வியாழன், நவம்பர் 10

இன்றைய நிலவரம் - ஆதவன் தீட்சண்யா

காலுக்குத் தொப்பியும் தலைக்கு செருப்பும் அணியுமாறு
இந்த நிமிடம்வரை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை

கண்ணிருக்கும் இடத்தில் கண்ணும்
காதிருக்கும் இடத்தில் காதுமே இருந்துவிட்டுப்போகட்டுமென்று
மாட்சிமை தங்கிய அரசு
குடிமக்களை இன்றும் அனுமதித்திருக்கிறது கருணையுடன்

தொடர்ந்தும் வாய்வழியாகவே உண்பதை மாற்றுவது குறித்து
இன்றைய அமைச்சரவைக்கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்படும்

ஒரு மாறுதலுக்காகவும் காற்றை மிச்சப்படுத்தவும்
மூக்கின் ஒரு துவாரத்தை தூர்த்து மூடும் திட்டம்
நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது

உலகிலேயே முதன்முறையாக
தண்டவாளத்தில் பேருந்து தார்ரோட்டில் ரயில்
துறைமுகத்தில் விமானம் விமானநிலையத்தில் கப்பல் என்று
அரசு எடுத்துவரும் ஆக்கப்பூர்வ மாற்றங்களுக்கு ஆதரவளிக்குமாறு
குடிமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்

பிரசவ ஆஸ்பத்திரியை சுடுகாட்டுக்கு மாற்றியுள்ள அரசு
நாட்டையே சுடுகாடாக மாற்றும் திட்டம் படிப்படியாக நிறைவற்றப்படும்

கோன் எவ்வாறோ குடிக்களும் அவ்வாறேயானபடியால்
அவர்களும்
எதையும் எப்போதும்
ஒரே இடத்தில் நீடித்திருக்கவிடமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

- நன்றி: ஜூனியர் விகடன், 13.11.11

4 கருத்துகள்:

  1. சிறப்பாக உள்ளது சிந்தனையை
    நீளவைக்கிறது

    இன்றைய நிலவரம்
    இன்றைய நிலவரம் மட்டுமல்ல
    நேற்றும் நாளையும் இதுவே
    ஜனநாயகத்தில் ஜனநாயகம்
    வகிப்பவர்களுக்கு ஜனநாயகம்
    தெரிவதில்லை கிணற்றகத்து
    தவளைகளாய் தாஙகளே உலகமாக
    உணர்கிறார்கள்
    மா.தாமோதரன்
    ஆவரைகுளம்

    பதிலளிநீக்கு
  2. கோன் எவ்வாறோ குடிமக்களும் அவ்வாறேயானபடியால்
    அவர்களும்
    எதையும் எப்போதும்
    ஒரே இடத்தில் நீடித்திருக்கவிடமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கவிதையின் துல்லியம் மிகக் கச்சிதமாகக் கைவந்திருக்கிறது.
    எதேச்சதிகாரத்தின் முகத்தில் இருக்கும் மீசை இற்று விழட்டும்.

    பதிலளிநீக்கு
  3. //பிரசவ ஆஸ்பத்திரியை சுடுகாட்டுக்கு மாற்றியுள்ள அரசு
    நாட்டையே சுடுகாடாக மாற்றும் திட்டம் படிப்படியாக நிறைவற்றப்படும் // தொண்ணூறுகளின் துவக்கத்தில் டங்கலில் துவங்கியதுதான் அரசின் இந்தத்திட்டம் எனத்தெரிகிறது

    பதிலளிநீக்கு
  4. மாநில தேர்தல் ஆணைய அலுவலகக் கட்டடம் சென்ற ஆட்சியில்தான் திறக்கப்பட்டது. அது கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளுக்கான பிரமாண்ட கழிப்பறையாக மாற்றப்படுவதாக அறிவிப்பு வரலாம்...

    கடந்த ஐந்தாண்டுகளில் கட்டித் திறக்கப்பட்ட மேம்பாலங்கள், பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கான மகா கல்லறைகளாக மாற்றப்படலாம்...

    இப்படியே போனால் பயமாக இருக்கிறது... ரொம்பவும் முத்திப்போய் தீக்கதிர் ஊழியர்கள் அத்தனை பேரும் டிஸ்மிஸ் என்று அறிவித்துவிடுவார்களோ?
    -அ. குமரேசன்

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...