திங்கள், ஆகஸ்ட் 31

கடவுளின் கதை - ஆதவன் தீட்சண்யா



பேராசிரியர் அருணன் ஐந்து தொகுதிகளாக பகுத்து எழுதியுள்ள ‘கடவுளின் கதை’ என்கிற நூல் இன்றைய காலகட்டத்தின் தேவையை நிறைவு செய்யும் வரவு என உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். கடவுள்தான் மனிதர்களைப் படைத்தார் என்கிற நம்பிக்கைக்கு மாறாக மனிதனின் ஆகச்சிறந்த படைப்பே கடவுள் என்று நிறுவுவது நாத்திகமல்ல, அறிவியல். நாத்திகம் அறிவியலின் துணைகொண்டு கடவுளை மறுத்ததேயொழிய அதை அழிக்கவில்லை. உண்மையில் கடவுள் தன் பக்தர்களைக்கண்டுதான் நடுநடுங்க வேண்டிய அவலத்திற்கு ஆளானது என்பதை அங்கதம் பொங்கும் நடையில் சொல்லிப்போகும் இந்நூல் கடவுளின் கதை தவிர்க்க முடியாதபடி அறிவியலின் கதையாகவும் இருப்பதை மறுக்கமுடியாத ஆய்வுத்தரவுகளுடன் முன்வைக்கிறது.

இறப்பு, இறப்புக்குப் பிறகு உயிர் எங்கே என்னவாக இருக்கும், இறந்தவர்கள் உயிர்த்தெழுவார்களா, இறந்தவர்கள் தமது தேவைகளை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்வார்கள் என்பதான கேள்விகளால் விளைந்த அச்சத்தில் அவர்களை சாந்தப்படுத்தும் மூத்தோர் வழிபாடும் சடங்குகளும் ஆதிமனிதர்களிடம் தொடங்கின. தங்களால் கட்டுப்படுத்த முடியாத இயற்கை ஆற்றல்களையும் விலங்குகளையும் வணங்கத் தலைப்பட்ட அவர்கள் இனப்பெருக்க உறுப்புகளை வளமையின் குறியீடுகளாக கருதி அவற்றையும் வழிபட்டனர். பிரபஞ்சமும் பூமியும் காற்று ஒளி வெப்பம் நீர் ஆகியவையும் கோடானுகோடி ஜீவராசிகளும் மனிதகுலமும் எவ்வாறு உருவானது, அவை எவ்வாறு ஏன் இயங்குகின்றன என்பது பற்றிய கேள்விகளுக்கு விடைதேடி கிளம்பியவர்களில் ஒரு பகுதியினர் அவற்றை இயற்கையின் இருப்பாகவும் இயக்கமாகவும் கண்டனர். இன்னொரு சாரார் இவை எல்லாவற்றையும் உருவாக்கி இயக்குபவர் கடவுள் என்கிற மாபெரும் வடிவமைப்பாளர் என்னும் முடிவுக்குச் சென்றனர். இந்த சிந்தனைப் பிளவு இன்றளவும் நீடிக்கிறது.

கடவுள் இருக்கிறார் என்பதற்கு அந்த நம்பிக்கையைத் தவிர வேறு ஆதாரம் ஏதும் இல்லாத நிலையில் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்வது வெறும் சமாதானம் தானேயன்றி அது உண்மையல்ல என்று பக்தர்களுக்கும் தெரிந்திருந்தது. எனவே கடவுள்தான் யாவற்றையும் படைத்தார் என்றால் அவர் எங்கிருந்து கொண்டு எவற்றால் படைத்தார், அழிவுகளுக்கும் துன்பங்களுக்கும் யார் பொறுப்பு, தீமைகளுக்கு பொறுப்பு சாத்தான் என்றால் சாத்தானைப் படைத்தது யார்? சாத்தான் கடவுளைவிடவும் வல்லவரா? கடவுள் ஏன் பலவாக இருக்கிறார்? உருவ வழிபாடு சிறந்ததா அருவ வழிபாடு சிறந்ததா? கடவுளை அடையும் வழிதான் என்ன? என்பதான கேள்விகள் அறிவியலாளர்களுக்கு மட்டுமல்ல கடவுள் நம்பிக்கை கொண்டவர்களையும் ஆட்டிப் படைத்தன. இது குறித்த விவாதம் ஆதிகாலம் தொடங்கி இன்றுவரையிலும் எவ்விதமாக உலகெங்கும் நடக்கிறது என்பதை இந்தநூல் தொகுத்தளிக்கிறது.

மதங்களின் உருவாக்கம், அரசுகளின் உருவாக்கம், மதங்களுக்கும் அரசுக்கும் இடையேயான உறவும் முரணும், ஒன்றையொன்று கட்டுப்படுத்தி அதிகாரம் செலுத்த மதமும் அரசும் மேற்கொண்ட எத்தனங்கள், ஒரே மதத்தின் உட்பிரிவுகளுக்குள் மோதல், மதங்களுக்கிடையே மோதல், இந்த கலவரங்களில் கடவுள் நம்பிக்கையாளர்கள் தமக்குள் நிகழ்த்திக்கொண்ட ஒடுக்குமுறைகள் தண்டனைகள் அழிவுகள் படுகொலைகள், கடவுள் மறுப்பாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான வன்முறைகள், ஆள்தூக்கி கருப்புச்சட்டங்கள் ஆகியவற்றின் வரலாற்றை கண்டங்களின் வாரியாகவும் யுகவாரியாக காலநிரல்படுத்தியும் பேசுகிறது இந்நூல். கடவுளும் மதமும் அதிகாரத்தின் கையில் சிக்கி சாமான்ய மக்களை ஒடுக்கும் கருத்தியல்களாக உருப்பெற்றது, கண்டதையெல்லாம் கும்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் ஏகக்கடவுள் நோக்கி நகர்வது, குலதெய்வங்களையும் வழிபாட்டு மரபுகளையும் உட்செரிப்பது, மதமாற்றம் செய்வது, மதத்திற்குள்ளேயே பிரிவுகளுக்குத் தாவுவது  என்கிற உலகளாவிய வரலாற்றுடன் இந்திய/ தமிழ்ச்சமூகத்தின் வரலாற்றையும் இந்நூல் இணைக்கிறது.  

மதங்களின் ஆதிக்கத்திலிருந்து திமிறிக்கொண்டு உருவான புதிய அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளும் அதன் தொடர்பில் விளைந்த பொருளியல் மற்றும் அரசியல் அமைப்புகள்,  கடவுள் மற்றும் மதத்தின் பெயரால் இருந்த முடியாட்சிகள் தூக்கியெறியப்பட்டு நாடாளுமன்றம் உள்ளிட்ட ஜனநாயக ஆட்சி முறைகள் உருவாவது, மூடத்தனங்களிலிருந்து சமூகத்தை விடுவித்து பகுத்தறிவுப்பாதையில் இட்டுசெல்வதற்கான போராட்டம் ஆகியவற்றையும் விவரிக்கிற இந்நூல் மனிதகுலம் தோன்றியதிலிருந்து 20ஆம் நூற்றாண்டு வரையான வரலாறாகவும் விளங்குகிறது. சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ, வால்டேர், கோபர்னிகஸ், கலிலியோ, டார்வின், புத்தர், மகாவீரர், ஆதிசங்கரர், ராமகிருஸ்ண பரமஹம்சர், விவேகானந்தர் என்று வெறும் பெயர்களாக நாம் கடந்துவிடக்கூடிய ஆளுமைகளின் வரலாற்றையும் உலகியல் கண்ணோட்டத்தையும் இந்த நூலின் வழி அறியமுடிகிறது. நூற்றுக்கணக்கான ஆய்வுநூல்களையும் மதநூல்களையும் தேர்ந்து கற்று அவற்றின் சாரத்தில் ஊறிய அறிவின் துணிவோடும் தனக்குரிய அரசியல் பார்வையோடும் பேராசிரியர் அருணன் எழுதியிருக்கும் இந்நூலை ஒருவேளை கடவுள் வாசிக்கும்பட்சத்தில் தன்வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ளும் வாய்ப்பிருக்கிறது.   

நன்றி: ஹலோ விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...