கண்ணாடி உடையும் சத்தம் -ஆதவன் தீட்சண்யா

தூக்கிலிடப்பட்டாற் போன்று
சுவற்றின் உச்சியில் தொங்கிக்கொண்டு
அதரையிறங்க மறுக்கும் இப்புகைப்படத்திலிருந்து
இதோ வெளியேறிக் கொண்டிருக்கிறேன்

நாற்புறமும் மறித்துப் பூட்டப்பட்ட சட்டகச்சிறைக்குள்
மங்கி மகிமையிழந்து பழுப்பேறும் இப்புகைப்படத்தில் நீடிப்பது
அப்படியொன்றும் பெருமைக்குரியதல்ல.

நீர்த்தேடியலையும் வேரின் தாகமூறி
மண்நோக்கித் தாழும் கால்களை முறித்து
விண்ணுக்கு மீறுமெனது சிரசையும் அறுத்து
ஒரு சட்டகத்திற்குள் மடங்கிப் பொருந்திக்கொள்ளாமல்
எப்போதும் அதிருப்தியை பெருகவிட்டுக் கொண்டிருக்கும்
எனது ஒவ்வாமையும் ஒழுங்கீனமும்
புகைப்படத்தின் அமைதியை குலைத்துக் கொண்டிருப்பதை நானறிவேன்

சூனியக்காரியின் வசியக்கட்டுக்குக் கீழ்ப்படியும் ஏவல் பிண்டமாய்
புகைப்படக்காரனின் கண்ணசைப்பையும் கைஜாடைகளையும் மட்டுமே
நீங்கள் பின்தொடரும் நிலையில்
நான் மட்டும் ஒரு தெத்துப்பல்லைப்போல
என்னிஷ்டத்திற்கு நிற்பது குறித்த உங்களது குமைச்சல்
தெள்ளுப்பூச்சியைப்போல் அரித்துக்கொண்டிருக்கிறது
புகைப்படத்திற்குப் பதிலாக உங்களையே

ஒதுக்கப்பட்ட சிற்றிடத்தில் ஒண்டிக்கொண்டு
மிகுந்த சௌகர்யத்தோடு இருப்பதான பாவனை பூசி
சிரித்தபடியே காட்சிதரும் இங்கிதம் பழகாத என்னை
உதறியெறிய முடியாமல் உடன்வைத்துக் கொள்வதில்
உமக்கேற்படும் சங்கடங்களைத் தவிர்க்கும் பொருட்டும்
நான் வெளியேறித்தானாக வேண்டும்

காமிரா கோணங்களுக்காக
உட்கார வைக்கப்பட்டவர்கள் சொகுசாய் உட்கார்ந்தபடியேயும்
நிற்பவர்கள்
காலொடிய நின்றே சலிக்கும்படியாயுமிருக்க
முன்வரிசை என்று ஏமாற்றி தரையமர்த்தப்பட்டவர்கள்
எழுந்து நின்று இளைப்பாறவும் வழியற்ற இப்புகைப்படத்தின்
கண்ணாடிக்குள் பாய்ந்து வெளியேறுகிறேன் ரத்தம் சொட்ட

என்னால் உருவாகும் வெற்றிடம்
காட்சியின்பத்தைக் கெடுக்கவல்லதாகையால்
பிதுங்கி வழியும் உங்கள் சதைகளை அறுத்துப் பரப்பியோ
பணிதல்மிக்க பிளாஸ்டிக் பொம்மையிலொன்றை நிற்க வைத்தோ
அவசரமாய் நிரப்பியடையுங்கள் அவ்விடத்தை

நானில்லாத புகைப்படத்தில்
நீங்கள்
புதிய சௌகர்யங்களை உணரக்கடவதாகுக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக