சனி, ஏப்ரல் 26

சுண்டூரு: பல ஆண்டுகளுக்குப் பின்; இன்னும் சில ஆண்டுகள் கழித்து - எஸ்.வி.ராஜதுரை

பதினைந்துஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி அது. 1992 ஆகஸ்ட் 6ஆம் நாள் ( முன்பொரு ஆகஸ்ட் 6 இல்தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஹிரோஷிமா மீது அணு குண்டை வீசியது) ஆந்திராவிலுள்ள சுண்டூரு கிராமத்தில் எட்டு தலித் இளைஞர்கள் ஆதிக்கச்சாதி ரெட்டிகளால் கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டனர்; அவர்களது உடல் துண்டுகள் கோணிப் பைகளில் அடைக்கப்பட்டுத் துங்கபத்திரா வாய்க்காலில் வீசப்பட்டன. இந்தக் கொடூரச் செயல்களைக் கண்டித்தும் அட்டவணை சாதியினர்/பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்னும் கோரிக்கை விடுத்தும்  தலித்துகள் நடத்திய ஆர்ப்பாட்டம் காவல் துறையினரின் துப்பாக்கிச்சூட்டால் கலைக்கப் பட்டது. இதிலும் ஒரு  தலித் இளைஞர் - அனில் குமார் - கொல்லப்பட்டார். அரசாங்கத்தின் மீது தலித்துகளின் வன்முறையைத் தூண்டிவிட்டதாக  மனித உரிமைச் செயல்வீரர் போஜம் தரகம் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணைக்குப் பின் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். அத்தண்டனைக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அவ்வளவுதான்.

ஆறு தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு மூலகாரணம் எனச் சொல்லப் பட்டது என்ன? அது ஒன்றும் புதிதல்ல; ‘மசாலா' தமிழ்த் திரைப்படங்களில் இருப்பது போன்ற ஒரே ஒரு ;ஃபார்முலா'தான்! தலித்துகள் மீதான வன்கொடுமைகள் நடக்கும்போது வழக்கமாகச் சொல்லப்படும் ஒன்றுதான்: அதாவது, தலித் இளைஞர்கள் ‘மேல் சாதி' பெண்களிடம் தகாத வார்த்தைகள் பேசினர்; முறைகேடாக நடந்துகொண்டனர்;  இதைத் தட்டிக் கேட்கப் போன ‘மேல் சாதி' ஆண்களிடம் அந்தத் தலித் இளைஞர்கள் அடாவடித்தனம் பேசினர்.  இதனால் சட்டென்று ஆத்திரமடைந்த ‘மேல் சாதி' ஆண்கள் முன்பின் யோசிக்காமல் அந்தத் ‘தலித் இளைஞர்களை'த் தாக்கியதால் அந்த உயிர்ப்பலி நேரிட்டது! (அந்தத் தலித் இளைஞர்கள் முறை கேடாக நடந்துகொண்ட ‘மேல் சாதி'ப் பெண்களின் பெயர் மட்டும் ஒருபோதும் வெளியிடப்பட்டதில்லை. ஏனெனில் அது ‘மேல் சாதியினரின்' மானப் பிரச்சனை.)

இந்தியா முழுவதிலும் தலித் இயக்கம் பிளவுபட்டுக் கிடக்கிறது என்றாலும், இந்தப் பிளவுகளை மீறியும் கடந்த இருபதாண்டுகளாகவே தலித் சமுதாயம் முழுவதிலுமே சாதி எதிர்ப்பு உணர்வு வலுப்பட்டு வருவதைப் பார்க்கலாம். சுண்டூரு தலித் இளைஞர்கள் தீண்டாமையை எதிர்த்துப் போராடி வந்துள்ளனர். ‘மேல் சாதியி'னரின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது ஊர் நடுவில் அம்பேத்கர் சிலையை நிறுவியுள்ளனர். ஊர்த் திருவிழாக்களின் போதும் தெரு நாடக நிகழ்ச்சிகளின் போதும் ‘மேல் சாதியி'னருக்குச் சமமாக உட்கார்ந்திருப்பதில் வெற்றி பெற்றுள்ளனர். அங்கு  ஏராளமான படித்த தலித் இளைஞர்கள் உள்ளனர். ‘மேல் சாதி' இளைஞர்களைக்காட்டிலும் தலித் இளைஞர்களிடையே தான் படித்தவர்கள் அதிகம். இட ஒதுக்கீட்டின் காரணமாக அவர்களுக்குக் கவ்வி வாய்ப்பு மட்டுமின்றி வேலைவாய்ப்புகளும் கிடைத்துள்ளன. பல தலித் இளைஞர்கள் ரெட்டி இளைஞர்களைக்காட்டிலும் முன்னேறியுள்ளனர். இரயில்வேத்துறையில் வேலை பார்க்கின்றனர். பலர் இளங்கலைப் பட்டதாரிகளாக, முதுநிலைப் பட்டதாரிகளாக, பொறியியல் பட்டதரிகளாக உள்ளனர்.

 சுண்டூரு மாணவர்கள், கல்லூரிப் படிப்புக்காக 20 கி.மீ.தொலைவிலுள்ள தெனாலிக்குத்தான் செல்ல வேண்டும். இரயில், பேருந்துப் பயணங்களின்போது தலித் இளைஞர்களுக்கும் ‘மேல் சாதி' பெண்களுக்குமிடையே தொடர்புகள் ஏற்பட்டிருக்கலாம்; அது நட்பாக வளர்ந்து காதலில் போய் முடிந்திருக்கலாம். இது ‘மேல் சாதி'க் குடும்பங்களுக்கு எரிச்சலூட்டியிருக்கலாம். எனவே, தலித் இளைஞர்கள் ‘மேல் சாதி' பெண்களிடம் ‘முறை கேடாக' நடந்திருக்கின்றனர் என்பதில் ஓரளவு உண்மை இருக்கக்கூடும். இந்த சம்பவத்தைப் பொருத்தவரை மூலகாரணமாகச் சொல்லப்படதும் கூட வழக்கமான ஃபார்முலாதான்: திரைப்பட அரங்கொன்றில் ஒரு தலித் இளைஞன் ஒரு ரெட்டிப் பெண்ணைக் கேலி செய்திருக்கிறான், எனவே ரெட்டி ஆண்களுக்குச்  ‘சட்டென்று' கோபம் ஏற்பட்டது, அதனால் முன் பின் யோசிக்காமல் தாக்குதலில் ஈடுபட்டனர்! ஆனால், 'முன் பின் யோசிக்காமல்” என்று கூறப்படுவதைச் செரிப்பது கடினம். ஏனெனில், படுகொலை நிகழ்ந்த அன்று ஏறத்தாழ நானூறு ரெட்டிகள் முன்கூட்டியே திட்டமிட்ட வகையில் கொலை ஆயுதங்களோடு ஒன்று கூடியிருந்தனர். ‘சட்டென்று' வந்த ஆத்திரத்தால் கொலை செய்வதோடு அவர்கள் நின்றிருக்கலாம். ஆனால் கொலையுண்டவர்களின் உடல்களைக் கண்டதுண்டமாக வெட்டி வாய்க்காலில் துக்கியெறியுமளவிற்கு அவர்கள் சென்றது ஏண்?  தன்மானம் பேசும் தலித்துகளுக்குப் பாடம் புகட்டத்தான்.

ஆந்திராவிலுள்ள ஆதிக்கச்சாதிகளிலேயே மிக வெறிபிடித்தவர்கள் ரெட்டிகள்தான். கடந்த 400 ஆண்டுகளாகவே அவர்கள் கிராமப்புறங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்தியா ‘சுதந்திரம்' அடைந்த பிறகு ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்கு மேலாக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருபவர்களும் அவர்கள்தான். நீதித் துறையையும் அவர்கள் தங்கள் கைக்குள் போட்டு வைத்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு எதிராக சுண்டூரு இளைஞர்கள் நடத்தி வரும் உறுதியான போராட்டத்தின் காரணமாகத்தான் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு சிறப்பு நீதிமன்றம் சம்பவம் நடந்த இடத்திலேயே நிறுவப்பட்டது. இதன் காரணமாக நீதிமன்றம் செல்வதற்காக தலித்துகள் நகர்ப்புறங்களுக்குப் பயணம் செல்ல வேண்டிய தேவை இல்லாமல் போய் விட்டது. நீதியை நிலைநாட்டுவதற்காக தலித்துகள் ‘சுண்டூரு பாதிக்கப்பட்டோர் சங்கம்' என்னும் அமைப்பை உருவாக்கினார்கள். தங்கள் சார்பில் வழக்காட நியமிக்கப்பட்ட அரசாங்க வழக்குரைஞரின் பின்னணியை ஆராய்ந்து அவர் தலித்துகளின் பால் அக்கறை கொண்டவர் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே அவருடன் ஒத்துழைக்க முடிவு செய்தனர். ரெட்டிகளின் கொலை மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், ஆசை காட்டுதல்கள், ரெட்டிகளுக்கு வழக்காட வந்த ‘புகழ் பெற்ற' வழக்குரைஞர்களின் திறமைகள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாது நீதிமன்றம் சென்று குற்றவாளிகளை அடையாளம் காட்டினர். இத்தகைய தலித் சாட்சிகளில் முக்கியமானவர் தனராஜ். இவருமே 1992 ஆகஸ்ட் 6 ஆம் நாள் நடந்த தாக்குதலில் குற்றுயிரும் குலையுயிருமாக விட்டுச் செல்லப்பட்டு எப்படியோ தப்பிப் பிழைத்தவர். ஐந்து தலித்துகள் தன் கண் எதிரேயே படுகொலை செய்யப்பட்டதைப் பார்த்தவர்.மற்றொரு முக்கிய சாட்சி, ‘சுண்டூரு பாதிக்கப்பட்டோர் சங்க'த்தின் முன்னாள் தலைவர் மெருகொண்டா சுப்பாராவ். இவர் கூலித் தொழிலாளி.

இத்தனை ஆண்டுக்காலப் போராட்டத்திற்குப் பிறகு இந்த ஆண்டு ஆகஸ்ட் தொடக்கத்தில் அவர்களுக்கு ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது -அது முழுமையான வெற்றி அல்ல என்னும் போதிலும். குற்றம் சட்டப்பட்டவர்களில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை; 35 பெருக்கு ஓராண்டுக் கடுங்காவல்; எஞ்சியுள்ளோர் மீது குற்றம் சரிவர நிரூபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது. தண்டிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளனர். அதே போல விடுதலை செய்யப்பட்டவர்கள் மீண்டும் விசாரணை செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் என இதுநாள் வரை போராட்டம் நடத்திவந்த தலித் அமைப்புகளின் கூட்டமைப்பும் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.

மேலவளவு, கோலார் அருகிலுள்ள  கம்பளப்பள்ளி கிராமம் ஆகியவற்றில் படுகொலை செய்யப்பட்ட தலித்துகளுக்கு நீதி கிடைக்கவில்லை. மேலவளவு படுகொலையை பொருத்தவரை குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வாங்கித் தருவதில் எந்தத் தலித் அமைப்புக்கும் அக்கறையோ உறுதிப்பாடோ இருக்கவில்லை. தலித் அமைப்புகள் ஒன்றுபட்டுக் கூட்டமைப்பை உருவாக்கிப் போராட முன்வரவில்லை.  கம்பளப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த முக்கியமான தலித் சாட்சிகள் சிலர் நீதிமன்றத்தில் ‘பல்டி' அடித்து ‘மேல் சாதியினருக்கு' சாதகமாக நடந்துகொண்டனர். இன்னொரு பக்கம், நாடுமுழுவதிலுமே, ‘வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை' பொருத்தவரை காவல்துறை ஆதிக்கச்சாதிகள் சார்பாகவே நடந்து கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில், சுண்டூரு தலித்துகளின் ஒற்றுமையும் உறுதிப்பாடும், அங்குள்ள தலித் அமைப்புகளின் ஒருமைப்பாடும் தலித்துகளின் தன்மானப் போராட்டத்தில்  சிறப்பான மைல் கல்லாக அமைகின்றன.

சிறப்பு நீதிமன்றம் சுண்டூரு தலித் மக்களுக்கு வழங்கியுள்ள மகிழ்ச்சி நீடிக்காது போய்விடலாம்.  நீதித்துறையும் ஆதிக்கச்சாதிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளதால் உயர் நீதிமன்றத்தில் செய்யப்படும் மேல் முறையீடுகளில் ரெட்டிகளுக்குச் சார்பாகத் தீர்ப்பு வழங்கப்படலாம். ஆந்திராவில் மாறிமாறி ஆட்சி செலுத்துவரும் மேல் சாதியினரான  கம்மாக்களுக்கும் ரெட்டிகளுக்குமிடையிலான அதிகாராப் போட்டாபோட்டிகளும் முரண்பாடுகளும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் திசையைத் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கக்கூடும். அண்மைய சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பையும்கூட இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும். இப்போது ஒரு ரெட்டி முதலமைச்சராக உள்ளார். எனவே ரெட்டிகளுக்குச் சார்பாக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்குமேயானால், அது ரெட்டிகளுக்குச் சார்பானதும் தலித்துகளுக்கு எதிரானதுமான அப்பட்டமான பாரபட்சமாகக் கருதப்பட்டிருக்கும்.  எனவே தலித் வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என சில தலித் அறிஞர்கள் கருதுகின்றனர். ஏறத்தாழ சுண்டூரு படுகொலை நடந்த அதே காலக்ட்டத்தில் கரம்சேடு என்னும் கிராமத்தில் தலித்துகள் கம்மா சாதியினரின் வன்கொடுமைக்காளாகினர். ஆனால், சாட்சிகள் சந்தேகத்துக்கிடமின்றி குற்றத்தை நிருபிக்க உதவவில்லை என்று நீதிமன்றம் கூறி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது.

எனினும் இந்த உண்மைகள் சுண்டூரு தலித்துகளின் உற்சாகத்தையோ போராட்டப் பண்பையோ சிறிதும் குலைத்துவிடப் போவதில்லை. வெற்ரிகளைப் போலவே, தோல்விகளும் அவர்களைப் போராட்டப் பாதையில் உந்திவிடத்தான் செய்யும்.

II

மூன்றாண்டுகளுக்கு முன் வெளிவந்த கட்டுரையைத்தான் மேலே தந்திருக்கிறோம்.  அந்த கட்டுரையில் கூறியிருந்ததைப் போலவே, ஆந்திர உயர் நீதிமன்றம் கடந்த 22.4.2014இல் வழங்கிய தீர்ப்பும் அமைந்திருகின்றது.

 நீதிபதிகள் எல்.நரசிம்ம ரெட்டி, எம்.எஸ். ஜெய்ஸ்வால் ஆகியோரடங்கிய உயர் நீதிமன்ற ஆயம், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 21 பேரையும் ஓராண்டுச் சிறை தண்டனை வழங்கப்பட்ட 35 பேரையும் (அதாவது  சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட அனைவரையும்) விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.  எட்டு தலித்துகள் கொலை செய்யப்பட்ட நேரம், கொலை செய்யப்பட்ட இடம், கொலை செய்தவர்களின் அடையாளம் ஆகியவற்றை அரசாங்கத்தரப்பு சரிவர நிரூபிக்கவில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஒரு சாட்சி தந்த சாட்சியம் ‘ஆட்டம் காணக்கூடியதாக' இருந்தது என்றும், இத்தகைய சாட்சிகள் கூறிய சாட்சியங்களின் அடிப்படையிலேயே அமர்வு நீதிமன்றம் மேற்சொன்ன 56 பேரைக் குற்றவாளிகள் என்று கருதி, அவர்களுக்குத் தண்டனை வழங்கியது என்றும், ஆகவே அவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதாகவும் உயர் நீதமம்னறம் தீர்ப்புக் கூறியது.

ஆதிக்கச்சாதியினர் இவ்வழக்கில் தாங்கள் பெற்ற வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சிகள் எதனையும் நடத்துவதற்கு மூன்றுமாதகாலம் தடைவிதிக்கவேண்டுமென்று காவல்துறைக்கு "ஆணையிட்ட" உயர்நீதிமன்றம் மனிதமாண்புகளையும் மனித உரிமைகளையும் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மனதில் பதியவைக்கும்படி சமுதாயத்திலுள்ள அனைத்து பிரிவினருக்கும் அமைப்புகளுக்கும் "உபதேசம்" கூறியுள்ளது. அதுமட்டுமல்ல, கொலை செய்யப்பட்ட தலித்துகளின் குடும்பங்களின் வேதனையை அரசாங்கம் அவர்களுக்கு தந்துள்ள உதவிகளால் போக்கமுடியாது என்று தனது " இரக்கவுணர்வையும்"  வெளிப்படுத்தியுள்ளது.

அமர்வு நீதிமன்றத்தில் தலித்துகளுக்காக உயிரைக் கொடுத்து வாதாடிய மனித உரிமை இயக்க வழக்குரைஞர் சந்திரசேகர் 2013இல் காலமாகிவிட்டது தலித்துகளுக்குப் பின்னடைவாக இருந்தாலும், இடதுசாரி இயக்காங்களுடன் தொடர்பு கொண்டிருந்தவரும், தலித் இயக்க முன்னோடிகளிலொருவருமான வழக்குரைஞர் போஜா தரகம், உயர் நீதிமன்றத்தில் தலித்துகளுக்காக வழக்காட அரசாங்கத் தரப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். தலித் அமைப்புகள் ஒன்றுபட்டு இந்த வழக்கை நடத்திய போதிலும், ஆதிக்கச் சாதி செல்வாக்குக்குட்பட்ட நீதிமன்றம், நாம் எதிர்பார்த்தபடியே தலித்துகளுக்கு அப்பட்டமான அநீதி வழங்கும் தீர்ப்பை வழங்கிவிட்டது.

அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் களேபரங்களுக்கிடையே, ஏறத்தாழ 23 ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில் ஆந்திர உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்ப்பு பற்றிய செய்தி, தமிழகத்தில் ‘தி ஹிந்து‘ ஆங்கில  நாளேட்டில் மட்டுமே வெளிவந்துள்ளனது.

உச்ச நீதிமன்றத்தில், ஆந்திரப் பிரதேச அரசாங்கம் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று பல்வேறு தலித் அமைப்புகள் வலியுறுத்திவருகின்றன.

‘சாதிக்கு (அதிலும் குறிப்பாக தலித்துக்கு) ஒரு நீதி' என்பதுதான் இந்த நாட்டின் எழுதப்படாத விதியாக இருக்கையில், உச்ச நீதிமன்றத்திடமிருந்து எத்தகைய நீதி கிடைக்குமோ?
வெள்ளி, ஏப்ரல் 25

ஜனநாயகம் என்பது எங்கு வேண்டுமானாலும் விளையக்கூடிய தாவரமல்ல- புதுவிசை - 41வது இதழ்


#னது அறிவின் ஒரு துளியாக இந்தியாவுக்கு  அரசியல் சாசனத்தை வழங்கிச்சென்ற அம்பேத்கர் ‘ஜனநாயகம் என்பது இரத்தம் சிந்தாமல் மக்களின் பொருளாதார, சமூக வாழ்க்கையில் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவரும் ஒரு வடிவம்’ என்றார். சமுதாயத்தில் கடும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாதிருத்தல், எதிர்க்கட்சி செயல்படுவதற்கான சுதந்திரம், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் நிர்வாகத்திலும் சமத்துவப்போக்கை பேணுதல், அரசியல் சாசன நீதிமுறையைக் கடைபிடித்தல், பெரும்பான்மையினரின் ஆட்சியிலும் தாம் பாதுகாப்பாக இருப்பதாக எப்போதும் உணருமளவுக்கு சிறுபான்மையினர் மீது பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மை இல்லாதிருத்தல், வாழ்வின் பரந்த அம்சங்களில் சட்டத்தின் குறுக்கீடின்றி மக்கள் தாமாகவே ஒரு தார்மீக ஒழுங்குடன் இயங்குதல், யாருக்கு எத்தகைய அநீதி இழைக்கப்படினும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பாதிக்கப்படாதவர்களின் மனசாட்சி வீறுகொண்டு கிளர்ச்சியுறுதல் ஆகிய முன்நிபந்தனைகளின் பேரிலேயே ஒரு நாட்டில் ஜனநாயகம் வெற்றிகரமாக செயல்பட முடியும் என்பதை உலகளாவிய நிகழ்வுகளிலிருந்து அம்பேத்கர் தொகுத்துக் கூறினார். ஆனால் இந்த முன்நிபந்தனைகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றாத இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என தன்னை அழைத்துக்கொள்கிறது.

ஊராளுமன்றம் தொடங்கி நாடாளுமன்றம் வரைக்குமாக நடைபெறும் தேர்தல்களில் குடிமக்கள் வாக்களித்து  ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே ஜனநாயகம் எனில்  இலங்கையும்கூட சிறந்த ஜனநாயக நாடு என்று பிழையாக  பொருள்கொள்ளப்பட்டுவிடும். ஆகவே தேர்தல் என்பது ஜனநாயகத்தின் ஓரம்சம்தானேயன்றி அதுவே ஜனநாயகத்தின் முழுப்பொருளல்ல. அந்தத் தேர்தல் ஜனநாயகமும் கூட இந்தியாவில் சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத் தளங்களில்  ஏற்கனவே ஆதிக்கம் செலுத்திவரும்  கும்பலிடம்/ குடும்பங்களிடம் அரசதிகாரத்தையும் ஒப்படைப்பதற்காக பெரும்பான்மையினரின் ஒப்புதலைப் பெற்றுத்தரவே கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஒப்புதல் சாதி, மதம், பாலினம், பணபலம் மூலம் பெறப்படுகிற கேவலத்தை மறைக்கவே தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகள் அவ்வப்போது ‘கெடுபிடி’ ‘கிடுக்கிப்பிடி’ நாடகமாடுகின்றன.

‘ஜனநாயகம் என்பது எங்கு வேண்டுமானாலும் விளையக்கூடிய ஒரு தாவரமல்ல’ என்கிற அம்பேத்கரின் வாசகம், ஜனநாயகம் என்பதைத் தேர்தலுக்கு அப்பால் விரித்துப் பொருள் கொள்ளவும், ஜனநாயகம் தழைப்பதற்கான சூழலை உருவாக்கிடும் போராட்டத்தினை முன்னெடுக்கவும் நம்மைத் தூண்டுகிறது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தால் செறிவூட்டப்பட்ட ஜனநாயகச் சிந்தனையானது ஒரு வாழ்வியல் பண்பாக - அன்றாட நடப்பியல் வாழ்வில் சக மனிதர்களோடு கடைபிடிக்கக்கூடியதாக  பயிற்றப்படும் போதே இந்தியச் சமூகத்தில் தேர்தலும் ஜனநாயகமாக நடைபெறும் என்கிற புரிதலைத் தருகிறது.

# ஆதிக்கச்சாதியினர் முதலில் தலித் மற்றும் பழங்குடியினரின் வாக்குரிமையை மறுத்தனர். பிறகு தலித்துகளும் பழங்குடிகளும் தமக்கென ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டி யிடுவதைத் தடுத்தனர், தடுக்கமுடியாத நிலையில் தமக்கு உகந்தவர்களைக் களமிறக்கி தேர்தலைச் சீர்குலைத்தனர்.  இப்போது 2013 டிசம்பரில் தில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ‘ஒதுக்கப்பட்ட தொகுதிகளில்’ நோடா பொத்தானை அதிகளவில் அழுத்தி தலித் / பழங்குடி வேட்பாளர் எவருக்கும் வாக்களிக்காமல் தமது ஒவ்வாமையை வெளிப்படுத்தியுள்ளனர். வாக்காளரை அதிகாரப்படுத்தக்கூடிய சீர்திருத்தம் என்று புகழ்ந்துரைக்கப்பட்ட NOTA ( None of  The  Above மேற்கண்ட வேட்பாளர்களில் யாருக்கும் வாக்களிக்கவில்லை) நோடா- அது அறிமுகப் படுத்தப்பட்ட முதல் தேர்தலிலேயே- தலித்/ பழங்குடிகளுக்கு எதிரான மற்றுமோர் ஆயுதமாக - தீண்டாமை வடிவமாக சாதியவாதிகளால் கீழ்மைப்படுத்தப்பட்டுள்ளது. திட்டமிட்ட அணிதிரட்டலோ புறத்தூண்டுதலோ இன்றி தலித் மற்றும் பழங்குடியினர் மீது இயல்பாகவே அவர்களுக்குள் மண்டிக்கிடக்கும் வெறுப்புணர்வின் வழிகாட்டுதலில் அனிச்சையாகவே அவர்கள்  நோடாவை சாதியநோக்கில் பயன்படுத்தியுள்ளனர்.  தலித்/ பழங்குடிகள் தமக்கான பிரதிநிதிகளை தாங்கள் மட்டுமே வாக்களித்து தேர்ந்தெடுத்துக்கொள்ளட்டும் என்று ஒதுங்கி நிற்கிற ஆதிக்கச்சாதியினரின் இந்த மனநிலை, அம்பேத்கர் தீண்டப்படாதவர்களுக்கென கோரிய தனித்தொகுதி, இரட்டை வாக்குரிமை ஆகியவற்றின் நியாயத்தையும் அவற்றை மீளெடுக்கும் தேவையையும் உணர்த்துகிறது.

1996ல் பதானிதோலாவில் 21 பேர், 1997ல் லக்ஷ்மண்பூர் பாதேயில் 58 பேர், 2000ல் மியாப்பூரில் 10 பேர் என்று தலித்துகள் கூட்டாக கொல்லப்பட்ட அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் அனைவரையும் பீகார் உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. ஏற்கனவே 1968ல் வெண்மணியில் 44 தலித்துகளை எரித்துக்கொன்ற அனைவரையும் விடுவித்த சென்னை உயர்நீதிமன்றம்தான் இதற்கு முன்னோடி. இப்போதோ, 1991ல் சுண்டூரில் 13 தலித்துகள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் ஆந்திர உயர் நீதி மன்றம் விடுவித்துள்ளது. எரித்தும் வெட்டியும் சித்ரவதை செய்தும் தலித்துகள் கொல்லப்பட்டிருக்கும் உண்மைக்கும், போதுமான ஆதாரங்களைத் திரட்டி குற்றத்தை நிரூபிக்க காவல்துறை தவறுவதும் அதையே காரணமாகக் காட்டி சந்தேகத்தின் பலனை குற்றவாளிகளுக்குத் தந்து அவர்களை நீதிமன்றம் விடுவிப்பதுமாகிய இந்த நாடகத்திற்கும் நாமெல்லோரும் பார்வையாளர்கள் அல்லது மௌன சாட்சிகள்.

 - ஆசிரியர் குழு, புதுவிசை 

41 வது இதழில்

இந்திய ஊடகங்கள்: ஒரு பார்வை
 - தமிழில்: இரா.சிசுபாலன்

புதியமாதவி தமிழாக்கத்தில்
 நான், நாம்தேவ் பேசுகிறேன் 
நாம்தேவ் தாசல் கவிதைகள்
மல்லிகா அமர்ஷேக் கவிதைகள் 

மிசோக்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது
- வி.ரத்னமாலா

இந்து மதம்: சில புதிர்களும் புரிதல்களும்
- . முத்துமோகன்

சூழலியல் கரிசனமும் சமூகக் கரிசனமும்
- அருண் நெடுஞ்செழியன்

நெஞ்சுக்கொம்பு - .நவீன்

மேடு நோக்கிப் பாயும் நீர் :
வறுமையின் அரசியல் பொருளாதாரம்
- .வி. வெங்கடேஸ்வரன்

மார்க்ஸ் இன்று - எரிக் ஹோப்ஸ்பாம்
தமிழில்: சா. சுரேஷ்

 சர்வாதிகார சாதியரசியல் - கோ.ரகுபதி

கண்டிச் சீமையிலே - இரா.சடகோபன்

ஓவியங்கள்: ஜெகன், கார்த்தி

முகப்போவியம்: கார்த்தி

பிரதிகளுக்கு:
ந.பெரியசாமி  9487646819
வியாழன், ஏப்ரல் 17

யாழ்ப்பாணத்துச் சாதியம்: காலனித்துவ சமரசம் -மு.நித்தியானந்தன்

"மப்பின்றிக் கால மழை காணா மண்ணிலே
சப்பாதி முள்ளும் சரியாய் விளையாது
ஏர் ஏறாது காளை இழுக்காது
எனினுமந்தப்
பாறைபிளந்து பயன் விளைப்பான் என்னூரான்" 
- என்று மகாகவி பாறை பிளந்து பயன் விளைவிக்கும் யாழ்ப்பாணத்து விவசாயியை வியந்து கவிதை வடித்தது உண்மைதான். ஆனால் கடும் பாறையை விட யாழ்மண்ணில் இறுகி வேரோடிப்போன சாதிய உணர்வினை பல நூற்றாண்டுகளாகத் தொடர்ச்சியாக ஆட்சி நடாத்திய ஐரோப்பிய அரசுகளாலும்கூட அசைக்க முடியவில்லை. மாறாக யாழ்ப்பாண சமூகத்தில் மேலாண்மை செலுத்திய சாதியினர் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியைப் பயன்படுத்தி மேலும் தம்மை ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதை சரித்திரம் சொல்கிறது.

பிரித்தானியப் பேரரசின் இலங்கையின் முதல் ஆளுநராகப் பதவியேற்ற பிறெடறிக் நோர்த், யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதிய அமைப்பினை தங்களின் நிர்வாகத்திற்கு வசதியானதெனக் கருதி சாதியமைப்பினை அனுசரித்துச் செல்லும் போக்கினைக் காண்கிறோம்.

யாழ்ப்பாணத்தின் கிராமிய மட்ட சமூகத் தலைமைத்துவம் சாதி வெள்ளாளர்களின் கைகளிலேயே இருந்தது. யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சாதியமைப்பினை ஆதாரமாகக் கொண்டுதான் இப்பிரதேசத்தின் சமூகப் பொருளாதர நடவடிக்கைகளும் சமூக உற்பத்தி உறவுகளும் அமைந்தன. சாதி, சமூகஅமைப்பின் மேற்கட்டுமானமாக அல்ல, அதுவே அடித்தளமாகவும் செயற்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தின் பொருளாதாரச் சமூகத்தளம் சாதியினால் வடிவமைக்கப் பட்டு, வெள்ளாள மேலாண்மையால் நிர்வகிக்கப்பட்டு வந்திருக்கிறது. உயர் குடிப்பிறப்பும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் இழிவுபடுத்தப்படுதலும் யாழ்மண்ணில் தோய்ந்துபோனவை. யாழ்ப்பாணத்தின் அரும்பெரும் சுதந்திரவீரனாக போற்றப்படும் சங்கிலி தனக்கேற்பட்ட ‚வைப்பாட்டி மகன்’ என்ற இழிவினை நீக்க, தன் மூத்த சகோதரர்களை அழித்துத்தான் அரச கட்டிலேறுகிறான். இந்தச் சாதியப் பெருமைகளும் இழிவுகளும் பிரித்தானியர் ஆட்சியிலும் தொடர்ந்தன.

1806ஆம் ஆண்டு அரசு நிறைவேற்றிய 10ஆவது இலக்கக் கட்டளைச்சட்டம் உயர்சாதியினருக்கு வழங்கப்படவேண்டிய மரியாதைகள் தொடர்ந்து வழங்கப்படவேண்டும் என்பதைச் சட்டபூர்வமாக அறிக்கையிட்டது. பிரிட்டிஷ் ஆட்சி அதன் ஆரம்பக்கட்டத்திலேயே சாதியமைப்புப் பாரம்பரியத்தை வலியுறுத்திப்பேண முயன்றிருப்பதை இது குறித்து நிற்கிறது.

அஞ்ஞான இருளில் மூழ்கிக்கிடந்த நாடுகளிடையே அறிவியக்க ஒளிபாய்ச்ச வந்ததாகக்கூறும் ஆங்கிலேய அரசு வலியுறுத்திய சமூக ஒழுங்கு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு மற்றும் நீதி போன்ற அம்சங்களும் யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதிய அமைப்பு, பழமையான சமூக ஒழுங்கு முறைமை, சமூகத்தின் மீதான அதிகாரக் கட்டமைப்பு, சமூக ஸ்திரப்பாடு என்பவற்றுக்கும் இடையில் முரண்பாடுகள் எழுந்தபோது இவர்களால் சமூக நீதியின் பேரில் தீர்க்கமான நிலைப்பாட்டினை எடுத்துக் கொள்ள முடியவில்லை.

யாழ்ப்பாணத்தின் சாதி அமைப்பின் தளத்தில் இருந்து சிக்கல்கள் தோன்றிய போதெல்லாம் சமூக நீதியின் அடிப்படையில் அல்லாமல் சமூகத்தில் நிலவும் ‚அமைதிக்கு’க் குந்தகம் ஏற்படாதவகையில் யாழ்ப்பாணத்தில் வேரூன்றி நின்ற பழைய அதிகாரப் படிமுறையைத் தக்க வைத்துக்கொள்ளுதலே உகந்தது என்ற ரீதியிலேயே ஆங்கிலேயரின் கொள்கை உருவாக்கம் அமைந்தது.

குடியேற்ற நாட்டுச் செயலாளரும் வரலாற்றாசிரியருமான எமர்சன் டெனண்ட்(Emerson Tennen) யாழ்ப்பாணச் சாதியமைப்பின் கொடூரத்தைப் பார்த்துத் திகைத்துப் போனார் என்றாலும் அரசின் கடந்த கால அநுபவங்களைக் கொண்டு பார்க்கின்றபொழுது சாதியமைப்பின் மீது நேரடியாகத் தலையிடுவதைத் தவிர்த்துக் கொள்வதே உசிதமானது என்று கருதினார். ஆங்கிலேய அரசு கைக்கொண்ட தலையிடாக் கொள்கையை யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பைப்பொறுத்தும் உறுதியாகக் கடைப்பிடிப்பது அவர்களுக்கு வசதியாயிற்று. இந்தச் சாதியமைப்பின் கோரத்தாண்டவத்தைக் காலம்தான் மாற்றியமைக்கும் என்றும் பகுத்தறிவு படிப்படியாக வளரும் போது இது தணிந்து போகும் என்றும் டெனண்ட் எழுதினார்.

நிலமானிய அமைப்பில் போல அரசுக்கு நேரடியாகச் சரீர ஊழியம் போன்ற கடமைப்பாடுகள் தாழ்த்தப்பட்ட சாதியினர் செலுத்தத் தேவையில்லை என்று 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய அரசு கொணர்ந்த சட்டம் குறிப்பிடத்தக்கது. எனினும் சாதியமைப்பின் வேரோட்டத்தை அதனால் எதுவும் செய்ய முடியவில்லை. யாழ்ப்பாணத்தின் முதல் ஆங்கிலேயக் கலெக்டராகவும் பின் அரசாங்க அதிபராகவும் கிட்டத்தட்ட நாற்பதுஆண்டுகள் (1829-1867) வட மாகாணத்தில் பணிபுரிந்த பெர்சிவல் ஏக்லண்ட் டைக்(Percival Ackand Dyke) வகுத்ததுதான் யாழ்ப்பாணத்தில் சட்டமாய் இருந்தது.

யாழ்ப்பாணத்தின் தனிக்காட்டு ராஜாவாக (Raja of the North’) டைக் திகழ்ந்தார். கொழும்பில்லிருந்து பிரிட்டிஷ் நிர்வாகத்தின் தொலைதூர எல்லையில் தனது ராஜாங்கத்தை எந்தத் தடையுமின்றி நடத்தி வந்தார். கடுமையான கண்டிப்புமிக்க பெர்சிவல் டைக், தன் காலத்திலும் யாழ் சாதியமைப்பிலிருந்து எழுந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டியிருந்ததது.

1830இல் நளவர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் காதிலே தோடு அணிந்ததை வெள்ளாளர்கள் எதிர்த்தனர். கிராமியத் தலமைப்பீடம் வெள்ளாளர் கைகளிலே இருந்ததால் இம்மாதிரி நகை அணிகளை இனிமேல் நளவர்கள் யாரும் அணியக்கூடாதென்று அறிவுறுத்தப்பட்டதோடு, பாரம்பரியப் பழக்கவழக்கத்தை மீறியதற்குத் தண்டமும் விதித்தார்கள். சமத்துவத்தைப் போதிக்கும் அரசு, சாதிரீதியான இந்தப் பாரபட்சத்தையும் கொடுமையையும் அனுமதிப்பது சாத்தியமாயிருந்தது. அதேசமயத்தில் இத்தகைய சாதியமைப்புச் சார்ந்த நடவடிக்கைகளுக்கு முடிவுகாணவும் முயலவில்லை. காதில் காதணிகளை அணிந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனையை டைக் நீக்கினார். பாரம்பரிய மரபுகளில் தலையிடுவதில் அவதானமாக இருக்கவேண்டும் என்ற ஆட்சிநடத்தும் ஜாக்கிரதை உணர்வில் இது போன்ற பிரச்சினைகளை இனிமேல் ஏற்படுத்தவேண்டாம் என்று தனது கீழ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் கூறியதோடு நின்றுவிட்டார்.

மீண்டும் ஒரு சாதி அடிப்படையிலான பிரச்சினைய டைக் எதிர்கொள்ள நேர்ந்தது. யானை ஏற்றுமதி செய்வதற்கான துறை மேடையை அமைப்பதற்காக பனை மரத்தைக் காவிச் செல்லுமாறு திமிலர் இனத்தவர்களைக் கிராம மணியகாறர் பணித்திருக்கிறார். திமிலர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மணியகாறர் கட்டளைக்குப் பணிய மறுத்திருக்கிறார்கள். இத்தகைய பொதுப்பணிகளின்போது இவ்வாறு தாழ்த்தப்பட்ட சமூகத்திடமிருந்து சேவைகளைப் பெறுவது, பாரம்பரியமாக நடந்துவருவதுதானென்று மணியகாரர் தெரிவித்தார். திமிலர் இனத்தவர்களின் முறைப்பாடு தம்முன்வந்தபோது அதனைப்பரிசீலனை செய்த டைக் மணியகாரரின் நடவடிக்கை அரசாங்கத்தின் கட்டளையை மீறும் செயலே என்று கருதி பனைமரம் காவிச்சென்றதற்கான கூலியை அவர்களுக்கு மணியகாரர் தனது சொந்தப்பணத்திலிருந்தே செலுத்த வேண்டும் என்று கட்டளையிட்டார். யாழ்ப்பாணதில் கடமைக்காகத் தான் வெளியிடங்களுக்குப் போகும்போது சாதி அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களின் ஊழியத்தை இலவசமாகப் பெற்றுத் தங்குமிடங்கள் அமைத்தல் மற்றும் ஏனைய பணிகளைச் செய்யும் நடவடிக்கைகளுக்கு டைக் முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனால் யாழ்ப்பாண சமூகத்தில் வேரோடிப்போன சாதியமைப்பின் அகங்காரம் அவ்வளவு லேசாக அடங்கிவிடுவதில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் பரம்பரைபரம்பரையாக வழங்கிவந்த மரியாதைகளையும் கௌரவங்களையும் தங்களுக்கு வழங்குகிறார்களில்லை என்று 1831இல் அப்போது கலெக்டராக இருந்த டைக்குக்கு பெட்டிசன் அனுப்பியிருந்தார்கள். சாதியடிப்படையிலான இந்தக் கோரிக்கையை பெர்சிவல் டைக் கோட்பாட்டு அளவில் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அந்த நிலைப்பாட்டை அவர் பூரணமாக நிராகரித்து விடவில்லை. நிர்வாகத்தைக் கொண்டு நடத்த சாதி வெள்ளாளர் களின் மணியகாரர் தலைமைத்துவம் அரசுக்கு அவசியமாயிருந்தது. எனவே டைக் இந்த வெள்ளாளத் தலைமையினரின் முறைப்பாட்டை நேரே கவர்னருக்குத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.

ஆட்சி நிர்வாகத்தில் தங்களுத் துணையாயிருக்கும் கிராமிய வெள்ளாளத் தலைமைத்துவம் உரிய மரியாதையோடும் தனித்துவத்தோடும் பேணப்பட வேண்டுமென்பதில் அரசு அக்கறைகாட்டியிருக்கின்றது. பிரிட்டிஷ் ஆட்சியின் ஆரம்பக் கட்டத்தில் யாழ்ப்பாணத்துக் கச்சேரிகளின் வராந்தாவில் தரையில் தான் வெள்ளாள மணியகாரர்கள் உட்கார்ந்திருக்க வேண்டியதாயிற்று. இது ஏனைய தாழ்த்தப்பட்ட மக்களின்முன் தங்களுக்கு அவமரியாதையானது என்று சாதிவெள்ளாளர்கள் முன்வைத்த கோரிக்கையினை டைக் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு இருக்கைகள் வழங்க அனுமதித்திருக்கிறார்.

பொதுக் கிணறுகளில் எல்லா சாதியினரும் தண்ணீர் அள்ளுவதால் கிணறு ‚தீட்டுப்பட்டு’ தாங்கள் அத் தண்ணீரைக் குடிக்கமுடியாதென்று வெள்ளாளர்கள் கோரியதையேற்று அவர்களது அந்தஸ்தை நிலைநிறுத்த அவர்களுக்கென்று தனியே கிணறு வெட்டிக்கொடுக்கவும் டைக் ஏற்பாடுசெய்தார். அரசாங்க ஊழியர்களின் சுய கௌரவத்தை உயர்த்துவது அரசின் தொடர்ந்த ஆசை என்று கூறிய டைக் அவர்கள் விசேடமாகவும் தனி மரியாதையுடனும் நடத்தப்படவேண்டுமென்று கோருவது நியாயமென்று கருதினார்.

1849 மார்ச் மாதம் பருத்தித்துறை-புலோலியில் தட்டார் சமூகத்தவர்கள் சாதிவெள்ளாளர்களுக்கு எதிரான முறைப்பாட்டை அரசிடம் கையளித்தபோது கவர்னர் இப்பிரச்சினையை விசாரித்து அதனைத் தீர்த்து வைக்குமாறு யாழ்ப்பாண அரசாங்க அதிபரான டைக்கைக் கேட்டிருந்தபோது அவர் அந்த விசாரணையைச் சாதுரியமாகத் தவிர்த்துக்கொள்ளவே விரும்பினார். சாதியைப் பகிரங்கமாக அங்கீகரிக்கும் நிலையைக் கவனமாகத் தவிர்க்குமாறு விதிக்கப்படிருக்கும் அறிவுறுத்தல்களுக்கமைய இந்த முறைப்பாடும் சாதியடிப்படையில் எழுந்திருந்ததால் இதனை விசாரிக்க முற்படுவது அவசியந்தானா என்ற பாணியில் டைக்கின் பதில் அமைந்தது. தட்டார் சமூகத்தவர்கள் தங்களின் மணியகாரரான வெள்ளாளர் தமக்கு அநீதியாக நடப்பதால் தமது சொந்தச்சாதியிலிருந்தே தலைமைக்காரரைத் தெரிவு செய்யுமாறு கோரியிருந்தனர். வண்ணார் மற்றும் முடிதிருத்துவோரிடமிருந்தும் வெள்ளாளருக்கெதிரான முறைப்பாடுகள் அரசாங்க அதிபரிடம் வந்தவண்ணம் இருந்தன.

யாழ்ப்பாணத்தில் சாதிச்சண்டைகள் தொடர்ச்சியாக சகல இடங்களிலும் நடந்துகொண்டிருந்தன. இத்தகைய சந்தர்ப்பங்களில் சமூக நீதி காக்கவேண்டிய நிர்வாகம் சாதுர்யமாக ஒதுங்கிக் கொண்டது. சாதிப்பிரச்சனைகள் வன்முறையில் முடிந்தபோது அவை குற்றவியல் பிரச்சனைகளாகி நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு விடப்பட்டன. ஊர்காவற்துறையில் ஒரு பிணத்தைப் புதைப்பது தொடர்பாக கத்தோலிக்கர்களின் மத்தியில் சாதிசார்ந்து பிரச்சினை எழுந்தபோது உள்ளூர்வாசிகளின் சடங்காசாரங்களில் அரசு தலையிட விரும்பவில்லையென்று அரசு பிரச்சனையைக் கைகழுவி விட்டது. நீதிமன்றத்திற்தான் நியாயம் கோரவேண்டுமென்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தச்சுத்தொழிலாளி ஒருவர் தனது மகளுடைய திருமணத்திற்குப் பந்தல் போட்டு வெள்ளைத்துணியால் அலங்காரம் செய்திருந்தார். வெள்ளாளர்கள் அதை எதிர்த்துப் பந்தலைக் கலைத்து திருமணத்தைக் குலைக்க முயன்றனர் . அரசிற்கு இது முறைப்பாடு செய்யப்பட்டபோது அரசின் உதவி அதிகாரி திருமணத்திற்கு நேரேசென்று அங்கு குழப்பம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டியதாயிற்று.

கொள்கை ரீதியாக அரசாங்கம் சாதிப்பாகுபாடை அங்கீகரிக்கவில்லை யென்றாலும் அதனை உறுதியாக நடைமுறையில் எதிர்க்கவில்லை. சாதி ஒடுக்குமுறையோடு அது சமரசம் செய்து கொண்டது. பிரஸ்தாப இந்த நிகழ்ச்சியிலும் இதற்குப் பின் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பந்தல்களில் வெள்ளைத் துணியால் அலங்காரஞ் செய்ய விசேட பத்திரங்களில் வெள்ளாளத் தலைமைக்காரர்களிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டியிருந்தது. வெள்ளார்கள் அனுமதி பெறவேண்டாத அர்களுக்கே உரித்தான விசேட உரிமையாக அது அமைந்தது. 1864 இல் நல்லூரில் நொத்தாரிஸாக தட்டார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமித்த போதும் வெள்ளாளர்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு உருவானது.

அரசாங்க அதிபர் பெர்சிவல் டைக் தன் ஆட்சிக்காலத்தில் தனது அதிகாரத்திற்குச் சிறிய அச்சுறுத்தலாக எது வந்தாலும் அதனை நிர்த்தாட்சண்ணியமாக எதிர்த்து வந்திருக்கிறார். ‚பிரமச்சாரியாக’ அவர் கூறப்பட்டாலும் யாழ்ப்பாணத்தில் ஒரு பெண்ணுடன் அவருக்குத் ‚தொடுப்பு’ இருந்திருக்கிறது. கோப்பாயில் மரணமான டைக் யாழ்ப்பாணத்தை விரும்பி அங்கு பதவி வகித்துவந்திருக்கிறார் என்பதைக் குறிப்பிடவே வேண்டும்.

கிறிஸ்தவ மிஷனரிகள் கல்விப் போதனைகளில் ஈடுபடுவதையும் யாழ்ப்பாண சமூகத்தின் சாதி அமைப்புகளைத் தகர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் டைக் விரும்பவில்லை. இந்த மிஷனரிகளைத் தனது அதிகாரத்துக்குச் சவாலாக டைக் கருதினார். அரசின் நிர்வாக நடவடிக்கைகளில் அனாவசியத் தலையீடு மேற்கொள்பவர்களாக அவர்களை நினைத்தார். சென். ஜோண்ஸ் கல்லூரியினைக்கூட அவர் ஒரு இடையூறாகவே கருதினார். சென். ஜோண்ஸ் கல்லூரி அதிபரை அவர் பலமுறை சந்திக்க மறுத்திருக்கிறார். வேலை காலி இடங்களுக்கு தங்கள் கல்லூரி மாணவர்களை சென். ஜோண்ஸ் கல்லூரி அதிபர் டைக்குக்குச் சிபாரிசு செய்தபோது அவர் அதனை ஒருபோதுமே கருத்தில் கொண்டதில்லை.

19ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய கிறிஸ்தவ மிஷனரிகளும் அங்கு ஆழ வேரோடியிருந்த சாதி அமைப்பினை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்னையில் வெஸ்லியன் மெதடிஸ்ற் கல்லூரியில் வண்ணார் இனத்தைச் சேர்ந்த பையனை அனுமதித்ததற்காக வெள்ளாளர்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அப் பையனைப் பாடசலையிலிருந்து வெளியேற்றவேண்டியதாயிற்று. மீண்டும் 1847இல் இப்பாடசாலையில் நளவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையன் அனுமதிக்கப்பட்டபோது வெள்ளாளர்கள் எதிர்த்தபோது பள்ளிநிர்வாகம் அதற்கு இணங்கவில்லை. இதனைச் சகிக்கமுடியாத வெள்ளாளப் பெற்றோர் தமது பிள்ளைகளைப் பாடசாலையிலிருந்து நீக்கிக்கொண்டனர்.

இந்தப் பாடசாலை அனுமதிப் பிரச்சினைகள் பற்றி ஆறுமுகநாவலர் பின்வருமாறு எழுதுகிறார்: வண்ணார்பண்ணையிலுள்ள வெஸ்லியன் மிஷன் இங்கிலீசுப்பள்ளிக்கூடத்தில் ஒரு வண்ணாரப்பையன் மூன்று நான்கு வருஷம் படித்தவன். இவ்வருஷத்திலே மற்றப் பிள்ளைகள் ‚இவ்வண்ணானை எங்களோடிருத்திப் படிப்பிக்கின் நாங்கள் இப்பள்ளிக் கூடத்தை விட்டுவிடுவோம்’ என்றார்கள். அதுபற்றி முதலுபாத்தியார் தாங் கிறிஸ்தவராயிருந்தும், வண்ணானைத் தள்ளிவிட்டார். வண்ணான் பறங்கித் தெருவில் இருக்கிற வெஸ்லியன் பாதிரியிடத்தே போய், தனக்கு கிறிஸ்து மதமே சம்மதமென்றும், தனக்கு ஞானஸ்நானம் செய்து தன்னை அங்குள்ள வெஸ்லியன் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டான். பாதிரியார் தாம் அதற்கு உடன்பட்டும், அவனைச் சேர்த்துக்கொள்ளுமபடி தமக்குக் கவர்மெண்ட் ஏசண்டு எழுதிய கடிதம் பெற்றும், அப்பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளும் சுதேச குருமாரும் உபாத்தியாயர்களும் உடன்படாமையால், வண்ணானைச் சிலகாலம் அடிக்கடி அலைத்துப் பின் ஓட்டிவிட்டார். அவன் இப்போது நெடுந்தூரத்திலுள்ள கத்தோலிக்கப் பள்ளிக்கூடத்திலே படிக்கிறான். அப்பள்ளிக்கூடத்திற்றானே 1847ஆம் வருடம் ஒரு நளப்பையன் படித்தலைக்கண்டு ஏறக்குறைய ஐம்பது பிள்ளைகள் ஓட்டமெடுக்கவும் அந் நளப்பையனைத் தள்ளாத பாதிரியாரைப் பித்தரென்று நினைத்தரோ! நளவனிலும் தாழ்ந்தசாதி வண்ணானென்று கொண்டாரோ! சாதி வேற்றுமை பாராட்டுதல் கிறிஸ்து நாதருக்குஞ் சம்மதமென்று விவிலிய நூலில் எங்கேயாயினும் இப்போது கண்டாரோ? வண்ணானுடைய ஆன்மா பரமண்டலத்தில் இடம்பெறாதென்று தேவதூதன் சொப்பனத்தில் வந்து சொல்லக்கேட்டாரோ! தேவவாக்கினும் பெரிது தம்மைச் சேவிக்குஞ் சுதேச குருமார், உபாத்தியாயர்கள் வாக்கென்று தெளிந்தாரோ! வண்ணானைப் பற்றி மற்றப் பிள்ளைகளெல்லாம் ஓடிவிட்டால், அவர்கள் இருக்குஞ் சம்பளத்தினாலும் அவர்கள் பொருட்டுக் கவர்மெண்டார் உதவும் பணத்தினாலும் தமது பை நிரம்பாதேயென்று பயந்து விட்டாரோ! யாழ்ப்பாணத்திலே சாதி வேற்றுமை அறுத்துக் கிறிஸ்து மதத்தை நிலைநாட்ட வல்லவர்கள் பொருள்வாஞ்சைப் பிசாசா வேசிகளாகிய இந்தப் பாதிரிமாரும் சுதேச குருமாரும் தானோ! சபாசு! சபாசு!’

ஆறுமுகநாவலரின் இந்த நீண்ட குறிப்பு யாழ்ப்பாணத்தில் அன்று ஆழ்ந்து வேரூன்றி நின்ற சாதிவெறித் தனத்திற்கு அச்சொட்டான சாட்சியாக அமைகிறது. இவ்வளவு அழுத்தந் திருத்தமான – இறுகிப்போன சாதி அமைப்பின் பின்னணியிலே கிறிஸ்தவ மிஷனரிகள் இயங்க நேர்ந்தன. இருப்பினும் மிஷனரிமாரின் கல்வித் திட்டம் யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதியமைப்பின் கோட்டைகளில் பெரும் துளைகளை ஏற்படுத்தவே செய்தது. சாதியமைப்பினால் வட்டுக்கோட்டை செமினரியில் ஆரம்பகாலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளைப் பற்றி டெனன்ட் தனது ‚Christinanity in Ceylon’ என்ற நூலிலே குறிப்பிடுகிறார்.

மிஷனரிமார் தமது மதப்பரம்பலுக்குத் தடையாகச் சாதியமைப்பு நிலவுவதாகவே அதனை நோக்கினர். இக்காலகட்டத்தில் இலங்கையில் பணிபுரிந்த மிஷன்ரிமாரின் கடிதங்களிலும் அவர்கள் வெளியிட்ட சஞ்சிகைகளிலும் சாதி பற்றிய குறிப்புக்கள் வரும்போதெல்லாம் அது மதமாற்றத்திற்கு எவ்வாறு தடையாக அமைகிறது என்ற நோக்கத்தில் மட்டுமே பார்க்கப்பட்டிருப்பதைக் காணலாம். சாதியமைப்பிற்கு எதிராக சமயம்பரப்பலில் ஈடுபட்ட கிறிஸ்தவசமயமும் யாழ்ப்பாணத்தின் சாதியக்கொடூரத்தின் முன் சரணாகதியடைய நேர்ந்தமை இந்தச் சோக நாடகத்தின் மற்றுமொரு விரிவான கதை.

1871இல் மிஷனரிமாரின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆறுமுகநாவலர் சைவபரிபாலனசபையை நிறுவினார். அவர் நிறுவிய பாடசலையிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகள் அனுமதிக்கப்படவேயில்லை. சைவ பரிலபாலனசபை ஸ்தாபிக்கப்பட்ட ஆண்டில்தான் 1871இல் மாவிட்டபுரத்தில் சாதிக்கலவரங்கள் வெடித்தன. வெள்ளாளர், வண்ணார், அம்பட்டர், ஆகியோருக்கிடையில் சாதிமோதல்கள் எழுந்தன. அம்பட்டர்களின் உடுப்புக்களைத் தோய்க்கமுடியாது என்று வண்ணார்கள் மறுத்ததன் பின்னணியில் வெள்ளாளர்களே இருந்திருக்கிறர்கள்.

இந்தச் சாதிக் கிளர்ச்சிகள் டைக்கிற்குப் பின் பதவியேற்ற அரசாங்க அதிபர் டுவைநாம்(Twynam) காலத்திலும் தொடரவே செய்தன. இவர்களுக்கெல்லாம் பின்னால் ‚Village in the jungle’ என்ற அற்புதமான ஆங்கில நாவலை எழுதிய சிறந்த எழுத்தாளரான லெனார்ட் வூல்வ் (Leonard Woolf) யாழ்ப்பாணஹ்தில் அரசாங்க அதிபராகப் பணியாற்றினாரெனினும் அவர் யாழ்ப்பாண வெள்ளாள எதிர்ப்பின்பேரில் வெளியேறவே நேர்ந்தது. யாழ்ப்பாணக் கச்சேரியில் லெனார்ட் வூல்வ் (Leonard Woolf) பணியாற்றியபோது பிராமண வகுப்பைச் சேர்ந்த கிளாக்கர் தரையில் எச்சில் துப்பி அசுத்தப் படுத்திவிட்டதைப் பார்த்ததும் அவரையே தரையைச் சுத்தப்படுத்துமாறு பணித்துவிட்டார். தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் அவரே தரையைச் சுத்தப்படுத்தவேண்டிய நிலை அவருக்குப்பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாகக் கூறப்படுகின்றது. வூல்பின் இத்தகைய கண்டிப்பான நடவடிக்கைகளால் அவர் யாழ்ப்பாணத்தில் நிலைக்க முடியவில்லை. அவர் யாழ்ப்பாணத்தவர்களைப் பற்றி நல்லபடியாக ஒன்றும் தனது குறிப்புக்களில் எழுதவில்லை.

யாழ்குடாநாட்டில் வேரூன்றி நின்ற சாதியபிமானம் யாழ்ப்பாணத்தவர்கள் 19ஆம் நூற்றாண்டில் மலாயாவை நோக்கிக் குடிபெயர்ந்தபோது அதுவும் அவர்களோடு சேர்ந்து வெளிநாடுகளிலும் செழித்தது. 1861இல் கோலாலம்பூரில் ஸ்ரீபரஞ்சோதி விநாயகர் ஆலயத்தைக் கட்ட முன்நின்ற ஊரெழுவைச் சேர்ந்த டாக்டர் ஆறுமுகம் விஸ்வலிங்கம் தான் உயர் வெள்ளாளப் பழங்குடியில் வந்தவராகக் கல்வெட்டிலே பொறித்துச் சென்றிருக்கிறார்.

இந்தச் சாதிவெறி இருபதாம் நூற்றாண்டிலும் இன்னும் கோரமாகத் தலைவிரித்தாடியது. 1907இல் பொன். அருணாசலம்கூட சாதியமைப்பு அவசியமானது, நலம் பயப்பது என்று எழுதினார். 1921இல் யாழ்ப்பாணத்தில் ‚தமிழர் நாகரிகம்’ பற்றியுரையாற்றிய மறைமலை அடிகள் தமதுரையில் வெள்ளாளரின் நாகரிகம் குறித்தே பேசினார்.

1930இல் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் முதல்முறை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டபோது அவர்களுடன் வெள்ளாள மாணவர்களுக்கும் சமபோசனம் வழங்குவதை எதிர்த்து சேர் பொன். இராமநாதன் கவர்னரிடம் முறையிட்டார்.

1929ஆம் ஆண்டு பாடசாலைகளில் இன, மத, சாதி, தேசிய வேறுபாடு காட்டாமல் எல்லாப் பிள்ளைகளுக்கும் சரியாசனம் கொடுக்கவேண்டுமென அரசு அறிவித்தபோது வெகுண்டெழுந்த வெள்ளாளர்கள் பதினைந்து பாடசாலைகளைத் தீக்கிரையாக்கினார்கள்.

தம் சொந்தச் சகோதரர்களையே அடக்கியும் ஒடுக்கியும் இழிவுபடுத்திய யாழ்ப்பாணச் சமூகத்தின் கொடூரத்தின் கதை அவலம் நிறைந்த, கறை படிந்த கதையாகும்.

நன்றி: வான்பதி (டென்மார்க்-2002) கரவை தாசன், மறைந்த கொக்குவில் கோபாலன் இருவராலும் 2002இல் தொகுத்த வான்பதி நூலிலிருந்து.   
 
நன்றி: http://www.piraththiyaal.com/2014/04/blog-post.html

ஞாயிறு, ஏப்ரல் 6

இந்தக் கதைக்கு மூன்று தலைப்புகள் - ஆதவன் தீட்சண்யா1. இது திவ்யாவின் கதை

திவ்யா என்றதும், கொஞ்சகாலத்திற்கு முன்புவரை ஊடகங்களிலும் நீதிமன்றம் மற்றும் காவல்துறை வட்டாரங்களிலும், அரசியல் கட்சிகளின் மேடைகளிலும் பரபரப்பாக பேசப்பட்ட திவ்யாதான் என்று நீங்களாக நினைத்துக்கொண்டு, அவள் கதைதான் ஊர் உலகத்துக்கே தெரியுமே என்று படிக்காமல் கடக்கக்கூடும். ஆனால் இது அவளது கதையல்ல அவசரகுடுக்கைகளே. ஏனென்றால் அந்தத் திவ்யாவினுடையது கதையல்ல, நம் காலத்தில் நமது கண்ணெதிரிலேயே நடந்த உண்மை. எந்தவொரு புனைவையும்விட வலிய பாதிப்பை ஆழப் பாய்க்கும் பரவசங்களும் திகிலேறிய திருப்பங்கள் பலவும் துயரங்களும் கொண்ட உண்மையை இன்னொன்றால் விளக்க முடியாது. உண்மையின் முதலும் கடைசியுமாக உண்மையேதான் இருக்கிறது. உண்மையைப் புனைவாக்கும் போது அது, அந்த உண்மையை மேலும் துலக்கமாக்கி அதற்கொரு பொதுத்தன்மையை வழங்குவதற்கான நியாயத்தோடு எழுதப்பட வேண்டுமல்லவா? அப்படி எழுதப்பட்டால், என்னதான் பிரிந்து வந்திருந்தாலும் சாகடிக்கப்பட்டவன் தனது காதல் கணவன் என்பது குறித்த துக்கத்தில் மூழ்கியிருக்கும் அந்தப் பெண்ணுக்கு இந்தக்கதை மேலும் உளைச்சலையே தரும் என்பதால் எழுதாமல் தவிர்க்கப்படுகிறது. சம்பந்தாசம்பந்தமின்றி அவர்களது வாழ்க்கையில் தலையிட்டு ஊரூராக ஓடவிட்டவர்கள், நயவஞ்சகமாக பிரித்தவர்கள், நாடகமாடி கவிழ்த்தவர்கள் என்று பலரும் இந்தக் கதைக்குள்ளும் அதேபோல நுழைந்து கதையையும் தங்களுடையதாக மாற்றித் திரிக்கும் ஆபத்தினைத் தவிர்க்கவும் எழுதாமல் விடப்படுகிறது.

ஒருவேளை இது அந்தத் திவ்யாவை மையங்கொண்ட கதையாகவே இருப்பினும் நீங்கள் படிக்கத்தான் வேண்டும். ஏனென்றால் அவள் விசயத்தில் நீங்களும் நானும் அதிகமும் அறிந்திருப்பது அவள் பெயரைத்தானேயன்றி மனதையோ வாழ்வையோ அல்ல (திவ்யா என்றில்லை, பொதுவாகவே எந்தவொரு பெண்ணின் மனதையும் அறிந்துகொள்ள இச்சமூகம் ஒருபோதும் முயற்சிப்பதில்லை). தன் சாதியில் ஆட்டுப்புழுக்கைபோல வதவதவென எத்தனையோ இளைஞர்கள் பிலுபிலுத்திருக்க, அவள் ஒரு தலித் இளைஞனை உயிரெனக் காதலித்திருக்கிறாள். ஒரு நாயையோ பூனையையோ காதலிக்காமல் மனிதனையே காதலிக்கத் தேர்ந்தமையால், தனது காதலில் புரட்சியோ கலகமோ பொதிந்திருப்பதாக அவள் கருதவில்லை. ஆண் பெண் என்கிற இயல்பொழுங்கு அனுமதிக்கும் எல்லைக்குள் நின்று தனது வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதற்குச் சாதியை ஒரு அளவுகோலாக அவள் மதிக்கவில்லை. அதாவது காதலிப்பதாக இருந்தாலும் சொந்த சாதிக்குள் தான் காதலிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு வரும் கருத்தையும் கட்டப்பஞ்சாயத்து மிரட்டலையும் அவள் தன் செயலால் மறுத்திருக்கிறாள். அந்தவகையில், காதலானது சாதி / மதம் பார்த்து வருவதில்லை என்று நெடுங்காலமாய் நிறுவப்பட்ட ஒரு உண்மையைத் தன்மொழியில் சொல்ல முயன்றிருக்கிறாள். அல்லது, இருவரும் ஒரே சாதி என்கிறபோது காதலிக்கவேண்டிய தேவை எங்கிருந்தடா வந்தது என்று யாரையோ கேட்க முயன்றிருக்கிறாள். உண்மைதான், சாதிக்குள்ளேயே காதலிப்பது என்பதை விடவும் மோசடியானது எதுவும் இல்லை.

அவர்களது காதலுக்கு அவளது குடும்பமும் சாதியும் தடையாகி மறித்த போது அவற்றிலிருந்து வெளியேறிப் போய் அவனைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறாள். விரும்பியவண்ணம் அவனோடு சிலகாலமேனும் வாழ்ந்திருக்கிறாள். அவர்கள் கூடி வாழ்ந்ததன் நல்லடையாளமாய் தங்கிய கர்ப்பத்தையும் பிறக்கப்போகும் தங்களது குழந்தையைப் பற்றிய கனவுகளையும் சுமந்துகொண்டு மகிழ்ந்திருக்கிறாள். முதல் கர்ப்பம் தங்காது கலைந்தபோதும் இரண்டாவது கர்ப்பத்தை நிர்ப்பந்தமாக கலைக்க வேண்டி வந்தபோதும் அவள் எத்தகைய வாதையில் துடித்திருப்பாள் என்று நமக்கென்ன தெரியும்? கர்ப்பத்திலிருந்து சிதறி தொடையிடுக்கில் நழுவி விழுந்த ரத்தத்துண்டங்களைப் பார்த்து அவள் கதறியதை ஏடறியுமா எழுத்துதானறியுமா? காணும் முன்பே கலைந்துவிட்டதை கனவென்று சொல்வாளா கற்பிதமென கொள்வாளா? தனது காதலை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் என்கிற தவிப்பில் சாதியவாதிகளிடமும் காவல்துறை அதிகாரிகளிடமும் நீதிமன்றங்களிலும் எவ்வளவு துணிச்சலாக வாதாடியிருக்கிறாள்?

தான் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் தானே தீர்மானித்துக்கொள்ள அவள் செய்த எத்தனங்களால்சிறுமியாயினும், இளம் பெண்ணாயினும் ஏன் முதியவளாயினும் தம்வீட்டில் கூடச் சுதந்திரமாக எதையும் செய்திட அனுமதித்தல்கூடாதுஎன்று கொக்கரிக்கும் மநுஸ்மிருதியைத் தமது மூத்திரத்தில் மூழ்கடித்தழிக்கும் பெண்களின் முயற்சிக்கு வலுசேர்த்திருக்கிறாள். அடுத்தடுத்து யாரும் எதிர்பார்த்திராத பல துணிச்சலான முடிவுகளை இத்தனைச் சின்னவயதில் எடுத்த அந்தத் திவ்யாவுக்கு நேரெதிரானவள் இனி நீங்கள் படிக்கப் போகும் கதையில் வரும் திவ்யா. சரியாகச் சொல்வதென்றால் இருவருக்கும் பெயர்தான் ஒன்றே தவிர வேறெந்தப் புள்ளியிலும் ஒருமை கொண்டவர்களல்ல. எனவே இந்த வரியிலிருந்து கதையின் தலைப்பைக்கூடஇது வேறு திவ்யாவின் கதைஎன்றே மாற்றிவிடலாம்.

தலைப்பு மாறுகிறதென்றால் கதையும் மாறுகிறதென்று பொருள். ஒரே தலைப்பின் கீழ் வெவ்வேறு கதைகளை எழுதுவதும் அல்லது வெவ்வெறு தலைப்புகளின் கீழ் ஒரே கதையை அரைத்துத் தள்ளுவதுமாகிய மோசடி இங்கு செல்லுபடியாகாது. கவனம் வையுங்கள், தலைப்பு மாறுகிறதென்றால் கதையும் மாறுகிறதென்று பொருள். எனவே, அந்தத் திவ்யாவின் காதல் கணவனது மர்மச்சாவைப் பற்றியோ அல்லது கொஞ்சகாலம் கழித்து இவளேகூட மர்மமான முறையில் இறக்கக்கூடும் என்பதைப் பற்றியோ இந்தக்கதையில் எங்காவது ஓரிடத்தில் எழுதப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்போடு யாரும் படிக்கவேண்டாம். நிஜத்தைப்போலவே இந்தக் கதையிலும் திவ்யா யாருக்கும் வேண்டப்படாதவளாகி விட்டாளா என்கிற கேள்வி இவ்விடத்தில் எழலாம். நிஜத்தில் ஒதுக்கப்படுகிறவர்கள் விரும்பியவண்ணம் வாழ்ந்து திளைக்கும் களமாக கலையும் இலக்கியமும் இயங்குவதை கவனியாததால் எழும்பும் கேள்வி இது. ஊடகங்கள் பாய்ச்சிய கரிய வெளிச்சத்தின் எரிவாலும் அதிகாரத்தின் கொடிய அலைக்கழிப்பினாலும் திரும்பத் திரும்ப மேடைக்கு இழுத்துவரப்பட்ட நிலைமை மாறி தனித்திருக்கிற அவளது இந்தக் காலத்திற்குள் நாம் குறுக்கிட வேண்டாமென வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அந்தந்த கணத்தைக் கடக்க அப்போதைக்கப்போது அவசர அவசரமாக தான் எடுத்த முடிவுகளெல்லாம் சரிதானா என்று நிதானமாக பரிசீலிக்கவோ நிரந்தரமாக மறக்கவோ அவளுக்குக் காலம் வழங்கியிருக்கிற இந்தத் தனிமை என்னால் குலையக்கூடாது என்பதால் அவளைக் கதையிலிருந்து வெளியேற்றுகிறேன்.

2. இது வேறு திவ்யாவின் கதை

இந்தக் கதையை எழுதுகிறவர் ஏற்கெனவே சொன்ன மாதிரி அந்தத் திவ்யாவுக்கு நான் நேரெதிர். அப்படியான வித்தியாசம் பிறப்பிலிருந்தே தொடங்கிவிட்டிருக்கிறது. ஆமாம், நான் அந்தத் திவ்யாவின் சாதியில் பிறந்தவளல்ல. சரியாக சொல்வதென்றால் நான் சாதியக் கட்டமைப்புக்குள்ளேயே வராத சமூகத்தில் பிறந்தவள். ஆனால் அவர்கள் சாதியைத் துறந்த சாதியினராக எம்மை அடையாளப்படுத்தினர். கடைசியில் நாங்களும் எங்களை ஒரு சாதியாக நம்பத்தொடங்கிய பெருந்துயரைப் பற்றி பிறிதொரு நாள் பேசுவோம். எங்களது வசிப்பிடம் சேரி. அவர்கள் வசிப்பதோ அநேக சாதிகளாக பிளவுண்டவர்கள் வசிக்கும் ஊர் என்கிற ஒதுக்குப்புறம். எங்களை எதிர்ப்பதற்கும் தாக்குவதற்கும் சுரண்டுவதற்கும் மட்டும்தான் ஊர்க்காரர்களாகிய அவர்கள் தமக்குள் ஒன்று சேர்வார்கள். மற்றபடி யார் ஒசத்தி என்று தங்களுக்குள் எப்போதும் அடித்துக் கொள்கிறவர்கள்தான். என்னைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டிருக்கும் இந்தச் சிவக்குமார் அந்த ஊர்ச்சாதிகளில் ஒன்றைச் சார்ந்தவன்.

பொதுவாக ஊர்க்கார பயல்கள் எங்களைக் காதலிக்கமாட்டார்கள். அவரவர் சாதியிலேயே பார்க்க ஓரளவுக்கு லட்சணமாக, வெள்ளைத் தோலோடு இருக்கிற, கொஞ்சம் வசதியான வீட்டுப் பெண்களின் பின்னால்தான் சுற்றிக்கொண்டிருப்பார்கள். இதை காதல் என்று வேறு சொல்லிக்கொள்வார்கள். இரண்டு பேரும் ஒரே சாதியாய் இருக்கிறபோது அங்கு காதலுக்கு ஒரு வேலையும் இல்லை. குணநலன், உடல்நலம், வசதி- இதுமாதிரியான விசயங்கள் பொருந்தி வந்தால்இரு வீட்டார்சம்மதத்தோடு கல்யாணத்தை முடித்துக்கொள்வார்கள். இப்படி எதுவும் அக்கம்பக்கம் அமையாவிட்டால் ஏழு செருப்பு தேயுமளவுக்கு எங்கெங்கோ அலைந்தாவது அதேசாதிக்குள் ஒரு பெண்ணைப் பிடித்துக் கல்யாணம் செய்துகொள்வார்கள்.
விதிவிலக்காக சிலர் ஊருக்குள்ளிருக்கும் வேறு சாதிப் பெண்ணை விரும்புவார்கள். எந்தவொரு சாதியும் இன்னொரு சாதியை சமமென்று ஏற்பதில்லையாதலால்இரு வீட்டார் சம்மதத்தோடுஅவர்கள் கல்யாணம் செய்துகொள்ள முடியாது. அடிபிடி ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கூட்டிக் கொண்டு ஓடிப்போய் விடுவார்கள். அல்லது, அடுத்த ஜென்மத்திலாவது சேர்ந்து வாழ்வோம் என்று உணர்ச்சிமயமாக அழுதுகொண்டே பிரிந்து விடுவார்கள். இந்தச் சனியன்கள்தான் தாடி வளர்த்துக்கொண்டும் பீடி பிடித்துக்கொண்டும் காதல் காவியம், கத்திரிக்கா ஓவியம் என்று என்னத்தையாவது எழுதி நம் உயிரை வாங்குகிறவர்கள்.

சிவக்குமார் இந்த ரகமில்லை. ‘எனக்குத் திருமண வயதாகிவிட்டது. மனதுக்குப் பிடித்த உன்னை மணம் முடித்து வாழ சித்தமாயிருக்கிறேன்என்றான். எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நழுவவிடாது தன் விருப்பத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தான். பிரார்த்தனைப் பலிக்கும் என்று தொடர்ந்து மன்றாடும் ஒரு மூடபக்தனின் சித்திரம் அவனில் படிந்திருந்தது.

ஊர்க்கார பயல் ஒருத்தன் சேரிப் பெண்ணிடம் வந்து உன்னைப் பிடித்திருக்கிறது, லவ் யு, நான் உன்னை காதலிக்கிறேன் என்றெல்லாம் அனாவசியமாக பிதற்றிக்கொண்டிருக்க மாட்டான். சேரிப்பெண் ஒருத்தியைப் பிடித்துப்போனால்- அதாவது அவளது உடம்பின்மீது ஆசை வந்து விட்டால் தனியாகவோ கூட்டாகவோ வலுவந்தமாக அவளைத் தூக்கிப்போய் சின்னாப்பின்னமாக்கி விடுவான். பட்டால் பாவம் தொட்டால் தோஷம் என்று பீற்றுகிற இந்த ஊர்க்காரப்பயல்கள் சராசரியாக தினத்துக்கு மூன்று சேரிப்பெண்களின் யோனிகளைக் கிழிக்கிறார்கள். இதில் வயது வித்தியாசம் வர்க்க வித்தியாசம் என்று ஒரு வெங்காயப் பாகுபாடும் கிடையாது. இப்படியான அட்டூழியங்களைச் செய்வதற்கான உரிமையினையும் அதிகாரத்தையும் தான் பிறந்த சாதித் தனக்கு வழங்கியிருக்கிறதென ஊர்க்காரப் பயல் ஒவ்வொருத்தனும் உறுதியாக நம்புகிறான். இதன் பேரில் அவளிடமிருந்தோ அவளது குடும்பத்தாரிடமிருந்தோ புகார் எதுவும் வெளிவராமல் பார்த்துக்கொள்ளும் தந்திரங்களை அவன் அறிவான். ஒருவேளை புகார் வந்தால் அதைச் செயலிழக்க வைக்கும் வழிகளும் அவனுக்குத் தெரிந்ததுதான். அவனிடமிருப்பது காமம்கூட அல்ல, காமவெறி. ஆனால் அவர்களில் ஒருவனாக இந்தச் சிவக்குமார் இல்லாதிருந்தது எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது. இருந்தும்கூட சேற்றில் மலர்ந்த செந்தாமரை என்கிற புளித்த உவமையைச் சொல்லி அவனை ஒருபோதும் நான் கேவலப்படுத்தியதில்லை. பலவந்தமாக என்னைத் தூக்கிப்போக முடியாததால் காதலிப்பதாகவும் கல்யாணம் முடிப்பதாகவும் சொல்கிறானோ என்கிற சந்தேகம்தான் எனக்கு முதலில் வந்தது.

எனது அச்சங்களையும் அய்யங்களையும் மதித்து அதற்குண்டான சமாதானங்களை அவன் சொன்ன விதம் எனக்கு முதலில் பிடித்துப்போனது. பிறகு அவனையும் பிடித்தது. ஆனால் எனது வீட்டாளுகள், உறவுக்காரர்கள் ஒருவருக்கும் இது பிடிக்கவில்லை. இப்படிச் சொல்லிக்கிட்டு வந்த எத்தினியோ பசங்க நம்ம பொண்ணுங்க வயித்தை ரொப்பிட்டு ஓடிப்போனதையெல்லாம் மறந்துட்டியா? புள்ளைய கலைச்சிட்டுப் பொழைக்கிற வழியப் பாருன்னு ஊர்ச்சாதியானுங்க உபதேசம் பண்றதைகூட மறந்துட்டியா? வேணாண்டி பொண்ணே இந்தச் சகவாசம். அவங்காளுங்கக் கொன்னே போட்டுருவானுங்கஎன்று பலதையும் சொல்லி என் மனதைக் கரைக்கப் பார்த்தார்கள்.

அவர்கள் சொல்லிய எதுவும் பொய்யில்லை. சேரிக்காரர்களுக்கும் ஊர்க்காரர்களுக்கும் வரலாற்று ரீதியாக பகையிருக்கிறது. அந்தப் பகை இரண்டாயிரம் வருசமாக வேர் பாய்ந்து திடங்கொண்டிருக்கிறது. இருதரப்புக்கும் இடையில் எண்ணெய் தண்ணி புழக்கம், கொடுக்கல் வாங்கல், கொண்டான் கொடுத்தான் உறவு எப்பவும் இருந்ததில்லை. சாதியைத் துறந்து சேரிக்குள் மணம் முடிக்க வந்த முத்துப்பட்டனை கொன்றிருக்கிறார்கள். மதுரைவீரனை மாறுகால் மாறு கை வாங்கியிருக்கிறார்கள். கண்ணகி -முருகேசன் ரெண்டு பேரையும் அடித்து அரை உசுராக்கி காதில் நச்சு ஊற்றிக் கொன்றதோடு அவரவர் சடுகாட்டில் வைத்து எரித்ததையும் நாடறியும். அபிராமியோடு ஓடிப்போய் புருசன் பொஞ்சாதியாகி ஒரு குழந்தையையும் பெற்றெடுத்த பிறகு நைச்சியமாய் பேசி அழைத்து வந்த சூரக்கோட்டைக்காரர்கள் மாரிமுத்துவை கொன்று போட்ட விசயம் டிவியில் கூட வந்தது. ஆளைக்கடத்துவது, வீட்டை இடிக்கிறது, ஊரைக்கொளுத்தறது என்று அவர்கள் எங்காட்களுக்கு எதிராக நொடிக்கு நூறு அட்டூழியம் புரிவதைக் கண்ட பிறகும் என்னைச் சிவக்குமாருக்குக் கட்டிவைக்க எப்படி சம்மதிப்பார்கள் என் வீட்டார்?

ரத்தக்கலப்பு ஏற்படாமல் சாதி ஒழியாதுஎன்கிற அம்பேத்கரின் வாசகத்தை அடிக்கடி சொல்லும் அருகச்செல்வியக்கா மட்டும்தான் எங்கள் கல்யாணத்துக்கு ஆதரவாக இருப்பாள் என நம்பியிருந்தேன். ஆனால் அவளது கருத்து வேறாக இருந்தது. சாதி ஒழிப்பு என்கிற அரசியல் முழக்கத்தை முன்வைத்தா நீங்கள் காதலிக்கிறீர்கள் என்று அக்கா கேட்டதும் நான் தடுமாறித்தான் போனேன். அப்படியெல்லாம் நினைத்துக்கொண்டு ஒருவரால் காதலிக்க முடியுமா என்கிற கேள்வி தான் முன்னுக்கு நின்று மறித்தது. சாதி மனப்பாங்கை அப்படியப்படியே வைத்துக்கொண்டு ரத்தக் கலப்பு மட்டும் நடக்குமானால்அதனால் சாதி ஒழிந்துவிடுமென அம்பேத்கர் ஒருபோதும் சொல்லவில்லை என்று முகத்திலடித்தாற்போல சொல்லிவிட்டாள் அக்கா. இருதரப்புக் குடும்பங்களையும் துறந்து சாதியடிப்படையில் இல்லாத புதிய குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமென்கிற நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்கிற அவளது யோசனை எனக்கு அப்போது உவப்பாக இருக்கவில்லை. அக்காவின் யோசனைகளைச் சிவக்குமாரும் வெறுத்தான். இதுவரை உலகத்தில் இல்லாத ஏதோவொன்றை முதன்முதலாக எங்களைக்கொண்டு நிறுவிப் பார்க்கும் விவரீத ஆசையை அக்கா வெளிப்படுத்துவதாகத்தான் இருவரும் நினைத்துக் கொண்டோம். எங்களுக்குக் கல்யாணம் செய்துவைக்கும் முயற்சியில் இறங்குவதால் ஏற்படும் சங்கடங்களிலிருந்தும் தாக்குதல்களிலிருந்தும் தப்பித்துக் கொள்வதற்காக அவள் இப்படியெல்லாம் சொல்லி நாசூக்காக தவிர்க்கிறாளோ என்கிற சந்தேகத்தை எழுப்பினான் சிவக்குமார்.

பொதுவாக சாதிவிட்டுச் சாதிக் கல்யாணம் பண்ணிக்கொள்கிறவர்கள் முதலில்சேர்த்துக்கொண்டுஊரைவிட்டு ஓடிப்போவார்கள். கொஞ்சநாள் கழித்து இருதரப்புக் குடும்பங்களில் ஏதாவதொன்றோடு சாடைமாடையாக உறவாடி, நல்லது கெட்டதில் ஓரஞ்சாரமாக நின்று நெளிந்து பிறகு அப்படியே ஒட்டிக்கொள்வார்கள். இப்படி ராசியாவதற்கென்றேபெத்த பாசம்/ பேரக்குழந்தை / ஆண் வாரீசு/ என்பது மாதிரியான சென்டிமென்ட் ஃபார்முலாக்கள் பலவும் தமிழ்ச் சினிமாவில் வருவதற்கு முன்பே ஊர்களுக்குள் பிரபலமாகியிருந்தன. இந்த வாய்ப்பும்கூட ஊர்ச்சாதிகளுக்குள் ஓடிப்போகிறவர்களுக்குத் தானே தவிர சேரிக்காரர்களோடு ஓடுகிறவர்களுக்கு இல்லை என்பதை சுட்டிக்காட்டிய அக்கா ஓடிப்போவதும் உசிதமல்ல என்றாள். ‘ஒருவேளை உன்வீட்டார் ஏற்றுக்கொண்டாலும்கூட, சேரிக்காரியைச் சேர்த்துக்கொண்ட வீட்டில் புழங்குவதற்கு ஒம்பாத ஊர்க்காரர்கள் தந்திரமாக உன் குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். அல்லது அப்பயொரு ஆபத்திருப்பதாக காட்டிக்கொண்டு உன் குடும்பத்தாரே உங்களை ஒதுக்கி வைக்கவும் கூடும்என்று முகத்துக்கு நேரே அவள் எடுத்துவைத்த உண்மைகளை எதிர்கொள்ள முடியாத சிவக்குமார் தன் குடும்பத்தின் மீது அபாண்டமாக குற்றஞ்சாட்டுவதாகக் கோபித்துக் கொண்டான்.

அருகச்செல்வியக்காவும் கைவிட்ட பிறகு ஆனது ஆகட்டுமென்று நாங்கள் ஓடிப்போனோம். முன்னைமாதிரி இருந்திருந்தால், ‘உன்மவ எம்மவனை மயக்கி கூட்டினு ஓடிட்டாள்என்று எங்களது குடும்பத்தை பஞ்சாயத்தில் நிறுத்தி இவங்காளுங்க சண்டை போட்டிருப்பார்கள். ஊர்க்காரப் பொண்ணு எவளாவது சேரிப்பையன்கூட ஓடிவிட்டால்உன்மவன்தான் எம் பொண்ணை மயக்கிப்புட்டான்என்று எகிறுவார்கள். அதுவே ஊர்க்காரப் பையன் ஒருத்தன் சேரிக்காரியோடு ஓடிவிட்டால் அப்பவும்உம்மவள்தான் எங்கப் பையனை மயக்கிப்புட்டாள்என்று சண்டை போடுவார்கள். மொத்தத்தில் ஊர்க்கார பையன்களும் பெண்களும் ஒண்ணுந் தெரியாத பச்சைமண் என்றும் சேரிக்காரர்கள் வில்லாதிவில்லர்கள் என்றும் சாதிப்பார்கள். ‘சேரிக்காரங்க மயக்குனா மயங்குற அளவுக்கு உங்கச் சாதி ஆணுபொண்ணு அத்தனையும் வீக் பார்ட்டிங்களா? அந்தந்த பருவத்துல வரவேண்டிய ஆசாபாசமெல்லாம் வரக்கூடாதுன்னு உங்கப் பொண்ணுங்களுக்குப் புளி வச்சு அடைச்சிட்டீங்களா? இல்ல பசங்களுத அறுத்துக் காக்காகழுகுக்குப் போட்டுட்டீங்களா?’ என்று கேட்க இப்ப எங்காட்களிலும் சிலபேர் தயாராகிவிட்டதால் இந்தச் சண்டை வராமல் போய்விட்டது. சண்டைதான் வரவில்லையே தவிர பகை இருந்தது. அதாவது எப்பவும் இருக்கும் பகையை நானும் சிவக்குமாரும் புதுப்பித்தோம். பகை என்று வந்துவிட்டால் ஜெயிப்பது தாங்களாக இருக்கவேண்டும் என்கிற ஊர்ச்சாதியின் அகம்பாவம், (ஏழுகழுதை வயசு எட்டுமுறை ஆகியிருந்தாலும்) மேஜராகாத தங்களது மகனைப் பெண்ணொருத்தி கடத்திவிட்டாள் என்று ஒரு பொய்ப் புகாரையாவது கொடுத்துவிட்டுத்தான் அடங்கும். ஆனால் சிவக்குமாரின் குடும்பத்தார் அவ்வாறும் செய்யாது காத்த அமைதி எனக்கு அச்சத்தையே விளைவித்தது. அடிப்பானைப் புழுக்கம் வெடிச்சாத்தான் அடங்கும் என்பது தெரிந்திருந்தாலும் எப்போது எப்படி வெடிக்குமோ என்கிற பதற்றத்தால் நான் நிலைகுலைந்து போயிருந்தேன்.

கல்யாணத்துக்கப்புறம் இருதரப்புக் குடும்பத்தில் எதுவொன்றுக்குள் நீங்கள் நுழைந்தாலும் அந்தக் குடும்பத்தோடச் சாதி, தன் சொந்தசாதியை உள்ளிழுத்துக்கொண்டு அதற்குப் புறம்பான மற்றவரை வீட்டுக்குள்ளேயே ஒதுக்கிவைத்துவிடும். அந்தக்குடும்பம் உங்களிருவரையும் ஒரேவிதமாக நடத்தாது. ஏனென்றால், இன்னொரு சாதியை சமமாக நடத்துவதற்கான பண்பையோ பயிற்சியையோ அந்தக் குடும்பம் ஒருபோதும் பெற்றிருக்கவில்லைஎன்றெல்லாம் அருகச்செல்வி அக்கா சொன்னதுதான் கடைசியில் எங்கள் வாழ்விலும் நடந்தது.

ஓடிப்போன நாங்கள் ஐந்தாறு மாதம் அங்கேயிங்கே என்று தங்கி எங்களது குடும்பங்களிலிருந்து விலகித்தான் இருந்தோம். அதாவது நான் அப்படி நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவன் எனக்குத் தெரியாமல் தனது குடும்பத்து ஆட்கள் சிலரது தொடர்பில்தான் இருந்திருக்கிறான். அவர்கள் மூலமாக தனது தந்தையை இணங்கவைத்து வீட்டுக்குள் நுழைந்துவிடும் அவனது திட்டம் எனக்குத் தெரியவந்தபோது அனேகமாக எல்லாமே முடிந்துவிட்டிருந்தது. ‘வெளியிலிருந்து கஷ்டப்பட்டது போதும், வா எங்க வூட்டுக்குப் போவோம்அங்கப் பிரச்சினை எதுவும் இருக்காது, எல்லாம் பேசி சுமூகமாக்கி வச்சிருக்குமுன்னபின்ன இருந்தாலும் போகப்போக சரியாயிடும்என்று அவன் சொன்னதை அவனே நம்பாமல் திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான். அவனது நச்சரிப்பும் அணத்தலும் உச்சத்திற்குப் போனபோது சரி அதையும்தான் பார்ப்போம் என்று அவனது வீட்டுக்குப் போக சம்மதித்தேன். (இப்படியொரு இக்கட்டான நிலையில் அந்தத் திவ்யா இருந்திருப்பாளானால், ஏதாவது பிரச்சினை வந்தால் வீட்டிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்கிற உத்திரவாதத்தையாவது அவனிடம் பெற்றிருப்பாள் என நான் நினைத்துக்கொள்வதுண்டு.)

இம்மாதிரியான சூழ்நிலையில்தொடக்கத்தில் எல்லாம் சரியாகத்தான் இருந்ததுஎன்கிற வழக்கமான வரியோடுதான் இப்பத்தியை ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் தொடக்கம் சரியாக இருந்திருந்தால் தொடர்ச்சியோ முடிவோ எப்படி தவறாக முடியும் என்கிற தர்க்கம் வந்துவிட்டதால்தொடக்கம் முதலே எதுவும் சரியாக இல்லைஎன்று முதல் வரி திருத்தப்பட்டுள்ளதை கவனித்துத் தொடர்ந்து வாசியுங்கள்.

ஆக, தொடக்கம் முதலே எதுவும் சரியாக இல்லை. என்னோடு கலந்துவிட்டதால் ஏற்பட்ட தீட்டுக்குப் பரிகாரச் சடங்கு செய்து அவனை வீட்டுக்குள் அழைத்துக்கொண்டபோதே எல்லா தவறுகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். சேரிக்காரியோடு கலந்தவனை வீட்டில் சேர்க்கவே பரிகாரம் செய்தார்கள் என்றால் சேரிக்காரியாகிய என்னை வீட்டுக்குள் சேர்க்க அவர்கள் என்னென்ன செய்திருப்பார்கள் என்பதை இதே சாதிக்குட்டைக்குள் ஊறிநொதித்த மட்டைகளாகிய நீங்கள் அறிவீர்கள்.

புதிதாக நானொருத்தி வந்திருக்கிறேன் என்பதை அவனது குடும்பத்தாட்கள் யாரும் பொருட்படுத்தவே இல்லை. எதிரிலேயே நான் நின்றிருந்தாலும் யாருமில்லாத இடத்தைக் கடப்பது போலத்தான் அவ்விடத்தைக் கடந்தார்கள். இனி என்னையும் உள்ளடக்கியதுதான் அந்தக் குடும்பம் என்கிற எண்ணம் எனக்கோ அவர்களுக்கோ வந்துவிடாதபடியான புறக்கணிப்புகளை இயல்பாகவும் வன்மையாகவும் வெளிப்படுத்தினார்கள். எக்காரணத்தைக் கொண்டும் நான் தாய்வீட்டுக்குப் போகக்கூடாது- அங்கிருந்தும் யாரும் வரக்கூடாது, வீட்டுக்குள் நான் எதையும் தொடக்கூடாது, சமையற்கட்டில் நுழையக்கூடாது என்கிற கட்டுத்திட்டங்களையெல்லாம் ஒரு சொல்லும் சொல்லாமலே அமலுக்குக்கொண்டு வந்து விட்டார்கள். அந்த வீட்டில் எள்ளுருண்டையும் கொள்ளுப்பருப்புத் துவையலும் எப்போதும் தின்னக் கிடைத்ததும்கூட அவர்களது வாரீசு என்னில் தங்கிவிடாமல் கலைத்துவிடும் ஏற்பாடுதான் என்பதை நானறிவதற்குள் நாட்கள் தீர்ந்திருந்தன.

நான் அவர்கள் எல்லோரது மனசுக்கும் வெளியில் நிறுத்தப்பட்டிருந்தேன். வெளிக்கண்ணுக்குத் தெரியாத மாயச்சேரி ஒன்றை வீட்டுக்குள் உருவாக்கிய அவர்கள் அதற்குள் மட்டுமே நடமாடப் பணித்திருந்தார்கள் என்னை. போகப்போகச் சரியாகிவிடும் என்கிற சம்பிரதாயமான சமாதானத்தை சொல்லிக் கொண்டிருந்த எனது கணவனை என் கண் முன்னாலேயே அவனது சாதி உள்ளிழுத்துக் கொண்டிருந்தது. அவன் தனது சாதிக்குள் வேகமாக திரும்பிக்கொண்டிருந்தான் என்பதையும் சேரிக்காரி என்பதற்கப்பால் வேறெந்த அடையாளத்தையும் என்னிடம் காண முடியாதபடி அவனது மனம் சூம்பிக்கிடப்பதையும் நான் அறிய நேர்ந்த தருணங்கள் வலி மிகுந்தவை.

1. சிவக்குமாரின் குடும்பத்துக்கும் பக்கத்து வீட்டாளுக்கும் நடைபாதை சம்பந்தமான எல்லைத் தகராறு ஒன்று நீண்டநாட்களாக இருக்கிறது. இதுபற்றிய வாக்குவாதம் ஒருநாள் கைகலப்பில் முடிந்தது. அடாவடிப்பேர்வழியான இவனது தம்பி விட்ட குத்து ஒன்று அவனது கடைவாய்ப் பல்லொன்றை நிலம் பார்க்க வைத்துவிட்டது. நிரந்தர ஊனம் ஒன்றை எதிராளிக்கு ஏற்படுத்தி விட்டது குறித்துச் சிவக்குமார் குடும்பம் குரூர திருப்தியில் திளைத்திருந்தபோது அந்தக் கெட்ட செய்தி வந்து சேர்ந்தது. ஊனப்பட்டவன் நியாயம் கேட்டுக் காவல்துறையிடம் புகார் ஒன்றைப் பதிந்திருந்தான். அவனைவிடப் பெரிய குற்றச்சாட்டுடன் எதிர்ப்புகார் ஒன்றை கொடுத்தால் அவனது புகாரை செயலிழக்கச் செய்து விடலாம்- கைதாவதிலிருந்தும் தப்பித்துவிடலாம் என்று காவல்துறை அதிகாரி ஒருவரும் வழக்கறிஞர் ஒருவரும் இவர்களுக்கு யோசனை சொல்லியிருந்தார்கள். அதன்படி தயாரிக்கப்பட்ட புகார்மனு என்னை மையப்படுத்தி இருந்தது. அதாவது, ‘‘போயும் போயும் ஒரு சேரிக்காரியை வூட்டுல சேர்த்துக்கிட்டிருக்கிற சாதிகெட்ட குடும்பம்’’ என்று இவர்களை பக்கத்து வீட்டுக்காரர்கள் ஏளனம் பேசி இழிவுபடுத்துவதாகவும் என்னை ஜாடைமாடையாக சாதிப்பெயரைச் சொல்லி திட்டுவதாகவும் இதைத் தட்டிக் கேட்டதற்காக இவர்களை அவர்கள் தாக்கியதாகவும் எழுதப்பட்டிருந்த அந்தப் புகார் முழுவதும் அப்பட்டமான பொய். இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால், சாதிரீதியாக இழிவுபடுத்தும் பக்கத்து வீட்டாள்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தனியாக ஒரு பொய்ப்புகாரைத் தருமாறு இவர்கள் என்னை வலியுறுத்தியதுதான்.

கொழுந்தனைக் காப்பாற்ற இப்படியொரு பொய்ப்புகார் கொடுப்பதில் தவறொன்றும் இல்லை என்று சிவக்குமாரும் வாதாடியபோதுதான் எனக்குள் அவன் மீதான முதல் குமட்டல் தொடங்கியிருக்கக்கூடும். உண்மையில் அப்படிë/„ரு புகாரைக் கொடுப்பதாக இருந்தால் முதலில் உன் குடும்பத்தார் மீதுதான் நான் கொடுக்கவேண்டி இருக்கும். நீங்களோ பழிபாவமறியாத பக்கத்துவீட்டாளுகள் மேல் பொய்ப்புகார் செய்யச்சொல்லி என்னை வற்புறுத்துகிறீர்கள். தவறு செய்த உன் தம்பியைக் காப்பாற்ற எனது சாதியை ஒரு கேடயமாக்குவதில் எனக்குச் சம்மதமில்லை என்று மறுத்துவிட்டேன்.

2. செழுந்தகைக் கொழுந்தன் அப்படியென்றால் என் காதல் கணவன் சிவக்குமாரோ ஒருநாள் ஊரின் கால்நடை மருத்துவமனைக்குப் போய் அங்குள்ள மருத்துவரிடம் தேவையில்லாமல் தகராறு செய்து மாட்டிக்கொண்டான். கல்லிடுக்கில் சிக்கி காலொடிந்துபோன ஆட்டுக்குட்டிக்குச் சிகிச்சை வேண்டி இவன் தூக்கிச் சென்றிருக்கிறான். ஆட்டுக்குட்டியைப் பரிசோதித்த மருத்துவர், வெளியே போயிருக்கிற மருந்தாளுநர் வந்ததும் கட்டுப் போட்டுக்கொண்டு செல்லுமாறு அறிவுறுத்திவிட்டு அடுத்த வேலைக்குப் போயிருக்கிறார். அரைமணி நேரம் காத்திருந்தும் மருந்தாளுநர் வராதபடியால் பொறுமையிழந்துபோன இவன் மருத்துவரிடம் போய் நீங்களே கட்டுப்போடுங்கள் என்று கேட்டுக் கூச்சலிட்டிருக்கிறான். இவனது கூச்சலை அவர் பொருட்படுத்தவில்லை என்று தெரிந்ததும் ஆத்திரமேறிமருந்தாளுநர் பார்க்குற வேலையை நீயே பார்த்துட்டா பவுசு குறைஞ்சிருமோ…. டாக்டருக்கும் கீழான எந்த வேலையையும் பார்க்காத பரம்பரையா நீசெத்த மாட்டை தூக்கினவனுங்க, இப்ப உசுரோட இருக்குற ஆட்டுக்குட்டிக்குக் கட்டுப்போட மாட்டானுங்களாம்பழசை மறந்துட்டு ஆடாதே..’ என்று ஒருமையில் விளித்து வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிவிட்டு ஆட்டுக்குட்டிக்குக் கட்டுப் போடாமலே வந்துவிட்டான். உளைச்சலுக்குள்ளான அந்த டாக்டர், இவன் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டுமென புகார் கொடுக்கப் போவதாக யாரோ புரளி கிளப்பிவிட்டிருந்தார்கள்.

அந்த டாக்டர் புகார் கொடுத்தாலும் சரி கொடுக்காவிட்டாலும் சரி, முன்கூட்டியே அவன்மீது நீ ஒரு புகாரை கொடுத்து வை. ஒருவேளை அந்த டாக்டர் புகார் கொடுத்தால் அவனைப் பணிய வைக்க உனது புகார் உதவும்என்று யாரோ இவனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதன்பேரில் இவன் தயாரித்திருந்த புகார் மனுவை நீங்களே படியுங்கள்.

‘‘காலொடிந்த ஆட்டுக்குட்டிக்குச் சிகிச்சை வேண்டி கால்நடை மருத்துவமனைக்குச் சென்ற எனது மனைவியிடம் பணியிலிருந்த மருத்துவர் தவறாக நடக்க முயற்சித்திருக்கிறார். அவரிடமிருந்து பெரும்பாடு பட்டுத் தப்பி வந்த என் மனைவி என்னிடம் முறையிட்டு அழுததன் பேரில் நான் மருத்துவமனைக்குச் சென்று மேற்படி டாக்டரிடம் விசாரித்தேன். அப்படித்தான் நடந்து கொள்வேன் என்று ஆணவமாக பேசிய அந்த டாக்டர், இதுகுறித்து வெளியில் சொன்னால் சாதியைச் சொல்லி திட்டியதாக உன்மீது பொய்யாக பிசிஆர் கேஸ் போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என்று என்னை மிரட்டவும் செய்தார். என் மனைவிக்கு நேர்ந்த மானபங்கம் இன்னொரு பெண்ணுக்கு நேராதிருக்கும் பொருட்டு, டாக்டர் உருவில் திரியும் இந்தக் காமுகன் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு இதன்மூலம் கேட்டுக்கொள்கிறேன்.’’ 
 
தமது சாதிக்காரனைப் பணியவைக்க முன்பு என் சாதியைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சித்த சிவக்குமாரும் அவனது குடும்பத்தாரும் இப்போது என் சாதிக்காரனைப் பணிய வைக்க பெண் என்கிற எனது உடலையே பயன்படுத்திக்கொள்ள துணிந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கவே அருவருப்பாக இருந்தது. ‘அந்த டாக்டரோடு ஒருமுறை படுத்துவிட்டு வந்து இப்படியொரு புகாரை நானே தரட்டுமா?’ என்று கேட்டதற்குப் பிறகுதான் அந்தப் புகார் மனுவை கிழித்தெறிந்தான். அதைக் கிழித்ததும்கூட எனக்குத் தெரிந்துவிட்டது என்பதால்தானே தவிர தனது தவறை உணர்ந்தல்ல. சொல்லப்போனால் இதில் அவனது தவறு என்று தனித்துச் சொல்ல ஏதுமில்லை. சேரிக்காரர்களை மட்டுமல்ல அவர்களுக்கான சட்டங்களையும்கூடத் தங்களிஷ்டத்திற்கு எப்படியும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று நம்புகிற ஊர்க்கார மனம் எதையெல்லாம் செய்யுமோ அவற்றை அவனும் செய்யத் துணிந்திருக்கிறான்.

அவ்வளவுதான், இனியும் பேசிக்கொண்டிருக்க என்ன இருக்கிறது? நாங்கள் காதலித்தது உண்மை. என்றென்றைக்கும் இணைபிரியாது வாழ்வோம் என்று கல்யாணம் முடித்ததும் உண்மை. படுக்கையில் மட்டுமே தீண்டாமையைக் கடைப்பிடிக்காதவனாக சிறுத்துக்கொண்டிருந்த அவனை நான் உதறியெறிந்துவிட்டது மற்றுமொரு உண்மை. உண்மையைத் தவிர காதலில் வேறொன்றுமில்லை என்று நம்பிய ஒரு காரணத்திற்காகவே இன்றுஅந்தத் திவ்யாவைப் போலவே நானும் தனியளாகிவிட்டேன்.

ஆண்துணையின்றி தனியாக உன்னால் வாழ்ந்துவிட முடியுமா என்று நான் எதிர்பார்த்த கேள்வியையே கேட்குமளவுக்குத்தான் அவனுக்கு அறிவிருந்தது. தனியாகப் பிறந்து, தனியாக வளர்ந்து, தனியாக சாகப்போகிற நான் என் சுயத்துக்குத் திரும்புகிறேன் என்பதை விளங்கிக்கொள்ளாத அந்த ஆண் அதே பழைய கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்தது

இன்னும் சில திவ்யாக்களின் கதை (அல்லது ஒவ்வொரு பெண்ணும் திவ்யாவாகும் கதை)


எங்களிருவரது சாயலிலும் எங்களிலிருந்து சற்றே மாறுபட்டும் இப்போது தருமபுரிக்குப் பக்கத்திலிருந்து ஒரு திவ்யா உருவாகியிருப்பதை நீங்கள் அறிவீர்கள். எங்களைப் போலவே அவளும் தனியளாகிவிட்டாள். அவள் தனியளாக்கப்பட்ட விதம் எத்தனை கொடூரமானது என்று அந்தக் கொடூரத்தை நிகழ்த்திய உங்களிடமே சொல்வது அதிகப்பிரசங்கத்தனம். இப்படி நான் சொல்வதை உங்களது சாதிவெறிக்குக் கிடைத்த பாராட்டு என்று நீங்கள் ரசிக்கலாம் அல்லது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று மறுக்கலாம். ஆனால் நிகழ்த்தப்பட்ட குற்றங்களில் நீங்கள் எந்தளவுக்குப் பங்குதாரி என்பது திவ்யாக்களாகிய எங்களுக்குத் தெரியும். உங்களது பங்கேற்போடும் ஆதரவோடும் தான் இங்கு திவ்யாக்கள் உருவாக்கப்படுகிறோம்.

நீங்கள் ஒவ்வொருவரும் எங்களில் ஒவ்வொருவரையும் திவ்யாவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறீர்கள். அந்தவகையில் எங்களுக்குத் தனித்தப் பெயர் இருப்பதைக்கூட சகித்துக்கொள்ள முடியாதவராகிவிட்டீர்கள். இந்தத் திவ்யா, அந்தத் திவ்யா, இன்னொரு திவ்யா என்று நீங்கள் திரட்டிக்கொண்டிருக்கற எங்களது உடல்களிலிருந்து சுத்த சாதிக்கான உடல்களின் வகைமாதிரிகளையும் எதிர்மாதிரிகளையும் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். சேரிக்காரிகளின் யோனிகளைத் திறக்கும் கள்ளச்சாவிகளை வெகுகாலத்திற்கு முன்பே கண்டுபிடித்துவிட்ட நீங்கள், ‘அந்தந்த சாதிக்காரனின் குறிக்கு மட்டும் திறந்து மூடும்படியான யோனிப்பொறியை எங்களது பெண்களுக்குப் பிறப்பிலேயே வடிவமைத்துத் தாரும் ஆண்டவரேஎன்கிற பிரார்த்தனையுடன் கடவுளை மிரட்டிக்கொண்டிருப்பதை நாங்களறிவோம். உங்களது பிராத்தனைக்கு அஞ்சி எங்களது பிறப்புறப்பில் தங்கி ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் கடவுள் நாங்கள் ஒவ்வொரு முறை உள்ளாடையைக் கழற்றும் போதும் கீழே விழுந்துவிடுகிறார். அங்கு புறக்காவல் நிலையம் அமைத்துச் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள், விரைவு நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் மற்றும் தீர்ப்பதிகாரிகள், வேவு பார்க்கும் சி..டி.க்கள், சாதிச்சங்கத் தலைவர்கள், ஒழுக்கவாதிகள் என்று எல்லோருமே இப்படித்தான் கீழே விழுவதும் பிறகு எங்களது தொடையிடுக்கில் குடியேறுவதுமாக இருக்கிறீர்கள். இடுப்புக்குக் கீழே இத்தனை பேரைச் சுமந்துகொண்டு எப்படித்தான் நாங்கள் இயல்பாக நடக்கமுடியும் மூடர்களே?

மூத்திரக்குழியென இகழ்ந்ததைக் கண்காணிக்க எமது உள்ளாடைகளுக்குள் பதுங்கியிருப்போரே, தந்தோம் உமக்குப் பொதுமன்னிப்பு, வெளியே வாருங்கள். எங்களது மூத்திரவாடைக்குப் பழகிப்போன உங்களது நாசி இனியேனும் சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கட்டும். எங்களது தொடைச்சந்தை முடிவெல்லையாய் கொண்டிருக்கும் உங்களது ஆன்மீக, இலக்கிய, அரசியல் பயணங்கள் இனியேனும் பரந்துவிரிந்த இந்த உலகத்தைக் கண்கொண்டு பார்ப்பதாகவும் காட்சிகளில் திளைப்பதாகவும் அமையட்டும் என்று வாழ்த்துகிறோம்.

இப்படிக்கு
உங்கள் மீது அனுதாபமுள்ள
திவ்யாக்கள்
நன்றி: பறை இதழ், http://vallinam.com.my

வில்லியம் ப்ளேக் கடிதமும் கவிதையும் - வ. கீதா

எனக்குப் பிடித்த ஆங்கிலக் கவிஞர்களில் வில்லியம் ப்ளேக்கும் (William Blake)  ஒருவர். 18ஆம் நூற்றாண்டு. அவர் ஓவியர், டிசைனர், அச்சாளர். அ...