வரலாற்றின் மாற்று முகம் - ஆதவன் தீட்சண்யா'மாற்று வரலாறு சிறப்பிதழாக' மலேசியாவின் "பறை" 5வது இதழ் வெளியானது. அதன்  பொறுப்பாசிரியர்களில் ஒருவர் என்ற முறையில் எழுதப்பட்ட தலையங்கம் 

இந்தத் தலையங்கத்தை எழுதத் தொடங்கும் வேளையில் தமிழ்நாட்டில் மற்றுமொரு எழுத்தாளரான புலியூர் முருகேசன் தாக்கப்பட்டிருக்கும் செய்தி வந்தடைந்திருக்கிறது. அவர் எழுதிய கதையில் கவுண்டர் சமூகம் பற்றி இடம் பெற்றிருக்கும் பகுதியின் மீது ஒம்பாமை கொண்ட ஒரு கும்பல் கரூரிலுள்ள அவரது வீட்டிற்குள் புகுந்து அவரைத் தூக்கி காருக்குள் போட்டுக்கொண்டு போய் எங்கோவொரு காட்டுப்பகுதிக்குள் வைத்து கடுமையாகத் தாக்கியிருக்கிறது. பிறகு அந்தக் கும்பலே அவரை அவரை கைது செய்யுமாறு காவல் நிலையத்திற்குள் வந்து அட்டகாசம் செய்திருக்கிறது. முருகேசன் இப்போது தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இதற்கு முன்னும் இதேபோல துரை குணா, மா.மு.கண்ணன் போன்றவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பெருமாள் முருகனின் கையை முறுக்கி இனி எழுதமாட்டேன் என்று வாக்குமூலம் கொடுக்கவைத்த வன்முறையை உலகறியும். 

உண்மையில் இந்தத் தாக்குதல் அல்லது அச்சுறுத்தல் எதை உணர்த்துகிறது? ஒவ்வொரு சாதியிலும் உருவாகி வந்துள்ள மேட்டுக்குடியினரும் நடுத்தர வர்க்கத்தினரும் தங்களது சாதி இன்றுள்ள கதியிலேயே என்றென்றைக்குமாக இருந்து வந்திருக்கிறது என்று நிறுவப் பார்க்கின்றனர். ஆண்ட பரம்பரை என்று தங்கள் சாதிக்கு புனைந்தேற்றியுள்ள கற்பனையை உண்மை என்று நம்ப வைப்பதில்தான் இன்றைய சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் மேலாதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்பு தங்கியிருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். ஆனால் கற்பிதமான அவர்களது  புனிதங்களை தகர்க்கும் விதமாக கலை இலக்கிய ஆக்கங்களும் வரலாற்று ஆய்வுகளும் அப்பட்டமான சில உண்மைகளைப் பேசிவிடுகின்றன. உண்மையைத் தாக்கியழிக்க முடியாத ஆத்திரத்தில் உண்மையைச் சொல்கிறவர்களைத் தாக்குவது இங்கு தொடர்கிறது. 

இவ்வகையான தாக்குதல்கள் இந்திய அளவில் ஏற்கனவே நடந்த வருபவற்றின் தொடர்ச்சிதான். தாங்கள் வெளியிலிருந்து இந்தியாவுக்கு ஊடுருவி வந்து ஆக்கிரமித்தவர்கள் என்கிற உண்மையை மறைக்க ஆரியப்பரம்பரையினர் தொடர்ந்து பலவழிகளிலும் முயற்சித்து வருகின்றனர். எனவே கடந்தகால உண்மைகளுக்கு மாறாக அவர்கள் பல்வேறு தகிடுதத்தங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவின் தொல்குடிகள் ஆரியர்கள், ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் அல்ல, இந்துமதம் என்பது என்றென்றைக்குமாக இருந்து வருவது, அதன் மூல இலக்கியமான வேதத்தில் எல்லாம் இருக்கிறது, வேதத்தை இயற்றியவர்கள் ஆரியர்கள், சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகமல்ல- ஆரிய நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம் என்பது உண்மையில் சரஸ்வதி நதிக்கரை நாகரீகமே, சமஸ்கிருதமே இந்தியாவின் தொன்மையான மொழி என்பதான கட்டுக்கதைகளை களமிறக்கி வருகின்றனர். ஆனால் இந்தக் கட்டுக்கதைகளுக்குப் பொருந்தாத உண்மைகளை திருத்தும் வேலையில் முனைப்புடன் இறங்கியுள்ளனர். இப்படியான அவர்களது திரிப்புகளை அம்பலப்படுத்தும் உள்ளடக்கங்களைக் கொண்டிருப்பதால்தான் பிபின் சந்திரா, ரொமிலா தாப்பர் போன்ற மதிக்கத்தக்க வரலாற்றாளர்களின் நூல்களை தீயிட்டுப் பொசுக்கவேண்டும் என்று கொக்கரிக்கின்றனர். பந்தார்கர் நூலகம், ஹூசைனின் ஓவியக்கூடம் போன்றவை சூறையாடப்பட்டதற்கும் ஆனந்த் பட்வர்த்தன் போன்றவர்களின் ஆவணப்படங்களைத் திரையிடவிடாமல் தடுப்பதற்கும் இதுவே காரணம். 

காலனிய ஆட்சிக்காலத்தில் இந்தியாலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் புலம் பெயர்த்தி கொண்டு போகப்பட்டவர்கள் அந்தந்த நாடுகளில் சிறுபான்மையினராகவே இருக்கிறார்கள். காலனிய ஆதிக்கத்திலிருந்து நாடுகள் விடுதலை பெற்றபோது அவர்கள் உள்நாட்டு தேசிய இனங்களிலிருந்து தங்களது எஜமானர்களைக் கண்டார்கள். புலம் பெயர்ந்தவர்கள் என்கிற அடையாளம் சிறுபான்மை / இந்திய வம்சாவளி  என்பதாக மாறியது. உள்நாட்டவர் மதப் பெரும்பான்மையை முன்னிறுத்திய நிலையில் இந்தியர் என்பது இந்துமதத்தவர் என்பதாக சுருங்கியது. இவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்த இந்துமதத்தையே தங்களது அடையாளமாகக் கொள்ள நேர்ந்தது. ஆகவே இந்துமதத்தை இந்தியாவைவிடவும் கூடுதல் விசுவாசத்தோடு பற்றியொழுகும் அழுத்தம் கொண்டதாக புலம்பெயர் இந்திய/ தமிழ்ச் சமூகம் மாறியது. எனவே இந்து மதம், அதன் உள்ளடக்கமான சாதியம் குறித்த உண்மைகளைப் பேசும் எதுவொன்றும் கடுமையாக எதிர்கொள்ளப் படுகிறது. தாங்கள் புலம் பெயர்ந்து வந்த விதம், எதிர்கொண்ட சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை, மீள்வதற்கான போராட்டங்கள் உள்ளிட்ட கடந்தகாலம் பற்றிய உண்மைகளையும் நினைவுகளையும் அழித்து இன்றைக்குள்ள நிலையிலேயே என்றென்றும் இருந்துவருவதாக காட்டும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. மட்டுமல்ல, இந்த நாடுகள் மீது படையெடுத்து வந்த அல்லது ஆண்ட தமிழ் / இந்திய மன்னர்களின் வழித்தோன்றல்களாக தங்களைக்    காட்டுவதன் மூலம் இந்த நாடுகள் மீது தங்களுக்கு நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே உரிமையிருப்பதாக கோரும் முயற்சியும் தொடர்கிறது. ஓம் தமிழராக மாறி காவடித் தூக்கியலைகிற நாம் தமிழர் போன்ற அமைப்புகள் ஆதாரமற்று அவிழ்த்துவிடும் பொய்கள் இதற்கு துணைசெய்கின்றன. 

இலங்கையை சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமானதாக நிறுவும் இழி-முயற்சியின் தொடர்ச்சி, அந்த நாட்டின் பூர்வகுடிகள் வேடுவர்கள் என்பதையும் அங்கு நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே தமிழர்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் மறைப்பதற்கு இட்டுச் சென்றது. தமிழர்களுக்கு இலங்கையின் மீதுள்ள பூர்வீக உரிமைகளைப் பேசியவர்களும் சிங்கள பேரினவாத ஒடுக்கமுறைகளை அம்பலப்படுத்தியவர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர். தமிழீழப் போராட்ட இயக்கங்கள் தமக்கிடையேயும் தமக்குள்ளும் வெகுசனங்கள் மீதும் கொண்டிருந்த அதிகாரம் அத்துமீறல்கள் குறித்த எந்தவொரு பதிவும் தடுக்கப்பட்டது. மீறி வெளியிடுகிறவர்கள் கடும் அவதூறுகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டனர். 

மேற்சொன்ன தாக்குதல்கள் மேலோட்டத்தில் வெறுமனே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரானவை என்று அடையாளப் படுத்தப்படுகின்றன. உண்மையில் இவை வரலாற்றுணர்வு, கடந்தகாலம் குறித்த நினைவுகள் மற்றும் உண்மைகள் மீதான தாக்குதல்கள். தற்கால பிம்பத்திற்கு ஏற்றாற்போன்றதொரு கடந்தகாலத்தை திரித்தமைக்க முடியாத ஆத்திரத்தில் நிகழ்த்தப்படுபவை. கடந்தகாலத்திற்குரியதென சொல்லப்பட்டு வந்த வரலாறானது மிகுந்த உயிர்ப்போடு நிகழ்காலத்தில் இயங்கிக் கொண்டிருப்பதால் தாங்கள் இன்றைய புனித பிம்பங்களை துறக்க நேரிடுமோ என்கிற அச்சத்திலும் அவமானத்திலும் நிகழ்த்தப்படுகிற தாக்குதல். 

கடந்தகால நிகழ்வுகளிலிருந்து தத்தமது தேவைக்கும் நோக்கத்திற்கும் ஏற்ப பொறுக்கியெடுத்து தொகுத்து இதுதான் வரலாறு என்று ஆளும் வர்க்கம்/ இனம்/ மதத்தால் காட்டப்படுகிற போது, அதில் தங்களைப் பற்றி எதுமில்லாததை கண்டுணரும் சமூகப் பிரிவினர் தங்களைப்பற்றிய வரலாறு ஒன்றை தொகுக்கத் தொடங்குகிறார்கள்.  இதன் பொருள், எவர் வேண்டுமானாலும் எடுத்தாளத்தகுந்த வகையில் வரலாறு மிகுந்த ஜனநாயகத் தன்மையோடு இருக்கிறது என்பதல்ல. தற்செயலான விடுபடுதலாக அல்லாமல் திட்டவட்டமான இருட்டடிப்பாக பலரையும் புறந்தள்ளி அது பகுதியளவேயான மக்களுக்குச் சார்பானதாக இருப்பதோடல்லாமல், முழுமையானதாக காட்டிக்கொள்ளவும் முயற்சிக்கிறது என்பதுதான்.  எனவே ஒருபால் கோடாமையோடு நடுநிலையாக வரலாற்றைப் பேசுவதானது வரலாற்றாளர்களின் நேர்மையோடு தொடர்புடையதல்ல, அது வரலாற்றை எதிர் கொள்வதற்கு ஒரு சமூகம் எந்தளவுக்கு பண்பட்டிருக்கிறது என்பதோடு தொடர்புடையது.  கடந்து வந்துள்ள பாதையை திரும்பிப் பார்க்க அஞ்சுகிற சமூகம் மனிதகுலத்தை மீண்டும் அமீபா நிலைக்குத் தள்ளப் பார்க்கிறது. அப்படியே தள்ளினாலும் மனிதராயிருந்து அமீபா நிலைக்குத் திரும்பிய வரலாற்றை சொல்லத்தான் வேண்டியிருக்கும், சொல்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக