புதன், பிப்ரவரி 6

ஆள்மாறாட்டம் -ஆதவன் தீட்சண்யா


இனியும் தள்ளிப்போடவேண்டாமென்று இரங்கி
பார்த்துவர போயிருந்த என்னை
அதீதப் பிரியங்களுடன் வரவேற்ற கடவுள்
ஐந்தாறு நாட்களாவது
விருந்தினனாக தங்கிப்போக வேண்டினார்
ஏழேழு லோகத்தையும் அண்டசராசரங்களையும்
இடையறாது பார்த்து இயக்கும் பொருட்டு
இமைக்கவே இமைக்காது
சிசிடிவி போன்று
ஓயாதொளிரும் அவரது கண்களின்
பொழிந்தணைக்கும் கருணையை தட்டிக்கழிக்க முடியாமல்
தங்கிப்போக சம்மதித்தேன
மேலோகமா பாதாளமாவென அறிந்துணராப் பாங்கில்
நட்சத்திர விடுதியின் வசதிகளோடிருந்த மாளிகையில்
எனக்கென்று அவர் நிர்மாணித்திருந்த அறை
பூமியைவிட விசாலமானது
ஒம்பாமல் போகக்கூடும் என்பதால்
பாற்கடலைத் தவிர்க்கச் சொன்ன கடவுள்
நீராடுவதற்கென வெதுவெதுப்பான நன்னீர்க்கடலையும்
உடுத்துவதற்கு நீராவியன்ன துகில்களையும்
ஏழுபுரவிகள் பூட்டிய ரதத்தை சவாரிக்காகவும் அருளினார்
தேவைப்பட்டதை
நினைத்தமாத்திரத்தில் வரவழைத்துக்கொள்வதற்காக
அங்கிருக்கும் நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் வகையில்
தனது சக்தியில் ஒரு பகுதியையும் கொடுத்து
என்னையும் தன்னைப்போல்
தற்காலிகமாய் ஆக்கியிருந்தார் கடவுள்
கடவுளைக் கொன்றுவிட்டு
அவரது இடத்தை நிரந்தரமாய் கைப்பற்றும் ஆசையை
இவ்விதமாக தூண்டிவிட்ட கடவுள்
நான் திரும்பவேண்டிய நாளின் இரவில்
காணாதொழிந்தார்
இமைக்கவே முடியாத என் கண்களால்
பூமியைப் பார்க்கிறேன்
நானாகச் சென்றுவிட்ட கடவுள்
உல்லாசமாய் சுற்றித்திரிகிறார் அங்கு.
***
 நன்றி: மலைகள்.காம்

ஞாயிறு, பிப்ரவரி 3

கடவுளுக்குத் தெரியாதவர்கள் - ஆதவன் தீட்சண்யா

கோபாலின் கேசட்டை நேற்றிரவுதான் பார்க்க முடிந்தது. கைக்கு வந்தும் ஒருவார கால  தாமதத்திற்கான நியாயத்தை ஒப்புக்கொள்வான் என்றாலும் உடனடியாக எனது அபிப்ராயத்தை அறிவதிலான ஆர்வம் மிகக்கொண்டிருந்தான். அவனது படங்களை பார்ப்பதற்கானதொரு மனநிலை பிரத்யேகமானது. ஆனால் அவன் இதை வலுவில் மறுப்பவன். படமென்பதாலேயே அதற்கொரு விசேஷ மரியாதை கொடுக்கும் மனப்பாங்கிலிருந்து பிறக்கிறது இப்பிரமை என்பான். அவனது ஒன்பதாவது படமிது. நான்கிற்கு உள்நாட்டிலும் அயலிலுமாக பல்வேறு விருதுகள்.

விருது வழங்குவோரின் சம்பிரதாயப் புகழுரைகளால் விவரிக்க முடியாத மேட்டிமை படிந்து படைப்பின் நோக்கம் திரிபட்டு மக்களிடமிருந்து அன்னியமாகிவிடுவதாகச் சலிப்புறுவான். முற்றாக நிராகரித்தான் நாசூக்கு கனவான்களது கிளப்புகளின் அழைப்புகளை. மினரல் வாட்டர் சகிதம் வந்து கதைக்கும் மேனாமினுக்கிகளால், 22 கிலோமீட்டர் நீளம் விற்கப்பட்ட தங்களின் சியோநாத் நதியை மீட்க ஜலசமாதி போராட்டம் நடத்தும் சட்டீஸ்கர் மக்களைப் பற்றிய தனது படத்தை எப்படிப் புரிந்துகொள்ள முடியும் என்பதே அவனது கேள்வி.

யாதொரு கருத்தின் மீதும் சார்புநிலை எடுப்பதில்லை அவன்.  நடைமுறை வாழ்வில் காணக்கிடைக்கும் மறக்கமுடியாத உண்மை நிகழ்வுகளை முன்பின்னாய்க் கோர்த்துத் தொகுத்தெடுப்பதில் கையாளம் நுட்பகதியிலான அணுகுமுறை பார்வையாளனை ஏதேனுமொரு பக்கம் சாய்ந்து வாதிட நெம்பும். உள்ளதை உள்ளவாறே முன்வைத் விரயும் காட்சிகளின் நேரடியர்த்தம் அதன் பின்புலத்தில் சொல்லப்படாத வேறொன்றுக்கான சிந்திப்பைக் கோரி நகரும்.

அவன் வெளிப்படையாகவே யாவற்றையும் சொல்வதாகவும் அதனாலேயே அவை கலைத்தன்மையற்றுச் சக்கையாய் இருப்பதாக ஒரு சாராரும், கலையுலக ஒளிவட்டங்களின் கவனிப்புக்காக மிகுந்த பூடகத்தை முன்னிறுத்துவதாய் மற்றாரும் குற்றமேற்றவதுண்டு. உங்களது அளவுகோலால் அடுத்தவனை அளக்காதீரென்று முகத்திலடித்துச் சொல்ல நாத்துடிக்கும் எனக்கு. அவனோ பூடகமென்று புரியுமளவு அதில் வெளிப்படைத்தன்மை பொதிந்திருப்பதாயும் நேரடியாய்த் தெரிபவை ரகசியங்களற்றே கிடப்பதாய் நினைக்க வேண்டியதில்லை என்றும் குறைவான சொற்பிரயோகங்களில் சாந்தமாக மறுப்பான். ஒப்பாரியிலும் தாலாட்டிலும் ராகம் தாளம் தேடும் கோட்பாட்டு வாத்திகளைப்போலவே படைப்பின் ரகசியங்களறிந்திடும் சிரத்தையற்ற எளிமைவிரும்பிகளும் எனது அனுதாபத்திற்குரியவர்களே என்பான். பால்யத்தில் நாம் கண்டும் காட்டியும் வந்த நிர்வாணத்தைத்தான் வாழ்நாள் முழுவதிலுமே ரகசியமெனப் பொத்திக்கொள்வதும் அதை அறியத்துடிப்பதுமாகத் தவித்து மாய்கிறோம் என்று கூறியது எத்தனைப்பேருக்கு புரிந்ததெனத் தெரியவில்லை.

கிராமத்து முரடனொருவனின் மனச்சட்டகம் வழியேயான சித்தரிப்பே அவனது படங்களென்ற குற்றச்சாட்டிற்கும் நேரடியானதில்லை அவன் பதில். ஆனால் அந்தோனியா கிராம்சியைப் பற்றிய ஒசூர் கூட்டத்தில் அவன் பேசியது இதை மனதில் கொண்டே என்றனர் பலரும். எவனொருவனும் ஏதேனுமொரு சட்டகத்திற்குள்ளிருந்தே காண்கிறான் உலகையென்றும் அது அவரவர் சுயத்தேர்வாய் மேலுக்குத் தெரிந்தாலும் நுண்முக வழிகளில் சமூகத்தால் திணிக்கப்படதே அதுவென்றும், ஏன் எதற்காக எவ்வாறு திணிக்கப்படுகிறது என்பதை அம்பலப்படுத்தக் கலை இலக்கியவாதிகள் படைப்பு வழியே துணியவேண்டும் என்பதுமே பேச்சின் சாரம். அப்படியானால் நீயொரு கம்யூனிஸ்டா என்றதற்கு ஏன் எப்போதும் ஏதேனுமொரு முத்திரையைக் குத்தத் துடிக்கிறீர்கள் என்றான்.

இத்தனை படங்கள் வெளியாகியும், தொடங்கி முற்றுப் பெறாதிருக்கும் ‘வாதை’ என்கிற படமே அவனுள் கொந்தளிக்கிறது இன்னமும். அதை முடித்தப் பிறகே அடுத்து செய்வதென்ற கிடக்கை நிறைவேறவேயில்லை. உண்மையில் அப்படத்தை மிகத் தீவிரமாக லயித்து முயன்றான். இன்றளவும் ஆவேசம் வைத்திருக்கிறான். தேவையான தரவுகள் முழுதாகத் திரளும் முன்பே களமிறங்கிவிட்டதாக ஒரு கட்டத்தில் கருதியதும்கூட மேற்கொண்டு நகரமுடியாமல் போனதற்குக் காரணம்.

ஐசன்ஸ்டீனின் மான்டேஜ் உத்தியையும் ஆனந்த் பட்வர்த்தனின் விவரண பாணியையும் இழைவானதொரு புள்ளியில் குழைத்துக் கையாண்டிருந்தான் வாதையில். புதுதில்லி நேரு நினைவு அருங்காட்சியக நூலகத்தின் ஆய்வாளர் உமா சக்ரவரித்தி, சோஷியல் சயன்டிஸ்டில் எழுதியிருந்த Socical Pariahs and Domestic Drudges: Widowhood Among Ninteenth Century Poona Brahmins  என்ற கட்டுரையில் விவாதிக்கப்படும் ஒரு விதவையின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டதே வாதை. இதன்பொருட்டு ஆதாரச்சேர்க்கையாகச் சொல்லப்பட்டிருந்த புத்தகங்களை ஆழ்ந்து வாசித்தான். படப்பிடிப்பை அந்தக் கிராமத்திலேயே நடத்தும் முடிவு ஒருவகையில் சரிதான். நேர்மையானதும் கூட. ஆனால் தமது சொந்த வரலாற்றின் கோரமுகத்தை மறைத்துத்திரிய விரும்பும் சில அமைப்பினரின் மிரட்டலால் பொருத்தமான மாற்றிடத்தில் படப்பிடிப்பை நடத்த வேண்டியிருந்தது.
***

செம்புழுதி படியும் கற்சாலையொன்றில் தளர்ந்து உருள்கிறது குதிரைவண்டி. யாருமற்று உளையும் அனாதையைப்போல வண்டியின் அடிப்பாகத்தில் கருமையும் எண்ணெய்ப்பிசுக்கும் படிந்த லாந்தர் விளக்கொன்று முன்னும் பின்னும் அள்ளையிலுமாய் அசைகிறது மெல்ல. இரவெல்லாம் எரிந்த களைப்பு அதில் படிந்துவிட்டதைப்போல் தோன்றுகிறது. இன்னும் கொஞ்ச தூரம்தான் என்று மெதுவாகச் சொல்லுகிறான் வண்டிக்காரன் மராட்டியில்.

அடர்ந்த மரங்களூடே தெரியும் காரைபெயர்ந்து பாசி படர்ந்த கட்டிடம் ஒன்றின் வாயிலிலேயே வண்டி நிற்கிறது. மசகிடாத அச்சாணியில் இயைபற்றுச் சுழலும் சக்கரத்தின் வினோதவொலியில் கலவரமுற்ற பறவைகள் படபடத்து இரைகின்றன. வண்டிக்குள்ளிருந்து இறங்குவது யாரென்று முகம் காட்டுவதில்லை. குழம்பலாய்த் தோள்பட்டை மீது விழப்பார்த்த எச்சத்திற்குத் தப்பி லாவகமாய் விலகும் ஒருவரைப் பின்தொடர்கின்றனர் மற்றாரும். வர்ணம் உதிர்ந்து துருவேறிய பெயர்ப்பலகையில் மிச்சமிருக்கும் எழுத்துகள் அதன் நெடிய இருப்பையும் வரலாற்றையும் உணர்த்துவதாயிருக்கின்றன. 1900களின் துவக்கத்தில் சீர்திருத்தவாதி ஞிக்ஷீ.கார்வே அவர்கள் பூனாவில் நடத்திய விதவைகள் மற்றும் அனாதைப்பெண்கள் இல்லத்தில் தங்கி கல்வி பெற்ற விதவையொருவர் அதேரீதியில் இங்கு 1924ல் துவக்கிய இல்லம் இது.

காந்திஜியும் கஸ்தூரிபாயும் ஒருமுறை விஜயம் செய்தபோது எடுத்த புகைப்படம் சம்பங்கி மலரால் சூட்டப்பட்ட மாலைக்கிடையே பழுப்பேறித் தொங்குகிறது முகப்புக்கூடத்தில். புகைப்படத்தில் காந்திஜியின் வலப்புறமுள்ள பெண்ணொருத்தி நீண்ட கூந்தலோடு இருப்பது காட்டப்படுகிறது, குளோஸ்அப் காட்சியாக. ஆத்மார்த்த உரையாடலுக்காகத் தென்புறத்தே பச்சை மூடாக்காய்ப் படர்ந்து துலங்கும் மரங்களினடியில் விரிசலோடிய சிமெண்ட் பெஞ்சுகள். அவற்றின் மையத்தில்  சிதைபாடுற்ற தலையுடன் பெண்ணொருத்தியின் சிலை. தானே தன்னைச் செதுக்கிக்கொள்கிற கவனமும் துயரமும் கலந்திருக்கிறது அதன் வடிப்பில். தலையோடு இருந்திருக்குமானால் அதன் முகத்தில் பீறிப் பிரவகித்திருக்கக்கூடிய உணர்வுகள் இப்போதுமே அவ்வெளியெங்கும் ததும்பிப் பாய்கிறது பின்னணி இசையால்.

மத ஆச்சாரங்களையும் நடைமுறைகளையும் நிர்மூலமாக்கி வீடுகளைத் துறந்து வெளியேறி வருமாறு விதவைகளைத் தூண்டுவதாகக் குற்றம்சாட்டி, சனாதனக் கும்பலொன்று இவ்வில்லத்தைத் தாக்கியபோது சிலையின் தலையை உடைத்தனராம் ஆத்திரத்தில். சிலையேயாகினும் கூந்தல் புரளும் ஒரு விதவையின் கோலத்தை மத அனுஷ்டானங்களில் நம்பிக்கையுடையோரால் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்று எச்சரிக்கவே இத்தாக்குதலை நடத்தியதாக நாக்பூரிலிருந்து மதவெறி அமைப்பொன்றின் தலைமையகம் அப்போது பெருமிதத்தோடு வெளியிட்ட அறிக்கையின் நகல் திரைமுழுக்க காட்டப்படும்போது, அதே அமைப்பினர் இப்போது கான்பூரிலும் மீரட்டிலும் நரோடாபாட்டியாவிலும் பிற பெருநகரங்களிலும் செய்கிற அராஜகங்கள் கச்சிதமாக இணைக்கப்பட்டுள்ளன. அடுத்தக்காட்சியிலேயே ஆப்கனில் பர்தா அணியாமல் பொதுஇடத்தில் நடமாடிய பெண்ணைக் கசையாலடித்துத் தண்டிக்கின்றனர் தாலிபான்கள்.

இப்போது இதுகுறித்துப் பெண்ணியவாதிகள், மனிதஉரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட சிலரின் பேட்டி. ‘இடுப்புக்கு மேல் எதையும் உடுத்தக்கூடாது என்றார்கள் முன்பு... இழுத்துப் போர்த்திக் கொண்டுதான் இருக்கவேண்டுமென்றார்கள் அப்புறம்... இன்னின்னததான் உடுப்பு, இப்படியிருப்பதுதான் அலங்காரமென்று கட்டுப்படுத்தும் அதிகாரத்தை எந்தக் கடவுளும் இவர்களுக்கு வழங்கவில்லை. ஏனென்றால் கடவுளுக்கு இவர்களைத் தெரியாது...’ என்றொரு ஆன்மீகவாதி சாடுவது திகைப்பான அனுபவம். பெண்களை உடல் மற்றும் மனரீதியில் சிதைத்துச் சிறுமைப்படுத்தி ஒடுக்குவதிலேயே  தங்களது புனிதம் காப்பாற்றப்படுவதாகக் காலகாலமாய் எல்லா மதங்களும் செயல்படுகின்றன. இந்த விசயத்தில் எல்லா மதங்களுக்கிடையேயும் வெட்கங்கெட்ட ஒறுறமை நிலவுவதாக ஜிலீமீ ளிtலீமீக்ஷீsவீபீமீ ஷீயீ ஷிவீறீமீஸீநீமீ நூலாசிரியர் ஊர்வசி புட்டாலியா காட்டமாகத் தெரிவிக்கும்போது பின்னணியில் முன்சொன்ன காட்சிகளனைத்தும் வெளிர் வண்ணமாக ஓடுகின்றன.

ஒரு மடாதிபதியிடமும் கருத்துக் கேட்கப்படுகிறது. எடுத்தயெடுப்பிலேயே இதை வன்முறையென்று குறிப்பிடுவதைக் கண்டித்து மறுக்கிறார். ‘தன் தூய்மையைப் பாதுகாக்க நினைக்கும் ஒரு சாதி அதற்காக சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்வதை நீங்கள் எப்படி தப்பென்று குற்றம் சாட்ட முடியும்.? பொம்மனாட்டிகள் எவ்வாறிருக்க வேண்டுமென்று தர்மசாஸ்திரங்கள் சொல்கின்றனவோ அதை மறுதலிக்கும் கலக மனப்பாங்கைப் பரப்பிப் பெண்களைச் சீரழிக்க வேண்டுமென்று சிலர் கங்கணங்கட்டி அலைகிறார்கள். கர்ப்பப்பையைக் கத்தரித்து நீக்கிக்கொள்ள வேண்டுமென்று கருஞ்சட்டை நாய்க்கன் தூண்டுவதற்கு அர்த்தமென்ன? அவிசாரித்தனம் செய்தாலும் அதை வெளியே தெரியாமல் மறைத்துவிடலாம் என்பதுதானே...?’ என்று சீறுகிறார்.

‘நீங்கள் குற்றஞ்சாட்டும் நோக்கில் தந்தை பெரியார் அதைச் செய்யவில்லை. குழந்தை பெறுகிற இயற்கைத்தளையைத் தாய்மையுணர்ச்சியெனத் தரித்துக்கொள்வதாலேயே, கர்ப்பம் தரிப்பது, குழந்தை பெறுவது, வளர்ப்பது என்று வெளியுலகமே அறியாமல் குடும்பம் என்ற அமைப்புக்குள்  பெண் சிக்கிக்கொள்கிறாள். உடல், மனரீதியான கவனம் முழுவதையும் இதிலேயே செலுத்த வேண்டியிருப்பதால் தன் ஆளுமை எதையுமே வெளிப்படுத்தாமல் ஒடுங்கிப்போகிறாள் என்கிற ஆதங்கத்திலிருந்துதான் கர்ப்பப்பையை வெட்டியெறிந்துவிட வேண்டுமென்று பெண்களுக்கு அழைப்புவிடுத்தார் பெரியார்...’ என்று பேட்டியெடுப்பவர் விவரிக்கிறார். ‘‘சரிசரி போங்கோ... மடத்தை நாஸ்திகப் பிரச்சார மேடைன்னு நினைச்சுட்டீங்களா... தந்தை...ப்.. பெரியாராம்...’’ என்று இளக்காரத்தொனியில் மடாதிபதி சொன்னதும், ‘இந்தத் தகுதியும் சிறப்பும் உறவும் மக்களின் அன்பிலிருந்து பிறந்தது... ஒரு சாதிச்சங்கத் தலைவராக இருந்துகொண்டு உங்களை நீங்களே லோககுருன்னு கூப்பிட்டுக்கொள்வதைப் போன்றதல்ல...’’ என்று கோபத்தோடு பேட்டியெடுப்பவர் வெளியேறுகிறார்.

இப்போது படம் திரும்புகிறது மீண்டும் இந்த இல்லத்திற்கே. கடந்துவந்த அவலத்திற்கும் சாத்வீகம் மொழிகிற சனாதனியரின் கொடிய சுயரூபத்திற்கும் சாட்சியாக அச்சிலை அவ்வண்ணமே தலையும் முகமுமற்று முண்டமாய் இருப்பதுதான் பொருத்தமெனக் கருதி அவ்வாறே விட்டுவிட்டதாக இன்றைய நிர்வாகி விவரிக்கிறார். ஒவ்வொருவரும் எத்தகு இழிவேறி இங்கே தப்பிப் பாய்ந்து தஞ்சம் புகுந்தனரென்று அறிமுகமளிக்கிறார். அனாதைகள் ஓரிருவர், விதவைகளும் அவர்களில் சிலரின் குழந்தைகளுமே மிகுதியாயிருந்தனர்.

இல்லத்தின் ஏற்பாட்டில் பயின்று உத்தியோகஸ்தர்களாகியோரும் இங்கிருந்து மறுமணம் பூண்டு நல்ல நிலையிலிருக்கும் சிலரும் தருகிற நன்கொடையாலும் வளாகத்தின் தொழிற்கூடத்தில் முனையும் கைவினைப்பொருட்கள் விற்பனையாலும் இல்லத்தின் தேவைகள் பூர்த்தியடைவதாய்த் தெரிவிக்கும் நிர்வாகி, இவ்வளவு தன்னம்பிக்கையோடு தாம் இயங்குவதற்கு அடிகோலிய மூத்த தலைமுறையினரில் எஞ்சியிருக்கும் ஒருவரை அறிமுகப்படுத்த அழைத்துச்செல்கிறார்.

‘ஆனந்தியம்மா... ஆனந்தியம்மா..’ விளித்தும் அசைவில்லை பிரக்ஞையற்று படுக்கையிலிருக்கும் மூதாட்டியிடம். உயிரின் இருப்பையே சந்தேகிக்குமளவு மௌனம். நாலைந்து நாட்களாய்  நீடிக்கும் இக்கதியால், இரண்டொருநாட்கள் தாங்குவதே கஷ்டமென்று மருத்துவர் கைவிரித்துவிட்டதைத் துயரம் பொங்க சொல்கிறார் நிர்வாகி. இவ்விடத்திலிருந்து படம் இல்லம் விட்டு விலகி ஆனந்தியம்மாவின் கதையாகிச் சுழிகிறது.

ஆனந்தியம்மாவுடைய டைரியின் பழுப்புத்தாள்கள் படபடக்கின்றன திரைப்பரப்பில். மராத்தியில் எழுதப்பட்டிருப்பதன் தமிழாக்கம் சப்-டைட்டிலாக வருகிறது. இதுவரையிலும் நேரடிப்பதிவாக ஆவணத்தன்மையில் விரியும் காட்சி, பின்னிறுதியில் கதைப்படத்தன்மைக்கு மாறி முடிவில் நிஜத்தின் கொடூரத்தை முன்னிறுத்தி முடிகிறது.

மழிபடும் கேசக்கற்றைகளின் கருமை சூழ்ந்து நீளும் கரைகளுக்கிடையில் தேம்பியோடிக் கொண்டிருக்கிறது ஆறு. இருமருங்கும் தென்னஞ்சோலையில் வனைந்த சாலைகள். நன்கு அடுப்பில் புழங்கிய பானைகளைக் கவிழ்த்து வைத்து மண்டியிருக்கும் கரியைச் சாணை மழுங்கிய கத்தி கொண்டு சுரண்டிப் பழகிக்கொண்டிருக்கின்றனர் நாவிதச்சிறார்கள். மழிப்பதில் சற்றே கைவாகு பெற்றவர்கள் ஆற்றுக்கு வரும் கொடித்தடங்களில் கண்வைத்துக் காத்திருக்கின்றனர். சிறுமிகள், இளம் பிராயத்தார், நடுவயதுப் பெண்கள் என விதிவிலக்கின்றி இழுத்துவரப்படுகின்றனர் அண்டை அயல் கிராமங்களிலிருந்து "வேண்டாம்... வேண்டாம்... விட்டுவிடுங்கள்... நான் யாரையும் பார்க்கமாட்டேன்.... எந்த ஆளோடும் பேசமாட்டேன்... பூ வேண்டாம்.... பொட்டு வேண்டாம்.... அடுப்படியே போதும்... அங்கேயே முடங்கிக்கொள்கிறேன்.... யார் முன்னாலும் வரமாட்டேன்... வேண்டாம்... வேண்டாம்... என்னை அலங்கோலப்படுத்த வேண்டாம். அண்ணா நீயாவது சொல்லேன்... அக்கா... அம்மா... பாட்டி... யாராவது தடுங்களேன்...." பயனற்ற வார்த்தைகளாகிக் காற்றில் வீணே கரைகிறது ஓலம். வேறுமொழியில் அவர்கள் கதறினாலும் வேதனை வந்து கவ்வியழிக்கிறது நம்மை.

தென்மராட்டியத்தின் புனிதத்தலங்களில் ஒன்றெனும் நரசிங்கவாடி கிராமத்தின் ஆற்றங்கரையே அது. இழுத்துவரப்பட்டவர்களில் ஒருத்தியான ஆனந்திபாய்க்குப் பலவந்தமாய் மொட்டையடிக்கப்படுகிறது. சுருண்டு சுருண்டு விழும் தனது கேசத்தை அள்ளியெடுத்து முத்தமிடுகிறாள். மாரடித்து வீறிடுகிறாள். வெற்றிகொண்ட குரூரத் திருப்தியில் ஓடுஓடு என்று வீட்டுக்கு விரட்டுகிறது ஆண்கள் வட்டம். சுமங்கலிப்பெண்களும் இணைந்துகொள்கிறார்கள் அவர்களோடு. உடைக்கப்பட்ட வளையல் துண்டொன்று கிழித்து மணிக்கட்டில் ரத்தம் பெருகிய கணத்தில் அடி வயிற்றிலிருந்தும் திரண்டு பாய்கிறது. இதுவரை அவள் அறிந்திராத புதுரத்தம். உயிரே உருகி வழிகிறது உதிரமாக. மனத்தின் வலிமைமீறி உடலின் வலியும் துயரும் சுருட்டி வீழ்த்துகிறது அவளை. இனி எத்தகைய பாதையில் அவளது பயணம் என்பதை சூசகமாய்ச் சொல்வதைப் போல ஆரஞ்சுத்தோப்புக்குள் அவள் மருண்டோடிய வழிநெடுக காயாத ரத்தம் மினுங்குகிறது பீடையின் கண்ணாக.

விலக்குற்ற பெண்களுக்கான ஒதுக்கத்தில் முடங்கத் தொடங்குகிறது வாழ்க்கை. இதேபோன்று பலவந்தமாய் மொட்டையடித்துத் தான் உருக்குலைக்கப்பட்டதை எண்ணித் துயருற்ற சிறுமியொருத்தி உணவெதையும் ஏற்க மறுத்துக் கடைசியில் செத்தே போய்விட்டாள் கடந்த வாரம் என்பதால் கண்காணிப்பு கூடுதலாயிருந்தது. ருதுவாகும் கணத்தில் பலி கேட்குமளவு தோஷம் மிக்கவளாய் இருந்ததாலேயே கணவன் இறக்க நேரிட்டது என்ற ஜோதிடப் பழியால் கூடுதலாயிருந்தன பரிகாரச் சடங்குகள். ஒன்பதாம் நாள்  தீட்டு கழித்தப் பிறகு கொட்டில் போன்று இருள் கவிந்த அறையொன்றில் நிரந்தர வாசகத்திற்காக விரட்டப்படுகிறாள். இருளைத் தவிரத் துணையாய் இங்கு எதுவுமேயில்லை.

இந்த அறையில்தானே அத்தை செத்தும் அடைந்துகிடந்தாள் என்று முணுமுணுக்கத் தொடங்கும்போது அத்தை பற்றிய காட்சிகள் ஃப்ளாஷ் பேக்காக அல்லாமல் துண்டு துண்டான கனவைப் போல் வந்துபோகின்றன... வாளிப்பின் ஒளியில் அவள் ஜொலிக்கும் காலத்தில் கணவன் இறந்துபோனான். இரவு முழுவதும் தொல்லையூட்டும் அந்தக் கிழட்டுச் சனியன் ஒழிந்ததென்று அரும்பிய நிம்மதி வெகுகாலம் நீடிக்கவில்லை. ஒருநாள் தலையை மழித்துக்கொள்ளாவிட்டாலும் உலகமே அழிந்துவிடும் என்பதுபோல் கொதிக்கும் கணவனின் சகோதரர்கள் மூவருமே வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவளை வேட்டையாடவே துடித்தனர். வீட்டுப்பெண்கள் அவளது முறையீட்டைப் பொருட்படுத்தவேயில்லை. ஒரு முண்டச்சி இது குறித்தெல்லாம் புகார் சொல்லக் கூடாது என்றனர். அவர்களைப் பொறுத்தவரை வெளியிலே போய் தாசிகளுக்குச் செலவழிப்பது இனி மிச்சமாகும் என்பது கூடுதல் சந்தோஷமாயிருந்தது. அத்தை விரும்பியிருக்கும் பட்சத்தில் இப்படியான தொடர்புகளைப் பேணிக்கொள்வது சாத்தியம்தான்.

இப்படியான கள்ளத்தொடர்புகள் வழியாக உருவாகிவிடக்கூடிய கர்ப்பத்தைத் தடுப்பதற்கும் கலைப்பதற்கும் வாழைப்பழத்தில் கற்பூரம் வைத்து விழுங்குவது உள்ளிட்ட பல்வேறு உபாயங்களை அறிந்துவைத்திருந்தனர் பெண்கள். கலைக்க முடியாத நிலையில் இதே அக்ரஹாரத்து விதவைகள் இருவரை சாதிப்பிரதிஷ்டம் செய்து அனாதையாக விரட்டியடித்தனர். இப்படிப்பட்ட பிராமண விதவைகளுக்காகவும் அவர்களது குழந்தைகளுக்காகவும் மகாத்மா ஜோதிராவ்பூலே நடத்திவந்த பாதுகாப்பு இல்லத்தில்தான் அவர்கள் அடைக்கலம் புக வேண்டியிருந்தது. செத்துப் போன சகோதரனின் வாரிசாக மிஞ்சியதால் குடும்பச்சொத்தில் பங்கு தருவதைத் தவிர்ப்பதற்காகவே அவிசாரிப் பட்டம் கட்டித் துரத்தியடிக்கப்பட்டவர்களும் கூட அதிலிருந்தனர்.

கர்ப்பந்தரிக்கும் முன்பே அத்தை விதவையாகி வந்தது குறித்து குடும்பத்தாருக்கு அளவற்ற மகிழ்ச்சி. இல்லையானால் அவனை மட்டுமல்லாது குழந்தையையும் பராமரிக்க ஆகும் செலவை யார் ஈடுகட்டுவது? என்னதான் அவள் இந்த வீட்டின் செல்லப் பெண்ணாய் இருந்திருந்தாலும் அதற்காக ஒரு அமங்கலியைக் கொஞ்ச முடியுமா... கொழுந்தன்களிடமிருந்து தப்பிப் பிறந்தகத்திற்கு வந்துசேர்ந்தபோது ஆண்களின் தொல்லையைத் தவிர மற்றெல்லா நியமங்களையும் ஒழுக வேண்டியவர்களாகவே இருந்தாள் அத்தை.

ருசியான சாப்பாடு உடம்பிலும் மனசிலும் ஒரு விதவைக்கு எவ்வகையிலும் தேவையற்ற மதர்ப்பை உருவாக்கிவிடுமானால் அதன் விளைவு தமது தர்மசாஸ்திரங்களையும் கட்டுப்பாடுகளையும் தகர்த்துவிடும் என்று ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் அஞ்சியதால் வகைவகையான பட்சண, பதார்த்தங்களை மூவேளையும் மற்றவர்களுக்கு ஆக்கிவைத்துவிட்டு ஒரு நோயாளிக்கான பத்திய உணவைப்போல் உறைப்பும் புளிப்புமற்று சக்கை போன்றதொன்றையே அத்தை தனக்காகச் சமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதுவும் ஒருவேளை சாப்பாடுதான். பலநாட்களில் எல்லோரும் சாப்பிட்டது போக மீந்ததையோ பழையதையோ சாப்பிட்டுக்கொள்ளவும் பழகியிருந்தாள். ஆகாரக்கேடுகளால் குன்றி உலர்ந்த பழம்போல் வெறுந்தரையில் தலை சாய்க்கும்போது ஊரடங்கியிருக்கும் நெடுந்துயிலில்.

எல்லோருக்கும் முன்பாக எழுந்துவிடும் அத்தை பின்னிரவில்தான் தூங்கப்போவாள். அதுவரையிலும் வேலை.... வேலை.... பெற்றோர், சகோதரர்கள் - அவர்களது மனைவி குழந்தைகளின் துணிகளைத் துவைப்பது, கொல்லைக் கிணற்றில் நீரிறைத்து நிறைப்பது, பண்ட பாத்திரங்களைக் கழுவுவது, வீட்டைச் சுத்தப்படுத்துவது, சமைப்பது, வீட்டுக் குழந்தைகளைப் பராமரிப்பது என்று ஓயாத வேலை. வேலையொழிந்து ஓய்ந்திருப்பதை யாரேனும் கண்டுவிடும்பட்சம், வேண்டுமென்றே அரிசியில் பருப்பைக் கலந்துகொடுத்து இரண்டையும் தனித் தனியாகப் பிரித்தெடுக்கப் பணிக்கப்படுவாள். வேலையற்று சும்மாயிருப்பாளேயானால் அவள் மனம் அலைபாய்ந்துவிடுமென்ற சந்தேகத்தின்பேரில் எப்போதுமே எதையாவது செய்து கொண்டேயிருக்குமாறு மொத்த வீடுமே கண்காணித்து வேலைவாங்கியது. வருடத்தில் இரண்டு நார்மடிப் புடவைக்கும் கொஞ்சம் அவலுக்கும் இத்தனை பொறுப்பான வேலைக்காரியாகத் தங்கள் வீட்டுப் பெண்ணொருத்தியே கிடைத்திருப்பது குறித்த மகிழ்ச்சியை அவர்கள் ஒருபோதும் வெளிப்படுத்தியதேயில்லை. ஏனென்றால் ஒரு முண்டச்சியைப் பொறுத்தவரை அவை யாவும் அவள் அனுசரித்தேயாக வேண்டிய கர்மங்கள்.

அத்தையின் சாவுக்குப் பிறகு பூட்டிக் கிடந்த அந்த அறையில் அத்தையே வியாபித்திருக்கிறாள். நமக்கு பிறந்த வீடு புகுந்தவீடு எல்லாமே ஒன்றுதான். என்னைப்போல் அங்குமிங்கும் சீரழியாதே... நீயாவது தப்பிப்போய் விடு ஆனந்தி என்று அத்தை கேவியழுவதைப் போன்ற கனவினால் திடுக்கிட்டு முழிப்பவள் தப்பித்தாக வேண்டும் தப்பித்தாக வேண்டும் என்று தனக்குத்தானே தைரியம் சொல்லிக் கொள்பவளைப் போல் ஜெபிக்கிறாள்.

எந்த அயல் ஆடவனோடும் பேசுவதிலிருந்து முற்றாகத் தடுக்கப்பட்ட ஆனந்தி, தனித்த பின்னறையில் தலையை மழித்துக் கொள்ளும் பொருட்டு அவ்வப்போது சந்தித்தேயாக வேண்டிய நாவிதனோடு தன்னைப் பகிர்ந்துகொண்டு தலையை மழித்துக்கொள்ளாமலேயே வெளியே வருகிறாள் ஒருநாள். "நடந்தது என்னவென்று தெரியாதபடிக்கு மறைத்துவிட வேண்டுமென்றோ கள்ளத்தனமாய் இத்தொடர்பு நீடிக்க வேண்டுமென்றோ நான் விரும்பவில்லை. மாறாக ஒரு பெண்ணின் மனதுக்கும் உடலுக்கும் அவளே எஜமானி என்றும் அதில் எதன் பேராலும் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது என்பதையும் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டுமென்பதே எனது நோக்கமாயிருந்தது. உடல்தேவையின் பொருட்டோ கலக மனப்பான்மையினாலோ பழிவாங்கும் உணர்வினாலோ - எதனால் அவ்வாறு நடந்துகொண்டேன் என்பதை இதுவரையிலும் நான் ஆராயவில்லை. ஆனாலும் என் காரியம் என்னளவில் குற்றமற்றது என்று இன்றளவும் நம்புகிறேன்." என்று ஆனந்தியம்மாவுடைய நாட்குறிப்பின் வாசகங்கள் திரையில் காட்டப்படுகின்றன.

தன்மகள் விதவையாகி வீட்டிலிருக்கும்போது அவளைவிடவும் சிறுவயதுப் பெண்ணை மனைவி செத்த மூன்றாம் மாதமே இரண்டாம் தாரமாய்க் கட்டிவந்தது குறித்துச் சிறிதும் வெட்கமற்றிருந்த அவளது தந்தை இப்படியொரு அனுலோமக்கேடு தன் வீட்டில் நடந்துவிட்டதே என்று அரற்றுகிறார். தீராத களங்கத்தை ஏற்படுத்திவிட்டதாக நாவிதனையும் ஆனந்தியையும் குடும்பமும் ஊரும் தூற்றுகின்றன, தாக்குகின்றன. அக்கணம் வரையிலும் அவனை ஆணென்றே அவர்கள் யாரும் கருதியதேயில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் அவனைப் போன்ற தொழிலில் உள்ளவர்கள் மனிதர்களே கிடையாது. பிறகெங்கே அவனை ஆணாகப் பார்ப்பது? அவனும்கூட தன்னைப்பற்றி அவ்வாறே கருதியிருந்தான் அதுகாறும். தாக்குதல் மூர்க்கமானபோது கீழே கிடந்த சவரக்கத்தியை ஒருகையிலும் மறுகையில் நாவிதனையும் பிடித்தபடி எதிர்த் தாக்குதலுக்குத் தயாரானவளைப் போல முன்னேறும்போது அனைவரும் பயத்திலும் அதிர்ச்சியிலும் விலகிப் பின்வாங்குகின்றனர். கத்தியோடும் அவனோடும் மனம் நிறைந்த தைரியத்தோடும் ஓடிவந்து ரயிலேறுகிறாள்.

பிராமணப் பெண்ணொருத்தியோடு உடலுறவுகொண்டதன் மூலம் என்னென்ன தெய்வக்குற்றமும் பழிபாவமும் தனக்கும் தன் குடும்பத்துக்கும் நேருமோ என்ற அச்சத்திலும் குற்றவுணர்ச்சியிலும் உளைச்சல்கொண்ட நாவிதன், ரயில் ஒரு ஆற்றைக் கடக்கும்போது குதித்து தற்கொலை செய்து கொண்டான். கோழைகள் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை என்று பொருமியபடி அவள் வந்திறங்கிய இடம் பூனா என்று தெரிந்துகொள்வதற்குள் சில நாட்களாகிவிட்டன. ராணுவக் கேந்திராலயத்தின் மதிலோரம் சுருண்டு கிடந்தவளை டெண்ட்டுக்குள் தூக்கிப்போகப் பார்த்த சிப்பாய்களிடமிருந்து தப்பியோடி வந்து இந்த இல்லத்தில் தஞ்சம் புகுந்து கிட்டத்தட்ட 72 வருடங்களாகிவிட்டன.

ஆற்றங்கரையில் மழித்து சுருண்டு கிடக்கும் முடிக்கற்றைகள் அப்படியே இழைந்து குழைந்து படுக்கையிலிருக்கும் மூதாட்டியின் நீண்டு நரைத்த கேசமாகத் திரை முழுக்க விரிகிறது. நல்லதங்காளின் முடி கிணறு முழுக்கப் பரவிக்கிடந்ததாமே அப்படி. "அந்த ஆற்றுநீரின் சலசலப்பை உற்றுக் கேளுங்கள். எனது கேவலும் விம்மலும் அவலம் பொருந்திய ஓலமும் இப்போது அதில் இருக்காது. ஆம் ஜெயித்தவர்கள் அழுவதில்லை" என்ற டைரியின் வாசகத்தோடு படம் முடியும்போது ஆனந்தியம்மா பூரணத்தில் மூழ்கிய அமைதியோடு படுக்கையிலிருக்கிறார். இப்போதும் அவர் தலைமாட்டில் கைக்கெட்டும் தூரத்தில் அதே கத்தியிருக்கிறது துருவண்டாமல்.

  ***
காட்சிரூபமான ஒரு படத்தின் முழு ஆகிருதியைத் தேர்ந்த மொழியாளுமை கொண்டவனாலும் கூட நுட்பமாக விவரிக்க சாத்தியமில்லையென்ற புரிதலுடனேயே என்னால் விவரிக்கப்பட்டிருக்கும் கதை அதனளவில் ஒரு படமாக முழுமையுற்றிருப்பதாகவே கருதினோம் நானும் பார்த்த மற்றவர்களும். இளம்வயது ஆனந்தியாக நடித்திருந்த வங்காள வீதிநாடக நடிகை சாரு அப்படியொரு நேர்த்தியாக உணர்வுகளை வழியவிட்டிருந்தாள். நூறு நூறாண்டுகளின் கொடுமையும் துயரமும் எனக்குள் படிந்துவிட்டதாக உணர்கிறேன் என்று அவள் சொன்ன வார்த்தைகளே எங்களின் மனநிலையைச் சொல்லவும் பொருத்தமானது என்று நம்புகிறேன்.

படம் வெளியாகியிருக்கும்பட்சம் தீபா மேத்தாவும் மீராநாயரும் ஷபனா ஆஸ்மியும் தற்போது எதிர்கொள்ள நேரிட்டவைகளைவிடவும் மேலதிகமான விமர்சனங்களை இவன்தான் முதன்முதலில் எதிர்கொள்ள நேரிட்டிருக்கும். அல்லது ஆனந்த் பட்வர்த்தனின் war and peace  போல தடை செய்யப்பட்டிருக்கவும் கூடும். படைப்புச் சுதந்திரம்  குறித்து ஜம்பமடிப்பவர்கள் ஒரு படைப்பு தாக்குறும்போது எப்படிப் பம்மிப் பதுங்குகிறார்கள் என்பதைக்கூட நாம் முன்கூட்டியே அறியும் வாய்ப்பும் லபித்திருக்கும். ஆனால் தனது ஆவேசத்தை வெளிப்படுத்துவதற்காக ஒரு அப்பாவி நாவிதனைப் பலி கொடுக்க நேர்ந்தது குறித்த ஆனந்தியம்மாவின்  தீராத உளைச்சலைப் படம் நழுவவிட்டு விட்டதாக அவன் கொண்டிருக்கும் அதிருப்தியே படத்தை முடக்கி வைத்துள்ளது. ஆனந்தியம்மா அவன்மீது அருள் பொழியும் கணத்தில் நாட்டின் திரையரங்குகள் நொறுக்கப்படுமென உள்மனம் என்னை எச்சரிக்கிறது.

(2003)
வில்லியம் ப்ளேக் கடிதமும் கவிதையும் - வ. கீதா

எனக்குப் பிடித்த ஆங்கிலக் கவிஞர்களில் வில்லியம் ப்ளேக்கும் (William Blake)  ஒருவர். 18ஆம் நூற்றாண்டு. அவர் ஓவியர், டிசைனர், அச்சாளர். அ...