கல்வியும் ஃபாரின் சரக்காகிறது....? -ஆதவன் தீட்சண்யா
WTO என்கிற உலக வர்த்தக அமைப்பில் இணைந்திருக்கிற 160 நாடுகளும் வெகுவிரைவில் இந்தியாவில் வந்து கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் தொடங்குவதற்கு இந்திய அரசாங்கம் ஒப்பளித்துள்ளது. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை நாம் தேடிப் போவதற்கு பதிலாக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களே இங்கு வருவது நல்லதுதானே என்று சிலர் அப்பாவித்தனமாய் நினைக்கக்கூடும். இந்த அப்பாவித்தனத்தின் மீதுதான் அரசின் இதுபோன்ற தேசவிரோத முடிவுகள் அமலாகின்றன. படிக்கும் ஆர்வத்தில் நாமாக தேடிப்போவது விருப்பம் சார்ந்தது. இங்கே வந்து கடை விரிப்பவர்களிடம் அவர்கள் சொல்லும் விலைக்கு கல்வியை ஒரு சரக்காக வாங்குவது நிர்ப்பந்தம், அடிமைத்தனம். ஆமாம், இந்த அந்நிய பல்கலைக்கழகங்களுக்கு நாம் மாணவர்களல்ல, வாடிக்கையாளர். ஏனெனில், அவர்கள் கலாச்சாரரீதியான அல்லது அறிவுரீதியான பரிமாற்றத்தின் பேரில் இங்கே கல்விச் சேவையாற்றுவதற்கு வரவில்லை, கல்விச்சேவையில் வணிகம் செய்வதற்காக வருகிறார்கள். இந்தியாவில் மதுவிடுதிகளையும் சூதாட்ட கிளப்களையும் அமைப்பதற்கு அனுமதிக்கும் General Agreement on Trade in services என்பதன் கீழ், கல்வி வணிகம் நடத்திக்கொள்வதற்காக அந்நிய பல்கலைக்கழகங்களை இந்திய அரசாங்கம் அனுமதிக்கப்போகிறது.

இந்த ஒப்பந்தம் அனாசினைப் போல நான்குவழிகளில் வேலை செய்யும். Cross Border Supply படி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் அஞ்சல் வழியாகவும், Consumption Abroad படி நேரடியாகவும் படிக்க ஏற்பாடு செய்யப்படும். வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கேயே தொடங்கும் கல்விநிலையங்களில் படிப்பதற்குப் பெயர் Commercial Presence.  இதோடு Presence of Natural Person என்கிற பெயரில் வெளிநாட்டிலிருந்து ஆசிரியர்கள் வந்து பயிற்றுவிப்பதும் அடங்கும். இதெல்லாம் உரிய சேவைக்கட்டணம் செலுத்தும் மாணவர்களுக்கு மட்டுமே.

இந்த ஒப்பந்தப்படி இதுவரை கல்விப்புலத்தில் எவ்வித பங்களிப்பும் செய்திராதவர்கள் கூட இங்கு பல்கலைக்கழகத்தை தொடங்கமுடியும். அவர்கள் வழங்கும் கல்வியின் தரத்தையோ பாடத்திட்டத்தையோ கட்டணத்தின் அளவையோ  நிர்ணயிக்கும் அதிகாரம் இந்திய அரசுக்கோ இந்திய நீதிமன்றங்களுக்கோ கிடையாது. நமக்கு ஏதேனும் முறையீடு இருக்குமானால், ஒப்பந்தம் மீதான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான நடுவர் மன்றம் எந்த நாட்டில் இருக்கிறதோ அங்கேதான் முறையீடு செய்யமுடியும். நீதிமன்றங்களே நிலைதடுமாறும் காலத்தில் நடுவர் மன்றங்கள் நாணயமாக நடக்குமா? சரி, அதுபாட்டுக்கு ஒரு ஓரத்தில் நடக்கட்டும், விருப்பமும் வசதியும் இருப்பவர்கள் வேண்டுமானால் அந்தப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் படித்துக்கொள்ளட்டும். நாம் தேசபக்தியோடு நம்நாட்டு பல்கலைக்கழகங்களில் படித்துக் கொள்ளலாம் என்று மறுபடியும் ஒரு அப்பாவித்தனமான நினைப்பு வரலாம். அதற்கும் வழியில்லை. அதாவது நியாயமான வணிகம் நடக்ககு சமமான ஆடுகளம் (Level Playing Field)  அவசியம் என்கிற அடிப்படையில் இந்த அந்நிய பல்கலைக்கழகங்கள் வசூலிக்கும் கட்டணத்தைவிட குறைவான கட்டணத்தை  ஏற்கனவே இங்கு செயல்பட்டுவரும் பல்கலைக்கழகங்கள் வசூலிக்கக்கூடாது என்கிறது இந்த ஒப்பந்தம். அதன்படி இப்போதுள்ள பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவி செய்துவருகிற மானியக்குழுவை கலைக்க வேண்டிவரும். மானியக்குழுவின் நிதியுதவி இல்லாதபட்சத்தில் இந்தியப் பல்கலைக்கழகங்களும் கட்டணங்களை உயர்த்தினால்தான் இயங்கமுடியும் என்கிற நிலைக்குத் தள்ளப்படும். இதுதான் சமமான ஆடுகளம்.

இதன் மற்றொரு கெடுவிளைவு, அந்நிய பல்கலைக்கழகங்களின் பயிற்றுமொழி இந்திய மொழிகளாக இருக்கப்போவதில்லை என்பதால்  தாய்மொழிக் கல்வி முற்றாக அழிந்துபோகும் என்பதுதான். தாய்மொழியில் பயிலாதவர்களின் கற்கும் திறனும் வெளிப்பாட்டு வளமும் மந்தமானவை என்பது ஏற்கனவே நிருபிக்கப்பட்ட உண்மைகள். எனவேதான் 2015 டிசம்பரில் உட்டோ உறுப்புநாடுகளுடைய வர்த்தக மந்திரிகளின் மாநாட்டில் இத்திட்டம்  இறுதி செய்யப்படுமானால் இந்திய உயர்கல்வித்துறை அடையும் பாதிப்புகள் கடுமையாக இருக்கும் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த எச்சரிக்கையை சரியாக புரிந்துகொண்ட தமிழக கல்வியாளர்கள், அந்நியப் பல்கலைக்கழகங்களை இந்தியாவுக்குள் அனுமதிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று பொள்ளாச்சியில் தொடங்கி மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறார்கள். கல்வியை கடைச்சரக்காக்கும் முடிவை கைவிடச் செய்வதற்கான போராட்டமானது நமது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக கல்வியை தக்கவைத்துக் கொள்வதற்குமானது என்பதை கவனத்தில் வையுங்கள். 

- நன்றி: ஹலோ விகடன்

1 கருத்து: