கோடி வன்னியர் கூடும் திருவிழா என்பது எதுகைமோனைக்காகவோ ஓசை நயத்திற்காகவோ சொல்லப்படும் வாசகமல்ல, உண்மையிலேயே கோடிப்பேர் கூடப் போகிறோம் என்றார்கள் ராமதாசும் குட்டி ராமதாசும். தமிழ்நாட்டிலுள்ள இரண்டு கோடி (?) வன்னியர்களும் எங்கள் பின்னால் என்று இவ்வளவுகாலமும் பீற்றிவந்தவர்கள் இப்போது ஏன் ஒருகோடிப்பேரை மட்டும் மாமல்லபுரத்திற்கு அழைத்திருக்கிறார்கள்? மீதி ஒரு கோடிப்பேருக்கு மாநாட்டிலிருந்து ஏன் விலக்களிக்கப்பட்டுள்ளது? ஒருவேளை தமது முன்னோரான (?) பல்லவர்களின் மரபுப்படி போருக்கு மட்டுமல்ல மாநாட்டுக்குச் செல்வதிலிருந்தும் குழந்தைகள், பெண்கள், நோயாளிகள், முதியோர் ஆகியோருக்கு விலக்களித்துவிட்டார்களா என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே, மாநாட்டையே போர் போல நடத்தி முடித்திருக்கிறார்கள். ஆமாம், நிராயுதபாணிகளான எளிய மக்களை வழிநெடுக தாக்கிக்கொண்டே போய் மாநாட்டை நடத்தியிருக்கிறார்கள்.
ஒன்னு, ஒன்னேகால், ரண்டு, ரண்டரை, மூனு, மூனே முக்கால்....
25 லட்சம்...
இருபத்தைந்து லட்சம் பேர் பங்கெடுத்ததைப் பார்த்து
எல்லோரும் எரிச்சலும் அச்சமும்
அடைந்துவிட்டதாக மே25ல் புதிய தலைமுறையிலும், மே 26ம் தேதி பாலிமர் தொலைக்காட்சியிலும் குட்டி ராமதாஸ் குதூகலிக்கிறார். அப்படியே பார்த்தாலும் இவரும் இவரது தோப்பனாரும் ஒருகோடிப்பேர்
என்று விடுத்த அறைகூவலுக்கு கால்வாசிப்பேர்தான்
செவிசாய்திருக்கிறார்கள் என்றாகிறது. எப்படி கூட்டிக்கழித்து பெருக்கி வகுத்துப் பார்த்தாலும்
அறுபதாயிரம் பேரைத் தாண்டவில்லை என்பதுதான்
ஊடகங்கள் தரும் எண்ணிக்கை. ஒட்டுமொத்த
வன்னியர் தொகையோடு ஒப்பிடும்போது இவர்களுக்காக
கூடியவர்கள் ஒரு சதவீதத்தவர்கூட அல்ல என்கிற உண்மை தெரிந்திருந்தும் அப்பனும் மவனும் அல்லக்கைகளும் இனி ஆளப்போவது நாங்கதான்
என்று குதியோ குதியென குதித்தார்கள். பல்லவ மன்னவர்கள் வன்னியர்கள் என்று யார் கம்யூனிட்டி சர்டிபிகேட்
கொடுத்தார்களோ தெரியவில்லை, தாங்கள்
பல்லவ மன்னர்களின் வாரீசு என்றார்கள். ‘‘...சத்திரிய இனம் அழிந்துவிட்டதாக பிராம்மணர்கள்
கூறுகின்றனர். தற்போது சத்திரியர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள் போலியானவர்கள்...’’ என்று 1820களில் அபே துபுவா எழுதியிருக்கிறார் (இந்திய மக்கள், பழக்கவழக்கங்கள்- சடங்குகள்- நிறுவனங்கள், பக்-39
). இவர்களோ தாங்கள் சத்திரிய குலம் என்று 2013ல் சலம்பிக்கொண்டிருக்கிறார்கள். ‘ஆண்ட பரம்பரை மீண்டுமொரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை’ என்று ஈழப்போராட்ட வரிகளை இரவல் வாங்கி முழங்கினார்கள். ஒருவேளை
வன்னியர்களின் பிரதிநிதியை தேர்வுசெய்வதற்கென
வன்னியர்கள் மட்டுமே வாக்களிக்கும் ஒரு தேர்தல் நடக்குமானால் அதில்கூட
பா.ம.க.வினால் வெற்றிபெற முடியாது
என்பதே இன்றைய நிலை. அதாவது வன்னியர் ஓட்டு அன்னியருக்கில்லை என்கிற நிலையே உருவானாலும்கூட அது பா.ம.க. சொல்லும் வன்னியருக்கு ஆதரவான நிலை அல்ல.
***
மாமல்லபுரம் போருக்கு
வரும் வழியெங்கும் பாட்டாளி
மக்கள் கட்சியினர் நடத்திய வன்முறைகள், வன்கொடுமைகள்,
அட்டூழியங்கள், அத்துமீறல்கள் எல்லாம்
போதுமான அளவுக்கு வெளியாகிவிட்டன. ஆனால் இவையெல்லாம் கொண்டாட்ட மனநிலையால்
உணர்ச்சிவயப்பட்டுவிட்ட தொண்டர்களால் நிகழ்ந்துவிட்டதாகவே
காட்டப்படுகின்றன. உண்மையில் இவை, வெளியூரிலிருந்து வருகிறவர்கள் அந்தந்தப்பகுதி
உள்ளூர்க்காரர்களுடன் இணைந்து தாக்குவது என்கிற அடிப்படையில் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளன.
உள்ளூர்க்காரர்கள் தலித் குடியிருப்புகளை அடையாளம்
காட்ட, ஆயுதங்களோடு வந்திரந்த
வெளியூர்க்காரர்கள் தாக்குவது என்கிற வேலைப்பிரிவினை முழுமையாக கடைபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை வகுத்தவர்கள்
யார் என்பது இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் தருமபுரி மற்றும் பாச்சாரப்பாளையம் மாடலில் தலித் வீடுகளை கொள்ளையடித்த பிறகு கொளுத்தியுள்ளனர். அக்கினியில் பிறந்தவர்கள்
என்பதை அடுத்தவர் வீட்டைக்
கொளுத்தி நிரூபிக்கிறார்கள் போலும்.
புதுச்சேரி தொடங்கி
மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கரைச்சாலையின் இருமருங்கிலும் வன்கொடுமைகளை நிகழ்த்திக்கொண்டே
வந்திருந்த தொண்டர்களை கண்டிக்கவோ
நல்வழிப்படுத்தவோ முயற்சிக்காமல் அவர்களது
வன்செயல்களை நியாயப்படுத்தும் விதமாகவும் அவ்வாறு வன்செயலில் ஈடுபடுவது
தங்களது சாதிக்குரிய உரிமை என்பது போலவும் பா.ம.க. தலைவர்களின் உரைகள் அமைந்திருந்தன. சாதிவெறியில், வன்கொடுமை
செய்வதில் தாங்களொன்றும் பா.ம.க.வின் வன்னியருக்கு குறைந்தவர்கள்
அல்ல என்று காட்டிக்கொள்ளும் விதமாக அங்கு அழைக்கப்பட்டிருந்த பலபட்டறைச்சாதிகளின் தலைவர்களும் வெறியுரையாற்றினர்.
( மேக்கப் போடாதவர்கள் உள்ள ஒரே மேடை இதுதான் என்று அரசகுமார் அவிழ்த்துவிட்ட
புருடாவைக் கேட்டு கூட்டம் கைதட்டி ஆரவாரம் செய்யும்போது, மேடையில்
வீற்றிருந்த தலைவர்களை காட்டினார்கள்-
ராமாதாஸ், மணி உட்பட அத்தனை பேரும் அக்குள்வரைக்கும் டை அடித்து கருகருவென்ற கேசத்தோடு
காட்சியளித்தனர்- உபயம்- மக்கள் தொலைக்காட்சி ). தமிழக அரசும் நிர்வாகமும் காவல்துறையும்
தலித்துகளின் தவறுகளுக்கு துணைபோவதாகவும்
ஆகவே சட்டம் ஒழுங்கை தாங்களே கையிலெடுத்து தலித்துகளை
அடக்கப்போவதாகவும் ராமதாஸ் வகையறா செய்த பிரகடனம் சமூக அமைதிக்கு மிகப்பெரும்
அச்சுறுத்தல் என்பதில் விவாதத்திற்கு இடமில்லை.
ஆதிக்கச்சாதிகளை ஒன்றுதிரட்டுவதாக காட்டுவதன் மூலம் செயற்கையானதொரு பெரும்பான்மை
தனக்குப் பின்னால் அணிதிரண்டிருப்பதாக காட்டி பெரும்பான்மையினரிடம் சிறுபான்மையான தலித்துகள் அடங்கி நடக்கவேண்டும் என்று அங்கு விடுக்கப்பட்ட பகிரங்க
மிரட்டலை உரியமுறையில் எதிர்கொள்ள
அரசு தயாரில்லை. வன்கொடுமை
தடுப்புச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவதற்கான குற்றத்தன்மை கொண்ட அடைமொழிகளாலும் குத்தல்
பேச்சுகளாலும் உடல்மொழியாலும் தலித்துகள்
அங்கு இழிவுபடுத்தப்பட்டனர். ஆனால் இதுவெல்லாம் ஆட்சியாளர்களுக்கு
உறுத்தவேயில்லை. ஆட்சியாளர்களைப் பற்றிய வசைகளும் அவர்களுக்கு விடுத்த
சவால்களுமே அவர்களுக்கு முக்கியமாகிவிட்டன.
தலித்துகளால் சாதி இந்துக்களின் பெண்களுக்கு ஆபத்து,
சாதிப்புனிதத்தை தலித்துகள் கெடுக்கிறார்கள்,
தலித் இளைஞர்கள் நயவஞ்சகமாக
காதல் நாடகமாடி பணம் பறிக்கிறார்கள் என்று பீதியைக் கிளப்பி தலித்துகளுக்கு எதிராக சாதி இந்துக்களை ஓரணியாகத்
திரட்டி அதற்கு தலைமையேற்பது, தருமபுரி,
பாச்சாரப்பாளையம் மாடலில் பல அழிவுகளில் ஈடுபடுவது என்கிற ராமதாசின் நிகழ்ச்சிநிரல்
பற்றி தமிழக அரசுக்கு யாதொரு கோபமும் இல்லை. எனவே ராமதாஸ் வகையறா மீது அது உப்புச்சப்பில்லாத வழக்குகளை பதிவு செய்து கைது செய்தது. ஒரு வழக்கில் பிணை கிடைக்கும்போதே அடுத்த வழக்கு... அடுத்த வழக்கில் பிணை என்றால் இன்னொரு வழக்கு ... என்று ஏதோ அவர்கள் மீது கடும் அடக்குமுறை ஏவிவிடப்படுவதைப்போன்ற
சித்திரத்தை அரசு வேண்டுமென்றே உருவாக்கியது.
ஊடகங்களும்கூட அவ்வாறே காட்டத் தொடங்கின. ஆனால் இந்த வன்கொடுமை கும்பலின்
தலைவர்களில் ஒருவர்மீதுகூட வன்கொடுமை
தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதை கவனித்தால்தான் நடந்து கொண்டிருக்கிற கைதுவிளையாட்டின் உள்ளர்த்தம் புரியும். அதாவது தலித்துகளுக்கும் ராமாதஸ் வகையறாவுக்கும் இடையேயிருந்த
மோதலை தனக்கும் பா.ம.க. தலைவர்களுக்குமிடையேயான ‘ஒளியான் விளையாட்டாக- கண்ணாமூச்சியாக’
தமிழக முதல்வர் மாற்றிக்கொணடார். தன்னை விமர்சித்தால் என்ன கதி நேரும் என்பதை தெரியவைப்பதற்கான ‘சாம்பிள் டோஸ்’ முதல்வரால் கொடுக்கப்பட்டுள்ளது,
அவ்வளவுதான். ஆனால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையும்கூட ராமதாஸ் வகையறாவுக்கு சாதகமாகவே
அமைந்துவிட்டதுதான் கொடுமை. ஆமாம், அவர்களின் சாதி வெறியாட்டங்கள்
பின்னுக்குப் போய் ஏதோ அவர்களெல்லாம் விடுதலைப்
போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்ற செம்மல்களைப்போல
சிலிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தியாகி பென்ஷனுக்கு விண்ணப்பிப்பது
மட்டும்தான் பாக்கி.
எதிர்ப்புகளையும் பதற்றங்களையும் தடைகளையும் பொருட்படுத்தாது
தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களுக்கும் போய் தலித்துகளை பொது எதிரியாக கட்டமைத்து அவர்களுக்கு
எதிராக அனைத்துச் சாதிய வன்கொடுமையாளர்களும் ஓரணியில் திரள வேண்டும் என்று ராமதாஸ் வெறிபிடித்து அலைந்ததையெல்லாம்
பெருமைபொங்க பார்த்துக்கொண்டிருந்த அவரது வகையறாவினர், அவர் கைது செய்யப்பட்டதும் ‘ஒரு 75 வயது முதியவரை இப்படி அலைக்கழிக்கலாமா?’ என்று கழிவிரக்கம் வழிந்தோட
கதறினர். எத்தனையோ தலைவர்கள் மக்கள் பிரச்னைகளுக்காக குறைந்தபட்சம் மாதத்திற்கு
ஒருமுறையேனும் கைதாகி சிறைசென்று வருகிறார்கள்.
அவர்களெல்லாம் சிறை செல்வதை தமது அரசியல் பணி மற்றும் போராட்டத்தின் பிரிக்கமுடியாத
இயல்பான பகுதியாக உணர்ந்திருக்கிறார்கள். வயதையோ நோயையோ காரணம் காட்டி அவர்கள் சலுகை எதையும் கோரிக்கொண்டிருக்கவில்லை. ஆனால் ராமதாஸ் வகையறாவோ கைது செய்ததையே பெரும் அடக்குமுறை என்று அலறிக்கொண்டிருக்கின்றனர். தடையை மீறி ஒரு கூட்டத்தையோ போராட்டத்தையோ
நடத்துகிறவர் மீது எடுக்கக்கூடிய நடவடிக்கைக்கும்
மேலாக எதுவும் நடந்துவிடவில்லை. ஆனால் அதற்கே ஏன் இந்த அலறல்? ஒருவேளை தான் தமிழ்நாட்டின் சட்டதிட்டங்களுக்கு
அப்பாற்பட்டவர் என்று ராமதாஸ் தன்னை கருதிக்கொள்கிறாரா? ராமதாஸ் தங்கவைக்கப்பட்ட கட்டடத்தின்
அருகில் இருந்த மரத்தைக்கூட வெட்டிவிட்டார்கள்
என்று வேறு ஒருபாட்டம் அழுது தீர்த்தார்கள். மரம் வெட்டப்படுவதைப் பற்றி யார் யார் கவலைப்படுவதென்று ஒரு விவஸ்தை கிடையாதா? ரோட்டோர
மரங்களையெல்லாம் இவர்கள் வெட்டித்தள்ள, இவர்களது
கூட்டாளி வீரப்பனோ காட்டிலிருந்த சந்தன மரங்களையெல்லாம் வெட்டித் தீர்த்ததை நாடு அவ்வளவு எளிதில் மறந்துவிடுமா என்ன?
(வீரப்பனையெல்லாம்
முன்மாதிரி தலைவனாக காட்டித்தான் வன்னிய இளைஞர்களை வளர்க்க வேண்டியிருக்கிறதா என்று தமிழக முதல்வர் கேட்டதற்கு, ஆமாம் அவர் பிரபாகரனைப்போல மதிக்கத்தக்க
தலைவர்தான் என்கிறார் குட்டி ராமதாஸ். தம்பி, வீட்டுக்குப் போயி யாராச்சும் பெரியவங்கள கூட்டியாந்து
பேசச்சொல்லு... என்பதைத்தவிர வேறென்ன
சொல்வது? உலகத்தின் பல்வேறு காடுகள் அழிந்துவருவதாகவும் வீரப்பன் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தினால் அந்த குறிப்பிட்ட காடு மட்டுமே வளர்ந்திருப்பதாகவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா செயற்கைக்கோள் மூலமாக படம் எடுத்து காட்டியிருக்கிறது என்று கு.ரா. ஒரு படத்தை மே- 26 அன்று பாலிமர் தொலைக்காட்சியில் ஓட்டினார். வீரப்பன் வெட்டிய சந்தன மரங்களையும் தந்தங்களையும்
விற்று காசாக்கியவர்கள் யார் யார் என்பதையும் நாஸா காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்).
***
தருமபுரி தலித் குடியிருப்புகளில் வன்னியர்கள் சிலவீடுகளைத்தான் எரித்தார்கள், நிறைய நிவாரணம் வாங்கித்தருகிறோம், புதிதாக பெரிய வீடாக கட்டித் தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறி சில தலித் அதிகாரிகள்தான் மீதி வீடுகளையும் எரிக்க வைத்தார்கள் என்று ஏற்கனவே உலகப்பிரசித்திப் பெற்ற பொய்யைச் சொல்லி வந்த ராமதாஸ் இப்போது மரக்காணம் உள்ளிட்ட
கிழக்கு கடற்கரைச்சாலை நெடுக நிகழ்த்தப்பட்ட வன்செயல்களுக்கும் தங்களுக்கும் யாதொரு தொடர்புமில்லை என்று அறிவித்தார். அத்தோடு நிறுத்தாமல் அடுத்தும்
சொன்னார், ‘தருமபுரியில் எரிக்கப்பட்ட
வீடுகளுக்கு அதிக நிவாரணம் கிடைத்ததைக் கண்டு உற்சாகமடைந்துள்ள தலித்துகள் தங்கள் வீட்டை தாங்களே கொளுத்திக் கொண்டார்கள்’
என்று. ராமதாசின் இந்த அளவுகோல்படி, கலவரத்தில் ஈடுபட்டு
இறந்தால் காசு கிடைக்கும் என்பதால்தான்
மரக்காணத்தில் இரண்டு இளைஞர்கள் மாண்டுபோனார்கள்
என்று சொன்னால் ஒப்புக்கொள்வாரா? அல்லது, தியாகியென போற்றுவார்கள்
என்பதற்காக தாங்களாகவேதான் ராமதாசும்
குட்டி ராமதாசும் ஜி.கே.மணியும், காடுவெட்டி குருவும்
சிறைக்குள் போய் அடைந்து கொண்டார்களேயன்றி அவர்களை யாரும் கைது பண்ணவில்லை... என்று சொன்னால் ஏற்றுக்கொள்வாரா?
நிகழ்த்தப்பட்டுள்ள இந்த தொடர் வன்கொடுமையில் ஏற்பட்ட
இழப்புகள் பற்றிய முழு மதிப்பீடு இன்னும்
செய்யப்படாத நிலையில் அரசாங்கம் கொடுத்துள்ள
இழப்பீடுகளை தற்காலிகமானவையாகவே கருதவேண்டியுள்ளது. ஆனால், நிவாரணம் கிடைக்குமென்றால்- கூடுதலாக பணம் கிடைக்குமென்றால் தங்களது வீட்டையும்கூட கொளுத்திக்கொள்ளக் கூடியவர்கள்
என்கிற புதுவகையான இழிவு ஒன்றை தலித்துகள் மீது சுமத்தத் தொடங்கியுள்ளார் ராமதாஸ்.
நிவாரணம் கிடைக்கலாம், இருந்ததைவிடவும்
மிகப்பெரிய வீடும்கூட கிடைத்துவிடலாம்,
ஆனால் தாங்கள் உழைத்து கட்டி வாழ்ந்த வீட்டோடு தலித்துகளுக்குள்ள உணர்வுபூர்வமான உறவும் நினைவுகளும் திரும்ப
வருமா? ‘‘கருணாநிதிக்கு ஒரு அறிவாலயம் இருக்கு,
ஜெயலலிதாவுக்கு ஒரு போயஸ் தோட்டமிருக்கு, நமக்குன்னு
என்ன இருக்கு?’’ என்று தன் சொந்த சாதிக்காரர்களை உசுப்பேற்றி
அவர்களது உழைப்பில் தைலாபுரம்
தோட்டத்தையும் பண்ணைவீட்டையும் உருவாக்கிக்
கொண்ட ராமதாசுக்கு தலித்துகள்
தங்களது சொந்த உழைப்பிலும் சேமிப்பிலும்
கட்டிய வீடுகளின் அருமை தெரிந்திருக்க நியாயமில்லை. தங்களது
வாழ்வின் உயிரோட்டமான அங்கங்களில்
ஒன்றாக நேசிக்கும் வீட்டை தாங்களே எரித்துக்கொண்டார்கள் என்று தலித்துகள் மீது அபாண்டமான பழியை வாய்கூசாமல் சொல்லுமளவுக்கு
ராமதாசின் மனம் வக்கிரத்தால் அழுகிக்கிடக்கிறது.
பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோடும் தந்திரம்
அப்படியொன்றும் புதிதல்ல, அது பார்ப்பனீயம் காலங்காலமாக கடைபிடிக்கும்
பழைய தந்திரம்தான். மூட்டிய
தீக்குண்டத்தில் நந்தனை தள்ளிவிட்டு எரித்த கொலையாளிகள், அவன் ஜோதியிலே ஐக்கியமாகிவிட்டான் என்று புருடா விடவில்லையா? கடவுளின்
கக்கத்திலும் கவட்டையிலும் பிறந்ததாக
பீற்றிக்கொள்கிறவர்களுக்கெல்லாம் கிடைக்காத பாக்கியம்
நந்தனுக்கு மட்டும் கிடைத்ததாக கிளப்பிவிட்ட
கதையில் ஒரு கொலை மறைக்கப்பட்டது. வள்ளலாருக்கும் கூட நந்தனின் கதியே நேர்ந்தது. சீதை விரும்பியா தீயில் இறங்கினாள்? கணவன் இறந்த பிறகு கைம்பெண்ணாகிறவர்கள் வேறு உறவுகளை ஏற்படுத்தி சாதிப்புனிதத்தை(?)
கெடுத்துவிடுவார்கள் என்பதற்காக உடன்கட்டை ஏற்றிக்
கொன்றவர்கள், அவள் தீக்குள் புகுந்து சதிமாதாவாகிவிட்டாள் என்று பொய்யுரைத்ததை நாடறியும்.
வெண்மணியில் ராமய்யாவின்
குடிசையிலிருந்த 44 பேரும் எரித்துக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து காவல்துறையின் ஆவணங்களில்
கையாளப்படும் சொற்பிரயோகங்களுக்குள் மறைந்திருக்கும் சூதினை அம்பலப்படுத்தி தோழர். கோ.வீரய்யன் எழுதியுள்ளதைப் பாருங்கள்.
‘‘வீட்டிற்குள் இருந்தவர்கள் வீடு தீப்பிடித்ததால் இறந்திருக்கலாம் என்று தனித்தும் ஏகோபித்தும் அபிப்ராயப்படுகிறோம்...’’
காவல்துறை ஆவணங்களை எப்படித் தயாரிக்கிறது பார்த்தீர்களா?
‘‘தீப்பிடித்ததால், தீ வைத்ததால் அல்ல’’.
அதேபோல எரிக்கப்பட்ட 22 வீடுகள்
குறித்தும் வழக்கு ஆவணத்தில் தீப்பிடித்து
எரிந்திருக்கிறது, நெருப்பால் எரிந்த கூரை வீடு, நெருப்பு பிடித்து எரிந்துவிட்டது- இப்படித்தான்
குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர தீவைத்து எரிந்தது என்று எங்கும் நீங்கள் பார்க்க முடியாது. நீதிபதிகளும்கூட
இப்படி வார்த்தை விளையாட்டு நடத்தி வழக்கை தோற்கடித்த விதம் பற்றி சொல்லும் தோழர் வீரய்யன், உயர்நீதிமன்றத்தின்
தீர்ப்பின் 415ம் பக்கத்திலிருந்து பொருத்தமான வரிகளை எடுத்துக்காட்டுகிறார். ‘‘... அணிதிரண்ட கூட்டத்தின் முக்கியமான
நோக்கம் ஹரிஜனங்களைத் துன்புறுத்தவதுதான்
என்றிருந்தால் இந்த அனைத்துத் தெருக்களிலும்
உள்ள வீடுகளுக்குத் தீ வைத்திருக்க வேண்டும். அப்படிச்செய்யவில்லை...’’.
தீர்ப்பின் 435வது பக்கத்தில் இப்படி சொல்லப்பட்டுள்ளது ‘‘ முதலாவது குற்றவாளி கார் ஒன்றை வைத்திருக்கிறார் என்பது தெளிவு.. இத்தகைய மிராசுதாரர்களா இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளைப் பழிவாங்கும்
அளவுக்குப் பலவீனமான எண்ணம் கொண்டிருப்பார்கள். இவர்கள் தாங்களே சம்பவ இடத்திற்கு நடந்து வந்து பணியாளர்கள் உதவி ஏதும் இல்லாமல் வீடுகளுக்குத் தீ வைத்திருப்பார்கள் என்பதை நம்புவது சிரமமாக உள்ளது...’’ ( பார்க்க
நின்று கெடுத்த நீதி வெண்மணி வழக்கு பதிவுகளும் தீர்ப்புகளும்,
தமிழில் மயிலை பாலு).
23 வீடுகளும்
44 உயிர்களும் எரித்தழிக்கப்பட்டது பற்றி நீதிபதிகளே இவ்வாறு
கூறும் போது ராமதாஸ் வகையறாக்கள் தங்களது
எரித்தழிப்பு வன்செயல்களை ஒத்துக்கொள்வார்கள்
என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை.
தலித்துகள் தங்கள் வீடுகளை தாங்களே எரித்துக்கொண்டார்கள் என்று திரும்பத்திரும்ப கூறுவதன் மூலம் தமிழக அரசியல் இதுவரை கண்டிராத ஒரு பொய்யராக அவர் உருவாகியிருக்கிறார் என்பது அம்பலமாகிவருகிறது. கெட்டிக்காரனின் புளுகே எட்டுநாளைக்குத்தான். ராமதாஸ் அப்படியொன்றும் கெட்டிக்காரர்
அல்ல தானே?
நன்றி: அணையா வெண்மணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக