வியாழன், ஜூன் 5

உங்களவனாதல் - ஆதவன் தீட்சண்யா



ந்தக் கவிதையை உங்களுக்குப் பிடிக்காது

கவிதைக்குரிய மொழியும் லட்சணங்களுமற்ற

இந்தக்கவிதையை எனக்கும்கூட பிடிக்கவில்லை

 மரபுகளும் புதுமைகளும் மனங்கிளர்த்தும் உவமைகளுமற்ற

இந்தக்கவிதையை யாருக்குத்தான் பிடிக்கும்?



கொளுத்தப்பட்ட வீடுகளின்  கருகல் நெடியும்

குலையறுத்தச் சாவுகளின் ஒப்பாரியொலியும்

பாலிச்சைக்கு பணியாதவர்க்கோர் பாடமென

உள்ளுக்குள் கொட்டிவிட்டுப் போன செருப்பாணிகள் குத்தி

சீழ்வைத்தழுகும் குறியின் வலியும்

தொடை கூட்டவியலா அப்பெண்களின் கதறலும்

கவிதைக்குள் வரக்கூடாதென்பதறியாத இந்தக்கபோதி

மாசுமருவற்ற இவ்வெள்ளைத்தாளையும்

உங்களது ரம்மியமான மாலைப்பொழுதையும்

வீணடித்துவிட்டதற்காக  வருந்துகிறேன்



பீ வழியும் கூடையுடன் உங்கம்மாவும்

பிணமெரித்த வாடையுடன் உங்கப்பனும்

அறுத்தெடுத்த மார்போடு உங்கக்காவும்

அவமானத்தில் தினம் சாகும் சுற்றமும் நடமாட

கவிதையொன்றும் சேரியல்லவென

எத்தனையோ முறை நீங்கள் எச்சரித்திருந்தும்

அத்துமீறி அவர்களை கூட்டிவந்து

உங்களால் இந்தக்கவிதை

நாலுசபைகளில் வாசிக்கப்படும் வாய்ப்பையும்

விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படுவதையும்

நானாகவே கெடுத்துக்கொண்டேன்



நான்தான் விவரங்கெட்டவனென்றால்

ஊருக்குப் புறத்தே ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிற தாங்கள்

கவிதைக்குள்ளும் வரக்கூடாதவரென்று

அவர்களாகவே ஒதுங்கித்தொலைத்திருந்தால்

கவிதையும் இப்படி அசிங்கப்பட்டிருக்காது

வாசகராகிய நீங்களும் தீட்டாகியிருக்கமாட்டீர்கள்



108 குடம் பால்

108 குடம் தயிர்

108 குடம் நெய்

108 குடம் மாட்டு மூத்திரம்

108 குடம் சாணக்குழம்பு கலந்த புனிதஜலத்தில்

பரிகாரத் தீர்த்தமாடி நீங்கள் வரும்போது

தீட்டுப்படுத்தும் எம்முறவுகளை

கவிதைக்குள்ளிருந்து வெளியேற்றிவிட்டு காத்திருப்பேன்

உங்களுக்கு உகந்த ஒரு கவிதையை எழுதுகிறவனாய்.




24.05.14

நன்றி: உயிர் எழுத்து, ஜூன் 2014





3 கருத்துகள்:

  1. //கொட்டிவிட்டுப் போன செருப்பாணிகள்//
    வாசிக்கும் போதே வலிக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. என்ன சொல்ல அருமை தோழர். கலங்கடிக்குது சொற்கள் அல்லது நிஜங்கள்.

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...