மோனா லிசா 2.0 - ஆதவன் தீட்சண்யாவியமாய் இருக்கப்போய்
புன்னகைத்துக்கொண்டேயிருக்க முடிந்த இந்த மோனாலிசா
சலித்துப்போய்
ஒருநாள் சட்டகத்தை விட்டிறங்கி
அதேபாங்கில் நகர்வலம் தொடங்கினாள்
பதறிப்போன லியார்னோடோ டா வின்சி
தங்கமுலாம் பூசிய சட்டகத்தை தூக்கிக்கொண்டு
பின்னாலேயே ஓடிக்கொண்டிருந்தார்
அவளானால்
பொம்மை வாங்க ஓடும் குழந்தையைப்போல
திரும்பிப்பார்க்காமல் நடையைக்கூட்டினாள்

அவளது புன்னகையை
வேறெந்த வகையினாலும் கடக்க முடியாத மாந்தர்கள்
தாமும் இதழ்க்கடையில் குறுநகையவிழ்க்க
நகரெங்கும் வளர்ந்தொளிரும் தன்முகம் கண்டு
அடுத்தடுத்த நகரங்களிலும்
புன்னகை ஏற்றப்போவதாய் அறிவித்துச்சென்ற மோனா லிசா
இரவாகியும் சட்டகத்திற்குத் திரும்பவில்லையென
ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்த டா வின்சி
பின்வரும் சந்தேகங்களை எழுப்புகிறார்:

1.ரோந்துப்பணியில் இருந்த
காவலர்கள் / ராணுவத்தினர் / போக்கிலிகள்
தூக்கிச் சென்றிருக்கக்கூடும்

2. தரகர்கள் யாரேனும் கடத்திப்போய்
 பாலியற்சந்தை/ பழம்பொருள் அங்காடியில்
கொழுத்த விலைக்கு கைமாற்றியிருக்க வேண்டும்

3. இவ்ளோ லட்சணமான பொண்ணுக்கு
எப்பவும் இளிச்சினேக்கீற வியாதியாமே என்ற பகடிக்கு அஞ்சி
அவளே அழுமூஞ்சியோடு ஆள்மாறாட்டத்தில் சுற்றித்திரியலாம்

4.எதற்காகவேனும் எல்லோரும் அழுதுகொண்டிருக்க வேண்டிய நாட்டில்
இவளுக்கு மட்டும் எதற்கு சிரித்தமுகமென எரிச்சலடைந்தவர்கள்
ஆசிட் வீசி அவள் முகத்தை சிதைத்திருக்கலாம் அல்லது
தூக்கிப்போய் எங்காவது பாழறையில் சிறைவைத்திருக்கலாம்

வழக்கு விசாரணை 2016 மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது.

நன்றி: தீராநதி, ஜனவரி 2012

1 கருத்து:

 1. //எதற்காகவேனும் எல்லோரும் அழுதுகொண்டிருக்க வேண்டிய நாட்டில்
  இவளுக்கு மட்டும் எதற்கு சிரித்தமுகமென எரிச்சலடைந்தவர்கள்
  ஆசிட் வீசி அவள் முகத்தை சிதைத்திருக்கலாம் அல்லது
  தூக்கிப்போய் எங்காவது பாழறையில் சிறைவைத்திருக்கலாம்//

  இந்த வரிகள் சூப்பர்.

  பதிலளிநீக்கு