சாட்டையைச் சொடுக்க நாம் இன்னும் பழகவில்லை - ஆதவன் தீட்சண்யாபிரிட்டன் மகாராணி எலிசபெத்துக்கு இப்போது வயது 89. அவருக்கு ஏழு வயதாக இருக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஒன்று 82 ஆண்டுகள் கழித்து இப்போது தி சன் என்கிற பிரிட்டனின் நாளிதழில் வெளியாகி அங்கு பெரும் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. அந்தக்காட்சி 1933 / 1934ல் எடுக்கப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. அரண்மனையின் புல்வெளியில் 7வயது குழந்தையான எலிசபெத், அவரது தாயார் மற்றும் தங்கை மூவரும் அவரது உறவினரான எட்டாம் எட்வர்ட்டின் அருகில் நின்று ஹிட்லர் பாணியில் நெஞ்சுக்கு நேராக கையை உயர்த்தி நீட்டி வணக்கம் செலுத்தும் பயிற்சி  எடுப்பதைக் காட்டும் 17 நொடிகளின் வீடியோ அது. ஹிட்லரின் ஆதரவாளரான எட்டாம் எட்வர்டின் தூண்டுதலால் இந்தப் பயிற்சி நடந்திருக்கலாம் என்றும் ஹிட்லரின் கொடூரங்கள் முழுமையாக வெளிப்படாத ஒரு காலகட்டத்தில் ஹிட்லரைப் பற்றி அறிந்திருக்க முடியாத சிறுவயதில் இப்படியொரு வணக்கப் பயிற்சி மேற்கொண்டதற்கு ராணி எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது. ஆயினும் இனவாதம் பேசி மனிதகுலம் இதுவரை காணாத சித்திரவதைகளைச் செய்து இரண்டாம் உலகப்போரைத் தொடங்கி பலகோடிப்பேரை கொன்று குவித்த ஹிட்லரின் பாணியில் வணக்கம் செலுத்தியதை  அவமானமாகவே அந்த நாட்டு மக்கள் கருதுகிறார்கள். பக்கிம்ஹாம் அரண்மனை ஹிட்லரின் செல்வாக்கில் இருந்திருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை என்கிற அளவுக்கு கடுமையான விமர்சனங்கள் வெளியாகிவருகிறது. பிரிட்டனுக்கும் ஜெர்மனிக்கும் உள்ள தூரத்தைவிட அரண்மனைக்கும் ஹிட்லருக்கும் இடையேயான தூரம் அதிகம், ஹிட்லரை மகாராணியார் ஒருபோதும் ஆதரித்ததில்லை என்று அவரது தரப்பு பல்வேறு விளக்கங்களையும் சொல்லி மக்களை சமாதானம் செய்யத் தொடங்கியிருக்கிறது. பிரிட்டன் ஆட்சியாளர்கள் ஹிட்லருக்கும் குறைவானவர்கள் இல்லை என்கிற உண்மை ஒருபுறமிருக்க குறைந்தபட்சம் அப்படியொரு குற்றவாளியின், கொடூரனின் ஆதரவாளர்களாக தங்களை குடிமக்கள் கருதிவிடக்கூடாது என்கிற பதைப்பை மகாராணி தரப்பு வெளிப்படுத்தியதை நான் முக்கியமாக கருதுகிறேன்.

இதேநிலையை இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த  ஹிட்லர் பாணி வணக்கத்தை மிகுந்த பெருமிதத்தோடு அன்றாடப்பயிற்சியாக செய்கிற அமைப்புகள் இருக்கின்றன. அப்படியாக வணக்கம் செலுத்துகிறவர்கள் ஆட்சியதிகாரத்திலும்கூட இருக்கிறார்கள். தங்கள் அமைப்பின் மாநாடுகளில் ஹிட்லரின் படத்தை வைத்து மரியாதை செய்கிறவர்களும் இருக்கிறார்கள். ஹிட்லர் பாணியில் நமது சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற அறைகூவல் விட்டு கொக்கரிப்பவர்கள் இருக்கிறார்கள். இதே ஹிட்லர் பாணியில் கையை நீட்டி உறுதிமொழி ஏற்கும் வழக்கம் இங்கு கல்விக்கூடங்களில் மாணவர்களுக்கு சொல்லித்தரப்படுகிறது. உலகையே அழிக்க நினைத்து இறுதியில் தானும் அழிந்துபோன ஒரு இனவாதியை போர்வெறியனை ஆயுதமோகியை இப்படி இன்னமும் பல்வேறு வகைகளில் நாம் நினைவுகூர்ந்து கொண்டிருப்பது சரிதானா?

மற்றது, ஹிட்லர் பாணியில் வணக்கம் செய்ததை நியாயப்படுத்தும் எந்த முயற்சியையும் மகாராணி தரப்பில் மேற்கொள்ளவில்லை என்பதை இந்தியாவுக்கு பொருத்திப் பார்க்கிறேன். இங்கு பல்லாயிரம் பேர் சாவுக்கு காரணமான யூனியன் கார்பைடு நிர்வாகியை பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தவர்கள் இருக்கிறார்கள். நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடித்துக் கொழுக்கும் சுரங்க மாபியாக்களோடு  நமது தலைவர்கள் கொஞ்சிக் குலாவுகிறார்கள். பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சாமியார்களின் காலடியில் விழுந்து நமது தலைவர்கள் ஆசி பெறுகிறார்கள். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு பொருளாதார பயங்கரவாதி என்று பல நாடுகளால் தேடப்படும்  குற்றவாளியுடன் வர்த்தகரீதியாக உறவு வைத்திருப்பதோடு அந்தக் குற்றவாளி நாட்டைவிட்டு தப்பிப் போகவும் உதவி செய்கிற தலைவர்கள் பெரும் பொறுப்புகளில் தொடர்கிறார்கள். கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் பாதுகாப்பளிக்கிறார்கள். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் செய்தவர்கள் பெரும் பொறுப்புகளுக்கு உயர்த்தப்படுகிறார்கள். மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தின் பெயரால் பிரமாணம் எடுத்துக்கொண்டவர்கள் மத துவேஷங்களை வளர்க்கிறார்கள். சில தீர்ப்புகள் வெளியாகும் போது நீதிபதிகளே குற்றவாளிகளாக மாறிவிட்டதாக கண்டனத்துக்கு ஆளாகிறார்கள். இவ்வளவு அத்துமீறல்களையும் குற்றங்களையும் ஊடகங்கள் அம்பலப்படுத்தினாலும் அது குறித்து எந்தவொரு பொறுப்பான விளக்கத்தையும் நம்முடைய தலைவர்கள் தருவதில்லை. தங்களது செயல்களுக்காக குற்றவுணர்ச்சி அடைவதோ வருத்தம் தெரிவிப்பதோ கிடையாது, மாறாக நியாயப்படுத்தும் ஆணவமே மிஞ்சுகிறது. அதிகாரம் மக்கள் கையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்தச் சாட்டையைச் சொடுக்க நாம் இன்னும் பழகவில்லை என்றே தோன்றுகிறது.   

நன்றி: ஹலோ விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக