டாக்டர்.அனில் ககொட்கருக்கு சில கேள்விகள் - விவேக் மொன்டீரோ, தமிழில்: எஸ்.செந்தில்

விவேக் மொன்டீரோ:
1977 முதல் மகாராஷ்டிராவில் இந்திய தொழிற்சங்க மையத்தின் (CITU) முழுநேர ஊழியர். இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர். ஜைத்தாபூர் அணுமின் திட்டத்தை எதிர்த்துப் போராடிவரும் ‘கொங்கன் காப்போம் சங்கத்தின்’ செயற்பாட்டாளர். அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர். கருத்தியல் மற்றும் கணித இயற்பியலில் அமெரிக்க மாநில பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

அணுசக்திக்கழகத் தலைவர் அனில் ககொட்கருக்கு www.dianuke.org வழியே அவர் எழுப்பியுள்ள கேள்விகள், வலிந்து கண்டுபிடித்த காரணங்களையும் வியாக்கியானங்களையும் முன்வைத்து அணு உலைகளை ஆதரிக்கிற யாவரையும் நோக்கியவை. தாடிக்கொரு சீயக்காய் தலைக்கொரு சீயக்காய் என்பதைப் போலவே அணுஉலை விசயத்தில் ஊருக்கொரு நிலைபாட்டை மேற்கொள்வதும் அபத்தமானது என்பதை உணர்த்தும் இக்கேள்விகள் இன்னும் எவராலும் எதிர்கொள்ளப்படாதவை.

அணுசக்தி குறித்து அதிகம் கேட்கப்படாத கேள்விகளுக்கு
http://thecolloquium.net ல் திரு.மொன்டீரோ அளித்த பதில்கள் இங்கு இரண்டாம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

I
டாக்டர்.அனில் ககொட்கர் நீங்கள் ஒரு விஞ்ஞானி, நானோ மத்பனின் சாதாரண குடிமகன். நீங்கள் ஒரு விஞ்ஞானியாக இருப்பதால், ஜைத்தாபூர் அணுமின் திட்டம் பற்றிய என் கேள்விகளுக்கு பதில் தர தயாராக இருப்பீர்கள் என நம்புகிறேன். ஒவ்வொன்றாக கேட்கலாம் என்று இருக்கிறேன். முதலில் அணுக்கதிர்வீச்சு பற்றி சில கேள்விகள்.

1) இந்திய அணுமின் கழகம் சமீபத்தில் அணுக்கதிர்வீச்சு 'மனிதனின் நண்பன்' என்று ஒரு சிறு புத்தகத்தை வெளியிட்டது. அணுக்கதிர்வீச்சு நமக்கு ஆபத்தானது என்பது உண்மைதானே? அதிக கதிர்வீச்சு இன்னும் அதிக ஆபத்துதானே?. அணுக்கதிர்வீச்சு நமக்கு புற்றுநோயை உண்டு பண்ணும் என்பதும் உண்மைதானே?. அதிக கதிர்வீச்சு நிறையபேருக்கு புற்றுநோயை உண்டுபண்ணும் என்பதும் உண்மைதானே?. அணுக்கதிர் வீச்சு மார்பகம், மூளை, கணையம், இரத்தம், கல்லீரல் போன்றவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் என்பதும் உண்மைதானே?. தாயின் வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு முக்கியமாக ஆபத்தானது என்பதும் உண்மைதானே?. இதெல்லாம் உண்மை என்றால் இந்திய அணுமின் கழகம் இந்த புத்தகத்தை திரும்பப் பெறுமா? திருத்துமா?

2) மற்ற விபத்துகளைவிட, அணுவிபத்து ஆபத்தானதாக இருப்பது அணுக்கதிர்வீச்சால் தானே? போபால் விபத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டனர். ஆனால் இன்னும் அப்பகுதியில் யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு அருகில் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் 1986 செர்னோபில் விபத்துக்குப் பிறகு, ப்ரியபத் நகரை விட்டுச்சென்ற யாரும் இன்னும் திரும்பிப் போகமுடியவில்லை. ஒரு நகரமே காலியாக இருக்கிறது. இன்றும் விபத்து பகுதியைச் சுற்றி, 4000 சதுர கிலோமீட்டர் தூரத்திற்கு, அணுக்கதிர்வீச்சு காரணமாக, யாரும் வாழமுடியாது என்று 'கொங்கன் காப்போம் சங்கத்தை' சேர்ந்த நிபுணர்கள் கூறினார்களே, அதுவும் உண்மைதானே டாக்டர்.ககொட்கர்?
இது உண்மையானால் இந்தத் தகவல்களை ஏன் உங்கள் விரிவுரைகளில் மறைக்கிறீர்கள்? 4000 சதுர கிலோ மீட்டர் என்பது ரத்னகிரி மாவட்டத்தில் பாதி. ரத்னகிரியை விட்டு நாங்கள் காலி செய்தாக வேண்டுமானால், நாங்கள் எங்கு செல்வது?
3) செர்னோபில் விபத்து நடந்து 25 ஆண்டுகளுக்குப் பின்னும், நகரைச் சுற்றி ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் கிலோமீட்டர் சதுர பரப்பளவிற்கு,  விவசாயம் அனுமதிக்க படுவதில்லை என்பதும் உண்மைதானே. ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் கிலோமீட்டர் சதுர பரப்பளவு என்பது கோலாப்பூர், சத்தாரா, சாங்கிலி, பூனா, சிந்துதுர்க், ரத்தின கிரி, ராய்காட் ஆகிய மாவட்டங்களின் மொத்தப் பரப்ப ளவைவிட அதிகம். டாக்டர்.ககொட்கர், நம்முடைய மத்ப னில் செர்னோபில்போல ஒரு விபத்து ஏற்படுமானால், 100 ஆண்டுகளுக்கு விவசாயமும் பழ உற்பத்தியும் அழியுமானால்  நம் அருமை மகாராஷ்டிரத்தின் கதி என்ன?

4) டாக்டர்.ககொட்கர்,உங்கள் விரிவுரையில் , நீங்கள் ஒவ்வொரு விபத்துக்குப் பின்னும், அணுசக்தித்துறை பாடம் கற்றுக்கொள்கிறது என்று கூறினீர்கள். செர்னோபில் விபத்துக்குப் பிறகு பல பாதுகாப்பு அம்சங்கள் அணுசக்தி நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறினீர்கள். பின்னர் ஏன் இத்தனை மோசமான விபத்து ஃபுகுஷிமா அணுசக்தி நிலையங்களில் நிகழ்ந்தது?

5) நீங்களும் அணுசக்தித்துறையை சேர்ந்த மற்ற நிபுணர்களும், மத்பன் பீடபூமியாக இருப்பதால், கடல் மட்டத்திற்கு மேல் உயர்வாக இருப்பதால் சுனாமியால் பாதிக்கப்படாது என்று கூறுகிறீர்கள். ஒவ்வொரு வருடமும் கொங்கன் ரயில்பாதை நிலச்சரிவினாலும், மழைக்குப் பின் நிலம் தாழ்வதாலும் பாதிக்கப்படுகிறது. அடர்மழைக்குப் பின் நம் மத்பன் மேட்டில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டிருக்கிறது. பாறைகளாலான பகுதி என்பதால் சுரங்க ரயில் பாதை அமைக்க இப்பகுதி தகுதியற்றதாக கருதப்படுகிறது. இப்படியிருக்கும் நிலையில் கனரக அணு உலைகள் கட்ட இப்பகுதி எப்படி சரிப்படும் என்ற கேள்வியும் எங்கள் மனதில் இருக்கிறது. மழை காரணமாக அணுஉலைக்கு கீழேயுள்ள நிலம் விரிசல் விடத் துவங்குமானால் என்ன செய்வது?

6) ஹிரோஷிமா நாகசாகி பற்றி நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட வர்கள் அங்கே அணுகுண்டு வீச்சில் இறந்துபோனார்கள் என்றும், அப்படி இறந்தவர்களில் நாற்பதாயிரம் பேர், அதாவது அதில் ஐந்தில் ஒருபங்கு பேர் இறந்தது அணுக்கதிர் வீச்சால் என்பதும் உண்மைதானே டாக்டர்.ககொட்கர்?

7) 300 ஹிரோஷிமா குண்டுகளுக்கு சமமான கதிர் இயக்கத்தினை செர்னோபில் விபத்து வெளியிட்டது என்றும், இது ஒரு அணுஉலைக்குள் இருக்கும் கதிர்வீச்சின் அளவில் பத்து சதவிகிதம் மட்டுமே என்றும் கூறப்படுவது உண்மைதானா டாக்டர்.ககொட்கர்?

8) பாதிக்கப்பட்ட செர்னோபில் அணுஉலை ஆயிரம் மெகாவாட் திறன் கொண்டது. ஜெய்தாப்பூர் திட்டமோ பத்தாயிரம் மெகாவாட் திட்டம். பாதிக்கப்பட்ட செர்னோபில் அணுஉலையைவிட பத்து மடங்கு பெரியது. ஆறு அணுஉலைகளும் கட்டப்படுமானால் மூவாயிரம் ஹிரோஷிமா குண்டுகளுக்கு சமமான கதிரியக்கம் இருக்கும் என்பதும் உண்மைதானே? இந்த கணக்கு சரியா தப்பா?

9) அணுஉலை இயங்கத் துவங்கியபின், அது மேலும் அபாயகரமான கதிர்வீச்சினை உருவாக்கும் என்பது உண்மை இல்லையா? கதிரியக்கத்தின் மொத்தஅளவு கூடும்தானே? எரிந்து தீர்ந்த எரிகோல்கள் அகற்றப்பட்டு பல ஆண்டுகள் தண்ணீர்த்தொட்டிகளில் குளிரவைக்கப்படுகின்றன. அணு உலைகளில் இருப்பதைவிட இந்த எரிக்கப்பட்ட எரிகோல்களை வைக்கும் தொட்டிகளில் ஆண்டுகள் செல்லசெல்ல கதிரியக்கம் அதிகமிருக்கும் என்பதும் உண்மைதானே?

10) அணு எரிபொருள் அணுஉலைக்குள் எரியும்போது அது புளுட்டோனியத்தை உருவாக்கும் என்பதும் உண்மைதானே? இந்த புளுட்டோனியம் தானே நாகசாகி அணுகுண்டு செய்ய பயன்படுத்தப்பட்டது?

எரிந்த எரிகோல்கள்  அதிக அளவு புளுட்டோனியத்தைக் கொண்டிருக்கும் என்பதும் உண்மைதானே? இந்த ஆறு அரிவா (AREVA) அணுஉலைகளும் சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இலட்சம் நாகசாகி குண்டுகளைவிட அதிக புளுட்டோனிய கதிரியக்கத்தைக் கொண்டிருக்கும் என்பதும் உண்மைதானே? இந்தக் கதிரியக்கம் முழுவதும் மத்பனில் அமையவிருக்கும் தண்ணீர்த்தொட்டிகளில் சேமிக்கப்படும் என்பதும் உண்மைதானே. இந்தத் தண்ணீர்த்தொட்டிகள் ஒழுகத் தொடங்கினால் என்னாவது?

11) ஃபுகுஷிமாவில் எரிந்த எரிகோல்களைச்  சேமிக்கும் தண்ணீர்த்தொட்டிகள் உயரத்தில் கட்டப்பட்டதால் சேதமடைந்து, முழுக்கவும் வெளியேறியது என்பதும் உண்மைதானே? இன்றுவரை யாரும் அந்த சேதமடைந்த தொட்டிகளை, ஓட்டைகளை அடைக்க அணுக முடியவில்லை என்பதும் உண்மைதானே? தீர்ந்த எரிகோல்களை  தொடர்ந்து நீர் தெளித்து குளிரவைக்க வேண்டும் என்பதும் உண்மைதானே?  இப்படி தெளிக்கப்படும் நீர், தெளித்தப்பின் கதிரியக்கத்தன்மை கொள்ளும் என்பதும், அதை தனியாக ஒழுகாமல் பாதுகாக்க வேண்டும் என்பதும் உண்மைதானே. இதுவரை ஒரு இலட்சம் டன் கதிரியக்கத் தன்மை கொண்ட நீர் ஃபுகுஷிமாவில் சேர்ந்திருக்கிறது என்பதும் இதில் ஒருபகுதி நிலத்தடியில் புகுந்து, கிணற்றுநீரையும் பாதித்திருக்கிறது என்பதும் உண்மைதானே. இதில் ஒருபகுதி கடலில் கொட்டப்பட்டு, மீன்களையும் பாதித்திருக்கிறது என்பதும் உண்மைதானே? மீன்தொழிலும் விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதும் உண்மைதானே?
12) டாக்டர்.கடொட்கர், எரிந்து தீர்ந்த எரிகோல்களிலிருந்து உருவாகும் புளுடோனியத்தை, எத்தனை ஆண்டு காலம் அதிகபட்ச பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லமுடியுமா? கொங்கன் காப்போம் சங்கத்தைச் சேர்ந்த நிபுணர்கள் புளுடோனியத்தின் ஆயுள் 25,000 ஆண்டுகள் என்றும், இதை ஒரு இலட்சம் ஆண்டுகளுக்காவது பாதுகாப்பாக வைக்கவேண்டும் என்றும் கூறுகிறார்களே, இது சரியா தப்பா? டாக்டர் ஐயா, இது உண்மையானால் முதல் 1,000 ஆண்டுகளுக்கு 1,00,000 நாகசாகி குண்டுகள் அளவு புளுடோனியத்தை பாதுகாப்பாக வைக்கும் பொறுப்பு யாருடையது?

13) தாங்களும், இந்திய அணுமின் கழகத்தைச் சேர்ந்தவர்களும், உங்களது திட்டத்தால் மீன்கள் பாதிக்கப்படாது என்று கூறுகிறீர்கள். ஆனால் தாராப்பூர் பகுதி மக்கள் எங் களை சந்திக்க வந்தபோது தாராப்பூர் அணுமின் திட்டத்தால் தங்கள் மீன்தொழில் பாதிக்கப் பட்டதாக தெரிவித்தார்கள். நாங்களும் தாராப்பூர் சென்று கிவாளி பகுதி மீனவர்களுடன் உரையாடினோம். நாங்கள் யாரை நம்புவது, 40 வருடங்களாக மீன்தொழில் அனுபவம் உள்ளவர்களையா? அல்லது உங்கள் கணிப்புகளையா? நீங்கள் ஒரு விஞ்ஞானி. நீங்கள் யாரை நம்புகிறீர்கள், உங்கள் நிபுணர்களையா மீன்பிடி தொழிலாளரின் அனுபவத்தையா? ஒரு விஞ்ஞானியாக எங்களுடன் வந்து நீங்கள் மீன்தொழில் செய்யும் மக்களுடன் பேசத்தயாரா?

14) டாக்டர் ககொட்கர், ஒவ்வொரு இந்தியனும் நல்ல வாழ்க்கை வாழவேண்டுமானால் மின் உற்பத்தியை பத்துமடங்கு உயர்த்தவேண்டும் என்று உங்கள் விரிவுரையில் கூறினீர்கள். இதைப் பற்றி நான் யோசித்தேன். என் வீட்டு மின்சீட்டை எடுத்துப் பார்த்தேன். மாதம் ஒன்றுக்கு 120 யூனிட் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். எங்கள் வீட்டில் மின்விசிறி, மின்விளக்கு, தொலைக்காட்சி எல்லாம் இருக்கிறது. என் மகன் கணிப்பொறி மற்றும் இணையம் பயன்படுத்துகிறான். கடவுள் புண்ணியத்தால் நாங்கள் நல்ல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 120 யூனிட் மின்சாரம் தேவையென்றாலும் நாம் உற்பத்தியை பத்து மடங்கு உயர்த்தவேண்டுமா என்பதே என் கேள்வி?

15) முகேஷ் அம்பானி மலபார் மலைப்பகுதியில் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஒரு பெரிய வீடு கட்டியிருப்பதாக செய்தித்தாள்களின் மூலம் அறிந்தேன். அந்த வீட்டிற்கு மாதம் 6 இலட்சம் யூனிட் பொது மின்சாரம் தேவைப்படுமாம். ஒரு நல்ல வாழ்க்கை வாழத் தேவைப்படும் மின்சார அளவு எவ்வளவு? சிலருக்கு மும்பாயிலே இவ்வளவு மின்சாரம் தேவையானால் இந்த அணுமின் நிலையத்தை ஏன் மலபார் ஹில்ஸில் கவர்னர் மாளிகை இருக்கும் மேட்டுப்பகுதியில் அமைக்கக்கூடாது. நீங்கள் சொல்வதைப்போல அணு மின்சாரம் பாதுகாப்பானதாக, மலிவானதாக, தூய்மையானதாக இருக்குமானால், நாங்கள் புரிந்து கொள்ள முடியாத முட்டாள்களாக இருப்போமானால் ஏன் இதை நீங்கள் மெத்தப்படித்த மலபார் ஹில்ஸ் படித்தவர்களிடம் புரியவைத்து அங்கேயே அமைப்பது எளிதாக இருக்கும் தானே?  
II
அணுசக்தி குறித்து அதிகம் கேட்கப்படாத கேள்விகளுக்கு http://thecolloquium.net வழியே விவேக் மொன்டீரோ அளித்த பதில்கள்

இந்திய அரசோ அணுசக்தித்துறையோ ஜைதாப்பூர் அணுமின் திட்டத்தின் பயன் - செலவு குறித்த ஆய்வை  மேற்கொண்டார்களா?

ஆச்சர்யம், ஆனால் இதுவரை மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை. பிரஞ்சு கம்பெனிகளிடமிருந்து 10,000 மெகாவாட் திறன் கொண்ட அணுஉலைகளை வாங்கிக் கொள்வதாக  பிரஞ்சு அரசுக்கு மன்மோகன்சிங் அரசு உறுதிமொழி அளித்தது. இந்த உறுதிமொழி மட்டுமே இந்த திட்டத்துக்கான காரணம். எந்தச்செலவும் பயனும் கணக்கிடப்படவில்லை.

இத்திட்டம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு நிறைவேற்ற வேண்டிய விசயமாகவே அணுசக்தித் துறைக்கு முன்வைக்கப் பட்டது. எல்லாம் முடிந்த பின்னால் இப்பொழுது புதிய வாதங்களை உருவாக்கி அணுசக்தித்துறை இத்திட்டத்திற்கான நியாயங்களை கற்பிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான இவ்வாதங்கள் அறிவியல் நுண்ணாய்வுக்கு உட்படாதவை.

1990களின் கடைசியில் என்ரான் திட்டமும் இதேபோன்று எந்த பயன்-செலவு ஆய்வுமின்றி முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டம் தோற்றதோடு மட்டுமன்றி, திட்டமிடப்பட்ட 9,000 கோடியைத் தாண்டி, இதைக் காப்பாற்ற 30,000 கோடி இதுவரை செலவிடப்பட்டுள்ளது. ஜைதாபூர் திட்டம் என்ரான் திட்டத்தைவிட 5 மடங்கு பெரியது.

உலகின் இதுபோன்ற திட்டங்களை ஒப்புநோக்கினால் இதன் செலவு 2,00,000 கோடியாக இருக்கக்கூடும் ( இந்த திட்டத்தின் செலவுக்கணக்கைத் தர இந்திய அரசும், இந்திய அணு சக்திக்கழகமும் மறுத்துவிட்டன). இவ்வளவு அதிகமான செலவாக இருந்தபோதும், பயன்-செலவு ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை.

இப்படிப்பட்ட திட்டங்களின் செலவை கணக்கிட முடியுமா?

ஆம். அறிவியல்பூர்வமான முறைகளைப் பயன்படுத்தி கணக்கிடலாம். செலவை கணக்கிடும் போது நாம் சுற்றுச்சூழலின் விலையையும் பொருளாதார/ நிதிச்செலவையும் சேர்த்து கணக்கிட வேண்டும்.
சுற்றுசூழல் விலை அல்லது செலவினை எப்படி கணக்கிடுவது?

இது மிக விரிவான ஒரு கணக்கு.

1) இயல்பான நிலையில் உலைகள் இயங்கும்போது, அணு மின் திட்டம் உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பில் உண்டாக்கும் பாதிப்பின் விலை.

2) ஆயுட்காலம் முடிந்த அணுஉலைகளை முடக்கவும், கதிரியக்க அணுக்கழிவுகள் தொடர்பிலும் ஆகக்கூடிய நீண்டகால செலவுகளையும் கணக்கிட வேண்டும்.

3) விபத்து, இயற்கைச் சீற்றம், நாசவேலை போன்றவையால் எதிர்பாராதபடி கதிரியக்கம் வெளியாவதால் உருவாகும் கதிரியக்க மாசு சம்பந்தப்பட்ட இந்தக் கடைசி கணக்கீடு ஆபத்து பற்றிய மதிப்பீடாகும்.

எதிர்பாராத வகையில் வெளிப்பட்டுவிடும் கதிரியக்க ஆபத்து மற்றும் செலவை நாம் எப்படி மதிப்பிடுவது?

இந்த அம்சத்தைப் பற்றிய பதிவுகள்தான் நம்நாட்டு அணு சக்தித்துறையிடமோ, மற்ற நாட்டு அணுசக்தி நிறுவனங்களிடமோ காணக்கிடைக்காதது. இந்தக் கணக்கீட்டைத் செய்யாது தவிர்க்கவே அவர்கள் முயற்சிக்கிறார்கள். முதலில் 1986ல் ஏற்பட்ட செர்னோபில் அணுப் பேரழிவின் ஒரு விளைவை மட்டும் எடுத்துக் கொள்வோம். 25 ஆண்டுகளுக்குப் பிறகும் உக்ரைன், பெலாரஸ், ரஷ்யா ஆகிய நாடுகளிலுள்ள 4,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கதிரியக்க மாசு காரணமாக ‘தவிர்ப்பு வலயமாக’  இருக்கிறது. மக்கள் இந்தப்பகுதியில் வாழ அனுமதி கிடையாது. 4000 ச.கி.மீ என்பது ஜைதாபூர் அணுமின் திட்டம் அமையவுள்ள ரத்தினகிரி மாவட்டத்தின் பாதி என்பதை நினைவிற்கொள்வோம். இந்த மாவட்டத்தின் மக்கள்தொகை 17,00,000பேர். சுமார் 8,50,000 பேரை வெளியேற்ற, மறுவாழ்வளிக்க நாம் தயாராக இருக்கவேண்டும். மேலும் இந்த நாடுகளில் 1,00,000 ச.கி.மீ. நிலம் மற்றும் நீர் மாசுபட்டதால் விவசாயத்திற்கு 100 ஆண்டுகளுக்கு லாயக்கற்றதாகி இருக்கிறது. 1,00,000 ச.கி.மீ என்பது கேரளாவைவிட பெரியது, இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா போன்ற சிறிய மாநிலங்களைவிட பெரியது. இந்தியாவில் ஒரு ச.கி.மீ தூரத்தில் சுமார் 380 பேர் சராசரியாக வாழ்கிறார்கள். ஆகவே ஒரு பேரிடர் ஏற்படுமானால் 3,80,000 பேருக்கான உணவு வெளியில் இருந்து கொண்டு வரப்பட வேண்டும்.

செர்னோபில்லுக்கு பிறகு அனேக அணு நிறுவனங்கள் தாங்கள் கற்கவேண்டிய பாடங்களை கற்றுக்கொண்டுவிட்டதாகவும், இனி செர்னோபில் போன்ற ஒன்று நடக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார்கள். ஃபுகுஷிமா இந்த வாதத்தை பொய் என நிரூபித்திருக்கிறது. ஃபுகுஷிமா பேரிடர் ஏற்படுத்திய சுற்றுசூழல் இழப்பின் விலை என்ன?

இன்னும் ஃபுகஷிமா அணு உலைகளில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் கதிரியக்கத்தை நிறுத்த முடியவில்லை, இது இன்னும் பல மாதங்களுக்கு தொடரும். கடந்த மூன்று மாதங்களாக டோக்கியோவில் கதிரியக்க அளவு, இயல்பான  அளவைவிட 25% அதிகமாக உள்ளது. இது ஜைதாபூர் அணுமின் திட்டத்தின் ஒரு இ.பி.ஆர் உலை எல்லைக்கு, அதிகபட்சம் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவு என்று அணுசக்தி கட்டுப்பாட்டுத்துறை நிர்ணயம் செய்ததை விட 6 மடங்கு அதிகம். ஃபுகுஷிமாவில் இருந்து 300 கி.மீ தூரத்தில் டோக்கியோ உள்ளது, இதன் அர்த்தம் ஜப்பானின் பெரும் பகுதி திரும்ப சரிசெய்யமுடியாத வகையில் மாசுபட்டிருக்கிறது என்பதாகும். புற்றுநோயால் பாதிக்கப்படுவோர், மற்றும் புற்றுநோய் இறப்புகளில் அளவிடத்தக்க உயர்வு இருக்கும்.

(டோக்கியோ கதிரியக்க அளவு ஜைதாபூரில் இருக்குமானால், திட்டமிடப்பட்ட ஆறு அணுஉலைகளும் நிறுத்தப்பட வேண்டும் )

ஃபுகுஷிமாவில் கதிரியக்க வெளியீட்டின் மூலம் என்ன?

ஜப்பானிய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட 4 அணுஉலைகளின் கொள்கலங்களும் பாதிப்பின்றி இருப்பதாக கூறுகிறார்கள். ஆகையால் இது தீர்ந்த எரிபொருள் அதாவது புளுடோனியம் மாசில் இருந்து உண்டான மாசாக இருக்கவேண்டும். தீர்ந்த எரிபொருளால் உண்டாகும் ஆபத்து அணுஉலை ஆபத்தைவிட எந்த அளவிலும் குறைவானதில்லை.

புளுடோனியம் மாசு எவ்வாறு எற்படுகிறது?


அணுஉலைக்குள்ளே எரிகோல்கள் எரியும்போது ஏற்படும் அணுப்பிளவின் விளைவாய், அதிக கதிரியக்கம் கொண்ட பல்வேறு உபபொருள்கள் உருவாகின்றன. இந்த எரிகோல்களில் மூன்றிலொரு பங்கு தீர்ந்த எரிகோல்களாக  ஆண்டுதோறும் எடுக்கப்பட்டு பாதுகாக்கப் படுகின்றன. இதற்கு பதிலாக புதிய எரிகோல் கற்றைகள் உட்செலுத்தப்படும். இந்த தீர்ந்த எரிகோல்கள் புளுடோனியம் உள்ளிட்ட  பல்வேறு கதிரியக்கப் பொருள்களைக் கொண்டிருக்கும். அனைத்தும் மிக ஆபத்தானவை. ஆனால் புளுடோனியம் தான் அதிக ஆபத்து நிறைந்தது. புளுடோனியமே தன்னளவில் பிளவுறும் தன்மை கொண்டுள்ளதால் இதை அணு உலைகளில் எரிசக்தியாகவோ, குண்டு தயாரிக்கவோ பயன்படுத்த முடியும். இல்லையானால் இதை அணுக்கழிவாக, தீர்ந்த எரிபொருளாக விடவும் முடியும்.

புளுடோனியத்தை பொருத்தவரை அது உருவாகும் நேரம் முதல், கதிரியக்கச் சிதைவு காரணமாக கதிரியக்கமற்ற ஒரு பொருளாக மாறும்வரை அதில் ஆபத்து இருக்கிறது. புளுடோனியம் 239ன் கதிரியக்கம் பாதியாக குறைய  24,400 ஆண்டுகள் செல்லும். 1000 மடங்கு குறைய 2,44,000 ஆண்டுகளாகும். ஆயிரம் ஆண்டுகளாவது புளுடோனியத்தைப் பாதுகாப்பது எப்படி? யாருக்கும் தெரியாது என்பதுதான் விடை. அணுசக்தித்துறையாவது 1000 ஆண்டு கள் இருக்குமா என்று நாம் உறுதிகூற முடியுமா? ஆனால் உருவாக்கப்பட்ட புளுடோனியமோ 1000 ஆண்டுகளுக்குப் பின்னாலும் இயற்கைக்கு பெரும் ஆபத்தை விளைவித்தபடி பத்திரமாக இருக்கும். இப்படி சேமிக்கப்படும் புளுடோனியத்தை பாதுகாக்கும் பொறுப்பு யாருடையது? இந்த புளுடோனியத்தால் ஏதேனும் அசம்பவத்தால்   துடைத்தழிக்கப்படாமல் வருங்கால சந்ததியினரை பாதுகாக்கும் பொறுப்பு யாருடையது? அணுசக்தியை விற்பவர்கள் இந்தக் கேள்விகளுக்கு விடை கூறுவதிருக்கட்டும், இத்தகைய கேள்விகளை எழுப்புவதையே அனுமதிப்பதில்லை.

அணு எரிபொருளாக எரிப்பதன் மூலம் புளுடோனிய பிரச்சனையை தீர்த்துவிட முடியாது. மீண்டும் அணு எரிபொருளாக எரிப்பதென்பது, மீண்டும் அணுப்பிளவையும் அதன் மூலம் கதிரியக்கம் கொண்ட பல உபபொருட்களையும் உண்டாக்கும். சில விஞ்ஞானிகள் வேகமான ஈனுலைகள் Fast breeder reactors (FBR) மூலம் இந்தப் பிரச்சனையை தீர்க்கலாம் என்கிறார்கள். ஆனால் இப்போதைக்கு இது ஒரு பெரும் யூகமான கூற்றுதான். இன்றைய நிலையில், ஈனுலை தொழில்நுட்பம், ஒரு வணிக தொழில்நுட்பமாக, சாத்தியப்பாடுள்ள தொழில்நுட்பமாக இல்லை. அதிலிருந்து வெகுதூரத்தில் இருக்கிறோம் என்று நாம் உணரவேண்டும். அமெ ரிக்கா, பிரான்சு, ஜப்பான் ஆகிய நாடுகளில் பலவருடங்கள் இயங்கிய ஈனுலைகள் நிரந்தரமாக மூடப்பட்டிருக்கின்றன. ரஷ்யாவில் ஒரு ஈனுலை செயல்படுகிறது. ஆனால் இது  மின்சாரம் தயாரிக்கும் வணிக உலையல்ல, ஆராய்ச்சிக்கான ஒரு அணுஉலை. கல்பாக்கத்தில் அடுத்தவருடம் 500 மெகாவாட் திறன்கொண்ட ஒரு ஈனுலை துவங்க இருக்கிறது. ஆனால் இதுவரையான சர்வதேச அனுபவத்தின் அடிப்படையில் இந்த ஈனுலைகளின் செயல்பாட்டை இன்னும் சிலவருடங்கள் கவனித்த பின் முடிவெடுப்பது சரியாக இருக்கும். இதுவரையான ஈனுலை அனுபவம் தோல்வி சார்ந்தது என்பதை பற்றி நாம் கண்களை மூடிக்கொள்வது மடத்தனமானதும் ஆபத்தானதுமாக இருக்கலாம்.

மேலும் தீர்ந்த எரிகோல்களை திரும்ப பயன்படுத்தும் போதோ அல்லது அணுக்கழிவாக விடும்போதோ உண்டாகும் சுற்றுசூழல் தீங்கு மிக அதிகமானதாகும்.

தீர்ந்த எரிபொருள் அதிக வெப்பமான, எளிதில் தீப்பிடிக்கக்கூடிய ஒரு பொருள். அதை குளிர்வித்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் தானே தீப்பிடித்துக் கொள்ளும். எனவே இந்த தீர்ந்த எரிபொருளை  ஒரு தனி கட்டிடத்தில் 5-10 வருடங்கள் தொடர்ந்து தண்ணீருக்கடியில் வைத்திருக்க வேண்டும். விபத்தினாலோ நாச வேலையினாலோ  இந்தத் தண்ணீர் இல்லாது போகுமானால் இந்த தீர்ந்த எரிகோல்கள் தீப்பிடித்து எரியும். அப்படி எரியும் போது கதிரியக்க வாயு உண்டாகி பல நூறு கிலோமீட்டர் தூரம் பரவும்.

ஃபுகுஷிமாவில் 3,4ஆம் எண் அணுஉலைக் கட்டிடங்கள் வெடித்ததால் தொட்டிகளில் தேக்கப்பட்டிருந்த நீர்வடிந்து அதனுள்ளிருந்த தீர்ந்த எரிகோல்கள் வெளிப்பட்டதால் கதிரியக்க மாசு உருவாகியிருப்பதாக தெரிகிறது.

ஜைதாப்பூர் அணுஉலை எவ்வளவு தீர்ந்த எரிபொருளை உருவாக்கும்?

ஜைதாபூர் அணு உலை தடுக்கப்படாத பட்சத்தில் பல நூறு டன் தீர்ந்த எரிபொருள் சில ஆண்டுகளில் உருவாகும். மத்பனில் சேமிக்கப்படும் கதிரியக்கம் செர்னோபிலை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.

ஜைதாபூர் அணுஉலையின் தீர்ந்த எரிபொருள் வைப்பிலிருந்து ‘கதிரியக்கம்’ வெளிப்படுமானால் அதன் ஆபத்துகள் என்ன?

தீர்ந்த எரிபொருள் வைப்பகத்தின் மீது, ஒரு நாசவேலை அல்லது வெற்றிகரமான ஒரு பயங்கரவாத நடவடிக்கை (உலகளாவிய முக்கிய ஆபத்து என அமெரிக்க தேசிய அறிவியல் அகாதமியால் இது சுட்டப்பட்டுள்ளது) செர்னோபிலை விட பல மடங்கு கதிரியக்கத்தை வெளிப்படுத்தும். இந்தியாவின் கைகா அணுஉலையில் சின்ன நாசவேலையால் கதிரியக்கம் வெளிப்பட்ட நிகழ்விருக்கிறது.

ஜைதாபூர் அணுஉலை தடுக்கப்படாவிட்டால், அது செயல்படும் சில ஆண்டுகளில், ஹிரொஷிமா, நாகசாகியை விட அதிகம் கதிரியக்க மாசு கொண்ட ஒரு மோசாமான அணு குண்டை உருவாக்கும் சாத்தியம் இருக்கும். இந்தியர்களாக நாம் ஜைதாபூரை பற்றி கவலைப்படும் அதேநேரத்தில்  தாராப்பூர் அணுஉலையில் சேர்ந்திருக்கும் தீர்ந்த எரிபொருள் பற்றியும் கவலைப்பட வேண்டும்.

தீர்ந்த எரிபொருள் அணுக்கழிவாக அகற்றப்பட்டுவிட்டால்தான் என்ன?

ஆயிரமாயிரமாண்டுகளுக்கு அதி-கதிரியக்கக் கழிவை பாதுகாக்கும் ஒரு புவியியல் களஞ்சியத்தை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டது. 1982ல் இந்தக் களஞ்சியத்தை உருவாக்குவதற்கென ரீகன் அரசு ஒரு புதிய சட்டத்தையும் நிறைவேற்றியது. நிவாதா பகுதியில் யுக்கா மலையின் கீழ் இதை உருவாக்க 1982 முதல் 2010 வரை 50,000 கோடி செலவிடப்பட்டது. ஆனால் அணுக்கழிவிலிருந்து மிக நீண்டகாலத்திற்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்கிற உறுதிமொழியைத்  தரமுடியாது என்று பின்னர் செய்யப்பட்ட ஆய்வுகள் தெரிவித்ததால் கடந்த வருடம் ஒபாமாவால் இத்திட்டம் கைவிடப்பட்டது.

இன்றைய தேதிவரை உலகின் எந்தப்பகுதியிலும், உயர்நிலை அணுக்கழிவை ஒழிக்கவோ, தீர்ந்த எரிபொருளை சேமிக்கும் போது உண்டாகும் ஆபத்துகளை தவிர்க்கவோ எந்த தீர்வும் இல்லை. என்றாவது ஒருநாள் தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கையில் நாடுகள் அணுக்கழிவை வெறுமனே சேமித்துக்கொண்டிருக்கின்றன. கதிரியக்கச் சேமிப்பிலிருந்து கசிவு என்பது இன்று அமெரிக்காவில் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இது மேற்கத்திய நாடுகளில் அணு சக்தியின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இதன் விளைவாய் மக்கள் எதிர்ப்பும் வளர்ந்து வருகிறது.

ஜைதாபூர் அணுமின் திட்டத்தின் முக்கியப் பிரச்சனைகள், ஆபத்துகள் என்ன?

இந்தத் திட்டதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. அதை விரிவாக சொல்ல இங்கு இடம் போதாது. இத்திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த மதிப்பீடு, தேசிய சுற்றுசூழல் பொறியியல் ஆய்வு நிறுவனத்தால் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்திற்கு கதிரியக்க ஆபத்து பற்றிய நிபுணத்து வமோ, சிறப்பு அறிவோ இல்லை. இந்த ஆய்வை இந்தியாவில் செய்யக்கூடிய, அனுமதிக்கப்பட்டிருக்கிற ஒரே நிறுவனம் அணுசக்தி கட்டுப்பாட்டுக் கழகம் மட்டுமே. இறக்குமதியாக இருக்கும் அரிவா (AREVA) பிரஞ்சு நிறுவனத்தின் இ.பி.ஆர் உலைகளின் வடிவமைப்பை அணுசக்தி கட்டுப்பாட்டுக்கழகம் இன்னும் மதிப்பீடு செய்யவோ ஒப்புதல் தரவோ இல்லை. ஆனாலும் அரிவா நிறுவனத்திற்கும், தேசிய அணுசக்தி நிறுவனத்திற்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன, அணுசக்தி கட்டுப்பாட்டுக்  கழகம் கதிரியக்க ஆபத்தை ஆய்வுசெய்து ஒப்புதல் தரும் முன்னரே, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதுநாள் வரை இத்திட்டத்தின் கதிரியக்க பாதிப்பு பற்றி எந்த ஒரு தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டில் தீர்ந்த எரிபொருள் மறு சுழற்சி பற்றியோ கதிரியக்கக் கழிவை அகற்றுவது குறித்தோ எந்தத் தகவலும் இல்லை. தேசிய அணுசக்தி நிறுவனம் கொங்கன் காப்போம் சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் - தீர்ந்த எரிபொருள் இந்திய அரசின் சொத்து எனவும் அதற்கும் தேசிய அணுசக்தி நிறுவனத்திற்கும் சம்பந்தமுமில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக கூறி இருக்கிறது. இதே சந்திப்பில் ஜைதாப்பூர் திட்டம் எந்த உயர்நிலை அணுக்கழிவையும் உண்டாக்காது என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது.

ஃபுகுஷிமா பேரிடர் ஒரே இடத்தில் நிறைய அணு உலைகளை நிறுவுவதன் பிரச்னையை எடுத்துக்காட்டி இருக்கிறது. ஒரு உலையில் கதிரியக்கம் வெளிப்பட்டால், மற்ற உலைகளுக்கும் நாம் போக முடியாமல் தடுக்கும். இது தொடர் தோல்விகளுக்கும், பல பாதுகாப்பு அமைப்புகள் செயல் இழப்பதற்கும் கரணமாக அமையும். ஒரே இடத்தில் ஆறு உலைகள் நிறுவுவது ஜைதாபூரில் திட்டம்.

தீர்ந்த எரிபொருள் சேமிப்பினால் உண்டாகும் பாதிப்பு பற்றியும் ஃபுகுஷிமா எடுத்துக் காட்டியுள்ளது. ஜைதாபூரிலும் கொள்கலன் வைப்பறைக்கு வெளியேதான் தீர்ந்த எரி பொருளைச் சேமிக்கும் திட்டமிருக்கிறது. இது ஆபத்து நிறைந்தது.

இன்னொரு பெரிய பிரச்சனை அதிக விலை தந்து இறக்குமதி செய்யப்படும் இ.பி.ஆர் உலைகள் உலகில் எங்கும் பரிசோதிக்கப்படவில்லை என்பது. பின்லாந்தில் உள்ள ஒக்கிகிட்டோவில் முதலில் நிறுவப்பட்ட இந்த உலை பாதுகாப்பு, அதிக விலை, கட்டுவதற்கு நான்காண்டு தாமதம் போன்ற நிறைய பிரச்சனைகளுக்கு உள்ளாகியிருக்கிறது.

இத்திட்டத்தின் பொருளாதாரப் பயன்கள் என்ன?


இத்திட்டத்தின் செலவுகளை முதலில் வெளியிட்டால்தான் நாம் இந்த கணக்கைப் போடமுடியும். தேசிய அணுசக்தி நிறுவனமும், இந்திய அரசும், அரிவா நிறுவனத்துடன்  ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் நிதி விவரங்களை வெளியிட மறுத்துவிட்டன. இருக்கின்ற தகவல்களின் அடிப்படையில் கொங்கன் காப்போம் சங்கமும் மற்ற சங்கங்களும் போட்ட கணக்கின்படி இதுவரை மகாராஷ்டிரத்தில் இருப்பதிலேயே மிக விலை உயர்ந்த என்ரான் மின்சாரத்தை விட விலை கூடுதலாக இருக்கும்.

நமக்கு எவ்வளவு மின்சார சக்தி தேவை?

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவில்லை என்றால் இந்தியாவின் அணுசக்தி திறன் மீதான தாக்கம் என்னவாக இருக்கும் என்று அக்டோபர் 2007ஆம் ஆண்டு டாக்டர். அனில் ககொட்கரிடம் கேட்கப்பட்டது. அவர் 6,000 மெகாவாட் பற்றாக்குறை இருக்கும் என்று தெரிவித்தார். இந்திய அமெரிக்க அணுஒப்பந்தத்திற்குப் பிறகு 6,000 மெகாவாட் அல்ல, 40,000 மெகாவாட் தேவைக்கான உலைகள் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்ற ஒரு புதிய வாதத்தை அவர் முன்வைக்கத் துவங்கினார். இது அறிவியல்பூர்வமான ஆய்விற்கு முன்னால் பல்வேறு வழிகளில் தாக்குப்பிடிக்காத வாதமாகவே இருக்கிறது.

இந்த இறக்குமதியை நியாயப்படுத்த அவர் ஒவ்வொரு இந்தியனின் சராசரி பயனீட்டு அளவை வருடதிற்கு 5,000 யூனிட்டுகள், அதாவது 8 மடங்கு உயர்த்தவேண்டும் என்றும்  நிறுவப்பட்டுள்ள பயனளவை பத்துமடங்கு உயர்த்தவேண்டும் என்றும் அறிவித்தார் (தற்போதைய சராசரி பயன் அளவு 650 யூனிட்). ஒவ்வொரு குடிமகனின் உயர்தர வாழ்விற்கு வருடம் 2,000 யூனிட் இருந்தால் போதுமானது. இதை மரபான பல வழிமுறைகளின் மூலமாகவே நாம் சாதித்துக் கொள்ள முடியும்.

இந்தியாவின் எதிர்காலத்திற்கான, புத்திசாலித்தனமான, அறிவியல்பூர்வமான பார்வை என்பது ஆற்றல் மற்றும் மின்சாரத்தை நாம் தண்ணீரைப்போல கருதுவது. ஒரு வரையறைக்குட்பட்ட இந்த வளத்தை நாம் அளவில்லாமல் எடுத்துக்கொண்டே இருக்க முடியாது. தண்ணீரைப் போலவே நம் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு அத்தியாவசியப் பொருளாக மின்சாரத்தையும் நாம் கவனமாக பயன்படுத்தவேண்டும். வீணான, ஆடம்பரத் தேவைகளை நாம் தடை செய்ய வேண்டும்.

ஆற்றல் கொள்கை பற்றிய ஒரு புதிய பார்வை நமக்கு வேண்டுமா?

நிச்சயமாக. உலக வங்கி அறிமுகப்படுத்திய ‘புதிய மின்சாரக் கொள்கை’ சமூக விரோதமானது, காலாவதியானது. இந்த புதிய கொள்கையின் கீழ், மின்சாரம் தனியார்மயப்படுத்தப்பட்டு, சந்தைக்கொள்கையின் அடிப்படையில், யார் அதிகம் வாங்குகிறார்களோ அவர்களுக்கு குறைந்த விலை என்று விற்கப்படுகிறது. மும்பையில் முகேஷ் அம்பானியின் ஒரு குடும்பத்திற்கு, 27 மாடி வீட்டிற்கு, மாதம் 6 லட்சம் யூனிட் பொதுமின்சாரம் பயன்படுவதை இது அனுமதிக்கிறது.

மின்சாரத்தின் இத்தகைய தவறான பயன்பாடு சமூக விரோதமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. மின்சாரம் வழங்கும் முறைகளை மாற்றுவதன் மூலம் இதை சாத்தியமில்லாததாக ஆக்கவேண்டும். ஒரு ரேஷன் அமைப்பின் மூலம், 5 பேர் கொண்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் (அம்பானி குடும்பம் உட்பட) 150 யூனிட் மின்சாரம் தருவோமானால், நம் உள் நாட்டு , வணிக, தொழில்துறை, விவசாய மின்சாரத் தேவைகளை ஒரு புதிய அணுஉலைகூட இல்லாமல் நாம் பூர்த்தி செய்துகொள்ளலாம்.

நம் மின் உற்பத்தியை இரட்டிப்பாக்க புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வழிகளான சூரிய, சக்தி, சிறிய அணை, உயிர்ம வழிகளை பயன்படுத்த முடியும். இன்று ஜெர்மனி 20,000 மெகாவாட் திறனை சூரியசக்தி மூலமாக சேர்த்துள்ளது. இது ஜைதாபூர் திட்டத்தைவிட இரண்டுமடங்கு பெரியது. இந்தியாவில் ஜெர்மனியைவிட சூரிய ஆற்றல் அதிகமிருக்கிறது.

இதற்கு நம் அரசியல் பார்வையில் ஒரு மாற்றம் தேவையா?

ஆம். முற்றிலும். புதிய கொள்கைகளுக்கு புதிய அரசியல் பார்வை நிச்சயம் அவசியம். எத்தனைக்காலம் தான் நாம் ஏழைகளைப் பாதிக்கும் விதத்தில் பணக்காரர்களுக்கு மானியம் வழங்கிக்கொண்டே இருப்பது?

உள்ளுரில் ஜைதாபூர் திட்டத்திற்கு எதிர்ப்பு இருக்கிறதா?
மகாராஷ்டிர அரசின் கடுமையான அடக்குமுறையையும் மீறி உள்ளூர் மீனவர்களும், விவசாயிகளும் ‘ஜன் ஹித் சேவா சமிதி’ என்ற பதாகையின் கீழ் தைரியமாக போராடி வருகி றார்கள். மத்பனை சுற்றி முழுப்பகுதியும் ஒரு போலீஸ் முகாமாக மாற்றப்பட்டுள்ளது. ஏப்ரல் 18ஆம் தேதி தப்ரேஸ் சைய்கர் என்ற ஏழை மீனவர் போலிஸ் துப்பாக்கிசூட்டில் மரணமடைந்து தியாகியானார். மூதாட்டிகள் உட்பட நூற்றுக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டு போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். போலிஸ் தொல்லை என்பது ஒரு தினசரி நிகழ்வாகும். உள்ளூர்வாசிகளை பயமுறுத்த கைதுகள் இரவில் செய்யப்படுகின்றன.

இத்தனை அடக்குமுறைகளுக்குப் பின்னும் ஏக்கருக்கு 10 லட்சம் என்று அரசாங்கம் உயர்த்தி வழங்கிய இழப்பீட்டை, திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வாங்க மறுத்துவிட்டனர். எதிர்ப்பு பரவி வருகிறது. மகாராஷ்டிரத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன, இடதுசாரி கட்சிகள், ஜனநாயக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள், மற்ற கட்சிகள் என்று பலரும் பங்கேற்றிருக்கிறார்கள்.

திட்டத்தால் பாதிக்கப்பட்ட மத்பன், சாக்ரி-நாட்டே, மித்காவனே ஆகிய கிராமங்களின் வீரத்தோடு போராடும் மக்களுக்கு, உடனடியாக, இந்தியா முழுவதும் இருக்கும் மாணவர்களின் ஆதரவு தேவை. அவர்கள் அனைத்து இந்தியர்களின் சார்பாக பெரும் அடக்குமுறையை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜைதாபூர் அணுமின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒரு உள்ளூர் போராட்டமாக மட்டும் இருக்க முடியாது, இது ஒரு உள்ளூர் பிரச்சனை மட்டுமல்ல. இது ஒரு தேசிய போராட்டமாக உருவெடுக்க வேண்டும், இதில் மாணவர்கள் தங்கள் உரிய பங்கை ஆற்றவேண்டும்.

விஞ்ஞானப்பூர்வமற்ற மின்சக்தி கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில், ஜைதாப்பூர் அணுமின் திட்டத்தை எதிர்ப்பதில்,  பகுத்தறிவு சார்ந்த ஒரு மாற்றான ஆற்றல் கொள்கையை வகுப்பதில் பொதுமக்களின் பங்கு என்ன?

நாம் இதுவரை செய்த விவாத்தில் ஒன்று தெளிவாகிறது. பகுத்தறிவு சார்ந்த, மக்கள் சார்ந்த, ஒரு மாற்றான ஆற்றல் கொள்கையை வகுக்கும் வேலை என்பது அறிவியல் சார்ந்த, அரசியல்சார்ந்த வேலை. கொள்ளை விலை இறக்குமதி அணுசக்திக்கெதிரான போராட்டமானது அரசியல் சார்ந்ததும் அறிவியல் சார்ந்ததுமாகும். பொதுமக்கள் குழுக்கள் பரந்த மேடைகளை உருவாக்கி மக்களுக்கு அணு சக்தியை ஒட்டியிருக்கும் ஆபத்து பற்றி விளக்கவேண்டும். இது மட்டுமல்ல நம் அறிவியல் மற்றும் அரசியல் இறையாண்மைக்கு உருவாகும் ஆபத்து பற்றியும் சொல்ல வேண்டும்.

முடிவாக, எர்னஸ்ட் ருதர்ஃபோர்ட் அணுக்கருவை கண்டு பிடித்ததன் நூறாமாண்டு இது. இத்தனை ஆண்டுகளில் அணு அறிவியல் பல உயரங்களைத் தாண்டியுள்ளது. அணுப்பிளப்பு மற்றும் இணைவு உலகின் எரிசக்தி தேவை களை தீர்க்கமுடியும் என்று நம்பப்பட்டது. ஆனால் இந்த நம்பிக்கை உண்மையாகவில்லை. பிழையற்ற உண்மை என்று பின்வரும் விஷயங்களை நாம் நிச்சயமாக கூறமுடியும். அணுசக்தி விலை உயர்ந்தது. பல விபத்துக்கள் நமக்கு எடுத்துக்காட்டியுள்ளதைப்போல, நம் சுற்றுச்சூழலுக்கு திரும்ப சரி செய்ய முடியாத ஆபத்தை எற்படுத்தும் ஆற்றல் கொண்டது. அணுசக்தி ஆதரவு வட்டம் என்பது, ஏகபோக பன்னாட்டு நிறுவனங்களின் ஒரு ஆதிக்கக்கூட்டு. இந்தக் கூட்டிற்கு ஒரு பாதுகாப்பான புகலிடத்தை வழங்குவதென இந்திய ஆட்சியாளர்கள் இங்கு உறுதியளித்திருக்கிறார்கள். ஜைதாபூரில் நடக்கும் போராட்டம் மக்களுக்கும் உலக ஏகாதிபத்திய நலன்களுக்கும் இடையில் நடக்கும் போராட்டம்.

நம்மை நிர்மூலமாக்கும் இந்த கொள்ளையடிக்கும் படைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்வது, நாட்டுப்பற்றுள்ள, மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரின் கடமை.

நீங்கள் குறிப்பிட்ட பிரச்சனைகள், ஆபத்துகள் ஜைதாபூருக்கு மட்டுமல்லாது எல்லா அணு உலைகளுக்கும் பொதுவானதுதானே?

ஆம். ஃபுகுஷிமாவுக்குப் பிறகு எல்லா அணுஉலை பயன்-செலவு கணக்கையும் திரும்ப சரிபார்க்க வேண்டியிருக்கிறது. நிறைய அணுஉலைகளில் தீர்ந்த எரிபொருள் தொட்டிகள் கொள்கலப்பகுதியில் இல்லை. கதிரியக்க கசிவு மற்றும் தீர்ந்த எரிபொருள் கழிவு இரண்டும் சுற்றுச்சூழலையும் நம்மையும் மிகுந்த ஆபத்துக்கு உள்ளாக்குகிறது. தீவிரவாதிகள் இப்பகுதிகளை தாக்கலாம் என்பதும் பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகிறது. விலை மிக அதிகம் என்று தெளிவாக தெரிகிறது. கொடுக்க வேண்டிய விலை இவ்வளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அணுசக்தி தகுதியற்றதாக கூட இருக்கக்கூடும்.

புதுவிசை- இதழ்:35, ஏப்ரல் 2012

1 கருத்து:

 1. 1. செர்னோபில் ல் நடந்தது என்பது வெகு அரிதினிலும் அரிதாக நாம் காணும் ஒரு நிகழ்வு ! அதைப்போன்ற ஒன்று இன்று நடப்பதற்கான சாத்தியத்தை விட அணுப்போர் அதிக சாத்தியம் ! நம்மிடம் 100 பூமியை அழிக்கும் அளவுக்கு ஏன் அதற்கும் மேலே இருக்கிறது ! அவை வெடித்தால் என்ன ஆகும்? என்று கேள்வி கேட்டவர்களே பதிலுரைத்தால் நலம் !

  2. 1950 களில் நாம் கணினிகள் சென்சார்கள் இல்லாத ஒரு யுகத்தில் வாழ்ந்தோம் ! இருந்த கணினிகள் உலகம் முழுக்க விரல்விட்டு எண்ணீடலாம் ! இன்றும் அப்படி இருக்காதா என்பது கற்பனை வாதம் தவிர நிசம் அல்ல ! புகுசிமா சொல்வது என்ன? பேரிடர்கள் வந்தால் மட்டுமே விபத்து என்ற அளவுக்கு அணூலைகள் தானியங்கி மயமாகிவிட்டன இந்த அரைநூற்றாண்டில் என்பது உண்மையா பொய்யா?

  3. இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு அனல்மின் நிலையத்தை விட இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு அணுமின் நிலையம் 100 பங்கு குறைவான கதிர்வீச்சையே கொண்டிருக்கும் என்பதை யார் அறிவார்கள்? மற்ற நோய் விசயங்களையெல்லாம் அனல்மின்நிலையங்களின் அருகில் சென்று கேட்டுக்கொள்ளுங்கள் !

  3. பூமியின் கையிருப்பில் உள்ள யுரேனியத்தை வைத்து 50 ஆண்டுகள் இயக்கலாம் என்று சொல்லப்பட்டது இன்றைய மறுசுழற்சித்தொழில்நுட்பங்கள் மூலம் 400 ஆண்டுகள் இயக்கலாம் என்று சொல்லப்படுவதன் அறிவியல் உண்மை என்ன?

  4. புளூட்டோனியம் மூலம் சோவியத்ரஷ்யா செய்த அணுகுண்டுகளை அமெரிக்கா இன்றூ வாங்கு அதிலிருந்தும் மின்சாரம் செய்வதை அறிவோமா நாம்?

  5. இது தார்மீக ரீதியானது. மனிதன் விபத்தென்ற பயத்தின் மீது சவாரி செய்தால் மனநோயாளி ஆகலாமே தவிர ஒவ்வொரு அசாத்திய அபாய சக்தியையும் மனிதன் உபயோகப்படுத்தும் விதமாக மாற்றுவது என்ன சக்தி? என்ன வியல்? என்ன நோக்கம்? என்ன தாக்கம்? வாய்ப்புக்கு நன்றி நண்பரே !

  பதிலளிநீக்கு