‘‘ பேட்டி என்பதே தன்னை தீர்த்துக்கொள்வதுதானே...’’ - ஆதவன் தீட்சண்யா


அப்பணசாமி கண்ட நேர்காணல்களின் தொகுப்பான " பதில்களில் மட்டும் இல்லை விடை " என்ற நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை. இதன் ஒருபகுதி இம்மாத தீராநதி இதழில் வெளியாகியுள்ளது. வெளியீடு: போதிவனம், 9841450437

பேட்டி என்பதே தன்னை தீர்த்துக்கொள்வதுதானே என்கிற சமயவேலின் வரிகள் பல்வேறு வகைகளிலும் பேட்டி என்பதன் முழுப்பொருளை விளக்குவதாய் உள்ளது. இவ்விளக்கம் பேட்டி காண்பவருக்கும் காணப்படுகிறவருக்கும் பொதுவில் பொருந்தும் தன்மை கொண்டதாயும் இருக்கிறது.

தான் இயங்கும் புலம் சார்ந்து ஒருவருக்குள் சேகரமாகும் அனுபவங்கள், அதுகுறித்த மதிப்பீடுகள், ஐயப்பாடுகள், உள்முகத்தேடல்கள், புதிய வெளிச்சங்கள், முன்மொழிவுகள், விமர்சனங்கள் என அனைத்தும் உடைப்பெடுத்து வெளிப்பாய்வதற்கான வாய்ப்பை பேட்டி என்ற வடிவம் வழங்குகிறது. ஆனால் வெறும் கேள்விகள் யாரையும் பேசவைத்து விடுவதில்லை. பேசவைக்கும் கேள்விகள் வெறும் எழுத்துக்களின் சேர்மானத்தில் பிறந்து விடுவதில்லை. அது, ஒருவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கு இசைவான சூழலையும் தன்னை புரிந்து கொண்டிருக்கிற ஒருவருடன்தான் உரையாடுகிறோம் என்கிற நம்பிக்கையையும் உள்ளடக்கிய கேள்விகளின் வழியேதான் சாத்தியப்படுகிறது. எனில், பேட்டி காணப்படுகிறவரின் புலம் சார்ந்த அறிவு பேட்டி காண்பவருக்கும் அவசியப்படுகிறது. இரண்டு கில்லாடிகள் ஒருவரையொருவர் வீழ்த்தத் துடிக்கும் களமாக அல்லாமல் பரஸ்பரம் ஒருவருக்குள்ளிருந்து ஒருவர் அறியத்தகுந்தவற்றை கண்டெடுக்கும் தேடலாக நிகழ வேண்டியுள்ளது. கலை, இலக்கியம், பண்பாடு, கல்வி, மொழி, களப்பணி என பன்முகத்தளங்களில் காத்திரமான பங்களிப்புகளை ஆற்றி வருகிறவர்களில் குறிப்பிடத்தகுந்த ஆளுமைகளிடம் அப்பணசாமி மேற்கொண்ட நேர்காணல்களில் இப்படியானதொரு அணுகுமுறை கைக்கொள்ளப்பட்டிருப்பதை உணரமுடிகிறது.

ஒரு பத்திரிகையாளர் என்ற வகையில் தொழில்முறையில் காணவேண்டிய பேட்டி என்பதற்கும் வெளியே விரிந்து தனது தனிப்பட்ட அக்கறைகளினூடே அப்பணசாமி தேர்ந்து கண்ட இப்பேட்டிகள் அரிதான பல விசயங்களைப் பேசுகின்றன. கேள்வி கேட்க நான், பதில் சொல்ல நீ என்ற வேலைப்பிரிவினை  எதையும் வகுத்துக்கொள்ளமால் சமநிலையிலான இருவரது உரையாடல் ரீதியில் கேள்வியும் பதிலும் ஒன்றுக்கொன்று ஆதாரமாக அமையுமளவில் இந்தப் பேட்டிகள் நிகழ்த்தப்பட்டுள்ளது தற்செயலானதல்ல. எழுத்திலக்கியத்திலும் நாடகம் உள்ளிட்ட நிகழ்த்துக்கலைகளிலும் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலிலும் மொழிவளர்ச்சியிலும் அவருக்குள்ள ஈடுபாடுதான் இந்தநிலையை சாத்தியப்படுத்தியுள்ளது. வாசகமனதை புதிய வெளிகளுக்குள் அழைத்துச் செல்வதற்குரிய சாத்தியங்களோடு உள்ள இப்பேட்டிகளைப் படிக்கும்போது  சம்பிரதாயமான கேள்விகள் சம்பிரதாயமான பதில்கள் என்று அலுப்பூட்டும் ரெடிமேட் பேட்டிகளால் சூழல் மலிந்திருப்பதையும் நாம் மறந்துவிட வேண்டியதில்லை.

ஒருவரைப்பற்றி எவ்வித அடிப்படைப் புரிதலுமற்று  கேள்விக்கணைகளை சரமாரியாய் தொடுக்கிற அசாத்திய தைரியசாலிகளைப் பார்த்து மிரண்டு தெறித்தோடுகிற சந்தர்ப்பங்கள் பலருக்கும் நேர்ந்திருக்கும். பேட்டி தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் முதன்முறையாக எனது கவிதைத் தொகுப்புகளையும் எங்களது புதுவிசை இதழையும் நுனிவிரலால் புரட்டிப் பார்த்துவிட்டு அடுத்துவந்த அரைமணி நேரமும் என்னிடமும் கேள்வி கேட்டு பின்னி பெடலெடுத்த இருவரைப் பார்த்து  நான் பெற்ற மிரட்சி பெறுக இவ்வையகம். அவர்களிடம் என்ன பேசுவதென்று தடுமாறித்தான் போனேன். நான் பேசுவதிலிருந்து ஏதாவதொரு சொல்லைப் பிடித்துக்கொண்டு அடுத்தடுத்தக் கேள்விகளைத் தொடுத்து அரைமணி நேரத்திற்கு சமாளிக்கும் இந்த வித்தையும் வேடமும்  நமக்குப் பொருந்தாதென்ற ஞானத்தை எனக்கருளியவர்கள் அவர்கள் மட்டும்தான் என்றில்லை. இன்னும் பலரும்கூட அவ்வாறே உலாவி அச்சமூட்டும் நிலையில் அப்பணசாமி போதுமான முன்தயாரிப்புகளுடனேயே நேர்காணல்களை மேற்கொண்டிருக்கிறார். உண்மையில் முன் தயாரிப்பு என்றும்கூட சொல்லிவிட வேண்டியதில்லை, பேட்டி எடுக்கிறவரிடம் எழுப்ப வேண்டிய கேள்விகள் அல்லது பெறவேண்டிய பதில்கள் குறித்து தானறிந்திருப்பவற்றை ஒரு சேர தொகுத்துவைத்துக்கொண்டு அணுகியிருக்கிறார் என்று சொல்வதே பொருத்தமாயிருக்கும்.

நேர்காணப்பட்ட அனைவருமே தத்தமது துறை சார்ந்த விசயங்களோடு தம்மை ஒடுக்கிக் கொள்ளாமல் வாழுங்காலத்தோடு தொடர்புடைய எல்லாவற்றையும் பற்றி தமக்குள்ள கருத்துகளை வெளிப்படையாக முன்வைத்துள்ளனர் என்ற அளவில் அவை பொருட்படுத்தி வாசிக்கத்தக்கனவாய் உள்ளன. இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆளுமைகளின் நேர்காணல்கள், வரலாற்றில் இதுவரை பதிவாகாத பல செய்திகளையும் நிகழ்வுகளையும் தன்னியல்பாக சொல்லிச் செல்வதின் வழியே அறியப்பட்ட வரலாற்றின் போதாமைகள் சிலவற்றை இட்டுநிரப்பி நிறைவு செய்வதை உணர முடிகிறது. செய்ய வேண்டிய பணிகள் பற்றிய தெளிவு உள்ளவர்கள் தாம் இதுவரை செய்துவந்த பணிகளை பெரிய சாதனைகளாக முன்னிறுத்தி உரிமை கோர துணியாமலிருப்பது வெறும் தன்னடக்கத்தினால் அல்ல என்பதை இங்கு பேசியுள்ள ஒவ்வொருவரும் உணர்த்தி நிற்கின்றனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வேலைகளையும் ஆய்வுகளையும் செய்து முடித்துவிட்டு சுயதிருப்தியில் உறைந்து தேங்கிப்போகிற மனநிலையை உதறியெறிவதற்கான தூண்டுதலைத் தருபவையாகவும் தொடர்ந்து இயங்குவதற்கான வெளிகளையும் வழிகளையும் அடையாளப்படுத்துகிறவர் களாயும் உள்ளனர். சுய தம்பட்டங்களும் தற்புகழ்ச்சியும் பொய்யும் நொதித்து வழியும்உழைப்பால் உயர்ந்த உத்தமர்களையும்’, ஒளிவட்டம் சுடர தலைதாழ்த்தாமலே பேசுகிற ஞானப்பழங்களையும் தவிர்த்துவிட்டு தமக்குள்ள கேள்விகள், ஐயங்கள், போதாமைகள், தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய விசயங்கள் என்று அவ்வளவையும் வெளிப்படையாக பேசுகிறவர்களாக, தான் நம்பும் விசயங்களை பற்றுறுதியோடு பின்பற்றுகிறவர்களாக, எளிய மனிதர்களால் எதுவும் செய்யத்தகும் என்ற நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளவர்களேயே அப்பணசாமி தேர்ந்துகொண்டிருக்கிறார்.

***
மரியாதைக்குரிய பெரியவர் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அவர்கள் பெரும்பாலும் பொத்தாம்பொதுவான ஒரு சமூகச்சேவகராக அறியப்பட்டுள்ளார். அப்பணசாமி இந்த அடையாளத்தை மறுதலித்து அம்மையாரின் பன்முக ஆளுமையை- பலதளச் செயற் பாடுகளை வெளிக்கொணர்ந்துள்ளார். அம்மையார் தன் வாழ்விலிருந்து நினைவுக்கு மேலெழும்பி வருகிற செய்திகளை சொல்லச் சொல்ல அவை எல்லாமே நாம் இதுவரை கேட்டறியாத/ கவனத்திற்கு தப்பிய விசயங்களாக உள்ளன. உழைப்பையும் ஒடுங்குதலையும் தவிர வேறொன்றறியாதவர்கள் என்று  தலித்துகள் மீதுள்ள பிம்பத்தை அவர் உடைத்துச் செல்லும் பாங்கினைக் காணுங்கள்- அவரது தாத்தா ஒரு வரகவி. 108 சாமிகள் பெயரில் பாட்டு கட்டிப் பாடி ஜல்லிக்கட்டில் காளையை அடக்கி நான்கு காணியை பந்தயத்தில் வென்ற ஆற்றலுடையவர். தனக்கிருக்கும் மூளை தனது  மகன்களுக்கும் இல்லாமல் போனதே என்ற வருத்தத்தோடு ஆளுக்கு 100 ஆடுகளையும் ஒரு குச்சியையும் தந்து பிழைத்துக் கொள்ளுங்கள் என்றவர். அம்மையாரின் தாத்தா இப்படியென்றால் தந்தை அடுத்த உயரத்திற்குப் பாய்கிறார். கல்வியறிவில்லாததால் மண்ணைத் தொட்டுத்தான் வாழ்ந்தாக வேண்டுமென்று தனக்கு ஏற்பட்ட நிலை தன் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடாது என்ற வைராக்கியத்தில் அவர்களை படிக்க வைக்கிறார். படிக்கிற தன் பிள்ளைகளின் கண்ணில் புகைபடியக்கூடாது என்கிற கரிசனத்தில் அடுப்பங்கரைக்கு செல்கிற பிள்ளைகளை அடித்து தடுக்கிற தந்தையாய் இருந்திருக்கிறார். அடுப்பாங்கரைக்குள் முடங்கிக் கிடக்கிற ஒரு சட்டிமுட்டி சாமான்போல பெண்ணை பாவித்து வந்த காலத்தில்- அதுவும் உங்கப் பிள்ளைங்கெல்லாம் படிக்கப்போயிட்டா யாருடா சாணியள்ளுறது என்று ஆண்டைகளின் தொழுவத்தில் அடைக்கப்பட்டவர்களாக தலித் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்த காலத்தில், தன் பிள்ளைகளை படிக்கவைப்பதில் அவருக்கிருந்த அக்கறையை வெறும் தன்முனைப்பாக குடும்பம் சார்ந்த அக்றையாக சுருக்கிப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. வெறும்தரையில் மண்பட உட்கார்ந்தால்கூட பிள்ளைகளுக்கு அடிதான். பாய்போட்டு தான் உட்காரணும். இது பிள்ளைகளை பாதத்தில்கூட மண்படாமல் சொகுசாக வளர்க்க விரும்பும் நடுத்தரவர்க்க/ மேல்தட்டு மனநிலையல்ல. மண்ணிலேயே உழன்று உழன்று அதன்மீது ஏற்பட்ட வெறுப்பிலிருந்த மண்மீது உருவான எதிர்மறைக் கருத்து அவரை அவ்வாறு உந்தித் தள்ளியிருக்கிறது. தாய்மண்/தந்தையர் பூமி என்று விதந்தோதி  கொண்டாடுகிறவர்களால் இந்த மனநிலையை புரிந்துகொள்ள முடியுமா என்று தெரியவில்லைஅப்படி பாதத்திலும் நகத்திலும் மண்படாமல் வளர்க்கப்பட்ட தன் பிள்ளைகளில் ஒருவரான கிருஷ்ணம்மாள் பிற்காலத்தில் நாடு பூராவும் புழுதிபட அலைந்து திரிவார் என்பதோ தான் வெகுவாக வெறுத்த அந்த மண்ணை தலித்துகளுக்கு உரிமையாக்குவதற்கு அவர் எல்லை மீறிய காற்றாய் போராடப் போகிறார் என்றோ அவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
விலைமதிப்பு கூடிக்கொண்டேயிருக்கும் சொத்தாக நிலத்தை பாவிக்கும் நிலைக்கு எதிராக நிலத்தை வாழ்வாதாரமாக கருதும் பார்வையை கிருஷ்ணம்மாள் வெண்மணிக் கொடுமையிலிருந்து பெறுகிறார். தர்மகர்த்தா மனநிலையை ஊக்குவித்து ஒன்றுக்கும் உதவாத கரடுகளையும் கரம்புகளையும் பூதான இயக்கத்தில் பெற்று விநியோகித்து வந்த வினோபா இயக்கத்தில் அவர் இருந்திருந்தாலும் அதன் கருத்தியல் செல்வாக்கிலிருந்து விடுபட்டு நிலத்தை ஒரு அடிப்படை உரிமையாக அடையவேண்டும் என்கிற அரசியல் முடிவுக்கு வருவதும்கூட வெண்மணியிலிருந்து தான். அடிப்படை வாழ்வாதாரமான நிலம் நீதியாக மறுபங்கீடு செய்யப்பட வேண்டும், நிலக்குவியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அரசை பணியவைக்கும் இடதுசாரிகளின் போராட்டங்களை கிருஷ்ணம்மாள் நிராகரிக்கவில்லை. அதேவேளையில் பெரும் நிலக்குவியல் மையங்களாயிருந்த கோவில்கள், மடங்கள், பண்ணைகளில் இருந்து சட்டத்திற்குட்பட்ட முறையில் நிலங்களை விடுவித்து தலித்துகளுக்கு விநியோகிக்கச் செய்வதுதலித்துகள் அனுபோகத்தில் இருந்த குடிமனைகளை தலித்துகளுக்கு உரிமைப்படுத்துவது உள்ளிட்ட வேலைகளை தனது சக்திக்குட்பட்டு முன்னெடுக்கிறார். ஜெயப்பிரகாஷ் நாராயணன் அழைப்பினை ஏற்று பீகார் சென்று 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டிருந்த சங்கர மடத்தையும் இதேபோன்ற 53 மடங்களையும் எதிர்த்துப் போராடி 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மீட்டு தலித்துகளுக்கு உரிமையாக்கியிருக்கும் அம்மையாரின் தீரம் அப்பணசாமி வழியே நாம் அறியக் கிடைத்திருக்கிறது. அரசின் நிதி, வங்கிக்கடன், தனிநபர் உதவி என்று திரட்டிய தொகையில் கீழத்தஞ்சை பகுதியில் பண்படுத்தப்பட்ட சாகுபடிக்கு உகந்த பதினோராயிரம் ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி தலித்துகளுக்கு இவர் பகிர்ந்தளித்திருப்பதும் மேற்கொண்டு முயற்சித்து வருவதும் நமது கவனத்தை வேறுசில நிலைகளுக்குத் திருப்புகிறது. தலித் மற்றும் பழங்குடி மக்களை ஆற்றல்படுத்துவதற்கான சிறப்பு உட்கூறுத் திட்டத்திற்கென்று மத்திய மாநில பட்ஜெட்டில் இதுவரை ஒதுக்கப்பட்ட 4லட்சம் கோடி ரூபாயைக் கொண்டு கோவணத்தளவு நிலம்கூட தலித்துகளுக்கு வழங்கப்படாதது இவ்விடத்தில் கவனத்திற்கு வருகிறது. திட்டமிடுகிற மட்டத்தில் உள்ள அதிகாரவர்க்கத்தின் சாதியப்பார்வையே இந்த புறக்கணிப்புக்கு காரணம் என்பதை தலித் மேம்பாட்டு மாநாடொன்றில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளைக் கொண்டு அம்பலப்படுத்துகிறார் கிருஷ்ணம்மாள். ராணுவத்தினருக்கான ஷூ தயாரிப்பது, மருத்துவமனைகளில் துணிகளை வெளுப்பது ஆகிய தொழில்களை தலித்துகளுக்கே கொடுத்துவிட்டால் ( அடடா என்ன தாராளம்?) அவர்கள் மேம்பாடு கண்டுவிடுவார்கள் என்பதைத் தாண்டி அந்த கரடுதட்டின அதிகார மண்டைகளிலிருந்து ஒரு யோசனையும்  வராத நிலையில்  சிறிதளவு நிலமிருந்தால் அவர்கள் கடினமாக உழைத்து முன்னேறிவிடுவார்கள் என்று செவிட்டில் அறைந்தார்போல கிருஷ்ணம்மாள் மட்டுமே சொல்லியிருக்கிறார்.
தலித்துகளுக்கு நிலத்தை சொந்தமாக்குவதென்பதை மீண்டும் மீண்டும் அவர்களை மண்ணில் உளையச் செய்யும் முயற்சியாக குறுக்கி புரிந்துகொள்ள வேண்டியதில்லை. இந்த நாட்டில் அவர்களுக்கேயுரிய இடம் என்று ஒரு குறிப்பிட்ட பரப்பை உறுதி செய்யும் முயற்சி. நாட்டின் மக்கள்தொகையில் 70 சதமானோர் இன்னும் கிராமப்புறங்களில்தான் இருக்கிறார்கள் என்ற நிலையில் அங்கு நிலமே பிரதான வாழ்வாதாரமாய் இருக்கிறது என்பதை மறந்து விடவேண்டியதில்லை. தவிரவும் நிலம் என்பதை வெறும் மண்ணாகப் பார்க்க வேண்டியதுமில்லை. ஊரகத்தொழில்களும் வேளாண் உற்பத்தி தொழில்களும் வளர்ந்துவரும் நிலையில் அங்கு வெறும் கைகால் வயிற்றை மட்டுமே கொண்ட கூலிகளாக தலித்துகள் ஏனிருக்க வேண்டும்? நிலம் என்ற ஆதாரத்தில் ஊன்றி நின்று அவர்கள் தொழில் முனைவர்களாகவும் மாற முடியும் என்கிற சிறு கனவுகூட இல்லாமல் நாம் எந்த இலக்கையும் அடைந்துவிட முடியாது என்றும்கூட தோன்றுகிறது. பன்னாட்டு/இந்நாட்டு தொழில்/வணிக நிறுவனங்களும் முதலாளிகளும் இன்னபிறவினர் யாராக இருந்தாலும் ஆகக்கடைசியில் இந்தநாட்டின் நிலத்திற்கே அலைகிறார்கள் என்கிற உண்மையை கணக்கிலெடுத்துக் கொண்டால் தலித்துகளுக்குத் தேவை நிலம் என்கிற கிருஷ்ணம்மாள் அவர்களின் போராட்டம் எவ்வளவு நியாயப்பாடுடையது என்பது விளங்கும். இந்த நியாயப்பாட்டிலிருந்து தான் அவர்கள் இறால் பண்ணைகளுக்கு எதிராகப் போராடிவருவதையும் உணரமுடியும்.
கிருஷ்ணம்மாளின் இந்த உரையாடலினூடே இன்னும் வேறுசில விசயங்கள் பிடிபடுகின்றன. தஞ்சை, திருவாரூர் பகுதிகளில் அவரது உற்றத்தோழர்களாகவும் அவர் தங்கி பணியாற்ற இடமும் உணவும் பாதுகாப்பும் வழங்குகிறவர்களாகவும் பி.எஸ்.தனுஷ்கோடி, .எம்.கோபு, காத்தமுத்து போன்ற கம்யூனிஸ்டுகளும் செங்கொடி சங்கத்தின் ஊழியர்களும் இருந்திருக்கிறார்கள். இவரும் அவர்களைத்தான் நம்பகமானவர்களாக கருதியிருக்கிறார். இணைந்து பணியாற்றியிருக்கிறார். ‘கம்யூனிஸ்டு ஒருத்தன்தான் இந்தப் பறைச்சேரியில போயி கால் வைக்கிறான். மத்தவங்க ஓட்டுக் கேட்கத்தான் போறான். அதுவும் வெளியவே நின்னு ஓட்டுப்போட வாங்கடான்னு கூட்டிட்டுப் போயி ஓட்ட வாங்கிட்டு விட்டுடறான். ஆனா இன்னிக்கு வரைக்கும் கம்யூனிஸ்டுதான் வேலை செய்யறான்..’ என்று வெண்மணி பற்றிய வாக்குவாதத்தில் கிருஷ்ணம்மாள் சொன்னது அவரது துணைவர் ஜெகன்னாதனுக்கு மட்டுமேயானதல்ல. கட்சி இடதுசாரிகள், கட்சியில் அல்லாத சமூக இடதுசாரிகளுடன் இணைந்து பணியாற்றும் தளங்களையும் வடிவங்களையும் கண்டடைய வேண்டும் என்று மார்த்தா ஹர்னேக்கர் ( இடதுசாரிகளும் புதிய உலகும் ) வலியுறுத்துவதன் நடைமுறை சாட்சியங்களாக கம்யூனிஸ்டுகளும் கிருஷ்ணம்மாளும் செயல்பட்டுள்ளனர் என்றே விளங்கிக்கொள்கிறேன்.
காந்தியவாதியாக அறிவித்துக்கொண்ட கே.டி.ரங்கநாத முதலியார் சாதிவெறி யராயிருந்ததும், புத்தகயா சங்கர மடத்தில் மேற்கூரையில் கத்திகள் தொங்கவிடப்பட்ட குறுகிய பாதை வழியே சென்றடையும் அறையொன்றில் முற்றும் துறந்த சாமியார் ஒருவர் தங்கத்தாலான செருப்பணிந்து கொண்டு காட்சி தந்ததும், இரண்டு யானைகளை கட்டிப் போட்டு அண்டா அண்டாவாக அல்வா கிண்டி  ஊட்டிவிடும் அந்த காருண்யகர்த்தாக்கள் மடத்தை எதிர்த்துப் பேசுகிறவர்களையெல்லாம் கொன்றுபோடுவதாக ஒரு வளையல்காரன் திகிலோடு எச்சரிப்பதும் ( இங்கே சங்கரராமன் என்றால் அங்கே வாலி. சங்கரமடம் என்றாலே அது கொலையோடுதான் சம்பந்தப்பட்டிருக்கும் போல), அவசரநிலை காலத்தில் காந்தியவாதிகளான இவரது துணைவர் ஜெகன்னாதன், ஜெயபிரகாஷ் நாராயணன் போன்றவர்கள் அனுபவித்த சிறைக்கொடுமைகளும் வெவ்வேறு காலத்தையும் இடத்தையும் அரசியலையும் நமக்கு அறியத்தருகின்றன.

தொங்கத்தொங்கத் தாலி கட்டிக்கொண்டு திங்கத்திங்க ஆக்கியவித்துக் கொட்டுவதே பெண்ணின் இலக்கணமென்று வலியுறுத்தப்படும் நிலையில் திருமணத்தை தவிர்த்து தனிப்பெண்ணாக வாழ்வதற்கான துணிச்சலும், தனது சிந்தனை மற்றும் செயல்பாட்டுக்கு தடையில்லாத வகையில் ஒரு துணை அமைந்தபோது அவரை ஏற்றுக்கொண்டு முன்னிலும் வீரியமாக பணியாற்றுகிறவராக- விக்டிம்ஸ் ஆக்டிவிசம் என்பதன் முழுப்பொருள் விளங்க இந்த நேர்காணலின் வழியே கிருஷ்ணம்மாளின் ஆளுமை வெளிப்படுகிறது. பலநேரங்களில் துணைவரான ஜெகன்னாதனைவிடவும் துணிவும் தெளிவும் விடாப்பிடியான போர்க் குணமும் கொண்டவராக கிருஷ்ணம்மாள் மிளிர்வதற்கு ஒடுக்கப்பட்ட அவரது சமூகப் பின்புலமும் ஒரு காரணமாக அமைகிறது. ஏனென்றால் வெறும் தொண்டுள்ளம் ஒடுக்கப்பட்ட மக்கள்மீது அறிந்தோ அறியாமலோ பரிதாப உணர்வை வெளிப்படுத்திவிட, ஒடுக்கப்பட்ட சமூகத்தவரின் தொண்டுள்ளமோ ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை என்கிற உச்சத்தை நோக்கி நகர்வதாகவும் நகர்த்துவதாகவும் அதற்காக அணிதிரட்டுவதாகவும் போராடுவதாகவும் அமைந்துவிடுகிறது.

***
இவர் பேசுவதையெல்லாம் அப்படியே அச்சடித்து வெளியிட்டுவிட வேண்டும் என்று நினைத்துக்கொள்ளுமளவுக்கு என்னை ஈர்த்தவர் பேரா..சிவசுப்பிரமணியம். உரை யாடலில் பயனில்லாத சொற்களை இவர் பயன்படுத்துவதில்லை என்பதையும் மறைக்கப் பட்ட வரலாற்றின் ஒரு பகுதியையே எப்போதும் பேசுகிறார் என்பதையும் கவனித்திருக்கி றேன். பேரா.நா.வானமாமலை அவர்களின் சிந்தனைப்பள்ளியினால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழக நாட்டாரியலுக்கு வளம் சேர்ப்பதாய் அமைந்துள்ள இவரது களப்பணிகளும் ஆய்வுக் கட்டுரைகளும் மாற்று வரலாற்றை உருவாக்குவதில் இடதுசாரிகளின் பங்களிப்பை தன்னடக்கத்தோடு தெரிவிப்பதாயுள்ளன. ஆவணங்களிலிருந்தும் வாய்மொழி வழக்காறு களிலிருந்தும் உண்மையை தோண்டியெடுப்பதுதான் வரலாற்றாசிரியனின் பணி என்கிற தெளிவுடன் இயங்கிவரும் இவர் வட்டார வரலாறுகளிலிருந்தும் வாய்மொழி வரலாறுகளி லிருந்தும் ஒரு மாற்று வரலாற்றை உருவாக்கமுடியும் என்கிற நம்பிக்கையைத் தருகிறார்.

வட்டாரம்சார்ந்து இருப்பதையே நாட்டார் வழக்காற்றின் முக்கியத்தன்மையாக கருதும் .சி, வட்டார தேசியம், வட்டாரத்தில் புழங்கும் கிளைமொழிவட்டாரத்துக்கான தனி வரை படம், வட்டாரப் பண்பாடு ஆகியவற்றின் தொகுப்பாகத்தான் இனம், மொழி, வரைபடம், பண்பாடு ஆகியவற்றைக் காண்கிறார். இனமைய வாதம், தன்மொழி உயர்வுவாதம் ஆகியவற்றுக்குள் ஆதிக்கச்சாதி மற்றும் மேட்டுக்குடியினரின் நலன்களே பதுங்கியிருக் கின்றன என்பதை அறிவதற்கு இந்நேர்காணல் பெரிதும் துணைசெய்கிறது. தமிழக மக்களிடையே காலனியாட்சியின் நிர்வாகப்பணிகளைச் செய்வதற்கும் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்கும் அவர்களது வாழ்வியலை புரிந்துகொள்ளவேண்டும் என்பதும் அதற்காக அவர்களது தெய்வங்கள், வழிபாட்டுமுறைகள், பழமொழிகள், சொல்கதைகளை தேடி உள்ளதை உள்ளபடியே  தொகுக்கவேண்டும் என்பதும் ஆங்கிலேயர்களின் அணுகு முறை யாக இருந்ததை கவனப்படுத்தும் .சி, தமிழறிஞர்கள் இவற்றை வெறும் ரசனை அடிப்படை யில் மட்டுமே தொகுக்கக் கிளம்பியதால் ஏற்பட்ட குறைகளையும் சுட்டிக் காட்டுகிறார். இவ்வறிஞர்கள் தங்களது பண்பாட்டுப் பின்புலத்திலிருந்து நாட்டார் வழக்காறு களை செம்மைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு திரித்துவிட்டதையும் சொல்லத் தவறவில்லை.

நாட்டார் வழக்காறுகளை சேகரிப்பது, பதிவு செய்வது, ஆய்வு செய்வது என்றிருப்பதிலிருந்து இவ்வழக்காறுகளை சமூக மாற்றத்திற்கான கருவிகளாக அவற்றை எவ்வாறு பயன் படுத்துவது என்கிற அடுத்தநிலைக்கு இட்டுச்செல்லும் விழைவை முன்வைக்கிறார் .சி. அத்திசையில் நாட்டார் மருத்துவம், நாட்டார் அறிவியல், நாட்டார் கலைகள் சார்ந்து நடந்துள்ள முயற்சிகளை கவனப்படுத்துகிறார். சமூக நினைவுகளை பொதித்துவைத்துள்ள மனிதர்களையும் ஆவணக்காப்பகங்களையும் மைக்ரோஸ்கோப்பாகவும் டெலஸ்கோப்பாக வும் காணும் கே.என்.பணிக்கருடன் ஒருமைகொள்ளும் .சிவசுப்பிரமணியம் அதன் பொருட்டே பெரியாரியவாதிகள், மார்க்சியவாதிகள், அம்பேத்கரியவாதிகள் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டுவருவதற்கான நியாயத்தை உணரமுடிகிறது. அவ்வாறே செயல்பட நம்மையும் தன் செயல்வழியே அழைக்கிறார். இவரொத்த ஆய்வாளர்கள் காடுமேடுகளில் அலைந்து நாட்டார் தெய்வங்கள், திருவிழாக்கள், சடங்குகளின் பின்னேயுள்ள வரலாற்றுச் செய்திகளை ஆவணப்படுத்த பாடுபட்டுக் கொண்டிருக்கையில் அவற்றையெல்லாம் திகிலூட்டும் மர்மங்களாக சித்தரிக்கும் தொலைக்காட்சிகளின் வன்முறையிலிருந்து நாட்டாரியலை பாதுகாக்க அது ஒன்றே வழியாகவும் இருக்கிறது.

***
ஏற்கனவே ஒருவரைப்பற்றி உருவாகியிருக்கிற பிம்பத்தை ஊடறுத்துக்கொண்டு அவரிடம் கேள்விகளை எழுப்புவதில் உள்ள இடர்ப்பாடுகளை உணர்த்தக்கூடியதாக தொ..வுடனான உரையாடல் அமைந்துள்ளது. வழக்காறுகள், அடித்தள மக்கள் வரலாறு, உள்ளூர் வரலாறு, கள ஆய்வு, வைணவம், பெரியாரியம், தமிழ்த்தேசியம் என்று பன்முகத்தளங்களுடன் இணைத்து அடையாளங்காணப்படுகிற அவரிடம் புதிய கேள்விகள் எழுப்பப்படவில்லை. எனவே அவரிடமிருந்தும் தெறிப்பான பதில்கள் வெளிப்படவில்லை. ஊடகங்களின் ஆதிக்கம், பன்னாட்டு மூலதனத்துக்குத் தேவையான சந்தைகளை உருவாக்குவதில் கலை இலக்கியம் உள்ளிட்ட அனைத்துத்துறைகளும் ஈடுபட்டிருப்பது, உலகமயமாக்கலுக்கு எதிராக பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுப்பது, தமிழ் அடையாளம் சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் திருவிழாக்களை பதிவு செய்வது என்று விரிவான பேச்சுக்கு அவர் வைத்தப் புள்ளிகளை வளர்த்தெடுக்கும் விதமான கேள்விகள் அமையாததால் அவையெல்லாம் துண்டுதுண்டான தகவல்களாக நின்றுவிட்டன

ஆதாரமில்லாமல் எதையும் தொ.. பேசமாட்டார் என்றொரு பிம்பம் உள்ளது. ‘சாதி உண்மையுல்ல பொய்யுமல்ல...’, ‘பரம்பரையா இந்த மண்ணில் வாழ்ந்த மக்கள்தானே எந்த ஒரு சாதியினரும்?’   என்றெல்லாம் அவர் சொல்லிப்போவதை  இடைமறிக்காமல் கேட்டுக் கொண்டதற்கு இந்த பிம்பமும் ஒரு காரணமாய் இருந்திருக்கக்கூடும். ‘ஒரு குழந்த பிறந்தால் பார்க்கணும்கிற கலாச்சாரத்துல சாதியோ மதமோ ஆபரேட் ஆகறதில்ல. இது தமிழ்நாட்டின் தென்பகுதியில் இருக்கு...’ என்கிறார் தொ.. அண்டை அயலார் என்பதே இங்கு ஒரே சாதிக்காரர்கள்தான் என்கிற அளவில் வாழ்விடங்கள் சுருக்கி பிரிக்கப்பட்டிருக்கும்போது அங்கு சாதியல்லாமல் வேறு என்ன ஆப்ரேட் ஆகுது என்று அவர் விளக்க முற்படவில்லை. சொந்தசாதிக் குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தால் போய் பார்ப்பதில் என்ன பெரிய கலாச்சாரம் கொடிகட்டிப் பறக்கிறதென்று கொண்டாடச் சொல்கிறார்? எந்த சாதிக்காரர் வீட்டில் குழந்தை பிறந்தாலும் எல்லாச் சாதிக்காரர்களும் போய் பார்த்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிற உயர்வான கலாச்சாரம் நிலவும் பூமியா தென்தமிழகம்? மட்டுமீறிய தீண்டாமைக்கொடுமைகள் தலைவிரித்தாடும் தென் தமிழகத்திற்கு இப்படி மாயத்தில் அலங்கரித்த கிரீடம் சூட்டும் தொ., திருநெல்வேலியையும் பாளையங்கோட்டையும் இரண்டு நகரங்களின் அடையாளங்களாகப் பிரிக்கும் அம்சமாக சாதி விளங்கியதாகவும், வெள்ளாளர்கள் சாதிவேற்றுமையைப் பாதுகாக்க பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல என்றும், இவர்களின் ஆதிக்கத்தை எதிர்த்தே நாடார்கள் போராடியதாகவும் மதம் மாறியதாகவும் சொல்கிறார். இதிலுள்ள முரண்படும் தகவல்கள் கவனங்கொள்ளப்பட்டிருந்தால் விவாதம் வேறுதளங்களுக்கு சென்றிருக்கும் எனத் தோன்றுகிறது.

உழைக்கும் சாதியினரின் எழுத்தறிவு குறித்த கேள்விக்கு தொ.. கீழ்ச்சாதியினரின் கல்வியறிவு பற்றி பதிலளிக்கிறார். உழைக்கும் சாதியினர் எல்லாரும் கீழ்ச்சாதியினர் என்கிற பார்ப்பனீய கருத்தியல் மீதான விமர்சனமாக கருதும் வாய்ப்புள்ள இப்பதில் இன்னொரு அர்த்தத்தில் கீழ்ச்சாதியினர் என்றென்றும் எழுத்தறிவில்லாதவர்களாக இருந்தனர் என்றும் பொருள் கொள்ள இடமளிக்கிறது. அப்படியாயின் இதுவரை கிடைத்துள்ள பழந்தமிழ் நூல்கள் எல்லாமே மேல்சாதியினரால் எழுதப்பட்டவைதானா? எண்ணும் எழுத்ததும் கண்ணெனத்தகும் என்று பாடிய வள்ளுவனை உள்ளடக்கிய  மக்கள்திரளைபெருவாரியான மக்கள் எழுத்து தெரியாத குருடர்கள்என்று  தொ.. கூறுவது ஏற்புடையதுதானா? எனில், 13ம் நூற்றாண்டு ஓலைகளில்என்னெழுத்துஎன்று எழுதி கையொப்பமிட்டுள்ள பள்ளர்களையும், ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டு காலத்திய கல்வெட்டொன்றில் அரசர் மிகா பறையர், கானாட்டுப் பறையன் ஆகியோர் ¬யெழுத்திட அதே கல்வெட்டில் துக்கைப்பட்டன், சொக்கப்பட்டன் என்ற சிவபிராமணர்கள் கையெழுத்திடத் தெரியாமல்தற்குறிஇட்டுள்ளதையும்  எவ்வாறு புரிந்து கொள்வது? ‘மாறவர்மன் குலசேகரன் என்ற பாண்டி மன்னனின் ஆட்சிக்காலத்தில் நீர்க்குட்டை ஒன்று   விற்பனை செய்யப்பட்டுள்ளது. இக்கல்வெட்டை ஆராய்ந்த ஆர்.திருமலை பெரும்பாலான மறவர்களும் குறுநிலமன்னர்களின் வழித்தோன்றல்களும்கூட கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்க பறையர்களும் கைவினைஞர்களும் கையெழுத்திட்டுள்ளனர் என்று அவதானித்துள்ளார்என்கிறார் .சிவசுப்பிரமணியன் ( காண்க- புதுவிசை, இதழ்8 , ஏப்- ஜூன் 2005). இதையெல்லாம் நான் சொல்வது பழம்பெருமை அல்லது மீட்டுருவாக்க மனநிலையிலிருந்தல்ல. பொத்தாம்பொதுவாக கூறுவதில் உள்ள பிரச்னைகளை கவனப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.

***
பேரா.சே.ராமாநுஜம், நாசர், முருகபூபதி ஆகிய மூவரது நேர்காணல்களும் நாடகத்துறை சார்ந்தது. நாடகத்தைப் பற்றியதாகவே இவர்களது பேச்சு சுழன்றாலும் அதிலிருந்து கலைஇலக்கியத்தின் இன்னபிற வடிவங்களில் இயங்குவோர் பயிலத்தக்க அனேக விசயங்களை கண்டடைய முடியும்.  ‘சாணி தட்டுவதற்கும் ஆணியடிப்பதற்கும் திறன் வேணும். அது கிராஃப்ட். ஆணியடிக்கும்போது அந்த இடைவெளியில் சந்தத்தை உணரச் செய்வது கலைஎன்ற ராமாநுஜத்தின் வரிகள் எனக்குள்ளிருந்த ஏதோவொரு பொருக்கை தட்டி உதிர்ந்துவிழச் செய்துவிட்டதுபோல உணர்ந்தேன்.

கைசிகக்கூத்து என்கிற அழிந்துவரும் தமிழ் நாட்டார் கலையை மீட்டுருவாக்கும் செய்வது பற்றிய சே.ராமானுஜத்தின் முயற்சி இங்கு விரிவாக பதிவாகியுள்ளது. சைவத்திற்கு நந்தனார் போல வைணவத்திற்கு ஒரு நம்பாடன் இருந்ததை இந்நேர்காணல் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. 12ம் நூற்றாண்டு காலத்திலியே வழக்கிலிருந்த இக்கதையை தேவதாசி மரபினர் நாடகமாக்கியுள்ளனர் என்பதற்கான தரவுகளைத் திரட்டியுள்ளார் ராமாநுஜம். பஞ்சமராகிய நம்பாடன் ஒரு பாணர். வைணவத்தில் நம்பிக்கை கொண்டவர். இரவு வேளைகளில் பெருமாளைப் பாடும் வழக்கமுடையவர். அவர் பாடிய கைசிகப்பண் தான் இன்றைக்கு பைரவி ராகம் என்றழைக்கப்படுகிறது. நந்தனைப்போலவே இவரும் இசையறிவு வாய்த்தவர் என்கிற ராமாநுஜம்நம்முடைய பழைய ஆதாரங்களைத் தேடும்போது சங்கீதத்தின் அடிப்படையான ராகங்களெல்லாம் சமுதாயத்தில் மிகவும் தாழ்ந்த கட்டுல இருந்தவங்ககிட்டதான் இருந்திருக்கு...’’ என்று சொல்வதை பின்தொடர்ந்து போனால் மறைக்கப்பட்ட வரலாற்றின் மற்றொரு இழையை கண்டறிய முடியும்.

வேதங்களும் சாத்திரங்களும் கற்ற பார்ப்பனன் ஒருவன் யாகம் செய்யும்போது மந்திரம் ஒன்றை தவறவிட்ட குற்றத்திற்காக ராட்சஸனாகுமாறு சபிக்கப்பட்டுவிடுகிறான்சண்டாளப் பாகவதன் ஒருவன் பாடும் கைசிகப்பண்ணின் புண்ணியத்தால்தான் அவனுக்கு சாபவிமோசனம் என்ற நிலை. ஏகாதசி விரதமிருந்து அன்றிரவு கைசிகப்பண்ணில் பெருமாளைத் துதித்துப் பாடியதால் நம்பாடன் ஈட்டிய புண்ணியத்தில் எள் அளவேனும் தானமாகப் பெற்று சாபவிமோசனம் பெற்றுவிடலாம் என்பதற்காகசண்டாள பாகவதரே என்னை ரட்சியும்என்று இரைஞ்சுவதை மையமாகக் கொண்டது இந்த கைசிகப் புராணக்கூத்து என்பதை அறிய முடிகிறது. நம்பாடனைத் தின்றுவிடுவதாக முதலில் பார்ப்பன ராட்சசன் மிரட்டுவது, பிறகு எள்ளளவு புண்ணிய தானம் கேட்பது ஆகியவற்றை எவற்றின் குறியீடுகளாக கருதுவது என்பதற்கான ஆய்வுகள் தேவை.

கூத்தை ஒரு நிகழ்வு என்பதைவிடவும் பிரார்த்தனையாக- சடங்காக கருதி மக்கள் நடத்தி வருவதை மூடநம்பிக்கை என்று ஒதுக்கிவிட முடியாதளவுக்கு அதன் பின்னுள்ள நியாயங்களும் கூட்டு மனநிலையும் வலுவானவை என்பதை உணர்த்துகிறார் பேராசிரியர். பாரம்பரியக் கலைஞர்கள் குறித்து மிகுந்த எதிர்நிலையான கருத்தை உருவாக்கிக் கொள்ளுமளவுக்கு அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் வலிமிகுந்தவைதான். ஆனாலும் அதை இவ்வளவு கடுமையாக சொல்வது தேவைதானா என்கிற கேள்வி எழுகிறது. மற்றபடி, மரபை மீட்டெடுப்பதாக கூறிக்கொண்டு பிரக்டுக்கு கூத்துப்பாவாடை கட்டும் அபத்தங்களை அப்பணசாமியுடன் இணைந்து கண்டிக்கும் பேராசிரியர், நாட்டர் கலைகளை நவீன நாடகத்தில் பயன்படுத்துவது, மரபார்ந்த கூத்துகளை மீட்டுருவாக்கம் செய்வது, உள்ளடக்கங்களை மாற்றுவது ஆகியவற்றில்  பொருட்படுத்தவேண்டிய அம்சங்களை ஒரு பாடம் போல சொல்லியிருக்கிறார், பயிலத்தான் நமக்கு மனம் வேண்டியிருக்கிறது.

***
நேர்காணலில் ஒருவர் பேசுவதையெல்லாம் பேசியவாறே வெளியிட்டுவிடுவதில்லை. ஒரு தலைப்பின் கீழ் பேசியிருக்கவேண்டிய விசயம் முன்னும் பின்னுமாக அல்லது வேறு கேள்விகளில் வெளிப்பட்டிருக்கும். அவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தி தொகுத்து ஒரு தொடர்ச்சியை உருவாக்குவது பேட்டியெடுப்பவரின் முக்கிய வேலையாக இருக்கிறது. அல்லது அவ்வாறான ஒரு ஒழுங்குக்குள் கேள்விகளை வரிசைப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும். இந்தப்பணியில் அப்பணசாமிக்குள்ள தேர்ச்சியை நாசருடைய பேட்டியில் காணலாம்மிக விரிவான அந்தப் பேட்டி அலுப்புத்தட்டாமல் நம்மை படிக்கவைத்து விடுகிறது. பேசுகிறவர்கள் விவரிக்கும் சூழலை அப்படியே காட்சிப்படுத்துவதும், அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை அப்படியே எழுத்துக்குள் இறக்குவதுமாகிய சவாலை அப்பணசாமி மிக லாவகமாக எதிர்கொண்டிருக்கிறார் இந்தப் பேட்டியில். குறிப்பாக நாசர் தன் தந்தையைப் பற்றி விவரித்துள்ள பகுதி... அதைப் படிக்கும்போது, சமீபத்தில் காலமாகி விட்ட எனது தந்தையாரின் நினைவு பெருகி அந்த இடத்தை கடக்கமுடியாமல் கண்மூடியும் எழுத்துமேசைக்கு எதிரில் மாட்டிவைத்துள்ள என் தந்தையின் புகைப்படத்தை உற்று பார்த்தபடியும் நெடுநேரம் தத்தளித்துப்போனேன். அந்தளவிற்கு நாசர் சொன்ன விசயம் நெகிழ்ச்சியானதாயிருப்பது ஒருபுறமிருக்க அதை அவர் நேர்நின்று சொல்வதுபோல  அப்பணசாமி எழுத்துப்படுத்தியிருக்கிறார் என்பதே முக்கியம்.
நாடகத்திற்கும் சினிமாவுக்கும் சேவை செய்வதென்று கருவிலிருக்கும்போதே கனவு கண்டதாக நாசர் ஓரிடத்திலும் சொல்லவில்லை என்பதே ஆறுதலாகத்தான் இருக்கிறது. தன் தந்தையின் விருப்பம் மற்றும் கட்டாயத்திற்கிணங்கியே ஏர்ஃபோர்சிலும் பிற துறைகளிலும் கிடைத்த வேலையை நிராகரித்துவிட்டு நடிப்புத்துறையை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால் அதற்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கப்போய்தான் இன்றைக்கான உச்சங்களை அவரால் தொட முடிந்திருக்கிறது. கருவிலே திருவுடைய/ பரம்பரைப் பரம்பரையாக திறமைகளை ரத்தத்தில் ஊற வைத்துக் கொண்டவர்களால் மட்டுமே பிரகாசிக்க முடியும் என்கிற பிதுரார்ஜித வாதத்தை நிராகரிக்கிற அவர் எந்தத் திறமையையும் மனதுவைத்தால் கற்றுக்கொள்ள முடியும் என்று கூறுவதோடல்லாமல் அதற்கான சாட்சியமாகவும் மாறியிருக்கிறார். திரைப்படப் பள்ளிகளில் படித்து முடித்துவிட்டு தினமும் அதிகாலையில் செங்கல்பட்டிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து சினிமா வாய்ப்புகளைத் தேடியலைந்துவிட்டு கடைசி ரயிலில் வீடு திரும்புவதே வழமையாகிவிட்ட நிலைமையில் நாடகக்காரர்களுடன் ஏற்பட்ட தொடர்பே ஒரு முறிப்பை எற்படுத்திக்கொடுக்கிறது. ‘இருவேறு நடிப்புப்பள்ளிகளில் படிச்சதைவிட, அவற்றில் நான் பெற்றதைவிட நாடகங்கள் மூலமா கிடைச்ச தகவல்கள்தான் நான் இன்றைய நடிகனா உருவாக அடிப்படையா அமைஞ்சிருக்கு..’ என்கிற நாசர், இந்தப் படிப்பினையிலிருந்துதான் அரசு திரைப்படக் கல்லூரியை மூடவேண்டும் என்று  சொல்கிறார். செங்கல்பட்டில் கோபால்சாமி, ஆகஸ்ட் மணி என்கிற நாடக இயக்குனர்கள் கையாண்டமுறைகளைத்தான் 15, 18 ஆண்டுகள் கழித்து சிறந்த நடிப்புக்கோட்பாடு என்று புத்கத்தில் படிக்க நேர்ந்தது என்கிற நாசரின் கூற்று நமக்கு வேறொரு விசயத்தை தெளிவுபடுத்துகிறது. அதாவது, கோட்பாடுகளுக்கும் முன்பாகவே கலையும் இலக்கியமும் களத்தில் நிற்கின்றன.

ஒரு நடிகர் கோமிராவுக்கு முன்னால் திடுமென உருவாகிவிட முடியாது. சகமனிதர்களுடனான உறவு, சமூக நிகழ்வுகளைப் பொருட்படுத்தி கவனிப்பது, வரலாற்றுணர்வு, சமகால இலக்கியங்களை ஆழ்ந்து வாசித்தல், கலைஇலக்கியத்தின் பிற துறைகளோடு ஊடாட்டம், சர்வதேச அளவில் துறை சார்ந்து நிகழும் மாற்றங்களை உள்வாங்கிக்கொள்ளுதல், கற்றுக்கொள்வதற்கான திறந்த மனநிலை இவற்றினூடாகவே அவர் உருவாகிறார். ஓட்டிக் கற்றுக்கொள் என்று டிரைவர் வேலைக்கு யாரையும் நியமிக்காத நாம் அதே அளவுகோலை ஏன் நடிப்புத்தொழிலுக்கு பொருத்துவதில்லை என்ற கேள்வி எழுப்பும் நாசர், பயிற்சிகள் வழியே முன்தயாரிப்பு செய்துகொள்வது ஒரு பொறுப்புள்ள நடிகனுக்கு அவசியம் என்று பதிலுமளிக்கிறார்.

எதார்த்த சினிமாவுக்கான வடிவத்தை கண்டெடுத்துவிட்ட தமிழ்சினிமா உள்ளடக்க ரீதியாகவும் அந்த நிலையை எட்டும் என்று நம்பிக்கை தெரிவிக்கிற நாசர் இலக்கியம், ஊடகங்கள், சினிமாவை கட்டுப்படுத்தும் பொருளாதாரம், பார்வையாளர்கள் என்று என்று பலமுனைகளில் விவாதங்களை தொடங்கிவைக்கிறார். யார் உங்கள் பார்வையாளர்? அவருக்குரிய இடம் என்ன என்ற கேள்வியை முன்வைத்து நண்பர் பிரளயன் புதுவிசை நேர்காணலில் தெரிவித்த கருத்துகளும் இவ்விடத்தில் நினைவுக்கு வருகின்றன. ஒரே படம் எல்லாருக்குமானதாய் இருக்கவேண்டியதில்லை என்ற முடிவுக்கு வந்தால்தான் புதிய கதைகள் உருவாகும் பன்முகக்களமாக மாறும் என்று நாசர் சொல்லியிருப்பதை சினிமாவுக்கு மட்டுமேயானதாக குறுக்கிவிட வேண்டியதில்லை.

***
தனது குடும்பச்சூழல், பால்யகாலம், இலக்கிய ஈடுபாடு, நாடக ஆர்வம் மற்றும் அதுசார்ந்த முனைப்புகள் குறித்து மிகத் தெளிவாக ஒரு ஊடாட்ட மொழியில் பேசிச் செல்லும் முருகபூபதி நாடகவாக்கம் பற்றி பேசும் இடங்களில் திருகலான மொழியை கையாள்கிறார். அவர் திட்டமிட்டே இவ்வாறுஇருமொழிக்கொள்கையைகடைபிடிப்பதாக நான் கருதவில்லை. நாடகம் என்பதை எவ்வாறு உள்வாங்கிக்கொண்டிருக்கிறாரோ அவ்வாறே பேசுகிறாரென விளங்கிக்கொள்கிறேன். அவருடனான தனிப்பட்ட உரையாடல்களில் இதை நான் உணர்ந்திருக்கிறேன். ஒரு நாடக உருவாக்கத்தின்போது உடனிருந்து பார்த்த அனுபவத்திலிருந்தும் அவரது சில நாடகங்களைக் கண்டிருப்பதிலிருந்தும் நானறிந்து கொண்டவற்றையெல்லாம் சொல்வதற்கு இது இடமில்லை. ஆனால் காட்சிப்பூர்வமாக துல்லியப்படுத்துவதற்காகவும் காலத்தை மீட்டமைப்பதற்காகவும் ஒன்றைப்பற்றி பார்வையாளர் மனதில் ஏற்கனவே படிந்துள்ள பிம்பத்தை சிதறடித்து இதுவரை கண்டிராத ஒன்றை ஸ்தாபிப்பதற்காகவும் அவர் எடுத்துக்கொள்ளும் சிரத்தையும் உழைப்பும் பயிற்சியும் மதிக்கத்தக்கவை. நடப்புலகத்தின் தேவைக்காக ஓயாது பயன்படுத்தி பயன்படுத்தி தேய்ந்து தட்டையாகிப்போன மொழியை, காட்சியை, ஒளியை, இசையை, பொருட்களை  தானும் பயன்படுத்த வேண்டியதில்லை என்கிற அவரது பிடிவாதம் கடந்தகாலத்திற்குள் புகுந்து தேடச்செய்கிறது. எனவே அவரது நாடகம் காலம் மருவிய ஒரு அரங்கிற்குள் நடப்பதான தோற்றத்தை வழங்குகிறதுஇதற்கெல்லாம் அவர் என்ன பெயர் வைத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. நேற்றைய உலகத்திற்குள் கூட்டிப்போய் இன்றைய எதார்த்தத்தை பேச முயற்சிக்கிறார் என்றே நான் புரிந்துகொண்டிருக்கிறேன்.

நாடகத்தை ஒலிப்பூர்வமாக - வசனகதியாக புரிந்துகொண்டிருக்கின்ற நிலையை முருகபூபதி மறுதலிப்பதில் எனக்கும் உடன்பாடுதான். மனித உடல் தன் முழு ஆகிருதியையும் வெளிப்படுத்தி பார்வையாளர்களுடன் பேசிவிட முடியும் என்று அவர் நம்புவதும் சரிதான். ஆனால் இம்முயற்சியினால் நாடகத்தை வெறும் துண்டுதுண்டான காட்சியனுபவமாக சிதைத்துவிடும் ஆபத்து இருப்பதையும் அவரது நாடகங்களில் நான் கண்டிருக்கிறேன். எப்போது ஒரு பிரதி நிகழ்த்தப்படுகிறதோ அப்போதே அது பயன்மதிப்பைக் கோருவதாகவும் மாறிவிடுவதால், அது என்னிடம் என்ன பேசவிரும்புகிறது என்கிற கேள்விக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவராகிறார். உன்னைப்பற்றிதான் பேசுகிறேன், உனக்கிருக்கிற நடுத்தர வர்க்க/ நகர மனநிலைதான் புரிந்து கொள்ள மறுக்கிறது என்று என்னையே குற்றஞ்சாட்டி நகர்வதோ விசுவாசம் கொண்டவர்களுக்கு மட்டுமே அரசன் அணிந்திருக்கும் ஆடை தெரியும் என்று அம்மணக்குண்டி ராஜாவை உலாவவிட்டக் கதையை மறுபடி சொல்வதோ இங்கு பயனற்றது. அவர் வசனங்களை முற்றாகத் துறந்துவிடவில்லை. அதை முறுக்கித் திருகி யாருக்கானதாக நிலைநிறுத்த விரும்புகிறார் என்ற கேள்வி எனக்கு மட்டுமல்ல, அவரது நாடகத்தைப் பார்க்கிற பல நண்பர்களுக்கும் இருக்கிறது. வெளிப்படையாக பேசி எதற்கு பொல்லாப்பு என்ற தயக்கத்துடன் கடந்துபோகிறார்கள். முகத்துக்கு நேரே விமர்சனம் சொல்கிற நண்பர்கள் அவருக்குத் தேவை என்கிற பேச்சு அவரது முதுக்குக்குப் பின்னேதான் பேசப்படுகிறது. முடிந்துவிட்ட ஒரு காட்சியை நாடகத்தில் திரும்ப நிகழ்த்திக்காட்டுவது சாத்தியமில்லை என்பதால், நிகழ்த்தப்படும் கணத்திலேயே அது என்னிடம் எல்லா வகையிலும் தெளிவுற பேசிவிட வேண்டுமென்ற எனது எதிர்பார்ப்பை அவரது நாடகத்தைப்போலவே இந்த நேர்காணலும் மறுக்கிறது.

இன்றுள்ள சடங்குகளில் பெரும்பாலானவை சாதியடிப்படையிலானவை. அதுவும் ஆதிக்கச் சாதிகளுக்குரியவை. சாதிப் பெருமிதத்தையும் மேலாதிக்கத்தையும் மீளுருவாக்கம் செய்து கொள்ளும் தன்மை கொண்டவை. ஒடுக்கப்பட்ட மக்களிடமுள்ள சடங்குகளும்கூட அவற்றின் சுயத்தை இழந்து மேலுருவாக்கத்தன்மை கொண்டவையாக மாறியுள்ளன. எனவே இன்றையச் சடங்குகளை இயற்கையை சாந்திப்படுத்த ஆதிமனிதர்கள் உருவாக்கிய தொல்சடங்கு என்றோ கூட்டுப் பிரார்த்தனைக்கான சடங்கு என்றோ மயக்கம் கொள்ளத் தேவையில்லை. சாமி, கோயில், ஊர், நாடு உணவு என்று எல்லாமே சாதியாய் பிளவுண்டிருக்கும் ஒரு சமூகத்தில் சடங்குகள் மட்டும் சமமாய் இருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை. திருவிழா நேரங்களில் மட்டும் ஒடுக்கப்பட்ட சாதியினரும் சில சடங்குகளை நடத்த அனுமதிக்கப்படுவது சமத்துவ சிந்தனையினால் அல்ல. அந்த சடங்கை நிகழ்த்துவதற்கு முன்னும் பின்னும் ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை கவனிக்காமல், கணப்பொழுதில் சமமாக நடத்தப்படுவதை முன்னிலைப்படுத்தி ரிச்சுவல் லேண்டில் எல்லாம் சமமாகிறது என்ற மயக்கம் முருகபூபதிக்கு இருக்கிறது. எனவே சடங்கு ஒலிகளே புறக்கணிக்கப்பட்டவர்களின் நாடகமொழி என்ற பிரகடனத்தையும் செய்கிறார். சாதிக்கொழுப்படைத்த காதுகள் கிழிந்துபோகும்படி உரக்கவும் வெளிப்படையாகவும் பேசக்கூடியதாக இருந்தாக வேண்டிய ஒடுக்கப்பட்டவர்களின் அரங்கமொழியை வெறும் சடங்குகளாக குறுக்கி பூடகப்படுத்திவிடுவது என்ன நியாயம்? மனிதர்கள் முருகபூபதி உற்பவித்துக் காட்டுகிற ரிச்சுவல் லேண்டில்  வாழ்ந்துகொண்டிருக்கவில்லை. காலம் நம்மை வேறு இடத்திற்கு வீசியடித்திருக்கிறது. அதற்கேற்ற மனநிலையானது நிச்சயமாக முருகபூபதி சொல்கிற தொல்குடித்தன்மையுடன் ஒத்துப்போகவில்லை.

காட்சியின் ஆழத்திற்குள் வாழ்க்கையை அமிழ்த்திவிட முடியாது. முருகபூபதி சொல்வது போல சமூகப்படிநிலைகளுக்கான பதில்கள் எல்லாமே சடங்குகளுக்குள் இருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும், அவற்றைக்கொண்டு நாடகம் வேண்டுமானால் நடத்தலாமேயன்றி வாழமுடியாது. மேடையில் சாத்தியப்படுகிற விசயங்களை அப்படியே சமூகத்திற்கு எடுத்து வினியோகம் செய்துவிடவும் முடியாது. ஒவ்வொரு சாதிக்கும் ஒரு உடல் இருக்கிறது என்கிற முருகபூபதியின் பார்வையே தவறானது. சாதியவாதிகளும் நிறவாதிகளும் நிறுவத்துடிக்கிற இந்த பாகுபாட்டை கடந்து செல்வதுதான் கலைஞர்களின் வேலையேயன்றி அதைக் கொண்டாடுவதல்ல. இந்தக் குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக்கொள்ளும் பதற்றத்தில்தான்சாதிங்கற ஒரு கதவு வழியாவே நாம் பாத்துக்கிட்டு இருக்கிறோம். அத மூடணும்என்று அறிவிக்கிறார் முருகபூபதி. சாதி என்பது கதவாக இருந்தால் மூடித் தொலைத்துவிடலாம். அது தான் வீடாக தெருவாக நாடாக வாழ்வாக கலையாக இருக்கிறது என்கிறபோது எப்படி மூடமுடியும்

***
கடந்த 15 ஆண்டுகளாக அமைப்புரீதியாகவும் தனிப்பட்ட தொடர்பிலும் .தமிழ்ச்செல்வனுடன் இணைந்து செயல்பட்டுவருவதால், அவர் நேர்காணலில் தெரிவித்துள்ள பலவிசயங்களையும் பின்தொடர்ந்து செல்வது உவப்பானதாகவே அமைந்து விட்டிருக்கிறது. பண்பாட்டுத்தளத்தில் அற்ற வேண்டிய பணிகள் குறித்தும் அதற்கும் முன்பாகவே ஒவ்வொருவரும் தனக்குள் நடத்திக்கொள்ள வேண்டிய போராட்டங்கள் குறித்தும் அவரது முன்வைப்புகள் தமுஎகச என்ற அமைப்புக்குள் ஏற்படுத்தியுள்ள சலனங்கள் வெளித்தெரிய இன்னும் சிலகாலம் செல்லக்கூடும். உண்மையில் அவரது பணிகள் உடனடி பலனை எதிர்பார்த்து செய்யப்படுபவையல்ல. தான் நம்பும் அரசியல், அதை முன்னெடுக்கும் இயக்கம் ஆகியவற்றைப் பற்றி சுயவிமர்சனம் செய்து கொள்வதும் அவற்றிலிருந்து பெறும் படிப்பினைகளை அடுத்தக்கட்ட நகர்வுக்கு பயன்படுத்திக்கொள்வதுமாகிய அவரது இயல்பைப்போலவே இந்த நேர்காணலும் அமைந்திருக்கிறது.

நாம் வாழும் காலத்தின் மிகப்பெரும் துயரம் ஈழப்படுகொலைகள். ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ராணுவத்தின் கொட்டடி களான முகாம்களுக்குள் அடைபட்டும் கிடந்தது கண்டு இதயமுள்ள எல்லோரைப் போலவும் இந்திய/ தமிழக இடதுசாரிகளும் துயரம் கொண்டனர். இந்தப் படுகொலைகளையும் மனிதவுரிமை மீறல்களையும் நிகழ்த்திய ராஜபக்ஷேவையும் அவரது சகாக்களையும் மற்றவர்களைப்போலவே கண்டிக்கவும் இடதுசாரிகள் பின்தங்கவில்லை. இந்த இயல்பான உணர்வுகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் தனி ஈழத்தை ஆதரிக்காத அரசியல் நிலைபாட்டுக்கும் யாதொரு முரணும் இல்லை. உணர்ச்சிமயமானதும் ஆவேசமானதுமான பேச்சுக்களுக்கும் எழுத்துக்களுக்கும் அப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்காக துயரப் படுவதையும் பாதிப்பை ஏற்படுத்தியவர்களை கண்டிப்பதையும் தாண்டி ஈழ ஆதரவாளர்களும்கூட வேறெதையும் செய்துவிடவில்லை. இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தனி ஈழத்திற்காகவும் போராடிய விடுதலைப்புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் அரசியல் தீர்வுக்காகவும் தொடர்ந்து முயற்சித்தே வந்திருக்கின்றனர். சமாதான காலத்தில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தனி அரசையும் கூட விடுதலைப்புலிகள் நிறுவியிருந்தனர். அவர்களின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்றளவும் இலங்கை பாராளுமன்ற அமைப்புக்குள் பொருந்தி செயல்பட்டு வருவதுடன் அரசியல் தீர்வுக்காக அது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டுமிருக்கிறது. சமீபத்திய உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரும் வெற்றியை ஈட்டியுள்ள அவ்வமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவராகிய சுரேஷ் பிரேமசந்திரன், 30.07.11 அன்று சென்னையில் சி.பி.எம் நடத்திய இலங்கைத்தமிழர் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்று நாங்கள் தனிநாடு கேட்கவில்லை, அரசியல் தீர்வைத்தான் கேட்கிறோம் என்று உரையாற்றியிருக்கிறார் 

ஈழத்தமிழர்களும் அவர்தம் இயக்கங்களும் வாழ்வியல் எதார்த்தத்திலிருந்து அரசியல் முடிவுகளை காலத்துக்கு காலம் எடுத்துவரும் நிலையில் தனிஈழம் மட்டுமே தீர்வு என்று இங்கே பத்திரமாக இருந்துகொண்டு சில தலைவர்கள்  பேசும்போதுதான் ஈழம் சாத்தியமில்லை என்ற உண்மையை இடதுசாரிகள் சொல்ல நேர்கிறது. தமிழ் மக்கள் நலன் சார்ந்தும் எதார்த்தத்தை கணக்கில் கொண்டுமே  இந்த நிலைபாட்டை இடதுசாரிகள் எடுக்க வேண்டியிருக்கிறதேயன்றி இலங்கை ஒரேநாடாகத்தான் இருக்க வேண்டும் என்றோ ஒன்பது நாடுகளாய் சிதறடிக்கப்பட வேண்டுமென்றோ இடதுசாரிகளுக்கு தனித்த அக்கறைகள் எதுவும் இல்லை என்பதை தமிழ்ச்செல்வன் தனக்கேயுரிய மொழியில் சொல்லியிருக்கிறார்.

***
தமிழில் நாவலே இல்லை என்று ஒருபாட்டம் திட்டித் தீர்த்த ஒரு எழுத்தாளர் அடுத்த வந்த நாட்களில் தனது நாவலை களமிறக்கினார். அதே எழுத்துக் கம்பனியைச் சார்ந்த கதையாளராகிய மூத்த எழுத்தாளர் ஒருவர் தமிழ்க்கவிதைகள் தேக்கம் கண்டுவிட்டதாக குடுகுடுப்பை ஆட்டினார். இப்போது கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார். சந்தையில் எந்தச் சரக்குமே சரியில்லை என்று குற்றம் சாட்டிவிட்டு தன் கைவசமுள்ள சரக்கை கடைவிரிக்கும் வியாபாரியின் மலினமான உத்தி எழுத்தாளர்களிடமும் இருக்கிறது. ஆனால் சமயவேல் நாவல் எதுவும் எழுதிகொண்டிருப்பதாக தகவல் இல்லை. எனவே தமிழ் நாவல்கள் மொக்கையாக உள்ளன என்ற அவரது குற்றச்சாட்டை பொருட்படுத்த வேண்டியிருக்கிறது. ‘கிரியேட்டிவிட்டி கூடக்கூட பக்கம் குறையும். படைப்பூக்கத்தின் வறுமைதான் பக்கங்கள் அதிகரிப்பதன் காரணம்என்ற வரிகள் இன்றைய தலையணை நாவல்களின் மீதான கூரிய விமர்சனம்தான். இன்றையச் சூழலில் பெரும்படைப்பை எதிர்பார்க்க முடியாது என்றும் சூழலை மாற்றுவதற்காக சொந்த வாழ்வை பணயம் வைக்க யாரும் தயாரில்லை என்றும் அவர் சொல்லியிருப்பவை பொறுப்புணர்வோடு விவாதிப்பதற்கான புள்ளிகள்.

...ஜெயபாலன், எழுத்தாளர் ரவி, கல்வியாளர் அனந்த கிருஷ்ணன்மணவை முஸ்தபா, தமிழிசைத் தொண்டர் சுவாமிநாதன் ஆகியோரது நேர்க்காணல்களிலிருந்தும் நாம் அறிவதற்கும் விவாதிப்பதற்குமான பெற்றுக்கொடுத்திருக்கிறார் அப்பணசாமி.

***
பேட்டியளிப்பவர் பதிலளித்துக்கொண்டிருக்கும்போது அவரது ஒவ்வொரு சொல்லையும் பின்தொடரும் விழிப்பு மனநிலையோடிருக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால் பேச்சின் போக்கில் பிறழ்ந்து வந்து விழுந்துவிடுகிற ஒரு சில சொற்களேகூட அந்த மொத்தப்பேட்டியின் சாரத்தையும் நம்பகத்தன்மையையும் குலைத்துவிடுவதற்குப் போதுமானதாய் அமைந்துவிடும் ஆபத்து இருக்கிறது. அவர் பேசியிருக்கின்ற அவ்வளவு உண்மைகளையும் அந்தச் சில சொற்களைப் பிடித்துக்கொண்டு நிராகரித்துவிடுவதற்கான எத்தனிப்பு அவருக்கு மாற்றுக்கருத்துக் கொண்டோரால் மேற்கொள்ளப்படும். பல்வேறு விசயங்களை தொகுத்துப் பேசும்போது கவனத்திற்கு தப்பிப்போகிற அப்படியான சொற்கள் பேட்டியளிப்பவரின் அரசியல் நிலைப்பாடுகளை மட்டுமல்லாமல் பேட்டியெடுப்பவரின் அரசியல் நிலைப்பாட்டையும் சந்தேகத்திற்குரியதாய் மாற்றிவிடும் கெடுவாய்ப்பையும் உள்ளடக்கியிருக்கிறது. இப்படியான இக்கட்டில் நானொருமுறை சிக்கியிருக்கிறேன். புலம்பெயர் ஈழத்தமிழர் நண்பர் நடராசா சுசீந்திரனிடம் புதுவிசை இதழுக்காக நேர்காணல் நடத்தியதில் கிட்டிய படிப்பினையிலிருந்தே இதைச் சொல்கிறேன். முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு இரண்டுமாதங்களுக்கு முன்பாக நடந்தது அது. ஈழப்போராட்டத்தில் நடந்த அட்டூழியங்கள் என இன்று .நா.நிபுணர் குழு அறிக்கை எதையெல்லாம் பட்டியலிடுகிறதோ அதையெல்லாம் அப்போதே சுசீந்திரன் முன்வைத்தார். அரச பயங்கர வாதமும்  சிங்களப் பெரும்பான்மைவாதமும் தமிழர்களை படுகொலை செய்கிறதென்றால் விடுதலைப்புலிகளோ அப்பாவி மக்களை மனிதக்கேடயங்களாக பிடித்து வைத்து சாகக்கொடுக்கின்றனர் என்றும் இந்த நிகழ்ச்சிப்போக்கானது ஒரு பெரும் அழிவுக்கு இட்டுச் செல்லும் என்ற உண்மையையும் அவர் சற்றும் தயக்கமின்றி சொல்லி எச்சரித்திருந்தார். முன்முடிவுகளற்று சற்றே நிதானமாக வாசிக்கும் ஒருவர் சுசீந்திரன் மிகுந்த பொறுப்புணர்வோடும் தமிழ்மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அக்கறையோடும் பேசியுள்ளார் என்பதை கண்டுணரமுடியும்.

இலங்கை ஆளும் வர்க்கம் தன்னை எதிர்த்து யார் போராடினாலும் அவர்களை கொன்றொழிக்கும் தன்மை கொண்டது. அது தனது சொந்த இனத்தையும்கூட விட்டுவைக்கத் தயாரில்லை. அதனால் தான் ஜேபிவி கிளர்ச்சியில் 60 ஆயிரம் சிங்கள இளைஞர்களையே அது கொன்று தீர்த்தது. அன்று போராடிய சிங்களவர்களைக் கொன்றது, இன்று போராடுகிற தமிழர்களையும் கொல்கிறது. தனது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கிற தமிழர்களை கொல்லாமல் விட்டுவைத்திருக்கும் அரசு, வன்னிப்பகுதியில் மட்டும் என் கொல்கிறதென்றால் அங்கு புலிகள் மக்களை தடுத்துவைத்து அவர்களை சண்டையில் பலிகொடுக்கிறார்கள் என்பதும் ஆகவே அங்கு நடப்பதை இனப் படுகொலையாக கருத முடியாது என்பதுமாக இருந்தது அவர் கருத்து. இந்த ஒப்பீடுகளையெல்லாம் வைத்துக்கொண்டு அங்கு நடப்பது இனப்படுகொலை அல்ல என்று சொல்லிவிட முடியுமா என்ற கேள்வியை இவ்விடத்தில் நான் எழுப்பியிருக்க வேண்டும். அல்லது அவரது இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்பதையாவது தெரிவித்திருக்க வேண்டும். இரண்டுமே நடக்கவில்லை என்பதை நண்பர் ஷோபா சக்திதான் இடித்துரைத்தார். அடடா இப்படியும் பிழைபடுவோமா என்று பதறிப்போனேன். இதிலிருந்து பெற்றுக்கொண்ட படிப்பினைகளுடன் ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்ளும்போது பேட்டி எடுக்கிறவர் என்ற முறையில் கேள்வியைக் கேட்டுவிட்டு பதில் சொல்லிமுடிக்கும்வரை காத்துக் கிடப்பவராகவோ பதிலில் லயித்துக்கிடப்பவராகவோ அப்பணசாமி தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை. பொருத்தமான பதிலைப் பெறுவதற்காக தேவைப்படும் இடங்களில் இடைமறிக்கத் தயங்காதவராயும் இருந்திருக்கிறார். உரையாடலின் போக்கில் வந்து விழுகிறச் செய்திகளுக்கு விளக்கங்களோ ஆதாரங்களோ தேவைப்படுமாயின் அவற்றை வலியுறுத்திப் பெறுவதும்கூட தனது பொறுப்புதான் என்பதை உணர்ந்து இடைமறித்திருக்கிறார். அவ்வாறு கவனிக்கத் தவறுகிற விசயங்கள் தேவையற்ற குழப்பத்தை உருவாக்கி - அதையே ஒரு காரணமாக முன்வைத்து அப்பேட்டியின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்பதும்கூட அவரது கவனத்தில் இருந்திருப்பதை இந்த இடைமறிப்புகளே நமக்கு தெரியத்தருகின்றன. அதேவேளையில் இந்த இடைமறிப்பானது கேள்வி கேட்பவர் அல்லது பத்திரிகையாளர் என்ற அதிகாரத்திலிருந்தல்லாமல் சரியான கருத்தைப் பெறவேண்டும் என்ற அக்கறை சார்ந்ததாய் இருப்பதை வெகு இயல்பாக உணர்த்துகிறார். நீங்களும் உணர்வீர்கள்.

அன்புடன்
ஆதவன் தீட்சண்யா
08.08.2011, ஒசூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக