திங்கள், ஜனவரி 7

குறுக்குசால்: தோலிருக்க சுளை முழுங்கிகள் - ஆதவன் தீட்சண்யா

ன்னோடு பணிபுரிகிற பட்டியலினத்தவரான பெண் ஊழியர் ஒருவர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திடமிருந்து இடஒதுக்கீட்டின் மூலம் வீட்டுமனை ஒன்றை சமீபத்தில் பெற்றார். பட்டியலினத்தவரின் பலநூறு விண்ணப்பங்கள் பங்கேற்ற குலுக்கலில் அவர் தேர்வாகியிருந்தார். அதாவது விண்ணப்பித்த அவ்வளவு பேரின் சார்பில் ஒரு வீட்டுமனை அவருக்கு ஒதுக்கப்பட்டது. உடனே அவரை தொடர்பு கொண்ட ஒருவர் அந்த மனையை தனக்கே விற்றுவிடுமாறும் அதற்காக மனைக்குரிய தொகையைவிடவும் கூடுதலாக நான்கு லட்ச ரூபாய் தருவதாகவும் பேரத்தை ஆரம்பித்துள்ளார். நான்கு லட்ச ரூபாய் கூடுதலாக கொடுத்தாவது வாங்கிப்போடுமளவுக்கு விலைமதிப்புள்ள இடம்தான் என்பதால் அதை எப்படியாவது வாங்கிவிடுவது என்று ஒசூரிலேயே கூடாரமடித்த ஒருவர் கிட்டத்தட்ட முற்றுகையிட்ட மாதிரியான நெருக்கடியை உருவாக்கி தனது பேரத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதற்காக அவர் தனது தொழிற்சங்கப்பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார். பொதுப்பட்டியலில் போட்டியிட்டு சிடைக்காத வீட்டுமனையை இப்படி கொல்லைப்புறமாக சென்று கைப்பற்றிவிட்டார்.

அரசியல் சட்டம் வழங்கியுள்ள முன்னுரிமையின் அடிப்படையில் இடஒதுக்கீடாக பெற்ற மனையை தலித்தல்லாதவருக்கு விற்பது அரசியல் சட்டத்தின் நோக்கங்களுக்கே எதிரானது, துஷ்பிரயோகம் செய்வது என்று அந்த பெண் ஊழியருக்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல் மனையை மேற்படி நபரின் நெருக்கடி தாளாமல் அவருக்கு கைமாற்றி கொடுத்துள்ளார். இந்த விற்பனைக்கு முறையான ஆவணங்களை உடனடியாக உருவாக்க முடியாது என்றாலும் நடைமுறையில் அதன் உரிமையாளராக இனி மேற்படி நபரே இருப்பார் என்பதுதான் அவலம். வெற்றுப்பத்திரம் அல்லது முன்தேதியிட்ட காசோலைகளை அந்தப் பெண்ணிடம் வாங்கிவைத்துக்கொண்டு மனையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாஃபியா வேலையில் அவர் இறங்கக்கூடும்.

சம்பந்தப்பட்ட இருவருக்குமிடையில் நடைபெற்ற இந்த முறைகேடான பரிவர்த்தனை சட்ட விரோதம், மோசடி, தலித் விரோதம் என்று அப்பட்டமாகத் தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் நான் செய்துள்ள விண்ணப்பத்தின் பேரில் ஒருவேளை விசாரணை நடைபெறும் பட்சத்தில் அப்படியொரு பரிவர்த்தனையே நடக்கவில்லை என்று இருவருமேகூட மறுத்துவிடலாம். அப்படி மறுக்கும்பட்சத்தில் தலித்துக்கு ஒதுக்கிய மனை அதற்குரிய தலித்திடமே தங்கிவிடும், அதேவேளையில் ஒரு தலித்தின் சொத்தை அபகரித்த குற்றத்திற்கான அபராதம்போல நான்கு லட்சம் ரூபாயை மேற்படி நபரின் இழக்கவும் நேரிடலாம். இதில் எது நடந்தாலும் வரவேற்கத்தக்கதே. ஒவ்வொரு அங்குல நிலத்துக்கும் மக்கள் உயிரீந்தும் போராடிக்கொண்டிருக்கும் காலத்தில் தலித்துகள் ஏன் இவ்வாறு தமது உடைமைகளை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற தேடுதலில் கிடைத்த குறிப்புகளைக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

***

எந்த மனிதவுணர்வோடும் அறத்தோடும் நியமங்களோடும் பாகுபாடுகளோடும் தொடர்பின்றி அநாதிக்காலம்தொட்டு சுயேச்சையாக இருந்துவந்த நிலம் வரலாற்றுப்போக்கில் சொத்தாக மாறியது முதல் இன்றுவரை அது எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் தாயாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை அபகரித்து வைத்திருப்பவர்களும் ஆறடி நிலத்தை இடுகாட்டிலும்கூட பெற்றிராதவர்களுமாக உள்ள இந்த ஏற்றத்தாழ்வை அப்படியே பேணிக் காப்பதற்குத்தான் இங்கு சட்டம் போலிஸ் ராணுவம் நீதிமன்றம் விளக்குமாறு தொடப்பக்கட்டை உள்ளிட்ட படைபரிவாரங்களோடு அரசு என்கிற ஒன்று இருந்து ஆள்கிறது. உழுபவருக்கே நிலம், நிலப்பகிர்வு, நிலச்சீர்திருத்தம் என்கிற கோரிக்கைகளுக்காக நடைபெறும் பேராட்டங்களை ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கிற அரசின் ஒடுக்குமுறையை இந்தப் பின்னணியில் வைத்தே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வை நிலைநிறுத்த காவுகொள்ளப்பட்ட உயிர்களைவிடவும் பன்மடங்கு இழப்பைச் சந்திக்காமல் இங்கு யாதொரு சமனிலையும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.

சொத்து என்பதில் மிக அடிப்படையானதும் முதன்மையானதும் நிலம்தான். நிலம்தான் மற்ற எல்லா பொருளுற்பத்திகளுக்கும் சொத்துக்களுக்கும் ஆதாரம். ஆகவே நிலத்தோடு ஒருவருக்குள்ள உறவே அவருக்கு சமூகத்தில் உள்ள மற்றெல்லா உறவுகளுக்கும் அடிப்படையாகிறது. இந்தியாவின் 1902843520 ஏக்கர் நிலப்பகுதியை 1156897766 இந்தியருக்கும் சரியாக வகிர்ந்தால் ஒவ்வொரு இந்தியருக்கும் சராசரியாக 1.6 ஏக்கர் நிலத்தை சொந்தமாக்கிவிட முடியும். தனிச் சொத்துடைமையை சாதியமும் சாதியத்தை சொத்துடமையும் ஒன்றுக்கொன்று அரணமைத்து பாதுகாக்கும் இச்சமூகத்தில் அப்படியொரு நீதியான பகிர்வோ பங்கீடோ இங்கு நடக்கவில்லை. நடப்பதற்கான அறிகுறியும் இப்போதைக்கு தெரியவில்லை.

சமூகத்தை சாதிகளாக சிதைத்ததும் இன்னின்ன சாதிகளுக்கு சொத்துரிமை இல்லை என்று ஒதுக்கிவைப்பதற்கான சட்டங்களை இயற்றியதும் அவற்றுக்கு சமூக ஒப்புதல் பெறப்பட்டதுமாகிய நீண்ட வரலாற்றின் தொடர்ச்சியில் வைத்து இன்றைய சமூக அமைப்பை விளங்கிக்கொள்ள முயற்சிக்கிற ஒருவர் சொத்துடமைக்கும் சாதியத்திற்கும் உள்ள நெருங்கிய பிணைப்பை நன்குணர முடியும். நிலம் என்கிற திட்டவட்டமான சொத்து சாதி என்கிற அரூபமான உணர்வுடன் இணைக்கப்பட்டதையடுத்து சாதியும் ஒரு திடத்தன்மையை அடைந்திருக்கிறது. எனவே சொத்துடமையையும் சாதியத்தையும் எதிர்த்தப் போராட்டம் இறுதிவெற்றி பெறும் வரை நிலவுரிமையில் ஏற்படுத்தவேண்டிய மாற்றத்தை ஒத்திப்போட்டுவிடலாமா என்கிற ஒரு கேள்வி எழுகிறது. தேசம், இனம், மதம், சாதி, பால்நிலை ஆகிய சார்புநிலைகள் நிலத்தின்மீது ஏற்றிவைக்கப்பட்டவைதானே தவிர நிலம் எப்போதும் அதன்நிலையில் சுயேச்சையாகவே இருக்கிறது என்பதை உணர முடியுமானால், சொத்துடமையையும் சாதியத்தையும் தகர்க்காமலேகூட நிலவுரிமையில் ஒரு மாற்றத்தை உருவாக்கிவிட முடியும். (இதன்பொருள் சொத்துடமையும் சாதியமும் நீடிக்க வேண்டும் என்பதல்ல).

நிலக்குவியலை தகர்த்து நிலவுரிமையை பரவலாக்குவதற்கானப் போராட்டம் சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதற்கான போராட்டத்துடன் தவிர்க்கமுடியாத வகையில் பிணைந்திருக்கிறது. நிலவுகின்ற சூழலை மாற்றியமைக்க விரும்புவதாக சொல்லிக்கொள்கிற எந்தவொரு இயக்கமும் நிலத்தின் மீதான உரிமையில் மாற்றத்தை உருவாக்குவதற்கும் குறைவான செயல்திட்டத்தைக் கொண்டிருக்க முடியாது என்பதற்கேற்ப 19ம் நூற்றாண்டின் இறுதியில் இயங்கிவந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இயக்கம் நிலத்தின் மீதான உரிமை¬யும் கோரியது. ‘‘...இக்குலத்து கிராமவாசிகளுக்கு அங்கங்கு வெறுமனேயுள்ள பூமிகளைக் கொடுத்து ஆதரிக்க வேண்டும்...’’ என்று ஒடுக்கப்பட்ட மக்கள் எழுப்பிய கோரிக்கையின் தொடர்ச்சியில்தான் 1892 ஆம் ஆண்டு ‘டிப்ரஸ்டு கிளாஸ் லேண்ட்) என்கிற பஞ்சமி நிலம் என்னும் வகைமை உருவானது.

1892ல் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த திரமென்ஹீர் என்ற பிரிட்டிஷ்காரர் ஆய்ந்தளித்த தயாரித்த ‘செங்கல்பட்டு மாவட்ட பறையரின மக்களைப் பற்றிய குறிப்புகள்’ என்ற அறிக்கையின் தொடர் நடவடிக்கையாகத் தான் பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது என்றாலும் நிலவுரிமைமீது ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த ஆர்வமே அப்படியொரு நிலை உருவாகிட பின்புலமாக அமைந்தது எனலாம். பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைந்தும், பிரிட்டிஷாரின் ஏனைய காலனி நாடுகளுக்கு புலம்பெய்ர்ந்து சென்றும் ஈட்டிய சேமிப்பிலிருந்து நிலங்களை வாங்குவதிலும் அவற்றில் பயிரிடுவதிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் காட்டிய ஆர்வத்தையும், நிலத்தோடும் விவசாயத்தோடும் பிணைக்கப்பட்டதான வாழ்முறையை ஒடுக்கப்பட்ட மக்கள் கொண்டிருப்பதையும் கணக்கிற்கொண்டே பஞ்சமி நில உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வகையில் தமிழ்நாட்டில் மட்டும் 3 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் நிலம் தலித்துகளுக்கு வந்தடைந்தது. இதேபோல டி.சி லேண்ட்/ கண்டிஷன் பட்டா என்று விளிக்கப்படும் 12 லட்சம் ஏக்கர் நிலம் இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப்பாட்டுக்குள் வந்தது.

இந்த டி.சி.நிலம் வழங்கப்படுவதற்குரிய வழிகாட்டுதல்களுக்காக இயற்றப்பட்ட வருவாய் வாரியத்தின் நிலையாணைகள் உள்ளிட்ட பல்வேறு விதிகளும் சட்டங்களும் ‘டி.சி. நிலத்தைப் பெறுகிறவர் முதல் பத்தாண்டுகாலத்திற்கு அந்நிலத்தை வேறு யாருக்கும் விற்கவோ தானம் செய்யவோ அடமானம் வைக்கவோ கூடாது. பத்தாண்டுகளுக்குப்பிறகும்கூட அதை மற்றொரு ஒடுக்கப்பட்டவருக்குத்தான் விற்கவோ தானம் செய்யவோ அடமானம் வைக்கவோ முடியுமே தவிர மற்றவர்களுக்கு செய்யக்கூடாது. ஒருவேளை ஒடுக்கப்பட்டவரல்லாத வேறு யாருக்கேனும் விற்பனையோ தானமோ அடமானமோ செய்தால் வாங்கினவருக்கு எவ்வித நஷ்டஈடுமின்றி அந்த நிலத்தை திரும்ப எடுத்துக்கொள்ளும் உரிமை அரசுக்கு இருக்கிறது...’ என்கிற நிபந்தனையை திரும்பத்திரும்ப வலியுறுத்தின. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிலத்தை மற்றவர்கள் மிரட்டியோ வேறுவழியிலோ அபகரித்துவிடக்கூடாது என்பதற்காகவே இத்தகைய காப்புவிதிகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இந்த விதிகள் யாவும் வெற்றுச்சொற்களே என்பதைத்தான் இந்த 120 ஆண்டுகால வரலாறு காட்டுகிறது.

தொட்டால் தோஷம் பட்டால் பாவம் கண்டால் தீட்டு என்று ஒடுக்கப்பட்ட மக்கள்மீது தீண்டாமையை கடைபிடிக்கிற சாதியினர் தாங்கள் நம்புகிற இந்த ‘புனிதக்கோட்பாட்டை’ எல்லாவற்றிலும் கடைபிடிக்கிறார்களா என்றால் அதுதானில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமையான பஞ்சமி நிலத்தின் பெரும்பகுதியை அபகரித்துக்கொண்டிருக்கிறார்கள். அரசு நிர்வாகத்தையும் அரசியல் அதிகாரத்தையும் பயன்படுத்தி மோசடியான ஆவணங்களைத் தயாரித்தும் திருத்தியும் நடத்தப்பட்ட இந்த நில அபகரிப்பின் விளைவாக பஞ்சமி நிலத்தின் பெரும்பகுதி இன்று ஒடுக்கப்பட்ட மக்களின் அனுபோகத்தில் இல்லாமல் போனது. வருவாய்த்துறை, நிலஅளவைத்துறை, பத்திரப்பதிவுத் துறையில் இருக்கிற ஊழல் பெருச்சாளிகள் உடந்தையாக இருந்து நடத்தி முடிக்கப்பட்டுள்ள இந்த நிலத்திருட்டின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பின் மதிப்பு பலலட்சம் கோடிகள். பணமதிப்பு மட்டுமின்றி நிலவுரிமையினால் சமூகத்தில் பெற்றிருக்க வேண்டிய பன்முகப்பரிமாணம் கொண்ட வளர்ச்சியையும் அந்தஸ்தையும் இழந்திருக்கிறார்கள்.

இப்படி ஒடுக்கப்பட்ட மக்களாகிய தலித்துகளிடமிருந்து நிலங்களைத் திருடுவது எப்போதோ முடிந்துபோன விசயமல்ல, அது இன்றளவும் தொடர்கிறது என்பதை 2011ல் எவிடென்ஸ் அமைப்பு 13 மாவட்டங்களில் 300 பேரிடம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. கடன், கடும் வட்டி, மிரட்டல் என்று பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கி தலித்துகளின் நிலங்களை அபகரிப்பவர்கள், தலித்துகளை கொன்றாவது அவர்களது நிலங்களைத் திருடியுள்ளதையும் தெரிவிக்கிறது அவ்வாய்வு. பஞ்சமி நிலமாக தற்போது 1,26,113 ஏக்கர் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் அதில் 10,619 ஏக்கர் மட்டுமே தலித்தல்லாதவர்களின் பயன்பாட்டில் இருப்பதாகவும் நிலநிர்வாக ஆணையர் தெரிவித்த விவரங்களை ஆய்வு செய்துள்ள எவிடென்ஸ் அமைப்பு வெறும் 3,000 ஏக்கர் மட்டுமே தலித்துகள் வசமிருப்பதாக அறிவித்துள்ளது. நேரடியான ஆக்கிரமிப்பு அபகரிப்பு என்பது போக, வெவ்வேறு பெயர்களில் வகைமாற்றம் செய்யப்பட்டும் சுமார் இரண்டுலட்சம் ஏக்கர் அளவுக்கான பஞ்சமி நிலம் திருடப்பட்டுள்ளது.

இவ்வாறு பஞ்சமி நிலங்களைத் திருடியவர்களின் பெயர்களை பட்டியலிட்டால் அதில் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கிறவர்களும்கூட இடம்பெறுகிறார்கள். தி.மு.க.வின் தலைமையகமான அண்ணா அறிவாலயம், எல்.ஐ.சி. கட்டிடம் ஆகியவை பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்தே கட்டப்பட்டுள்ளன என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். 1967ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது சிறுதாவூரில் வழங்கப்பட்ட 53 ஏக்கர் நிலத்தை தலித்தல்லாத பலரும் ஆக்கிரமித்தே வந்திருப்பதாகவும், கடைசியாக அதில்தான் ஜெயலலிதாவின் ‘சர்ச்சைக்குரிய’ ஓய்வுக்கால பங்களா கட்டப்பட்டிருப்பதாகவும் 2006ல் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. போயஸ் தோட்டத்தில் நாற்று நட்டு கதிரடித்து களத்துமேட்டில் கடும் உழைப்பை செலுத்திய பின்பு களைப்பு நீங்கி ஓய்வெடுப்பதற்கென்றே அப்படியொரு பங்களா அவருக்கு அவசியப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்காக தலித்துகளின் வயிற்றலடிக்கணுமா என்கிற கேள்வி எழுந்தபோது அந்த பங்களா தனக்கு சொந்தமானதல்ல என்று ஜெயலலிதா அறிவித்துவிட்டார். தலித்துகளுக்குரிய இந்த நிலத்தை மீட்பதற்காக பல போராட்டங்களை நடத்திய மார்க்சிஸ்ட் கட்சி அளித்த புகாரின் பேரில் மாநில அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி கே.பி. சிவசுப்பிரமணியம் கமிஷன், இந்த அபகரிப்புக்கும் ஜெயலலிதாவுக்கும் தொடர்பு இல்லை என்று அறிவித்தது. ஆனால் அவரது நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களாலேயே அது அபகரிக்கப்பட்டுள்ளது என்பதை இடித்துரைத்தது. கமிஷனின் அறிக்கையை பெற்றுக்கொண்ட அன்றைய முதல்வர் கருணாநிதி நில மோசடிக்காரர்களிடமிருந்து திரும்பப்பெற்று தலித்துகளிடம் நிலத்தை ஒப்படைக்காமலே தன் ஆட்சியை முடித்துக்கொண்டார் என்தை அரசியல் மறதிக்காரர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது. (பார்க்க: டெஹல்கா, 23 செப் 2006, தி இந்து: 14 மே 2010 )

பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்னைகளை ஆய்வு செய்வதற்காக தி.மு.க. ஆட்சிக்காலம் முடியும் தருவாயில் நீதிபதி மருதமுத்து தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் கதி என்னவாயிற்று என்றறிய மற்றொரு விசாரணைக்குழு தேவைப்படுகிறது.

***
பஞ்சமி நிலங்களை அபகரிப்பதில் நுட்பங்கண்டுவிட்ட தலித்தல்லாதவர்கள், தலித்துகளுக்கு சொந்தமான எதுவொன்றை திருடுவதற்கும் தயங்காதவர்களாக இருக்கிறார்கள். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தலித்துகளுக்கென்று உள்ள இடங்களில் தம்மை மோசடியாக நிரப்பிக்கொள்வது, அதற்காக போலிச் சான்றிதழ்களை தயாரிப்பது பற்றி பல புகார்கள் ஏற்கனவே இருக்கின்றன. பரவலாக அறியப்பட்ட இப்படியான திருட்டுகள் மட்டுமல்லாது வேறுசில திருட்டுகளையும்கூட கவனப்படுத்த வேண்டியுள்ளது.

1. அடிப்படை கட்டுமானம் சார்ந்த பல்வேறு பணிகளை நிறைவேற்றுவதற்காக அரசாங்கத்துறைகள் விடும் ஏலம், ஒப்பந்தம், போன்றவற்றில் பட்டியல் இனத்தவர்/ பழங்குடியினர்க்கு ஒதுக்கப்படும் உரிமங்கள் பெயரளவில்தான் அவர்களிடம் இருக்கின்றன. அனுபோகத்தில் அவற்றின் உரிமையாளர்களாக எஸ்.சி/எஸ்.டி அல்லாதவர்களே இருந்து அனுபவிக்கின்றனர்.

2. பட்டியல் இனத்தவர்/ பழங்குடியினர்க்கு ஒதுக்கப்படும் 22.5% பெட்ரோல் பங்க், எரிவாயு ஏஜென்சி, கிரானைட் குவாரிகள் போன்றவற்றின் உண்மையான உரிமையாளர்களாக ஆதிக்கச்சாதியினரே இருக்கிறார்கள்.

3. டிராக்டர், அறுவடை இயந்திரம் உள்ளிட்ட வேளாண் கருவிகள் வாங்குவது, கிணறு வெட்டுவது/ ஆழப்படுத்துவது, முன்னுரிமை அடிப்படையில் மின்னிணைப்பு ஆகியவற்றுக்காக பட்டியல் இனத்தவர்/ பழங்குடியினர்க்கு ஒதுக்கப்படும் மானியத்தையும் ஆதிக்கசாதியினரே அபகரிக்கின்றனர்.

4. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் பட்டியல் இனத்தவர்/ பழங்குடியினர்க்கு ஒதுக்கப்படும் வீடுகள்/ வீட்டுமனைகளை அபகரித்துக்கொள்வது

- என்று இந்த அபகரிப்புகளின் பட்டியல் நீள்கிறது. தங்களுக்கு ஒதுக்கப்பட்டதை தலித்துகள் இஷ்டப்பட்டுத்தானே மற்றவர்களுக்கு விற்றிருப்பார்கள்? அப்படி விற்றிருக்கும்போது அபகரித்துவிட்டார்கள் என்று மற்றவர்கள் மீது பழிபோடலாமா? என்பது போன்ற அப்பாவித்தனமான கேள்விகள் இவ்விடத்தில் எழலாம். அரசியல் சட்டம் முன்னுரிமைப்படுத்தி இடஒதுக்கீடாக வழங்கும் எந்த ஒதுக்கீட்டையும் பிறருக்கு மாற்றிக்கொள்ள முடியாது என்ற அடிப்படையில் இருந்து இவ்விசயத்தை அணுகினால், நடைபெற்றிருக்கிற ஆக்கிரமிப்புகள், மோசடிகள், விற்பனைகள் எல்லாமே சட்டவிரோதமானவை என்பது விளங்கிவிடும். பட்டியலினத்தவர்/ பழங்குடியினர் பெயரால் மற்றவர்கள் அரசியல் சட்டத்தை ஏய்க்கிற உண்மை புரியும்.

பட்டியல் இனத்தவர்/ பழங்குடியினர்க்கு சமூக மற்றும் பொருளாதார நீதி கிடைக்கும் வகையில் அரசியல் சட்டம் முன்னுரிமைப்படுத்தி வழங்குகின்ற நிலம், தொழில், ஒப்பந்தம், வீடு, ஏஜென்சி உள்ளிட்ட ஒதுக்கீடுகள் மாற்றத்தக்கதல்ல என்பதை உறுதிப்படுத்த அரசு நிர்வாகத்தை நம்பி பயனில்லை. சொல்லப்போனால் இந்த திருட்டுகளுக்கு அரசு நிர்வாகமும் உடந்தையாக இருக்கிறது. தலித்துகளுக்கு தோடு கொடு தொங்கட்டான் கொடு என்று சில்லறை விசயங்களுக்கு சிணுங்கிக்கொண்டிருக்கிற இயக்கங்கள், திருடப்பட்ட தலித்துகளின் சொத்துகளை மீட்டெடுப்பதற்கான இயக்கங்களை முன்னெடுப்பதே தேவையாகிறது. ஏழுமலை, ஜான் தாமஸ் போன்ற தோழர்கள் தம்முயிரைத் தந்து பஞ்சமிநில மீட்புப் போராட்டத்தின் அவசியத்தை உணர்த்தியபடியே இருக்கிறார்கள்.

***

முன்னேறிய சாதியினர் (த்தூ) வீட்டுப் பெண்களை மயக்கி (த்தூத்தூ...) காதல் நாடகமாடி திருமணம் செய்துகொள்கிற தலித் இளைஞர்கள் பெண்வீட்டுச் சொத்தை அபகரிக்கப் பார்க்கின்றனர் என்று தேம்பியழுகிற ராமாஸ், பொங்கலூர் மணிகண்டன் வகையறாக்களே, யார் சொத்தை யார் அபகரித்திருக்கிறார்கள்? சாதி சுத்தம் பார்க்கிற உங்களது பவுசையும் பகட்டையும் நிரூபிக்க ஒரு வாய்ப்பு தருகிறோம். தீட்டுக்குரியவர்களென்று நீங்கள் கருதுகிற தலித்துகளிடமிருந்து அபகரித்துள்ள நிலங்களையும் சொத்துகளையும் விட்டு உங்களில் ஒருவரேனும் வெளியேறிக் காட்டுங்கள், காத்திருக்கிறோம்.

தரவுகள்:

அயோத்திதாசர் சிந்தனைகள், தொகுதி I
பஞ்சமி நிலஉரிமை, திரமென்ஹீர் - எழுத்து வெளியீடு.


நன்றி: அணையா வெண்மணி இதழ்




2 கருத்துகள்:

  1. உண்மையை உரைத்து சொல்லும் தமிழனாய் உங்களை பார்கிறேன் நீங்கள் சொன்ன விடயங்கள் அனைத்தும் இந்நிலை மாற அனைவரும் முன்வரவேண்டும்

    பதிலளிநீக்கு
  2. எல்லா நாடுகளிலும் இந்த சட்டம் உள்ளதே... இருப்பினும் அபகரிக்கும் கும்பல் அமைதியாய் இருப்பதில்லை. எங்கள் ஊரில் (மலேசியா), மலாக்காரர்களின் சொத்துக்களை மற்ற இனத்தவர்கள் வாங்கவே முடியாது. அப்படியே வாங்கினாலும், படாத பாடுபடவேண்டிவரும்.. கொடுமையாகும் நிலைமை. இதற்காகவே அவர்களின் (மலாய்க்காரர்கள்) சொத்து விவகாரங்களில் யாரும் மூக்கை நுழைப்பதில்லை. சட்டங்களை கெடுபிடியாக்குவதுவே இதற்குச் சிறந்த தீர்வு. அற்புதமான கட்டுரை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...