மீசையாக அல்ல..மயிராக..! -கருப்பு கருணா

(இந்த பதிவை முழுசா படிக்கலன்னா ராத்திரி கனவுல மீசை வந்து கண்ணைக் குத்தும்..சொல்லிப்புட்டேன்..)
 போன வாரம் சேலத்துக்கு ஒரு புஸ்தகத்தப் பற்றி பேசப்போயிருந்தப்பதான் நந்தஜோதி பீம்தாஸை எனக்கு அறிமுகப்படுத்தி வச்சாரு பாலம் சகஸ்ரநாமம். பீம்தாஸ், ஆதவன் தீட்சண்யாவுக்கும் நண்பருங்க…அவருகிட்ட பேட்டியெல்லாம் எடுத்திருக்காரு ஆதவன் என்று கூடுதல் தகவலை சொல்லவும், பீம்தாஸை எனக்கு இன்னமும் புடிச்சிப்போச்சி…ஆதவனை புடிச்சிருக்கிறமாதிரியே. கூட்டம் முடிஞ்சதும் கிளம்பட்டுமா.. எனக்கேட்டேன். இல்லை.. நானும்கூட வர்றேன்..எனக்கு இப்பவே உங்கக்கிட்ட பேசவேண்டியது நெறைய்ய இருக்குன்னு… என்கூடவே கிளம்பிட்டாரு பீம்தாஸ். மலைகள் சிபிச்செல்வன், ரத்னா கபேன்னு ஒரு பாடாவதியான ஓட்டலுக்கு கூட்டிட்டுபோயி சாப்பாடு வாங்கிக்குடுத்தாரு. நீங்க சாப்பிடலையான்னு பீம்தாஸை கேட்டேன். இல்லை..என்கிட்ட மார்க்வெஸ் குடுத்த சுருட்டு இருக்கு… இப்பத்திக்கி அதுவே போதும்.. நீங்க சாப்டு வாங்க..வெயிட் பண்றேன்னு சொல்லிட்டாரு. ஒரு வயசான பெரிய மனுசன ஒக்காரவெச்சிட்டு சாப்பிடறதுக்கு என்னமோமாதிரி இருந்ததாலயும், சாப்பாடு அவ்ளோ ருசியாக இருந்ததாலயும் அள்ளிப்போட்டுக்கிட்டு வெளியே வந்தேன்.பீம்தாஸ் சுருட்ட பொறுக்க வலிச்சிக்கிட்டு பக்கத்துல இருந்த மரத்துக்கிட்ட பேசிக்கிட்டு இருந்தாரு.என்னைய பார்த்ததும் போலாமா..என சிரித்தார். சாப்பாடு நல்லாயில்லதானேன்னு கேட்கவும் நான் அசந்து போயிட்டேன். எப்புடி கண்டுபுடிச்சீங்கன்னு கேட்டதற்கு, மொசப்புடிக்கிற நாயி..மூஞ்சப்பார்த்தாலே தெரியாதான்னு தாடியா தடவிக்கிட்டே சொன்னாரு.

பஸ்ல ஏறி ஒக்காந்ததும்…பேச ஆரம்பிக்கலாமான்னாரு…நான் மல்லாட்ட துன்றீங்களான்னு கேட்டேன். ஓ..துன்னலாமே…எஙக ஊருல தின்னதுதான். நான் இருக்குற தீவுல இது கிடைக்காதுன்னு சொல்லி கொட்டையை ஒடச்சி தின்ன ஆரம்பிச்சுட்டாரு. மல்லாட்டையின் ருசி பேச்சில் கலக்கத்துவங்கியது. மனுசன் பேச ஆரம்பிச்சாரு பாருங்க…இன்னவரைக்கும் அந்த பேச்சே ஞாபகமாக இருக்கு. எங்கோ ஐரோப்பா கண்டத்தின் உட்விச் என்கிற கடலோர நகரத்திற்கு போயி…அங்கிருந்து கடலுக்குள்ள இருக்குற ஒரு தனியான தீவுல அவரு இருக்காராம்.கூடவே அவருடைய மகள் தங்கக்கிளியும் இருக்காளாம். அவளுக்கு மரியாதை கொடுத்து ஒரு நாளைக்கு நாலு சிகரெட்டுக்குமேல் புடிக்கமாட்டாராம். ஒஎஉ நாலைந்து குடும்பங்கள்தான் அவருடைய தீவில் இருக்காம். தேவையானதை விளைவித்து சமமாக பங்கிட்டுக்கொள்கிறார்களாம். ச்சே..கேட்கவே எவ்ளோ நல்லாயிருக்கில்ல..

ஆனால் ஒரு விஷயம். அவரு பிறந்தது நம்ம தமிழ்நாட்டுல தர்மபுரி மாவட்டத்துல தானாம்.அட..திர்ணாமலைக்கு ரொம்ப பக்கம்..தர்மபுரின்னதும் ஆதவன்,நவகவியெல்லாம் பிறந்த ஊராச்சேன்னு நமக்கு பீலிங் ஜாஸ்தியாப்போச்சி. அதுவுமில்லாமல் நமக்கு சங்கத்துல அந்த மாவட்டம்தான் செயற்குழு பொறுப்பு என்பதால் பொறுப்பும் அதிகமாகி அவரோடு பொறுப்போடு பேச்சை தொடர்ந்தேன். உங்கள் பூர்வீகம் எதுன்னு கேட்டேன். “உங்கள் கேள்விக்கான பதிலைத்தான் நானும் எனது முன்னோர்களும் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்…ஊர் என்ற ஒன்றே எங்களுக்கு இல்லை” என்றார். அப்புறம் இந்த தீவுன்னு சொன்னீங்களே..ன்னு இழுத்தேன். அந்தத்தீவு அவர் வேலை பார்த்த கப்பலின் கேப்டன் ஜே.எம்.ஆண்ட்ரூவுக்கு சொந்தமானதாம் அந்த தீவு. கேப்டன்தான் பீம்தாஸை தன்னுடனே அழைத்துவந்து வச்சிக்கிட்டு கடைசியில அந்த தீவையும் அவருக்கே கொடுத்துட்டு ஏதாவது செய் என சொல்லிட்டு செத்துட்டாராம்.

சரி…தர்மபுரிக்காரரு கப்பலுக்கு எப்படி வேலைக்கு போனாருன்னு தோணுதா… நானும் இதைத்தான் அவருகிட்ட கேட்டேன். எப்படி போனேன்னு தெரிஞ்சிக்கறதவிட ஏன் போனேன்னு தெரிஞ்சிக்க தம்பின்னு சாட்டையை எடுத்து என்னை விளாச ஆரம்பிச்சிட்டாரு. அவர் தன் கதையை சொல்லச்சொல்ல நான் குற்றஉணர்வால் கூனிக்குறுகத்துவங்கினேன். ஆமாம்…கட்டமைக்கப்பட்டுள்ள சாதியப்படிநிலைகளில் தனக்கு கீழே ஒரு சாதியை இருத்திவைத்து மீசையை முறுக்கிவிடவேண்டும் என நினைக்கும் எவனுமே குற்ற உணர்வால் கூனிக்குறுகித்தான் ஆகவேண்டும். அத்தனை வலிகளும் வேதனையும் புறக்கணிப்பும் மிகுந்தது அவரது கதை. பீம்தாசுக்கு மட்டுமல்ல.. நந்தன்.ஜோதிராம் பூலே, பீம்ராவ் அம்பேத்கர், அயோத்திதாஸ பண்டிதர் ..இன்னும் நீளும் அந்தப்பட்டியலின் கதைகள் அனைத்துமே வலி நிறைந்ததுதான்.

வழியில் அரூர் பக்கத்தில் உணவகம் ஒன்றில் நின்றது, உணவகம் நில்லா பேருந்து என எழுதப்பட்டிருந்த அந்த பஸ். நான் மட்டும் கீழே சென்று ஒரு சிகரெட் குடித்துவிட்டு வந்தேன். காற்றில் பக்கங்கள் படபடக்க சிரித்தபடியே அமர்ந்திருந்தார் பீம்தாஸ். பஸ் கிளம்பியதும் பேச்சும் கிளம்பியது. தன்னுடன் படித்த ஆண்டையின் மகனை பெயர் சொல்லி அழைத்ததால் தீட்டாகிவிட்டதெனப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆண்டை பீம்தாசை அடித்துத்துவைக்க, ஆவேசமடைந்து ஆண்டையின் குறியை இழுத்துப்பிடித்து நசுக்கி துடிக்கவைத்துவிட்டு சேரியிலிருந்து தப்பி ரெயிலேறி..அதுபோகும் இடமெல்லாம் காற்றைப்போல அலைந்து திரிந்து…கடைசியில் தனுஷ்கோடிக்கு போய் சேர்ந்து…அந்த நேரம் பார்த்து புயலடித்து தனுஷ்கோடி கடலுக்குள் ஜலசமாதியானபோது…. போதும் நிறுத்துங்கள்.. என நானே பேச்சை முறித்துக்கொண்டேன். இதையெல்லாம் கேட்கவே உன்னால் சகித்துக்கொள்ள முடியலையா… நாங்கல்லாம் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமடா.. என்பதைப் போல என்னை ஆவேசமாய் பார்த்தார் பீம்தாஸ். நான் மிகவும் உடைந்து போயிருந்தேன். இந்தக் கொடுமையெல்லாம் இன்றும் தொடர்கிறதே என்கிற இயலாமை என்னை ஆட்கொண்டுவிட்டது.

இரவு வீட்டுக்கு வந்ததும் இது யாருங்க என கேட்டாள் துணைவியார் செல்வி. ஆதவனின் நண்பர்..எனக்கும் நண்பர்தான் என அறிமுகப்படுத்திவிட்டு புத்தக அறைக்குள் அவரை தங்கச்செய்தேன்.அடுத்தநாள் மனைவி பிள்ளைகள் அவரவர் வேலைக்கு கிளம்பிப்போனதும் வெளியே வராண்டாவில் புகைத்தபடியே எஙகள் உரையாடல் தொடர்ந்தது. என்னுடைய நாவலை ஆதவன் மொழிபெயர்த்திருக்கிறார் தெரியுமா..என்றார். ஆமாம் தாஸ்…(அதற்குள் நாங்கள் பெயர் சொல்லி விளிக்குமளவுக்கு நெருக்கமாயிட்டோல…) அந்த மொழிபெயர்ப்புக்கான குறிப்பை படிச்சபோது ஒரு இடத்துல “பட்டாளத்துக்கு புட்டு அவிக்கிறமாதிரி ..” மொழிபெயர்க்குறாங்கன்னு எழுதியிருந்ததை படிச்சிட்டு சிரிச்சிக்கிட்டெயிருந்தேன்…தெருவுல போனவங்க ஒருமாதிரியாக பார்த்துட்டுப்போனாங்க.. என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தேன். அவர் சிரிக்கவில்லை. முகம் இறுகிப்போயிருந்தது. என்னாச்சி..என்றேன்.

தனுஷ்கோடி மூழ்கிப்போயிடிச்சி… குடும்பங்கள் தவிக்குது.. ரயில் நிலையத்துல அண்டிக்கிடக்குது..… நான் சிலோனுக்கு போறதுக்குள்ள.. எனத்துவங்கியபோது எனக்கு நடுக்கம் தொற்றிக்கொண்டது வேண்டாம் தாஸ்… இந்தத்துயரங்களை காட்சிப்படுத்தி பார்க்கும்போது என்னால் சகஜமாக இருக்கமுடியவில்லை… நீங்க நேரடியாக சிலோனில் நடந்ததை சொல்லுங்கள் என்றேன். சரியாப்போச்சி.. இந்த காட்சிகளையே தாங்கமுடியாதவன் மலையகத்தின் துயரங்களையும் வலிகளையும் எப்படி தாங்குவாய் என்றார். இல்லீங்க தாஸ்..அதைப்பற்றி கேட்டும் படித்தும்..தொலைக்காட்சிகளில் பார்த்தும் எங்களுக்கு மரத்துப்போயிடுச்சி.. நீங்க என்ன மாதிரி சொன்னாலும் எங்களுக்கு உரைக்காது என்றேன்.மலையகம் போவதற்கு முன் “ காடும் கடலும் தின்றது போக“ என்ற ஒருவரியை சொன்னார் பீம்தாஸ். அதிர்ந்துபோய் கொஞ்சநேரம் அமைதியாகிவிட்டேன்.இந்த ஒற்றை வரியை விரித்துப்போட்டால் பல நூற்றாண்டுகளின் வரலாற்றை சொல்லிவிடமுடியுமே.. அப்படித்தான் மலையகத்தின் கதையையும் அங்கும் சாதி இருந்ததையும் சாதிகளுக்கேற்ப தங்கும் லயன்வீடுகள் இருந்ததையும் விரித்துக்கொண்டே போனார் பீம்தாஸ். ஆனந்தம் பிள்ளை. பிரீமியம் பார்பர் ஷாப், கம்யூனிச பேய் பிரெஸ்கிர்டில், ஸ்ரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம், அதில் நடந்த துரோகங்கள், அதில் அப்போதிருந்த தமிழ்நாட்டு, இலங்கை கட்சிகளின் நிலை, நாடற்றவராக்கப்பட்டோரின் துயரம் என புனைவு கலக்காத வரலாற்றை ஒரு புனைவைப்போல சொல்லிமுடித்தார் பீம்தாஸ். ஒரு மனுஷனுக்குள் இத்தனை அனுபவங்களா..என நான் வியந்தும் உணர்ந்தும் பார்த்துக்கொண்டிருந்தபோதே…மீசை என்பது வெறும் மயிர் என்ற எனது நாவலை படித்திருக்கிறீர்களா என்றார்.

இல்லை தாஸ்…அதையும் நீங்களே சொல்லுவிடுங்களேன் என்றேன். நாவல்ன்னா அதை சொல்ல முடியாதய்யா…படிச்சிதான் உணரணும்..எனச்சொல்லிவிட்டு புத்தகத்தை என்னிடம் வீசிவிட்டு விருட்டென்று எழுந்து போய்விட்டார் பீம்தாஸ். அவர் தெருவிலிறங்கியதும் நாய்களின் குரைப்புச் சத்தம் கேட்டது. பீம்தாஸை பார்த்துதான் குரைக்கிறதோ பார்க்கலாம் என எழுந்தபோது, அவர் கொடுத்துவிட்டுப்போன புத்தகத்திலிருந்து நாய் தலையுடைய மனிதர்களும் மனிதத்தலையை கொண்ட நாய்களும் வெளியே குதித்து குரைக்கத் துவங்கினார்கள். அவைகளின் மொழி என்னவோ நாய்களின் மொழியாக இல்லாமல் மனிதர்களின் மொழியாக இருந்தது. என்ன இது புதுசாயிருக்கேன்னு புத்தகத்தை கையில் எடுத்த கணத்தில் மீசையே இல்லாத மனிதர்களும் விதவிதமான மீசைகளும் வரிசையாய் வெளிப்படத்துவங்கியபோது… அனிச்சையாய் நான் என்மீசையை தொட்டுப்பார்த்தேன்.அது எப்போதும்போல இருந்த இடத்திலேயே இருந்தது…மீசையாக அல்ல…மயிராக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக