புதன், அக்டோபர் 3

ஒசூரெனப்படுவது யாதெனின் -3 ஆதவன் தீட்சண்யா




'இளங்கலை முதலாம் ஆண்டு முடிப்பதற்குள்ளாகவே டெலிபோன் ஆபரேட்டர் வேலைக்குத் தேர்வாகி நியமன உத்தரவுக்காகக் காத்திருந்த நான், அடுத்து வந்த நாட்களில் போனால் போகட்டுமென்று எப்போதாவது கல்லூரிக்கும் போய்வந்தேன். அதுவும்கூட படிப்பு அல்லாத மற்ற நிகழ்ச்சிகள், ஸ்டிரைக் அல்லது வேறேதும் விசேஷங்களின் பொருட்டு சென்று வந்ததாக நினைவு. கல்லூரிக்குப்போய் படிப்பதே வேலைக்குப் போவதற்காகத்தான் என்று இருக்கிறபோது, எனக்குதான் வேலையே கிடைத்துவிட்டதே பிறகு எதற்கு படிக்கவேண்டும் என்கிற திமிரும் தெனாவெட்டும் மனதில் வந்துவிட்டிருந்தது. 'டிகிரியை முடிச்சா இன்னும் பெரிய வேலைக்குப் போகலாமில்ல' என்று அக்கறையாக அறிவுரை சொன்னவர்களிடம், 'பெரிய வேலைனா யானை மேய்க்கிறதா...?' என்று இளக்காரமாகக் கேட்டேன்.  

பியூனைத்தவிர வேறு அரசு ஊழியர் எவரையும் கண்டிராத எங்களுடைய உறவினர் ஒருவர், 'நீயெல்லாம் படிச்சுப் பெரிய பெரிய பியூனா வரணும்டா தம்பி' என்று வாழ்த்தியதை(?) நினைவூட்டிப் பகடியடித்ததும் உண்டு. வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்துவிட்டு ஒரு இன்டர்வியூகூட வராமல் வருஷக்கணக்கில் காத்துக்கிடக்கும் பட்டதாரிகள் பற்றின புள்ளிவிபரங்களை எல்லாம் அளந்துவிட்டு என் தரப்பு வாதத்தை நிலைநிறுத்தப் பார்ப்பேன். எக்கேடும் கெட்டுப்போ என்று நினைத்துக்கொண்டு ஒதுங்கிவிடுவார்கள்.

கல்லூரிக்குப் போகாத மற்ற நாட்களில் கட்சி அலுவலகம் போவதையும் சண்முகத்திடம் புத்தகங்கள் வாங்கிப் படிப்பதையும் வழக்கமாகக்கொண்டிருந்தேன். தணிகைச்செல்வனின் 'ஒரு சமூக சேவகி சேரிக்கு வந்தாள்’, 'ஒரு துண்டு இந்தியாவும் நானும்’, மாக்சிம் கார்க்கியின் 'தாய்’ என்று கைக்கு சிக்கியதை எல்லாம் படித்துக்கொண்டு இருந்தேன். புத்தக வாசிப்பு ஏதேனும் மாற்றங்களை சிறு அளவிலாவது ஏற்படுத்தும்தானே. ஆதிதிராவிடர் நலத் துறை நடத்துகிற தீண்டாமை ஒழிப்பு வார விழாவில் பரிசு பெறுவதற்காகக் கவிதை என்று எதையாவது கிறுக்கிக்கொண்டு இருந்ததை நிறுத்திக்கொள்வதற்கு இந்த வாசிப்பு எனக்கு உதவியது. புரிந்ததா, விளங்கியதா என்று எல்லாம் யோசித்துக்கொண்டு இருக்காமல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் தொகுப்பு நூல்களையெல்லாம்கூட படித்துக்கொண்டு இருந்தேன் அல்லது படிப்பதாகக்  காட்டிக்கொண்டு இருந்தேன். சிலவரிகளுக்கு சிவப்பு மசியால் அடிக்கோடிடுவது, ஓரத்தில் பெருக்கல்குறி இட்டு முக்கியப்படுத்திக் காட்டுவது, ஏதாவது சில பக்கங்களின் முனைகளை மடித்துவைப்பது என நான் படித்ததற்கான அடையாளங்களைப் பொறித்து அலட்டிக்கொண்டதற்கும் பஞ்சமில்லை. நக்சல் வேட்டை என்கிற பெயரில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த பகுதி என்பதால் இப்படியான புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு திரியாதே என்று சிலர் அறிவுறுத்தியபோது என்னுடைய வீம்பு கொஞ்சம் கூடிப்போனது. பஞ்சாங்கமும் செக்ஸ் புத்தகமும் பகிரங்கமாக விற்கப்படும்போது சமூகத்தையே புரட்சிகரமாக மாற்றி அமைக்கிற புத்தகங்களை மறைத்துப் படிக்கணுமா என்று ஏட்டிக்குப்போட்டியாய் எகிறினாலும் உள்ளுக்குள் உதறல்தான். எதற்கு வம்பென்று ஜோல்னாப்பை  மாட்டிக்கொண்டேன். அதனுள்ளே ஏதாவது ஒன்றிரண்டு சிவப்புப் புத்தகங்கள் எப்போதும் உடனிருந்தன. 'ரீச்ஸ்டாக் சதிவழக்கில் டிமிட்ரோவ் வீரமுழக்கம்’ (என்பதாக நினைவு) என்ற நூலில் மிகவும் பொருத்தமாக எடுத்தாளப்பட்டு இருந்த 'சம்மட்டி அடியைத் தாங்கும் இரும்பாக இருக்க விரும்பவில்லையானால், நீ சம்மட்டியாக இரு...’ என்கிற கதேயின் வரிகளையும் இதுபோன்ற சிலவற்றையும் சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் மேற்கோள் காட்டி பேசி அரட்டிக்கொண்டு இருந்தேன்.  

ஆனால், புத்தகங்களை வைத்துக்கொண்டு நான் இப்படியாக நடத்திவந்த விளையாட்டு வெகுசீக்கிரத்தில் ஒரு முடிவுக்கு வந்தது. ஆமாம், கிடைத்த வேலையைத் தொலைக்கச் சொல்லி என்னைத் தூண்டிய ஒரு புத்தகத்திடம் சிக்கிக்கொண்டேன். அது, ஏ.கே.கோபாலனின் சுயசரிதையான 'நான் என்றும் மக்கள் ஊழியனே’!

'அன்றிரவு எனக்குத் தூக்கம் வரவில்லை. என் மனதில் இருதரப்பட்ட எண்ணங்களுக்கு இடையில் போராட்டம் நடந்துகொண்டு இருந்தது. அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் குதிக்கவேண்டும் என்று என்னுடைய  உள்ளம் அறைகூவி அழைத்தது. உற்றார் உறவினர்களிடமிருந்து  விடைபெற வேண்டியிருக்கும். மதிப்புக்குரிய என் தகப்பனாரின் கடுமையான வெறுப்புக்கு நான் பாத்திரமாக வேண்டியிருக்கும். அன்புத் தாயினைத் துன்பத் துயர்களுக்கு ஆளாக்க வேண்டியிருக்கும். ஆடம்பர, சுகபோக வாழ்க்கையினை என்றென்றைக்குமாகத் தூக்கியெறிய வேண்டியிருக்கும். மக்களைச் சார்ந்து வாழ வேண்டியிருக்கும். அவதூறுகளுக்கும் கொடுஞ்சொற்களுக்கும் இரையாக வேண்டியிருக்கும். ஆட்சியாளர்களின் தடியடிகளுக்கும் துப்பாக்கிக் குண்டுகளுக்கும் இலக்காக வேண்டியிருக்கும். ஒருவேளை தூக்குமரமும் எனக்காகக் காத்துநிற்கும். எதிர் காலத்தில் எண்ணற்ற துன்பங்களும் துயரங்களும் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். எனினும், எனக்கு மகிழ்ச்சியுண்டு. அவமதிப்புக்கு ஆளாகி வாழ வழியின்றி தற்கொலை, கொலை, கொள்ளை, திருட்டு முதலிய குற்றங்களைச் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்ற எண்ணற்ற மனித ஆத்மாக்களுடைய நல்வாழ்வுக்காக நானும் சில நற்பணிகளைச் செய்தேன் என்ற சுயதிருப்தி. என்னை ஈன்றெடுத்த இந்தியத் தாயின் விடுதலைக்காக, சுதந்திரப் பேரிகையின் சங்கநாதம் கேட்டு போர்க் கொடியினை உயர்த்திய ஒரு ஆண்மகனின் பூரிப்பு...’  சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கேற்பதற்காக ஆசிரியர் வேலையில் இருந்து ராஜினாமா செய்வதற்கு முந்தியநாள் இரவின் மன நிலையை ஏ.கே.ஜி. இப்படி எழுதி இருந்தார். இதைப் படித்த கணத்திலேயே நான் இன்னும் சேர்ந்திருக்காத வேலையை ராஜினாமா செய்துவிடுமளவுக்கு வெகுவாக உணர்ச்சிவயப்பட்டிருந்தேன்.  

வேலையில் சேரப்போவதில்லை என்றும் கட்சியின் முழுநேர ஊழியராகி ஏ.கே.ஜி. மாதிரி மக்களிடையே அரசியல் பணி செய்யப்போவதாகவும் சண்முகத்திடம் சொன்னபோது, உத்தியோகத்தில் இருந்துகொண்டும் அரசியல் வேலை பார்க்கலாமே என்றார். ஒரு முழுநேர புரட்சிக்காரன், இரண்டாம் ஏ.கே.ஜி. உருவாகுவதைத் தடுக்கப்பார்க்கிறீர்களா என்கிற சந்தேகப் பார்வையை வீசினேன் அவர்மீது. எல்லாத் துறைகளிலும் இருப்பதைப்போலவே நீ வேலைக்குச் சேருமிடத்திலும் தொழிற்சங்கம் இருக்கிறது. அங்குள்ள தொழிலாளர்களைச் சங்கத்தில் திரட்டுவதும், திரட்டிய தொழிலாளர்களை அரசியல்படுத்துவதும், இந்த ஏற்றத்தாழ்வான அமைப்புக்கு எதிராக அவர்களைப் போராட வைப்பதும்கூட அரசியல் பணிதான் என்றார் அவர். நான் சமாதானமாகவில்லை என்பதைப் புரிந்துகொண்டவர்போல, அவர் ஹரிபட்டிடம் கூட்டிப் போனார். 'அங்கும் மக்கள்தான் இருக்காங்க, அவங்களும் திரட்டப்பட வேண்டியவங்கதான். போய் வேலையில சேருங்க...’ என்று அவர் பஞ்சாயத்தை முடித்துவைத்தார்.  'போய் வேலையில் சேருங்க' என்று அவர் சொல்லிவிட்டார், ஆனால், அரசாங்கம்தானே ஆர்டர் கொடுக்கணும்? இப்போ அப்போவென இழுத்தடித்துக்கொண்டு இருந்தது. மாடு வாங்குவதற்கு முன்பே, கறக்கிற பாலின் மிச்சத்தை யாருக்குக் கொடுப்பது என்று சண்டையிட்டுக்கொண்ட கணவன் மனைவி கதைபோல, சேராத வேலையில் சம்பளம் வாங்கி புத்தகத்துக்கு எவ்வளவு ஒதுக்குவது, புரட்சிக்கு எவ்வளவு ஒதுக்குவது என்கிற மனக்கணக்கோடு கட்சி அலுவலகத்துக்குப் போய்வந்துகொண்டிருந்தேன்.

தொழிற்சங்க வேலைநிமித்தம் அடிக்கடி ஒசூருக்குப் போய்வருகிற ஹரிபட், வேலை நிரந்தரம், உழைப்புக்கேற்ற ஊதியம், கண்ணியமான பணியிடச்சூழல் ஆகியவற்றுக்காக அங்கு நடக்கும் போராட்டங்கள் குறித்து சொல்லும் விஷயங்களைக்கொண்டு அப்போது தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிக்கான உலைக்களத்தைப்போன்ற சித்திரத்தை எனக்குள் பெற்றிருந்தது ஒசூர். அவரைப் பார்க்க அவ்வப்போது ஒசூரில் இருந்துவருகிற தொழிலாளர்களில் பலரும் ஸ்வெட்டர் ஒன்றைத் தோளில் போட்டுக்கொண்டு இருப்பார்கள். நீண்ட அங்கிகளைப் போர்த்திக்கொண்டு உலாவும் ரஷ்யப் பாட்டாளிகள் என்று அவர்களில் சிலரை நான் அடையாளம் வைத்திருந்தேன். பணி நிலை சார்ந்த அவர்களுடைய பேச்சுகள் எனக்குப் பெரும்பாலும் புரியாது. ஆனால், அதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் நான் எப்படி தொழிலாளி வர்க்கத்துக்கான 24X7 புரட்சிக்காரனாவது என்பதால், அங்கிருந்து எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருப்பேன். (ஆனால், இன்றுவரை எதுவும் புரியவில்லை என்பதுதான் உண்மை)

கோமல் சுவாமிநாதனின் 'தண்ணீர் தண்ணீர்’ நாடகம் படமாக வந்திருந்த சமயம் அது. டி.சண்முகம், பி.சங்கரய்யா, எஸ்.காளிமுத்து, நாகை பாலு போன்ற தோழர்கள் பாரதி இலக்கிய மன்றம் என்பதன் சார்பில் கோமல் சுவாமிநாதன் குழுவினரை தருமபுரிக்கு வரவழைத்து, 'ஒரு இந்தியக் கனவு’ நாடகத்தை நடத்த ஏற்பாடு செய்துகொண்டு இருந்தார்கள். இதற்கான வேலைகளில் மாணவர் சங்கத் தோழர்களாகிய நாங்களும் உற்சாகமாகப் பங்கேற்று இருந்தோம். வாத்தியார் ராமன், வீராச்சாமி, ராஜ்மதன் போன்ற நடிகர்களிடம் மிகுந்த ஆர்வத்தோடு  பேசினோம். அவர்களும் சகஜமாகத்தான் இருந்தார்கள். இங்கு நாடகத்தை முடித்துக்கொண்டு அப்படியே அடுத்தநாள் கல்வராயன் மலைக்குப்போய் 'ஒரு இந்தியக்கனவு’ படப்பிடிப்பினைத் தொடங்கும் திட்டத்துடன் அந்தக்குழு வந்திருந்தது. படத்தில் கதாநாயகியாய் நடிக்க இருந்த சுஹாசினியையே இங்கும் அழைத்து வந்திருக்கலாமே என்று அவர்களில் யாரிடமாவாது கேட்கவேண்டுமென்று நினைத்திருந்தேன், கேட்கவில்லை. அரங்கத்துக்கான ஜோடனைப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்திருந்தது. தேங்காய், பழம்வைத்து, சூடம் ஏற்றி  வீராச்சாமி பூசை செய்த பிறகே, லாரியிலிருந்த பொருட்கள் இறக்கப்பட்டதைப் பார்த்ததும் எனக்குக் கடுப்பாகிவிட்டது. 'இவங்கள என்னமோ ரொம்ப முற்போக்குனு சொன்னீங்க... ஆனா, பூசையெல்லாம் செய்யறாங்களே' என்று சண்முகத்தைப் பிடித்துக்கொண்டேன். 'ஒரு குழுவில் இருக்கிற எல்லாரும் ஒரே மாதிரி இருக்கமாட்டாங்க. நம்பிக்கை உள்ளவங்க கும்புடுறாங்க...' என்றார். புரிந்துகொள்ள முடியாத விஷயங்கள் பிடிப்பதில்லை அல்லது பிடிக்காத விஷயங்கள் புரிவதில்லை. நாடகம் அளவுக்கு ஏனோ எனக்குப் படம் பிடிக்கவில்லை. கோமல் திரையிலும் நாடகத்தையே நடத்தியிருந்ததும்கூட காரணமாக இருந்திருக்கலாம். அதற்குப் பிறகு, கொஞ்சநாட்கள் கழித்து இதே குழுவை அழைத்து  'அசோகவனம்’ என்ற நாடகத்தையும் தருமபுரியில் நடத்தினோம்.

இந்த நாடகங்களைக்காண ஒசூரில் இருந்து லாரி வைத்துக்கொண்டு வந்திருந்த ஆலைத் தொழிலாளர்களைப் பார்த்து வியந்துபோனேன். டிக்கெட் வாங்கி நாடகம் பார்ப்பதற்காகவா அவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறார்கள் என்று திரும்பத் திரும்ப யோசித்துக்கொண்டிருந்தேன். இதனூடாக வினாயகம், பொன்.முத்தழகு, ஜார்ஜ், சி.முத்து போன்ற தோழர்களுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டிருந்தது. பிறிதொரு தடவை, ஒசூர் அசோக் லேலண்ட் தொழிலாளி சக்திவேலை கொன்றவர்களை கைது செய்யக்கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த வந்திருந்த அவர்கள் ஒவ்வொருவரும் 'தாய்' நாவலில் வருகிற பாவல் கர்ச்சாகின் சாயலிலேயே எனக்குத் தெரிந்தார்கள். சோவியத் நாவல்களில் வரும் பரீஸ் பொலோவாய், அலெக்சேய் மாரஸ்யேவ், நிகோலாய் ஒஸ்திரோவ்ஸ்கி போன்ற புரட்சியாளர்களின் இந்திய வாரிசுகள் ஒசூர் தொழிற்பேட்டையில் வாழ்வதாக மிகைப்படுத்திக் கற்பிதம் செய்துகொள்ளும் ஒரு வியாதி அப்போது எனக்கு வந்துவிட்டிருந்தது. எப்போதும் இருளுக்குள் மங்கலாகத் தெரியும் ஒசூர் மெதுவே செவ்வண்ணமேறி ஜொலிப்பதாகக் கற்பனை செய்யும் அளவுக்கு இந்த வியாதி முற்றியபிறகு, ஒசூருக்குச் செல்லும் எந்தவொரு வாய்ப்பையும் நான் நழுவவிட்டதில்லை. மாணவர் சங்க மாநில நிர்வாகி ஸ்ரீதருடன் ஒசூர் ஐ.டி.ஐ. மாணவர்களைச் சந்திக்கவும் மாணவர் சங்க மாவட்ட மாநாட்டுக்காக நிதி திரட்டுவதற்காகவும் விழுந்தடித்துக்கொண்டு ஒசூர் போனதெல்லாம் இதே காரணத்தால்தான். உடன் வந்த சில தோழர்கள் குளிருக்குப் பயந்து கைகழுவாமலே துரை ஒட்டலில் சாப்பிட்டுவிட்டு தாளில் கையைத் துடைத்துக்கொண்டபோது 'ஒசூருக்கு வந்துவந்து போவதால் நமக்கெல்லாம் இது பழகிருச்சு’ என்று விறுவிறுக்கும் அந்தத் தண்ணீரில் கை கழுவி நான் அலட்டிக் கொண்டதையும் அன்றிரவு ரங்கசாமிப் பிள்ளைத் தெருவில் இருந்த சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் தங்கியபோது மற்றவர்கள் அசதியில் தூங்கிக்கொண்டு இருக்க நான் குளிர் தாங்காமல் அங்கிருந்த பேனர் துணியொன்றை எடுத்துப் போர்த்திக்கொண்டதையும் நினைத்தால்  சிரிப்புதான் வருகிறது.  

ஒசூரின் சுவர்களில் எழுதப்பட்டிருந்த தொழிற்சங்க முழக்கங்களைக் கண்டபோது எனக்குள் ஏற்பட்ட கிளர்ச்சி என்னை ஒரு சுவரெழுத்துக்காரனாக்கியது. அதற்குப் பிறகு, தருமபுரிச் சுவர்கள் என்னிடம் படாதபாடுபட்டன.  காவி, நீலம், சுண்ணாம்பு டப்பாக்களோடு ஊரடங்கிய வேளையில் விடுதியில் இருந்து குழுவாகக் கிளம்பி வழிநெடுக எழுதிக்கொண்டேபோய் நகரத்துக்குள்ளும் விடிய விடிய எழுதிவிட்டு அதிகாலையில் நாகாவதி அணைக்குக் கிளம்புகிற முதல் பஸ்ஸில் விடுதிக்குத் திரும்புவோம். இடையிலே மறித்து விசாரிக்கும் போலிஸிடம் 'ஜூலியஸ் பூசிக்' போன்ற தோரணையில் பதில் சொல்லி தப்பியதும் உண்டு, மாட்டிக்கொண்டு திண்டாடியதும் உண்டு. தருமபுரி பஸ் நிலையத்துக்கு உள்ளேயே டவுன் பஸ்களுக்கென்று ஒரு பகுதி அப்போதுதான் கட்டப்பட்டிருந்தது. விரைவில் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்பட இருந்தது. வெள்ளையடித்து, நிலவொளியில் ஜொலித்துக்கொண்டிருந்த அந்தக் கட்டடத்தின் பகட்டு என்னை கிறுகிறுக்க வைத்தது. அதன் மேற்பகுதி மாசுமருவில்லாத மிக நீண்டச்சுவராக இருந்ததைப்பார்த்து இதில் ஏதாவதொன்றை எழுதியே ஆகவேண்டும் என்று என் கைகள் பரபரத்தன. பிறகென்ன, வாலிபர் சங்கச் செயலாளர் ஹரியை உசுப்பேற்றி காவியும் பிரஷும் வாங்கிக்கொண்டு ஒருநாள் இரவு கன்னம் வைத்தோம். மற்றவர்கள் ஏணியைப் பிடித்துக்கொள்ள மேலேறிய நான், கோழிக்கோட்டில் நடக்க இருந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இரண்டாவது அகில இந்திய மாநாடு பற்றிய  விளம்பரத்தை எழுதிக்கொண்டு இருந்தேன். முடிக்கும் தருவாயில் அங்கு போலிஸ் வருவதைப் பார்த்ததும் நான் எழுதுவதை நிறுத்திவிட்டு மொட்டைமாடிக்குப்போய் பதுங்கிவிட்டேன். கீழே இருந்தவர்களும் ஏணியை விட்டுவிட்டு வேறுபக்கம் நகர்ந்துவிட்டார்கள். 'கோழிக்கோட்டுல நடத்தட்டும், இல்லாட்டி கொக்குகோட்டுல நடத்தட்டும் அதுக்காக இப்படி புத்தம்புதுச் செவுத்த நாசம் பண்ணுவானுங்களா? கைக்குச் சிக்கினா அவுனுங்கள வெளுத்துடணும்... ' என்று தெள்ளுதமிழில் கொஞ்ச ஆரம்பித்தார்கள் போலிஸ்காரர்கள். தற்செயலாக அங்கு வருவதுபோல்வந்த சண்முகம், 'எல்லோருக்கும் கல்வி, வேலை வேணும்னுதானே எழுதி இருக்காங்க... இதுக்குப்போய் ஏன் சார் டென்ஷன் ஆகி கத்திக்கிட்டிருக்கீங்க?' என்று அவர்களைச் சமாதானப்படுத்த முயற்சித்தார். ஆனால், சமாதானத்துக்கு அடங்குகிறவர்களா நம்மூர் போலிஸ்காரர்கள்? அங்கும் இங்கும் நோட்டம் பார்த்துவிட்டு சார்த்திவைத்திருந்த ஏணியைத் தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். மொட்டைமாடியிலிருந்து குனிந்து தலைகீழாகவே மிச்சத்தையும் எழுதி முடித்துவிட்டு பெரிய சாகசமெல்லாம் செய்து கீழிறங்கி வருவதற்குள் எனக்கு உயிர்போய் உயிர் வந்தது. ஆனாலும், அடங்குகிற புத்தி நமக்கேது?... என் மீது எப்போதும் பெயின்ட் துளிகள் காய்ந்து படிந்திருந்தன. விடுதியில் எங்களுடைய அறையின் அலமாரிகளில் எப்போதும் பெயின்ட் டப்பாக்கள் நிறைந்திருந்தன. கோணல்மாணலாய் நாலு எழுத்து எழுதிவிட்டு ஏதோ சுவரோவியம் வரைந்த ரிவேரா மாதிரித் திரிந்தேன். அப்போது எடுத்த பயிற்சிதான் அடுத்து வந்த ஆண்டுகளில் நடந்த மாநாடுகள், போராட்டங்கள் மற்றும் கலைவிழாக்கள் பற்றிய விளம்பரங்களை ஒசூர் மற்றும் மாவட்டத்தின் சுவர்களில் எல்லாம் என் கை வண்ணத்தால் நிறைக்கும் தைரியத்தைக் கொடுத்தது. 

(சொல்வேன்...) 

நன்றி: http://en.vikatan.com/

1 கருத்து:

  1. பயங்கர நகைச்சுவை. விடாமல் சிரித்துக்கொண்டே தொடர்ந்தேன். கண்களில் நீர் கூட வழிந்து விட்டது. சொல்லுங்கள் இன்னும். சுவாரிஸ்யமாகவே செல்கிறது.

    பதிலளிநீக்கு

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...