வெள்ளி, பிப்ரவரி 17

கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது - ஆதவன் தீட்சண்யா

யற்கையின் ஒரு பகுதியாகவே உருவாகி வளர்ந்துவந்த மனித இனத்திற்கு, புதிய இடத்திற்குள் விடப்பட்ட குழந்தையைப்போல எதையும் மலங்கமலங்க பார்த்துக்கொண்டிருக்கவோ பயத்தோடும் பரவசத்தோடும் தொட்டுணரவோ தேவையெதுவும் ஏற்படவில்லை. அதற்கான அவகாசமும் இல்லை. தன்னை வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளவும் தான் வேட்டையாட வேண்டிய விலங்குகளை எளிதில் வீழ்த்தவுமான பயிற்சியை அவர்கள் உயிர்வாழும் முனைப்பிலிருந்தே பெற்றார்கள்.  அந்த விலங்கின் உடலிலிருந்து உண்ணத்தகுந்த பகுதிகளை கண்டறியவும், எஞ்சிய எலும்பையும் நரம்பையும் தோலையும் ரோமங்களையும் கொம்புகளையும்   வேறுவகையான பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்குமான பயிற்சியை அவர்கள் தமது வாழ்க்கையினூடே பெற்றார்கள். பூமி முழுதும் மண்டிப் படர்ந்திருக்கும் கோடானகோடி தாவரங்களிலிருந்து உண்ணத்தகுந்த காய்கனிகளையும் கிழங்குகளையும் கொடிகளையும் தழைகளையும் தானியங்களையும் கண்டறிந்ததும்கூட இவ்வாறேதான். பூமிக்கடியிலிருக்கும் தங்கத்தையும் வைரத்தையும் ஆழ்கடலின் முத்தையும் சங்கையும் அவர்கள் தமது இயல்பான அறிவிலிருந்தே பெற்றார்கள். உலர்த்தப்பட்ட விலங்குத்தோல்களையும் இலைதழைகளையும் உடையாக்கிக் கொண்டதும், பருத்தியைக் கண்டறிந்ததும் அதிலிருந்து பஞ்செடுத்து நூலாக்கி நூலை துணியாக்கியதும் வண்ணங்கள் சேர்த்ததும் ஒருநாளின் அடுத்தடுத்த செயல்களல்ல. உழைப்பில் ஈடுபட்ட மனிதமூளையின் இடையறாத செயல்பாடு அதை சாத்தியப்படுத்தியது. மரப்பொந்துகளையும் குகைகளையும் தமது வாழிடங்களாக தேர்ந்துகொண்டமையும்கூட பிற விலங்குகளிடமிருந்தும் தட்பவெப்பநிலை மாறுபாடுகளிலிருந்தும் தற்காத்துக் கொள்ளும் சுயஉந்துதலிலிருந்துதான். கூட்டுவாழ்க்கையிலிருந்தே அவர்கள் மொழியையும் லிபியையும் உருவாக்கிக்கொண்டார்கள். இயற்கை உற்பாவங்களால் ஏற்படும் அழிவுகளையும் தன்னிலும் வலியவற்றையும் கண்டு அச்சம் கொண்ட மனித இனம், அவற்றை ஆற்றுப்படுத்திட சில சடங்குகளையும் சடங்குகளின்போது உச்சரிக்கும் மந்திரங்களையும் உருவாக்கிக்கொண்டது. அதுபோலவே இயற்கையின் கொடையினைக் கொண்டாடவும்  அத்தகைய சடங்குகளையும் மந்திரங்களையும் உருவாக்கிக்கொண்டது.

அன்றாட வாழ்க்கையோட்டங்களுக்கு ஊடாகவே, தனக்கும் முன்பாகவே இருக்கிற இந்தப் பிரபஞ்சமும், கோடானகோடி உயிர்களும், இதர உயிரற்றப் பொருட்களும் எவ்வாறு உருவாயின, அவை எவ்வாறு இயங்குகின்றன, இயக்கும் விதிகள் எவை என்று விளங்கிக்கொள்வதற்கான எத்தனிப்பிலும் மனிதகுலம் ஈடுபட்டிருக்கிறது. இயற்கையின் விதிகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தன்னைப் பொருத்திக்கொள்வது, வாழ்வியல் தேவைகளை இயற்கையிலிருந்து பெறுவது, இயற்கை ஆதாரங்களைக்கொண்டு தனக்கான தேவைகளை உற்பத்தி செய்து கொள்வது, அவற்றை பகிர்ந்துகொள்வது என்று மனிதகுலத்திடம் இயல்பாக உருவாகி வளர்ந்திருந்த ஆதிக்கண்ணோட்டமே பகுத்தறிவு எனப்படுகிறது. இயற்கை என்பது ஏற்கனவே இருக்கிறது- அது தனக்கேயுரிய விதிகளால் இயங்குகிறது- மாறுகிறது என்கிற அதன் புரிதல் இன்றளவும் பொருத்தமுடையதாகவே இருக்கிறது. கருப்பாய் இருக்கிற மாடு பச்சையாய் இருக்கிற புல்லைத் தின்று வெள்ளையாய் இருக்கிற பாலையும் இளமஞ்சள் நிறத்தில் மூத்திரத்தையும் கரும்பச்சை நிறத்தில் சாணியையும் தருவதைப் போலவே ஒவ்வொன்றும் தன்னியல்பில் இயங்குவதாக அவர்கள் புரிந்துகொண்டிருந்தார்கள். இந்த மாற்றங்களை இயல்பானதாக விளங்கிக்கொள்ளாமல் இவற்றையெல்லாம் யாரோ முன்கூட்டியே திட்டமிட்டு இயக்குவதாகவும் மாற்றுவதாகவும் நம்பத் தொடங்கியவர்களிடமிருந்துதான் கடவுளும் படைப்புக்கோட்பாடும் உருவாகின. இதுயிது இப்பிடியிப்படியாக இருக்க வேண்டும் என்ற கடவுளின் கருத்திலிருந்தே உலகம் உருவானது என்று நம்புகிற ‘(கடவுளின்) கருத்து முதல்வாதம்’ காலத்தால் வெகுவாகப் பிந்தியது. உழைப்பானது உடல் உழைப்பு- மூளையுழைப்பு என்ற பிரிவினையை எட்டிய காலக்கட்டத்தில்தான் இந்த கருத்துமுதல்வாதம் பிறந்தது என்பார் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா.

ஆகவே, வழமையாக சொல்லப்பட்டு வருவதைப்போல- கடவுள் கோட்பாட்டுக்கு எதிராக பகுத்தறிவு உருவாகவில்லை. மாறாக, கடவுள் கோட்பாடுதான் மனிதகுலத்திடம் இயல்பாக வளர்ந்திருந்த பகுத்தறிவுக்கு எதிராக உருவாக்கப்பட்டது.

எல்லாவற்றையும் காரணகாரியங்களுடன் விளங்கிக்கொள்ள முயற்சிக்கும் பகுத்தறிவு உலகத்தை யார் படைத்தது என்கிற விசயத்தை பொறுத்தமட்டில், அதை யாரும் படைக்கவில்லை, அது ஏற்கனவே இருந்தது, தொடர்ந்து இயங்கிக்கொண்டும் மாறிக்கொண்டும் இருக்கிறது என்று தெளிவுபடுத்தியது. கடவுள் என்பவர்தான் உலகத்தைப் படைத்தாரெனில், அவர் யார், எங்கிருக்கிறார், எங்கிருந்து இந்த உலகத்தைப் படைத்தார், இவ்வளவு பெரிய உலகத்தை படைத்து வைப்பதற்கு முன்பாக இந்த பரந்த இடம் என்னவாக இருந்தது, அப்படியானால் இந்த இடத்தை யார் படைத்தது, இத்தனை கோடி உயிர்களும் பொருள்களும் நிரம்பிய இவ்வுலகத்தை இடையறாது கண்காணித்து இயக்குவது சாத்தியமா, அவர்தான் இயக்குகிறார் என்றால் ஒழுங்காக இயக்க லேண்டியதுதானே  என்பதான கேள்விகளை எழுப்பி அது படைப்புக் கோட்பாட்டை நிராகரித்தது.

படைப்புக் கோட்பாட்டை நம்புகிறவர்களுக்கு ஆதாரம் எதுவும் தேவைப்படவில்லை. கடவுள்தான் சகலத்தையும் படைத்தார் என்று நம்புவதுதான் ஆதாரமேயன்றி, நம்பிக்கைக்கு ஆதாரம் என்பதே தேவைப்படவில்லை, எனவே கடவுளின் இருப்பை நிரூபிக்கவும் அவர்கள் முயற்சிக்கவில்லை. ஆகவே கடவுள் நம்பிக்கையும் மூடநம்பிக்கையும் வெவ்வேறானவையல்ல. தங்களது நம்பிக்கையை நியாயப்படுத்திக்கொள்ள ‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’, ‘உருவமற்றவர்- அருவமானவர்’, ‘பஞ்சபூதங்களாய் இருப்பவர்’, தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்’ ‘எல்லாவற்றுக்கும் மேலே இருக்கிற சக்தி’, ‘அந்த சக்தியை சிலர் இயற்கை என்கிறார்கள்- நாங்கள் கடவுள் என்கிறோம்’ என்றெல்லாம்  வினோத விளக்கங்களைச் சொல்லிக்கொண்டார்கள். உலகின் இத்தனை உயிர்களையும் பொருட்களையும் உருவாக்குவது இயக்குவது அழிப்பது ஆகிய தொடர் வேலைகளைச் செய்வதிலுள்ள கடவுளின் சிரமங்களை பரிவுடன் புரிந்துகொண்டு துறைவாரியாகவும் குணவாரியாகவும் கடவுள்களை உருவாக்கினர். ஒரு செல் உயிரியான அமீபாவைக்கூட உருவாக்கமுடியாத மனிதர்கள் சர்வ வல்லமை பொருந்திய கோடிக்கணக்கான கடவுள்களை இவ்வாறாகத்தான் உருவாக்கினர். ஆனால் கடவுள் தனியாக வரவில்லை. பேய், பிசாசு, பூதம், சாத்தான், புரோகிதர்கள், மாந்திரீகர்கள் என்ற பெரும்படையுடன் வந்து சேர்ந்தார். 

மரணத்திற்குப் பிறகு உயிர் எங்கே செல்கிறது அல்லது என்னவாகிறது என்பது போன்ற நடப்புலக வாழ்வுக்கு அவசியமற்ற கேள்விகள் இம்மை மறுமை என்கிற முடிவுக்கு இட்டுச்சென்றது. மரணத்துக்குப்பின்னான சுகவாழ்வுக்காக மரணத்துக்கு முன்னான இகவாழ்வை எப்படி நடத்துவது என்கிற ஒழுங்குகளைச் சொல்வதற்கும் கண்காணிக்கவும் தண்டிக்கவும் மதங்கள் உருவாயின. ஏற்கனவே மக்களிடத்தில் உருப்பெற்றிருந்த சடங்குகள், மந்திரங்கள், மூதாதை வழிபாடு ஆகியவை கடவுளை நோக்கி திருப்பப்பட்டு மதங்களால் உட்செரிக்கப்பட்டன. இல்லாத கடவுளை இருப்பதாக பாவித்துக்கொண்டு அவரை அடைவதற்கான வாதப்பிரதிவாதங்களில் பல்வேறு மார்க்கங்கள்  உருவாகின.

எல்லாவற்றையும் கடவுளே தீர்மானிக்கிறார் என்கிற கண்ணோட்டம், சமூகத்தின் வளர்ச்சிநிலையில் உருவாகி வந்த ஆதிக்கச்சக்திகளுக்கே பெரிதும் உதவியாக இருந்தது. அவர்களது நிலை கடவுளால் அங்கீகரிக்கப்பட்டதாய் இருக்கும்போது அதை மனிதர்கள் மாற்ற நினைப்பதோ முயற்சிப்பதோ கடவுள் நிந்தனையாக முன்வைக்கப்பட்டது. எனவே ஆதிக்கச்சக்திகள் கடவுளை, மதத்தை, புரோகிதத்தை பரவலாக்கினர். பகுத்தறிவின் வளர்ச்சிக்கு பெரும் தடையை ஏற்படுத்த அவர்களுக்கு கடவுள் உதவியாக இருந்தார். பின்னாளில் அரசுகள் உருவாகி வலுப்பெற்ற போது கடவுளும் மதமும் மக்களையொடுக்கும் ஆயதங்களாக ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்டதை வரலாற்றின் நெடுக காண்கிறோம்.  ஆனாலும் தடைகளையும் தண்டனைகளையும் மீறி உலகை அறிவியல்பூர்வமாக விளங்கிக்கொள்வதற்கும் விளங்கவைப்பதற்குமான முயற்சிகள் தொடர்ந்தன. தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிற உண்மைகளும், கருவிகளும் தொழில் நுட்பங்களும் நிலப்பரப்புகளும் பாதைகளும் பகுத்தறிவின் பங்காக மனிதகுலத்தை முன்னேற்றிக் கொண்டே இருக்கிறது.  கடவுளின் திருவிளையாடலாக, பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட சோதனையாக கற்பிதம் செய்யப்பட்ட கனவு, மரணம், உடலுக்கும் உயிருக்குமுள்ள தொடர்பு, பேரழிவுகள் ஆகியவை குறித்தும் ஏற்கத்தக்க விளக்கங்களை கூறுமளவுக்கு பகுத்தறிவு வலு கொண்டுள்ளது.

2.

இந்தியா என்றதும் இது ஏதோ ஆன்மீக பூமி என்கிற மாதிரியான சித்திரமெல்லாம் பிற்காலத்தில் இட்டுக்கட்டி உருவாக்கப்பட்டதுதான். உலகத்தின் பிறபகுதிகளுக்குப்போலவே இங்கும் கடவுள் மிகமிக தாமதமாகத்தான் வந்திருக்கிறார். உலகைப்போலவே மனித உடலும் பஞ்சபூதங்களால் ஆனது என்பதே உலகைப்பற்றிய தொடக்கநிலைப் பார்வையாக இங்கு இருந்துள்ளது. இங்கிருந்த புராதனச்சடங்குகள் யாவும் இதை உறுதி செய்கின்றன. லோகாயுதம் - உலகாயுதம் என்பதே உலகு குறித்த கண்ணோட்டமாக இருந்திருக்கிறது. இந்தியப் பரப்பின் இந்த பகுத்தறிவு மரபை பின்னுக்குத்தள்ளியதில் வேதங்களுக்கு மூர்க்கமான பங்குண்டு. வேதபாராயணத்துடன் கூடிய யாகங்களின் மூலமாக கடவுளிடமிருந்து வேண்டியதைப் பெறலாம் என்கிற ஆரியர்களின் வழிபாட்டு முறைக்குள் ஆயுளை நீட்டித்துக்கொள்வதற்கும் ஆளுகைப்பரப்பை விரிவுபடுத்துவதற்கும் ஆர்வம் கொண்டிருந்த ஆட்சியாளர்கள் இடறிவிழுந்தததில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. தீட்டு, தோஷம், பாவம், புண்ணியம், பரிகாரம், நிவர்த்தி என்று சமூகம் வேதமரபினரின் கருத்தியல் ஆதிக்கத்திற்குள் வீழ்த்தப்பட்டது. வேதத்தின் முதன்மையை ஏற்க மறுத்தவர்கள் விலக்கிவைக்கப்பட்டனர். வர்ணப் பகுப்பும் பின்பு சாதிப்பாகுபாடும் அந்த ஏற்றத்தாழ்வை செயல்படுத்தக்கூடிய சட்டத்தொகுப்புகளும் மீறுவோரை ஒடுக்கும் கடுமையான தண்டனை முறைகளும் நடைமுறைக்கு வந்தன. கடவுளைப்போலவே வேதங்களும் அநாதிக் காலந்தொட்டு என்றென்றைக்குமாக இருந்து வருபவை- ஆகவே அவை புனிதமானவை- கடவுளின் வாக்கியங்கள் என்பதான கட்டுக்கதைகள் வேதங்களை ஓதும் புரோகிதக்கூட்டத்தை செல்வாக்குப் பொருந்திய பகுதியினராக்கியது. அந்த செல்வாக்கு  ஆட்சியாளர்களை கட்டுப்படுத்துவதாயும், அவர்களிடமிருந்து கொழுத்த ஆதாயங்களைப் பெற்று பொருளாதாரரீதியில் வலுவடைவதற்கு வழிவகுப்பதாயும் இருந்தது. எனவே இந்த வேதமரபினர் இந்திய மண்ணில் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தை துடைத்தழிப்பதில் குறியாயிருந்தனர். ஆனாலும் வேதப்புளுகுகளுக்கு எதிராக அவேதிக அடிப்படையிலான சார்வாகம் சாங்கியம் போன்ற உலகியல் கண்ணோட்டங்கள் அனேகம் தோன்றின. அவையும் திரிபுபடுத்தப்பட்டு வேதக்கண்ணோட்டத்தால் உள்வாங்கப்பட்டன.  இவையெல்லாம் இன்று இந்து மதத்தின் தத்துவ தரிசனங்கள் என்று முன்னிறுத்தப்படும் மோசடி நடந்துகொண்டிருக்கிறது. பவுத்தத்திற்குள் மகாயானம், ஹீனயானம் என்று பிரிவினை உருவானதற்கும் சமணத்தில் மறுமைக்கோட்பாடு நுழைக்கப்பட்டமைக்கும்  பின்னே அவ்விரண்டுக்குள்ளும் ஊடுருவிய பார்ப்பனர்களே காரணம் என்றொரு குற்றச்சாட்டு இருக்கிறது. அதற்கப்புறமும் தின்று செரிக்க முடியாததாய் பௌத்தமும் சமணமும் விளங்கியதால்தான் தலைக்கு விலை வைத்து அழிக்கப்பட்டன.

மக்களது வாழ்வை மேம்படுத்துவதற்கும் மேல்நோக்கிய வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதற்குமாக இந்தியச்சமூகம் கைக்கொண்டிருந்த பகுத்தறிவு ஆரியர் வந்தேறிய பிறகு அவர்களது வேதமரபை முறியடிப்பதற்கான போராட்டத்தையே முதன்மையாக நடத்த வேண்டி வந்தது. வேதமறுப்பே நாத்திகம் என்ற சொல்லால் அடையாளப்படுத்தப்பட்டதை நீலகேசியிலிருந்து எடுத்துக்காட்டுவார் பேராசிரியர் அருணன்.

தனது பகுத்தறிவுப் பாரம்பர்யத்தை தக்கவைத்துக் கொள்வதற்கும் வேதக்கருத்தியல்களை முறியடிக்கவும் தமிழ்ச்சமூகம் தொடர்ச்சியாக நடத்திவந்த போராட்டத்தின் ஒருபுள்ளியில்தான் களப்பிரர் ஆட்சி வந்தது. (களப்பிரர் ஆட்சியினால் அதிகாரத்தையும் முற்றுரிமைகளையும் இழந்த பார்ப்பனர்களிலிருந்து பிற்காலத்தில் உருவாகிவந்த வரலாற்றாசிரியர்கள் களப்பிரர் காலத்தை (தங்களுக்கு) இருண்டகாலம் என்று கூறினர். அதிலிருக்கும் வன்மத்தை புரிந்துகொள்ளாத பிறரும் இருண்டகாலம் என்கிற கருத்தாக்கத்தையே வாந்தியெடுத்தனர்). வேதத்தை மறுத்து இந்தியப் பரப்பில் உருவான வாழ்வியல் கண்ணோட்டங்கள் பலவும் இங்கும் பரவியிருந்ததற்கு பழந்தமிழ் இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. இந்த நெடிய பகுத்தறிவு மரபு பிரிட்டிசார் காலத்திலும் தொடர்ந்தது என்பதை சென்னை சுயாக்கியானிகள் சங்கத்தின் வரலாறு நமக்கு தெரிவிக்கிறது. 1870களில் ‘உபயோகமான அறிவைப் பரவச் செய்யும்’ நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட இச்சங்கத்தின் அங்கத்தினர்கள் சுதந்திரச் சிந்தனையாளர்கள், தேவாலய எதிர்ப்பாளர்கள், நாத்திகர்கள் என்று மேலைநாடுகளில் செயல்பட்டவர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டிருந்தனர். தத்துவ விசாரிணி,   ‘Philosophic Inquirer’ போன்ற பத்திரிகைகளை நடத்தியுள்ளனர். இங்கிலாந்திலிருந்து பகுத்தறிவு சார்ந்த நூல்களை  தருவித்து இங்கு வினியோகித்துள்ளனர். ( பார்க்க- சென்னை இலௌகீக சங்கம்- வீ.அரசு).

வேதமரபுக்கு எதிராகத்தான் இங்கு பண்டிதர் அயோத்திதாசர் பூர்வ பௌத்தம்/ தமிழ் பௌத்தம்  என்பதை முன்வைத்தார். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் சமத்துவத்திற்காகவுமான அவரது போராட்டம், இந்துமதத்திற்கு எதிரானதாகவும், கடவுளுக்கு எதிரானதாகவும், சமஸ்கிருதத்திற்கு எதிரானதாகவும் விரிவுகொள்ளும் வகையில் அமைந்தது. ஆரியர் என்பதிலிருந்து தனித்துக்காட்டும் முனைப்பிலிருந்தே அவர் தமிழர்களை திராவிடர்களாக முன்னிறுத்தினார். இந்தப் பாரம்பரியத்திலிருந்துதான் ஈ.வெ.ரா. பெரியார் உருவாகி வருகிறார்.  இந்தப் பாரம்பரியத்தை அறிகிறவர்கள் பகுத்தறிவு என்றதும் பெரியாரைக் கொண்டு வந்து ஒரு திரைபோல நிறுத்திவிடும் மூடத்தனத்தை செய்வதில்லை. இந்திய/ தமிழ்ச்சமூகத்தில் நிலவிவந்த நெடிய பகுத்தறிவு மரபின் தொடர்ச்சியில் பெரியார் தன்காலத்து பிரதிநிதியாக இருந்து செயல்பட்டிருக்கிறார் என்பதை அறிந்தவர்கள் பெரியாரை பகுத்தறிவின் தொடக்கமாகவோ முடிவாகவோ அறிவிப்பதில்லை.

தமிழகத்தில் பகுத்தறிவைப் பரப்ப பெரியார் நடத்தியப் போராட்டத்தில் தோழர் சிங்காரவேலர், ஜீவா ஆகியோரின் பங்கும் இணைந்தேயிருக்கிறது. குடியரசு இதழில் வாசகர் கேள்விகளுக்கு சிங்காரவேலர் அளித்த பதில்கள் பின்னாளில் சுயமரியாதை பிரசுர நிறுவனத்தால் ‘கடவுளும் பிரபஞ்சமும்’ , ‘விஞ்ஞான அணுகுமுறையும் மூடநம்பிக்கையும் ( 2 தொகுதிகள்) என்ற தலைப்புகளுடன் வெளியிடப்பட்டது. அவை கடவுள்மையவாதத்தை கடுமையாக மறுத்து அறிவியல் மனப்பான்மை பரவவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தின. பகத்சிங்கின் ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ என்ற பிரசுரத்தை ஜீவா மொழிபெயர்ப்பில் இந்நிறுவனம் வெளியிட்டதும் இதே நோக்கத்தின்படிதான் என்பதையும் இங்கு நினைவுகூரலாம்.

ஆனால் இவையெல்லாம் பழம்பெருமைகளாகிவிட்டதோ என்று ஐயுறும் வகையில் சமகால தமிழ்ச்சமுதாயம் விளங்குகிறது. வாழ்க்கைவட்டச் சடங்குகள் பலவற்றிலும் இன்றைக்கு வேதமரபுகள் கடைபிடிக்கப்படுவதை பெருமையாக கருதும் ஒரு போக்கு பரவி வருகிறது. ஜோதிடம், வாஸ்து, பரிகாரப்பூசைகள், யாகங்கள் நடத்துவது அதிகரித்து வருகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளினால் உருவாகும் நவீனச்சாதனங்களை பயன்படுத்துகிறவர்களாக இருக்கும் அதேவேளையில் அறிவியல்ரீதியிலான சிந்தனையற்றவர்களாக  தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் கவலையோடு பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. கடவுளின் அவதாரங்கள் என ஏமாற்றுப்பேர்வழிகள் உருவாகி வளர்வதற்கு உகந்த நிலமாக தமிழர்களின் மனங்கள் சீரழியும் நிலையை எப்படி தடுக்கப்போகிறோம்? உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளினால் ஏற்பட்டுள்ள மன அழுத்தங்கள், பொருளாதார நெருக்கடிகள் ஆகியவற்றினால் மக்களிடையே உருவாகி வரும் கொந்தளிப்புகளை மட்டுப்படுத்தவும் மழுங்கடிக்கவும் கார்ப்பரேட் குருஜிகள் ‘அவதரித்து’ வழங்கிவரும் அருளுரைகள் தமிழ்ச்சமூகத்தை சொரணையற்றதாக மாற்றிவருகிறது. வாழும் கலை/ பேழும் கலை என்று இவர்கள் நடத்திவருவதெல்லாம் உலகத்தில் என்ன கொடுமைகள் உன்னைச்சுற்றி நடந்தாலும் கண்ணையும் காதையும் பொத்திக்கொண்டு பிழைத்திருப்பது பற்றியதாகவே இருக்கிறது. யோகா, தியானம் என்பவையும்கூட இந்த மோசடிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. தன்னையறிதல், தனக்குள்ளே புதையுண்டிருக்கும் ஆற்றல்களை தோண்டியெடுத்தல்(?), உலகத்தை மாயை என்று உணர்தல் - இப்படியாக கடவுளற்ற ஆன்மீகம் ஒன்றை முன்னிறுத்தி மனிதர்களை செயலற்றவர்களாக மாற்றுவதும் பகுத்தறிவுக்கு எதிரானதுதான் என்பதை அம்பலப்படுத்த வேண்டியுள்ளது. இப்படியான மூடத்தனங்களுக்கும் மோசடிகளுக்கும் இன்றைய அதிநவீன ஊடகங்கள் வழியே பரப்பப்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற பகுத்தறிவு மாநாடுகள் நமது பொறுப்பை உணர்த்துகின்றன. இறைமீது நம்பிக்கை வைப்பதை குடிமக்களின் முதன்மைக்கடமையாக வரையறுக்கும் அரசியல் சட்டத்தைக் கொண்டுள்ள மலேசியாவில், பகுத்தறிவு பற்றிய மாநாடு நடத்துகின்ற துணிவு பாராட்டுக்குரியது.

( 2012 சனவரி 27-29 வரை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற பன்னாட்டு பகுத்தறிவு மாநாட்டில் உரையாற்ற எடுத்த குறிப்புகளின் விரிவாக்கமாக இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது)

9 கருத்துகள்:

  1. //கடவுள் தனியாக வரவில்லை. பேய், பிசாசு, பூதம், சாத்தான், புரோகிதர்கள், மாந்திரீகர்கள் என்ற பெரும்படையுடன் வந்து சேர்ந்தார்.//

    Class

    பதிலளிநீக்கு
  2. //வாழும் கலை/ பேழும் கலை என்று இவர்கள் நடத்திவருவதெல்லாம் உலகத்தில் என்ன கொடுமைகள் உன்னைச்சுற்றி நடந்தாலும் கண்ணையும் காதையும் பொத்திக்கொண்டு பிழைத்திருப்பது பற்றியதாகவே இருக்கிறது//

    :)

    பதிலளிநீக்கு
  3. அட! நீங்களா!!!!! நம்ப முடியவில்லை!!!!!

    இந்த வாரம் முழுவதும் கவனமாக வாசிக்க வேண்டிய வாரம்!

    நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

    பதிலளிநீக்கு
  4. //உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளினால் ஏற்பட்டுள்ள மன அழுத்தங்கள், பொருளாதார நெருக்கடிகள் ஆகியவற்றினால் மக்களிடையே உருவாகி வரும் கொந்தளிப்புகளை மட்டுப்படுத்தவும் மழுங்கடிக்கவும் கார்ப்பரேட் குருஜிகள் ‘அவதரித்து’ வழங்கிவரும் அருளுரைகள் தமிழ்ச்சமூகத்தை சொரணையற்றதாக மாற்றிவருகிறது//.

    1917இல் வெற்றி கண்ட புரட்சி (ரஷ்யாவில்) புரட்சியில் ஈடுபடாத ஒரு தலைமை பெரிஸ்த்ரொய்கா, கிளாஸ்த்னாத் என்று உளரிக்கொட்டி 74 ஆண்டுகளுக்குப்பின் 1991இல் மகத்தான பொதுவுடைமையினின்றும் துண்டிக்கப்பட்டது;

    1977இல் மேற்கு வங்கத்தில் இடது முன்னணி அரசாங்கம் தேர்தலின் மூலம் பதவிக்கு வந்தது ஒரு 34 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக மாற்று வழியில் ஆட்சி செய்தபோது, முதன் முதலாக நிலப்பகிர்வு செய்ததை அறியாத அல்லது முக்கியத்துவம் கொடுக்காத இளம் தலை முறையினரால் ஜன நாயக முறையிலேயே மாற்றம் தந்தனர்.

    1991 தொடங்கி இருபது வருடங்களாக நடப்பில் இருக்கும் உலகமயமாக்கல்/தனியார்மயமாக்கல்/தாராள மயமாக்கல் மத்திய அரசின் ஆசியுடன் கார்ப்பரேட் நிறுவனங்களை சலுகையுடன் வளரச்செய்யும் போக்கும் கார்ப்பரேட் சாமியார்களை அதிகப்படுத்தும் போக்கும் நிலை நிறுத்தியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. இம்மாதிரி பதிவுகளை இணையத்தில் தேடி அலைபவன் நான்.
    மனதில் மகிழ்ச்சி நிரம்பி, புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது.
    தங்களுக்கு என் பாராட்டுகள்; வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. //உலகின் இத்தனை உயிர்களையும் பொருட்களையும் உருவாக்குவது இயக்குவது அழிப்பது ஆகிய தொடர் வேலைகளைச் செய்வதிலுள்ள கடவுளின் சிரமங்களை பரிவுடன் புரிந்துகொண்டு துறைவாரியாகவும் குணவாரியாகவும் கடவுள்களை உருவாக்கினர்//

    மிக அருமையான உதாரணம்..

    பதிலளிநீக்கு
  7. சிறப்பாக ஆராய்ந்து எழுதியுள்ள கட்டுரை.
    இனி எப்படிப்பட்ட சமுதாயமாக இங்கு அமைய வேண்டும் என்பதை எழுத வேண்டும்.
    எது எது ஒழிக்க பட வேண்டும், அதன் பின் சமுக நிலை எப்படி இருக்கும் என்பதை சிந்தித்து எழுதி வர சமுகம் அதனை அடைய வாய்ப்புள்ளது.
    எந்த கட்சி பின்னணியில் இருந்தாலும் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கும்.
    ஒட்டு கேட்காத கட்சியாக இருந்தால், மாற்றங்களை தயக்கமின்றி எழுத இயலும்.
    யாருடைய தவறுகளையும் சுட்டி காட்ட முடியும்.

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...