எந்த அலுவலகத்திற்குள் நுழைந்தாலும் இதே காட்சியும் வசனங்களும்தான் நம்மை எதிர்கொள்கின்றன. பாலம், கட்டடம், சாலை எனறு அரசாங்கம் ஏதேனும் வேலையைத் தொடங்கும்போது இந்துமத வழக்கங்களின் படியான பூமிப்பூஜையே நடத்தப்படுகிறது. இலட்சுமியின் படம் அல்லது சிறிய அளவிலான சிலையை வைத்து தினசரிப்பூஜைகள் செய்யப்படாத வங்கி மேலாளர் அறைகளை அரிதாகவே காணமுடிகிறது. பேருந்துகளில் ஓட்டுநருக்கு முன்பாக அவரது இஷ்டதெய்வங்களின் உருவங்கள் ஏதேனுமொரு வடிவத்தில் இடம் பெறுவதும்கூட நீக்கமற நிறைந்திருக்கும் காட்சியே.
இன்னும் அலுவலக வளாகத்திற்குள்ளேயே கோவில்கள் கட்டப்பட்டிருப்பதும் அதற்கென புரோகிதர்கள் நியமிக்கப்பட்டிருப்பதையும் கூட காணமுடியும். ஆயுதபூஜை/ சரஸ்வதிபூஜையின் பெயரால் அலுவலகத்தின் எல்லாப்பொருட்களுக்கும் இயந்திரங்களுக்கும் இந்துமதத்தின் படியான பூசைகள் செய்விக்கப்படுவதும் குங்குமம் திருநீறு பூசப்படுவதும் வருடாந்திர வாடிக்கையாகிவிட்டன. கிறிஸ்துமசும், பக்ரிதும், குருநானக் ஜெயந்தியும், புத்தபூர்ணிமாவும், மகாவீர் ஜெயந்தியும் அந்தந்த மதத்தவரின் வீடுகளுக்குள் முடிந்துபோகிற தினங்களாக குறுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஊழியர்களின் குடியிருப்புகளில்கூட பிள்ளையார் சதுர்த்திக்கு சிலைகள் வைக்கப்படுவது பெருகிவருகிறது.
தான் நம்பும் கடவுளை எல்லோரும் புழங்கும் ஒரு பொதுஇடத்தில் திணிக்கவேண்டும் என்ற தன்முனைப்பின்றி வெகுஇயல்பாகவே இத்தகு மதச்சார்பான காரியங்களை ஒரு இந்து அரசு ஊழியர் செய்கிறார். பிற மதத்தாரையோ மதச்சார்பற்றவரையோ புறக்கணிக்க வேண்டுமென்ற உள்நோக்கம்கூட இதில் கிடையாது. அதாவது ஒரு இந்துவானவர் தன் வீட்டிலிருப்பது போலவே அலுவலகத்திலும் இந்துவாகவே இருக்கிறார். அவர் இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்லும் மதச்சார்பின்மைக்கு எதிராக அவரையறியாமலே செயலாற்றுகிறார். ஆனால் இப்படியான காரியங்களில் ஈடுபட ஒரு சிறுபான்மை மதத்தவர், சிறுபான்மையராய் இருப்பதாலேயே செய்வதற்குத் தயங்குகிறார்.
பொதுஇடமொன்றில் பெரும்பான்மை மதத்தின் அடையாளங்களும் வழிபாட்டுச் சின்னங்களும் மட்டுமே இடம் பெற்றிருப்பதற்கு காரணம் யாராகவிருப்பினும், அவரது சக ஊழியர்களிலும் அவ்வலுவலகத்திற்கு வருகிற வாடிக்கையாளர்களிலும் பெரும்பான்மையோர் இந்துக்களாகவே இருப்பதால் அவர்களுக்கு இதுகுறித்து எவ்வித உறுத்தலும் ஏற்படுவதில்லை. இதுகுறித்து யாரும் கேள்வி எழுப்பாதவரை அவ்வலுவலகம் சுமூகமாய் இயங்கிக் கொண்டிருக்கிறதென்றும் அங்குள்ள ஊழியர்களிடையே நல்லிணக்கம் நிலவுவதாகவும் பொருள் கொள்ளப்படுகிறது.
இத்தகைய மதச்சார்பான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்களின் மனவருத்தத்திற்கோ விரோதத்திற்கோ ஆளாக வேண்டாம் என்ற எண்ணத்தில் இதுகுறித்து அனேகமாக யாரும் கேள்வி எழுப்புவதுமில்லை. இன்னும் ஒருபடி மேலே போய் இப்படியான நடவடிக்கைகளில் உடன்பாடில்லையென்றாலும்கூட பங்கெடுக்கவும் வேண்டிய நிர்ப்பந்தம் சிறுபான்மையினருக்கும் மதச்சார்பற்றோருக்கும் ஏற்படுகிறது.
யாரேனுமொருவர் தமது உடன்பாடின்மையைத் தெரிவிக்கும்பட்சத்தில் அவர் ஒற்றுமையைப் பிளக்கவந்த கோடாரியாகப் பார்க்கப்படுகிறார். தலித்கள்/ பெண்கள் அடங்கிக் கிடக்கும்வரை சமூகத்தில்/ குடும்பத்தில் அமைதி நிலவுவதாகவும், அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியதுமே அமைதி சீர்குலைந்துவிட்டதாகவும் கூறப்படுகிற குற்றச்சாட்டுகளுக்கு இணையானதுதான் இதுவும்.
ஒரு மதச்சார்பற்ற அரசியல் சாசனத்தின்கீழ் இயங்கி அதன் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான பொறுப்பில் உள்ளவை இந்தியாவெங்கும் இருக்கின்ற மத்திய மாநில அரசுகளும் அவற்றின் அலுவலகங்களும். ஆனால் நடைமுறையில் மதச்சார்பின்மைக் கோட்பாட்டை வெளிப்படுத்துகின்றனவாக அவை செயல்படுகின்றனவா? அரசு ஊழியர்கள் தமது தனிப்பட்ட நம்பிக்கைகளையும் சார்புத்தன்மைகளையும் விடுத்து நாட்டின் அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மை அடிப்படையில் அலுவலகத்தில் செயல்படுகின்றனரா? என்ற கேள்விகளும் எங்கேயும் எழுப்பப்படாமலே இருப்பதால் வந்த விளைவு இது.
மதச்சார்பற்றத்தன்மையை ஊழியர்களிடையிலும் அலுவலகத்திலும் உருவாக்குவதற்கு ஓரளவுக்கு வாய்ப்பு பெற்றிருக்கும் தொழிற்சங்கங்களும்கூட இதே பெரும்பான்மை மதத்தின் செல்வாக்கிற்கு கீழ்ப்படிந்தே கிடக்கின்றன. இவற்றைப்பற்றி பேசி தன் ஆதரவுத்தளத்தை இழப்பதற்கு அவை விரும்புவதில்லை.
சட்டரீதியான விளக்கங்களிலிருந்தும் வரலாற்றுப்பூர்வமாகவும் இந்துமதம் என்ற ஒன்று இல்லவேயில்லை என்பது நிறுவப்பட்டுவிட்டபோதிலும் பெரும்பான்மை மக்கள் தம்மை இந்துக்கள் என்றே நம்புகின்றனர். சமூகத்தில் பெரும்பான்மையாய் இருக்கும் அவர்களது எண்ணிக்கையைப்போலவே அரசாங்க அலுவலகங்களிலும் இந்துக்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மறுதலையாக இஸ்லாமியரும் கிறித்தவர்களும் சீக்கியர்களும் பௌத்தர்களும் சமணர்களும் பார்சிகளும் மதச் சிறுபான்மையோராகவே எல்லாவிடங்களிலும் இருப்பது தவிர்க்க முடியாதது.
இந்துக்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருந்தபோதிலும் அவர்கள் பிறமதத்தாரோடு ஒரு நல்லிணக்கத்தைப் பேணியே வருகின்றனர். மதப்பாகுபாடுகளைக் கடந்து எல்லா மக்களுக்குமான சேவைகளை வழங்குவதிலும் அவர்கள் சுணக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டுகள் இல்லை. ஆனால் இதன்பொருள், அரசு அலுவலகங்கள் மதச்சார்பற்றத் தன்மையில் நடக்கின்றன என்பதல்ல.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என நமது அரசியல் சட்டம் சொல்கிறது. நம்நாட்டைப் பற்றி அரசியல் சட்டத்திலேயே இப்படிப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள் ஏராளம் இருக்கின்றன. எல்லாவகையான மதம் சார்ந்த நடவடிக்கைகளிலிருந்தும் விலகி நிற்பதும், எந்தவொரு மதத்தின் அடையாளமும் தன்மீது படிந்துவிடாமலும் அரசு செயல்பட வேண்டும் என்பதே மதச்சார்பின்மைக்கான எளிய விளக்கம். அதாவது கடவுள் நம்பிக்கை, மதவுணர்வு ஆகியவை ஒருவரின் தனிப்பட்ட விசயங்களாக இருக்கலாமேயழிய அவை அரசாங்கத்தின் செயல்பாடுகளில் குறுக்கிடக்கூடாது என்பதாகும். இவ்வரசை தன்னுடையதாக ஒன்றித்துப் பார்க்கும் ஒரு குடிமகனின் இயல்பான மனநிலைக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு மதரீதியானக் காரியங்களிலும் அரசு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபடக்கூடாது என்பதும்கூட இதன் பொருளாகும்.
இதையெல்லாம் சொல்வதற்கோ கடைபிடிப்பதற்கோ அரசியல் சாசன வல்லுநராக இருக்க வேண்டிய அவசியமில்லை. அடிப்படை அரசியல் அறிவு இருந்தாலே போதுமானது. ஆனால் அரசியல் சாசனத்தின் பெயரால் ஆளவந்தவர்களில் பெரும்பாலோர் மதச்சார்பான தமது சாய்வுத் தன்மைகளை விட்டொழிக்காமல் இருப்பதற்காக எல்லா மதங்களுக்கும் அனுசரணையானவர்களைப்போல சர்வசமயவாதிகளாக தம்மைக் காட்டிக்கொள்ளத் தலைப்பட்டனர். ஆனாலும்கூட மறைத்துக் கொள்ளமுடியாதபடிக்கு தமது சொந்தமதத்தின் மீதான கரிசனங்களையே வெளிப்படுத்தினர். விளைவாக அரசு இயந்திரம் முழுவதையும் மதச்சார்பின்மைக் கோட்பாட்டிற்கு எதிரான செயற்களமாக சீரழித்து வைத்துள்ளனர். அதனாலேயே அவர்களின்கீழ் இயங்கும் எல்லா அமைப்புகளும் இந்துமதரீதியான அடையாளங்களுடனேயே செயல்படுகின்றன. அதாவது பெரும்பான்மை மதத்தினரின் கலாச்சாரத்தை இந்நாட்டிலுள்ள சிறுபான்மை மதத்தோர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற சங்பரிவாரத்தின் நிலைபாட்டினை செயற்படுத்தும் களங்களாக அரசு அலுவலகங்கள் விளங்குகின்றன.
அரசு இயந்திரத்தை ஆக்ரமித்துள்ள இந்த இந்துமத சார்புநிலைதான் மதக்கலவரங்கள் நடக்கிற போது பாரபட்சமான அணுகுமுறைகளைக் கையாள்வதற்கு இட்டுச் செல்கிறது. இஸ்லாமியத் தீவிரவாதிகள் எனச்சொல்லி போலி என்கவுண்டர்கள் மூலம் தீர்த்துக்கட்டுவதற்கான தைரியத்தை வழங்குவதும் இதுதான். நகர்சார் நடுத்தர வர்க்கத்தின் கணிசமான பகுதியினரான ஓரளவுக்கு படித்த, பொருளாதார வசதி கொண்ட இந்த அரசு ஊழியர்களும் அவர்களது குடும்பங்களும் எந்த மதவாத அமைப்புகளோடு தங்களை இணைத்துக் கொள்ளாவிடினும் சிந்தனை மட்டத்தில் மதவாதத்தோடு ஒருமை கொண்டுள்ளன.
கடவுள் நம்பிக்கை, மதாபிமானம் என்பவற்றை மதவெறியாகவும் துவேஷமாகவும் மாற்றுவதற்கான துர்க்காரியத்தில் ஈடுபட்டிருக்கும் மதவாத அமைப்புகளின் பிடியில் இவர்கள் சிக்கிக் கொள்வதற்கு முன்பாக அவர்களை மீட்டெடுக்க வேண்டியப் பொறுப்பு மதச்சார்பற்றோருக்கு உள்ளது.
ஆனால் மத அடிப்படையிலான மோதல்களோ கலவரங்களோ நிகழ்ந்துவிடும்போது மட்டுமே அவற்றைப் பற்றி விவாதிப்பதும், அவற்றுக்கெதிராக இயக்கங்களை நடத்துவதும் பிறகு சாவதானமாக மற்ற வேலைகளில் மூழ்கி மதவாதத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதும் மதச்சார்பின்மைவாதிகளின் பொதுவான அணுகுமுறையாக உள்ளது. கேடு விளைவிக்கும் இவ்வணுகுமுறையின் நீட்சியாக கலவரங்கள் நடைபெறாத சமாதானக்காலங்களில் மதவாதத்தை வீழ்த்தப்பட்ட எதிரியாக நம்பிக்கொள்ளும் போக்கும் உள்ளது. ஆனால் மதவாத அமைப்புகளோ, ஒரு கலவரத்துக்கும் மற்றொரு கலவரத்துக்கும் இடைப்பட்ட சமாதான காலத்தில்தான் மற்றொரு கலவரத்திற்கான முன்தயாரிப்புப் பணிகளை மேற்கொள்கின்றன. இவ்விடைப்பட்ட காலத்தில்தான் அவை கடந்தகாலத்தை விடவும் மூர்க்கம் பெறுவதற்கான மக்கள்சக்தியைத் திரட்டுகின்றன.
ஏதோவொரு மதவாத அமைப்பின் மூளையில் ஒரு மதவாதக் கருத்து உருவாகிவிட்டதுமே கலவரங்கள் நிகழ்ந்துவிடுவதில்லை. மாறாக அக்கருத்தின் பேரில் அவ்வமைப்பு பிரச்சாரம் மேற்கொள்கிறது. மக்களைத் திரட்டுகிறது. மட்டுமல்ல, மக்கள் தன்னியல்பாக அக்கருத்தை நம்புவதற்கும் அதற்காக கலவரத்தில் ஈடுபட்டாலும் பத்துப்பேரை போட்டுத்தள்ளினாலும் தவறில்லை என்று துணிவதற்குமானதொரு நியாயத்தை வழங்குகிறது. கடவுள் நம்பிக்கை ஆன்மபலம் என்பதன் அடையாளமாக மதத்தைப் பார்க்கிற மிதவாதியையும், தன் கடவுள், தன் மதம், தன் நம்பிக்கைகளே உயர்ந்தவை என்று அகங்காரம் கொண்டிருக்கும் அமிதவாதியையும் ஒரே புள்ளியில் இணைத்து விடுவதன் மூலம் மதவாத அமைப்புகள் கலவரங்களை கட்டவிழ்த்து விடுவதற்கான பலத்தைப் பெறுகின்றன.
அதாவது கருத்துப்பணியாளனையும் களப்பணியாளனையும் ஒரேதளத்தில் செயல்பட வைப்பதற்கான உத்தி கையாளப்படுகிறது. இதன்மூலம் கலவரக்காலத்தின் போது தெருவிலிறங்காத மிதவாதி அவர் எந்த மதவாத அமைப்பிலும் உறுப்பினராக இல்லாதபோதும் கலவரத்தை நியாயப்படுத்தும் பிரச்சாரத்தை செய்கிறவராக மானசீகமாக பொறுப்பேற்றுக் கொள்கிறார். இந்தப் பணிக்கு அரசு ஊழியர்கள் வெகுவாகப் பயன்படும் வாய்ப்புள்ளது.
பொதுவாகவே, ஏதேனுமொரு சம்பவத்தின் உக்கிரத்தால் உணர்ச்சிவயப்பட்டு கலவரங்கள் நடந்துவிடுவதாகவும் ஆகவே அவற்றை மிகவும் தற்செயலான நடவடிக்கைகளாகவும் மற்றபடி மக்கள் எப்போதும் சகஜ மனப்பான்மையோடு இருப்பதாகவும் கணிக்கும் போக்கு நம்மிடையே நிலவுகிறது. கலவரங்கள் வெடிப்பதற்கான காரணங்கள் தான் தற்செயலானவையே தவிர, கலவரத்தில் ஈடுபடுவதற்கான மனநிலை ஏற்கனவே உருவாகி தயார்நிலையில் இருக்கக் கூடியதொன்றாகும்.
கலவரத்தில் ஈடுபடுவதற்கான மனநிலை எவ்வாறு உருவாகிறது அல்லது உருவாக்கப்படுகிறது? இயல்பிலேயே கடவுள் நம்பிக்கை, வழிபாட்டுமுறைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றைக் கொண்டு மக்கள் தொகுதிகளாக/ பிரிவுகளாகத்தான் இச்சமூகம் உள்ளது. இதில் தன்னுடைய நம்பிக்கைகளும் கடவுளுமே உயர்வானவை என்று பெருமிதம் கொள்வதிலும் அப்பெருமிதத்திற்கு எத்தகைய குந்தகமும் நேராமல் பார்த்துக்கொள்வதிலும் தனிமனிதர்கள் விருப்புறுதி கொண்டுள்ளனர். இப்பெருமிதத்தின் எதிர்மறையாக மற்றவர்களை தமக்கு சமதையாய் கருதவேண்டியதில்லை என்கிற கருத்தையும் அவர்களால் தமது பெருமிதத்திற்கும் தனித்துவத்திற்கும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தையும் அவர்களுக்குள் உருவாக்குவது மட்டுமே போதுமானதாயிருக்கிறது. மதவாத அமைப்புகளின் வேலை இதுவாகத்தான் இருக்கிறது.
மதத்தின் பிடியில் மக்கள் சிக்கிக் கொண்டிருக்கவில்லை. வரலாற்றுரீதியாக பல்வேறு காரணங்கள் இருந்தபோதிலும் உண்மையில் மக்கள்தான் மதமாக இருக்கின்றனர். எனில் அவர்களை மதச்சார்பின்மையாளர் என்ற கருத்துநிலைக்கு உயர்த்துவது உடனடி சாத்தியமில்லை. ஆனால் அவரவர் மதம் சார்ந்த நம்பிக்கைகளை தக்கவைத்துக் கொண்டே சகமனிதனுடனும் அவரது மதத்துடனும் ஒரு நல்லிணக்கத்தை கடைபிடிக்க வேண்டியவராக இயல்பிலேயே இருக்கிறார். மதவாத அமைப்புகள் இந்த நல்லிணக்க மனநிலையைத்தான் சீர்குலைக்கின்றன. இதற்காக அவை தங்கள் மதத்தின் எண்ணிக்கை பலம், தனித்துவம், மேன்மை ஆகிய கருத்தாக்கங்களோடு மற்றவை மீதான துவேஷத்தையும் பிசைந்து அணிதிரட்டுகின்றன. இவ்வாறு அணிதிரட்டப்பட்ட மக்கள்திரள்தான் மற்றவை மீதாக ஊட்டப்பட்ட துவேஷத்தை வெளிப்படுத்த கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் பயன்படுத்துகிற மதவெறிச்சக்தியாக உருமாறுகின்றது.
ஏற்றுக்கொண்ட ஒரு அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்ட ஆட்சியாளர்கள் மதச்சார்பற்றத் தன்மையோடு அரசை நடத்த முன்வருவார்களேயானால் அவர்களுக்கு கீழியங்கும் ஊழியர்களிடம் குறைந்தபட்ச மாற்றங்களையாவது கொண்டுவர முடியும். அதற்கான நிர்ப்பந்தங்களை உருவாக்க இடையறாதப் போராட்டத்தை கருத்தியல்தளத்தில் நடத்த வேண்டியிருக்கிறது. சமூகத்தின் பன்முகத்தன்மையை கொண்டாடுகிற ஒரு புதிய அரசு இயந்திரம் உருவாகும்போது பெரும்பான்மை சிறுபான்மை என்ற வாதங்கள் அர்த்தமிழக்கக்கூடும். ஆனால் மந்திரத்தால் மாங்காயே வராது என்கிறபோது மதச்சார்பின்மை மட்டும் தானாய் வந்துவிடுமா என்ன?

4 கருத்துகள்:

  1. வணக்கம் தோழர்
    மதம் என்பது அரசு,அதன் அலுவலகங்களில் ஒதுங்கி இருக்க வேண்டும் என்பது சட்டம் எனினும் பல இடங்களில் நடைமுறையில் இல்லை.
    பல காவல் நிலையங்களே இப்படித்தான் இருக்கிறது.
    புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. உண்மை ஆதவன் அய்யா. நீங்கள் ஒற்றை ஆளாய் கேட்டபொழுது எதிர்ப்பு வருகிறது அல்லது பொருட்படுத்தப் படவில்லை. இதனை எதிர்ப்பதற்கு வேறு ஏதாவது ஒரு வழியை கண்டுபிடித்து ஆகவேண்டும்,

    பதிலளிநீக்கு
  3. 1) இந்திய அரசாங்க எந்திரமே வலதுசாரி இந்துதுவா அடிப்படைவாததால் கட்டப்படுள்ளபோது இது ஒன்றும் அதிசயம் இல்லையே! இந்திய அரசு கடைப்பிடித்து வருவதாக சொல்லப்படும் மதச்சார்பின்மை என்பது வெறும் பம்மாத்து என்பது கேடுகெட்ட உண்மையிலும் உண்மை. உச்சநீதி (உயர்?) மன்ற நீதிபதி ஒருவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்ற காரணத்தினால் மட்டுமே அவர் ஓய்வு பெற்ற தினம் அவர் புழங்கிய அறை கழுவிவிடப்பட்டு தீட்டுக்கழிகப்பட்டது என்பது எதைத்தான் காட்டுகின்றது? சிறுபான்மை வகுப்பை சேர்ந்த அப்துல்கலாமை வைத்தே நாடாளுமன்றத்தில் காந்தியாரின் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சவர்க்காரின் படத்தை திறக்கவைத்த கில்லாடித்தனம் இந்த நாட்டை ஆண்ட வலதுசாரி பாஜக-ஆர் எஸ் எஸ் கும்பலைத் தவிர வேறு யாருக்கு வரும்?
    2) நம் நாட்டு ‘மதச்சார்பற்ற’ பாதுகாப்புத்துறையால் தயாரிக்கப்படும் ஆயுதங்கள், ஏவுகணைகள், பீரங்கிகள், இத்யாதிகளுக்கு வைக்கப்படும் பெயர்களை கொஞ்சம் பாருங்கள், நாம் ’மதச்சார்பற்ற’ நாட்டில்தான் வாழ்கின்றோம் என்ற ‘பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருமை’ புரியும்!...இக்பால்

    பதிலளிநீக்கு

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...