ஓரிகாமியும் நாய்க் குடைகளும் - எஸ்.வி.ராஜதுரை‘ஓரிகாமி’, காகிதங்களைக் கத்திரித்து விதவிதமான வண்ணமிகு உருவங்களை உருவாக்கும் ஜப்பானியக் கலை. அந்தக் கலையில் சாதனைகளைச் செய்தவர்கள் ஏராளம். ஆனால்,1955 அக்டோபர் 15இல் இறந்துபோன ஸடாகோ ஸஸாகி (Sadako Sasaki) என்னும் ஜப்பானியப் பெண்ணுக்கும்கும் அந்தக் கலைக்கும் இருந்த தொடர்பு மிகவும் வித்தியாசமானது. ஹிரோஷிமா  மீது அணுகுண்டு வீசப்பட்டபோது, அவள் இரண்டு வயதுச் சிறுமி. பன்னிரண்டு வயதானபோதுதான் தெரியவந்தது, அவளுக்கு இரத்தப் புற்றுநோய் கண்டிருந்தது என்னும் கொடிய உண்மை. கதிர்வீச்சின் விளைவுகளில் அதுவுமொன்று. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவளுக்கு ஆறுதல் சொல்வதற்காக  நண்பரொருருவர், ஓரிகாமிக் கலையைக் கொண்டு ஆயிரம் கொக்கு உருவங்களைச் செய்தால், உயிர் பிழைக்க வேண்டும் என்னும் அவரது ஆசை நிறைவேறும் என்று கூறியிருக்கிறார். தனக்கு வந்த நோயை எதிர்த்துப் போராடுவதற்காக, ஸஸாகியும் மிக நுட்பமான வேலைப்பாடுடைய காகிதக் கொக்குகளைச் செய்யத் தொடங்கினாள். ஆனால் , வெற்றி பெற்றது நோய்தான். அவளது மற்றும் அணுகுண்டு வீச்சுக்குப் பலியான பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை நினைவுகூர்வதற்காக, ஹிரோஷிமாவிலுள்ள ‘சமாதான நினைவுச் சின்ன’ வளாகத்தில் ‘குழந்தைகள் சமாதான நினைவுச் சின்னமொ’ன்றும் கட்டப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான காகிதக் கொக்குகளால் அலங்கரிக்கப்படும் அந்த நினைவுச் சின்னத்தின் அடிப்பகுதியில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம்: “இதுதான் எங்கள் அழுகை. இதுதான் எங்கள் பிரார்த்தனை. உலகில் அமைதி தவழட்டும்”.

அமெரிக்க இராணுவத்தால் ‘குட்டிப் பையன்’ (Little Boy) என்றும் ‘குண்டு மனிதன்’ (Fat Man) என்றும் பெயரிடப்பட்ட அணுகுண்டுகள் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் முறையே 1945 ஆகஸ்ட் 6இலும், 9 இலும் ஏற்படுத்திய பேரழிவுகளுக்குத் தாக்குப் பிடித்து குற்றுயிரும் குலையுயிருமாகவோ, கதிர்வீச்சு விளைவித்த பல்வேறு நோய்களால் அவதியுற்றோ வாழ்ந்து வந்தவர்கள் ‘ஹிபுகுஷா’ என்றழைக்கப்பட்டனர். 1994இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் கென்ஸபுரோ ஓயி (Kenzuburo Oe), ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டபோது, பத்து வயது சிறுவன். ஜப்பானில் மிகவும் மதிக்கப்படும் அறிவுஜீவிகளிலும் மனிதநேயர்களிலும் மிக முக்கியமானவராகக் கருதப்படும் அவர், தமக்கும் தமது பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும், அனைத்து ஜப்பானிய மக்களுக்கும் அன்று மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்த நிகழ்வைப் போல, இன்னொரு பேரழிவை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்கிறார். அணுகுண்டு வீச்சைப் பற்றிய புனைவிலக்கியம் ஒன்றைக்கூடத் தம்மால் இதுவரை படைக்கமுடியவில்லை என்பதற்காக வெட்கப்படுவதாகக் கூறும் அந்த 81 வயது முதியவர்,  அணுகுண்டு ஏற்படுத்திய பேரழிவுகளைத் தமது நினைவுகளில் தாங்கி அடுத்தடுத்த தலைமுறையினருக்கு அவற்றை விட்டுச் சென்றுள்ள ஹிபாகுஷாக்களைப் போற்றிப் புகழ்வதுடன், அணு ஆயுத எதிர்ப்பு, அணு உலை எதிர்ப்பு இயக்கங்களின் ஆதரவாளராக இருந்து வருகிறார். சரணடைந்த ஜப்பான் 1945இல் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டதால்,  எந்த இயக்கத்தையும்  ஜப்பானில் கட்ட இயலவில்லை என்றும் ஆனால் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, ஒரு இயக்கத்தைக் கட்டிய சாதனையாளர்கள் ஹிபாகுஷாக்கள்தாம் என்றும் கூறுகிறார். அந்த இயக்கம் கொண்டிருந்த ஒரே முழக்கம் : “ இந்தப் பேரழிவு இனி மீண்டும் எங்கும் நடக்க அனுமதிக்கக்கூடாது, ஹிபாகுஷாக்கள் மீண்டும் உருவாக்கப்படுவதை அனுமதிக்கக்கூடாது”.
 
ஹிபாகுஷா இயக்கம்தான் ஜப்பானில் உருவான சமாதான,  அணு ஆயுத, அணு உலை எதிர்ப்பு இயக்கங்களின் மையக்கருவாக இருந்தது. அந்த இயக்கம், தனது சின்னமாக ஏற்றுக்கொண்டது  அமைதியின் குறியீடாக இருக்கும் ஓரிகாமி வெண்கொக்கு. மின்சக்திக்கான அணு உலைகள் என்பன, ஹிரோஷிமாவில் கொல்லப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும், அணுகுண்டுகளைப் போலவே, அணு உலைகளும் இயற்கைச் சீற்றங்களால் விளையும் பேரழிவுகளை விடக் கொடூரமானவை, ஏனெனில் இவை மனிதர்களால் ஏற்படுத்தப்படுகின்றவை என்றும் ஓயெ கூறுகிறார்.

ஹிபாகுஷாக்களால் அடித்தளம் இடப்பட்ட சமாதான இயக்கம் நாளுக்கு நாள் வலுப்பெற்று 2011 மார்ச்சில் ஃபுகுஷிமா அணு உலையில் விபத்து ஏற்பட்ட தருவாயில் ஜப்பானிலுள்ள அணு உலைகள் அனைத்தையும் இழுத்து மூட வேண்டிய நிலைமைகளை உருவாக்கிற்று. ஆனால், அந்த விபத்துக்குப் பிறகு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பழைமைவாதக் கட்சியைச் சேர்ந்த பிரதமர் ஷின்ஸோ அபெ (Shinzo Abe) என்பவரோ பழுதடைந்த அணு உலைகளைப் புதுப்பிப்பதுடன், புதிய அணு உலைகளைக் கட்டப் போவதாகவும் சூளுரைத்துவிட்டார்!

மறுபுறம், அமெரிக்க அணுகுண்டின் பிறப்பிடமான நியூ மெக்ஸிகோ மாகாணத்தின் லோஸ் ஆலொமோஸ் என்னுமிடத்தில் ‘இன்னும் சிறப்பான’ அணுகுண்டுகளைத் தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. உச்ச அளவுப் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும் சோதனைக்கூடங்கள் உள்ள இடத்திற்கு அருகிலுள்ள சிறு நகரமொன்றில் அணு ஆயுதங்களுக்கு எதிராகவும் உலக சமாதானத்துக்கு எதிராகவும் போராடுபவர்கள், ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வீச்சுகளின் 70ஆம் ஆண்டு நிறைவையொட்டி,  மாநாடொன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களிலொருவர் கத்தோலிக்கப் பாதிரியார் ஜான் டியர். அவர் கூறுகிறார்: “இந்த உலகத்தைப் படைக்க நீங்கள் 15 பில்லியன் ஆண்டுகளை எடுத்துக்கொண்டீர்கள், ஆனால், அதை அழிக்க நாங்கள் எடுத்துக்கொள்வதோ 15 நிமிடங்கள்தாம் என்று நாங்கள் கடவுளிடம் கூறினோம்”.

ஏறத்தாழ இதே கூற்றைத்தான் 1945இல், அமெரிக்க அணுகுண்டு தயாரிப்பதற்கான ‘மன்ஹாட்டன் திட்டம்’ என்பதற்குத் தலைமை தாங்கிய இயற்பியல் விஞ்ஞானி இராபர்ட் ஜே.ஒப்பன்ஹெய்மரும் கூறினார். 1945 ஜூலை 16 அன்று நியூ மெக்ஸிகோவின் பாலைவனப் பகுதியிலுள்ள ஓரிடத்தில் (‘ட்ரினிட்டி’ என்பது அதன் பெயர்! தந்தை, மகன், பரிசுத்த ஆவி ஆகியவற்றை ‘ட்ரினிட்டி’ என்பார்கள். இந்துமதத்தில் ‘மும்மூர்த்தி’!) அணுகுண்டை வெடித்துப் பார்க்கும் முதல் பரிசோதனை நடந்தது.  சூரிய வெப்பத்தைப் போலப் பல்லாயிரம் மடங்கு வெப்பத்தைக் கக்கி, பிரமாண்டமான நாய்க் குடை போலப் புகை வானுயர்ந்து சென்றதைப் பார்த்த ஓப்பன்ஹெய்மர் பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறியதை எடுத்துச் சொன்னார் :  “இப்போது நானே மரணம், உலகங்களை அழிப்பவன் நானே”.

இன்றைய கிருஷ்ண பகவான், அமெரிக்க ஏகாதிபத்தியம்தான். இலட்சக்கணக்கான மக்களைக் கொண்றதுடன், பல தலைமுறையைச் சேர்ந்த ஜப்பானியர்களுக்குக் கதிர்வீச்சால் நேர்ந்த துன்பங்களுக்காக வருந்துவது நேரத்தை வீணாக்கும் செயல் என்றார் இரு ஜப்பானிய நகரங்களின் மீது அணு குண்டுகள் வீசப்பட்டபோது அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த ஹாரி ட்ரூமன். ஜப்பானியப் பெருநகரங்கள் முழுவதிலுமே ஏற்கெனவே நேசநாட்டுப் படைகளின் போர் விமானங்கள் இடைவிடாது குண்டுமாரி பொழிந்து,  ஜப்பானின் இராணுவப் பொருளாதாரத்தை முற்றிலுமாக முடக்கியிருந்தன. ஜப்பான் எந்த நேரத்திலும் சரணடைவதற்கான சூழல் உருவாக்கப்பட்டிருந்தது. அப்படியிருந்தும், அமெரிக்கா தனது அணுகுண்டுகளை சோதனை செய்து பார்ப்பதற்காக ஹிரோஷிமாவையும் நாகசாகியியையும் தேர்ந்தெடுத்தது. அமெரிக்க இராணுவத்தின் தலைமைத் தளபதி ஐஸன்ஹோவர் போன்றோர், அணுகுண்டு வீசுவது அதர்மமானது, கிறிஸ்தவ அறநெறிகளுக்கு எதிரானது என்று வாதாடியும் ட்ரூமன் கேட்கவில்லை. தரை வழியாகவோ, கடல் வழியாகவோ ஜப்பான் மீது படையெடுத்தால் இலட்சக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் மட்டுமின்றி, ஜப்பானியக் குடிமக்களும் கொல்லப்படுவர் என்பதால்தான் அணுகுண்டு வீசுவதெனத் தீர்மானிக்கப்பட்டது என்றார் முதலில். ஆனால், இன்னொரு விளக்கமும் தந்தார்: அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தின் மீது குண்டுவீச்சுகளை நடத்திய ஜப்பான், அமெரிக்கப் போர்க்கைதிகளை ஈவிரக்கமின்றிச் சித்திரவதை செய்தது; அதற்குப் பழிவாங்கவே  ஹிரோஷிமா மீது ஒரு அணுகுண்டு வீசப்பட்டது என்றார் ஆகஸ்ட் 9இல் ஆற்றிய உரையில். அன்று நாகசாகியில் இன்னொரு அணுகுண்டு வீசப்பட்டதை அவர் குறிப்பிடவே இல்லை. அணுகுண்டுகள் வீசப்பட்டதை மக்கள் மனதில் நியாயப்படுத்துவதற்காக, அமெரிக்க அரசாங்க அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், ஊடகங்கள் ஆகியன இனவாதப் பிரசாரத்தை முடுக்கிவிட்டன. ஜப்பானிய மக்கள் அனைவரும் இரத்தவெறி பிடித்த மிருகங்களாகச் சித்திரிக்கப்பட்டனர்.

உண்மையில் அமெரிக்காவைவிட ஜப்பானிய ஏகாதிபத்தியத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு சோவியத் யூனியன். சோவியத் யூனியன் மீது நாஜிகள் நடத்திய படையெடுப்புகளைத்தான் பலரும் அறிவர். ஆனால் 1937, 1938ஆம் ஆண்டுகளில் சோவியத் படைகள் மீது, ஜப்பானிய இராணுவம் நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதல்கள் பற்றி நமக்குப் போதுமான செய்திகள் தரப்படவில்லை.  சோவியத் யூனியனிலிருந்து தொடங்கி, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஊடாக நாஜிகளை முறியடித்து பெர்லின் நகரைக் கைப்பற்றிய சோவியத் யூனியன், 1945 ஜூலையில் ஜப்பான் மீது படையெடுக்கத் திட்டமிட்டிருந்தது. நேசநாடுகளின் தலைவர்களிலொருவரான ஸ்டாலினின் திட்டத்தைத் தகர்ப்பதற்காகவும், சோவியத் யூனியனின் செல்வாக்குப் பரவாமல் தடுப்பதற்காகவும், அணுகுண்டைக் காட்டி அதனை அச்சுறுத்துவதற்காகவும் அமெரிக்கா ஹிரோஷிமாவையும் நாகசாகியையும் களப்பலியாக்கியது.
 
அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக, சோவியத் யூனியனும் அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் தொடங்கியது. நமது  புவிக்கோளத்தைப் போன்ற பன்னூறு கோளங்களை நிர்மூலமாக்கக்கூடிய அணு ஆயுதங்கள் இன்று உலகிலுள்ளன. மனித சமுதாயத்தின் நல்வாழ்வுக்காகச் செலவிடப்பட வேண்டிய நிதியாதாரங்களும் பொருள்வகை ஆதாரங்களும் அணு ஆயுதத் தயாரிப்பிற்கும் (அவற்றுக்கு வேண்டிய மூலப்பொருள்களை வழங்கும்) அணு உலைகளுக்கும் ஒதுக்கப்படுகின்றன.

1974ஆம் ஆண்டிலேயே, இந்திரா காந்தியின் ஆட்சியின் போதே, இந்தியாவின் முதல் அணு குண்டு வெடிப்பு சோதனை நடைபெற்றது. ஆனால், வாஜ்பாயி அரசாங்கம் இருந்தபோதுதான், இந்தியா அணுஆயுத அரசாக வலுப்பெற்றது என்றும் அதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்  ‘ஏவுகணை நாயகர்’ என்றும், ‘அணு விஞ்ஞானி’ என்றும் போற்றப்பட்ட அப்துல் கலாம்தான்  என்னும் பிரசாரம் முடுக்கிவிடப்பட்டது.  கூடங்குளம் அணு உலை ‘பாதுகாப்பானது’  என்று இரண்டு மணி  நேரம் அங்கு ஒரு பார்வையாளனைப் போல சுற்றிப் பார்த்துவிட்டுச் ‘சான்றிதழ்’ கொடுக்கும் ஆற்றல் அவரைப் போன்ற ‘மாபெரும் விஞ்ஞானி’களுக்கு மட்டுமே சாத்தியம். வாஜ்பாயி அரசாங்கம், பொக்ரானில் அணுகுண்டு வெடித்த சில நாள்களுக்குள்ளேயே பாகிஸ்தான் ஆறு அணு குண்டுகளை வெடித்துக் காட்டியது. எல்லைக்கு இருபுறமும் உள்ள நாடுகள் ஏதோவொன்றில், ட்ரூமனைப் போன்ற அதிபரொருவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்று, ட்ரூமனைப் போலவே முடிவுகளை எடுப்பாரேயானால்,  அது இந்தத் துணைக்கண்டம் முழுவதையும் துடைத்தெறிந்துவிடும். மத அடிப்படைவாதிகளின் கைகளுக்கு அணு ஆயுதங்கள் சிக்குவதற்கான வாய்ப்பும் இருக்கத்தான் செய்கிறது. 

இந்த அபாயங்களுக்கான மூலவித்தை உருவாக்கியது அமெரிக்காதான். போரில் இராணுவம், இராணுவ மையங்கள் ஆகியவற்றை சாதாரணக் குடிமக்களிடமிருந்து வேறுபடுத்திப்பார்க்காமல் இரண்டையும் கண்மூடித்தனமாகத் தாக்கும், நிர்மூலமாக்கும் மரபை அமெரிக்காவின் அணுகுண்டுகள்தாம் தொடங்கி வைத்தன. ஏதோ ஒரு நாட்டின் மீது நேரடியாகவோ, மறைமுகமாகவோ படையெடுக்கும் வழக்கத்தை 1941 முதல் இன்று வரை கைவிடாத அமெரிக்க ஏகாதிபத்தியம் தான் இழைத்துள்ள மனிதப் படுகொலைகளுக்காக ஒருமுறை கூட உலக மக்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. 1988இல், பாரசீக வளைகுடாவுக்கு மேல் பறந்து கொண்டிருந்த ஈரானிய விமானம் (290 பேர் இருந்த பயணிகள் விமானம்; அதில் 66 பேர் குழந்தைகள்) அமெரிக்க கப்பற்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்தக் கொடுஞ்செயல், அப்போது அமெரிக்கத் துணைக் குடியரசுத் தலைவராக இருந்தவரும் அப்போது குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டவருவமான ஜார்ஜ்  ஹெச்.டபிள்யூ புஷ்ஷின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர் கூறினார்: “அமெரிக்கா சார்பில் நான் ஒரு போதும் மன்னிப்புக் கேட்கமாட்டேன். ஒருபோதும். உண்மை விவரங்கள் எப்படியிருந்தாலும் எனக்குக் கவலையில்லை”.

இதுதான், ட்ரூமனிலிருந்து ஒபாமா வரை, அமெரிக்கா மேற்கொண்டுவரும் ‘மனிதாபிமான’ நிலைப்பாடு. அமெரிக்காவைப் போல இந்தியாவும் ‘வல்லரசாக’ வேண்டும் என்று இந்திய இளைஞர்களும், மாணவர்களும் கனவு காண வேண்டும் என்னும் ‘நற்செய்தி’யை விட்டுச் சென்றிருக்கிறார் ‘மக்கள் ஜனாதிபதி’. அது கனவாகவே இருந்துவிட்டுப் போகட்டும்!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக